Thursday, 8 October 2015

வெரோனிக்கா... (.01)

வெரோனிக்கா   கொல்லப்பட்டதோடு   இந்தக்  கதை  முடியும்.   அப்பட்டமான உண்மைகள்  வெளியே வராத  பல  சம்பவங்களில்  அதுவும்  ஒன்றாக  ஒரு  உறைபனி மாத  ஒஸ்லோவில்  சந்தடி அதிகம்  இல்லாத  ஒரு  புறநகரப்  பாதையில்  வெரோனிக்காகாவின்  ரத்தம் வெள்ளை உறைபனியில் மெல்ல  மெல்ல  வழிந்தோடி முடிந்தபோது வெரோனிக்கா இந்த உலகத்தைவிட்டுப்  போயே போய்விட்டாள் . அவள் நீண்ட குதிக்கால் சப்பாத்து தாறுமாறாகக்  கால்களில்  பின்னிப்பிணைந்து கிடந்தது .

                                                      வாழ்கையில் அர்த்தம்  இல்லை என்று சொல்லி  , அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை என்றும்  சொல்லி எழுதவேண்டியிருக்கும்  ஒருசில வாக்க்குத்தத்தங்கள் போல .  விரும்பினால்  முடிவில் அட  இவளவுதானா   என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ள வைக்க  முடியாத  ஒரு சம்பவத்தின்  தொடர்ச்சி நடந்தது .  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின், ஒரு காலகட்டத்தில் நடந்த கற்பனைக் கதை போல...

                                                     வார இறுதி நாட்களில் இரவிரவாகக்  கசகச எண்டு மனித நடமாட்டம் உள்ள ஒஸ்லோ நகரத்தின் ஒதுக்கத்தில், நெருக்கமான பழைய சுண்ணாம்புக்கல் கட்டிடங்களின் முடிவில் இருட்டின் நிழலில்  உள்ள, ட்ராம் வண்டி ஓடும் தண்டவாளம் வீதியின் நடுவில் போடப்பட்ட,  குறுகிய நடைபாதையின் இருமருங்கிலும்  கருங்கல்லுப்  பதித்த ,நூற்றாண்டுகளின் முன், உயர் குடிப் பிரபுக்களின் வில் வண்டிகளை இழுத்துக் கொண்டு வந்த குதிரைகள்  அவிழ்த்துக்  கட்டிய  சிற்றன்ன வாசல் போன்ற வீதி, 

                                             அந்த வீதியின் தொடக்க முடுக்கில்    கண்ணைக் கூசும் விளம்பரப் பலகையில் அழகனா இளம் பெண்ணின் சொண்டில நீல நிற நியோன் விளக்கு பத்திப் பத்தி ஓட, வாசலில் ஒரு மொத்தமான சிவப்பு மெழுகுதிரி கொழுத்தி வைச்ச " தெய்வீக சொர்க்க வாசல் " என்ற ஒரு  இரவு துகிலுரி நடன களியாட்ட கிளப்பில் பல வருடங்களின் முன் எடுபிடி போல வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை நாட்களில் பின் இரவில் இருந்து அதிகாலை வரை வேலை செய்தேன். 

                                 நிழலான சில விசியங்கள் நடக்கும் அந்த இடத்தில பணம் வரவாகவும், செலவாகவும் பாதாளம் வரையும் இல்லை அதுக்கு அங்காலை இருபது மையில் தள்ளியும் பாயும் போன்ற இடம் அது. தொல்வுக்காத்தா   என்ற  அந்த  வீதியின்  பெயரைச் சொன்னாலே உடம்பெல்லாம்  கிலேசங்ககள் பற்றிக்கொள்ளும் . விசுவாமித்திரரின்  தவத்தைக் குலைத்து நவீன ஊர்வசிகளும்  ரம்பைகளும்  அந்த  இடமெல்லாம் இரவோடு இரவாக இருட்டு விடியமுன் தங்களையே கொடுக்குமிடம் .

                                         அந்த கிளப்பில் வேலை செய்த  இரவு ராணிகளுக்கு சொந்தத் தாய்மாமன்  போலப் பாதுகாப்பு கொடுப்பது, அளவுக்கு அதிகமான வெறியில பெண்களுடன் அளவுக்கு அதிகமான மன்மத அம்பு விட்டு ,கிடைத்த இடைவெளியில் சந்தனம் தடவி  சேட்டை விடும் பெருங்குடிக் கணவான்களை செத்த எலியைப் போல இழுத்து ரோட்டில போடும் ,சில நேரம் அந்த இளம்  பெண்களைப் பாதுகாப்பாக வீட்டுக்கு கொண்டு போய் விடும் " எஸ்கோர்ட் " போலவும் வேலை செய்தேன்,

                                      அந்த வேலை ஒரு " பார்ட் டைம் " வேலை, நான் வார நாட்களில் குக் ஆக வேலை செய்யும் ரெஸ்ரோரென்ட்  முதலாளி அதை வேறு ஒருவருடன் சேர்ந்து நடத்தினார், அதால அந்த வேலை எனக்கு கிடைத்தது, ரெஸ்ட்ரோறேண்டில் குக் வேலை முடிய ,வெள்ளி,சனி இரவு இப்படிக் கரைச்சல் பிடிச்ச இடத்தில " பாடி காட் " போல வேலை செய்தேன் எண்டவுடன நான் என்னவோ சிங்கத்தை சுழட்டி மடக்கி எறியும்  கிளாடியஸ் போல  பலசாலி எண்டு நீங்க நினைக்க வேண்டாம் .

                                              எனக்கு  ரெஸ்ட்ரோரென்ட் குசினியில்  கரண்டியைப் பிடிச்சு சுழட்டவே பஞ்சி ஆனால் உண்மையில் வெறிகாறரை இழுத்து எறியிறது சுலபம்,சரியான நேரம் சரியான இடத்தில பிடிச்சு தள்ளினா காத்துப்போல எறியலாம். அவளவுதான் தொழில் ரகசியம், மற்றப்படி  அழகான இளம்பெண்களின் அந்தப்புரத்தில் ஊர் உண்டு பிச்சைக்கு குளம் உண்டு தண்ணீருக்கு  என்று வேலைசெய்வது அலாதியாக இருந்தது 

                                                இந்த நடு நிசி இரவுக் கதை அப்படி வேலை செய்த நேரம் சந்தித்த வெரோனிக்கா என்ற துகிலுரி நடன தேவதை எனக்கு அறிமுகமாகிய சில நாட்களில் நடந்த இருட்டு எழுதிய கதை. நானே  முழுவதையும்  சொல்வதைவிடக்  ஒஸ்லோ  நகரம்  கதையை  அதன் போக்கில் உங்களுக்கு விரித்துவைத்து  நிறைய விசியங்களை எடுத்த எடுப்பிலேயே  எள் என்றால் எண்ணையாக நிக்கும்படியாக  இல்லாவிட்டாலும் மெல்லவே  நகரவைத்த நகரத்தில் நடந்தது . 

                              அந்த துகிலுரி நடன கிளப்பில் பல பெண்கள் வேலை செய்வார்கள்,ஆடுவார்கள்,வஞ்சகம் இல்லாமல் மேடையில் ஒரு கம்பியில் சுழண்டு சுழண்டு துகில் உரிந்து ஆடுவார்கள்,அப்படி  ஒரு பெண் ஆடிக்கொண்டு இருப்பதை , காவல் கவனிப்பு வேலை அதிகம் இல்லாததால் ஒரு மூ லையில் இருந்து கோப்பி குடித்துக்கொண்டு ஒரு சின்னப் பேபரில் ஒரு சின்னக் கவிதை எழுதும் ஐடியா வந்ததால் ,அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டே 

                     இடையில் 
                    அவள்
                    இறங்கி வர 
                     பார்த்து 
                    ரசித்துக்கொண்டிருந்த  
                     கணவான்களின் 
                    பார்வையும் 
                    இடையிலேயே 
                    நின்றது 

                               எண்டு எழுதிப்போட்டு அதைத் திருப்பி வாசிக்க எனக்கு சிரிப்பு வந்திட்டது, அதை மேடையில் ஆடி மாதக் காற்றில் அசையும் பட்டம் போல ஆடிக்கொண்டு இருந்த அந்தப் பெண் பார்த்தாள்,கொஞ்ச நேரத்தில் அவளும் ஆடுறதை முடித்துக்கொண்டு இறங்கி என்னிடம் வந்து 

                         " இப்ப ஏன் என்னைப் பார்த்து என்னவோ எழுதிப் போட்டு, ஏன் என்னைப்பார்த்து சிரிச்சுக் கொண்டு இருந்தாய் "

                 எண்டு கொஞ்சம் அரைகுறை  ரஷியன் பாசை  கலந்த இங்கிலீஷ் உச்சரிப்பில் பூனை கொட்டாவி விட்ட மாதிரி ஆங்கிலத்தில் நட்பாகக் கேட்டாள்.

                                  நான்   ,"  ஒரு கவிதை போல ஒன்று இங்கே நீ ஆடுறதையும், அதைப் பல ஆண்கள் ஜொள்ளுவிட்டுப் பார்க்கிறதையும்,இடையில் நீ இறங்கிப் போறதையும் வைச்சு எழுதினேன்,,ஆனால் அதை மறுபடியும் வாசிக்க அதில ஒரு சிலேடை இருக்கு என்பது எனக்கே ஆச்சரியாம இருந்தது அதுதான் சிரிச்சேன் "   எண்டேன்.   

                                    " அதென்ன சிலேடை அதை எனக்கும் சொல்லு,நானும் சேர்ந்து சிரிக்கிறேன் " என்றாள் அந்தப் பெண், அவளுக்கு

                              " சிலேடை ஒரே சொல்லு பல அர்த்தம் உள்ள மாதிரி ஒரே இடத்தில ஒரு வசனத்தில் அல்லது வரியாக வருவது, எங்கள் தாய் மொழியில் இடையில் என்றால் ஒரு சம்பவத்தின் இடை நடுவில் எண்டும், அதே நேரம் ஒரு பெண்ணின் இடையையும் குறிக்கும், அது பல விதத்தில் இப்ப நான் எழுதியதுக்கு ரெம்பவே பொருந்துது "

                                     எண்டு சொன்னேன். அவள் அப்படியா,

                         " உன் தாய் மொழி என்ன, உன் நாடு எங்க இருக்கு, இந்தக் கிளப்பில் கன வருடம் வேலை செய்கின்றாயா, நோர்வே உனக்கு பிடிக்குமா, எனக்கு இங்கே குளிர் உயிரை எடுக்குது,ஒத்துவரவில்லை,ஆனால் நல்லா உழைக்கலாம் "

                                          எண்டு கேட்டு தன்னுடைய பெயர் வெரோனிக்கா என்று சொல்லி, அவள் தாய் நாட்டின் பெயரையும் சொல்லி முதல் முதல் எனக்கு அன்று தான் கொஞ்சம் கிட்டத்தில் வந்து சாமந்திப் பூ போன்ற முகத்தை முன்னுக்கு நீட்டி அறிமுகம் ஆனாள். 

                                         நாட்டுச் சர்க்கரை பணியாரம் போல இனிக்க இனிக்கப் பேசும், கிழக்கு ஐரோப்பிய நாட்டான ஹங்கேரியில் பிறந்த வெரோனிக்கா ஒஸ்லோ யூனிவெர்சிட்டி இல் சோசியோலோயி படிக்க வந்ததா தான்  சொன்னாள். எக்ஸ்ட்ராவா செலவுக்கு சம்பாதிக்க, அந்த கிளப்பில் கொஞ்ச நாள் தான் வேலை செய்தாள். 

                                  அவள்தான் ஒருநாள் வந்த புதிதில், கம்பி போல ஒன்றைச் சுற்றி பல்லி போல தொங்கி,சுழண்டு ஒவ்வொரு உடுப்பா கழட்டி எறிஞ்சு,,,எறிஞ்சு,,,எறிஞ்சு,,,,கழட்ட இனி ஒண்டுமே இல்லை போல நடனம் முடியக் களைத்துப்போய் வந்து அந்த  இடைவேளையில்  கோப்பி குடிக்கும் போது அவள் படிக்கும் விசியம், கொஞ்சம் அவள் குடும்பம், அவளின் நாட்டின்  பிண்ணனி பற்றி  நான் கேட்காமலே சொன்னாள். 

                                                அந்த துகிலுரி கிளப்பில் பல பெண்கள் வேலை செய்தார்கள்,நாங்கள் யாரிடமும் அவர்கள் பிண்ணனி கேட்பதில்லை, கேட்டும் ஒண்டும் வரப்போறது இல்லை அதால் " கையில காசு வாயில தோசை " எண்டு நான் நினைப்பது போலத்தான் அவர்களும் நினைத்து வேலை செய்வார்கள். விடை   இல்லாத  கேள்விகளும் விடை இல்லாத  பதில்களும் தேவையற்றதாக  இருந்த  ஒரு வேலைத்தளம் அது .

                                                     வெரோனிக்கா எப்படி இருப்பாள் எண்டு சொல்ல வேண்டும் என்றாள், அதிகம் விவரிக்காமல் நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் சறுக்கி சறுக்கி ஊர்வலம் போன மாதிரி சொல்வது என்றாள் மெல்லிய ஈஸ்டர்ன் யுரோபியன் தேகம் ,  செங்கிஸ்கான் வைச்சு இருந்த மொங்கோலியா வில்லுப் போல வளையும் ஆரோக்கியமான வளர்த்தி , யுரேசியன் மாநிற வாளிப்பு பூசிய அழகான முகம்  ,பூசனிப் பூ பொறாமைப்படும் இளமையான அங்கங்கள்  , தியோப்பிலசின் வாள்போல அறிவான பார்வை , கிழக்கு ஐரோப்பிய பூனை ரோம இமைகளுக்கு கீழே எப்பவும் ஆர்வம் மின்னல் வெட்டும் நீலக் கண்கள் , 

                                          எகிப்தியன்   அதிசயத்தில் கீழ் நோக்கி வளைந்த மெடிடேர்நியன் மூக்கு, அவள் சொண்டுகள் லிப்டிக்ஸ் போடாமலே பீற்றுட் கலரில் இயற்கையா இருக்க ,கொஞ்சம் பின்னால மறைஞ்சு நிண்டு அவளைப் பற்றி இயல்பாக சொல்வது  என்றாள் சொல்லக்கூடிய ஒரே வார்த்தை கிளுகிளுப்பு. இலக்கியத்தனமா சொல்வது என்றாள் சிலப்பதிகார " கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர்  " மாதவி போல " எறி வளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும் கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர் " எண்டு இளங்கோவடிகள் செய்யுள் மொழியில் சொல்லலாம். 

                               ஒரு நாள், 

                           விண்டர் உறைபனி வழுக்கிக்கொண்டு பஞ்சு போல இறங்கிய  பின் இரவு.ஒஸ்லோ கழிமுகத்தின் புண்ணியத்தில் நகரம்  சூடு ஏறி அதிகாலை தடுமாறி ஆரம்பிக்கும், வடதுருவக் காற்று காதைக் கடிக்கும் வெள்ளிகள் கிழக்கு வானில் மின்னி மின்னி சடுகுடு விளையாடிய   நேரம், வெரோனிக்க அவள் நடனம் முடிய முதலே,இடையில் நிற்பாட்டிப்போட்டு ,நான் கோப்பி குடிப்பதைப் பார்த்துக்கொண்டே என்னிடம் வந்தாள். வந்து சோகமாகா எனக்கு முன்னால இருந்து கொண்டு கைகளைப் பிசைந்துகொண்டு ஒருவித இயலாமையில் இருக்க 

                                    " என்ன ஆச்சு உனக்கு, நல்லாத் தானே ஆடிக்கொண்டு இருந்தாய் "

                                எண்டு கேட்டேன் . அவள் உடன பதில் சொல்லவில்லை,கொஞ்சம் ஜோசிசுப்போட்டு,பெருமூச்சை இழுத்து விட்டுப்போட்டு, 

                                             " எங்கள் நாட்டில் ஒரு பழமொழி சொல்லுவாங்க சாட்ச்சிக்காரன் காலில விழுவதை விட சண்டைக்காரன் காலில விழுவது எவளவோ மேல் என்று, கடைசியில் என் நிலைமையும் அப்பிடிதான் ஆகிவிட்டது " என்றாள்.

                               "  என்ன  சொல்லுறாய்,,உனக்கு  என்ன  பிரச்சினை,,,அல்லது  பிரச்சினைகள் ...."

                                "  ஹ்ம்ம் ,,அதுதானே  சொல்லுறேன் சாட்ச்சிக்காரன் காலில விழுவதை விட சண்டைக்காரன் காலில விழுவது எவளவோ மேல் என்று"


                                   "   ஒண்டுமே புரியவில்லை ,,மொட்டைத்தலைக்கும்  முழங்காலுக்கும்  இப்படி  முடிச்சுப்  போடிறியே "


                                  "வேற  எப்படிச் சொல்ல,,அவளவு  பிரச்சினையில்  நிக்குறேன் "

                                        " அப்படியா அந்தப் பழமொழி என்னோட நாட்டிலையும் புழக்கத்தில் இருக்குப்பா, இப்படி பொடிவைச்சு  முடிச்சுப்போட்டா எனக்கு எப்படிப்பா விளங்கும் இப்ப உனக்கு என்ன பிரசினை எண்டு விபரமா சொல்லு, " எண்டு கேட்டேன் .

                                   வெரோனிக்கா அவளோட்ட நாட்டைச்சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் ஒரு சின்ன ஸ்டுடென்ட் அப்பாட்மென்டில் இருந்தாளாம்,அவள் ப்ரென்ட் யாரோடையோ பிரச்சினைப் பட்டு,இப்ப அவளுக்கு ஒஸ்லோ வர உதவி செய்தவர்கள் அவளை அந்த இடத்தைவிட்டுப் போக சொல்லிடாங்க ளாம். ரெண்டு நாளிலில் இவளும் வேற இடம் தேடிப்போக வேண்டுமாம் எண்டு மெல்ல மெல்ல விழுங்கி விழுங்கி சொன்னாள்.நான் 

                             " உன்னோட அந்த ப்ரெண்டுக்கு உதவி செய்த அந்த மனிதர்கள் யார் " 

                         எண்டு கேட்டேன்,அவள் மவுனமா இருந்தாள்.

                               " நீ தான் ஒஸ்லோவில் படிக்க வந்து இருக்கிறாய் எண்டு சொன்னாயே,அப்புறம் உன் யூனிவெர்சிட்டி மாணவர் சமுகப்  பாதுகாப்பால் இருக்க இடம் தரமாட்டாங்களா " 

                           எண்டு கேட்டேன்,அதுக்கும் மவுனமா இருந்து போட்டு, நான் கோப்பி குடிச்சிட்டு எழும்ப வெளிக்கிட,

                          " இன்னும் ரெண்டு நாளில் நான் இருக்கும் இடம் விடவேண்டும், இல்லாட்டி எனக்கு பெரிய  பிரசினை வரும் "

                              எண்டு ஏறக்குறைய கண்ணில கண்ணீர் வர சொன்னாள்.

                              எனக்கு பொதுவாகவே பெண்கள் கண்ணீர் விட்டா இரக்கம் சூறாவளி போல வரும்,அதிலும் அழகான இளம் பெண்கள் அழுதால் அதைப் பார்க்க உதவி செய்யும் மனப்பான்மை சுனாமி போல வரும்,,ஆனால் வெரோனிக்காவுக்கு எப்படி நான் உதவி செய்ய முடியும் எண்டு கொஞ்சமும் ஐடியாவே இல்லாமல்,

                      " உனக்கு என்னால் என்ன உதவி செய்ய முடியும் என்று நீ நினைக்கிறாயோ அதைக் கேள் முடிஞ்சா செய்யலாம் "

                        என்றேன்,அவள் சடார் எண்டு  " மாசத்துக்கு முழுகாமல் இருந்த மணியகாரன் பெண்டில் உலக்கையை உடையார் வீட்டில அடைவு வைச்ச " மாதிரி  

                          " நீ தனியாகவா இருக்கிறாய் " 

                       எண்டு முன்னமே ஜோசித்து வைத்த கேள்வி போலக் கேட்டாள்.

                     "ஆமாப்பா நான் தனியா ஒரு சின்ன நெருப்புப்பெட்டி போன்ற ஒரு அப்பார்ட்மெண்டில் கையைக் காலை கதிரை மேசையில் இடிச்சுக்கொண்டு இருக்கிறேன் " 

                               என்றேன், அவள் அதுக்கு மேல ஒன்றும் சொல்லவில்லை, கேட்கவுமில்லை,ஆனால் அவளைப் பார்க்க பாவமாய் இருக்க , சின்ன வயசில் என்னோட பாட்டி எப்பவுமே சொல்லி வளர்த்த " சுயம் நேசி.. சுடர் விடு.. மதம் கட.. மனிதம் வளர்  " என்ற சித்தர் பாடல் சொன்ன வழியில் ஜோசித்துப்போட்டு ,நானாகவே

                                 " உனக்கு போக வேறு இடம் கிடைக்கும் வரை வேண்டும் என்றாள் என்னோட அப்பார்ட்மெண்டில் சமாளித்து இருக்க உன்னால் முடியும் என்றாள் வந்து தங்கு " என்றேன்,  அவள் அதுக்கு 

                          " எனக்கு எல்லாரையும், எல்லா நிலைமைகளையும் நன்றாக  சமாளிக்க தெரியும்,நிலைமைகள்  எல்லாம் எண்ணங்களே என்பதால் எண்ணங்களை சரி செய்தால் எல்லாமே சரியாகி விடும், அமைதி கிடைக்கும் என்று  மார்கஸ் அரேலியஸ் எழுதி இருக்கார் ,நீ பயப்பிடாதை ,உன்னோட டெலிபோன் நம்பரைத் தா " என்றாள்,  

                         " அடக் கடவுளே நீ மார்கஸ் அரேலியஸ் எல்லாம் படிச்சு இருகிறாயே, அவர் அருமையான தத்துவ மேதையே , எப்படியோ எனக்கு இப்ப நேரம் இல்லை நான் பிறகு கதைக்குறேன், " 

                            எண்டு சொல்லிப்போட்டு எழும்பிப் போக,வெரோனிக்கா மறுபடியும் 

                       "  உண்மையாதானே சொல்லுறாய், புனித கல்வாரி மாதா மேல ஆணையாய்ப்  பிராமிஸ் பண்ணு " என்றாள்.

                   " ஆனால் என்னிடம் ஒரே ஒரு கட்டில் தான் படுப்பதுக்கு இருக்கு ,நீ அதில படுக்கலாம்,  என்னிடம் கட்டில் போல விரிக்கக் கூடிய ஒரு சோபா இருக்கு அதை விரிச்சு நான் அட்ஜஸ்ட் பண்ணிப் படுப்பேன் "

                        " அடக் கடவுளே அதெல்லாம் ஒரு பிரசினையா, "

                           "   இதெல்லாம்  உனக்குப் பிரச்சினையே  இல்லையா  வெரோனிக்கா "


                              "  எங்கள் நாட்டில் சொல்லும் குதிரை லாயத்தில் குருட்டுப்  பூனை  குடும்பம் நடத்தின பழமொழி போல இருக்கே நீ சொல்லுறது "


                             "   அதென்ன  ,,எனக்க்குத்   தெரியாதே வெரோனிக்கா  "


                                 "   ஹ ஹ ஹ ஹ ஹ ஹா " 

              " எனக்கு பூனையும் ,குதிரையும் குடும்பம் நடத்தின பழமொழி எல்லாம் தெரியாது,"

                                  "   ஹஹஹாஹ்,,,சிரிப்பு  சிரிப்பா  வருகுது "


                                    " எதுக்கு   சிரிப்பு  வருது   சொல்லு,,வெரோனிக்கா  " 


                              " அட  நீ  இவளவு  அப்பாவியா  இருக்கிறாயே "


                            " என்னவோ நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் முதலிலேயே " என்றேன் 

                                 அதுக்கு அவள் ஒண்டுமே சொல்லவில்லை, படுக்க இடம் இல்லை என்றால்  எனக்கு மேலேயே ஏறிப் படுக்கவும் ரெடி எண்டுறது போல அலட்சியமா பார்த்தாள்,,பிறகு " மிட் நைட் மசாலாவில் " ஷாகீலா  சிரிச்ச மாதிரி சிரிச்சாள். சிரிச்சுப்போட்டு முகத்தைக் கொஞ்சம் கவலை ஆக்கி,

                    " இன்னும் ரெண்டு நாளில் நான் இருக்கும் இடம் விடவேண்டும், இல்லாட்டி எனக்கு பெரிய  பிரசினை வரும்,  எனக்கு பெரிய பிரசினை வரும் " எண்டு பழைய பல்லவியை இழுத்து இன்னொரு முறை சொல்லி முடிய முதலே நான் என்னோட டெலிபோன் நம்பரை ஒரு சின்னப் பேபரில் எழுதிக்கொடுத்தேன்,

                                     இன்னும் ரெண்டு நாளில் அவள்  இருக்கும் இடம் விடவேண்டும், இல்லாட்டி அவளுக்கு பெரிய  பிரசினை வரும் எண்டு  நினைவுபடுத்த வேண்டும் போல எனக்கு திருப்பியும் சொன்னாள், அவளுக்கு  பெரிய  பிரசினை வரும் எண்டு தான் சொன்னாள், முன்னம் பின்னம் தெரியாத ஒரு இளம் பெண்ணுக்கு உதவி செய்யப் போய் " அடியும் பட்டு புளித்த கூழும் குடிக்கவேணுமா " போல  எனக்கு பெரிய  பிரசினை வரும் எண்டு கொஞ்சமும் ஜோசிக்காமல் என்னோட எதையும் தாங்கும் இதயம் கொஞ்சம் தன்னும் என்னை அலேர்ட் பண்ணாமல் விட்டதுக்குப்  பெயர் தான் தலைவிதி எண்டு கொஞ்ச நாளிலேயே எனக்கு தெரிய வந்தது.

                         நான் வசிக்கும் அப்பார்ட்மென்ட் தனிய வசிக்கும் ஆண்கள் பலரோட வாழ்விடம் இருப்பது போல எருமை மாடு சாணி போட்ட மாதிரிதான் இருக்கும்,வெரோனிக்கா வந்தால் என்ன நினைப்பாள் என்ற பயத்தில கொஞ்சம் அதை துடைத்துக்  கழுவி, ஒழுங்கமைத்து ,நிறைய வாசனைத்திரவியம் கலந்த சென்ட் அடிச்சு ,என்னிடம் இருக்கும் ஒரே ஒரு படுக்கையின் பழைய மேல் விரிப்புகளைக் கழட்டிப் போட்டு புது விரிப்புகள்,தலையனை எல்லாம் போட்டு பழைய விரிப்புகள் எல்லாத்தையும் கழட்டிக் குப்பையில் சுருட்டி எறிஞ்சு போட்டு ,கட்டிலைக்  கொஞ்சம் பூப்போட்ட  மஞ்சம்  ஆடட்டும் கொஞ்சம் என்று   அலங்கரித்து வைத்தேன் , 

                               அதுக்குப்பிறகு  ஏறக்குறைய என்னோட அப்பார்ட்மெண்டைப் பார்க்க எனக்கே வடிவா இருந்தது.  ஏகாதசிக்கு சாணி போட்டு முற்றம் மெழுகியது போல பளிச் என்று நிலம் அழகா இருக்க ஒரு சாம்பிராணிக் குச்சி நான் வைச்சு இருக்கிற வேளாங்கண்ணி மாதா படத்துக்கு கொழுத்தி வைச்சேன். எப்பவுமே  எதிர்பாராதவிதமாக  என்ன  நடந்தாலும் அந்த  அற்புத மாதா   என்னை காப்பற்றுவா  என்று  ஒரு  நம்பிகை எப்பவும்  இருக்கும்.

                               சொன்ன மாதிரி ரெண்டாம் நாள் இரவு வெரோனிக்கா டெலிபோன்  அடிச்சாள்  ,நான் ரெஸ்டாரென்ட் குசினியில் வேலையில் நின்றேன், அவள்  வேண்டுமென்றே  குரலை  மாற்றி  காட்டூன்  படங்களில்  வருமே நுனித்தொண்டைக்   கலவரக்குரலில்  கதைத்தாள். குழப்பமாக  இருந்தது   யார்  கதைப்பது  என்று ,

                                        "  ஹலோ,எப்படி இருக்குறாய்,எப்படி சுகம், நான் யார்  கதைக்குறேன் சொல்லு   பார்ப்பம் ,நினைவு இருக்கா, 

                                    "  யார்,,,ஹ்ம்ம்,,சரியா   விளங்கவில்லையே ,,கேட்ட  குரல் போலவும்  இருக்கு "


                                   "   ஹஹஹஹா,,,,அதுக்கு  இடையில்  என்னை  மறந்திட்டியா,,,சொன்ன  உத்தரவாதம்  எல்லாம்  காத்தில  போச்சா "


                               " நான்  என்ன  உத்தரவாதம்  உனக்குச்  சொன்னேன் ,,நீ  யார்  முதலில்  சொல்லு "


                                     "   ஹஹஹா ,,அய்யோ  சாமி  ,நான்  பெயர்  சொல்ல மாட்டேன் ,,,நீயே  கண்டுபிடி "


                                  "  ஹ்ம்ம்,,நீயே  சொல்லுப்பா,,நான்  இங்கே  கையில கரண்டியோடு  நெருப்புக்கு  நடுவிலே  நிக்குறேன் "


                                      " ஓ,,சொறி,,சொறி,,,,,,நான்  பகிடிவிடுறேன்  நீ  சீரியஸ் ஆக  வேலையில்  நிற்பது  தெரியாமல்  சொறி  சொறி  "


                      " பிறகு  சொறியலாம்,,இப்ப உன்  பெயரைச் சொல்லு "


                          "  குதிரை லாயத்தில் குருட்டுப்  பூனை  குடும்பம் நடத்தின  வெரோனிக்கா , ஹஹஹஹா ,சும்மா பகிடிக்கு சொல்லுறேன் , சரி முக்கிய விசியத்துக்கு வாறன் ,இதுதான் விசியம் நாளைக்கு இரவு வரவா ,உனக்கு ஒகே யா,,ஒரு மூன்று நாள் மட்டும் இருக்க உதவி செய்  " 

                           எண்டு கேட்டாள்,

                                 "  சரி ,வாவன்  நாளைக்கு நான் வேலை இல்லை, பின்னேரம் நேரத்தோட வீட்டில நிற்பேன்,

                              "  பரதேசிக்குப்  பரலோகப்  பாதைபோல உன்னோட  அட்ரஸ்  என்னிடம்  இல்லையே எப்படி  வர "


                             " வெரோனிக்கா முதலில்    ....... இக்குப் போற ஆறாம் நம்பர் மெட்ரோ தேபானா  ட்ரைன் ஒஸ்லோ சென்றல் ஸ்டேசனில் இருந்து எடுத்து ஏறு , "


                                   "  சரி  மகா பிரபுவே "


                                    " கடைசி ஸ்டேஷன் ......... தேபாணா இக்கு முதல் வாற ........  தேபாணா ஸ்டேசனில் இல இறங்கு, வெரோனிக்கா ,"


                               "   சரி  இறங்கி,,  ஆவெண்டு  ஆகாசத்தைப்  பார்க்கவா "


                              " நான் ........  மெட்ரோ தேபாணா  ஸ்டேசனின் வெளி வாசலில் நிற்பேன், வெரோனிக்கா  " 


                                   "  அட  நீ அவளவு  அக்கைறையா  பால்குடிக் குழந்தைக்குப்  பாதுகாப்புபோல  நிக்குறியே,,சோ  சுவிட்  சோ  சுவிட் "


                                    "  இதில  என்ன  இருக்கு ,,நானே  காலாற நடக்க  விரும்பும்  ஒருவன்,,மறக்காமல்  ட்ரைன்  ஏறினவுடன  போன்  அடி  வெரோனிக்கா "
                              
                                        " ஹ ஹ  ஹ  ஹா, குருட்டுப்  பூனை இடங்களை ஒருக்கா சொன்னாலே மறக்காது,ஹ  ஹ  ஹா  ஹ்,,நான் மெட்ரோ  சப் வே  ட்ரைன் ஏறின உடனை உனக்கு மொபைல் போனில  ஒரு கால் தாரேன் ஓகே யா " என்றாள்.

                        " ஓகே ,மெட்ரோ ட்ரெயினில் இருந்து இறங்கும் போது கவனம், சறுக்கும், ஆவெண்டு பார்த்து ஏமலாந்தாமல் படியப் பார்த்து இறங்கு   " என்றேன். 

                           சொன்ன மாதிரி அடுத்த நாள் இரவு கால் பண்ணினாள், நேரத்தைக் கணிப்பிட்டு பத்து நிமிடம் நடந்து  கீழே ரெயில்வே ஸ்டேஷன் இல்  போய் நின்றேன் . ஒரு பெரிய ட்ரவலிங் பாக்கை கொழுவிக்கொண்டு ஏமலாந்திக் கொண்டு மீன் கொத்திப் பறவைபோல அங்கேயும், இங்கேயும் பார்த்துக்கொண்டு வந்தாள், வந்து இறங்கின உடனேயே,

               " வாவ்,எவளவு அழகான சோலை போல இருக்கே இந்த இடம், இவளவு மரங்களா இங்கே, ஏறக்குறையா புடாப் பெஸ்ட் போல இருக்கே இந்த சின்ன இடம் " என்றாள்,

                          நான் " அதென்ன புடாப்பெஸ்ட் " என்று கேட்டேன்,

                         அவள்,,,

                       " அதுதான் என்னோட தாய் நாடு ஹங்கேரியின் தலை நகரம், அங்கே தான் நான் பிறந்தேன் ," 

                                     எண்டு சொன்னாள், அவள் பாரமான  ட்ரவலிங் பாக்கை வேண்டி என்னோட தோளில கொழுவிக் கொண்டு,அவளையும் கூடிக்கொண்டு வீட்டுக்குள்ள வந்த உள்ளிட முதல்

           " என்னோட பெயர் முதல் உனக்கு சரியா தெரியுமா ,சொல்லு பார்ப்பம் " எண்டேன்

                                   அவள் வாய்க் கொஞ்சம் சுளிச்சு 

                                " புருஷன் " என்றாள் 

                             நான் பதறி அடிச்சு  " அது இல்லைப்பா,,,என்னோட பெயர் அரசன் ,எங்க சொல்லு பார்ப்பம் அ  ர  ச  ன் ,,," 

                                    எண்டு சொல்லிக்கொடுக்க அவள் மறுபடியும் ,,

                                     "  புருஷன் " என்றாள்,

                 நான்  " அப்படி இல்லை ஒவ்வொரு எழுத்தாய் சொல்லு தாயி உனக்குப் புனித கல்வாரி மாதா மேல ஆணையாய்ப் புண்ணியம் கிடைக்கும் சீமாட்டி " 

                       எண்டு கெஞ்சிக் கேட்க்க கடைசியில் ஒவ்வொரு எழுத்தாய் 

                                                  " பு  ரு  ச  ன்  " என்றாள் ,

                                        இது என்ன சீவியமடா , என்னோட அம்மா எப்பவும் சொல்லுற மாதிரி " காலைச் சுற்றின புடையன் பாம்பு கடிக்காமல் விடாது  " எண்டது போலத்  தான் உத்தரிப்பு கிடைக்கும் போல இருக்கே எண்டு போட்டு,வாறது வரட்டும் எண்டு நினைக்க,வெரோனிக்க அவள் அணிந்து இருந்த கோட் போன்ற மேலாடையைக் கழட்டி,சோபாவில் எறிஞ்சாள் , அவள் வாயில இருந்து ஜின் என்ற குடிவகையும் டோனிக் என்ற உப பானமும் கலந்த வாசம் காற்றில் வர 

                        " லண்டன் கோர்டன் டிறை ஜின்னும் , லெமன் டோனிக்கும் குடிச்சியா "

                          எண்டு கேட்டேன் 


                          " ஆமாப்பா, எப்படி அவளவு நுணுக்கமா  ஒரு பெண்ணின் வாயில் இருந்து சன்னமாக வருவது லண்டன் கோர்டன் டிறை ஜின் எண்டு கண்டு பிடித்தாய்,,,," 

                      எண்டு சந்தேகமாக் கேட்டாள்.

                             " நானே பெரிய குடிகாரன்,அதை விட ஹோட்டல் பார் , நீச்சல்குளப் பப்பில் ,குடிவகையில் கொட்டேயில் செய்யும் வேலைக்கும் உதவியா இருந்து இருக்கேன்பா, நிறைய ஜின் வாசம் தெரியாது ஆனால் எல்லா லண்டன் கோர்டன் டிறை ஜின்வாசமும் தெரியும்  " 

                              என்றேன், " நானே பெரிய குடிகாரன் " எண்டு கொஞ்சம் அவளை அலேர்ட் பண்ணத்தான் சொன்னேன்  அவள் அதுக்கும்  யானையில நுளம்பு கடிச்ச மாதிரி ஒரு சின்ன உணர்ச்சியே இல்லாமல்  கேட்டாள், ஒண்டும் சொல்லவில்லை   

                          " பசிக்குது சாப்பிட ஏதாவது செய்வியா, எனக்கு வயிறு நோகுது, ப்ளிஸ் ஏதாவது சமைப்பியா அல்லது சமைச்ச சாப்பாட்டு ஏதாவது இருக்கா " எண்டு கேட்டாள் .

                           நான் " நீ வருவாய் என்றே ப்றோவேன்சியே பிலோங்கனிஸ் லசானியாவும், சீசர் சலாட்டும் செய்து வைச்சு இருக்கேன் " என்றேன் 

                             " வாவ்.எனக்கு இத்தாலி நாட்டு  ப்றோவேன்சியே முறையில் சமைக்கும் சாப்பாடு எல்லாமே மிகவும் பிடிக்கும்,என்னோட அம்மா இத்தாலியன், அவா இத்தாலியின் கலாச்சார நகரமான  வெரோனா நகரத்தில் பிறந்தவா,அதாலதான் எனக்கு வெரோனிக்கா என்று பெயர் வைச்சவா  "

                        என்று நேர்சறிக் குழந்தைப் பிள்ளைகள் போல  போல சிரிச்சு சிரிச்சு சொன்னாள் 

                       " அப்படியா ,,அப்புறம் ஏன் நீ ஹென்கேரியில் பிறந்தாய்,உன் அப்பா ஹங்கேரியன் நாட்டவரா, " 

                                 எண்டு கேட்டேன் ,அதுக்கு வெரோனிக்கா

                    " அது பெரிய கதை, சாப்பிட்டு முடிய ஆறுதலா சொல்லுறேன் " 

                                   என்றாள் நானும் ஓம் எண்டு தலை ஆட்டிப்போட்டு , அவளுக்கு என்னோட அப்பர்த்மென்ட் சுற்றிக் காட்டி, எங்க எங்க என்ன என்ன இருக்கு எண்டு ஆங்கிலத்தில் விளக்கமா சொன்னேன் ,கடைசியில் நான் படுக்கப்போற சோபாவையும்  அவள் படுக்க ஒதுக்கப்பட்ட கட்டிலையும் காட்டினேன்..வெரோனிக்கா டக் என்று மின்னல் விழுந்த மாதிரி  நின்றாள் , 

                       " இப்ப என்ன சொன்னாய்,கடைசியா "  எண்டு கேட்டாள் ,

                    " நான் படுக்கப்போற சோபாவையும்  நீ  படுக்க ஒதுக்கப்பட்ட கட்டிலையும் சொன்னேன்.என்னாச்சு உனக்கு  இப்படி பேய் அறைஞ்ச மாதிரிப் பார்க்கிறாய் .." 

                அதில தான் நான் எதிர்பார்க்காத திசையில் இருந்து முதல் அதிர்ச்சி என்னோட முகத்தில் அறைஞ்சது..

                             ஒருவரது வாழ் நாளில் சனி திசை நடக்கும் போது, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி பிடித்து வாட்டும் என்று சொல்லுறார்கள், எனக்கு எந்தச்  சனி அந்த நேரம் பிடிச்சுது  எண்டு என்னோட ஜனன சாத்திரத்தை நம்பும் கொள்கையில் நான் இல்லாததால் சரியாச் சொல்லமுடியவில்லை.......


....பாகம் இரண்டில் மிச்சம் எழுதி இருக்கிறேன் ..

.
 .