Friday 20 March 2015

நடிகனானேன் ....

வாழ்கையே ஒரு மேடைநாடகம் என்று நிஜமான உலகத்தில் அப்பப்ப வாழ்க்கை வெறுக்கும் போது இப்பவும் சொல்லிக்கொண்டு இருந்தாலும், என்னோட இளந்தாரி வயதில் , முன் அனுபவம் எதுவுமில்லாமல் இரண்டு நாடகத்தில் மேடையில் மேக் அப் போட்டு நாடக இயக்குனரிடம் திட்டு வேண்டிக் கொண்டு அடிவேன்டாத குறையாக நடிக்கும் வாய்ப்பு, அதுவும் அந்த இரண்டும் தற்செயலாகக் கிடைத்த சம்பவம் போன்ற ஒரு ரியல் அனுபவ சம்பவம் இன்று வரை வேறே எங்கேயும் கிடைக்கவில்லை.

                                அந்த இரண்டு நாடகத்தில், அந்த நாட்களில் கட்டுமஸ்தான தேகக் கட்டில் இருந்ததால் ,சீதாலட்சுமி சுயம்வரம் என்றதில் ஜெனகனின் வில்லை முறிக்க முயல வரும் பன்னிரண்டு தேசத்து ராசாக்களில் ஒரு ராசாவாக வரும் வேடத்தில் கொஞ்ச நேரமே வரும் அந்த ராஜா வேஷம் போட்டேன்.

                                      ரெண்டாவது நாடகத்தில், அதில பொம்புளையாக நடிக்க வேண்டிய நடிகர் சின்னமுத்து வருத்தம் வந்ததால் நடிக்கமுடியாமல் போக எந்த வித முன்னறிவுப்பு ஒத்திகை எதுவுமேயில்லாமல், இன்னொருவரின் மனைவியான கிளியோபட்ராவை ஜுலிய சீசர் கடத்திக்கொண்டு வந்து காதலியாக்கிய சம்பவங்கள் வரும் சேக்ஸ்பியரின் ஜுலிய சீசர் நாடகத்தில் நடித்தேன் 


                                    தமிழில் மொழிபெயர்த்துப் போட்ட நாடகத்தில், பிறசியருக்குள்ள தேங்காய் சிரட்டையை வைச்சு நெஞ்சை எடுப்பாக்கி, உயர்த்திக் கட்டிய கொண்டை போட்டு , நீண்ட மினுங்கல் ஒட்டிய கவுன் ஒன்றைக் கொழுவிக்கொண்டு அழகிய எகிப்து நாட்டு இளம் பெண்ணாகிப் பொம்பிளை வேஷம் போட்டு நடித்தேன். அதுதான்  உண்மைக்கு மேலே  உண்மை

                                       யாழ்பாணத்தில் எங்களின் அயலில் இருந்த வாசிக்கசாலையில் எங்களின் மதிப்புக்குரிய உள்ளுர்க் கவிஞ்சர் கந்தப்பு நாடகங்கள் போடுவார், அதிகம் தமிழ் புராண, சமுதாய , புரட்சி நாடகங்கள் போட்டாலும் சில நேரம் ஆங்கிலதில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாடகங்களும் போடுவார். 


                              முக்கிய எவசில்வர் போன்ற பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வேறு இடங்களில் மேடைகளில் நடிக்கும் நடிப்பு நல்லா தெரிந்தவர்கள், அலுமினியம் போன்ற சில்லறைப் பாத்திரங்களில் என்னைப்போல முன்னப்பின்ன அனுபவம் இல்லாத சின்னப் பொடியன்களை பின்னேரங்களில் ,வாசிகசாலை லைபிறேரியில் வைச்சுப் பழக்கிதான் கவிஞ்சர் கந்தப்பு

                                  " பல மேடைகளில் பிரகாசித்த, பிரமாண்டமான நடிகர்கள் நடிக்கும், இதுவரை யாருமே தொடாத எல்லைகளைத் தொடும் பிரமாண்டமான தயாரிப்பு "

                                         என்று விளம்பரம் போட்டுத்தான் நாடகம் மேடை ஏற்றுவார்.

                                   ஆனாலும் கவிஞ்சர் கந்தப்பு செய்த இதையும் சொல்லத்தான் வேண்டும் , கொஞ்சம் விளங்கிக் கொள்ள கஷ்டமான நவீன அங்கத ஸ்டைலில் பாதல் சர்க்காரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட ஏபங் இந்திரஜித் என்ற ஓரங்க நாடகத்தை பிறகொரு இந்திரஜித் என்ற மொழிபெயர்ப்பை தழுவி மேடை எல்லாம் இல்லாமல் வாசிக்கசாலை விளையாட்டு மைதானத்தில், அம்மசியா குளக்கட்டுடன் ஓரமாக நின்ற இலுப்பை மரத்துக்குக் கீழேயும், யதார்த்தமாக உங்களில் நாங்களும் ஒருவர் என்ற கொன்செப்டில் மேக் அப் போடாத நடிக்கர்கள் பார்வையாருக்கு இடையில் இருந்து எழுந்து வந்து நடித்து,மறுபடியும் பார்வையாளருக்குள் போய் இருக்கும் மொடேர்ன் அப்சற்ற்க் ஸ்டைலில் நாடகம் போட்டும் இருக்கிறார்.

                                               சீதாலட்சுமி சுயம்வரம் நாடகத்தில் ஸ்ரீராமனுக்கு நடித்தது எங்களின் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் ஸ்போர்ட்ஸ் மாஸ்டரா இருந்தவர். அவர் நல்ல உயரம், அவரோட இளவயதில் உயரம் பாய்தலில் வடமாகாண சம்பியன் . அவர் பாஞ்ச உயரத்தை பல வருடமா வேற யாருமே பாயவில்லை என்று சொல்லுவார்கள், அவர் குரல் அண்டங்காகம்  அடங்காமல்  சனிக்கிழமை கத்துவது போல இருக்கும், 


                                         ஆனாலும் அந்த நாடகத்தில் ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்  என்றால்   போலவே  ஸ்ரீராமச்சந்திரமூர்திக்கு பேச வசனம் இல்லை,அவரின் தம்பி லட்சுமணன் டப்பின் ஆர்டிஸ்ட் போல ஸ்ரீராமனுக்கு பக்கத்தில் நின்று சவுண்ட் கொடுப்பதால் நாடகம் முழுவதும் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் அம்மாவாசை இரவு போல நல்ல கறுப்பு, அவருக்கு நிறையப் பவுடர் அடிச்சுதான் அயோத்திக்கே கொண்டுபோய் கவிஞ்சர் கந்தப்பு அந்தாளை ஸ்ரீராமன் ஆக்கின மாதிரி இருந்தது.

                                      ஆனால் சீதைக்கு நடித்த அழகான இளம் பெண் மதியாபரணம் டீச்சரின் மகள் பவானி. அவள் மேக் அப் எந்த சோடனைகளும் இல்லாமலேயே கம்பன் வர்ணிச்ச " தே மலர் நிறைந்த கூந்தல்; தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; " மாதிரி இருந்தாள்.

                                        டவுன் இங்கிலிஸ் பள்ளிக்கூடத்தில கெமிஸ்ட்ரி படிப்பித்துக்கொண்டு இருந்த சயன்ஸ் பட்டதாரியான மதியாபரணம் டீச்சர் எப்பவுமே தமிழ்,சைவ சமயம்,இலக்கியம் இதுகளில் நிறைய ஆர்வம் உள்ளதாலும், கவிஞ்சர் கந்தப்பு மேலே மதிப்பு இருந்ததாலும் , தன்னோட ஒரே மகள் பவானியை சீதாலட்சுமி சுயம்வரம் நாடகத்தில் ஜெனகனின் மகளாக நடிக்க விட்டா.

                                   பவானி நடிப்பது கேள்விப்பட்ட , அவளுக்கு அந்த நேரம் நூல் விட்டுக்கொண்டு இருந்த எங்கள் குளத்தடி குழப்படிக் குருப்பில் இருந்த வாக்குக் கண்ணால பார்க்கும் சின்னக் கண்ணன் வந்து தானும் அந்த நாடகத்தில் நடிச்சே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்க கவிஞ்சர் கந்தப்பு

                                     " டேய் நீ நாடகம் பார்க்கிற சனம்களைப் நேராப் பார்த்தா, உண்ட மண்டை கோணாலா போகுமே, காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி ,,,, "

                                          என்று என்னமோ சொல்லி அவனை அடிசுக் கலைச்சு நடிக்க விடவில்லை. ஆனால் பவானி ,சின்னக்கண்ணனை மட்டுமில்லை ,எங்கள் ஊருக்குள்ள எல்லா இளையவர்களின், கனவிலையும் கலர் கலரா வந்து நித்திரையைக் குழப்பிக்கொண்டு மிகப் பிரபலமான அழகில் எல்லாருமே கட்டினால் அவளைக் கட்ட வேண்டும் இல்லாட்டி மொட்டையைப் போட்டுக்கொண்டு சாமியாரப் போக வேண்டும் என்ற மாதிரி ஒரு அலை அந்த நேரம் அடிச்சுக்கொண்டு இருந்தது உண்மை.

                                           ராமாயணத்தில் உள்ள எல்லாருக்கும் தெரிந்த கதையான சீதாலட்சுமி சுயம்வரம் நாடகம் கோசலையின் மைந்தன் தசரதனின் தனயன் ஸ்ரீராமன் , மிதிலை மன்னன் ஜெனகமகாராஜாவின் வில்லை வளைத்துக் காட்ட,ஆயிரம் வருசமா அதே ராமன்,அதே சீதைக்கு மாலை போடும் அரைச்ச தோசை மாவை ஆடுக்கல்லுக்கு குஞ்சரம் கட்டி சோடனை போட்டு அரைக்கும் நிகழ்வு. 


                                              அது பார்க்க கலியான வீட்டில் மணவறையின் முன் நடக்கும் அமளி துமளி போலவே பிண்ணனி திரைச்சீலையில் அரண்மனை அலங்கார மண்டபங்களின் நடுவில் நடப்பது போன்ற நாடகம், அந்த வில்லை முறிக்கும் காட்சியில் ஒரு பெரிய மரத்தால செய்த வில் வைச்சு இருந்தார்கள்,அந்த மரவில்லை ஸ்ரீராமன் இல்லை யாருமே முறிக்க முடியாது அவளவு பாரமான வில்லு,

                                         பிறகு எப்படி நாடகத்தில் ராமன் சிவதனுசு வில்லை முருங்கைக்காயை முறிக்கிற மாதிரி முறிக்க முடியும் என்று சந்தேகம் உங்களைப்போலவே எனக்கும் பன்னிரண்டு தேசத்து ராசாக்களில் கலிங்கத்து ராஜா வேஷம் போடும் போது இருந்தது,


                                                       அந்த வில்லில் ஒரு கொழுக்கி நடுவில் இருக்கு ,அதை கை விரலால் சுண்ட வில்லு ரெண்டா உடையும், ஸ்ரீராமன் மட்டும் தான் அந்தக் கொழுக்கியை விரலால் சுண்டிவிட வில்லு உடைய சீதாப்பிராட்டி விரலால் கொழுக்கியைச் சுண்டிய ஸ்ரீராமனின் ஆண்மையில் சரணடைந்து மாலையை சுயம்வரமாக கழுத்தில் போடுவா,இதுதான் கவிஞ்சர் கந்தப்பு கம்ப இராமயணத்தில இல்லை வால்மீகி ராமாயனதிலையும் இல்லாத அந்த வில்லை உடைக்கிற ஸீனில செய்து வைத்திருந்த உத்தி.

                                   அந்த நாடகத்தில் பன்னிரண்டாவதா வரும் ஸ்ரீராமன் தான் ஜெனகனின் வில்லை உடைக்கவேண்டும். ஆனால் நாடகம் தொடங்க முதலே எனக்கு அந்த வில்லில இருக்கிற கொழுக்கியை நினைக்கவே கை குறு குறுக்கத் தொடங்கி விட்டது,அதைவிட அழகாக சோடிச்சு மேடையில் மாலையுடன் நிக்கும்  பாவானியைப்  பார்க்க,,அடச்  சீ .. சீதையைப் பார்க்க உடம்பெல்லாம் இன்னும் ஜெனரேற்றர் வைச்சு இழுத்த மாதிரி கரண்ட் பாயத் தொடங்க,எனக்கு முன்னால் நாலு ராஜாக்கள் போய் அந்த வில்லை தூக்கி வளைப்பது போல நடிச்சு, அது முறிக்க முடியாத மாதிரி கீழே போட்டு நடிச்சு கவலையுடன் சீதையை பார்த்துபோட்டு வர ,

                                        " வில் கை வீரன் ராமன் நாம் எல்லாம் வெறும் கை வீரர், இதோ இப்போது கலிங்கத்து மன்னன் தன்னுடைய ஆண்மையைக் காட்ட வருகிறார்,வாருங்கள் கலிங்கத்து மகாராஜா "

                                         என்று சொல்ல நான் அஞ்சாவதாக குத்துச் சண்டை வீரன் முகம்மது அலி மேடையில் பாயிற மாதிரி நடு மேடை அதிர வில்லுக்கு மேலேயே பாஞ்சேன். கவிஞ்சர் கந்தப்பு கொஞ்சம் சந்தேகமாத்தான் என்னைப் கடைக் கண்ணால பார்த்தார்,என்னவோ திருகுதாளம் செய்யப்போறான் எண்டுறதை போல,

                                                  அதில பேசுவதுக்கு ஒரு வசனமும் எனக்கு இல்லை,அதால வில்லை எடுத்து கவிஞ்சர் கந்தப்பு சொல்லித் தந்த மாதிரி முறிக்கிற நடிப்பு விட என்னோட நடிப்பு அதிகமானதால் ,சீதை என்னைப் பார்த்துச் சொண்டில சிரிக்க, " மங்கையின் புருவம் வில்லாகும் நோக்கிய பார்வை அம்பாகும் மாமலை ஓர் சிறு கடுகாகும்... " என்ற பாடல் நினைவுவர ,என் விரல் தவறுதால கொழுக்கியில் தட்டுப்பட்டு வில்லு ரெண்டா உடைஞ்சு போச்சு, 


                                        சீதை குழம்பி மாலையை எனக்குப் போடவா என்று கவிஞ்சர் கந்தப்புவைப் பார்க்க , கவிஞ்சர் கந்தப்பு தலையில ரெண்டு கையையும் வைச்சுகொண்டு நரி போல பல்லை நற நற என்று நெரிசுக்கொண்டு என்னைப் பார்க்க, பார்வையாளர்கள் என்ன நடக்குது என்று விளங்காமல், ஒருவேளை இராமயணத்தை இப்ப மாற்றி எழுதிப்போட்டான்களா என்று நினைச்சோ என்னவோ விசில் மட்டும் பறந்தது.

                               கவிஞ்சர் கந்தப்பு உடன ஓடி வந்து திரையை இழுத்து ,

                                   " அண்ணலும் மேல் நோக்க, அவளும் சற்று கீழ் நோக்கஎன்னதுவோ நடந்துவிட இருவருமே நிலை தவற ,வானமது பூச்சொரிய வையகத்தின் வாழ்த்தொலிக்க நங்கையவள் மண வைபோகம் மங்கலமாய் நடக்கும் , நாடகம் இடைவேளைக்கு பிறகு தொடரும் "

                                         என்று சொல்லி முழு மேடையையும் திரைச்சீலை யால இழுத்து மறைசுப்போட்டு என்னட்ட வந்தார்,வந்து என்னோட காதைப் பிடிச்சு திருகி,

                                    " செம்மறி ஏண்டா ,,வில்லை உடைச்சனி, 


                                "  தெரியாமல்  கை விரல்  எகிறிப் போட்ட்டுது  ஐயா "

                          "    அது ராமன் தாண்ட்டா உடைக்க வேண்டும் ," 

                             " அப்படியா  பவானியை  பார்க்க  அவளை  யாரோ கொத்திக்கொண்டு  போறது  போல பயம்  வந்திட்ட்டுது "

                     "  அவள்  பவானி  இல்லையடா  ,,அவள்  சீதை  ,,ஜெனகனின்  மகள்  டா,,வால்மிகியின்  இலக்கிய  வடிப்புடா  அவள்  "

                                  "   மன்னித்துக்கொள்ளுங்க  ஐயா !"

                                 " விழுவானே இப்ப நாடகத்தை இடையில நிப்பாட்டி இன்னொருக்க தொடக்கவைச்சுப் போட்டியே,"

                                     "  மன்னித்துக்கொள்ளுங்க  ஐயா ,,இனி  நான்  இப்படி வில்லை  உடைக்க  மாட்டேன்  ஐயா 
                              
                                           " எத்தினை சனம் நீ வில்லை உடைச்சதைப் பார்த்துதுகளோ தெரியாது,ஏண்டா கழுதை வில்லை உடைச்சனி " எண்டு திட்டினார்,

                               நான் சீதையைப் பார்த்துக்கொண்டே

                                          " அய்யா தெரியாமல்,விரல் அந்த கொழுக்கியில தட்டுப்பட ,வில் உடைஞ்சு போச்சு,என்னை மன்னிச்சுக்கொள்ளுங்க அய்யா,நீங்க தானே நானே நடிக்கத் தெரியாது எண் டு சொல்லவும்,என்னோட உடம்பு பொலிவைப் பார்த்து ராசாவுக்கு நடிக்க வற்புறுத்தி பழக்கிநீங்க " 


                                                  என்றேன் .கவிஞ்சர் கந்தப்புக்கு கோபம் வந்திட்டுது,

                                  " அடே விழுவானே நான் வில்லு உடைக்கிற மாதிரி நடிக்க எல்லாட பழகினன்னான் ,நீ ஏண்டா விழுவானே கொழுக்கியை இழுத்து சனத்துக்கு முன்னால பரிசு கெடுத்துப் போட்டியே, "

                                        என்று திட்டினார்,நான் சீதையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன், அவளும் மாலையை ஒரு ஓரமாக வைச்சுப்போட்டு கவலையோட இருக்கிற மாதிரிதான் இருந்தாள்.

                  அதுக்கு பிறகு,

                                       " ஆயிரத்தின் யானை பலம் படைத்த அசுரக் கோன் , அண்டை தூர தேசம் சேர்ந்த அமர்ந்த வீர மன்னர் வலிமை வீரம் தீரம் நிறைந்த புவியறிந்த வல்லவர் கலிங்கத்து ராஜா வில்லை உடைக்க முயற்சித்து முடியாமல், அந்த முயற்சியில் தன்னோட நாரியை முறிச்சுக்கொண்டு போய் விட்டார் "

                                என்ற கவிஞ்சர் கந்தப்புவின் அறிவிப்போடு, மேடையின் திரை விலக ஆறாவது ராஜா மேடையில் போய் வில்லை உடைக்க முயற்சிப்பதில் இருந்து நாடகம் தொடர்ந்து நடக்க ,நான் நல்லா நாரியை நிமிர்த்திக்கொண்டு, கலிங்கத்து ராஜா சோடனை எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு மேடையின் பின் பக்கத்தால குதிச்சு போக வெளிக்கிடும் போது,சீதையை பார்த்தேன் அவள் அப்பவும் கையில மாலையோடு கடைசியில் ஸ்ரீராமன் வந்து கொழுக்கியை சுண்டி வில்லை உடைப்பதுக்கு காத்துக்கொண்டு இருந்தாள்,நான் அவளுக்கு சிக்னலில்

                                  " உது சரி வராது பவானி , நான் வில்லை எப்படி ரெண்டா மடக்கி உடைச்சு முறிச்சேன் எண்டு பார்தனி தானே பவானி , பேசாம வா பவானி ஓடிப் போவம் பவானி "

                                    எண்டு கேட்டேன் ,அதை கவிஞ்சர் கந்தப்பு மேடையின் ஓரத்தில் இருந்து கண்ட்டுடு மறுபடியும் நரி போல பல்லை நற நற என்று நெரிசுக்கொண்டு என்னைப் பார்க்க தொடங்கவே நான் சத்தமில்லாமல் வீட்டை போட்டேன். எப்பவும் போல அந்த நாடகம் 


                                                 " பாவையின் பார்வையில் கூர்மையாய் ஒன்று வில்லது விழுந்தது துண்டுகளாய் இரண்டு எட்டடியில் எழில் சுமந்த அழகின் அவதாரம் சொட்டும் அழகில் நிறைந்த சீதையை மணந்தான் திக்கெட்டும் புகழ் நிறைந்த சக்ரவர்த்தி திருமகன் " 

                                                     என்று குடுத்துவைச்ச ஸ்ரீராமன் கொழுக்கியை விரலால் தட்டி சிவதனுசு வில்லை உடைச்சு சுயம்வரம் நடந்து முடியும். அது எல்லாருக்குமே தெரிந்த முடிவுதான்.

                                                   அதுக்குப் பிறகு நாடகம் நடிக்கிறது மட்டுமில்லை,,சும்மாவும் வாசிகசாலைக்கு வம்பளக்கவும் போறதில்லை,ஆனால் எப்படியோ மறுபடியும் கவிஞ்சர் கந்தப்பு போட்ட ஜுலிய சீசர் நாடகத்தில் கிளியோபற்றாவா பொம்பிளை வேஷம் போட்டு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,ஆனால் அந்த நாடகத்தில் பொம்பிளை வேஷம் போட்டுக்கொண்டு, மேடையை விட்டு இறங்கி ,,,,,போன நேரம் ஒரு ரோட் சைட் ரோமியாவால் கற்பழிக்கப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவத்தின் பின் நாடகம் நடிப்பதை அடியோடு விட்டேன், ஜுலிய சீசர் நாடகத்தில் எனக்கு நடந்த நாடகத்தைப் பிறகு எழுதுறேன்