Monday 25 May 2015

மேரி யுவானா மயக்கிய பொப் மார்லி..

இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை .விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                                   யாழ்பாணத்தில வளர்ந்த காலத்தில ,பொப் மார்லியின் " ரெக்கே " இசை பற்றி கொஞ்சமும் , அவர் விரும்பிப் புகைத்த "மேரி யுவானா " போதை வஸ்துப் பற்றி கொஞ்சம் அதிகமாகவும் கேள்விப்பட்டு இருந்தாலும்,பின் நாடக்களில் ஸ்வீடனில் அரசியல் அகதி முகாமில் வசித்த போது அது இரண்டையும் அனுபவிக்கவே சந்தர்பம் கிடைத்தது ! கூடவெ அவர் உருவாகிய "ரச்தபேரியன்" கலாசாரம் பற்றி கொஞ்சம் கிட்டத்தில் அதுக்குள்ள இறங்கியே பார்க்கவும் அந்த ஸ்வீடடன் அரசியல் அகதி முகாமில் வாய்ப்பு வேற கிடைத்தது !

                                        பொப் மர்லியை 80 களில் பிரபலம் ஆக்கிய அவரின் இசையுடன்,அவர் வசித்த நாடான ஜமைக்காவில் , உலகம் எங்கும் சட்டவிரோதமணா  மேரி யுவானா போதைவஸ்து, அந்த நாடில் சட்டரீதியா எல்லாரும் புகைக்லாம் என்று இருந்தது. அதுவே  உலகம் எங்கும் இருந்து ரசிகர்களை அந்த நாடுக்கு போகப்பண்ணியது ,அவர்கள் திரும்பி வந்த போது தங்களுடன் பொப் மார்லியின் இசையுடன்,அவரின் பைபிளின் பழைய ஏற்பாட்டு கோட்பாடுகளில் அமைந்த "ரச்தபெரியன் "கலாசாரத்தையும் மேற்கு உலகத்துக்கு கொண்டு வந்தார்கள்!

                              ஆங்கிலேயர்களால், ஆபிரிக்காவில் இருந்து , கரூபியன் தீவுகளில் ஒரு சிறு தீவான ஜமைக்காவில் கரும்புத் தோட்டதுக்கு வேலைக்கு கொண்டுவரப்பட,  கரும்பு போலவே சக்கையாகப் பிழியப்பட்ட , பாவப்பட கறுப்பின மக்களின் அடிமைகளின் வம்சாவளியான, பொப் மார்லியின் பாடல்களில் எப்படியும் ஒரு வரி அடிமை விடுதலை பற்றி வரும், அவரோட " A Blackman Redemption  " என்ற பாடல் இன்றுவரை  கறுப்பின மக்களின் தேசிய விடுதலை கீதம் என்கிறார்கள் . 

                          அதாலதான் எப்படி, கியூபாவின்" விடுதலைத் தந்தை " ஏற்நேஸ்ட்ரோ சேகுவேரவின் முகத்தை புரட்சியின் அடையாளம், " கெரில்லாப் போராளிகளின் கடவுள் " என்பது போல கொண்டாடுகிறார்களோ அதுபோல ,பொப் மார்லியின் இசையை " அடிமை விடுதலைப் புரட்சி இசை " என்கிறார்கள் உலகம் முழுவதும் .

                                     ஸ்வீடன் அகதி முகாமில் என்னோட அறையிட்கு அருகில் வாசித்த,கிழக்கு ஆபிரிக்க நாடான எதியோபியாவில் இருந்து அகதியா வந்திருந்த டானியல், பொப் மார்லியின் இசைக்கு மட்டுமில்லை,அந்தப் புகைக்கும் தீவிர ரசிகரா இருந்தார்! அந்த " மேரி யுவானா " போதைவஸ்தை மொரோக்கோவில் இருந்து எடுப்பித்து சட்டவிரோதமா முகாமில் இருந்த புகை போக்கிகளுக்கு விற்றுக்கொண்டும் இருந்தார்! 

                               பொப் மார்லி போலவே,நடை,உடை,பாவனையில் இருந்த அவர்,தலை மயிரை குடும்பைச் சித்தர்போல சடை ஆக்கி ,கழுத்தில நாய்ச் சங்கிலி போல நிறைய மாலைகள் போட்டு, யாரைப் பார்த்தாலும் "யா, மாண் ,யா மாண் ," எண்டு பொப் மார்லி போலவே வெட்டி வெட்டி விழுங்கி ஆங்கிலம் பேசி, கை முஸ்டியை பொத்தி, இடித்து , வருபவர் போபவர்களுக்கு,  "  Freedom came my way one day , And I started out of town, yeah! "    எண்டு பாடி பொப் மார்லி அடையாள வணக்கம் சொல்லுவார்!

                                   பொப் மார்லி மீது இருந்த அபிமானத்தால், நான் அவரிடம் நட்பாகி , அவரின் அறையில் , 24 மணித்தியாலமும்" non -stop " ஆகப் பாடிக்கொண்டு இருக்கும் பொப் மார்லியின் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். கிழக்கு ஆப்பிரிக்க நாடான எதியோப்பியா, அதன் ஜெனாதிபதியாக இருந்த " ஆபிரிக்க சிங்கம்" எண்டு அழைக்கப்பட்ட சாலீஸ் லாச்க்கி, பொப் மார்லியின் " ரஸ்த பேரியன்" சமயம், " ரெக்கே" இசைவடிவம், போதை கொடுக்கும் இலை "மேரி யுவானா " இன் இங்கிதம், பொப் மார்லி நம்பிய பைபிளின் பழைய ஏற்பாட்டுக் கதைகள் , போன்ற எல்லாத்தையும் அவரிடம் இருந்து கேட்டு அறிந்தேன் ! 

                                அவர் மரியுவானவை ஒரு பேபரில் குழாய் போல சுருட்டி ,அதை "joint "எண்டு சொல்லுவார்கள்,அதை டானியல் பத்த வைத்து , விரல்களால் பொத்திப் பிடித்து உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளுக்க இழுத்து, புகையை வெளிய விடாமல் அமுக்கி , கண் இரண்டும் சிவப்பாக ,மேலே விட்டதை வெறித்துப் பார்த்துக்கொண்டு ஏகாந்தமா இருப்பார்!

                                         மேரி யுவானா  புகைக்கும் போது அவர் பாடல் CD ஐ நிப்பாட்டிப் போட்டு அமைதியாகப் புகைப்பார். ஒருமுறை

                 " ஏன் நீங்கள் அப்படி செய்கிறீர்கள்?" எண்டு கேட்டதுக்கு,

                              " மேரி யுவானா  புகைக்கும் போது ,பொப்பின் பாடல்கள் எல்லாம் நினைவுவரும், அதன் வரிகளுக்கு நிறைய வேறு வேறு அர்த்தமும் சேர்ந்து வரும் " என்றார், 

                             பொப் மார்லியே மேரி யுவானா  புகைத்துக்கொண்டு ,அவர் பாடல்களை எழுதி, அதுக்கு இசை அமைத்து இருக்கிறார் எண்டு வேற கேள்விப்படதால் அதில உண்மை இருக்கலாம் போலதான் இருந்தது !

                                          ஒரு நாள் டானியல் சொன்ன அந்த அனுபவத்தை அறிய , துணிந்து நானும் அதைப் புகைத்துப் பார்த்தேன், டானியல் joint சுருட்டித் தந்தார், அதைப் பவ்வியமா வேண்டி , பத்தவைத்து உள்ளுக்க இழுக்கவே தலை சுற்றியது, கொஞ்ச நேரத்தில கண் ரெண்டும் விரிய , காதுக்குள் யாழ்தேவி ரெயில் ஓடுற சதம் கேட்க , என் கை இரண்டும் சரணவாதம் வந்து  குறண்டிக்கொண்டு வரும்போல  விட்டு விட்டு இழுக்க ,   எப்பவுமே குப்பையாக இருக்கும் டானியலின் அறை, சடார் எண்டு சாணி போட்டு மெழுகியது போல சுத்தமா இருக்க , அதுக்குப் பிறக்கு நல்லா உள்ளுக்க இழுக்க, முளங்காலுக்கு கீழ என்னோட காலைத் தடவிப் பார்க்க இரண்டு காலும் காணாமல் போயிடுத்து....கண்ணீரும் புகையும் சேர்ந்து கண்ணீர்ப்புகை போல முகமெல்லாம் எரியத்  தொடங்க  

                                            " I shot the sheriff, but I swear it was in self defense  " என்ற வரிகளை , விரல்களை பிஸ்டல் துப்பாக்கி  போல ஒடுக்கி , அந்த பிஸ்டல் துப்பாக்கியை அங்கயும் ,இங்கையும் குறிபார்துக்கொண்டு ,  என்னைப் போலவே புகைத்துக் கொண்டு கனவில் மிதந்து பாடிக்கொண்டு இருந்த  டானியல் , பாடுறதை நிபாடிப்போட்டு , இயல்பாக

                             " யா மாண் , எப்படி இருக்கு? பொப் மார்லியின் பாடல் நினைவு வருகுதா, எங்க ஒரு பாடல் பாடும் பார்ப்பம்" என்றார். 

                               நான் " இடம் கொண்டு விம்மி , இனை கொண்டு இறுகி , இளகி முத்து வடங் கொண்ட கொங்கை நலங் கொண்ட நாயகி ,,,நல் அரவின்   அல்குர்ப் பனிமொழி... " எண்டு பாடினேன் ,

                              அவர் கோபமாகி " என்ன பிசத்துறாய் .இது , பொப் மார்லி பாடவில்லையே, எதோ புரியாத மொழியில் எதுக்குப் பாடி என்னோட உசிரை எடுகுறாய் ?" என்றார் கோபமாகி . நான், அமைதியாக , தலையைக்  கையாலா பிடிச்சுக்கொண்டு

                                  " இல்லை , இது எங்கள் நாட்டு கவிஞ்சர் அபிராமிப் பட்டர் என்பவர் பாடிய, அபிராமி அந்தாதி" என்றேன்,அவர் என்னை

                             " நிப்பாட்டு உன் பிசத்தலை" எண்டு , 


                  கொஞ்சம் வில்லன்கமாப் பார்க்க,  எனக்கு  அந்த பிஸ்டல் துப்பாக்கியை பார்க்க பயம் வந்திட்டுது ! நான் என்ன செய்ய  மேரி யுவானா  மண்டைக்குள்ள தாறு மாறாய்ப் பாய எனக்கு சின்ன வயசில படித்த அபிராமி அந்தாதி சாடர் எண்டு நினைவு வந்து, பொப் மார்லியின் பாட்டு ஒண்டுமே நினைவு வரவில்லை! 

                                அதுக்குப் பிறகு நான் ஒரு நாளும் அந்த நாசமாப் போன மரியுவான புகையை நினைத்தே பார்க்கவில்லை எண்டு ரீல் விடப்போறதில்லை ,,பல வருடங்களின் பின் ,ஹொலண்டில் ,ஆம்ஸ்டர்டாமில் அதை மீண்டும் ட்ரை பண்ணினேன் ,அது வேறுவிதமான அனுபவம் கொடுக்க , கடசியில் சக்கடத்தாரின் குதிரைபோல இருந்த கத்தரீனாவை சந்திக்க ,,,,அது வேற கதை ,,,,,,   !

                                       ஸ்வீடனில்  அரசியல் அகதிகள் ஆனா நாங்கள் எல்லாம் காட்டுவாசிகள் போல இருந்ததாலோ என்னோவோ , அந்த அகதி முகாமை , ரெம்ப நாகரிகமான ஸ்வீடிஷ் மக்கள், சன நடமாட்டம் இல்லாத ஒரு அத்துவானக் கிராமத்தில இருந்த பைன் மரக் காட்டுக்கு நடுவில வைத்திருந்தார்கள். சன நடமாடம் உள்ள டவுன்க்கு வரவே காடுப் தாண்டி  3 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்!

                                                நான் அந்த நாட்களில் தனிமையிலும் , வெறுப்பிலும் , மன அழுத்த நோயாலும் , வாழ்கையின் விளிம்பில் இருந்ததாலும்,  பொப் மார்லி போலவே,நடை,உடை, பாவனையில   மரியுவானா புகையின் மத்தியில்  இருந்த  டானியலின் போக்கு எனக்குப் பிடிக்கவேயில்லை . அனாலும் பொப் மார்லி போலவே,நடை,உடை, பாவனையில மட்டும் , அந்த முகாமில்  சில வருடம் வேறு  போக்கிடம் இல்லாமல்  இருந்தேன், 

                                  சிலநேரம் முகாமில இருந்து நடந்து காடுப் பாதையால டவுனுக்குப் போவேன், கிறுக்கு பிடித்த பொப் மார்லி போல இருந்த என்னைப் பார்த்தாலே நெறைய இளம் ஸ்வீடிஷ் பெண்கள் நெருங்கி வந்து , நட்பாக சிரித்து,பொப் மார்லி ஸ்டைலில் கை முஸ்டியை பொத்தி இடித்து " ம........... இருக்கா?" எண்டு ரகசியமாக ,கிசு கிசு குரலில் காதுக்க  கேட்பார்கள்.நான் அவர்களில் பலரை டானியலுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்!எதோ , அந்த நேரம் ஏதோ என்னால பொப் மார்லியின் "ரெக்கே "இசைக்கும்,அவரின் "ரேஸ்த பேரியன் " கலாசாரத்தும் செய்ய முடிஞ்சது அவ்வளவுதான்!

                                              மூன்றாம் உலக ,வறிய,ஆபிரிக்க  நாடுகளில் இருந்து அரசியல்  அகதியாகியா என்னைப் போன்றவர்கள்   வசிக்கும்  அகதிமுகாமில் டானியல்  மரியுவானா  விற்பது ஸ்வீடிஷ்  மக்களுக்கு பெரிய அக்கறை இருக்கவில்லை . ஆனால் அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் அகதிமுகாமுக்கு அதை வேண்ட வருவது கண்னுக்க குத்தத் தொடங்க  அதாலே நிறையப் பிரச்சினை வர ,ஒருநாள் டானியலை போலிஸ் வந்து அள்ளிக்கொண்டு போக அவரை பலதகரமாக இழுக்க, அவர் அப்பொழுதும் ,

                         "  Freedom came my way one day , And I started out of town, yeah!  ,Freedom came my way one day,,,¤

                                   எண்ட பொப் மார்லியின் பாடல் வரிகளை உரத்துப் பாடி , பொலிஸ்காரரோட  சண்டை பிடிக்க ,கடைசியில் டானியலை சுவிடிஷ் பொலிஸ்காரர் , விலங்கு போட்டு , கொற இழுவயில இழுத்துக்கொண்டு போயிட்டாங்கள் !

.

1 comment :