Thursday 28 May 2015

கல்யாணி என்றதுக்கு என்ன அர்த்தம்..

சில வாரங்களின் முன்னர் ஒஸ்லோவுக்கு வெளியே பல மைல்கள் தள்ளி உள்ள ஒரு நகரத்துக்கு போயிருந்தேன் , அடிக்கடி வெய்யிலும், மழை முகிலும் மாறி மாறி அந்த  நகரத்தை  வெளிச்சமாக்கியும் , கொஞ்சம் மம்மல் போல இருட்டாக்கியும் பிள்ளையார் பேணி எறிஞ்சு விளையாடிக்கொண்டு இருந்த  அந்த மத்தியானம் , போன அலுவல்களை முடித்துக்கொண்டு ஒஸ்லோ நகரத்தை நோக்கி  ரெயிலில் ஏறின நேரம் மழை கொஞ்சம் பன்னீர் தெளிச்சு தலையை நனைப்பது போல விசிறத்  தொடங்கியது.

                                            நான் ஏற்றின பெட்டி முழுவதும் நிறைய இளம் பள்ளி மாணவிகள் , மாணவர்கள் கும்பலாக எல்லா இருக்கைகளிலும் நெருக்கி அடிச்சுக்கொண்டு இருந்தார்கள். இருக்கைகளில் இருக்க இடம் அதிகம் இருக்கவில்லை . கிட்டதட்ட ஒன்றரை  மணித்தியாலம் அப்படி நின்று கொண்டே போகவேண்டி வரலாம் போலவும் இருந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மற்றப்  பெட்டிக்கு மாறுவமா என்று நினைச்சுக்கொண்டு அதுக்கு வசதியாக கதவுக்கு கிட்ட ட்ரைன் சுவரில தென்னை மரத்தில பல்லி போல ஒட்டிக்கொண்டு முதுகை முண்டு கொடுத்துக்கொண்டு நின்றேன்.

                                                 பாடசாலை இளம்பிள்ளைகள் கும்பலாக இருந்தால் அவர்களுக்கு இடையில் காலியான இருக்கை இருந்தாலும் போய் இருக்க முடிவதில்லை. அவர்கள் எப்பவும் கூத்தும் கும்மாளமுமா கொஞ்சம் புரிந்துகொள்ள முடியாத நவீன கழுவி ஊத்தும் நோர்க்ஸ் மொழியில் கச கச என்று சின்னைக்கடை மீன்சந்தை  போல கதைப்பார்கள். முக்கியமா என்னைப்போன்ற வந்தேறுகுடிகளை சில நேரம் அவர்கள் வரவேற்பதில்லை.

                             ஆனால்  எனக்கு நேரே வலது பக்கம், ஜன்னல் விளிம்பு இருக்கையில் இருந்த ஒரு பதினாறு அல்லது பதினேழு வயது போல தோற்றத்தில் இளமைக்கும்  இன்சூரன்ஸ் பொலிசி எடுத்து வைச்சு இருப்பவள் போல இருந்த இளம் மாணவி , அவளுக்கு முன்னால் இருந்த யாருமில்லாத இருக்கையை சைகையால் காட்டி

                 " நீ வந்து இதில இருக்கப்போறியா, எனக்கு பிரச்னை இல்லை "

என்பது போல கேள்விக்குறியில் கண்ணை தொங்க விட்டுக் கொண்டு என்னைப் பார்த்தாள்.

                                              அவளைப் பார்க்க முழுவதும் நோர்வேயிய பிள்ளைப்போல இருக்கவில்லை. கலப்பு பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளைபோல இருந்தாள். அவளின் முகம் வெள்ளையடிச்ச சுண்ணாம்பு சுவர் போல வெளிறி இருந்தது. மூக்கு ஹோடலாந்த் உயர் சாதி நோர்வே மக்களின் வளைவில் இருக்க, கண்கள் நீலமா அக்குவா மரைன் கல்லுப்போல மின்ன, அவள் இமை மயிர் கொறக்கா புளி நிறத்தில அவிஞ்ச கறுப்பில இருக்க, கத்தை கத்தையாக பின்னோக்கி விழுந்த தலை மயிர்  பொன் நிறதுக்கும், பிரவுன் நிறத்துக்கும் நடுவால உள்ள ஒரு பனங்காப்பினாட்டு கலரில் இருக்க,,நிச்சயமா இவள் கலப்பின பெற்றோர்களுக்கு பிறந்த பிள்ளையாக இருக்க வேண்டும் , சில நேரம் என்னோட கதைக்க விரும்புகிறாள் போல என்று நினைசேன்.

                                      அவள் காட்டின சீட் இக்கே போய் அவளுக்கு முன்னால இருந்தேன்.முன்னுக்கு மூன்று எதிரே மூன்று என்று  ஆறு பேர் உட்காரும் இருக்கைகளில் இருந்த  அவள் வகுப்பு மாணவர்கள், அமைதியாகி  என்னையும் அவளையும் கொஞ்சம் பார்த்தார்கள். அவள் நோர்வே மொழியில் சொல்லும் " வார்சி குட் " என்ற வந்து உட்காரு என்ற வார்த்தை சொன்ன போது அந்த  வார்த்தைகள் பருத்தித்துறை  பாணிப்பிணாட்டை முல்லைத்தீவு முதிரைத் தேனில தோச்சு எடுத்த மாதிரி அன்பாக இருந்தது

                          நான் இன்னும் கொஞ்சம் கிட்டத்தில் அவளைப் பார்த்தேன் அவள் முன்னுக்கு தள்ளிக் கொண்டு இருந்த மேல் வரிசைப் பற்களை உள்ளுக்குத் தள்ளும் கிளிப் போட்டிருந்தாள் , அந்தக் கிளிப் கம்பியில் சில வெள்ளை இரத்தினக் கற்கள் வைச்சு இருந்தது , அவளின் சொண்டு அலிடாலியா இத்தாலியன் ரெட் வைன் கலரில் தொஷ்காணா சீதோஷ்ணப்  பசுமையாக இருக்க, காதில  பெரிய ரெண்டு ஆப்ரோ அமரிகன் வட்ட வளயம் போட்டு இருந்தாள். அவள் நடு நெற்றியில் அட்ச பட்சத் தேய்பிறை சந்திரன் போல ஒரு வளைவு சமன் இல்லாமல் சரிந்து இருக்க . மொத்தத்தில் அவள் முகமே திருவாதிரை நட்சத்திரம் போல அம்சமா இருந்தது.
                                     
                      நான் நினைச்ச மாதிரி கையைப் பொத்தி வாயில வைச்சு ஊதிப்போட்டு, அவளே பேச்சை தொடக்கினாள்.

                                  "  டமில்  டைகர் , உன்னைப்பார்க்க ஸ்ரீலங்கா நாட்டவர் போல இருக்கு, நீ அந்த நாட்டில இருந்தா இங்கே வந்து இருக்கிறாய்,  டமில் டைகர்  "

                                             என்று சிரித்துக்கொண்டே நோர்வே மொழியில் கேட்டாள், அவள் நோர்க்ஸ் மொழியில் வடமேற்கு நோர்வே உச்சரிப்பு நனைந்து இருந்தது,

                        "  ஆமாம் ,  நான் அந்த நாட்டவனே தான்,  தமிழ் தான், ஆனால் டைகர் இல்லை, எனக்கு அவளவு வீரம் எல்லாம் இல்லை, வெள்ளைப் பூனைக்கே பயம்  அதுவும் பகலிலேயே "

                                    என்றேன், என்னோட சுவிடிஷ் மொழி சரிக்கு சரி கலந்த நோர்க்ஸ் அவளுக்கு விளங்குமா என்று சந்தேகமா பார்த்தேன் .அவள் கல கல என்று ட்ரைன் சடுன் பிரேக் போடும் போது கை பிடிக்கவென்று மேலே தொங்கும்  சங்கிலிகள் குலுங்கின மாதிரி சிரித்தாள்.

                                      "  நீ எவளவு காலம் இங்கே வசிக்கிறாய், நல்லா நோர்க்ஸ் நோர்வே நாட்டு உச்சரிப்பு சத்தத்தில் பேசுகின்றாயே, பொதுவாக உன் வயது வெளிநாட்டவர் இப்படிப் பேச மாட்டார்களே  "

                என்று கேட்டாள், நான் எவளவு வருடம் வாழுறேன் என்று சொன்னேன்.

                       " ஒ அப்படியா ,அவளவு வருடமா.  என்னோட வயது அது. ஹ்ம்ம், ஹ்ம்ம் , "

                          என்று சந்தேகமாகப் பார்த்தாள்..அவளே நல்ல அன்பாக கதைப்பதால் இயல்பாக

                             " எப்படிக் கண்டு பிடிச்சாய் என்னோட நோர்க்ஸ் நல்லா இருக்கு என்று, உன்னைப்பார்க்க முழுவதும் நோர்வே நாட்டு பெண் போல இல்லையே, நான் நினைப்பது சரியா  " என்று கேட்டேன்.

                                    " கொஞ்சம் பொறு சொல்லுறேன், கன விசியம் கதைக்க வேண்டும் , முதலில் எனக்கு என்ன பெயர் என்று சொல்லுறேன், அதில இருந்து தொடங்கலாம் , இந்த ட்ரைன் இல் பிளின்தரன் யூனிவெர்சிட்டி  வரைக்கும் நாங்கள் போகிறோம் நீ அங்கு வரைக்கும் எங்களோடு  வருவாயா "

                                   என்று அவசரமாக ஆனால் சந்தேகமாக் கேட்டாள்    

                "   பயப்பிடாதை  நான் அதுக்கு அங்காலையும் வருவேன்,, நான் இந்த ட்ரைன் போகும்  கடைசி ஸ்டேசன் வரைக்கும் நான் பிரயாணம் செய்ய வேண்டும் " என்றேன்

                                       அவள் பள்ளி நண்பர்கள்,என்னையும் அவளையும் கதைக்க விட்டுப்போட்டு தங்கள் கதையில் பரபரப்பாக இருக்க,ட்ரைன் பல ஸ்டேசன்களில் நின்றதையும் , அதில் ஆட்கள் ஏறியதையும் ,நானும் அவளும் கவனிக்கவே இல்லை.என்னோட  பெயரைக் கேட்டாள், சொன்னேன், அதை பலமுறை திருப்பி திருப்பி சொல்லி தனக்குள்ளே சிரித்துக்கொண்டு ,என்னோட பெயரை அவள் நண்பிக்கு சொன்னாள், அவள் நான் இப்ப இதெல்லாம் கேட்டேனா என்பது போல அவளைப் பார்த்தாள்.

                                      அவள் சந்தோசமா என்னைப் பார்த்து சிரித்தாள், நெற்றி புருவத்தை உயர்த்தி , கன்னத்தில் பல்லாங்குழி எல்லாப் பக்கமும் விழ  ,

                                      "   எனக்குப் பெயர் இசபெல்லா கல்யாணி, என்னோட அம்மா நோர்க்ஸ் ,,அப்பா ,,ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ஹ்ம்ம் , மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ஹ்ம்ம் ,,என்னோட அப்பா சிறிலங்காவில் இருந்து நோர்வேயிட்கு வந்த தமிழர் , மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ஹ்ம்ம்  " என்றாள்.

                     இப்ப நான் "  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  " ஹ்ம்ம்  , என்றதுக்கு என்ன அர்த்தம் என்று சொன்னால் தான் இதுக்கு மேலே உங்களுக்கு கதை விளங்கும், அந்த சொற்தொடருக்கு அர்த்தம்  " என்னோட அம்மா சொன்னா, ஆனால் எனக்கு தெரியாது "  ,,,இப்படிதான் நோர்வே மொழியில் உறுதிப்படுத்த முடியாத சந்தேகமான விசியங்களை சொல்லுவார்கள்

                             ஆனாலும் இந்த உரையாடலின் தொடக்கத்திலேயே, கொஞ்சம் சிவசம்புப்  பரியாரி செம்பும் தண்ணியில் வெத்திலை போட்டு  பார்த்த போதே வில்லங்கம் வரப்போறதை சொன்ன மாதிரி  நாடி பிடித்துப் பார்க்க   " ஆட்காட்டி ஆட்காட்டி நான் பத்து முட்டை இட்டேன்  "  கதை போல கொஞ்சம் அவலமான சம்பவங்கள் எதிர் பாராத கோணத்தில் இருந்து வரலாம் போல இருந்தது .

                                          ஆனாலும் எனக்கு சந்தோசமா இருந்தது நான் நினைச்சது சரிதான் என்று அறிந்த போது, அவளை நேராகப் பார்த்தேன் சத்தியஜித் ரேயின் பதேர் பாஞ்சாலி போல அவள் முகத்தில் ஒரு சோகம் இருக்க, தில்லானா மோகனாம்பாள் போல அதை மறைப்பதுக்கு அவள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோற்றுக்கொண்டு இருப்பதும் தெரிந்தது , ஆனாலும் நான்  உற்சாகமா

                       "   அட்றாசக்கை எண்டாணாம்,  இசபெல்லா  நானும் அப்படிதான் நினைச்சேன், உண்மையில் நீ மிகவும் அழகு, உனக்கு கல்யாணி என்று பெயர் வைச்சது மிகவும் பொருத்தம் " என்று சொன்னேன்,

                                   அவள் உணர்ச்சியே இல்லாமல் , ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள், விசுக்கு விசுக்கு என்ற மரங்களும்,காடுகளும்,சின்ன வயல்களும், குடியிருப்புகளும் பிரேம் பிரேம் ஆக பறந்தது. முதல் முறையாக அவள் சிரிக்காமல் ,கொஞ்சம் காற்றில்  கரிசனத்தை வரவழைத்து நல்லா இழுத்து பெருமூச்சு விட்டு  

                         " கல்யாணி என்றதுக்கு என்ன அர்த்தம் "  
என்று கவலையாகக் கேட்டாள்.

                           " நீயே அந்தப் பெயரை வைச்ச உன் அப்பாவிடம் கேள்,அல்லது உன் அம்மாவிடம் கேள், உன் அப்பா அந்த அழகான தமிழ் பெயரை எதுக்கு உனக்குப் பொருத்தமா வைத்தார் என்று சொல்லி இருப்பார் "    என்றேன். அவள் இன்னும் கவலையாக

                           "   ஹ்ம்ம் ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,   என்னோட அப்பா நான் பிறந்து ஒரு  வருடத்தில் அம்மாவோடு வாழாமல் பிரிந்து போய் விட்டார்,   ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  அப்பாவை நான் இன்றுவரை படத்தில் தான் பார்த்து இருக்கிறேன், ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  கல்யாணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று சொல்லு  "  என்றாள். நான் அவளை அதுக்குப் பிறகு கல்யாணி என்றே அழைக்க விரும்பி ,

                                 "   கல்யாணி ,உனக்கு உண்மையைச் சொன்னால் என்ன எனக்கு தமிழ் மொழி அறிவு அதிகம் இல்லை,,ஆனாலும்... ....................."

                             என்று சொல்ல வெளிக்கிட ,அவள் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழத் தொடங்கினாள்,, அவளின் நண்பிகள்

                            "  என்னாச்சு பெல்லா,,என்னாச்சு பெல்லா,,நீ ஓகே யா பெல்லா,,,நீ இப்படி அழுகிற ஆள் இல்லையே ,,என்னாச்சு பெல்லா, சொல்லடி ,,பெல்லா "

                                            என்று அவளை கேட்டார்கள், நான் என்னவோ அவளுக்கு சொல்லிப்போட்டேன் என்பது  போல என்னைப்  பார்த்தார்கள், என்ன சொல்லி இருப்பான் இந்த வெளிநாட்டுக்காரன் என்ற தன் எச்சரிக்கை உணர்வில் பெண்களுக்கு எழும்பும் சந்தேகம் அவர்களின் நெற்றியில் சுருங்கி விரிய, கொஞ்ச நேரம் அவர்களுக்குள் கதைச்சுப்போட்டு மறுபடியும்  என்னை சந்தேகமாப் பார்த்தார்கள், நான் அவர்களுக்கு

                                   " பெல்லாவுக்கு நான் ஒன்றும் அழ வைக்கும் நோக்கத்தில் சொல்லவில்லை,  பெல்லா அவளின் சொந்த சோகத்தில் அழுகிறாள், எனக்கும் தான் விளங்கவில்லை ஏன் அவள் திடீர் என்று அழுகிறாள் என்று, அவளே சொன்னால்தான் தெரியும் , மறுபடியும் சொல்கிறேன் உங்க  பெல்லாவுக்கு நான் ஒன்றும் அழ வைக்கும் நோக்கத்தில் சொல்லவில்லை "

                                                என்றேன் . ஆனால் சில நிமிடத்தில் இசபெல்லா கண்களை , அதில் பூசி இருந்த மஸ்காரா அழகு மை அழியாமல் , நளினமாக  ஒரு கிளினெக்ஸ் டிசு பேப்பர் எடுத்து துடைச்சுப் போட்டு, மூக்கை ஒருக்கா சத்தமா உறிஞ்சி, தோள்களை உதறி சுதாகரித்து ,

                                          "  நீ கல்யாணி என்று என்னை கூப்பிடும் போது எவளவு சந்தோசமா இருக்கு தெரியுமா,  அதுதான் அழுதேன், அழவேண்டும் போல இருந்து அதால அழுதேன்.... என்னை யாருமே அப்படிக் கூப்பிடுவதில்லை, அந்தப் பெயரை வைச்ச என் அப்பாவே ஒரு நாளும் அந்தப் பெயரில் என்னைக் கூப்பிடுவதைக் கேட்கவே எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, அந்தப் பெயர் என் பெயரோடு வெறுமையா ஒட்டிக்கொண்டு இருக்கு அவளாவே , ப்ளிஸ் என்னை இனி கல்யாணி என்றே அழை,  ப்ளிஸ் கல்யாணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று மறுபடியும் சொல்லு, அந்தப் பெயரின் அர்த்தத்தையாவது அறிவம்   "  என்றாள்

,                      "  குட்  கேர்ள்,  இல்லப்பா கல்யாணி ,,எனக்கு சரியா தெரியாது... அது  ஒரு  இந்துப் பெண் கடவுளோட பெயராக இருக்கலாம்,முக்கியமா அது ஒரு ராகத்தின் பெயர், உன்னைப்போலவே அந்த ராகமும் மிகவும் அழகானது, ஆனால்அந்தக்  கல்யாணி ,   இந்தக் கல்யாணி   என்று பல இராகம் அந்தக் கல்யானியிலயே இருக்கு , " என்றேன்,  அவள் சிரிச்சு,

                           "  என்னை அழகு என்று சொன்னதுக்கு நன்றி,  இராகம் என்றால் என்ன,  இசபெல்லா கல்யாணி என்று ராகம் இருக்கா "  என்று கேட்டாள்

                       " .இல்லப்பா மை டியர் குட் கேர்ள் , இசபெல்லா கல்யாணி என்று ஒரு இராகமும் இல்லை, ஆனால் பூர்வகல்யாணி  என்று ஒரு இராகம் இருக்கு ,   உனக்கு  பூர்வகல்யாணி என்று முழுப் பெயர் வைச்சு இருக்கலாம்,அவளவு சம்பூரணமாய் அழகாய் இருக்கிறாய் கல்யாணி " என்றேன்.

                                       நான் ஒவ்வொரு முறையும் கல்யாணி கல்யாணி என்று அவள் பெயரை சொல்லும் போது, கண்ணில சந்தோசம் குடம் குடமா கொட்டியது,  அதைவிட ஒரு டீன் ஏஜ் இளம் பெண்ணை அழகு அழகு என்று சொல்வது கொஞ்சம் நெருடல் போல இருந்தாலும், அப்படி சொல்லும் போதெல்லாம் அவள் சந்தோசப்படுவது , தகப்பன் இல்லாமல் வளரும் அந்தப் பிள்ளையின் உலகத்துக்கு அற்புதமான ஒரு அனுபவத்தைக் கொடுப்பது போல எனக்கு இருந்தது. கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  மனிதர்கள் சந்தோசமாக இருப்பதுதானே முக்கியம் இந்த அவசர உலகத்தில், அவள் மறுபடியும் சிரித்து ,

                                    " என்னை அழகு என்று சொன்னதுக்கும் ,கல்யாணி என்று சொன்னதுக்கும்  நன்றி, இராகம் என்றால் என்ன என்று மட்டும் சொல்லு அதுவே எனக்கு போதும், "

                                    என்று அவள் பிறந்ததில் இருந்தே தவறவிட்ட ஏதோ ஒன்றின் அர்த்தத்தை கேட்பது போலக் கெஞ்சிக் கேட்டாள்.

                                  "  ஓகே ,கல்யாணி , நீ இசைக்கருவி ஏதாவது வாசிக்க  ,அல்லது கிளாசிகல் முயூசிக் ஏதாவது படிக்கிறாயா டியர் குட் கேர்ள் " என்று கேட்டேன்

                                "  ஆமாம், செல்லோ பேஸ் வயலின் வாசிக்கப் படிக்கிறேன் , அது சுமாராக வாசிப்பேன் "  என்றாள்  .

                             "    நல்லது கல்யாணி , அப்ப உனக்கு வெஸ்டர்ன் முயுசிக்கில் ஸ்கேல் என்று சொல்லுவார்களே அதுதான் இந்திய கீழத்தேயே சாஸ்திர இசையில் ஏறக்குறைய இராகம் என்கிறார்கள்,   கல்யாணி ஒரு ஸ்கேல் . அழகான மென்மையான உணர்வுகளை சுற்றி வளைத்து ஒரு சின்ன முடிச்சில் முடிஞ்சு உள்ளங்  கையில் கொடுக்கும் ஸ்கேல் , "  என்றேன் .

                                     அவளுக்கு மிகவும் சந்தோசமாய் இருந்தது, இடை இடையே நான் பேசும் நோர்க்ஸ் உனக்கு விளங்குதா என்று கேட்டுக் கேட்டுத் தான் அவளுக்கு விளங்கப்படுத்தினேன், அவள் தன்னோட பெயருக்கு என்னோட விளக்கத்தை அவளோட நண்பிகளுக்கு கூப்பிட்டு சொன்னாள்.  அவர்கள் அவளுக்கு கல்யாணி என்று அதிகம் பாவனையில் இல்லாத முழுப்பெயரில் வரும் பின் இணைப்புப் பெயர் இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதன் பின்  அவர்கள் என்னை ஏதோ படிச்ச ஒரு பண்டிதர் போல பார்த்தார்கள். நான் ஜன்னலுக்கால ரெயின் இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். கல்யாணி மறுபடியும்

                                 "  மிகவும் மிகவும் மிகவும் நன்றி , ஒ இவளவு அர்த்தம் இருக்கா என் பெயருக்கு , மிகவும் சந்தோசம் , நான் இன்று அம்மாவுக்கும் சொல்லுவேன்,ஹ்ம்ம்  மம்மா ஆல்ரி சோத்  தில் மே டென் மீனிங்கன் , மென் ஜெய் வியத்  இக்கி, மென் மம்மா ஆல்ரி சோத்  தில் மே டென் மீனிங்கன், நான் ஒவ்வொருநாளும் டையரி எழுதுவேன் ,,இதைக் கட்டாயம் இன்று விரிவாக எழுதுவேன், "  என்றாள்

                                   "  மம்மா ஆல்ரி சோத்  தில் மே டென் மீனிங்கன் , மென் ஜெய் வியத்  இக்கி  " என்று ஆரவாரப்பட்டு சொன்னதுக்கு  தமிழ் மொழிபெயர்ப்பு " அம்மா ஒருநாளுமே இந்த விளக்கம் சொன்னதில்லை, எனக்கும் ஏனென்று தெரியாது "  என்பது . கல்யாணி ,அதுக்குப் பிறக்கு ஒன்றுமே கேட்கவில்லை ஒருவித  திருப்தியில்,தன்னுடைய பெயருக்கு அர்த்தம் கண்டு பிடித்த நிறைவோடு இருந்தாள்...நான் அவளுக்கு நிறைய உதவி செய்தது போல இருந்ததாலும் , ட்ரைன் வேற ஒஸ்லோ நகர எல்லைக்குள் நெருங்கி விட்டதாலும்,  ,கடைசியாக.

                                  "   கல்யாணி, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா, உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பதில் சொல்லு,முடியாவிட்டால் சொல்ல விருப்பம் இல்லை என்று சொல்லு அதுவும் பிரச்சினை இல்லை "  என்றேன்,

அவளோ,,   "        நீ என்னைக் கல்யாணி என்று கூப்பிடுவதால் எத்தினை கேள்வியும் கேள் பதில் சொல்கிறேன்   "      என்று சிரித்தாள்.

   நான் கேட்டேன்

                        "   ,உன்னுடைய அப்பாவுக்கு என்ன பெயர் அவர் இப்ப எங்கே வசிக்கிறார், நீ விரும்பினால் இந்த இரண்டு கேள்விக்கும் பதில் சொல்லு,விருப்பம் இல்லை என்றால் சொல்லாதே " என்றேன்,

                                        அவள் கொஞ்சம் ஜோசித்தாள், மைக்கல் குரோஸ்  கைப் பையில் இருந்து லிப்டிக்ஸ் எடுத்து சொண்டில தடவினாள்.  என்னை நேராகப் பார்த்தாள், அணிந்து இருந்த லூயிஸ் வோல்தான் பிரெஞ்சு லெதர் சப்பாத்தைக் குனிந்து சரி செய்தாள்  . பிலடெல்பியா பின்ஸ் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள், கொஞ்சம் சரிந்து சந்தேகமாப் பார்த்தாள். எனக்கு கொஞ்சம் பயம் வந்திட்டுது. கல்யாணி சில செக்கன்களில்

                                 "  ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  என்னோட அப்பா எனக்கு ஒருவயதில் என்னை விட்டுப் போனவர்,, ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ,,இன்றுவரை  நானோ அம்மாவோ கண்டதில்லை,  ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  என்னோட அப்பாவின் பெயர் மா லி ங்  க...ம்   இல்லை  மகா லின் கம் ,,,யெஸ்  மகாலிங்கம் ...அதுதான் பெயர் ,  ஹ்ம்ம்  மம்மா சோ தில் மே, மென் ஜெய் வியத்  இக்கி,  ஆனால் நோர்வேயை விட்டுப்போட்டு அப்பா கனடாவுக்கு போய்விட்டாராம் என்று அம்மா ஒரு முறை சொன்னா,  " என்று சொன்னாள்.

                           "   ஒ அப்படியா,,மகாலிங்கம் என்பது தமிழ் பெயர் தான் ,அவர் இலங்கை தமிழர். இந்தப் பெயர் அவரின் குடும்பப் பெயராக இருக்கலாம் , ,ஹ்ம்ம் .... அதனால் தான் உனக்கு கல்யாணி என்று பின் இணைப்பு பெயர் தமிழில் வைத்து இருக்கிறார், அது சந்தோசமான விசியம் தானே . " என்றேன் .

                    அதுக்கு அவள் உற்சாகமாகப் பதில் சொல்லவில்லை ,சில நேரம் பழையபடி மகாலிங்கம் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்பாளோ என்று நினைக்க,அவள் கேட்கவில்லை,அந்தப் பெயரை அவள் அதிகம் விரும்பவில்லை போலவும் முகத்தை வைச்சுக்கொண்டு இருந்தாள்.  ஆனால்

                        "  இசபெல்லா என் அம்மா வழி முப்பாட்டியின் பெயர், அவர்கள் தான் ஒரு காலத்தில் நோர்வேயின் முதல் வங்கியான ஹன்டேல்ஸ் பாங் என்பதை தொடக்கிய முன்னோடிகள் "

               என்று சொன்னாள். அதைக்கேட்க நான் முன்னமே நினைச்சது போல அவள் ஒரு உயர் குடி நோர்வே மக்களின் சாயலில் அவள் இருந்தது உறுதியானது,

                              ட்ரைன் இப்ப ஒஸ்லோ எல்லைக்குள் வந்து சன நெருக்கடியான உயர்ந்த கட்டிடங்கள்  தலை நிமிர்த்தும் ,மேம் பாலங்கள் மிதக்கும் பிரதேசம் ஊடாக மெதுவாக, கொஞ்சம் குலுங்கி, அடிக்கடி கிரிச் கிரிச் என்று தண்டவாளப் பாதைப்  பிரிவுகளில் உரசிக்கொண்டு  வளைந்து நெளிந்து ஓடத் தொடங்க ,  கல்யாணி கடைசியாக சொல்வது போல

                            "    நான் ப்ளாக் வைச்சு இருக்கேறேன் அதில  குருவிகள், பறவைகளின் கூடுகளை மட்டுமே படம் எடுத்துப் போடுவேன் ,கூடுகளின் பெறுமதி எப்பவுமே பறவைகளுக்கு புரிந்து கொள்ள முடிகிற ஒரு நினைவின் வழித்தடத்தில் வழிமாறிப்போகாத அனுபவம்,  ,நிறையப்பேர் அந்தப் கூடுகளின் படங்களை ரசிப்பார்கள் , ஆனால் நான்  எதுவுமே எப்பவுமே எதைப்பற்றியுமே அதில் எழுதியதில்லை இன்றுவரை , அதில் இன்றைய சம்பவத்தை எழுதப் போகிறேன், என்னுடைய ப்ளாக்குக்கு பெயரும் இல்லை, என்னோட படம் மட்டுமே அதில இருக்கு,,"

                      " ஒ அப்படியா,, இதை நானும் முதலிலேயே நினைச்சேன்  ஆட்காட்டி ஆட்காட்ட்டி நான் பத்து முட்டை இட்டேன்  கதை போல  வரும் என்று,,,,சரிப்பா  ஏன் உன் பிளக் இக்கு  பெயர் வைக்கவில்லை கல்யாணி , " என்று கேட்டேன் .அதுக்கு அவள்,,,

                               "   என்னோட இன்றைய நாள் வரையான வாழ்கையில் என்னுடைய அரைவாசி வெற்றிடமா ,,பெயர் இல்லாமல் தானே இருக்கு, ஹ்ம்ம்,,இருந்தது ,,இன்று அந்த பெயருக்கு அர்த்தம் கண்டு பிடித்தேன்... ஆனாலும் ஒரு வெறுமை வெளியில் சில இடங்களில் எல்லைகளை மீறாத  சிந்தனையுடன் இருந்தாலும் பல சமயம்  எந்த சிந்தனையுடனும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது மிகவும் கடினம் என்று "  சொன்னாள்

                                    "   அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை,,உலகத்தில் உன்னைவிட சந்தர்பங்கள், வசதிகள், வாய்ப்புக்கள் இல்லாமல் கோடிக்கணக்கான டீன் ஏஜ் பிள்ளைகள் இருக்கிறார்கள்,உன் கைகளை விட்டுப்போன, அல்லது கை கழுவி விட்டுப் போன சம்பவங்களை நினைப்பதால் கூட ஒரு நன்மையையும் இல்லை, அதனால் உன்னிடம் கைவசம் இருப்பதை வைச்சுக்கொண்டு முன்னேறு  "

                        என்று சொன்னேன். இதைச் சொல்லிப்போட்டு என்னை நினைக்க எனக்கே ஒரு மாதிரி இருந்தது. அடுத்தவர்கள்  தலையில தத்துவ மழையை சரிச்சு ஊத்துவது எவளவு இலகுவா இருக்கு பார்த்திங்களா

                                   இசபெல்லா கல்யாணி ,கொஞ்சம் என்னோட அறிவுரையை ஆர்வமாகக் கேட்டாள். இதுவரைக்கும் கேட்காத அவளின் இதயத்தின் பகுதியில்  இருந்து யாரோ அவளுக்கு மிகவும் வேண்டியவர்கள் சொல்வது போல நெருக்கமாக உணர்ந்து உள்வாங்கிக் கேட்டாள், கேட்டுப்போட்டு

                             "   என்னோட ப்ளக் , அதுக்கு ஒரு பெயர் வைக்கவேண்டும் ,,நீயே ஒரு பெயர் சொல்லேன், உன் நினைவாக இருக்கட்டுமே "  என்றாள் .

                        "  கல்யா மாலி என்று வை,,உன் பெயரும்,,உன் பாதியான உன் தந்தையின் பெயரும் போல இருக்கும் " என்று நான் சடார் என்று சொன்னேன்,

                                      "  அதெப்படி சடார் என்று உனக்கு இந்தப் பெயர் நினைவு வந்தது   " என்று கேட்டாள்

                                 "  எனக்கு எல்லாமே சடார் சடார் என்று   தான் வரும் ,நிதானமா ஆழமா ஜோசித்தால் மண்டைக்குள்ள இருந்து ஒன்றுமே வராது "

                                       என்று சொன்னேன், இசபெல்லா கல்யாணி  என்னைக் கட்டிப்பிடிச்சு நன்றி சொல்லிப்போட்டு,அவளோட நண்பிகளுடன் பிளிண்டரன் யூனிவெர்சிட்டி ஸ்டேஷனில் இறங்கிப் போய் விட்டாள்.

                             ட்ரைன் அரை மணித்தியாலம் நான் இருந்த பெட்டியில் அதிகம் யாரும் இல்லாமல் வெறுமையாக ஓடிக்கொண்டு இருந்தது, மறுபடியும் பெரிய ஒரு மழைக்கு கறுப்பு முகில்கள் ஒத்திகை பார்க்கத் தொடங்கவே ஜன்னலில் பொட்டு பொட்டு என்று பெரிய மழைத் துளிகள் குட்டத் தொடங்க, ட்ரைன் நிதானமாக ஓடிக்கொண்டு இருக்க, அதற்கு சமாந்தரமாக   என் நினைவுகளில்

                                          "  எதிர்மறையான எல்லாவற்றையும் நீங்கள் கடந்து சென்றால் நீங்கள் அடைய வேண்டிய இடத்தை அடைவீர்கள். அங்குதான் எதிர்மறையானவை சந்திக்கின்றன. கலந்து மறைகின்றன "

என்ற சத்குரு ஓஷோ சொன்ன வார்த்தைகள்  நினைவுகளோடு ஓடிக்கொண்டு இருந்தது.

.
29.05.15