Sunday, 2 July 2017

நான்கு புத்தகங்கள்


 எங்களின் வீட்டுக்கு அருகில், ஒரு மாஸ்டர் இருந்தார், அவர் யாழ்பாணத்தில இருந்த முக்கிய அறிவு மையமான ஒரு பிரபல கல்லூரியில் இங்கிலீஷ் படிபித்தார்! பள்ளிக்கூடம் போகும்போது மட்டும் தான் வெள்ளைக்காரன் போல "லோங்க்ஸ்" போடுக்கொண்டு போவார், மற்றப்படி வேட்டி கட்டிக்கொண்டு, காலில செருப்பும் இல்லாமல் நல்லூர் கோவிலுக்குப்போய் ,கோவிலுக்கு முன்னால இருக்கிற அஞ்சு வேம்புக்குக் கீழ யாரோடும் கதைக்காமல் தனிய, செல்லப்பா சுவாமிகளுக்கு முன்னால இருந்த யோகர் சுவாமிகள் போல மவுனமாக இருப்பார்.

                                 அவர் ஒருநாளும் இங்கிலிஸ் பேப்பர் படித்ததையோ, அல்லது யாரோடும் இங்கிலிசில் கதைதத்யோ,இங்கிலிஸ் நியூஸ் ரேடியோவில கேட்டதையோ நான் காணவில்லை !

                                         பள்ளிக்கூடதில படிப்பிக்கிற மாஸ்டர்,டிச்சர் மாரோட கதைகிறது கொஞ்சம் வில்லங்கம்,அவர்கள் எப்பவும் " எப்படிப் படிக்கிறாய்?,எத்தினையாம் பிள்ளை இந்த முறை,கணக்குக்கு எத்தினை மார்க்ஸ்? " எண்டு வயித்தில புளியைக் கரைகிற கேள்வி கேட்பதால்,அவர்களை கண்டால் முதல் வேலை நைசா நலுவுறது !

                                             இந்த மாஸ்டர் அப்படி ஒண்டுமே கேட்கமாட்டார் ! அதால அவர்கள் வீடுக்குள்ள துணிந்து உள்ளிட்டு ,அவர் ஹோலில் இருந்த அலுமாரியில் சேகரித்து வைத்திருந்த பெரிய,மொத்தமான கவர் போட்ட ஆங்கிலப் புத்தகங்களின் தலைப்பையும்,அதுகளை எழுதியவர்களின் பெயர்களையும் மட்டும் வாசிப்பேன்.அந்த ஹோலில, இருந்த பழைய மர மேசையில ,அந்த இங்கிலிஸ் மாஸ்டர் குறுந்தொகை என்ற சங்க இலக்கிய செய்யுள் புத்தகத்துக்கு எளிமையான விளக்கம் எழுதிக்கொண்டு இருந்த பேப்பர்கள் ஒரு கட்டாக இருக்க, அலுமாரிக்கு மேல ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சர் படம் இருந்தது, வீட்டிலயும் மாஸ்டர்,அந்த ஹோலில இருந்த கட்டிலில் ,கால் இரண்டையும் சப்பாணி கட்டிக்கொண்டு, ராமகிருஷ்ண பரமஹம்சர் போலவே கைகளைக் கட்டிக்கொண்டு மவுனமாக இருப்பார் .

ஒருமுறை நான் அந்தப் பெரிய புத்தகங்களை ஆராய்வதைப் பார்த்து

                                          " என்ன தேடுகின்றீர், உமக்கு விளங்குரமாதிரி ,எளிமைப்படுத்தின ஆங்கிலப் புத்தகமும் இதுக்குள்ள இருக்குது ,படிக்கப் போறீரா ?" 

        என்றார் ,நான் 

                             " நீங்களே எனக்கு ஒரு சிறிய, எளிமைப்படுத்திய கதைப் புத்தகம் எடுத்து தாருங்கள் " 

                                                              என்றேன்,அவர் எடுத்துத்தந்த புத்தகம்தான் " The Mayor of Casterbridge".அந்த புத்தகத்தின் பெரிய பதிப்பையும் ,எடுத்து தந்தார்,அதில அவர் நிறைய குறிப்புகள் பென்சிலால எழுதி இருந்தார்,

                                              " தோமஸ் ஹார்டி எழுதின இந்தக் கதை ஏன் நீர் படிக்கவேண்டும் எண்டு தெரியுமோ?" 

     எண்டு கேட்டார்,நான் 

                      " தெரியாது,நீங்களே சொல்லுங்கள்" 

என்றேன்,அவர் 

                                        "நாங்கள் செய்யுற தில்லுமுல்லுகள் ஒரு நாள் எங்களுக்குக் கழுத்தில கயிறு போடவைக்கும் எண்டு சொல்லாமல் சொல்லுது இந்த நாவல்" 

என்று எனக்கு சொல்லுறமாதிரி சொன்னார். 

எனக்கு கொஞ்சம் பயம் வந்திடுது,நான் இப்ப போலதான்,அப்பவும் ரெம்ப நல்லவன் போல வெளிய தெரிந்தாலும்,அந்த நாட்களில் நிழலாக சில தில்லுமுல்லுகள் செய்துகொண்டு இருந்தேன்,அது எப்படி இவருக்கு தெரியும் எண்டு ஜோசிக்க அதைவிடப் பயம் வந்திடுது, என்றாலும் இப்படியான புத்தக கதைகளில் நிறைய , நான் அந்த நாட்களில் எதிர் கொன்ட ,இசகு பிசகு சூழல் நிளகளைக் சமாளிக்கும் ஐடியா எப்பவுமே இருக்கும் என்பதால் அதை கொண்டுவந்து வீடில "டிக்சனரி" உதவியோடு வாசித்தேன் !

அந்த மாஸ்டர் 

                                                         "இதைவிட நல்ல கதை உள்ள புத்தகம் வேற ஒண்டு இருக்குது, அது இந்த நாவலின் ஒருவித தொடர்ச்சிபோல இருக்கும் அந்த நாவல் ,முதலில் இதைப் படியும் ,அதைப் பிறகு தாரன் " 

                                                                 என்றார்! " The Mayor of Casterbridge". கிடத்தட்ட ஒரு வருடமா இழுபட்டு இழுபட்டுதான் படித்து முடிக்க முடிந்தது, அதை வாசித்து முடித்து ,மாஸ்டர் சொன்ன அந்த அடுத்த புத்தகம் அவரிடம் வேண்டமுதல்,அவர் குடும்பத்தோடகனடாவிற்க்கு புலம் பெயர்ந்து போயிட்டார்!

18 நுற்றாண்டில் விக்டோரியன் சமுக அமைப்பு இங்கிலாந்தில் இருந்த போது எழுதப்பட்ட அந்தக் கதையில் ,ஒரு விசித்திர குணம் உள்ள இளம் மனிதன்,முன்னேற பணம் தேவைப்பட ,தன்னோட அழகான மனைவியையும்,பெண் குழந்தையும், காஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி , வருடக் கணகில கடலில் அலைந்த ஒரு "செயிலர்" என்ற கப்பலோடிக்கு விற்று, வித்து வந்த பணத்தில், பல விதங்களில் முயற்சித்து, ஒரு விதமாக முன்னேறிவிடுகிறார்   ,

                                               பணக்காரன் ஆகி, Casterbridge என்ற நகரத்துக்குகே Mayor என்கின்ற நகர பிதாவாக,பிரபுக்கள் வகுப்பில் சேர்க்கப்பட்டு , தன்னோட பழைய ஆரம்ப வாழ்கையை ஏறக்குறைய திட்டமிட்டு மறைத்த நிலையில், 20 சொச்சம் வருடங்களின் பின், கப்பலோடிக்கு விற்ற மனைவியும்,பெண் குழந்தையும், Casterbridge நகரத்துக்கு மீண்டும் வர, நகர பிதாவாக, கவுரவமாக தற்போது இருக்கும் அந்த மனிதனின் ,உண்மை முகம் வெளியவர ,கதை சூடு பிடிக்கிறது !

அந்தக் கதைய சுருக்கிய எளிமையான பதிப்பில் படித்தபோது, கதை ஆதாரமாக விளங்கினாலும்,தோமஸ் ஹார்டி என்ற அந்த எழுத்தாளரின் எழுத்துநடையை ரசிப்பதுக்கு அதை என்றோ ஒருநாள் முழுமையான புத்தகமாகப் படிக்கவேண்டும் எண்டு இருந்தேன்....

ஒஸ்லோவில் உள்ள லைபிரேரியில் அந்தப் புத்தகத்தைப் மறுபடியும் பார்த்தபோதும்,படிக்க ஏனோ இண்டரெஸ்ட் வரவில்லை..சில வருடங்களின் முன் அந்த இங்கிலிஸ் மாஸ்டர் கனடாவில இறந்து விட்டதாகக் கேள்விப்பட்டேன்! அவர் சொன்ன அந்த இரண்டாவது புத்தகம் என்னவாக இருக்கும் எண்டு பலமுறை ஜோசிப்பது. இப்படிதான் " இந்த நாவலின் ஒருவித தொடர்ச்சிபோல இருக்கும் அந்த நாவல் ," என்று மாஸ்டரே சொன்னமாதிரி வாழ்க்கையே ஒருவித தொடர்ச்சிபோல இருக்குது சிலநேரம்!.--

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்ல என்பது போல எல்லோருக்கும் ஒரு புத்தகம் வாழ்நாள் முழுவதும் ஜோசிக்க வைக்கும் அல்லது அதன் பாதிப்பு உளவியல ரீதியா எங்கள் எண்ணங்களைப் பாதிக்கும்! 

                                                       நான் வாசித்த இந்தப் புத்தகம் அந்த இரண்டையும் என்னக்கு செய்தது .இந்த புத்தகம் ஏதோ முன்னேறிய ஒரு நாட்டில் படித்ததா நினைக்கவேண்டாம், போயும் போயும்  எங்கள் கிராமத்து சனசமுகாநிலைய லைபெறேரியில் இது இருந்தது, அதை வாசிகசாலை எண்டும் சொல்லுவார்கள்!

                                                              தூங்கு மூஞ்சிகள் அரசியல்,ஊர் வம்பு, ஊர் விடுப்பு,கதைக்கும் இடமும் அதுதான்! அது போன்ற ஒரு அலங்கோல இடத்துக்கு அந்தப் புத்தகம் எப்படி வந்தது எண்டு இன்றுவரை தெரியாது!

                                                       எப்படியோ அதை கொண்டுவந்து டிக்சனரி உதவியுடன் வாசித்தேன்! நான் முழுமையாக உள்வாங்கிப் படித்த முதல் ஆங்கிலப் புத்தகம் அது. அதில் உள்ள பல கிரியேடிவ் வேர்ட்ஸ் சொற்களை பென்சிலால் குறித்தும் வைத்தேன்.

                                                அந்தப் புத்தகத்தின் கதை R .K நாராயணனின் "மால்குடி" போல அமரிக்காவில் ஓஹயோ மாநிலத்தில்,உள்ள வைன்ஸ்பேர்க் என்ற சின்னக் கிராமத்தில் வாழும் கற்பனை மனிதர்கள் பற்றியது! ஆனால் வாசிக்க உண்மை போலவே இருக்கும் படி கதை தொட்டுச்செல்லும் .

                                                உண்மையில் அந்த கதைப் பாத்திரங்கள் எல்லாரும் ஒருவித "மெண்டல் கேஸ் ",அது மேலெழுந்தவாரியா தெரியாது,கொஞ்சம் ஆழமா போகும்போது அப்படிதான் விளங்கும்!

                                                 எப்படி எங்களை சுற்றியுள்ள மனிதர்கள் எதோ ஒரு கோணத்தில விசித்திரமா இருக்குரார்களோ அதே போல அவர்களும் இருக்குறார்கள்! முக்கியமா இந்தக் கதை எழுதியவர் தன்னை எழுத்தாளர் எண்டு சொல்லவில்ல, ஒரு "கதை சொல்லி " எண்டு சொல்லி அட்டகாசமா எழுத்தாளர் போல கதைய எழுதியுள்ளார்,

                                             கதையில வரும் மாந்தர்கள் எல்லாரும் ஒரு சிறு " டவுன் " இல வசிப்பதால் எதோ ஒரு விதத்தில தொடர்புபடுவார்கள், முரண்படுவார்கள்! முக்கியமா எலிசபெத் வில்லார்ட் என்னும் பணக்காரக் குடும்பத்தின், தலைமுறை எழுச்சியும்,வீழ்ச்சியும்தான் கதையின் கருப்பொருள்!

                                                   இந்தப் புத்தகம் வாசித்தபின் நான் நானாக இருந்ததில்லை! அவளவு பாதிப்பு ஏற்படுத்தியது ! நிறைய உளவியல் விசியன்களே கதையில் சொல்லாமல் சொல்லப்படும் !

                                                         முக்கியமா வாழைப்பழத்த உரிச்சு வாயில வைச்சமாதிரி ஸ்டீர்வூட் அன்டர்சன் அந்தக் கதைய சொல்லுவார் அதுதான் என்னை முடிவுவரை தலை கீழாக நின்றும் வாசிக்க வைத்தது. அந்தக் கதை சொல்லும் கவர்ச்சிகரமான ஸ்டைலின் பாதிப்பில் பிற்காலத்தில் நானே கதை எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு .

                                                           அப்படிபட்ட அவர் இரண்டு நாவல்தான் எழுதியுள்ளார்! அதுக்குமேல ஏன் எழுதவில்லை எண்டு கேட்க 


                                          "இயல்பாக எழுத வேறு ஒண்டும் இல்லை, இனி "ரீல் "தான் விடவேண்டும்" 

                                                   எண்டு சொன்னார்! அப்படி சொல்வதுக்கே நிறையத் தில் வேண்டும் இல்லையா .

                                                     அமரிக்காவில் இந்த புத்தகத்துக்கு ரசிகர்மன்றமே இருக்குது. இந்தப் புத்தகம் 1995 இடப்பெயர்வில் யாழ்பாணத்தில் தொலைத்தேன், பின்னர் ஸ்வீடனில் தேடிவாசித்த போது"சப் " எண்டு ஊசிப்போன உளுந்துவடை போல இருந்தது,ஒருவித ஏமாற்றம் வந்து!

                                                     பல புத்தகங்கள் இப்படிதான் வயது போகப் போக சின்ன வயது ஆர்வம் குறைந்து சொதப்புது. ஹாபர் லீயின் "கில்லிங் எ மொகிங் பேட் "இந்த நுற்றாண்டின் சிறந்த புத்தகம் எண்டு அப்போது வாசித்தபோது நினைத்திருந்தேன் ,இப்ப அப்படி நினைப்பதில்லை! 


நோர்வேயில்,ஒஸ்லோவில், நான் வசிக்கும் பேட்டைக்கு அருகில், மாணவர்கள் தங்கி இருந்து படிக்கும் விடுதிகள் இருப்பதால்,எப்பவுமே ட்ரெயினில் வேலைக்கு உற்சாகம் இல்லாமல் போகும் போதும் , செத்துப்போய் வரும்போதும் நிறைய இளையவர்கள் ட்ரெயினில் அம்முமிக்கொண்டு நெருக்கி அடித்துக் கொண்டு, அருகருகே , இருக்கும் சந்தர்பங்கள் எப்பவுமே கிடைக்கும்

                                                             அப்படி ஒரு நாள் என் அருகில் வந்து இருந்த இளம் பெண் ,தன்னை பொஸ்னியா ,என்ற கிழக்கு ஐரோப்பிய அப்பா ,அம்மாவுக்கு பிறந்த ,இரண்டு வயதில் நோர்வே வந்த "....." என்ற பெயர் சொல்லி , என் அருகே வந்திருந்து

                                           " நீ எந்த நாடில் இருந்து வந்து இங்கே படிக்கிறாய் "

                                    எண்டு கேட்டாள் . நான் எங்கள் தாய்திருநாட்டின் பெயரைசொல்லி ,

                                                      "நான் ,படிக்கவில்லை ,.அரசியல் அகதியாக புலம் பெயர்ந்து இங்கே வசிக்கின்றேன்"  என்றேன் .அவள் ஆச்சரியமாகி

                                                      " உங்கள் நாடில் உள் நாட்டு யுத்தம் நடந்ததே , நான் ஒரு ஜெர்ணனளிஸ்ட் மாஸ்டர் டிகிரி படிக்கும் மாணவி" என்றாள்,

                                       உலகத்துப் பொய் எல்லாம் சொல்லி அரசியல் அகதி ஆனதை மறைத்து

                                                   "நாணும் ஒரு விதத்தில இங்க அரசியல் அகதி "

                               எண்டு சொல்லி அவளின் கையை பிடிச்சு ஹலோ சொன்னேன்.அவள்

                                                           " உங்கள் நாடட்டைப்ப்ற்றி ,லெனேர்ட் வொல்ப் எழுதிய "The Village in the Jungle" புத்தகம் எனக்கு எப்பவுமே பிடித்த புத்தகம்,ஒரு வெளிநாடுக்காரரின் பார்வையில் அந்தக் கதை சொல்லப்பட்டது, என்னோட மேசையில் எப்பவுமே இருக்கு,one of the best book ever written "

                                            எண்டு நீட்டி முழக்கினாள்.அதென்ன கதை என்று கேட்டேன்

                                         " ஒரு காட்டுப்புறக் கிராமத்தில் நடக்கும் ஒரு கொலை,,அதோடு அந்த கிராமத்தில் வசிக்கும் புத்த பிக்குவும் சம்பந்தப்படுவார் "

                                         " அப்படியா "

                                             " ஹ்ம்ம் ,,அதில எப்படி சிறிலங்கா மக்கள் அப்பவியாக ஒரு சம்பவத்துக்குள் பழிவாங்கபடுகிறார்கள் என்று எழுதி இருக்கிறார் "

                                            " சரி,,லேனாட் வுல்ப் ,அவர் பெயர் ஆங்கிலேயர் போல இருக்கே . எதுக்கு அவர் இலங்கை வந்தார் "

                                           " அட அட,,அவர் இலங்கையில் இங்கிலாந்து காலனி ஆட்சி செய்த போது கவனரா இருந்தார் "

                                                " ஹ்ம்ம்,,,அப்படியா,,"

                                         " உனக்கு வர்ஜினியா வுல்ப் யார் என்று தெரியுமா "

                                            " தெரியாதுப்பா "

                                                " கிழிஞ்சுது,,உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்,,டுவேட்ஸ் த லைட் ஹவுஸ் என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவலை எழுதிய பெண்மணி "

                                    " ஒ,,,அது எனக்குத் தெரியாதே "

                             " அவா லேண்ணார்ட் வுல்பின் மனைவி "

                               " ஹ்ம்ம்.."

                                " பாவம் அவா தற்கொலை செய்துகொண்டா "

                                      " அடக்கடவுளே "

                                      "நீ புத்தகம் படிபியா?"

                                               எண்டு கிழக்கு ஐரோப்பிய நீலக் கண்களால் கேட்டாள் ,நான்

                                  " கிசு கிசு மட்டும்தான் விரும்ப்பிப் படிப்பேன் "

                                எண்டு உண்மையை சொன்னேன் ,அவள் சிரி சிரி எண்டு சிரித்து

                                         " தெரியுமே ,எல்லா ஆம்பிளையளும் அதைத் தானே படிப்பார்கள் "

                                       என்றாள் .அவளைப் பார்க்க அநியாத்துக்கு அழகா பாரிஸ் ஹில்டன் மொடல் போல இருந்ததாள் ,

                                                 " நீ தான் பார்பி பொம்மை போல அழகா இருகிறாய், எதுக்கு சும்மா எதுக்கு ஒண்டுக்கும் உதவாத ஜர்னலிஸ்ட் வேலைக்கு படிக்கிறாய் ,பேசாம மொடலிங் செய்யலாமே ? "

                                              எண்டு அப்பாவியா கேட்டு சிரித்தேன். உண்மையில் அவள் அங்கங்கே பார்க்காதே பார்த்தாலே பத்தி விடும் போல அழகா இருந்தாள் .நான் பிசதியத்தில் அவள் கொஞ்சம் கோபமாகி

                                                    " என்னோட அப்பா ஜெரனலிஸ்ட்டாக இருந்தார், அரசாங்கத்தை விமர்சித்து ,உண்மையை எழுதியதால்,அவரை கண்ணைகட்டி கடத்திக்கொண்டு போய் ,சுட்டு தெருவோர சாக்டையில் எறிந்தார்கள் ,அப்ப எனக்கு 2 வயது,என்னையும் ,தம்பியையும் கூடிக்கொண்டு அம்மா நோர்வேயிட்கு அரசியல் அகதியாக வந்துவிட்டா "

                                             என்றாள் ,அதுக்குப் பிறகு அவளைப் பார்க்க அழகா தெரியவில்லை,பாவமாக இருந்தது! பெண் குழந்தைகளுக்கு எப்பவுமே அப்பாவைப் பிடிக்கும் என்பார்கள். தன் அப்பாவின் கொள்கையை ரெண்டு வயதில் அறிந்து கையில் எடுத்த அவளைப்பார்க்க பெருமையாக இருந்தது

                                                         இப்படிதான் சிலர் தங்கள் எதிர்கால படிப்பையும்,அதன்பின் வேலையையும் தேர்ந்தெடுப்பதில் இலட்ச்சியன்கள் இருக்கு ,

                                                   "நீ என்ன வேலை செய்கின்றாய் ?"

                                       என்றாள் , நான்

                                                 " பஞ்சம்புழைக்க சமையல்காரன் ஆக பல வருடம் வேலை செய்கின்றேன் "

                                              என்றேன். அவள்

                                                    "அந்தப் புத்தகம் உனக்கு நான் தாரன் ,வாசித்துவிட்டு திருப்பி தருவியா ?"

                                          என்றாள் , புத்தகம் படிக்க எனக்கு நேரம் இல்லை எண்டு உண்மைய சொல்லமால், இந்தப் புத்தகத்தை வைத்து இவளோட கொஞ்சநாள் கடலை போட ஜோசிதுப்போட்டு

                                             "கட்டாயம் , Leonard Woolf, எனக்கும் ரெம்ப்ப பிடித்த எழுத்தாளர் "

                                                            எண்டு பொய் சொன்னேன் .அவள் தான் வசிக்கும் அப்பர்ட்மெண்டுக்கு என்னை கூடிக்கொண்டுபோகும் போது ஜூலியா ராபர்ட்ஸ் போல வெட்டி வெட்டி அவள் நடப்பதைப் பார்க்க ,இன்னும் நிறைய புத்தகம் வேண்டிப்படிக்கலாம் போல இருந்திச்சு , அவளோட அபார்ட்மெண்டுக்கு அருகில் கொஞ்சம் தயங்கி ஜோசித்து, என்னை உள்ளுக்க அழைக்காமல்

                                               "இங்கேயே நில்லு,கையோட நான் புத்தகத்தை மேல போய் எடுத்துக்கொண்டு வாறன் "

                                             என்றாள். சொன்ன மாதிரியே கையோட எடுத்துக்கொண்டு தந்த புத்தகத்தை ,கையோடயே பத்திரமா கொண்டுவந்து, மேசையில சுழட்டி எறிஞ்சு போட்டு பல வாரங்கள் மறந்துபோய் விட்டேன்!

                                                  மறுபடியும் அவளை ட்ரெயினில் அண்மையில் சந்தித்த போது ஆர்வமாக வந்து

                                      " கதை எப்படி ",,என்று கேட்டாள் நான்

                                       "எந்தக் கதை எண்டு "

                                   திருப்பிக் கேட்டேன் ,அவள் தலைய சொரிஞ்சு

                                       " போச்சுடா ,அதுதான் , காடுக்குள்ள ஒரு கிராமம் !"

                                     எண்டு விழித்தாள் ,

                                         "ஓ ,அதுவா ,அது சூப்பரா போகுதே,"

                                                எண்டு பொய் சொல்லி

                                              " இந்த சமருக்கு கடலில் நீந்தப் போறான், அந்தக் கடலில டொல்பின் எல்லாம் வரும் , வாறியா ? "

                                                      என்றேன் . அவள் கண்கள் விரிய

                                           " வாவ் ,எனக்கு டால்பின் என்றால் உசிர் ,ஆனால் முன்னப் பின்ன தெரியதவர்களுடன் நீந்தப் போகக் கூடாது எண்டு அம்மா சொன்னவா,நீ அந்தப் புத்தகம் படித்து உன்னோட கருத்தை சொன்னா,சிலநேரம் உன்னை என்னோட ப்ரெண்ட் ஆக்கலாம் "

                                       " டொல்பின் பாட்டுப் பாடும் "

                                                    " அப்படியா ,,உண்மையாவா வாவ் சோ சுவிட் ,,எங்க சொல்லுறாய் சொங்க்ஸ்வான் ஏரியிலையா "

                                        " ஹ்ம்ம்,,அங்கேதான் "

                                                    " அங்கெ நான் வந்து இருக்குறேன்,,ப்ரெண்ட்ஸ் உடன் ரெண்டு மூன்று தரம்,,ஆனால் அங்கெ சும்மா மீனையே நான் கண்டதில்லையே "

                                                     " நீ எங்க போய்ப் பார்த்தாய் "

                                       " சுற்றிப் பாத்தேன்,,உண்மையாவா அது பாட்டுப் பாடும் "

                                                    " ஹ்ம்ம்,,உண்மையா பாட்டு இல்லை இசைஞானி இளையராஜா போல மூசிக் வேற கொம்போஸ் செய்யும் "

                                            " அது யாரு இசைஞானி இளையராஜா "

                                                             " அவர் என்னோட சித்தப்பா,,சும்மா சும்மா கேள்வி கேட்காமல்,,நான் சொல்லுறதை நம்பி வாறியா "

                                                 " எனக்கு டால்பின் என்றால் உசிர் ,ஆனால் முன்னப் பின்ன தெரியதவர்களுடன் நீந்தப் போகக் கூடாது எண்டு அம்மா சொன்னவா.."

                                            எண்டு சொல்லி என்னோட இலட்ச்சியத்துக்கு ஆப்பு வச்சிடாள் !

                                                     இனி என்ன செய்யிறது எண்டு போட்டு இப்ப அந்தப் புத்தகத்தை நேரம் கிடைக்கும் போது படிக்கிறன் ! ..அந்தப் புத்தகத்தைப் பற்றி போஸ்டிங் நாளைக்கு எழுதுறன் மக்காள் ஓகே யா? கவிதை எழுதும் தம்பி "கிரி ஷந்த் ".அண்மையில் ஒரு குதிரைப்படம் போட்டு ,அதைப் பார்க்க "குல்சாரி " நினைவு வருவதாக எழுதி இருந்தார்.எனக்கு அதைப்பார்க்க ,"குல்சாரி "நாவல் முழுவதுமே நினைவு வந்தது ,யாழ்பாணத்தில படித்த பல நாவல்கள் நினைவு இல்லை,ஏனோ தெரியவில்லை எல்லாம் மறந்தும் "குல்சாரி "யை மறக்கமுடியவில்லை!

                                                       "குல்சாரி " சிங்கிஸ் ஜமைதேவ் என்ற கிர்கிஸ்கி ஸ்தான் எழுத்தாளர் கசாக் மொழியில் " சோவியத் யூணின் ருசியா " காலத்தில் எழுதிய நாவல் ,கொஞ்சம் கொமிநிஸ்ட் நாவல்,ஆனால் "குல்சாரி " என்ற அந்த குதிரையின் கதை நெஞ்சைப்பிழியும் ! தானபாய் என்ற ஏழை விவசாயியின் மாட்டு தொழுவத்தில் பிறந்த "குல்சாரி " என்ற குதிரை,பிறந்தவுடன சிவப்பா செந்நிற குவளை மலர்கள் போல இருந்ததால் அதுக்கு "குல்சாரி " என்று பெயர்வைத்தார் தானபாய் , 

                                                    அப்புறம் "குல்சாரி " வளர வளர ,தானாபாயின் வாழ்க்கை கதையும் அதோட சேர்ந்து வளருது,அப்படிதான் சிங்கிஸ் ஜமைதேவ் அந்த நாவலை எழுதினார்,"குல்சாரி " கசாகிஸ்தான்" ஸ்டிப்பி " வெளிகளில் பாய்ந்து பாய்ந்து நடைபழகும் அழகை ஒரு கவிதை போல எழுதி இருந்தார், அந்த தானபாய் என்ற ஏழை விவசாயி,ஏகப்பட்ட " பிக்கல் பிடுங்களுகுப் " பிறகு காதலித்தது, அகால வேளையில கலியாணம் கட்டியது, கட்டி கொஞ்சநாளில் யுத்தத்துக்கு போனது ,இப்படி யுத்தத்தின் கொடூர முகத்தை ,முகத்தில அறிஞ்சமாதிரி சிங்கிஸ் ஜமைதேவ் சொல்லி இருக்கிறார் ..

                                                                           தானபாயின் ஒரே உயிரான அந்த "குல்சாரி ",அவர்சொல்லும் வாழ்வின் அபத்தங்கள் எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கொண்டு இருக்கும் "குல்சாரி "அசந்துதன்னும் அதுக்கு ஒண்டுமே பதில் சொல்லாது ! இந்த நாவல் "குல்சாரி " இறப்பதோட முடிகிற அந்த கடைசி அத்தியாயம் வாசிக்க முடியாமல் பலர் கண்ணீர் விட்டு அழுதார்களாம் என்று நான் சந்தித்த ஒரு இலக்கிய ஆர்வலர் சொன்னார்,அப்படி நெஞ்சைப்பிழியும் கதை !

                                                                 என்னோட முன்னாள் ஸ்வீடிஷ் மனைவி இரண்டு "இஸ்லாண்டிக் "குதிரை வளர்த்தா, அவளையும் சேர்த்து 3 குதிரைகளை கட்டிஆளவேண்டிய நிலையில நான் திண்டாடினாலும் ,"இஸ்லாண்டிக் "குதிரைல ஒன்று சிவப்பா இருக்க நான் அதை" குல்சாரி " என்று கூப்பிடுவேன் ,அதுவும் ரெம்ப சினேகமா என் அருகில் வந்து முகத்தை கொடுக்கும் தடவசொல்லி!........யாருக்கு தெரியும் போன பிறப்பில அதுதான் குல்சாரியோ எண்டு!