Sunday 13 May 2018

ஒரு தீர்த்தயாத்திரை

ஸ்டாக்ஹோலம் என்னோட புதிய தளம். ஒரு காலத்தில் சுவீடனில் படித்த போது இந்த நகரத்தையும் சல்லடை போட்டு தேடித் தேடி ரக்ஷித்து இருக்கிறேன். காதுக்குள் மிக ஆழத்தில் அமுங்கிப்போன சுவிடீஷ் மொழி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டிக்கொண்டு வருகுது. 
                                                           மிக நெருக்கமான ஸ்டாக்ஹோலம் நிலத்தடி ரெயிலில் பிரயானிக்கும் போதெல்லாம் சக பயணிகளின் உரையாடல் வெளிகள் அந்த மொழியின் அலாதியான போக்கை இன்னொரு முறை மீட்டு எடுத்துத் தருகிறது.பிடிகொடுக்காமல் உதறி எறிந்து பிடிக்காத நகரம் கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்கத் தொடங்குது .

                                              ஆச்சரியம் கலந்த நனவோடைக்குள் இழுத்துச் செல்கிற  ஸ்டோக்ஹோலோம்  விசாலமான ஐந்து சந்திகளில் விவரணம் காட்டும் பரந்து விரிந்த நகரம்.  ஒஸ்லோவில் அனாமிக்கா என்னை எழுத வைத்தாள்.  பிரிந்து போன என் அன்புக்குரிய ஒஸ்லோ மிகச் சிறிய மூத்திரச் சந்து போன்ற நகரம். ஆனாலும் அது தந்த ஆதர்சங்கள் மறப்பதுக்கில்லை . மறைப்பதுக்குமில்லை !

                                             2017 இல்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன்

இன்றைக்கொருநாள்
தென்கிழக்கு வெய்யிலோடு 
சிரிக்கிறது 
ஸ்டோக்ஹோலம் நகரம்

என் 
ஆத்மாவின் அலைவரிசையில்
தாய்மொழி தேடுகிறேன்


நிழல் விழுந்தழியும்
பழைய பாதைகளில்
முகமிறுகிய வெள்ளைமனிதர்களின்
காலடி வைப்புக்களில்
அர்த்தமில்லா அங்கலாய்ப்பு

அவசரமான தந்திரங்கள்

இந்த நகரம்
என் பழைய எதிரி


வடதுருவத்தை வருடிக்கொண்டிருக்கும்
சுதந்திரமான
அதன் பின்மாலைச் சிரிப்பு
எனக்கெப்போதும் பரிகசிக்கும்
இளிப்புப் போலிருக்கும்


இப்போதெல்லாம்
கொஞ்சம் கிட்டநெருங்கிவந்து
யவ்வனாமான வாசனைகளோடு
கன்னமுரசுவது போலிருக்கு


இப்படித்தான்
பலமுறை ஏமாந்துபோனேன்!

எதட்காக என்னைத்தேர்ந்தெடுத்து
கதவுகளை அடைத்து
திறப்புக்களை ஒழித்துவைக்கவேண்டும்?


இதை எழுதவைத்த

அளவில்லாக் கோபத்தில்
அதிகமிருப்பதுபோலிருப்பது
என்னுடைய
அதீதமான அலட்சியங்களேயென்கிறபோது
நான்
பயணத்தில் பின்வாங்கிவிடுகிறேன்

நகரம்
அதேயிடத்தில் 

அப்படியேதானிருக்கிறது !.

..........................................................................


ஒரு 
கடிதத்துக்காய்க் காத்திருக்கிறேன்


சகஜமான மாற்றங்களுக்கு 
தாமதத்தை உருவாக்கும் 
அனுபவத்தில்
பழைய பாதைகள்
எங்கெல்லாம் சிதிலமானதோ
அவற்றில் சில திருப்பங்கள்
செப்பனிடப்படலாம் ,


எல்லா அலுவலங்களில்
வரவேட்புக் கைகுலுக்கல்
நிட்சயமாய்க் கிடைக்கலாம் ,


நீண்ட உரையாடல்
மிகநீண்ட விளக்கங்கள்
மிக மிகக்குறுக்கிய 

சலிப்பான வாக்குறுதிகள்

அலைகள் போலவே
கரைகளை நனைத்துவிட்டு
நீள்கின்றன பகற்பொழுதுகளைக்
காத்திருத்தலில்க்
களவுகொடுத்துவிட்டதாக நினைக்கையில்
இன்னுமின்னும் சவால்களைச்
சரிசெய்யும் உத்தேசம்
இந்தக் கடிதத்தின் செய்தியாகலாம்,


பிறகு
தாய்நாட்டின் முகவரியை
நிரந்தரமாக அழித்துவிடலாம்,


அதுக்குப் பிறகு
வெளிறிய வெள்ளைகளோடு
சரிக்குச் சமன் சடடம் வாதாடி
குடுமியைப் பிடிச்சு சண்டைபிடிக்கலாம்


இதட்க்காகத்தானே
நம்பிக்கையின் அடிப்படையிலே
அந்த ஒரேயொரு
கடிதத்துக்காய்க் காத்திருக்கிறேன்.........


................................................................

அகலமான தெருக்களில் 
கலாச்சார வெளிச்சத்தை 
மனமெங்கும் 
கைதியாக்கி வைக்குது
ஸ்டாக்ஹோலம் 


கால் வலிக்க
நடநட நட நடவென்ற

கால்நடையாக
இளைப்பாற முடியாத கணத்தில்
அவசரங்களை
வேகமாகச் சுமந்து திரிந்தபடி
நட்பில்லாத
மேம்போக்கான மனிதர்கள்தான்
அதிகம் தென்படுகிறார்கள்


நடிக்க மறந்த
வின்டர் உறைபனி
உண்மையாகவே சபதமெடுத்து
உயிரைக் கொல்லுது


பயணத்தின் முடிவில்
மிகப் பெரிய நகரம்
வழிகளை
இன்னும்தான் மறைத்து வைத்திருக்க


ஆங்காங்கே
சில கற்றை ஒளிக்கீற்றுக்கள்
ஒரு குகையின் முடிவில்
அதிசயங்கள் தரலாம்


இல்லாவிட்டால்
நம்பிக்கை கொடுக்கும்
நாலு நண்பர்களின்
நட்பான உதவிகளில்
கடந்துசெல்ல
ஒரு நீண்ட தீர்த்தயாத்திரை
காத்திருக்கு.........


.........................................................................

அதிகமதிகம்
பரஸ்பர மரியாதையை
தன்னளவில் சுயகவுரம்
மனிதத்தை மனிதனாக்குவது
நேரத்தைப் பொன்னாக்குவது 
இதையெல்லாம்
மிக இயல்பாக எதிர்பார்ப்பவர்கள்
தயவுசெய்து
ஸ்டாக்ஹோலோம் நகரத்தை
நினைத்தே பார்க்கவேண்டாம்


பத்து வருடம் முன்
இளகிய உதவும்

இதயம் இருந்த கதிரைகளில்
இப்போது நரிகள்
இருக்கிறார்கள் என்பதைவிட
இல்லாமலிருக்கிறார்கள்


பழக்கப்பட்டே
வழக்கமாகிவிட்டது
நீண்ட வரிசை
அதில்க் காத்திருந்து
நெருங்கிவரும் போது
தந்திரங்கள் கண்களில்
பிசாசின் நாக்கு வெளியேதள்ளப்
பிரகாசிப்பதைப் பார்ப்பீர்கள்


அவளவுதான்
பிறகு நைச்சியமான பேச்சு
இல்லாத ஊருக்கு

வழிசொல்லும் பரிந்துரைகள்

மாஷான சமாளிப்புக்கள்
தட்டிக்கழிக்கும் கணக்கு வழக்கு


அர்த்தமில்லாத புன்னகை
வாழ்வாதார உரிமைகளில் உரித்தெடுப்பு


கையை உதறி உத்தரவாதமான
அரசமுறை விடைபெறுதல்


முடிவில்
உத்தியோகப்பூர்வாமாக
வெளியே தள்ளப்படுவீர்கள் !


..................................................................................

பயணங்களுக்குத்
தயார்படுத்தப்பட்ட பாதையொன்றின்
வழிக்குறிப்பில்
தீர்க்கமாக எழுதப்பட்டவாறே
பிரியமான சஹியே 
இப்போதே தயாராகிவிடு !


நேற்றைவரையில்
வயதான முகங்களுக்குள்
இன்றைய
புத்தம் புதிய முகவரிகள்
மாற்றிவைக்கப்படப்போகிற
தீட்ஷன்ய யாத்திரை
நிகழ்காலத்தில் இறந்து
எதிர்காலத்தில் பிறக்கிறது


புள்ளிட்ட இடங்களை
நிரப்பிவைக்கும்
கேள்வித்தாள்போலவே
வாழ்க்கை


விடைகளுக்காகத் தவமிருக்க
இப்படியாகிப்போன
உருகிவழிந்தொழுகும்
உணர்வு வெளியாவதுக்கு
அடிப்படையான காரணங்களை
எத்திசை தேடினாலும்
நிறைவடைய முடியவில்லை

 .
நிலாப்பிரதேசங்கள்
எல்லைதொட்டு மாறப்போகின்ற
வளைந்த வானத்தில்
சிறைப்பட்டிருக்கும் மேகங்களும்
நினைவுக் கண்ணாடியில்
படிந்துபோன பிம்பங்களும்


மலர்கள் சிறைப்பிடித்துள்ள
செந்தாழ வாசனைகளும்
மழையில் நனைத்துப்போன
பஞ்சனைக் கதைகளும்
இனிதொடரப்போகும்
முடிவான பயணத்தில்
துருவ நட்சத்திரமாகலாம்


பிரியமான சஹியே
இப்போதே தயாராகிவிடு............!


...................................................................


இரைச்சல்களில் கலவரமான
மத்தியரெயில்நிலையம்

ஒரு
அடைக்கலக்குருவி
எப்படியோ உள்நுழைந்துவிட்டது 


குளிர்கால ஜன்னல்கள்
இறுக்கி அடிச்சுச்சாத்தியதில்
திசையறிதந்திரமிருந்தும்
இடைவெளிகளின் சாத்தியமேயில்லை


புத்திசாதுரியமாகத்
தாழ்வானபறைப்பைத் தவிர்த்து
வெளியேற்றப்பாதை தேடுது


வாசல்களை 
அடைத்துக்கொண்ட
மனித அவசரத்தில்
இன்னுமெவளவு நேரமதன்
இறைக்கைகள் வேகம் தாங்கும் ?


ஓய்வெடுக்கும் 
சில தருணங்களோடு
ஒரு
பயணத்தடத்தில் காத்திருக்கும்
எனக்குத் தெரியவில்லை,


அதன் பின் அதைக் காணவில்லை !

மேலே விட்டத்தில்
ஒரு பாதுகாப்பானமறைவில்
ஒளித்திருக்கலாம்


ரயில்நிலைய அவசரங்கள்
நடுராத்திரி பன்னிரண்டில்
களைத்து ஓய்ந்த பின்னர்
கடைசியான தப்பித்தல்
முயட்சிக்காகக் காத்திருக்கலாம்


அடைக்கலக்குருவிக்கு 
எங்கே தெரியப்போகுது
அனைத்து வழிகளுமந்தநேரம்
விளக்குகள் அணைக்கப்பட்டு
விடிகாலைவரையிலும்
அடைக்கப்படுமென்று .!



...................................................................


தொடக்கத் தடுமாற்றத்தை
எதிர்கொள்ள நேரிடுமென்பதை
நினைத்ததில்லை.
இயலாமைகளில்
விட்டுக்கொடுப்போடு இருக்கலாம். 


நீண்ட முடிவுக்குக் காத்திரு
என்பதைச்
சொல்வதெல்லாம் அராஜகம் .


முதல்க் காதல் போல
அனுசரணையுடன் அணுகவேண்டி
தவிப்புகள் நிறயவேயிருக்க
மலைப்பாம்பு போல
ஏப்பம் விடக் காத்திருக்கு
ஸ்டாக்ஹோலம் நகரம்


நடுக்கம் தருகிற பயத்தை மறைக்க
உக்கிரமடைந்து போகிறது
ஆத்மா


முன்னெப்போதும் இல்லாதபடி
விழித்துக்கொள்ளும் மனது
நான் யார் என்பதை முடிவுசெய்கிறது


நன்றாகப் பழக்கமான
இந்த நகரத்துக்கு
நானொரு எழுத்தாளன் என்று
சொல்லிவைத்திருக்கிறேன்


அதில்
அது நிறைவு கொள்வதுபற்றி
அதன் முகத்தில்
ஒன்றுமே தெரியவில்லை


புரிந்து கொள்ளக்கூடிய அளவில்
அது பதிலும் தரவில்லை


வைராக்கியமான அதன்
அகங்காரத்தின் முன்
என்
பரிதாபமான மொழி
தாக்குப்பிடிக்குதில்லை....


......................................................................

பிடித்த தடம் பதித்து நடந்த
பழைய வழிகளில்
விழித்தெழாத கனவொன்றில்
புரியமுடியாத
வாசனை மோப்பம் 


ஒளிதரும் திசைகளை
வேண்டுமென்றே
மறைத்து வைத்திருக்கு
ஸ்டாக்ஹோல்ம் நகரம்


அதன் அபரிமிதமான
காற்றின் செய்திகளில்
என்
குளிரில் விரைத்த
உள்ளங்கையைத் தடவிப்பார்த்து
சட்டென்று கண்டுபிடிக்கும்
வித்தைகள் பலிக்குதேயில்லை .


அனுபவம் என்ன பாவம் செய்தது ?

முக்கித்தக்கி
இன்னொருமுறை முன்னேற
முயட்சிக்கு எப்படி
முடக்குவாதம் வந்தது ?


இந்த நாட்டில்
நீயே உனக்கு அதிபதி
உன்னோட
தன்னம்பிக்கைதான் விதி
மற்றவர்கள் எல்லாருமே
தூரமாகி நிட்பவர்கள்


சிலர் விழுந்துகொண்டிருப்பதை
வேடிக்கை பார்ப்பவர்கள்

ஏதாவது பார்த்து செய் என்கிறாள்
லாமியா .


பிரயோசனம் இல்லாத போதும்
இப்போதைக்கு இதனை
யதார்த்தம் என்று சொல்லமுடியவில்லை.


............................................................................................

சிலந்திவலை போலவே
அளவுக்கு அதிகம் உரிமை எடுத்து
அமைதி கசிந்துகொண்டிருக்கும்
பிராத்தனை நாள்


மெலிந்துபோன குளிர் காற்று 
புனித செயின்ட்கிளாரா
தேவாலயக் கதவைத் தொடுகிறது


நடு மண்டபத்தில்
பழைய மரப் பியானோவில்
செபாஸ்டியன் பாச் இன்
முடிவுறாத சிம்பொனியை
மெய்மறந்து வாசிக்கிறான் ஒருவன்


திருச்சபை மேடையின்
ஊதுபத்தி வாசனையில்
பாட்டியின் செத்தவீட்டு நினைவுகள்
சுழன்று சுழன்று அப்பிக்கொண்டது


ப்பரிகையில்
இராப்போசனத்தில்
ஜேசுநாதரை கண் ஜாடையில்
ஜூதாஸ் சக்காரியாஸ்
காட்டிக்கொடுக்கும் கன்வஸ் ஓவியம்


வயதான வெள்ளை மனிதர்களின்
விழிமூடிய பிராத்தனையில்
வருடம் தவறாமல்
கர்த்தர் பிறக்கும் நம்பிக்கை


வீடில்லாத தெருவாசியொருவன்
அடக்கவே முடியாமல்
நெஞ்சு விலாஎலும்புகள் குலுங்க
தொடர்ச்சியாக இருமிக்கொண்டிருக்கிறான்


நானோ
சூடானவொரு கோப்பி கிடைக்குமாவென்று
சொண்டு உலர அங்கலாய்க்கிறேன்


வெளியே உல்லாசமாக
எதையுமே கணக்கிலெடுக்காமல்
முழங்கால் வரையில் சலங்கைகட்டிச்
குதி அதிர சதிராடிக்கொண்டிருக்கு
ஸ்டாக்ஹோலம் நகரம்.


....................................................................................

காலை நடைபாதை
வழக்கத்திற்கதிகமான குளிர்
மெட்ரோவில் கூட்டத்திற்கு குறைவில்ல


ப்போதும் ஒரு அங்கலாய்ப்பு
ஏதேனும் ஒரு மறதி 
நீண்ட முடிவில்லாவொரு
வரிசையிலேயே
காத்திருக்கும் பிரமை


தேவாலயக் கதவுகள் அகலத்திறப்பு
மேம்பாலத்தைக் கடக்க
பராமரிப்பற்று உறைபனி மூடிக்கிடக்கும்
சிறுவர் பூங்கா.


அலைகிற ஒவ்வொரு மனமும்
சாகமாட்டாது என்கிறது
முன்னேறும் முன்னிருட்டு


யன்னல்களில் நட்ச்சத்திர
அலங்கார குமிழ் விளக்குகள்


இழுத்து மூடப்பட்டிருக்கிறது
கடன் கொடுக்கும் வங்கி


திறந்திருந்து மினுங்கும்
கிறிஸ்ம்ஸ்
திரை வெளிச்சத்தை சிதடிக்கும்
விளம்பரங்கள்


முண்டியடித்துக் கொண்டு நிற்கிற மக்கள்
பண்டிகை கொள்வனவின் கனவில்
உதட்டைப் பிதுக்கியபடி
வெளியேறும் மூச்சுக் காற்று


பாலன் பிறப்புக்கு
பிரத்யேகமாக திறந்து விடப்படும் என
நம்பிக்கைதரும் காலநிலை


அனைவரையும் கோமாளிகளாக்கிவிட்டு
யாராவது ஒருவர் சிரிக்கலாம் என்கிறது
ஸ்டோக்ஹோலம் நகரம்


அந்த நபர் நானாகவும் இருக்கலாமோ
தெரியவில்லை.!