Monday 25 May 2015

மேரி யுவானா மயக்கிய பொப் மார்லி..

இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை .விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                                   யாழ்பாணத்தில வளர்ந்த காலத்தில ,பொப் மார்லியின் " ரெக்கே " இசை பற்றி கொஞ்சமும் , அவர் விரும்பிப் புகைத்த "மேரி யுவானா " போதை வஸ்துப் பற்றி கொஞ்சம் அதிகமாகவும் கேள்விப்பட்டு இருந்தாலும்,பின் நாடக்களில் ஸ்வீடனில் அரசியல் அகதி முகாமில் வசித்த போது அது இரண்டையும் அனுபவிக்கவே சந்தர்பம் கிடைத்தது ! கூடவெ அவர் உருவாகிய "ரச்தபேரியன்" கலாசாரம் பற்றி கொஞ்சம் கிட்டத்தில் அதுக்குள்ள இறங்கியே பார்க்கவும் அந்த ஸ்வீடடன் அரசியல் அகதி முகாமில் வாய்ப்பு வேற கிடைத்தது !

                                        பொப் மர்லியை 80 களில் பிரபலம் ஆக்கிய அவரின் இசையுடன்,அவர் வசித்த நாடான ஜமைக்காவில் , உலகம் எங்கும் சட்டவிரோதமணா  மேரி யுவானா போதைவஸ்து, அந்த நாடில் சட்டரீதியா எல்லாரும் புகைக்லாம் என்று இருந்தது. அதுவே  உலகம் எங்கும் இருந்து ரசிகர்களை அந்த நாடுக்கு போகப்பண்ணியது ,அவர்கள் திரும்பி வந்த போது தங்களுடன் பொப் மார்லியின் இசையுடன்,அவரின் பைபிளின் பழைய ஏற்பாட்டு கோட்பாடுகளில் அமைந்த "ரச்தபெரியன் "கலாசாரத்தையும் மேற்கு உலகத்துக்கு கொண்டு வந்தார்கள்!

                              ஆங்கிலேயர்களால், ஆபிரிக்காவில் இருந்து , கரூபியன் தீவுகளில் ஒரு சிறு தீவான ஜமைக்காவில் கரும்புத் தோட்டதுக்கு வேலைக்கு கொண்டுவரப்பட,  கரும்பு போலவே சக்கையாகப் பிழியப்பட்ட , பாவப்பட கறுப்பின மக்களின் அடிமைகளின் வம்சாவளியான, பொப் மார்லியின் பாடல்களில் எப்படியும் ஒரு வரி அடிமை விடுதலை பற்றி வரும், அவரோட " A Blackman Redemption  " என்ற பாடல் இன்றுவரை  கறுப்பின மக்களின் தேசிய விடுதலை கீதம் என்கிறார்கள் . 

                          அதாலதான் எப்படி, கியூபாவின்" விடுதலைத் தந்தை " ஏற்நேஸ்ட்ரோ சேகுவேரவின் முகத்தை புரட்சியின் அடையாளம், " கெரில்லாப் போராளிகளின் கடவுள் " என்பது போல கொண்டாடுகிறார்களோ அதுபோல ,பொப் மார்லியின் இசையை " அடிமை விடுதலைப் புரட்சி இசை " என்கிறார்கள் உலகம் முழுவதும் .

                                     ஸ்வீடன் அகதி முகாமில் என்னோட அறையிட்கு அருகில் வாசித்த,கிழக்கு ஆபிரிக்க நாடான எதியோபியாவில் இருந்து அகதியா வந்திருந்த டானியல், பொப் மார்லியின் இசைக்கு மட்டுமில்லை,அந்தப் புகைக்கும் தீவிர ரசிகரா இருந்தார்! அந்த " மேரி யுவானா " போதைவஸ்தை மொரோக்கோவில் இருந்து எடுப்பித்து சட்டவிரோதமா முகாமில் இருந்த புகை போக்கிகளுக்கு விற்றுக்கொண்டும் இருந்தார்! 

                               பொப் மார்லி போலவே,நடை,உடை,பாவனையில் இருந்த அவர்,தலை மயிரை குடும்பைச் சித்தர்போல சடை ஆக்கி ,கழுத்தில நாய்ச் சங்கிலி போல நிறைய மாலைகள் போட்டு, யாரைப் பார்த்தாலும் "யா, மாண் ,யா மாண் ," எண்டு பொப் மார்லி போலவே வெட்டி வெட்டி விழுங்கி ஆங்கிலம் பேசி, கை முஸ்டியை பொத்தி, இடித்து , வருபவர் போபவர்களுக்கு,  "  Freedom came my way one day , And I started out of town, yeah! "    எண்டு பாடி பொப் மார்லி அடையாள வணக்கம் சொல்லுவார்!

                                   பொப் மார்லி மீது இருந்த அபிமானத்தால், நான் அவரிடம் நட்பாகி , அவரின் அறையில் , 24 மணித்தியாலமும்" non -stop " ஆகப் பாடிக்கொண்டு இருக்கும் பொப் மார்லியின் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எதியோப்பியா, அதன் ஜெனாதிபதியாக இருந்த " ஆபிரிக்க சிங்கம்" எண்டு அழைக்கப்பட்ட சாலீஸ் லாச்க்கி, பொப் மார்லியின் " ரஸ்த பேரியன்" சமயம், " ரெக்கே" இசைவடிவம், போதை கொடுக்கும் இலை "மேரி யுவானா " இன் இங்கிதம், பொப் மார்லி நம்பிய பைபிளின் பழைய ஏற்பாட்டுக் கதைகள் , போன்ற எல்லாத்தையும் அவரிடம் இருந்து கேட்டு அறிந்தேன் ! 

                                அவர் மரியுவானவை ஒரு பேபரில் குழாய் போல சுருட்டி ,அதை "joint "எண்டு சொல்லுவார்கள்,அதை டானியல் பத்த வைத்து , விரல்களால் பொத்திப் பிடித்து உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளுக்க இழுத்து, புகையை வெளிய விடாமல் அமுக்கி , கண் இரண்டும் சிவப்பாக ,மேலே விட்டதை வெறித்துப் பார்த்துக்கொண்டு ஏகாந்தமா இருப்பார்!

                                         மேரி யுவானா  புகைக்கும் போது அவர் பாடல் CD ஐ நிப்பாட்டிப் போட்டு அமைதியாகப் புகைப்பார். ஒருமுறை

                 " ஏன் நீங்கள் அப்படி செய்கிறீர்கள்?" எண்டு கேட்டதுக்கு,

                              " மேரி யுவானா  புகைக்கும் போது ,பொப்பின் பாடல்கள் எல்லாம் நினைவுவரும், அதன் வரிகளுக்கு நிறைய வேறு வேறு அர்த்தமும் சேர்ந்து வரும் " என்றார், 

                             பொப் மார்லியே மேரி யுவானா  புகைத்துக்கொண்டு ,அவர் பாடல்களை எழுதி, அதுக்கு இசை அமைத்து இருக்கிறார் எண்டு வேற கேள்விப்படதால் அதில உண்மை இருக்கலாம் போலதான் இருந்தது !

                                          ஒரு நாள் டானியல் சொன்ன அந்த அனுபவத்தை அறிய , துணிந்து நானும் அதைப் புகைத்துப் பார்த்தேன், டானியல் joint சுருட்டித் தந்தார், அதைப் பவ்வியமா வேண்டி , பத்தவைத்து உள்ளுக்க இழுக்கவே தலை சுற்றியது, கொஞ்ச நேரத்தில கண் ரெண்டும் விரிய , காதுக்குள் யாழ்தேவி ரெயில் ஓடுற சதம் கேட்க , என் கை இரண்டும் சரணவாதம் வந்து  குறண்டிக்கொண்டு வரும்போல  விட்டு விட்டு இழுக்க ,   எப்பவுமே குப்பையாக இருக்கும் டானியலின் அறை, சடார் எண்டு சாணி போட்டு மெழுகியது போல சுத்தமா இருக்க , அதுக்குப் பிறக்கு நல்லா உள்ளுக்க இழுக்க, முளங்காலுக்கு கீழ என்னோட காலைத் தடவிப் பார்க்க இரண்டு காலும் காணாமல் போயிடுத்து....கண்ணீரும் புகையும் சேர்ந்து கண்ணீர்ப்புகை போல முகமெல்லாம் எரியத்  தொடங்க  

                                            " I shot the sheriff, but I swear it was in self defense  " என்ற வரிகளை , விரல்களை பிஸ்டல் துப்பாக்கி  போல ஒடுக்கி , அந்த பிஸ்டல் துப்பாக்கியை அங்கயும் ,இங்கையும் குறிபார்துக்கொண்டு ,  என்னைப் போலவே புகைத்துக் கொண்டு கனவில் மிதந்து பாடிக்கொண்டு இருந்த  டானியல் , பாடுறதை நிபாடிப்போட்டு , இயல்பாக

                             " யா மாண் , எப்படி இருக்கு? பொப் மார்லியின் பாடல் நினைவு வருகுதா, எங்க ஒரு பாடல் பாடும் பார்ப்பம்" என்றார். 

                               நான் " இடம் கொண்டு விம்மி , இனை கொண்டு இறுகி , இளகி முத்து வடங் கொண்ட கொங்கை நலங் கொண்ட நாயகி ,,,நல் அரவின்   அல்குர்ப் பனிமொழி... " எண்டு பாடினேன் ,

                              அவர் கோபமாகி " என்ன பிசத்துறாய் .இது , பொப் மார்லி பாடவில்லையே, எதோ புரியாத மொழியில் எதுக்குப் பாடி என்னோட உசிரை எடுகுறாய் ?" என்றார் கோபமாகி . நான், அமைதியாக , தலையைக்  கையாலா பிடிச்சுக்கொண்டு

                                  " இல்லை , இது எங்கள் நாட்டு கவிஞ்சர் அபிராமிப் பட்டர் என்பவர் பாடிய, அபிராமி அந்தாதி" என்றேன்,அவர் என்னை

                             " நிப்பாட்டு உன் பிசத்தலை" எண்டு , 


                  கொஞ்சம் வில்லன்கமாப் பார்க்க,  எனக்கு  அந்த பிஸ்டல் துப்பாக்கியை பார்க்க பயம் வந்திட்டுது ! நான் என்ன செய்ய  மேரி யுவானா  மண்டைக்குள்ள தாறு மாறாய்ப் பாய எனக்கு சின்ன வயசில படித்த அபிராமி அந்தாதி சாடர் எண்டு நினைவு வந்து, பொப் மார்லியின் பாட்டு ஒண்டுமே நினைவு வரவில்லை! 

                                அதுக்குப் பிறகு நான் ஒரு நாளும் அந்த நாசமாப் போன மரியுவான புகையை நினைத்தே பார்க்கவில்லை எண்டு ரீல் விடப்போறதில்லை ,,பல வருடங்களின் பின் ,ஹொலண்டில் ,ஆம்ஸ்டர்டாமில் அதை மீண்டும் ட்ரை பண்ணினேன் ,அது வேறுவிதமான அனுபவம் கொடுக்க , கடசியில் சக்கடத்தாரின் குதிரைபோல இருந்த கத்தரீனாவை சந்திக்க ,,,,அது வேற கதை ,,,,,,   !

                                       ஸ்வீடனில்  அரசியல் அகதிகள் ஆனா நாங்கள் எல்லாம் காட்டுவாசிகள் போல இருந்ததாலோ என்னோவோ , அந்த அகதி முகாமை , ரெம்ப நாகரிகமான ஸ்வீடிஷ் மக்கள், சன நடமாட்டம் இல்லாத ஒரு அத்துவானக் கிராமத்தில இருந்த பைன் மரக் காட்டுக்கு நடுவில வைத்திருந்தார்கள். சன நடமாடம் உள்ள டவுன்க்கு வரவே காடுப் தாண்டி  3 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்!

                                                நான் அந்த நாட்களில் தனிமையிலும் , வெறுப்பிலும் , மன அழுத்த நோயாலும் , வாழ்கையின் விளிம்பில் இருந்ததாலும்,  பொப் மார்லி போலவே,நடை,உடை, பாவனையில   மரியுவானா புகையின் மத்தியில்  இருந்த  டானியலின் போக்கு எனக்குப் பிடிக்கவேயில்லை . அனாலும் பொப் மார்லி போலவே,நடை,உடை, பாவனையில மட்டும் , அந்த முகாமில்  சில வருடம் வேறு  போக்கிடம் இல்லாமல்  இருந்தேன், 

                                  சிலநேரம் முகாமில இருந்து நடந்து காடுப் பாதையால டவுனுக்குப் போவேன், கிறுக்கு பிடித்த பொப் மார்லி போல இருந்த என்னைப் பார்த்தாலே நெறைய இளம் ஸ்வீடிஷ் பெண்கள் நெருங்கி வந்து , நட்பாக சிரித்து,பொப் மார்லி ஸ்டைலில் கை முஸ்டியை பொத்தி இடித்து " ம........... இருக்கா?" எண்டு ரகசியமாக ,கிசு கிசு குரலில் காதுக்க  கேட்பார்கள்.நான் அவர்களில் பலரை டானியலுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்!எதோ , அந்த நேரம் ஏதோ என்னால பொப் மார்லியின் "ரெக்கே "இசைக்கும்,அவரின் "ரேஸ்த பேரியன் " கலாசாரத்தும் செய்ய முடிஞ்சது அவ்வளவுதான்!

                                              மூன்றாம் உலக ,வறிய,ஆபிரிக்க  நாடுகளில் இருந்து அரசியல்  அகதியாகியா என்னைப் போன்றவர்கள்   வசிக்கும்  அகதிமுகாமில் டானியல்  மரியுவானா  விற்பது ஸ்வீடிஷ்  மக்களுக்கு பெரிய அக்கறை இருக்கவில்லை . ஆனால் அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் அகதிமுகாமுக்கு அதை வேண்ட வருவது கண்னுக்க குத்தத் தொடங்க  அதாலே நிறையப் பிரச்சினை வர ,ஒருநாள் டானியலை போலிஸ் வந்து அள்ளிக்கொண்டு போக அவரை பலதகரமாக இழுக்க, அவர் அப்பொழுதும் ,

                         "  Freedom came my way one day , And I started out of town, yeah!  ,Freedom came my way one day,,,¤

                                   எண்ட பொப் மார்லியின் பாடல் வரிகளை உரத்துப் பாடி , பொலிஸ்காரரோட  சண்டை பிடிக்க ,கடைசியில் டானியலை சுவிடிஷ் பொலிஸ்காரர் , விலங்கு போட்டு , கொற இழுவயில இழுத்துக்கொண்டு போயிட்டாங்கள் !

.

யாழ் எடுத்து இன்பம் சேர்க்க

இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை .விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                                     யாழ்பாணத்தில் பிறந்து, இளவயது முழுவதும் வாழ்ந்த போதும், அந்த நகரத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்று வந்ததுக்கு பாணன் என்பவன் யாழ் என்ற நரம்பு வாத்தியம் வாசித்துப் பாடியதால் அந்தப் பெயர் காரணப்பெயர் ஆக வந்த கதை பலர் வரலாறாக எழுதி இருந்தாலும், அந்த நரம்பு வாத்தியம்,யாழ்பாணதின் அடையாள இலட்சினையாக படத்திலயும், நந்திக் கொடியிலயும் இருந்தாலும்,ஒரு நாளும் அந்த இசைக் கருவியை நேரடியா அந்த நகரத்திலோ, அல்லது இலங்கைத் தீவிலோ யாரும் வாசிபதையோ கண்டதே இல்லை.

                                                      இலங்கையின் தலை நகரம்   கொழும்பில் ரசியன் கலாச்சார நிலையத்தில் ஒரு ரசியப் பெண் வாசித்ததைப் பார்துள்ளேன் ,,ஆனால் அவா ரசியன்,,தமிழ்,சிங்கள இசைக் கலைஞ்சர் வாசித்து பார்த்தில்லை. அதெப்படி ஒரு பிரதேசத்தின் வாழ்வியல்  வரலாற்றில் இலட்சினையாக  வடிக்கப்பட்ட ஒரு இசைக்கருவி  பிரக்டிக்கலாகப்  பாவனையில்  இல்லாமல்  இருக்கு  என்ற  குழப்பம் நிறைய நாட்களாய் இருந்தது 

                                       அதைவிட தென்னிந்திய தமிழ் நாட்டு சங்க இலக்கியங்களில், கல்லாடம் என்ற இசைப் புத்தகத்தில்,திருக்குறளில்,யாழைப்பழித்தமொழியம்மை கதையில், கோவலன் பூம்புகார்ப் பூவையருக்கு அல்வா கொடுத்த சிலப்பதிகாரக் 'கானல்வரி'' யில் வரும் யாளைப், பாணன் என்பவன் தூக்கிக் கொண்டு, பாக்கு நீரிணையக் கடந்து யாழ்பாணம் வந்து, ஒரு மன்னனுக்கு வாசித்துக் காட்டி, இலங்கையின் வடக்கின் தொங்கலில் இருக்கும் ஒரு பிரதேசத்தைப் பரிசாகப் பெற்றான் என்று தகவல்கள் சொல்லுது. 

                                    யாழ் என்ற அந்த இசைக்கருவி ஒரு காலத்தில் இருந்து இருக்காலம் தொன்மையான இலங்கையில், மட்டகளப்பு காரைதீவில்ப் பிறந்த சுவாமி விபுலானந்தர் யாழ் நூல் எண்டு ஒன்று எழுதியுள்ளார் என்கிறார்கள்." துன்பம் சேர்ந்த வேளையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா " எண்டு ஒரு எளிமையான பாடல் இருக்கு. யாழ் நூல் அந்த இசைக்கருவியின் மேன்மையான பல விசியங்களை சொல்லி இருக்கு என்கிறார்கள் 

                                           அந்தப் பாடல் சங்கீதம் படிபவர்கள் பாடும் போது கேட்டிருந்தாலும்,அவளவுதான் அதுக்கு மேல அந்த வாத்தியம் எப்படி இருக்கும்,அதன் இசை எப்படி இருக்கும்,துன்பத்தில் அவதிப்பட்டவன் ,அவன் துன்பத்தை அகற்ற யாழ் எடுத்து இன்பம் சேர்த்த அந்தப் பெண் எப்படி இருந்திருப்பாள், அதை பாணன் எப்படி வாசித்தான் போன்ற குழப்பங்களுக்கு நடைமுறை ஆதாரம் இல்லை

                             ,யாழ் என்ற ஹார்ப் எண்டு இங்கிலீசில் சொல்லும் வாத்தியம் வெஸ்டர்ன் கிளாசிகல் இசை வடிவங்களில்,இருக்கு அதை நரம்பு முறுக்கிய இளம் பெண்கள் அழகாய் வாசிக்கும், செமி கிளாசிகல் பாடல்கள்,படங்கள்,கடுரைகள் போன்ற விபரம் இன்டர்நெட்டில் இருக்கு.

                                      சில வாரம் முன் புறநகர் ஒஸ்லோவில் ,நான் வசிக்கும் பேட்டையில் உள்ள இடை உயர் நிலைப் பாடசாலையில், வெஸ்டர்ன் கிளாசிகல் இசையை, ஒரு பாடமாகப் படிக்கும், அழகுப் பெண் பிள்ளைகளிடம் ஒரு நல்ல நாள், அவர்கள் இசைக்கலைஞர்கள் போல இசைக்கருவிகளைக்  காவிக்கொண்டு வந்து ஒஸ்லோ போகும் ரெயிலிட்கு காத்திருக்கும்போது சில இசை கருவி விசியங்கள் அவர்களிடம் கேட்டேன், என்னை மேலயும் கீழயும் முழிஞ்சு பார்த்திட்டு கொஞ்சம் கதைத்தார்கள், கொஞ்சம் நம்பிக்கை வர

                        " உங்கள் இசை வகுப்பில் என்ன என்ன இசைக்கருவிகள் இருக்கு "

                        எண்டு கேட்டேன் , சொன்னார்கள்,அதில் ஆச்சரியமா அவர்களின் இசை வகுப்பில் யாழ் என்ற , நான் பல வருடம் பார்க்க ஆசைப்பட்ட ஹார்ப்பும் இருக்கு எண்டு சொன்னார்கள்,

                     " நான் அதைப் பார்க்கலாமா " எண்டு கேட்டேன்

                     " எதை " எண்டு கேட்டார்கள், கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

                 நான் விளக்கமா சொன்னேன்,

              " உங்களுடன் சேர்ந்து ஒரு பாடல் கிடாரில் வாசிக்கலாமா " எண்டு கேட்டேன்,

                 " ஓம் " என்றார்கள்.

                         சொன்ன மாதிரி அவர்கள் இசை ஆசிரியரின் அனுமதியுடன்,ஒரு நாள் நேரம் ஒதுக்கி தங்கள் வகுப்பு அறையிட்கு வந்தார்கள், அவர்களைப் பாடவைத்து " புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே ....." பாடலை பியானோ ,செல்லோ, பேஸ் வயலின், இவைகளுடன் பாட,   நான் கிட்டார் வாசித்து ஒரு ஆர்வக்கோளாரில பாடினோம், அன்று தான் முதல் முதல் யாழ் என்ற வாத்தியத்தை தொட்டுப் பார்த்து, அதன் நரம்புகளில் கொஞ்சம் சுண்டியும் பார்த்தேன்

                           அந்தப் பிள்ளைகள், என் கிட்டார் இசைஅறிவில் கொஞ்சம் சந்தேகமாத்தான் ஆரம்பத்தில் இருந்தார்கள். நான் வாசிக்கத் தொடங்க ஆச்சரியமாகினார்கள். தட்பாதுகாப்புக்கு அல்லது ,வேண்டுமென்றோ தமிழ் பெண்கள் சொல்லவது போல என்னை " அண்ணா " என்றோ " அங்கிள் " எண்டோ சொல்லிக் கேவலப்படுத்தாமல் என்னோட பெயரை சொல்லியே அழைத்தார்கள். அதுவே எனக்கு என் வயசில் அரைவாசியைக் குறைக்க வைத்த மாதிரி இருந்தது. 

                      பன்னீர் மழை சொரியும் மேகங்களே , எங்கள் பரந்தாமன் மெய் அழகைப் பாடுங்களே....." என்ற அந்தப் பரந்தாமன் புகழ் பாடும் மெல்லிசை மன்னர் பாடலை நான் கிடாரில் வாசித்து, சில டெக்னிகல் விசியம் சொல்ல அவர்கள் " பார் நோடச்ன் " வடிவில் அதை " டைமிங், டெம்போ " எல்லாம் போட்டு சடார் சடார் எண்டு எழுதினார்கள்,எழுதி முடிய அந்தப் பேபரை என்னிடம் தந்து " சரியா "  எண்டு கேட்க,நான் அந்தப் பேபரை தலை கீழாக்கப் பிடித்து வாசித்த்தும் ஒண்டுமே விளங்கவில்லை. அந்த ஒரு விசியத்தில் மட்டும் தான் விதி என்னைக் கேவலப்படுத்த ,

                         நான்  " முறைப்படி இசைக் குறிப்பு  எழுதும் முறையில் நான் கிட்டார்  படிக்கவில்லை " என்ற உண்மையைச் சொன்னேன்.

                    " உண்மையாதான் சொல்லுறியா  பார் நோடச்ன் விளங்காதா உனக்கு,,,ஆச்சரியம் "   எண்டு கேட்டு, உண்மையாகச் சிரித்தார்கள்.

                        இந்த அன்பின் அழகுப் பிள்ளைகள்,,,வஞ்சகம் இல்லாத நல்லது கெட்டது தெரியாத பிள்ளைகளைப் பாடவைத்து " புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே ....." பாடலை இவர்கள் பியானோ ,செல்லோ, பேஸ் வயலின் ,இவைகளுடன் பாட நான் கிட்டார் வாசித்து முடிய  எனக்கு நிறைய வெஸ்டர்ன் மூசிக் டெக்னிகல் விஷயம் வேறு சொல்லி தந்தார்கள். 

                                        புலம்  பெயர் டமில் பிள்ளைகள்," ஊதாக் கலரு ரிப்பன் எவண்டி உனக்கு அப்பன் " ,போன்ற டமில் பாடல்கள் படிக்க ஆசைப்படும் போது, புல்லாங்குழல் குடுத்த மூங்கில்களே ....." பாடலில் வரும் பல விசயம், தமிழ் மொழி, இந்துக் கலாசாரம்,திருவேங்கடம் ,ஸ்ரீ ரங்கம், கிருஸ்னர் , பற்றி இந்தப் பிள்ளைகள் என்னிடம் அந்த பாடல் படித்து முடியக் கேட்ட கேள்விகள் ஆச்சரியமா இருந்தது........

                          புருசோத்தமன் புகழ் பாடி முடிய

                 " யாழ் என்ற ஹார்ப் இசைக்கருவியை கொஞ்சம் நோண்டலாமா எண்டு கேட்டேன் " ,

              ,  ," உர்சுலா தான் அதை நல்லாவே போட்டு நோண்டும் ஒரு மாணவி இங்கே, அவளோடு போய் அவளையும் போட்டு நோண்டு "   எண்டு சிரித்து சிரித்து சொன்னார்கள்.

                           உர்சுலா 007 ஜேம்ஸ் பொன்ட் படங்களில் வரும் கதாநாயகிகளின் சின்ன வடிவம் போல மின்ன , யாழ்கருவியை வைச்சு நோண்ட தன்னை விட்டாள் வேற யாருமே இந்த உலகத்தில இல்லை என்பது போல அவளும் சிரித்து சிரித்து கைகளால் சிரித்தாள் உர்சுலா . 

                        உர்சுலா நான் கிட்டார் வாசித்ததைப் பார்த்தவள்,எனக்கு கொஞ்சம் விசியம் தெரியும் எண்டு அவளுக்கும் தெரியும்,கிட்ட வந்து என்னவோ கேள்வி கேட்க்கப் போற மாதிரி நிண்டாள், என்னவும் வில்லங்கமான டெக்னிகல் கேட்கப் போறாளோ எண்டு நினைக்க,

                " முதலில் உன்னிடம்  சிகரட் இருக்கா " எண்டு கேட்டாள்,

                    " எப்படி அது தெரியும் " எண்டு கேட்டேன்,

                      " ரெயில்வே ஸ்டேசனில் புக்கு புக்கு எண்டு ஊதித் தள்ளினாயே நான் பார்த்தேனே " எண்டாள்,

                  சிகரட் பெட்டியையே அவளிடம் கொடுத்தேன்,ஒன்றை மட்டும் எடுத்து வைத்து கொண்டு,

                     " பிறகு பத்துறேன் வா ஹார்ப் காட்டுறேன் " எண்டு சொல்லி

                     " நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன் " ,எண்டு கேட்டுக்கொண்டே வேறு சில விபரமும் கேட்டாள்.

                    அந்த இசை வகுப்பறையின் மூலையில் இருந்த ஹார்ப் யாழ்பானா இலச்சினையில் இருந்த ,அட்டை போல சுருண்டு வளைந்த யாழ் போல இருக்கவில்லை, அங்கே இருந்த ஆள் உயர ,மரத்தால் செய்த நைலான் நார்கள் இணைத்து , யாழ்பாணத்தில சிமெந்து பூச்சு வேலைக்கு மேசன்மார் மணல் கஞ்சல்,குப்பை,குறுனிக் கல்லு வராமல் அரிக்கும் பெரிய வலை போட்ட தட்டுப் போல இருந்த பெரிய யாழ், வித்தியாசமான் வடிவம். கடல்க் கன்னி போன்ற உர்சுலா ,என்னை அருகில அழைத்து,

                      " உங்கள் தாய் நாட்டில் இது வாசிபாங்களா " எண்டு கேட்டாள்,

                      "  என் தாய் நாட்டில் நான் பிறந்த நகரத்தின்   முதல்ப் பெயரில் மட்டும் இந்த இசைக்கருவி பெயர் இருக்கு ,உர்சுலா ,ஆனால் ஒரு நாளும் கண்டதே இல்லை " என்றேன்,

                        ஹார்ப் தெனிந்திய சினிமா பாடல்களிலும் இசை அமைப்பில் பயன்பாட்டில் இல்லை போல இருக்கு, அது வாசிக்க கடினமான ஒரு வாத்தியம் எண்டு விளங்கியது அதை சில வெஸ்டர்ன் இசை மேதைகள் இலகுவாக வாசிக்கும் போது ...

                                    உர்சுலா கை ரெண்டையும் உரசிப்போட்டு, கொஞ்சம் சுருதி செக் பண்ணிப்போட்டு,

                      " எனக்கும் கொஞ்சம் தான் தெரியும், லுட்விக் பித்தோவன். அமேடியஸ் மொசார்ட்,செபஸ்டியன் பாச் ,தொச்டோவ்சிகி,  எட்வார்ட் கிரிக்..,இவர்களில் உனக்கு என்ன சிம்பொனி வேண்டும் " எண்டு கேட்டாள்,

                       நான் ஹிஹிஹிஹி எண்டு இழிசுப்போட்டு, உர்சுலா

                       " உர்சுலா நீ சொல்லும் மேதைகள் பற்றி ஒண்டுமே எனக்கு தெரியாது  , செல்டிக் வுமன் இன் ஸ்க்புரோ பாயர் வாசிப்பியா,அது நான் ஹர்பில் வாசித்து கேட்டு இருக்குறேன் " எண்டேன்.

                         சுமாராக வாசித்துக் காட்டினாள். அவள் அதை நிண்டு கொண்டே கைகளை அந்த இசைக்கருவியின் இரண்டு பக்கமும் பாவித்து ,விரல்களால் மெதுவாக தட்டி, இடை இடை காலுக்கு கீழே உள்ள கட்டைகளில் அமத்த. நரம்புகளில் நாதம் வேறுபட்டு வந்தது.

                         " கிடாரில் வரும் அகோடேவ் விசியம் தான் இதன் அடிப்படை,நீயும் சுண்டிப் பார்க்கப் போறியா " எண்டால் உர்சுலா . 

                                  நான் அவளச் சுண்டிப் பார்க்க கேக்குராளா,இல்லை யாழ் இசைக்கருவியை சுண்டிப் பார்க்க கேட்குறால எண்டு ஜோசிக்கும் போது,அவளே என்னோட கையைப் பிடிச்சு இழுத்து

                      " இது பிளாட். இப்படி சுண்டு , இது சார்ப், இதை அப்படி நோண்டு, இது நியுட்ரல் சொநேடோ இதை இப்படிக் கிண்டு "

                      எண்டு உர்சுலா சொல்ல,நான் தாறுமாறா சுண்டின சுண்டில இசை கொஞ்சம் அன்னதானத்துக்கு அடிபட்டு மடத்துக்க உள்ளிட்டவர்களின் கும்பலில் கோவிந்தா இரைச்சல் போல வர அவள் சிரிச்சு,

                                   " இதைக் கேட்குற, லுட்விக் பித்தோவன், அமேடியஸ் மொசார்ட்,செபஸ்டியன் பாச் ,தொச்டோவ்சிகி,எட்வார்ட் கிரிக். இவர்களின் ஆத்மா சாந்தி அடையாது, மறுபடியும் ஆவியாகி அலையப் போகுது "

                              " டென்மார்க்   கோபன்ஹேகன் இல் ஒரு  இளம் கடல்க்கன்னி  ஹார்ப்  வாசித்துக்கொண்டு இருக்கும் ஒரு சிலை  ஒரு கடற்கரையில்  பார்த்தேன் ,,நீ பார்த்து இருக்கிறாயா  உர்சுலா "

                                       "  இல்லை,,ஆனால் கேள்விப்பட்டு இருக்கிறேன்,,அந்தக் கடல்கன்னி அவள்  காதலனுக்காக  அதை  வாசித்தாள்  என்பார்கள் "

                                      "  அவள்  காதலன்  எங்கே "

                                 "  வேற  எங்கே,,வேற  யாரும்  ஒரு  கன்னியோடு எஸ்கேப்  ஆகி  இருப்பான் ,,உலகத்தில இளம் ஆண்களின்  மண்டைக்குள்  என்னதான்  ஓடுது  என்று  சொல்லவே  முடியாது "

                                         "   ஹ்ம்ம்,,ஆனாலும்  கடல்கன்னி  ,,ஒரு  மீனும்  பெண்ணும்  சேர்ந்த  உருவம்,,அதால  அவன்  விட்டுப்போட்டுப்  போயிருக்கலாம் "

                                        "  ஹஹஹா,,சலித்துப்போக  எப்படியும்  விட்டுப்போட்டுதான்  போவாங்கள்,,அது  மீனோ,,மனுசியோ  முக்கியமில்லை "

                                        " எங்க  ஊரில்  ஒரு  பசுமாடும்  பெண்ணும்  சேர்ந்த ஒரு  கன்னி  இருக்கிறா "

                                         "  உண்மையாவா,,அவாவுக்கு  என்ன  பெயர் "

                                        " அவாவைக்,,காராம்பசு  என்று  சொல்லுவோம் ,,உர்சுலா "

                                   "  அப்படியா,,அவாவும்  ஹார்ப்  வாசிப்பாவா "

                                       "  இல்லைப்பா,,அவா  ஒண்ணும்  வாசிக்க மாட்டா..ஆனால் கேட்டதெல்லாம்  கொடுப்பா "

                                            " என்னது,,கேட்டது  எல்லாம்  என்றால் "

                                             " கேட்டது  எல்லாம்  தான் உர்சுலா "

                                             " அட,,எனக்கு  அப்படி  ஒரு ஆள் கட்டாயம்  தேவை,, என்னோட  அப்பாவும்  அம்மாவும்  பிரிந்து விட்டார்கள்..நான்  கேட்டது  எல்லாமே  அவர்கள் வேண்டித்தாறது  இல்லை.."

                                                " ஹ்ம்ம் "

                                               "  நீ சொன்ன அந்தக்  காராம்பசுவை  பிடிச்சுக்கொண்டு வந்து வீட்டுக்குப்  பின்னால  கட்டி வைச்சா  வாழ்க்கை  அலாதியாகப்  போகும்  போல இருக்கே "

                                          " ஹ்ம்ம்,,அது  எங்க  இருக்கு  என்று  நானும்தான்  தேடுறேன் "

                                  "  ஹஹஹ்ஹா  , வா,,ரெண்டு பேரும்  சேர்ந்து  தேடுவோம்  ,,ஹஹஹாஹ்  "

                                        எண்டு உர்சுலா சொல்லி, கொஞ்சம் தாரளமாக அருகில் வந்து பூனை போல உரசிக்கொண்டு, டெக்னிகலா யாழில் உள்ள இசை எழுப்பும் விசியங்களை,வஞ்சகம் இல்லாமல்க் குனிந்து,நிமிர்ந்து சொல்லி தர நான் யாழ் பாடிய பாணன் போல பூந்து விளையாட யாழ் இசைகருவிகளின் நரம்புகள் முறுக்கு குறைந்து இழக இழக,வீராளி அம்மாள்சி புண்ணியத்தில் எனக்கு உடம்பெல்லாம் நரம்புகள் முறுக்கு ஏற்ற வைத்தாள் அந்த கடல்க் கன்னி உர்சுலா .

                                                          ஹார்ப் அருமையான இசைக்கருவி,அதன் நாதம் தனித்துவமானது," லோர்ட் ஒப் ரிங்க்ஸ் " படத்தில அந்த வாத்தியத்தைப் போட்டு அழகா பின்னணி இசை அமைத்து இருக்குறார்கள். உர்சுலா இடம் நிறைய விசயம் கேட்டேன், அவள் யாழ் பற்றி டெக்னிகல் விசியம் சந்தோசமா சொன்னாள் உர்சுலா , ஒஸ்ரியா ,வியன்னா போய் அங்கே சிம்பொனி விசியம்எல்லாம் கரைத்துக் குடிக்கப் போறதா சொன்னாள். நான் கொஞ்சம் ஜோசித்துபோட்டு

                               " துன்பம் சேர்ந்த வேளையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா... எண்டு என் தாய் மொழியில் ஒரு கீளைதேய இசை வடிவில் தமிழ் பாடல் இருக்கு, அந்தப் பாடல் யாழ் இசைக்கருவியில் வாசிக்க நல்ல அர்த்தம் உள்ள பாடல் எண்டு நினைகேறேன்,நான் கிட்டார் வாசிக்க ,நீ யாழில் வாசிக்க அதைப் பாடி ரேகொர்ட் பண்ணுவமா ,உனக்கு நேரம் உள்ள ஒரு நாள் சொல்லுவியா "

                          எண்டு கேட்டேன்,

                         உர்சுலா சின்னக் குழந்தைகள் போல ஆர்வமாகி,

                                 " எங்கே அதைப் பாடிக்காட்டு எப்படி ஒர்கேச்ற்றசன் அரேன்ச்மென்ட் வருகுது எண்டு ஐடியா போடலாம் " என்றால்,

                 " எனக்கு அந்த . துன்பம் சேர்ந்த வேளையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்க மாட்டாயா  பாடல் முதல் வரிகள் மட்டுமே தெரியும் உர்சுலா " எண்டு சொன்னேன்,,

                           ," அடப் பாவி , எல்லாம் அரையும் குறையுமா தானே தெரிந்து வைத்து இருக்குறாயே " எண்டு சொல்லி சிரித்தாள் உர்சுலா ,

                                " ஹ்ம்ம்,  எதுக்கும் நீ பாட்டை எடுத்து பாடிக்காட்டு நான் மிச்சம் செய்தாப் போச்சு " எண்டு சொல்லி இருக்குறாள் அந்தக் கண்களால் சிரிக்கும் கடல்க் கன்னி உர்சுலா . 

                                   " மணம் கமழ் மாதரை மண்ணி யன்ன அணங்கு மெய்ந் நின்ற அமைவரு, காட்சி " போன்ற நீலக்கடல் அலைக் கண்களால் ,விழி வீசி மொழி பேசும் உர்சுலாவுடன் , யாழ்ப் பாணன் பாடிய, " ஆய் திணை யரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் _" நினைவோடு, வட துருவ ஆர்டிக் வலயத்தில் இருக்கும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் யாழ் பாடி அந்தப் பாடலை , இந்தக் கோடை காலப் பள்ளி விடுமுறையில் ரேகொர்ட் பண்ணப்போறோம்.... 
 .

ஒஸ்லோ 27.04.14