Sunday 9 August 2015

இன்னுமொரு கதை பிறந்தது...!

மனிதர்களின்  அன்றாட  வாழ்கை  இயல்பாகவே  இருக்கும். ஆனால்  கொஞ்சம்  கவனித்துப்  பார்த்தால்  அதுக்குள்ளே  ஒரு  அலாதியான  கதை  இருக்கும்.  அதை  அமர்களமாக  எழுதுவதே  ஒரு  அனுபவம்தான் . மற்றப்படி    இது உண்மைக் கதை இல்லை  என்று சொல்லவும்  முடியவில்லை , முழுவதும் கற்பனை  என்று சொன்னாலும்  சொதப்பும் . முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் வரும்  உண்மை மனிதர்களின் கற்பனைக் கதை போல...

                                                  சின்ன வயசில எங்கட வீடுக்கு கிட்ட கவிஞ்சர் கந்தப்பு எண்டு ஒரு கவிஞ்சர் இருந்தார், அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர், எப்பவும் எட்டு முழ வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு, மேல ஒரு பவுன் பொத்தான் வைத்து தைச்ச நசினல் போட்டுக்கொண்டு,கழுத்தைச் சுற்றி உத்தரியம் போல ஒரு பச்சைச் நிற குஞ்சரம் தொங்கும் சால்வை போட்டுக்கொண்டு,நெற்றியில் சடையப்ப வள்ளல் போல சந்தனப் பொட்டு, அதன் நடுவில் சின்ன குங்குமப் பொட்டு வைச்சுக்கொண்டு அவர் பார்க்கிறதுக்கு காளமேகப்புலவர் போல தான் இருப்பார். அவரை யாரவது கவிஞ்சர் எண்டு சொன்னால்க் கடுப்பாகி

                               " நீவீர் அறியீர் என் புலமை,யான் ஒரு தமிழ்ப் பண்டிதர், பண்டிதர் பரீட்சை ஒரே தரத்தில்ச் சித்தி எய்தியவன்,அய்யன் பண்டிதமணி சி .கணபதிப்பிள்ளையின் மதிப்புக்கு உரிய முதன்   மாணாக்கன்  "  
                                       
                                          எண்டு சொல்லுவார்.  கழுதைக்கும்  கோவேறு கழுதைக்கும்   சொல்லும்படியாக  வித்தியாசங்கள்   கண்டுபிடிக்க  முடியாத   மனிதர்கள்  வாழ்ந்த  எங்கள்  ஊரில்  கவிஞ்சருக்கும் பண்டிதருக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் ஊருக்குள்ள அதிகம் பேர் இருந்ததால், அவர் ஒரு தமிழ் அறிஞ்சர் எண்டு மட்டும் எல்லாருக்கும் தெரியும். 

                                   நான் இனி சொல்லப் போறது அவர் எழுதிய " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற கொஞ்சம், அவர் " கேட்போர்க்கு இன்னாயாப்பிற்று ஆதல் பழித்த மொழியான் இழுக்கம் கூற ,தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் "  என்ற தொல்காப்பிய இலக்கணப் புலமை சார்ந்த துறையில் இருந்து இறங்கி வந்து எழுதிய வில்லங்கமான புத்தகம் பற்றியும், கடைசீல அந்தப் புத்தகம் அவர் சொந்த இல்லற வாழ்க்கைக்கு ஆப்பு வைத்த சம்பவங்கள் உள்ள கதை.

                                            அவர் எழுதிய அந்த புத்தகம்,காம சூத்திரா, கொக்கேகம், திருக்குறளின் காமத்துப்பாலின் அடிபடையில்,கஜுரோகோ கருங்கல் சிற்பங்களின் துணையுடன் செய்யுள்களுக்கு விளக்கமும்,கொஞ்சம் செயல் விளக்கமும் ,அதிகமா இல்லற வாழ்க்கைத்துணையின் சிறப்பும்,பெண்ணின் பெருமையும் " பெண்கள் நிமிர்ந்து நடந்தால் யாரையோ பார்க்கிறாள்! குனிந்து நடந்தால் எதையோ நினைக்கிறாள்! சிரித்து பேசினால் அவனோடு "எதோ" அவளுக்கு! சிரிக்காமல் பேசினால் துக்கை " என்று பெண்களின் அங்க இலட்சணம்கள் அதில இருந்தாலும்,அந்த புத்தகத்தைக் கவிஞ்சர் கந்தப்பு தானா எழுத வேண்டும் என்றுதான் அது வெளிவந்த நேரம் எல்லாரும் கதைத்தார்கள்,

                                            குறிப்பாகப் பெண்கள் கதைத்தார்கள்,ஆனாலும் அதை ஒரு தமிழ் அறிஞ்சர் எழுதியதால் கட்டாயம் அதில விசயம் இருக்கும் எண்டு தான் சொன்னார்கள்,அதையே நான் எழுதி இருந்தால்,கட்டாயம் " இந்த விடுகாலி எழுதியதால்  அதில விஷம் தான் இருக்கு " எண்டு சொல்லியிருப்பார்கள்.எப்படியோ அந்த புத்தகத்துக்கு இருட்டினாப் பிறகு பல வீடுகளில் வெளிச்சம் கிடைத்தது என்பது உண்மை. 

                                           அதுக்கு முதல், காமசூத்திராவின் எளிமையான விளக்கம் போல,அதுக்கு வாத்தியாயனரின் சித்தப்பு  போல இருந்த பண்டிதர் கந்தப்பு  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்று  எழுதிய புத்தகம் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இங்கே இல்லாததால், முதலில் கவிஞ்சர் கந்தப்புவின் பெர்சனாலிட்டி ,அவரின் " காதலர்ப் பிரிந்தோர் புலம்ப பெயல் கனைந்துன் கூதிர் நின்றன்றால் " என்ற நெடுநல்வாடைத் தமிழ் அறிவின் வீச்சு, அவர் கழுத்துக்கு ,தனிப் பாடல்த் திரட்டாகி " கரையோட்ட மாக மரக்கலம் போட்டுனைக் காணவந்தாற் திரை போட்டிருந்தனை யேலேல சிங்க சிகாமணியே.." என்று அந்த சிங்கத்தின் பொஞ்சாதிக்கு, எங்கள் ஊரில இருந்த ஒரே ஒரு " பிரஸ் " என்ற அச்சுக்கூடம் வைத்து இருந்த பரமானந்தம் வலை வீசியது  பற்றி கொஞ்சம் சொன்னால்தான் உங்களுக்கு கதை விளங்கும்.

                                        கவிஞ்சர் கந்தப்பு மரபுக் கவிதை தான் எழுதுவார்,அடி ,தளை,சீர் தட்டாமல்,வெண்பா எல்லாம் " வா வே தே கு ஆயிடைத் தமிழில் " அட்டகாசமாக எழுதுவார், யாரவது செத்துப்போனால் அவர்களின் முப்பத்தி ஓராம் நாள் திதிக்கு வெளியிடும் கல்வெட்டை அறுசீர் நெடிலடி வெண்பாவில் ,இறந்து போன அந்தக் குடும்ப தலைவன்,அல்லது குடும்பத் தலைவி பற்றி, அந்த குடும்பம், அதன் நல்விழுமியங்கள் எல்லாம் வைச்சு வாட்டு வாட்டு என்று புகழ்ந்து எழுதுவார்.

                                   இறந்து போன மனிதர்கள் பற்றியதால் யாரும் அதன் உண்மைத்தன்மை பற்றி அலட்டிக்கொள்ளமாட்டார்கள். சிறாப்பர் குமாரசாமி ஐயா செத்து அவரின் கல்வெட்டில் அவரின் நாலு பெண் பிள்ளைகளைக் கட்டிய, ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல எண்டு குடியும் குடித்தனமுமா இருந்த நாலு நிறை  தண்ணிச்சாமி மருமகன்களையும் ,ஏதோ தாயுமான சுவாமி ரேஞ்சுக்கு புகழ்ந்து எழுதி இருந்தார்,எப்பவும் போல யாரும் அலட்டிக்கொள்ளவில்லை..

                                     மலையகத்தைப் பற்றி கவிஞ்சர் கந்தப்பு ஒரு மரபுக் கவிதைத் தொகுப்பே எழுதி இருந்தார்,அதுக்கு காரணம் அவர் அங்கே தான் தமிழ் ஆசிரியரா கனகாலம் படிப்பித்து இருக்கிறார், " குறிஞ்சி முகடுகள் " என்ற அந்த தொக்குப்பில் நிறய ,

                                       " மலை மகளின் எண்ணம்,எழிலாக அலை பாயும் வண்ணம், நதியோடு நாணல்கள் இசை பாடும்  வடிவம் நிழல் தந்த மலையகம் "  

                                           எண்டு விரிவாக மத்திய மலை நாடு,அதன் கம்பளம் விரித்த தேயிலைத் தோட்டங்கள், வழிந்தோடும்  ஆறுகள், ஹட்டன் சமவெளி, போகம்பறைக் குன்றுகள், நானு ஓயா விளிம்பில் நுவரெலியாவின் குளிர், டயகம,  திஸ்பன இல் தேயிலை பிடுங்கும் மக்களின் அவலம், ,மொனறாகலையின் மயில்கள் என்று நிறைய எழுதி இருந்தார்,மத்திய மலை நாடு பற்றி யாழ்பான மக்களுக்கு விளங்காததால் அதிகம் அதையும் கவனிக்கவில்லை.

                                           இலங்கையில்  மயில்கள்  அதிகம்  வசிக்கும்  இடம் மொனராகலை . சிங்களத்தில்  மொனறா  என்றால்  மயில். எனக்குத் தெரிய  மயில்களை  அழகா  உள்ளே  இறங்கி  உள்வாங்கி  மரபுக் கவிதையில்  எழுதியவர்  கவிஞ்சர் கந்தப்பு  என்று  நினைக்கிறன். ஆனாலும்  அவர்  வீட்டில் அவரோடு  வாழ்ந்த  ஒரு தோகை இளமையிலை அவர்  ஒரு கட்டத்தில்  இழந்தது  சோகம்  தான்.

                               " கந்தப்பு அங்கேயும் யாரும் ஒரு தோட்டக் காட்டுப் பொம்பிளையை வைச்சு இருந்து இருப்பார்,அதால உருகி உருகி எழுதுறார் போல "

                                        எண்டு நினைத்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை..

                                          கந்தப்பு நிறைய தமிழ் மொழி தழைக்க வேண்டும் என்ற சமூக அக்கறை உள்ளவர்.தமிழ் நாட்டு முதல் அமைச்சர் எம்,யி ஆர் இறந்தபோது ,அவர் ஈழ விடுதலைக்கு ஆதரவா இருந்ததால்,யாழ்பாணத்தில அனுதாப அலை கொஞ்சம் "ஓவராக" அடித்தது !  இயக்க ஆதரவு மக்கள்  வாழை ,தோரணம் கட்ட,எங்கள் ஊர் மக்கள் திலகத்தின் அதிதீவிர ரசிகர்கள் , பெரிய தென்னை மரத்தையே புடுங்கிக்கொண்டு வந்து சந்தியில் நட்டுப்போட்டு,சந்தியில் இருந்த பாரதியார் சிலையை தூக்கிப் போட்டு அதில அவர்களின் "இதயக் கனி " சிலையை வைக்கப் போவதாகப் பயமுறுத்த நிலைமை கொஞ்சம் பொன்மனச் செம்மல்  படங்களில் வரும்  வாள்ச்  சண்டை, குஸ்தி , கைகலப்பு , சீலடி சிலம்படி  போல நடக்கப் போகுதுபோல இருந்தது. சவுகார் ஜானகி  வந்து காலில் விழுந்து,  கிளிசரின் வழிய அழுது ,குளறிக்  சண்டையை நிப்பாட்டுற மாதிரி  இல்லாமல் , அந்த நேரம் கவிஞ்சர் கந்தப்பு வெகுண்டு எழும்பி

                            "சினிமா நடிகனுக்கு சிலை வைக்கும் ,சிற்றுனர்வுள்ள சிற் எறும்புகளை......" எண்டு கவிதை எழுதி,"மகா கவி பாரதி சிலையில் கை வைத்தால் ,சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தடுப்பேன் "

                                 எண்டு பீதியக்கிளப்ப ,அந்தக் களேபரம் அதோட அமுங்கிவிட்டது!.

                               கவிஞ்சர் கந்தப்புவின் முக்கியமான இன்னுமொரு ஆளுமை மேடை நாடகம், சங்கர சாஸ்திரிகளின் தமிழ் நாடகங்கள்,ரகுவம்ச காவியம்,  தமிழில் மொழி பெயர்த்த சில ஆங்கில நாடகம் எல்லாம் பழக்கிப் போடுவார். " ஏழு பிள்ளளை நல்லதங்காள் " நாடகம் அடிக்கடி எங்கள் ஊர் வாசிக்க சாலையில் போடுவார், அம்மா அந்த நாடகம் தொடக்கம் மட்டும் விரும்பி பார்பா, நல்லதங்காளின் அண்ணிக்காரி நல்ல தங்காளைக் கொடுமைப் படுத்த தொடங்க, அவா

                        " இனிக் கந்தப்பு பழையபடி அவளைப் போட்டுப் படுத்தாத பாடு எல்லாம் படுத்தப் போறான் "

                                          எண்டு வாயில முனு முணுக்கத்  தொடங்குவா . அப்படி அந்த நாடகத்தின் உண்மைக் கதையைக் கொஞ்சம் உணர்ச்சி ஆக்கி போடுவார். ஒவ்வொரு பிள்ளையா நல்லதங்காள் கிணற்றுக்க எறிய தொடங்க அம்மா அந்த நாடகம் அதுக்கு மேல பார்க்க மாட்டா,எழும்பி வந்து வீடில ஹோல் மூலையில் இருந்து அழுவா,

                          " கந்தப்பு நெஞ்சில இரக்கம் இல்லாமல் அந்த சின்ன பால் குடிப் பாலகங்களை ஒவ்வொன்றா கிணத்துக்கு எறியுறானே "

                            "  அது  நாடகம்  அம்மா "

                             "   என்னடா  நாடகம்,,,பால்குடிப்  பிள்ளைகளை  கிணத்துக்க  தள்ளி  விழுத்துறது  என்ன  நாடகம் "

                                    "  அதுதான்  நாடகம்,,நீங்க  மிச்சம்  பாக்காமல்  வந்து  போட்டு  கந்தப்புவை  ஏன்  திட்டுறிங்க "

                                    "   பெத்த  வயிறுக்கு  தான்  தெரியும்..அதன்  வேதனை  நீ  இளந்தாரி  உனக்கு  எங்க  இதெல்லாம்  விளங்கப் போகுது "

                                    எண்டு என்னவோ ஏழு பிள்ளளை நல்லதங்காள் நாடகம் கந்தப்பு எழுதின சொந்த கதை போலவும் ,கந்தப்பு அந்த பிள்ளைகளைக் கிணத்துக்க தள்ளி விழுத்துற மாதிரியும் அவரைப் பேசுவா. உங்களுக்கே தெரியும் நல்லதங்காள் ஒவ்வொரு சின்ன பால்குடிப் பாலகங்களை ஒவ்வொன்றா கிணத்துக்கு எறியிறதுக்கு அந்த நாடகத்தின் கதையில் ஒரு லொஜிக் இருக்கு எண்டு .அதை என்னோட  அம்மாவுக்கு சொன்னா அவாவுக்கு விளங்காது.

                                 வாசிகசாலையில், கந்தப்பு இயக்கி,அவரே அதில மார்க் அந்தோனி வேஷம் போட்டு நடித்த ஜுலிய சீசர் நாடகத்தில் ஒரே ஒரே முறை அம்மாவுக்கு தெரியாமல்,கிளியோபற்றா  என்ற சீசரின் மனைவியா நானும் நடித்து இருக்றேன், நான் பொம்பிளை வேஷம் போட வேண்டி வந்த இடக்கு முடக்கான சம்பவம், நாடகத்தில் சீசர் கொல்லப்பட நெஞ்சில அடிச்சு பதறி ஒப்பாரி வைக்க, மார்பு பெண்கள் போல இருக்க எண்டு கந்தப்பு கொண்டுவந்து தந்த பிறசியருக்க வைச்சு இருந்த சிரட்டை கழண்டு விழுந்தது,

                           அந்த நாடகத்தின் இடையில் பொம்புளை வேஷத்துடன மேடையை விட்டு இறங்கி மூத்திரம் பெய்ய அம்மசியா குளக்கரைக்கு இருட்டில பதுங்கி பதுங்கிப் போக, என்னைப் பதுங்கி பதுங்கி பின் தொடர்ந்து வந்த ஒரு உள்ளூர் ரோமியோ என்னை இருட்டில கற்பழிக்க முயட்சிதது,அதில நான் கொஞ்சம் புத்திசாலிதனமாக தப்பியது,பொம்பிளை வேஷம் போட்டு அதில உணர்ச்சிப் பிளம்ப்பா நடித்தது அம்மாவுக்கு தெரியவர வீடில சண்டை தொடங்கியது,,,,அதை ஒரு தனிக் கதையா எழுதுறேன்,,

                       இப்ப கந்தபுவின்  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி புத்தகம் எப்படி குழப்பம் அவர் குடும்பத்தில் ஏட்படுத்தியது எண்டு சொல்லுறேன்....

                                             வாக்குக் கண்ணால அங்க பார்த்துக்கொண்டு இங்க கதைக்கும் பரமானந்தம் வைத்து நடத்திய சில்லறைக்கடை  சைஸ் உள்ள ஒரு அறையில் இருந்த பிரசுக்கு அவரோட மனைவி பெயரில் " தனலக்ஸ்மி " பதிப்பகம் எண்டுதான் பெயர் இருந்தது. ஆனால் பரமானந்தம் தீவிர கொமின்ஸ்ட் கொள்கையில் இருப்பவர், எளிமையான, மெலிந்த மனிதர் வியட்நாமின் தந்தை ஹோசி மின் போல தாடி வைச்சுக்கொண்டு எப்பவும் பிரஸ் வாசலில் ஒரு கதிரையில் இருப்பார், சில நேரம் பிரிண்டிங் மிசினில காலால கோபமா அடிச்சு அமதிக்கொண்டு

                           ”நான் அடிக்கும் ஒவ்வொரு அடியும் லத்தீன் அமெரிக்காவையும் மூன்றாம் உலக நாடுகளையும் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அடி.”

                            எண்டு சொல்லுவார்.

                                          அவரின் வளர்ந்த மகள்கள் இருவர் தான் உள்ளுக்க புரூப் பார்ப்பது, அவரின் மூத்த மகள் அகிலாண்டேஸ்வரி " பிரமிளா " என்ற பெயரில் புதுக் கவிதை எழுதி இருக்கிறா. மகள்கள்தான் அச்சுக் கூடத்தை இயங்க வைப்பதே ,எழுத்துகளைத் தேடி எடுத்து அச்சுக் கோர்த்த புரூப் பக்கங்களை ஒரு தட்டில இடை வெளிகளில் சின்ன சின்ன இரும்பு துண்டு வைச்சு சுத்தியலால் அடிச்சு,நிமித்தி ,சரியாக்கி , லிண்டன்பேர்க் காலால அமத்துற ஜெர்மன் பிரிண்டிங் மிசினில பிளேட் ஏத்தி கறுப்பு மை தடவி தடவி முக்கித் தக்கி பிரிண்டிங் பண்ணுவார்கள், முதல் பிரின்டைக் பரமானந்தம் கையில கொடுக்க அவர் அதை வடிவா அவரோட வாக்குக் கண்ணால பல கோணங்களில் பார்த்து திருத்தும் சொல்லுவார்.

                                               கவிஞ்சர் கந்தப்பு அவர் வெண்பா எழுதித்  திதிக்கு வெளியிடும் கல்வெட்டுக்கள் பலது  தனலக்ஸ்மி  பதிப்பகதில் அச்சு ஆக்கி வெளியிட்ட பழக்கத்தில் ஒரு முறை  " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற புத்தகம் எழுதிக்கொண்டு இருப்பதா சொல்ல,   பரமானந்தம்

                                " அப்படியே சங்கதி,அட்ரா சக்கை எண்டானாம் , எண்டு சொல்லி " அது என்ன புத்தகம் " எண்டு கொஞ்சம் சந்தேகமாக் கேட்க,  

                                        " வள்ளுவர் திருக்குறள் அதிகாரங்களையும், அதிகாரத்தினுள் குறட்பாக்களையும் அமைத்துள்ளதற்கு உரையாசிரியர் பரிமேலழகர் மிக அழகாய்த்  தருகின்ற குறளைப் பொறுத்தவரை அதன் அதிகாரங்களை’ , அதன் இயல்களையும்  இருமடி  அமைப்பு என்று கொண்டு, இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி  என்ற என்னுடைய புத்தகத்தை ஆராயலாம், அவ் வகையே அதை யாக்கின்றேன் " !

                                                   எண்டு கந்தப்பு சொல்ல,

                               " அதெல்லாம், எனக்கு விளங்காது பண்டிதரே ,  புலவர் எழுதும் புத்தகம் பொருள் பதிந்தது, அது என்ன விடயம் உள்ள புத்தகம் எண்டு ஆழம் பார்த்து அறிய வேண்டிய அவசியம் இல்லை ,

                                     " இல்வாழ்வான்  என்பான்  இயல்புடைய  மூவர்க்கும்  நல்லாற்றின்  நல்ல  துணை  அது  தெரியுமோ  உனக்கு    "

                                      "  இது  தெரியாது  இதென்ன  புலவரே  "

                                   "  இது  தெய்வப்  புலவனின்   திருக்குறள்  "

                                "  அதார்  அந்தப்  பிறவி  தெய்வமகன்  நடிச்ச  எம் யி  ஆர்  அவரோ  "

                                        "  அடி செவிட்டில ,,இதுதான்  உன்னோட  அறிவுலகம்  "

                                     "  நான்  சும்மா  முசுப்பாத்திக்கு  சொன்னேன்,,நானும் திருக்குறள்  படித்து  இருக்கிறேன்  புலவர் "

                                     "    அதில  என்ன  படிசுக்  கிழிசாய்  அதை  சொல்லு  பார்ப்பம் "

                                      "     திருக்குறளில்  பல  முரண்பாடு  இருக்கு "

                                      "அதென்ன  சொல்ல  பார்ப்பம்  உன்னோட வண்டவாளம்  எள்வளவு  தூரம்  தண்டவாளம்  ஏறிப்  போகுது  எண்டு  பார்ப்பம் "

                                        "   தோன்றித் புகழோடு  தோன்றுக  அகுதிலார்  தோன்றலின்  தோன்றாமை  நன்று  என்ற  குறளின்  விளக்கம்  என்ன  புலவரே "

                                     "  உனக்கு  எப்ப  தகுதி  திறமை  இருக்கோ  அப்ப  நீயாய  உன்னை  வெளிப்படுத்து  ,,அதுக்கு  முதல்  சத்தமில்லாமல்  இரு,,அதுதான்  அர்த்தம்,,உனக்கு  எழுதினது  போல  இருக்கு  இல்லையா "

                                     "  இல்லை,,அதுக்கு  அர்த்தம்  வர்கமுரண்பாடு  ,,பிறந்தால்  நல்ல  உயர்வான  வசதியான  குடும்பத்தில்  பிறந்தவர்கள்  தான் வசதிகளை  அனுபவிப்பார்கள்  ,,என்றும்  பொருள்  கொள்ள  முடியும் "

                                    "    உதென்ன கண்  தெரியாதவன்  யானைத்  தடவிப்பார்த்து  உலக்கையும்  உரலும்  போல  இருக்கு  என்ற  கதை போல  கிரந்தம்    கதைக்கிறாய் ,,வர்க்க முரண்பாடு  அதென்ன  அது  யார்  சொன்னது "

                                     "   கார்லஸ்  மார்க்ஸ்  அவரோட  மூலதனம்  புத்தகத்தில்  இதை  எல்லாம்  விரிவா  எழுதி இருக்கிறார் "

                                    "   அது  யார்  கோரால் மார்குஸ் "

                               " அவரும்  ஒரு  தெய்வப்புலவர்  தான்..ஜெர்மனியில்  பிறந்தவர் "

                                    "  உந்த  விழல்  கதையை  விடு  பரமானந்தம் ,,இப்ப  நான்  எழுதிய  புத்தகத்தை  கதை "

                                  "  அது  உண்மைதான்  புலவர், உந்தப்  புத்தகதிண்ட  பெயரைக்  கேட்க நல்லா  இருக்கே  "

                                       " ஹ்ம்ம்,,,ஆழமா  அலசி  எழுதி  இருக்கிறேன்   "

                                    "  அப்படியா ,,அது  நல்லா தான்  இருக்கும்  "

                                "ஹ்ம்ம்,,,புத்தகம்  வந்த  கையோடு  ஒரு  உதறு  உதறும்  இருந்து பார்    "

                                "   அப்பிடியே,,அப்ப  கட்டாயம்  நான்  தான்  அதையும்  பதிப்பிக்க  வேணும் "

                                      "  அதுக்குதான்  நானும்  ஜோசிகிறேன்.. "

                                  "    என்ன  ஜோசிக்க  இருக்கு  இதில  அதை நான் தான் வெளியிடுவேன் "

                              எண்டு ஒற்றைக்காலில் நிக்க,கடைசியில் அவர்தான் வெளியிட்டார், அந்தத்  தொடக்கம் தான் கவிஞ்சர் கந்தப்புவின்  இல்லற வாழ்க்கைக்கு அலுப்புக் கொடுக்கத்  தொடங்கியது.....

                                         எப்படி எண்டு சொல்லுறேன், தமிழ் ஆசிரியரா வேலை செய்து, வயதாக முன்னரே நடு வகிட்டில் நரை தட்ட முதலே ஓய்வு பெற்ற கந்தப்பு அதிகம் அவரின் இலக்கிய நண்பர்களின் இலக்கிய விவாதம், கோவிலில் கந்தபுராண படனம் சொல்லுறது,நாடகம் போட ஒத்திகை பார்க்கிறது, திருத்தொண்டர் திருச்சபை எண்டு ஒன்று உருவாக்கி அதில வளரும் பிள்ளைகளுக்கு சைவ சமயத்தின் அறம் சார் உண்மைகளை வகுப்பு வைச்சு சொல்லிக்கொடுப்பது ,வீராளி அம்மன் கோவிலில் இருவத்தி அஞ்சுநாள் திருவிழா தலைமை தாங்கி நடத்துவது, எண்டு எப்பவும் நேரத்தைக் காலில கட்டிக்கொண்டு கலாச்சார சூழலையே சுவாசித்து ஓடித் திரிவார்.

                                        அதனால புத்தகம் அடிச்சுக்கொண்டு இருந்த நேரம், வீட்டில பொம்பிளைகளின் பிளவுஸ் தைச்சுக் கொடுக்கும்  தையல் வேலை செய்துகொண்டு  இல்லத்தை இனிமை ஆக்கிக்கொண்டு இருந்த அவரின் மனைவியைத் தான் அந்த புத்தகம் எப்படி வருகுது எண்டு பார்க்க பரமானந்தத்தின் " தனலக்ஸ்மி " பதிப்பகதுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்,அந்த மனுசியும் அடிக்கடி போய் புத்தகம் எப்படி வருகுது எண்டதை ஆர்வம் இல்லாமலும், அங்கே வேலை செய்த பரமானந்தத்தின் பிள்ளைகளுடன் அதிகம் ஆர்வமாயும் எப்பவும் பழகிக்கொண்டு இருந்து இருக்கிறா.,

                                     ,எப்படியோ அந்தப் புத்தகம் வெளிவந்து சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமா, பரமானந்தம் அந்த தையல் டிச்சருக்கு என்ன பரம ஆனந்தத்தைக் காட்டினாரோ தெரியாது ,அல்லது " இல்லற வாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி " என்ற புத்தகம் எழுதிய கந்தப்புக்கு தன் இல்லறத்தை இனிமை ஆக்க தெரியாமல் இருந்ததோ எண்டு எனக்கு தெரியாது.  
                           
                            ஒரு நாள்... 

                                            வீராளி அம்மன் கோவிலில் வேட்டைத் திருவிழா நடந்து கொண்டு இருந்த அன்று பின்னேரம், அம்மன் ஆவேசமாக வேட்டை ஆடி முடிய, கோவிலில் நைவேத்தியம் வேண்டிக் கொண்டு வெளிய வந்த கவிஞ்சர் கந்தப்புக்கு, புண்ணியக் குஞ்சி கூப்பிட்டு வைச்சு சில விஷயம் சொல்ல..      இன்னுமொரு கதை பிறந்தது !

........தொடரும் ...........

.