Sunday 18 June 2017

முன்னுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி !

விடுதலைப் போராட்ட நிழலாக “புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரே” என்று எழுதிய நெருப்பு பற்றி, இளைஞர்களின் விடுதலை எழுச்சியின் பிண்ணனியில் “என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி, ஒரேயொரு கைக்குண்டு, என் எதிரிக்கெதிராய்ப் போரைப் பிரகடனம் செய்ய என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி ஒரேயொரு கைக்குண்டு எனினும் நான் தளரவில்லை......” என்று வீரமா உருவாகிய தமிழர் கலை இலக்கிய மலர்ச்சியின் எழுச்சியில் உருவாக்கிய ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் சிவரமணி,
                                                                 சிவரமணி எழுதிய எல்லாக் கவிதைகளையும்,சேர்த்து வைத்து இருந்த புத்தங்கங்கள் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு நெருப்பு பத்த வைத்துப் போட்டு ,தன் தாயார் இரத்த அழுத்தத்துக்கு பாவிக்கும்  குளிசையை அள்ளிப்போட்டு "....மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள் என் பாதங்களுக்கிடையில் மூச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது...." என்று விரக்தியாக எழுதிய சிவரமணி இருவத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்டன.
                                                           சிவரமணி தன்னோட தற்கொலையை மிகவும் நேர்த்தியாகப் பல நாட்கள் சிந்தித்து எடுத்தது போலவே உள்ளது அவா எழுதியுள்ள கடைசிக் கவிதை ,,அதில் . "எந்தவிதப் பதட்டமுமின்றி சிந்தித்து நிதானமாக எடுத்த முடிவு இது ;எனினும் எனக்கு இன்னும் வாழ்க்கை அட்புதமாவே உள்ளது...." இப்படி எழுதிய அந்தக் கவிதை முடிவில் இன்னும் இறுக்கமாகும்
                                                                   " இந்த முடிவுக்காக என்னை
மன்னித்துவிடுங்கள்.மன்னிக்காவிட்டாலும் பரவாயில்லை.எனது கைக் கெட்டிய வரை
எனது அடையாளங்கள் யாவற்றையும் அழித்துவிட்டேன்.நீங்கள் செய்யக்கூடிய உதவி ஏதும் எஞ்சி இருந்தால் அவற்றையும் அழித்து விடுவதே. ",,இப்படி நிஜ வாழ்கையில் முடிந்தே போனது சிவரமணியின் உலகம் .
                                                                 சிவரமணி எங்களின் ஊரிலதான் உயர் கல்வி அறிவுள்ள பிண்ணனியில் இருந்த ஒரு குடும்பத்தில்ப் பிறந்தவா. பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ,அப்பா சின்ன வயசில் இறந்துபோக ,அம்மாவுடனும் சிவகங்கா என்ற  ஒரே ஒரு சிறிய சகோதரியுடனும் வாழ்ந்தவா. கொஞ்சம் எல்லாரோடும் சேராத, அரசாங்க உத்தியோகம் செய்த வசதியான குடும்பம்,
                                                            சிவரமணி யாருடனும் அதிகம் பழகாத ஒரு அப்பாவிப் பெண் போன்ற தோற்றம் உடைய, மிகவும் உயரம் குறைந்த, யாரையும் அதிகம் நிமிர்ந்தே பார்க்காத அந்தப் பெண்ணின் உள்ளே ஒரு எரிமலை இருந்து, அது கவிதை வடிவில் எப்பவுமே வெடித்து வெளியே வர ,சிவரமணி தற்கொலை செய்த பின் பல விமர்சனங்கள்,நிழலான கருத்துக்கள் இலங்கையிலும் புலம் பெயர்நாடுகளிலும் வெளிவந்தன.
                                                          மர்மமான அந்த நிகழ்வின் சில விசியங்கள் இன்னும் பலருக்கு தெரிய வரவேயில்லை,காரணம் சிவரமணியே ஒரு மர்மமான கவிதாயினி.மேடையில் ஏறி கவிதை வாசித்தோ,அல்லது அப்போது யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த முக்கிய இலக்கிய சஞ்சிகைகளே அவரின் ஆக்கம் வெளிவரவில்லை எண்டு நினைக்கிறன்,
                                                                       அப்புறம் எப்படி சிவரமணி கவிதை உலகில் இவளவு தூரம் கவனிக்கப்பட்டது என்பதுக்குக் காரணம், சிவரமணி கவிதை எழுதிய விதம்,அதன் கவிதை மொழியின் வீரியம், அது ஏட்படுதிய ஜோசிக்க வைக்கும் சலசலப்பு எல்லாத் தரப்பையும் நீதி கேட்ட நியாயங்கள். ஒரு பெண்ணின் சமூகப் பார்வை, துவக்குகளை காவிக்கொண்டு திரிந்தவர்கள் சந்தியில் நிக்கும் போது அவர்களை விமர்சித்த அபாரமான  துணிச்சல் 
                                                       மிகவும் சிறப்பாக ஆங்கில அறிவுள்ள சிவரமணி யாழ் பல் கலைகழகத்தில் படித்து,அங்கேயே பின்னர் ஆங்கில இன்டலெக்சுவல் இலக்கிய,அரசியல் புத்தகம், கட்டுரைகளை மொழி பெயர்தவா, இன்னுமொரு கம்பஸ் கவிதாயினி செல்வி, போன்றவர்களுடன் வேலை செய்தவா.
                                                                  சிவரமணி ஆரம்பத்தில் ...... என்ற அமைப்பின் அரசியல் விசுவாசியா இருந்து விடுதலை எழுச்சி கவிதைகளை விடவும் பெண்களின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் எழுதியவா, மனித உரிமை அமைப்புக்களுடன் நிழலாக இயங்கியவா,நீங்களே சொல்லுங்க பார்ப்பம், இவளவும் போதாதா ஒரு பெண்னை அரசியல் பின்புலங்களின் ஆளுமைகள் நிராகரிக்கப்பட்டு வெறும் பயல்கள் சண்டியன்கள் போல இயங்கிய காலத்தில்  இயல்பாக இயங்க விடாமல் செய்வதுக்கு.
                                                                               சொல்லபோனால் அவாவின் எழுதும் முறை அப்போது எழுதிக்கொண்டு இருந்த கவிஞ்சர்களின் ஸ்டைலை விட வித்தியாசமானது. முக்கியமா அவா ஆங்கிலக் கவிதைகள் மொழி பெயர்ததால் சில்வியா பிளாத் இன் " கொன்பெஸ்சனல் " ஸ்டைலில், அலன் ஜின்ச்பெர்கின் கோப வரிகளின் பாதிப்பு நிறையவே இருக்கு அவாவின் கவிதைகளில். எரிக்கா யங் எழுதிய கவிதைகள் போல சில தரமான கவிதைகள் எளிமையான தமிழில் எழுதிய சிவரமணி கடைசியில் சில்வியா பிளாத் போலவே தற்கொலை செய்ததுக்கு நிறைய மன அழுத்தக் காரணங்கள் அவாவின் வீட்டிலை அதிகமாயும் வீட்டுக்க்கு வெளியே நாட்டிலை கொஞ்சமும் இருந்தது..
                                                                         ஈழ விடுதலைப் போராட்டதில் எல்லா இளஞர்,யுவதிகள் ஆர்வாமாய் இணைந்ததை " ..தேசத்தின் அறிவாளிகள் தெருக்களில் துப்பாக்கிகளுடன்...." என்று இயல்பாக எழுதிய சிவரமணி அவர்களே,ஜனநாஜகப் பாதையில் இருந்து கொஞ்சம் குளறுபடியாக பாதை மாறிய போது , சிவரமணியின் குரல் கொஞ்சம் காட்டமாக "....நிராகரிக்கப்பட முடியாதவள் நான்..... " என்று எழுதத் தொடங்க வைத்தது காலம்.,அந்தக் கவிதை துவக்கு நுனிகளை மடக்கியது. அப்படியான வைராக்கியமான வார்த்தைப் பிரயோகம், அப்புறம் விடுவாங்களா வில்லவராசங்கள்!
                                                                  துணிவோடு “....என்னிடம் ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை...” என்று எழுதி இன்னும் குழப்பமாக அந்த நாட்களில் இயங்கிய ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளின் குறுகிய மனப்பான்மை,போட்டி,பொறமை,எல்லாத்தையும் “வினாக்களுக்குரிய விடைகள் யாவும் அச்சடிக்கப்பட்டுள்ளன.....” என்று எழுதிய பொழுதே சிவரமணியின் சிந்தனை வீச்சு கவனிக்கப்படத்தொடங்கி இருக்கலாம், அது அவாவுக்கும் தெரிந்து இருக்கலாம்.
                                                                 எண்பதுகளின் புதுக் கவிதைப் போக்கில் கவிதை மொழியில் நிறைய புதுமை செய்த ஒரு அடக்கமான பெண் என்பதால் சிவரமணி ஈழத்துக் கவிதை வரலாற்றில், புரட்சிகர காலகட்டத்தின் மிக முக்கியமான கவிதாயினி என்பதுடன் இன்றைக்கு யாழ்பாணத்தில் இருந்து எழுதும் பெண் கவிதாயினிகளின் கவிதைகளில் சிவரமணி பற்ற வைத்த “..கூனல் விழுந்த எம்பொழுதுகளை நிமிர்த்தத்தக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை..” போன்ற பொறியைப் பார்க்கலாம்.

                                                                      தற்கொலை ஒரு தற்காலிக பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு எண்டு சொல்லும் இந்த உலகத்தில், ஒரு படைப்பாளி வாழும் சுழல் எவளவு மன உளைச்சலை தனிப்படக் கொடுக்கும் என்பதுக்கு உதாரனமான சிவரமணியின் கவிதைகளைத் தொகுத்து கனடாவில் "விழிப்பு " பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ளன, பேராசிரியை சித்திரலேகா மவுனகுரு சில கவிதைகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளா . மின்னியல் வெப் ஊடறுவின் நூலகப்பகுதியிலும் சில கவிதைகள் வாசிக்க முடியும்...
                                                                   யாழ்பாணத்தில் பிறந்த சிவரமணி பற்றியோ,அவர் கவிதைகள் பற்றியோ யாழ்பாணத்தில் இருந்து எழுதும் எழுத்து ஜாம்பவான்கள் அதிகம் பேர் ஒண்டுமே எழுதவில்லை. தமிழ் நாட்டில் இருந்து எழுதும் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஒரு அருமையான கட்டுரை "....என்னையும் நிர்வாணமாக்கும் என்கிற நம்பிக்கைக் கீற்றில் கணங்களைக் கொழுத்தி என்னைப் பட்டைதீட்டிக் கொள்கிறேன்.." என்ற வரிகள் வரும் கவிதையையும்,வேறு சில கவிதைகளையும் சிலாகித்து, கமலாதாஸ் போன்ற இந்திய உப கண்டப் பெண்ணியல் கவிதாயினிகளை விடவும் மிகவும் சிறந்த ஒரு கவிதாயினி சிவரமணி என்று எழுதி இருந்தார்,

                                  அது நிறைய பேர் தமிழ் நாட்டில் சிவரமணி யார் எண்டு தேடி வாசிக்க வைத்தது. காலம் காவுகொண்டுபோன ஒரு பெண்ணின் கவிதைகள் சிறகு முளைத்து திசைகளைத் தாங்களாகவே தேடி எடுத்துக்கொண்டு  பறக்கத்தொடங்கின. இன்றைக்கு கவிதை எழுதும் பலர் கட்டாயம் சிவரமணி கவிதைகள் சிலதையாவது படிக்கவேண்டும். அதில் நிறையவே வடிவமைப்பில் வார்த்தைகளைத் தூக்கிநிறுத்தும்   ச்ற்றக்சறல் போர்மேசன் என்ற உத்தி இருக்கு. 
                                                                இலங்கை ராணுவத்தின் அட்டகாசம் ,சகோதர இயக்கப்படு கொலைக் குளறுபடிகள் , இந்தியஅமைதி காக்கும் படை அமைதியை விலை பேசியது போன்ற , வரலாற்று நிகழ்வுகளின் நடுவே, மொழி இழந்த அப்பாவி மக்கள்,விதவைப் பெண்கள்,இயக்கப் போராளிகள், போராட்டம், ஜனநாஜகம், இவற்றின் நொந்து போன குரலின் காலப்பதிவின்  குரல்வளையாக மாறியவர் சிவரமணி. ஆனால் அந்தக் காலம் காலனின் கண்காணிப்பு அதிகமான காலம். 
                                                                        சிவரமணியின் காதலன் தில்லை ....என்ற இயக்கத்தில் இயங்கியதால் கடத்தப்பட்டு காணாமல் போன போது  ஒரு விதமான நம்பிக்கை அற்ற இருட்டு சுற்றி வளைக்கும் கனதியான வருடங்களில் சிவரமணியின் கவிதை வரிகள் ஒரு காலகட்டத்தின் தவிர்க்க முடியாத தரவாகப் பதிவாகி “எனக்குப் பின்னால் எல்லாப் பரம்பரைகளும் கடந்து கொண்டிருந்த வெளியில் நானும் விடப்பட்டுள்ளேன்......” என்று கையறுநிலை பற்றி எழுதி வைத்துவிட்டுச் சென்றவர் ,சிவரமணி .
                                                                 சிவரமணியின் மரண வீட்டில், அவாவின் யாழ் பல்கலைக்கழக நண்பர்கள் ஒரே ஒரு கவிதை எழுதி ஒரு துண்டுப் பிரசுரம் போலக் கொடுத்தார்கள்,அந்தக்  கவிதை என் வயதான மண்டைக்குள் முழுவதும் இப்போது  நினைவு இல்லை, ஆனால்     அந்தக் கவிதையின் கடைசி வரி இப்படி முடியும் " ,,,எல்லாம் முடிய முன்னர் முற்றுப்புள்ளியை ஏனம்மா முன்னுக்கு வைத்தாய் ...." எண்டு. நியாயமான கேள்விதான் . ஆனால் எங்கள் வாழ்வே அந்தக் காலகட்டத்தில் தொடக்கமே இல்லாமல் இருந்ததே சர்வேஸ்வரா !

                                                          ஏனோ தெரியவில்லை எங்கள் அன்புக்கு உரிய சிவரமணி தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்ட பின்னும் அந்த வரிகளை இன்னும் மறக்க முடியாமல், அதன் அர்த்தம் தானாகவே சொல்லும் வரிகளின் வேதனையை விளங்கிய எல்லா கவிதை ரசிகர்களுடனும் நானும் சேர்ந்து ,மனதில் நினைவு வைத்துக் கொண்டு , இதயத்தில்க் காவிக்கொண்டு தெரிகிறேன்.
                                                     சில கவிதை வரிகளையும் , அதை எழுதியவர்களையும், அவைகள் எழுதப்பட்ட காலகட்டத்தையும், எழுதவேண்டி ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலைகளையும்,  அவளவு சுலபமாக வெறும் வார்த்தைகளோடு சமாதானம் செய்துகொண்டு போனாப்போகுது  என்று சமரசமாகி  இதயத்தை விட்டு இறக்கி வைக்கவே முடியாது. இதுதான் வாழ்க்கை...!
.
//// 19.05.14./////

ஒரு பேய்வீடும், ஒரு நீதிபதியும் , மூன்று பெண்களும் !

                                        " புண்ணியம் , என்ன ஜச் வீட்டு பின் மதிலால ஏறி விழுந்து ஒரு பெடியனும் பெடிச்சியும் ஓடிப்போனத பார்த்த கதை அடிபடுகுது,,என்னவும்  சிலமன் அறிஞ்சியே "

                                     "  கிளாக்கர் ,,சொல்லிப்போட்டன் ,,உந்த அகட விகட விசர்க் கேள்விகளோட என்னட்ட வரபிடாது  எண்டு "

                                  "  இல்லை மெய்யாத்தான்  கேட்கிறேன், புண்ணியம் ,ஆருமில்லாத பேய் வீடு ,,புரளியை வயித்தில புளிபோலக் கரைக்கிற  வீடு,,பிறகென்னண்டு கதவு,,நிலைகள்  இரவோடு இரவா காணமல்  போகுது "

                                              "   கிளாக்கர் , சொல்லிப்போட்டன், கேந்தி வரப்பண்ணிபோட்டு பிறகு வீண் வம்பு தும்புக்குள்ள என்னை இழுத்து போட்டுடு ஊரை  வேடிக்கை பார்க்க வைக்க வேண்டாம், சொல்லிப்போடேன் ,,

                                         "  புண்ணியம் ,,நானொண்டும்  தனகிரதுக்கு  வரேல்லே,,சும்மா கேட்டன்...அதுக்கேன்  இந்தக்  கொதி "

                                      " கிளாக்கர்.  நான்   ஆனானப்பட்ட  உஸ்வத்த ஹரவா சிங்களவனுக்கே கபரக்கொய்யா கையால  பிடிச்சுக் கொடுத்த ஆள்  தெரியுமே,,அனாவசிய பிடுங்குப்பாடு அவளவு  நல்லதுக்கில்லை  ,,சொல்லிப்போடன்  "

                                               " சரி விடு ,,அயல்வீடுதானே  புண்ணியம்,,கொஞ்சம்  கண்ணைக் காதை வைச்சுக்கொண்டிரு  ,,"

                                    "    என்னமோ தின்ன வழியில்லாதவன்   கோவில் சொத்தைக் கொள்ளை அடிக்கிறமாதிரி எல்லோ  கெம்பிக்கொண்டு திரியிறியள்,,ஜச் வீடு பக்கத்து வீடுதான்  அதுக்காக  அதுக்குள்ளே என்ன நடக்குதெண்டு எனக்கென்ன  தெரியும் ..கிளாக்கர் இனி  உந்த கதை என்னோட  பறையப்படாது கண்டியளோ "

                                          
இந்த உரையாடல் அடிக்கடி சிங்கள நாட்டுக்கு போயிலை கட்டி ஏத்துற  வியாவாரம் செய்த  புண்ணியக்குஞ்சிக்கும், இலங்கை அரசாங்கத்தில  கிளாஸ்  வன் கிளறிகள் செர்வென்ட் ஆக வேலைசெய்து பென்சன் எடுத்த  பெட்டிசம் பாலசிங்கத்துக்கும் எப்பவுமே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா எங்கள் வீதியிலையோ, அல்லது வீராளியம்மன் ஆலமரத்தடியிலையோ , அல்லது செங்களுனிதொட்டியடியிலையோ, அல்லது அம்மச்சியா குளத்து பன்டிலையோ, அல்லது அம்மன்கிளை சங்கக்கடையடியிலையோ, கொள்விலைக்கு நஷ்டமில்லாமல்   மொத்தமாகச் சுருட்டி சொன்னால் எங்கள்  ஊருக்குள்ளே  எப்பவுமே நடக்கும்.

                                                ஒரு வீதி முடக்கில்  யாருமே வசிக்கத் தவறிய  ஒரு வயதாகிப்போன  பேய்வீடு, எப்படிச் செத்துப்போனார் என்பதுக்கு குறிப்புகள் இல்லாத   ஒரு ஹைகோட்  நீதிபதி , அகோர யுத்தம் விரட்டியடித்து  ஊருக்குள்ளே முகமிழந்து   அகதியாக வந்த மூன்று பெண்கள்.   இதிலிருந்துதான் சொல்லிமுடிக்கப்படாமல்   கடந்துவந்த       கதையில், மனிதர்கள் , அவர்களின்  அலாதியான நினைவுகள், உள்ளிறங்கி ஆழமாக ஏதோவொன்றை நிறைவாக்க முடியாமல் போன   சம்பந்தப்பட்ட காலம், விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாதவாறு   இறுக்கமாகியது .  

                                                எல்லா ஊரிலும் கதவுகள் திறக்கப்படாமல் ஒரு சடைச்சு வளர்ந்த வயதான புளியமரத்துக்கு அருகில் ஒரு பேய் வீடு நல்ல ஊர் என்ற நல்ல பெயரைக் கெடுக்கவே   நாவூறுகழிப்பது போல நாக்கை நீட்டிக்க்கொண்டு   இருக்கும். 

                                                    எங்கள் ஊரிலும் அப்படி ஒன்று இருந்தது. ஆனால் அதுக்கு பக்கத்தில் எந்தப்  புளியமரம் இருக்கவில்லை. ரெண்டு நீட்டி வளர்ந்த  சப்போட்டா  மரங்களும், நாலஞ்சு காட்டுத்  தேக்கு மரங்களும்தான் நின்றன. அந்த வீடு எங்களின் வீதியில் தெற்கு பக்க முடிவில் நாளைவில்சந்தியில் இருந்து பார்த்தால் வலது பக்கத்தில் ஆறாவது  வீடு.

                                                       கொஞ்சம் விலாசம் எழுப்பி சொல்லுறது என்றால்   எங்கள் வீதியில் ரெண்டு வழக்கறிஞ்சர்கள், ஒரு கண் டாக்டர், ஒரு கள்ள சாராயம் விற்பவர்களைப் பிடிக்கும்  காலால்  இன்ஸ்பெக்டர் ,  சர்மா  மாஸ்டர் என்ற  ஒரு புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியர், அமுத பாரதி என்ற எழுத்தாளர். ஈழநாடு பத்திரிகையில் வேலை செய்த  ஒரு மூத்த   பத்திரிகையாளர் ,  என்கின்ற படித்த  மேன்மக்கள்   என்னோட இளவயதில் இருந்தார்கள். 

                                                       ஆனால் மிகப் பல வருடங்களின் முன் ஹிந்துபோட் என்ற  இந்துக்களின் நலம் கருதும்   அமைப்பை உருவாக்கிய சமயவாத  முன்னோடி ஒருவரும், ஒரு புகழ்பெற்ற நீதிபதியும் வசித்து இருக்கிறார்கள் ,இதில்  நீதிபதி வசித்ததுக்கு ஆதாரமாய் இருப்பது அந்த வீதியின் பெயர். 

                                                   எங்களின் வீதிக்குப் பெயரும் " உச்ச நீதிமன்ற  நீதிபதி  உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி " . அந்த வீதிப் பெயர் எப்படியோ முதலில்  " வைமன் வேலுப்பிள்ளை வீதி " என்று ஒடுங்கிப் ,பிறகு  " வைமன் வீதி " என்று சுருங்கி, பிறகு ஆங்கில மோகத்தில் " வைமன் ரோட் " என்று காலத்தோடு சமாந்தரமாக மாறிவிட்டது . 

                                              எனக்கு விபரம் தெரிந்த நாட்களில் அதுக்குப் பெயர்  " வைமன் ரோட் ".! அவளவுதான் !  இன்றைக்கு யாராவது இதை  வாசித்துப்போட்டு   எங்கள் ஊருக்குப் போய் வரலாற்று ஆர்வக்கோளாரில நான் உல்டா விடுறனா இல்லை  உண்மையதான் சொல்லுறேனா  என்று  உறுதிப்படுத்த , 

                                       " நீதிபதி  உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி  எங்கிருக்கு " 

                                          என்று கேட்டால் அந்த இடமே  கலவரமாகி  உத்தரவாதமாக கேட்பவரின் மூளையின் தராதரத்தில் அனாவசியமான சந்தேகம்தான் வரும் .அவளவு வேகமாக உலகம் எங்கோயோ போய் செருகி நிக்குது.   என் இளமைக்கால நினைவுகளின் அடுக்குகளில் இந்தப் பெயர் மாற்றங்கள் கண்ணுக்கு முன்னால் நடந்தாலும் , வைமன் கதிரவேலுப்பிள்ளை வசித்த பேய் வீடு ஏன் சீரழிந்து தொன்மையான குடும்பமொன்றின்  பெருமிதங்களை இழந்தது என்பது  பற்றியும் என்னைப் போலவே  என்  ஊரில வசித்த  பலருக்குத்தெரியாது என்றுதான் நினைக்கிறன் .

                                        
தமிழுக்காக உயிரையும்  விடுவேன் என்ற பயங்கரவாதக் கொள்கையில் வாழ்ந்த என்னோட அப்பாதான் அந்த  ஆங்கிலேயர் காலத்தில் படித்து உயர் வேலை எடுப்பதுக்கு கிறிஸ்தவ சமயத்துக்கு  மாறி வைமன் என்ற பெயரையும் இணைத்துக்கொண்ட நீதிபதி  கதிரவேலுப்பிள்ளை என்பவரின் பெயரில் பதியப்பட்ட அந்த வீதியை " உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி  " என்று கொழும்பில் வேலைசெய்துகொண்டு  இருந்து போது அம்மாவுக்கு  எழுதும் கடித முகவரிகளில் எப்பவுமே பதிவு செய்துகொண்டிருந்தார். அவரும் எண்பதுக்களில்  நீதிபதியோட போய்ச் சேர்ந்திட்டார்.  

                                                அதுக்கு அவர் சொன்ன காரணம் தொல்காப்பிய  தமிழிலக்கணப்படி வைமன் என்று எழுதுவது  பிழையானது என்றும் . ஒலிப்பியலிலும் அது குற்றமுடையதாகும் என்பதாகும். அதனால எப்பவும் அவர் அனுப்பும்  கடிதங்களில் அமைந்தகரை  மறைமலையடிகளின் தீவிர பக்தனாக இருந்த காரணத்தினாலும்  தூயதமிழில் உவைமன் கதிரவேலுப்பிள்ளை வீதி என்றுதான் எழுதுவார். 

                                            அந்தக் கடிதங்கள் தூயதமிழின் குழப்பத்தில்  போஸ்ட் ஒபிசில் முகவரிகள்  தவறிய மழைமேகங்கள் போல  திணறி இருக்கும். எப்படியோ பிறகு போஸ்ட்மேன் கையிலயும் கிடந்தது  திணறி வீட்டுக்கு வந்துகொண்டுதான் இருந்தன.

                                                                
ஆங்கிலேயர் காலத்தில்  நீதிபதியாக வேலை செய்த ஜென்டில்மேன் கதிரவேலுப்பிள்ளை வசித்த வீடு ஒருகாலத்தில்   ஹைகோட்  ஜச் வீடு என்று அழைக்கப்பட்டிருந்தாலும் என்னோட இளவயதில் அந்த வீட்டுக்குப் பெயர் சுவாரசியங்கள் நிறைந்த கதைகளை தன்னோட மூடிய கதவுகளுக்குப் பின்னால் மர்மமாக வைத்திருந்த   பேய் வீடு . 

                                             எண்பதுக்களின் இறுதிவரை பேய்வீடும் பெயருக்கு ஏற்றபடி அப்படியேதான் பகலில் எல்லா வீடுகளும் போல சாந்தமாக இருந்தாலும் , இரவுகளில் " முடிந்தால் என்  மர்ம முடிச்சுக்களை அவிழ்த்துப் பாருங்கள் " என்று சவால் விட்டுக்கொண்டு  இருந்தது. 

                                                 
நீதிபதி எப்படி இருப்பார், அல்லது  எப்படியான தோற்றமுடையவர் என்பதும் யாருக்கும் தெரியாது . ஒரு காலத்தில் பணக்காரர்களாக இருந்த அந்த வீட்டு உரிமையாளர்களின் தலைமுறைக்கு என்ன நடந்தது ? என்பது பற்றியும் யாருக்கும் வாய்வழியாக உலாவும் கதைகள் தன்னும் எங்கள்  ஊரில் நடமாட்டத்தில்  இல்லை . 

                                       நீதிபதி ஒருவனுக்கு தூக்குத்தண்டனை கொடுத்ததாகவும், அப்பாவியான அவன் செத்து ஆவியாக வந்து அந்தரத்தில் தூக்குக்கயிறில தொங்கிற மாதிரி   நீதிபதியின் வீட்டில்  பழிவாங்கும்   முடிவோடு   வசிப்பதாகவும் தலையும் வாலும் இல்லாத ஒரு கதையை புண்ணியக்குஞ்சிதான் அவிட்டுவிட்டுக்கொண்டிருந்தார்.

                                              அதுக்கு ஆதாரமாக இன்னொரு கதையை இடையில செருகி விட்டார். விட்டலாச்சார்யார் சினிமாப்படங்களைப் பார்த்த யாருமே இலகுவாக சொல்லமுடியும் அந்த இடைச்செருகல் கதை ஒரு சினிமாவின்  திரைக்கதை என்று. ஆனாலும்  கொஞ்சம் காது நுனி சில்லென்று  விறைப்பது  மாதிரி  தனக்கேயான சில தரிகிடதோம்  சங்கதிகளை புண்ணியக்குஞ்சி சேர்க்கவும் தவறவில்லை. 

                                                          இந்தப் பெண்டகன்  போல ராணுவ ரகசியம்  பாதுகாக்கும் பேய் வீட்டின்  உள்வீட்டு சமாச்சாரங்கள் சேர்ந்த   விபரமெல்லாம் தென்னம்காணி எல்லை வழக்கில வயித்தில கிரீஸ் கத்திக்குத்து   வேண்டி வயிறு முழுவதும் வெட்டித் தைத்ததால் ஒப்பெரேசன் என்று புறமுதுகிட்டு ஓடாமல்  வீரத்தழும்புப்   பெயர் வேண்டிய  ஒப்பெரேசன்   செல்லத்துரை வேறு பலருக்கு சொல்லி இருக்கிறார். 

                                                        புளியமரமில்லாத பேய் பொஞ்சாதியைத் தலையில தூக்கிக்கொண்டு  திரிஞ்ச மாதிரி  ஒப்பெரசன் செல்லத்துரை  சொன்ன  இந்தக் கதைகளும் ஊருக்குள்ளே அங்கேயும் இங்கேயும் அரசல் புரசலாக மனிதர்களின்  உதடுகளில்  உரசிக்கொண்டுதான் திரிஞ்சுது.

                                    தலைமுறைகளாக யாருமே உரிமை கோராத     பேய்வீட்டுக் காணியை எப்படியோ அவரோட நெருக்கமான  கூட்டாளி     அருளம்பலம் அப்புக்காத்துக்கு அலுவலைக் கொடுத்து  புண்ணியக்குஞ்சி கள்ள உறுதி எழுதி எடுத்து வைச்சு இருக்கிறதா பரவலாக ஒரு  செய்தி  எப்பவுமே உலாவிக்கொண்டிருந்தது. அது எவளவு தூரம் உண்மை, எவ்வளவு தூரம்  சட்டரீதியான  நடைமுறைச்சிக்கல் எல்லாம் தாண்டி   சாத்தியப்படும்  என்பது பற்றியும் அதிகம் தெரியாது. 

                                             எங்கள் ஊரில வசித்த  அருளம்பலம் அப்புக்காத்தும் லேசுப்பட்ட ஆள்  இல்லை. தோல் இருக்க சுளையாகப் பழம் விழுங்கிப்போட்டு ஒண்டும் தெரியாத பாப்பா  போல பம்மிக்கொண்டிருக்கிற ஒரு நல்லபாம்பு ! 

                                     
விடுதலைப் போராட்டம்  நரகத்து நடுமுள்ளுப் போல நாண்டுகொண்டு நின்று அகோரமாகிய  எண்பதுக்களின் இறுதியில்   இரத்தப்பலியெடுக்கும் யுத்தமாக மாறிய போது  திருகோணமலையில் இருக்கும் தம்பலகாமத்தில் இருந்து சிங்களக் காடையர்களினதும் , சிங்கள ராணுவத்தின்   தாக்குதலுக்கும் முகம் கொடுத்து  தங்கள் கணவர்களை படுகொலைக்குக் கொடுத்து , எல்லாம்  இழந்த பின்     காடுகளுக்குள் ஓடித்தப்பி ,  வெலிஓயா , மாவிலாறு  காடுகளுக்கு ஊடக   நடையா நடந்து  குழைந்தைகளோடு யாழ்பாணம் வந்த மூன்று  அகதிக் குடும்பத்தில் இருந்த  மூன்று பெண்கள்  புன்னியக்குஞ்சியின் கரட்டி ஓணான் வெருட்டுக்கும் பயப்பிடாமல் அந்த வீட்டின் கதவுகளைத் திறந்தார்கள் . 

                              அவர்களுக்கு அந்த வீடு பேய்வீடு என்று தெரியாது !

                                                         புன்னியக்குஞ்சி கரட்டி ஓணான் வெருட்டுப் போல மர்மக்கதை மன்னன்கள் எழுதும் கதைகளை விடப் பயங்கரமான கதைகளை அவிட்டுவிட்டுக்கொண்டு,  அந்த மர்மங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வரும்படிகளை இரவிரவாக அள்ளி எடுத்துகொண்டிருந்த  ஒரு முக்கியமான மனிதராக  இருந்தார். 

                                           அவர்தான் சிங்கள நாட்டுக்கு போயிலை கட்டி ஏற்றி வியாவாரம் செய்த  புண்ணியமூர்த்தி சித்தப்பு என்ற  புன்னியக்குஞ்சி . 

                                          எங்கள் ஊரில் நடந்த எல்லாக் கதைகளிலும்  எல்லாக்காலங்களிலும் தவிர்க்கமுடியாமல் வீக்கிலீக்ஸ் போல   ரகசியங்களை உடைத்துக் கொண்டிருந்த  புண்ணியக்குஞ்சி ஒரு மாஸ்டர் மைன்ட் ஜீனியஸ் , 

                                   
புண்ணியக்குஞ்சியின் கல்வீடு , ஸ்கொட்லன்ட்யாட் மாளிகை போலிருந்த  பேய் வீட்டு பெரிய வளவின் அடித்தொங்கலில் கருப்பன்கொல்லை என்ற வளவில இருந்தது. பேய்க்கு எவளவு கரிசனை அந்த வீட்டில இருந்ததோ அந்தளவு புன்னியக்குஞ்சிக்கும் இருந்தது. ரெண்டுபேருமே பிசினஸ் பாட்னர்ஸ் போலத்தான் மர்மமாக இயங்கிகொண்டிருந்தார்கள். 

                                                 பேய் வீடு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்துகொண்டு போய்கொண்டு இருந்ததுக்கு முக்கிய காரணமே புண்ணியக்குஞ்சி என்று பெட்டிசம் பாலசிங்கம் சொல்லிக்கொண்டு திரிஞ்சாலும் அதுக்கு எவிடன்ஸ் ஒண்டும் பெடிசமிடம் இல்லை .

                                             
பேய் வீட்டில நின்ற காட்டுத் தேக்கு மரங்களுக்கு குறுக்கே யாரோ பாட்மிண்டன் விளையாடும்போது கட்டுவார்களே நெட் அது கட்டப்பட்டு இருக்கும். பேய் பேட்மிண்டன் விளையாடும் சாத்தியங்கள் இல்லாவே இல்லை. யாரோ கோடை காலத்தில் தேக்குமரதுக்கு தேடிவரும் வௌவால்கள் பிடிக்கும் நோக்கத்தில் கட்டி இருக்கிறார்கள். 

                                           ஆனால் யார் துணிந்து உள்ளே போனார்கள் என்பது புன்னியக்குஞ்சிக்கும் பேய்க்கும்  தவிர வேற   யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை .

                                   பேட்மிண்டன் வலைகளின் பின்னணி எப்பவுமே ஒரு புரியாத புதிர்.பேய் என்றால் என்ன கிள்ளுக்கீரை போல சும்மாவா,    பேய்க்கு தலைக்குமேலே ஆயிரம் சோலி சுரட்டு  இருக்கும். அதுக்கு பேட்மிண்டன் விளையாட நேரமிருக்குமா என்பது இன்னொரு குழப்பம்,  அதுபற்றி    புன்னியக்குஞ்சியைக் கேட்டால், 

                                       "சித்தப்பு  அதென்ன  இந்தப் பேய் வீடு இவளவு ஒளிப்பு மறைப்பா  இருக்கே  "

                                    " மூஊச்,,,அதப்பத்தி மட்டும் ஆரும் ஆவெண்ட வாயில அவல் அம்பிட்ட மாதிரி  பறையக்கூடாது கண்டியளே, மூஞ்சிக்கு முன்னாலேயே சொல்லுறேன்  "  

                                          "  இப்ப  என்ன வரப்போகுது  சொன்னா சித்தப்பு,,,,,இந்தக்  காலத்தில  சுடலைக்குல்லேயே எங்கட பொடியள் கட்டவுட் போட்டு சாமம் சாமமா  சென்றிக்கு நிக்கிறாங்கள்   "

                                      " குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா  பிறகு  சுப்பன்னே சுப்பனே  சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது  கண்டியளே.."

                                     " சித்தப்பு ,,செம்பாட்டுவெளி மாயனத்திலதான் இரவிரவா பெடியள் உருண்டு  பிரண்டு  கிடந்தது ட்ரைனிங் எடுகிராங்கள்,,நீங்கள்  பூச்சாண்டி காட்டுறீங்க  சித்தப்பு " 

                                      " சொல்லிப்போட்டேன் ,,மூஊச்,  வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது "

                                  இப்பிடித்தான்  சொல்லுவார். சப்போஸ் அதில ஒரு பேய் வசித்துக்கொண்டு இருந்தால் எப்படி புண்ணியக்குஞ்சி உள்ளே துணிந்து போனார் என்பதுக்கு விளக்கங்கள் இல்லை. 

                                              ஆனால் அந்த வீட்டுக்குளே இரவில புண்ணியக்குஞ்சி போய் வாறதும், பெறுமதியான மலைவேம்புக்  கதவுகள், கருங்காலி   ஜன்னல் கிராதிகள்  இதுகளை பெயர்த்து எடுத்து அவர் சிங்கள நாட்டுக்கு போயிலை சிப்பம் கட்டி அனுப்புற லொறியில் ஏற்றி அனுப்பி நல்ல சம்பாரிப்பு செய்த தகவல்கள் பெட்டிசம் பாலசிங்கத்திடம் இருக்கு என்று சொன்னாலும் பெட்டிசதிட்ட எவிடன்ஸ் கையில இல்லை. 

                                                    
பேய்வீடு ஒரு எலிசபெத் மகாராணி காலத்து  மான்சன் போன்ற மாளிகை.   ஜெயில் கதவுபோன்ற பெரிய இரும்புக் கிராதிக் கதவில எப்பவுமே ஒரு பெரிய ஆமை போன்ற   திண்டுக்கல் பூட்டு கரல்பிடித்து தொங்கும், முகப்பு வராண்டாவில் சிலந்தி வலைகள் தொங்கும் , பளிங்கு மங்கிய தரையில்   வவ்வால் பீய்ச்சிய எச்சம் இறுக்கமாகி படிந்து கிடக்கும்.  

                                          முதல் படிவாசலில் ஒரு பெரிய மலைவேம்புக் கதவு அதில ரெண்டுபெண்கள் நிறைகுடம் சுமக்கும் சிற்பம் செதுக்கப்பட்டு இருக்கும். நிறைய மர ஜன்னல்கள் அவற்றில் அந்தோனியோ கைடியின்கண்ணாடி வேலைப்பாடுகள் போல ஒளித்தெறிப்புக்கள்.

                                   பேய் வீட்டுக்குப் பின்னால ஒரு பெரிய கட்டுக்கிணறு      பாசிபிடித்து   இருந்தது.கிணற்றைச் சுற்றி பாக்கு மரங்கள் சோடி சோடியாக அடர்ந்து வளர்ந்திருந்தது. ஜச்  வெத்திலை போடுபவராக இருந்திருந்தால் ஒருவேளை அதை விரும்பி வளர்த்து இருக்கலாம். 

                                                    காரை பெயர்ந்த சுண்ணாம்புக்கல் கிணற்றுக்கட்டின் இடைவெளிகளில் அரசமர வேர்கள் நுழைந்து அதை இன்னும் பிதுக்கி உடைக்க, சொல்லும்படியாக  துலாக்கொடியோ வேறு வசதிகளோ அது பாவிக்கப்பட்ட விதம் பற்றிக் கற்பனை செய்யவும் சாத்தியங்கள்   இல்லை.  ஜச் வாளியில அள்ளிக்குளிச்சிருப்பாரோ, யாருக்குத் தெரியும் ! 

                                   
இரவுகளில் வவ்வால்கள் கீச்  கீச்  என்று எதிரொலி எழுப்பியபடி அந்த வீடு முழுவதும் பறக்கும்போது அந்த வீட்டைக் கடக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். அதைவிட அமாவசை இரவுகளில் ஒரு ஆணும் பெண்ணும் சிரித்து சிரித்து சத்தம்போட்டு கதைத்துக்கொண்டு இருக்கும் சத்தம்  கேட்கும்  என்றும் சொல்லுவார்கள். 

                                                       தேவகனத்தில பிறந்த யாரவது கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் அந்த சோடி  கண்ணுக்குத் தெரிவார்கள் என்று  காளியம்மன்  உருவந்து கலையாடுற  சாமியம்மா வேப்பிலை அடிக்கும்போது சொல்லுவா. 

                                     அதை உறுதிப்படுத்த  சிங்கி மாஸ்டரிடம்  கேட்டா நல்லா வாயைக் கிழிக்கிற மாதிரி  சொல்லுவார்.  

உள்ளூர்  தத்துவமேதை  சிங்கி மாஸ்டர் எப்பவும் பேய்வீட்டு வெளி ரோட்டோர வாசலில் நேரங்கெட்ட நேரத்தில  படுத்திருப்பார் , 

                                             சிலநேரம் மழை பேஞ்சா சுவர் ஏறிக்குதித்து பேய்வீட்டு வெளிவிறாந்தையில் நிலத்தில  வவ்வால் பீய்க்கு மேலே வீரகேசரி பேப்பரை விரிச்சுப்போட்டு சேக்ஸ்பியரின் ஸ்டார்ட்ஸ்போர்ட்   இங்கிலீசில யாரையோ திட்டிக்கொண்டு காறித்துப்பி இருமிக்கொண்டு படுத்திருப்பதை சிலர் பார்திருக்கிறார்கள், 

                                           
ஒரு நாள்  அவரை மடத்துவெளியில்  குந்திக்கொண்டு யாருக்கோ என்னத்துக்கு " பழமைவாத  நிலச்சுவாந்த சோசலிசமும் கார்ல்  மார்க்ஸ்ஸின் நிறுவப்பட்ட   எடுகோள்களும் பிசகியது " என்று ஜன்மத்து சனிபிடிச்சு யமகண்ட நேரத்தில்  தெரியாமல் மாட்டிய ஒருவனுக்கு விளக்கிகொண்டிருந்த போது வையண்ணாசீனாக்கூனா கடைச்   சுருட்டும்  , மலைவாழ இதரவாழைப்பழமும். ஒரு றாத்தல் ரோஸ் பாணும்  வேண்டிக்கொடுத்து  மடக்கி, 

                                          "மாஸ்டர்,,உந்தப்  பேய் வீட்டில இரவில என்ன நடக்குது  எண்டு தெரியுமே உங்களுக்கு,,ஒரு சோடி அந்தரத்தில   உலாவுறாங்கலாமே  " என்று கேட்டேன் 

                                         "  ஹஹஹஹஹா, டேய்  கழுதை, செத்துப்போனவன் பலிவேன்டுற பேயாம்,,சித்தப்பு  நீ கதையளைக் கிளப்பி விட்டுபோட்டு...டேய்  வடுவா  ராஸ்கல் ,,, நீ நடத்து சித்தப்பு "

                                              " தேவகனத்தில பிறந்த யாரவது கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் அந்த ஜோடி கண்ணுக்கு தெரிவார்கள் என்று  கலையாடுற  சாமியம்மா சொல்லுறாவே.  "

                                        "  அடியாட  சக்கை  எண்டானாம்  அம்மன்  கோவில்  புக்கை  எண்டானாம், ஹஹஹாஹ்,,

                                  "   இதில  சிரிக்க  என்ன இருக்கு சிங்கி  மாஸ்டர் ? "

                                 "  வடுவா  ராஸ்கல் ,,,சித்தப்பு,  வண்டவாளம் தண்டவாளம்  ஏறுற ஒரு  நாள் ,,,நீ வேண்டித் தெளிவாய்  பார் ஒருநாள்  ,"

                                            "  உண்மையா  அப்படி  என்னவும் அதுக்குள்ளே  நடக்குதா,,யார் சித்தப்பு,,? புன்னியக்குஞ்சியா ?  "

                                               "டேய் அறுவானே , மனிசன்தான்  பேய்.  தூக்குத்தண்டனையும் ..மர்மமும் .. மண்ணாங்கட்டியும் ...   விசரக்கிளப்பாமல் அங்கால போடா "

                              "  இல்லை..அதுக்குள்ளே  என்னமோ  மர்மம் இருக்கு  மாஸ்டர் "      

                                 " என்ன  இருக்கு,,சொல்லு,,சித்தப்பு  நீ பெரிய சமுத்திரத்தை விழுங்கிய  கள்ளனடா "   

                                ",யார் சித்தப்பு,,புன்னியக்குஞ்சியா,,? மாஸ்டர்    " 

                                " ஏன் ஊருக்குள்ளே  என்ன அறுவதெட்டு  சித்தப்புவே அரிச்சந்திரன் வேஷம் போட்டுக்கொண்டு  அலையுறாங்கள்..சும்மா கிண்டாதை .. சோகிரடிஸ் சாவைப்பற்றி என்ன சொன்னார் எண்டு உனக்கு தெரியுமோ "

                                  " அதுக்கும் பேய் வீட்டுக்கும்  என்ன சம்பந்தம் " 

                       " சம்பந்தம்  இருக்குடா  எருமை  மாடு,   அவர் சொன்னரடா,,And let us also reflect upon And let us also how good a reason there is to hope that death is a good thing, டேய் இதெல்லாம் தெரியுமா  உனக்கு  "

                                  "  ஹ்ம்ம்,,,இது  வேற  எங்கேயோ போகுதே  மாஸ்டர்  "

                                 "   யாருமில்லாத விட்டேந்தி  வீடு,,பிறகென்ன குறைச்சல் ..  ரகசியமான கள்ளக்காதல் சோடிகள் கட்டிப்பிடிச்சு காமம் தலைக்கேறி   அதுக்குள்ளே கும்மாளம் போடுதுகள்,,"

                                         "உண்மையா  அது  மாஸ்டர்  "

                                      " நானும் அமளிதுமளியைக் கேட்டுக்கொண்டுதானே கண்டும் காணாததும்  போல  இருக்கிறேன் "

                                           "   இரவில ஒரு ஆணும் பெண்ணும் இளிச்சுக்கொண்டு  சத்தம்போட்டு கதைக்கிற  சத்தம்  கேட்கும்  எண்டு  சொல்லுறார்களே, சிங்கி மாஸ்டர் "

                                              "  ஹஹஹஹஹஹா ,,நீ  என்னடா சடையை விரிச்சு வைச்ச பொம்புளைப்   பேய்க்கு சொடுகு சொறிஞ்சு  பேன் பார்த்த  பேயனைவிடக் கிறுக்கனாய் இருக்கிறாய், மட்டி  மடையா ,"

                                      " அப்ப  உண்மையா பேய்  இல்லையா  அந்த வீட்டில மாஸ்டர்    "

                                       "   எல்லாம்  சித்தப்பு  வடுவா  ராஸ்கல்,,உன்னோட  சித்து வேலை,,"

                                  "    உண்மையா பேய்  இல்லை எண்டு ஒரு பேச்சுக்கு பந்தயம்  வைச்சால்  என்னத்துக்கு  ஊருக்குள்ள  அந்த வீட்டுக்கு  மட்டும்  பேய்வீடு  எண்டு சொல்லவேணும்  மாஸ்டர்,,ஒரு லொஜிக் இல்லையே  இதில " 

                                  "  பேந்தும்பார்  இந்தப்  பெடி பொட்டனி கட்டி வைச்சுப்    பினாத்துறதை   "

                                   " உலகம்  இவளவு  முன்னேறிய  காலத்தில் இந்தப்    பேய்வீட்டுக்கு    ஒரு லொஜிக் இல்லையே மாஸ்டர்  "
                                            

                                 " ஹஹஹஹாஹ்,,,வடுவா  ராஸ்கல்  சித்தப்பு,  நீதாண்டா ஒரு மயிக்  செய்துகொண்டிருகிறாய்,,அது  தெரியாமல்,,இந்தப்  பெடி  என்னை லொஜிக் கேள்வி கேக்குது "

                      "  சரி  ,,நீங்க  அவடதில  எப்பவும்  இருக்கிற  ஆள்  அதால  கேட்டேன்,,அவளவுதான் ,,மாஸ்டர் "

                                          " டேய் தாலி அறுவானே ,  பேயும்  இல்லை , அந்தப்  பேய்க்கு ஒரு பொஞ்சாதியும்  இல்லை,,அந்த வீட்டுக்குளேயே உண்மைய சொன்னா  ஒரு  ........யும்   இல்லை   இதுகள் தெரியாமல் பிசதுதுகள் தறுதலைகள்,  நல்ல கிளுவங்கம்பு   முறிச்சு வெளுக்க வேணும் இந்த  முதேசிகளுக்கு "

                                        
சிங்கி மாஸ்டர் காகம் கறுப்பு  எண்டு  சொன்னாலும்  அது  எங்கட  ஊரில எடுபடாது, ஏனென்றால்  அந்தாள் ஒரு அறப்படிச்ச   மண்டைப்பிசகு என்ற முடிவு எப்பவுமே எல்லாரிடமும் இருந்தது.  

                                                  ஆனால் சிலநேரம்  இருக்க ஒரு இடமில்லாத இக்கட்டில் இருந்தாலும் வாழ்கையை அதன்போக்கில்  மேடு பள்ளங்களில் ஏறி இறங்க  ரசிக்கவிட்டுப்போட்டு தனியாக  வாழ்ந்துகொண்டிருந்த சிங்கி மாஸ்டர்  சுருட்டுப் பத்திக்கொண்டு முகத்தைத் துவாயால மூடிக்கொண்டு பேய்வீட்டு வெளி ரோட்டோர சிமெந்து படியில அண்ணாந்து பார்த்துக்கொண்டு படுத்திருப்பார்.   

                                                
அதனால    மேலே சொன்ன    இவளவுதான் பேய் வீட்டை ரோட்டில நிண்டு  வெளியே இருந்து பார்கமுடிந்தவைகள். 

                                                    இதுக்கு மேலே உள்ளே  என்ன மாதிரி இருக்குமென்று நசுக்கிடாமல்  தாம்பாளத் தட்டில திருப்பதிக்கே  நாமம் போடுற  புன்னியக்குஞ்சிக்கும் , அந்த அட்ரஸில் வசித்த  பேய்க்கும்  தவிர வேற   யாருக்கும் தெரியாது. உள்ளே என்னதான் இருக்கு என்று விடுப்பில  அதுபற்றி    புன்னியக்குஞ்சியைக் கேட்டால், பழையபடி 

                                           "  மூஊச்,,,அதப்பத்தி மட்டும் ஆரும் ஆவெண்ட வாயில அவல் அம்பிட்ட மாதிரி  பறையக்கூடாது கண்டியளே,குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா  பிறகு  சுப்பன்னே சுப்பனே  சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது  கண்டியளே..சொல்லிப்போட்டேன் ,,மூஞ்சிக்கு முன்னாலேயே சொல்லுறேன்  ,மூஊச்,  வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது "

                                    இதுதான் வரும். " 

ஒருநாள் திக்கம்  தவறனைப்  பணம்கள்ளில வடிச்ச   வடிசாராயத்தை குடிச்சுப்போட்டு   நல்ல தலகறன  நிறைவெறியில ஒப்பெரேசன் செல்லதுரைக்கு அவர்  பலது சொல்லி இருக்கிறார். அதில இருந்துதான்  அந்த வீட்டில ஒரு காலத்தில வசித்த நீதிபதி பற்றிய தகவல்கள் மெல்ல வெளிய கசியவந்தது. 

                                                 அதில எவளவு உண்மை எவளவு கற்பனை என்பதும் சப்போஸ் அதில ஒரு பேய் போக்கிடமில்லாமல் ஓசியில மாதவாடகை கட்டாமல்  வசித்து இருந்தால் , புன்னியக்குஞ்சிக்கும் பேய்க்கும்  தவிர வேற   யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை ,

                                                     
அந்தப் பேய் வீட்டுக்கு உள்ளே நடு ஹோலிலையோ அல்லது அறைகளிலோ  எந்த மரத்தளபாடங்களும் இல்லையாம், குசினியாக இருந்த ஒருப்பக்கம் இடிஞ்சு பாட்டில சரிஞ்சு விழுந்து கிடக்குதாம், குதுப்மினார் சலவைக்கல்லால் பதிக்கப்பட்ட    நிலத்தில காலடிகளும்,  ஹோலில ஒரு சுவரில நீதிபதியின் கறுப்பு வெள்ளைப் புகைப்படமும்  மாட்டி இருக்காம், 

                                                          ஒரு உயரமான மேசையில் ஜச் மிடுக்காக சில கோர்ட்ஸ் பைல் பேப்பர்களில்  பவுண்டின் பேனாவால்   கையெழுத்துப் போடும் போது அந்தப்படம் எடுக்கப்பட்டதாம், மேசையில் ஒரு தண்ணி கிளாசும், அதுக்கு பக்கத்தில் ஒரு மர சுத்தியலும் இருக்காம் ,ஹைகோட்  ஜச்சின் தலைக்கு மேலே இரத்தினக்கல் கிரீடம் வைச்ச ஒரு  மகாராணி படமும் தொங்குதாம் , 

                                          
ஒப்பரேசன் செல்லத்துரை வெளியிட்ட   இது கொஞ்சம் நம்பும்படியான விவரணம் , இதுக்குப்  பிறகு சொன்னது புண்ணியக்குஞ்சி அவருக்கேயுரிய பாணியில்  கொளுத்தி போட்டுட்டு போனது போலிருந்தது ! 

                                                 அம்மாவசை இரவில ஜச்சின் படத்தில இருந்து திருநீறு கொட்டும் என்றும் , அன்றைக்கு வீடு முழுவதும் திருக்கார்த்திகைப்  பந்தம் கொளுத்தி வைச்ச மாதிரி  வெளிச்சமாக இருக்குமாம் ,சந்தனமும்  ஜவ்வாதும் கலந்த காற்று   வாசம்   சுழண்டு அடிக்க  கதவு ஜன்னல் எல்லாம் தானாகவே திறந்துகொள்ள ஜச் மர சுத்தியலால் மேசையில் அடிக்கும் சத்தமும், பிறகு பவுண்டின் பேனாவை ரெண்டாக முறிச்சு உடைச்சு எறியும் சத்தம் கேட்குமாம் , என்றும் சொல்லி இருக்கிறார்.

                                                 
மரண தண்டனை  எழுதிமுடிய எல்லா ஜச்சுமே அந்தத் தீர்ப்பு எழுதிய பேனாவை தீர்ப்பு மேசையில் வைச்சே  ரெண்டாக உடைத்துப் போடுவார்கள்  என்று நாங்களும் கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால்  இலங்கையில் தூக்குதண்டனை,அல்லது மரணதண்டனை  கொடுப்பது  இல்லையே. அல்லது ஆங்கிலேயர் ஆட்சிக்  காலத்தில் இருந்திச்சா  தெரியவில்லை.  

                                                 அதில ஒரு குழப்பம் எப்பவுமே வரும் புண்ணியக்குன்சியின் விபரிப்பு சுத்தமான காதில பூ சுத்துற  கட்டுக்கதை என்று முடிவுசெய்ய , அதனால இதெல்லாம் ஒரு திரில் கொடுக்கும் சம்பவங்கள் போல இருக்கவில்லை , 

                                                    எப்படியோ ஜல்ஜல்ஜல்  சலங்கை ஒலி , ஒரு இளம்பெண் கெக்கே பிக்கே என்று சிரிப்பது, ஒரு கால் நிலத்தில படாத  உருவம் குறுக்கமறுக்க ஓடிக்கொண்டிருப்பது,  படத்தில இருந்து ரத்தம் வழிவது , நரி ஊளையிடுவது ,  போன்ற விட்டலாச்சார்யாவின் ஜெகன்மோகினி போன்ற  பேய்ப் படங்களில் வரும் திகில்கதைப்   போர்முலா  சம்பவங்களைப் புண்ணியக்குஞ்சி இலவச இணைப்புப்போல  அதில    இணைக்காமல் விட்டது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது .

                                                     
எண்பதுக்களின் நடுப்பகுதியில் யாழ்குடாநாடு நிறைய வெளிமாவட்ட அகதிகளை உள்வாங்கியது. வந்த அகதிகள் அதிகமாமாக கைவிடப்பட்டு இருந்த பெரிய தொழிற்சாலைக் கட்டிடங்களில், பாடசாலைகளில் , வெறுமையாக இருந்த காணிகளில் , சில குடும்பங்கள் பூட்டி இருந்த வீடுகளிலும்  குடியமர்த்தப்பட்டார்கள். 

                                                    அப்படி கிழக்குமாகாணதிலிருந்து உடுத்த உடுப்போடு தப்பி வந்த மூன்று விதவைப் பெண்களும், அவர்களின் குழந்தைகளும் அடங்கிய குடும்பம் எப்படியோ பூட்டி இருந்த பேய்வீடு பற்றி யாரிடமோ இருந்து கேள்விப்பட்டு , உரிமையாளர் என்று யாரும் இல்லாததால் ஒருநாள் அந்த வீடுக்கு வந்து சேர்ந்தார்கள். 

                           அவர்களுக்கு அந்த வீடு பேய்வீடு என்று தெரியாது !

                                                        
அந்தப் பெண்கள் அந்த பாழடைந்த வீட்டை  கழுவி  துடைத்து எடுத்து ஒரு மாதிரி அதில வசிக்க பழகிய போது  ரெண்டு மூன்று நாட்கள் அமைதியாக இருந்த சின்னப் பிள்ளைகள், வீடு பழகிய உடன அவர்களுகேயுரிய உச்சாக சந்தோசங்களில் கத்திக் குளறி சிரித்து   ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கி இருக்கிறார்கள்  .  

                                             குழந்தைகளின் சத்தம் கேட்ட புண்ணியக்குஞ்சி கலவரமாகி உடனையே வந்து ரோட்டு வாசலில் நின்று இரும்புக்க கதவை உலுக்கி 

                             "  யாரது கேட்டுக்கேள்வி இல்லாமல் திறந்த வீட்டுக்க நாய் வந்த மாதிரி  உள்ளிட்டு குடியிருக்கிறது, எவடம் இவடம்  எண்டு  விசியம் தெரியாமல் வந்து உள்ளிட்டு   தலையைக் குடுத்து மாட்டிப்போட்டு நிக்கிறது,,சொல்லிப்போட்டேன்,,இது  பிரகண்டதிலதான்  முடியப்போகுது,,கண்டியளோ "

                                          என்று வெருட்டிச் சொல்ல , குழந்தைகள் மிரண்டு போய் உள்ளே இருந்த அவர்களின் அம்மாமார்களை கூட்டிக்கொண்டு  வர, அந்த மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் தலைவாசலில் எட்டிப்பார்த்தார்கள், 

                                                 வெளிய ஒரு வயதான அப்பு சுருட்டுக் குடிசுக்கொண்டு நிக்கிறதை இயல்பாக எந்த கலவரமும் இல்லாமல் பார்த்தார்கள் , பார்த்திட்டு , அதில ஒரு பெண்  தலைவாசலில் இருந்து முன்னோக்கி வந்து  

                          "  என்ன அப்பு  ,,வேணும்  உங்களுக்கு ,,என்னவும் பிரசினையோ "

                               " பிரசினைதான்,,பெரிய  பெரசினை  எல்லோ  வரப்போகுது "

                                " பிரசினை??????????  என்ன அப்பு பிரசினை?????????? ,  என்ன  வேணும்  உங்களுக்கு  "

                                    "    நீங்க  ஆர்  ஆட்கள் "

                      " நாங்க  அகதியள்...  "

                        "  அகதியள்..?????? "

                    " உயிரைதவிர வேறு  ஏதுமில்லாமல்  இடம்பெயந்து வந்த அகதிகள்,," 

                            "    கேட்டுக்கேள்வி இல்லாமல் உள்ளிட்டு,,இது  பிரகண்டதிலதான்  முடியப்போகுது,,கண்டியளோ " 

                             " இருக்க  இடமில்லை  ,,அதால  இந்த பூட்டி  இருந்த வீடில இருக்கிறம்,,சின்னப் பிள்ளையள் அஞ்சாறு  பேரு,,அங்கேயும்  இங்கேயும்  அலைய  ஏலாது,,"

                              "  ,இது  பிரகண்டதிலதான்  முடியப்போகுது,,கண்டியளோ ",,இந்த  வீடு  என்ன  வீடு  தெரியுமோ,,நல்லாத்  தெரிஞ்சுகொண்டுதான்  உள்ளிட்ட நீங்களோ "

                            " இல்லை  அப்பு,,இந்த  வீடு,,?   என்ன வீடு? ,,எல்லா  வீடும்  போலதானே இருக்கு..என்ன பழங்காலத்து  வீடு "

                           "   இல்லை  இந்த வீட்டு கதைவழி  கேள்விபடாமல் ,,நல்லாத்  தெரிஞ்சுகொண்டுதான்  உள்ளிட்ட நீங்களோ "

                                "  அப்பு இந்த வீடில,,கதவு ஜன்னல்,,தட்டுமுட்டு  சாமானுகள்  எண்டு  ஒண்டும்  இல்லை,,"

                               " ,இது ,,கண்டியளோ,,சொல்லிப்போட்டன்,, "

                                    " ஆனால்  வெயிலுக்கும்  மழைக்கும்  ஒரு  கூரை இருக்கெல்லா,,அது போதும்,"

                          " என்ன  எல்லாம் பெண்டுகளும்,,குழந்தகுட்டிக்களுமா  இருக்கு,,ஆம்பிளையள்  ஆரும்  இல்லையோ "

                                 " ஆம்பிளையள்  இல்லை,,நாங்க  மூன்று  பேரும் பொம்பிளையதான்,,மற்றது  குழந்தைகள் .."

                                " அதுதானே  பார்த்தன்...   உங்களோட புருஷன்மார்  இங்கே  இல்லையோ "

                                       "  இல்லை,,அவங்களை ற்றிங்கோவில  வைச்சு  ராணுவம்  சுட்டுப்போட்டங்கள் "

                                    "   ற்றிங்கோ  என்டா  ,,அது  எங்க  இருக்கு,,நானே  காகம்  பறக்காத இடம் எல்லாம் போய் வந்து  இலங்கை  முழுக்க கரைசுக்  குடிச்ச  ஆள் "

                                       " ற்றிங்கோ என்றால்,,திருகோணமலை  அப்பு,,நாங்க  அங்கேதான்  தம்பலகாமம்  என்ற  ஊரிலதான்  பிறப்பு  வளர்ப்பு எல்லாம் ..அப்பு "

                                "    அப்படியே,,ஆனா  இப்ப  வந்து  உள்ளிட்டு இருக்கிற வீடு  என்ன இடம் வளம் எண்டு அறிஞ்சுதான்  உள்ளிட்ட நீங்களோ "

                              " நாங்கள் விசப் பாம்பு  ,,அலியன்  யானை  எல்லாம் கடக்கிற  காடுகளுக்க  தஞ்சம் கிடந்தது தப்பி  வந்தனாங்க ,,,,அப்பு "

                                    " உங்கட  கதையளை  நான்  இப்ப கேட்னானே இந்த  வீடு  என்ன  வீடு  தெரியுமோ ,,நல்லாத்  தெரிஞ்சுகொண்டுதான்  உள்ளிட்ட நீங்களோ.."

                              "   எங்களுக்கு  தெரியாது,,நீங்களே  சொல்லுங்கோ,,"

                                "இது ,,கண்டியளோ,,சொல்லிப்போட்டன்,,  "

                              " வீட்டு  சொந்தக்காரர்  ஆர்  எண்டு  சொன்னா நாங்களே  போய்க்  கதைக்கிறோம்,,குழந்தைப்  பிள்ளையளைப்  பார்த்திங்க  தானே,,ஒரு  இடமில்லாமல்  அதுகள் கச்டப்படுங்கள்.வளர்ந்த  நாங்க   எண்டா  சமாளிப்பம் "

                                           
இப்ப மற்ற ரெண்டு பெண்களும்  வந்து சேர்ந்துகொண்டார்கள், அவர்களுக்கு முகத்தில் குழப்பமாக இருந்தது, எதற்க்காக  இந்த அப்பு கேள்வி கேட்கிறார், அதை விட இந்த வீட்டைப் பற்றிப்  புதிர் போடுறார்,  என்பது போன்ற  ஆதாரமான கேள்விகள் இருந்தாலும்,,இழப்பதுக்கு  உயிரைதவிர வேறு ஒன்றும் இல்லை என்ற காரணமோ தெரியவில்லை ஒருவிதமான எதையும் எதிர்கொள்ளும்  தைரியமாக இருந்தார்கள், 

                                                   அவர்களைப் பார்க்க புன்னியக்குஞ்சிக்கு  முகத்தில பளார் பளார் என்று  பேயறைஞ்ச மாதிரி இருந்தது .

                                              "    சொல்லிப்போட்டேன் ,, மூஊச்,,,அதப்பத்தி மட்டும் ஆரும் ஆவெண்ட வாயில அவல் அம்பிட்ட மாதிரி  பறையக்கூடாது கண்டியளே,மூஞ்சிக்கு முன்னாலேயே சொல்லுறேன்  " 

                                        "  என்ன அப்பு  சொல்லுரிங்க,,,எங்களுக்கு  விளங்கேல்ல "

                                               " குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா  பிறகு  சுப்பன்னே சுப்பனே  சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது  கண்டியளே.."

                                     "அப்பு,,உங்கட  யாழ்ப்பான  தமிழ்  எங்களுக்கு  விளங்க இல்லை,,விபரமா  சொல்லுங்க " 

                                      " சொல்லிப்போட்டேன் ,,மூஊச்,  வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது "

                                     "   பரவாயில்லை,,என்னவா  இருந்தாலும்  சொல்லுங்க,,எங்களுக்கு  இந்த  வீட்டை  விட்டா  இப்ப போக்கிடம்  வேற இல்லை "

                                      "   சொல்லிப்போட்டேன் ,,அதுவும்  மூஞ்சிக்கு முன்னாலேயே,,இது  பேய்  வீடு  கண்டியளோ ,,அதுவும் பெண்டுகள் தனியா  இருக்கிறது  நல்லதில்லை கண்டியளோ "

                           "  பேய்  வீடு  என்றால்,, என்ன  அப்பு  சொல்லுரிங்கோ  "

                                   "  அதுதான்  பேய்  வீடு "

                            
இப்ப அந்த மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள், அவர்கள் முகத்தில பயமோ,கலவரமோ,,அதிர்ச்சிசோ கொஞ்சமும்  இல்லை,,ஆனால் சுவாரசியம்  பற்றிக்கொண்டது போல ஒருவிதமான ஆர்வம்தான் தான் கண்களில் வெளிப்பட்டது.  

                                                 ஆனால் கண்களால் சைகை  செய்து கதைத்துக் கொண்டார்கள், அந்தப் பெண் இன்னும் கொஞ்சம் ரோட்டு வெளி கதவுக்கு வந்து, புண்ணியக்குன்சியை நல்ல வடிவா மேல இருந்து கீழ வரையில்  பார்த்திட்டு, 

                              "   நாங்க மூன்றுநாள்,,இங்கதான் இருக்கிறம்,,பேயைக் கண்டதில்லையே "

                                "  அப்படியே..சங்கதி..  சொல்லிப்போட்டேன் ,,அதுவும்  மூஞ்சிக்கு முன்னாலேயே,,இது  பேய்வீடு  கண்டியளோ "

                              " பேயெல்லாம்  இல்லை  அப்பு,,,அப்பிடி  பேய்  வந்தா  நாங்க  கதைச்சு பேசி  எங்கட  நிலமைய  சொல்லுவோம்,,பேய்  ஒண்டும்  செய்யாது "

                               "  பார்ப்பமே ,,அதையும்  ஒருக்கா,,சொல்லி  ஒரு கிழமையில  துண்டைக்  காணம்  துணியைக்காணோம்  எண்டு குதிக்கால் தெறிக்க  ஒடப்போறியல்"

                               "  ஹஹஹஹா..அப்பு...அதெல்லாம்  நடக்காது,,,நாங்க  ஏற்கனவே  ஓடி  ஓடி  ஓடியே  களைச்சுப்  போனோம் "

                            " ஹஹஹஹஹா,,பார்ப்பமே,ரெண்டு பரம்பரைக்குப் , பூட்டிக் கிடந்த  வீடு,,சும்மா  விடாது ,,பலியெடுக்கும் "

                             "   என்னத்தைப் பலியெடுக்கும்,,அப்பு "

                       "   என்னைதயோ ,,  சொல்லிப்போட்டேன் ,,மூஊச்,  வாயைத்திறந்து இனிக் கேக்கப்படாது,, ஒன் த ஸ்பொட்டில  எல்லாம் நடக்கும் "

                                 "    எங்களிடம் பலிகொடுக்கவும்  இப்ப  உயிரைத்தவிர  வேற ஒண்டும்  இல்லை அப்பு,,,எல்லாத்தையும்  இழந்துதான் வந்திருகிரம் "

                               " அம்மாவசை  வரட்டுமே,,,வில்லன்கம்  வெளியவரும் " 

                               "  ஹஹஹஹா ,,,அப்பு... அம்மாவசை..பறுவம்  இதெல்லாம்  எங்களுக்கு  ஒண்டுதான்..அப்பு "

                               " குறுக்குவாக்கில சவட்டிப்போட்டு ரத்த வாந்தி எடுக்கவேண்டிவந்தா  பிறகு  சுப்பன்னே சுப்பனே  சுடுகுது மடியப்பிடி எண்டு வரப்பிடாது  கண்டியளே.."

                                          "   ஹ்ஹஹாஹா.. அப்பு..அப்படி  ஒண்டும்  நடக்காது,,நடந்தால்  நாங்க  சமாளிப்பம்,,,"

                                         "  ஹஹஹஹஹா ,,அதையும்தான்  பார்ப்பமே "

                              
அந்த மூன்று பெண்களும், குழந்தைகளும்  அந்த வீட்டுக்கு வந்த பிறகு அந்த வீடு கலகலப்பாகி விட்டது.  வவ்வால்கள் பறந்தோடி வேறு தேக்குமரங்களுக்கு அடைக்கலமாகிவிட்டன . வீதியால் போவோர் வருவோரே ஆச்சரியமாக அந்த அகதிப் பெண்களைப் பார்ப்பார்கள்.  தலைமுறைகள் கைவிட்டு காலத்தின்  போக்கில்  சிதிலமான ஒரு வீட்டை மூன்று பெண்கள் முண்டுகொடுத்து நிமிர்த்தி எடுத்தார்கள். 

                                         ஆனால்  அவர்கள்  வந்து குடியேறிய  சில மாதங்களில் முன் விறாந்தைப் பகுதி  இடிந்து விழுந்திட்டுது. அவர்கள் இடிபாட்டை அகற்றி அந்த இடத்தை தென்னம் ஓலையால் கூரை போட்டு இன்னும் அழக்காக்கினார்கள், பின்னுக்கு வெறும்வளவில் தோட்டம் செய்தார்கள்,

                                         
ஊரெல்லாம் அலைஞ்சுபோட்டு, மழை பெய்ய வெளிக்கிட்ட  ஒரு நாள் சிங்கிமாஸ்டர் வீரகேசரிப் பேப்பரோடு மதிலேறிக் குதிச்சுப் படுக்கப்போனபோதுதான்  அந்த வீட்டில மனிதர்கள் வசிப்பதைப் பார்த்தார். 

                                      மழைக்காலத்தில் தன்னோட இருப்பிடமே  அந்த வீடுதான்  என்று  சொல்ல   அந்தப் பெண்கள் எப்பவும் போல சிங்கிமாஸ்டரை முன் விறாந்தையில் படுக்க விட்டார்கள். 

                                      ஏதுமில்லா மனிதர்களுக்குத் தான்  இன்னொரு  ஏதுமில்லா மனிதனின் நிலைமை நல்லாவே புரியும்!!!!!!. 

                                                     
இது நடந்து சில மாதங்களில்  களுத்துறையில் இருக்கும்  அவரோட சின்ன சிங்களத்து  வைப்பாட்டி வீட்டுக்கு  போயிலை சிப்பம் கட்டிக்கொண்டுபோன லோரியில போன புண்ணியக்குஞ்சி, அங்கே வைத்து உன்துவப்  போயா பூரண பவுர்ணமி நாளன்று  இன்றுவரை சரியான  காரணம் அறியபடாத ஒரு  கொடுக்கல்வாங்கல் காசுப் பிரச்சினை   காரணத்துக்காக  முதுகில குறுக்குவாக்கில  பிளந்த மாதிரி ஆறு  ஆழமான குத்து வேண்டி  சிங்களவர்களால்  கத்தியால குத்திக் கொல்லப்பட்டார். 

                               ரத்தவாந்தி  எடுத்த மாதிரி ரத்தம் அவர் உடம்பு முழுதும் குளிப்பாடி இருந்ததாம்.   குத்தியவர்கள் அவரை ரோட்டுக்கரையில் போட்டுப் போட்டார்கள். 

                                              கால் ரெண்டும் கோணல்மாணலாக  சவட்டியபடி புண்ணியக்குஞ்சி குப்புறவிழுந்து கிடந்ததாகதான்  திடீர் மரண விசாரணை அதிகாரியின் ஒன் த ஸ்பொட்  மரணச்சான்றிதழில் எழுதப்பட்டு இருந்தது.  

                            
தீர்ப்புக்கள் எப்போதோ எழுதி முடிக்கப்பட்டிருக்கலாம்  ,தண்டனைகள் வேறெங்கோ வைத்துத் தீர்க்கப்பட்டிருக்கலாம்  ,,,,!