Wednesday 16 September 2015

வீராளி அம்மன் கோவில்....

யாழ்பாணத்தில ,  எங்களின் வீட்டுக்கு அருகில்  வீராளி அம்மன் கோவில் இருந்தது , எளிமையான அந்தக் கோவிலுக்கு அருகில் தேர் முட்டியும் ,இன்னொரு பக்கம் செங்கழுநீர் தொட்டியும் இருக்க, கோவிலுக்கு முன்னால விழுதுவிட்ட ஆலமரம் தலையை விரிச்சுப் போட்டு நிக்க , கோவிலுக்கு அருகில நிழலாக கூலாம் பழமரம் நின்றது , 

                                                 அந்த நேரம் அந்தக் கோவிலுக்கு கோபுரம் இருக்கவில்லை .அந்தக் கோவிலுக்கு முன்னால அம்மச்சியா குளம் இருந்தது , குளத்தில தாமரை மொட்டு விட ,அல்லி மலர்கள் அரிதாரம் பூச , மார்கழி மாததில அந்தக் குளம் நிரம்பி வழிந்து கோவிலுக்கு முன்னாலா கடல் போல அலை அடிக்கும்.

                                                     வீராளி அம்மன் கோவில் , சங்கிலிய மன்னன் சண்டைக்குப் போகமுதல் தன்னோட வாளை வைத்து வழிபட்ட வீர மகா காளி அம்மன் கோவில் என்ற பெயர் வந்த படியால, செய்வாய்க் கிழமை, வெள்ளிகிழமை அதிகாலை சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அபிராமி அந்தாதி பாடல்களை " லவுட் ச்பிகரில் " போடுவார்கள் , அது முடிய L .R. ஈஸ்வரி பாடிய அம்மன் பாடல்கள் போடுவார்கள். 


                                                கோவில் திருவிழா வருஷத்தில் இரண்டு முறை வரும் ,அந்த நாட்களில் நாள் முழுவதும் அந்த " லவுட் ச்பிகர் " கிடந்தது அலறும் ,கடைசி பூங்காவனத் திருவிழா அன்று சின்ன மணியின் வில்லுபாட்டு , காண மூர்தி பஞ்ச மூர்தி நாதஸ்வரம் பொழிந்து, ராஜன் இசைக் குழு அல்லது அருணா கோஸ்டியின் இசை நிகழ்ச்சி யோடு மழை பேஞ்சு விட்டமாதிரி அமைதியாகும் ,

                                             அந்தக் கோவிலில் என் வயது இளையவர்கள் பலர் " அம்பிகை  அடியார்கள் " எண்டு கோவிலோடவே, அம்மனுக்கு நேர்ந்து விட்ட மாதிரி ,கோவில் அம்மன் சிலையைக் காவுவது ,மாலை கட்டுவது ,மணி அடிப்பது ,அவல் சுண்டல் கடலை எலாருக்கும் பகிர்ந்து கொடுப்பது ,கோவிலுக்கு வரும் இளம் அம்மன்களுக்கு தரிசனம் கொடுப்பது எண்டு அவர்கள் நேரம் வீராளி அம்மன் புண்ணியத்தில எப்பவுமே விறு விறுப்பா போகும் , 


                                           வாட்ட சாட்டமான அவர்களின் நெற்றியில் திருநீறு இல்லாடியும் ,எல்லார் கழுத்திலையும் ஒரு சின்கப்பூர் செயின் கட்டாயம் மின்னும் , நான் அந்தக் கோவிலுக்கு போறது இல்லை , அந்த " அமபிகை அடியார்களோடும் " தொடசல் வைப்பது இல்லை , ஆனால் அந்தக் கோவில் தேர் முட்டியில ஏறி இருந்து குளத்தை அதிகம் பார்த்து கொண்டு இருந்து இருக்றேன் ,

                                        வருடாந்த பெரிய திருவிழாவில, பாம்பு வாகனத் திருவிழாவில எப்பவுமே கைதடிப் பழனியின் மேள தாளம் பாம்பு போலப் படம் எடுத்து ஆடும் ,அந்த திருவிழா செய்வது கோவிலுக்கு முன்னால சாராய பார் வைத்து நடத்திய நயினார் குடும்பம், மேளகாரர் கோவிலுக்கு வந்தவுடன நயினார் அவர்களுக்கு தாகசாந்தி செய்து ,சுருதி ஏற்ற நாதஸ்வரம் வாசிப்பவ ர் 


                               " சுழன்டாடு நாகபாம்பே... சுழன்டாடு நாகபாம்பே,,,,, சுழன்டாடு  நாகபாம்பே ..சுழண்டு  சுழண்டு  ஆடு  நாகபாம்பே ..பாம்பே,   ப்ளிஸ்  நாகபாம்பே..... .சுழன்டாடு நாக பாம்பே...." 

                                    எண்டு சுழண்டு வாசிக்க ,ஒரு கட்டத்தில அவர் புன்நாகவராளி ராகம் வாசிக்க அம்மன் சிலைய தாங்கி வரும் பாம்பு வாகனப் பாம்பே மயங்க்கி விழ,நயினார் கர்நாடக சங்ககிததை கரைத்துக் குடித்த மாதிரி தலைகறனமா தாளம்போட ,அதுக்கு தலை கழண்டு விழுகிற மாதிரி கைதடிப் பழனி மேளத்தில முழக்குவார் ,அந்த பாம்பு திருவிழா எப்பவுமே சண்டையில்தான் முடியும்

                                           வீராளி அம்மன் கோவில் வேட்டை திருவிழா நடுக் காடுக்குள்ள நடக்கிற மாதிரி நடக்கும் , அந்த திருவிழாவில, கோவிலுக்கு முன்னால காடு போல மரங்களை வெட்டி கொண்டு வந்து நட்டு ,அதில் காஞ்சுபோன பயித்தங்காய் ,முருங்கைக்காய் ,புடலங்காய் மரக்கறி எல்லாம் தோரணம் போல கட்டி தொங்கவிட்டு , 
எங்கள் ஊரில போஸ்ட் பியோனா வேலை செய்த அரியலிங்கம் ,வேடுவன் போல இலை குழை எல்லாத்தையும் உடம்பு முழுக்க சுற்றிக்கொண்டு ,அதுக்குள்ள பதுங்கி இருப்பார் , 

                                        யாரவது கட்டி தொங்கிற மரக் கறியை பிடுன்கி ரார்களா எண்டு பார்க்க ,போஸ்ட் பியோன் அரியலிங்கம் மேகப் போடாமலே வேடுவன் போலதான் இருப்பார் ,அப்புறம் எதுக்கு அவர் எச்ற்றாவா மேக் அப் போடுறார் எண்டு அந்த நாட்களில் ஜோசிததுண்டு .

                                   வருடத்தில ஒருநாள் மின்னேறிஞ்சன் திருவிழா நடக்கும் , ஒரு அரசனிடம் அரசவைக் கவிஞ்சரா இருந்த அபிராமிப் பட்டர் வாய் தவறி அம்மாவசையைப் பவுர்ணமி எண்டு மாறிச் சொன்னதால் " நாளைக்கு பவுர்ணமி காட்டாவிட்டால் தலை பறக்கும் " எண்டு அந்த மன்னன் சொல்ல, அபிராமிப் பட்டர் உயிர் ஆபத்தில முடிய முதல் அவர் அபிராமி அம்மனை நினைத்து அபிராமி அந்தாதி பாட அம்மாவசை ,பூரன பவுர்ணமியாக மாறிய அந்த நிகழ்வை ஒரு நாடகம் போல செய்வார்கள், 


                                           அதில வார அரசனா நடிப்பவர் ஆணைபந்தி சந்தியில் லோன்றி வைத்திருந்த முழு நேர தண்ணி சாமி ,அவர் சும்மா நேரம் கேள்விக்குறிபோல வளைந்து கொண்டு நிற்பவருக்கு , அண்டைக்கு அம்மனின் தீர்த்தமும் ,நயினாரின் தீர்த்தமும் கொடுத்து அவர் அண்டைக்கு மட்டும் ,அம்புக்குறி போல அரசனா நிக்க , அதில அபிராமிப் பட்டர் போல நடிப்பவர் தலை பறக்கும் போல , பார்க்க அப்பாவியா இருப்பார்.

                                                     கோவிலுக்கு அருகில் எங்களின் வீட்டு பக்கமா ஒரு பெரிய கொக்கை தடியின் உச்சியில ஒரு கரண்ட் லைட்டைக் கட்டி ,அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதி பாடிமுடிய , வீராளி அம்மன் அந்தாதியில் மயங்கி ,அவாவின் காதில இருந்த வைரத் தோட்டை கழட்டி எறிய, அது பூரணை சந்திரன் போல மின்னி மின் எறிஞ்சன் வெளியில எலெற்றிக் லைட் சடாரென்று எரியும் . 


                                         எங்களின் வீடு இருந்த காணி உறுதியில் எங்களின் வளவுக்கு மின் எறிஞ்சான் வெளி எண்டு தான் எழுதி இருந்தது , அதுக்குள்ளே வீராளி அம்மன் அவாவின் காதில இருந்து கழட்டி எறிஞ்ச வைர தோட்டை நான் எவளவுதான் தேடியும் ஒரு நாளுமே கண்டு பிடிக்க முடியவில்லை .

                                            அண்மையில் இன்டர்நெட்டில் வீராளி அம்மன் கோவில் 20 வருடங்களின் பின் பார்த்தேன் , அதில கோயில் கோபுரம் கட்டி வேறு விதமாக நவீனமா சினீமா நடிகைகளை விடக் கவர்ச்சியா இருந்தது , எனக்கு பிடித்த அந்த பழைய ,எளிமையான ,வீராளி அம்மன் கோவில் போல இருக்கவில்லை, சிவனே எண்டு கிடந்த யாழ்ப்பாணக் கிராமக் கோவில்கள் வெளிநாடுக்காசில் போட்டி போட்டுக்கொண்டு கோபுரம் எழுப்பி, கோடி கொடுத்து கும்பாவிசேகம் செய்துளார்கள் .


                                           பல கோவிலுக்கு இப்ப "வெப் சைட் " வந்து " ஒன்லைனில" அருசனை செய்யக் இங்கிருந்து காசு அனுப்பலாம் போல இருக்கு , அங்க உள்ள ஐயர் அந்த காசை எடுத்து , வீட்டில இருந்த படியே "ஒன்லைனில" கடவுளுக்கு அருச்சனை செய்யலாம் போலவும் இருக்கு , இந்த தொழில் நுட்ப வளர்சி , இலற்றோனிக் இமசை கொஞ்சம் ஜோசிக்க வைக்குது ,

                                              ஐரோப்பாவின் பல நகரங்களில் பழைய தேவாலயங்களில்,கையே வைக்க மாட்டார்கள் , நூற்றாண்டுகளாக அவை அப்படயே பழைமையா இருக்கும் , நான் வசிக்கும் ஒஸ்லோ நகர விளிம்பில், என்னோட வீட்டுக்கு அருகில் ஒரு பழைய தேவாலயம் இருக்கு ,அதில் இப்பவும் 300 வருடம் பழமையான மரத்தால செய்த பைப் ஓர்கன் வாசிக்கிறார்கள், அதி நவீன ஒலிபெருக்கி இரைச்சல் சத்தங்கள் பாவிப்பதில்லை , சுவர்களில் மோதி இசை தானாகவே தன் பாட்டில தாலாட்டுது , மெழுகுதிரிகளின் வெளிசத்தில் பரம பிதாவின் முகம் பிரகாசமா தெரியுது . 


                                            அங்கே வரும் வயதானவர்கள் அந்த தேவாலயம் தாங்கள் சின்ன வயசில் வந்து போனது போலவே இருக்கு எண்டு சொல்லுளார்கள், அவர்களின் வாழ்வின் கதையை எழுதித் செல்லும் அந்த தேவாலயத்தின் நினைவுகள் போல ஆயிரம் தொழில் நுட்ப சாத்தியங்கள் வந்த போதும் அவர்கள் அதை மாற்றவே இல்லை , மாற்றவும் மாட்டார்கள் !
.


07-02-2014
ஒஸ்லோ நோர்வே