Sunday, 24 January 2016

சிங்கி மாஸ்டர்


ஒரு சிலரை அறிந்து கொள்வதற்கு நீங்கள் தொலை தூரம் பயணப்பட வேண்டியிருக்கும்! சில நேரம் அவர்கள் எங்களுக்கு நடுவில்,அல்லது அருகில்  எங்களின் சமகாலத்திலேயே உலாவித் திரிவார்கள். தேடல் பயணத்திற்க்கு பின் அவர்களை பற்றிய அறிதல் உங்களுக்கு தேவைப்படாமலேயே போகலாம், ஆனால் அவர்கள் ஒருவிதமான அபத்தமான் வாழ்க்கை முறையிலும் சில நல்ல சிந்தனைகளை விட்டுச் செல்லலாம்...

                                      ஊரில  இள வயதில் சிறுகதை , நாவல், எழுத்து வடிவில் வந்த நாடகம் போன்ற உரை நடை இலக்கியம் ஆர்வமாகப் படிக்க முக்கிய காரணமா இருந்த ஒருவர் சிவாநந்தராஜா என்ற சிங்கி மாஸ்டர், அவரை மாஸ்டர் எண்டு சொன்னாலும் அவர் எந்தப் பாடசாலையிலும், எந்தப் பாடமும் படிபிக்கவில்லை . மலேசியாவில் பிறந்து ஆங்கில மீடியத்தில்ப் படித்த அவர், அன்றாட வாழ்கையை ஓட்டுறதுக்கு என்ன வேலை செய்தார் எண்டு அறுதியா சொல்ல முடியாது, 

                                    ஏறக்குறைய எல்லா வேலையும் செய்தார் எண்டுதான் சொல்லவேண்டும் ,அந்த வேலைகளிலும் ஒரு வேலை தொடர்ந்து ஆறு மாதத்துக்கு மேல ஒரு இடத்தில செய்தார் என்றதுக்கும் எந்த சான்றும் இல்லை. அவர் கொலும்பில அரசாங்கத்தில இன்கம் டக்ஸ் டிபார்ட்மென்டில வேலை செய்து தனிச் சிங்கள சட்டம் வந்து சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும் எண்டு வர ,சொல்லாமல் கொள்ளாமல் அந்த அரசாங்க வேலைய விட்டுப் போட்டு ஊருக்கு வந்திடார் எண்டு சொல்லுவார்கள்.

                                எங்கள் ஊரில இருந்த வாசிகசாலையில் ,இலக்கிய சங்கத்துக்கு பொறுப்பா இருந்த, இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய தத்துவங்கள், இசங்கள், அவை வந்த இலக்கியப் புத்தகங்கள் எல்லாத்தையும் கரைசுக் குடிச்ச சிங்கி மாஸ்டர் தனியாதான், சுப்பிரமணியம் கடைக்கு அருகில், மசுக்குட்டி மாமி வீட்டில வாடகை ரூமில மாதம் மாதம் கடன் சொல்லி வாடகை கட்டியும்,கட்டாமலும் , மசுக்குட்டி மாமியின் இரக்க குணத்தில குருவிச்சை போல ஒட்டிக்கொண்டு வாழ்ந்தார். 

                                     அவருக்கு மனைவி எண்டு ஒருவரும் இருந்த மாதிரி எனக்கு தெரிந்தவரை இருக்கவில்லை, எனக்கு தெரியாமல் இருந்தது பற்றி என்னால் ஒண்டுமே சொல்லமுடியாது,ஆனால் மசுக்குட்டி மாமியும் அவாவின் புருஷன் விட்டுடுப் போக கொஞ்ச வருஷம் தனியாதான் இருந்தா எண்டு சொல்லமுடியும் .ஒரு விதத்தில அவருக்கு ஒரு பெண் துணை கிடைப்பதில் உள்ள முக்கிய பிரச்சனையே அவர் வாழ்ந்த விதம், அவரின் உலகம் வேற, அவர் இயங்கிய தளம் வேற, அது என்ன எண்டு சொல்லுறன்,

                                             எங்க ஊரில இன்டலக்சுவல் எண்டு சொல்லும் அறிவு ஜீவிகள் நிறையப்பேர் அந்த நாட்களில் இருந்தார்கள் , இருந்தார்கள் எண்டு சொல்வது பிழை, அவர்கள் அதை ஒரு ஸ்டைல் போல ஆக்கி வாழ்ந்தார்கள்,சிங்கி மாஸ்டரும் அப்படிதான் ,அவர் எப்பவுமே ஒரு பருத்தி சீலையில செய்த பையைக் தோளில மாட்டிக்கொண்டு ,சோக்கிரட்டிஸ் போல முகம் முழுவதும் தாடி வளர்த்து , தலைமயிர் அதுபாட்டுக்கு அலை அடிக்க, போடுற உடுப்பில அக்கறை இல்லாமல், எப்பவும் ஜோசிக்கிரதாலோ என்னவோ நெற்றி எல்லாம் சுருக்கம் விழுந்து,அவர் புத்தகம் வாசித்ததை அதிகம் நான் கண்டதில்ல, ஆனால் வாசித்ததை ஜோசிக்கும்,விவாதிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கும், 

                                     எங்கள் ஊரில் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த கிறிஸ்தவரான ஆங்கில ஆசிரியரான அன்டனிப் பிள்ளை மாஸ்டருடன் எப்பவும்   சிங்கி மாஸ்டர் வாக்குவாதப்படுவார் ,

                      " அன்டனி மாஸ்டர் நீங்கள் விசியம் தெரியாமல் பைபிள் பற்றி போதிக்குரிங்க, உங்க பாதர் மாருக்கே ஒழுங்கா வரலாறு தெரியாது, பைபிளின் மூலநூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு எபிரேய, அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது. 

                            " இதுகள் எங்களுக்கு தெரியும் ,மிஸ்டர்  சிவானந்தராஜா , நான் செமினரியில் கொஞ்சகாலம் தியோலாயி  படிச்சனான், இதை திருப்பி திருப்பி எனக்கே போட்டுக் காட்டுறது  ஒரு பிரிஜோசனமும் இல்லை கண்டியலே மிஸ்டர் ,, "

                               "  இல்லை  மாஸ்டர் ,  புதிய ஏற்பாடு முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இயேசுவின் பன்னிரண்டு  சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். அது உங்களுக்கு தெரியுமோ மாஸ்டர் .

                              "  கொஞ்சம்   கேள்விப்பட்டது  தான் ,,நீர்  மிச்சக் கதையை  சொல்லுமேன் மிஸ்டர்  சிவானந்தராஜா "

                                        "  இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்கள் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு, இதை சொன்னா உங்களுக்கு கோபம் வருகுது "

                         என்று பெரிய விளக்கம் கொடுப்பார் , அன்டனிப் பிள்ளை மாஸ்டர் பதில் சொல்லாமல் ஜேசுநாதர் போல பொறுமையாக் கேட்பார்.

                                    சிங்கி மாஸ்டர்  எங்கள் சந்தி ஞானப்பிரகாசம் தேத்தண்ணி கடையில கடனுக்கு சீனி போடாத பிளேன் டீ குடிச்சிக் கொண்டு , மார்கஸ் அரேலியசின் " மெடிடேசன் " புத்தகம் ஏன் பிலேட்டோ சொன்ன  " ரிப்ப்பபிளிக்  " புத்தகத்தை விட நடைமுறையில் பிரிஜோசனமானது எண்டு ஞானப்பிரகாசதுக்கு சொல்லிக்கொண்டு இருப்பார். ஞானப்பிரகாசம் கடனுக்கு கொடுத்த பிளேன் டீ காசு எப்பவரும் எண்டு தீவிரமா ஜோசிதுக்கொண்டு இருப்பார்.

                                   சிங்கி மாஸ்டருக்கு ஏறக்குறைய எல்லா இசங்களும் தெரியும் ,அவர் ஆங்கில அறிவுள்ளபடியால், கொஞ்சம் அட்வான்சாக அவர் காலத்து யாழ்ப்பான தமிழ் எழுத்தாளர்களை விட ஐரோப்பா,மேலை நாட்டு இன்டலக்சுவல் இலக்கிய விசியம் தெரியும் ஆனால் அவர் ஒரு கதையோ ,கவிதையோ,கட்டுரையோ எழுதிய சிலமன் இல்லை, இவை பற்றி அவரிடம் கேட்டால் 

                             "எடேய்  இந்த இசம்கள் எல்லாமடா  ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையேப்பா ,  அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாதடாப்பா  , எனக்கே ஆங்கிலத்தில் தான் அழகா விளங்கும் .." என்று சொல்லுவார் .

                               " எப்படியோ..எங்கள் ஆட்களும்  அவைகளைத் தொட்டு எழுதுகிறார்கள் தானே "

                                       " டேய்   பிளேட்டோ தன்னுடைய குடியரசு என்ற  புத்தகத்தில்  கலையைப்  பற்றி சொல்லும் போது ,என்ன சொன்னார் தெரியுமா "

                              " எனக்கு எப்படி தெரியும்,,எனக்கு பிளேட்டோ என்றால் யார் என்றே தெரியாது,,நீங்களே சொல்லுங்க "


                        " டேய்..அறுவானே  ,பிளேட்டோ , சொன்னார் கலை மனிதனின் விருப்பதிற்கு மாறாக அவனை மாற்றக்கூடிய வலிமை படைத்த அதனால்  மனித குலத்திற்கு நன்மைகள் இருந்தாலும்,தீமைகளே அதிகம். அதனால் கலையை புறக்கணிப்போம் அப்படி புறக்கணிப்பதில் மனித குலத்திற்கு எந்த இழப்பும் ஏற்பட போவது இல்லை. மாறாக வருங்காலம் நன்றாக இருக்கும் என்றார்...அது பெரிய  குழப்பத்தைக் கொண்டு வந்தது  " என்று சொன்னார் 

                                   அந்த நாட்களில் வந்துகொண்டு இருந்த முற்போக்கு ,பிற்போக்கு உள்ளூர் எழுத்துகளை அவர்

                             "எடேய் இவங்கள் எல்லாம்  சும்மா சிலு சிலுப்பு ,இவங்களுக்கு ஆழமா ஜோசிக்க வைக்கும் தத்துவார்த்த எழுத்து எழுததெரியாது "

                               எண்டு சொல்லுவார், அதுகளை வாசிக்குறது வேலை மினக்கேடு எண்டு தாடியைத் தடவி சொல்லி , அவர் அதுகளை வாசிக்கவும் மாட்டார்,

                            " நீங்கள் வாசிக்காமல் எப்படி சொல்லுரிங்கள் " எண்டு கேட்டால் ,

                             " Philip van doren எழுதிய "the greatest gift " என்ற சிறுகதை உனக்குத் தெரியுமா ,சொல்லு அதை எப்பவாவது வாசித்து இருக்கிறியா "

                               " இல்லை,, நான் தமிழ் சிறுகதையே வாசிக்க மாட்டேன்,,விளங்காது "

                          " அந்த சிறுகதையை  வைச்சு frank capra இயக்கத்தில் " its a wonderful life " என்ற திரைப்படம் நைன்டீன் போட்டி சிக்ஸ் இல  வந்தது "

                             "  ஒ அப்ப நான் பிறக்க முதல் வந்த படம் போல,,சரி அந்தக் கதை என்ன சொல்லுது "

                           " அடேய் மடையா,, ஒருவன்  தற்கொலை செய்யப்போறான்,,அவனை ஒரு கடவுளின் தேவகுமாரன் வந்து காப்பற்றுறான் "

                              " ஒ,,இதில என்ன சுவாரசியம் இருக்கு ..சப் எண்டு இருக்கே கதை "

                                " அடேய் செம்மறி,,இந்தக் கதை இப்ப அஸ்ட்ரோ பிசிக்ஸ் இல சொல்லுறாங்களே பரலல் யூனிவேர்ஸ் தியரி  அதைப்போல கொன்செப்ட்  உள்ள ஒரு சிறுகதை "

                           " இப்ப என்னதான் சொல்ல வாரிங்க  மாஸ்டர் "

                           " டேய் செம்மறி   நான் சொல்ல வாறது ,,சிறுகதை எல்லாராலும் எழுத முடியாது, அது ஒரு வித்தை. இப்படியான உலகத்தை பிரட்டின கதைகள படிசுப்போடு சும்மா சீனடி சிலம்படிக் கதையை படிக்க சொல்லுறியா " 

                          " ஒ,  சிறுகதை வாசிக்க எழுதியது ,சரி அந்தப் படம் நல்லா ஒடிச்சா , "

                              " அடேய் கழுதை ,  நல்ல திரைப்படங்கள் வியாபார ரீதியாக தோல்வி அடைவது வழக்கம்போல் இப்படத்துக்கும் நடந்தது... வழக்கம்போல் இப்படமும் இன்று உலகின் தலை சிறந்த படமாக கருதப்படுகிறது..இந்தப் படத்தின் தொழில் நுட்பம், கேமிரா கோணங்கள் .திரைக்கதை ,நடிப்பு இவையெல்லாம் முக்கியமானவை என்றாலும் படத்தின் கதைக்குள் நுழைந்து திரும்பும் போது அது தரும் உணர்வு உண்மையிலுமே அற்புதமானது ,"

                                  "ஒ,,நமது எழுத்தாளர்களும் தமிழில் சிறுகதைகள் எழுதி இருகிரான்களே ,,அதைக் கவனிக்கவில்லையா "

                                 
                                   " எடேய் நான் முதல் பந்தியும், கடைசிப் பந்தியும் வாசிப்பனடா ,அதில பிடிபடும் அவங்களின்ட எழுத்திண்ட விறுத்தம் ,ஒரு கதையைத் தொடங்கிறதும் ,முடிகிறதும் தான் கஷ்டம், நடுவில என்னத்தையும் வைச்சு சலாப்பலாம் "

                            "  ம்  ...ம் "

                            " its kind of insulting to the human race really,..... that people think we can not make something like........It means absolutely nothing."  

                               " ஹ்ம்   ம்  " 


                         " Human conscious mind builds from our subconscious from within from the smallest to the space we know as infinity we know space is What is this 'center of Earth' crap? .....It means absolutely nothing."                          எண்டு சொல்லுவார், அவர் அப்படி சொல்லுறது சரியா எண்டு எனக்கு தெரியவில்லை ,எப்படியோ அவர் உலகத் தரமான பல விசியங்கள் நல்லா தெரிதவர் .முக்கியமான பிரச்சினை அவர் ஆங்கிலத்தில் பிரசங்கம்  போலத் தொடங்கினால் அவர் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம் 

                             "  டேய் உனக்கு ஒரு விசியம் சொல்லுறேன்,,நல்லாக் கேட்டுக்கோ ,,"

                             "  சரி சொல்லுங்கோ "

                        " I just want the truth, not a half truth or assumptions. don't teach what you think is right. I am capable of filling in the blanks so anything and everything I have been made to believe through my life I now question as they only teach us what they want us to know, they only tell us what they want us to believe.இப்ப ஏன் மண்டையைச் சொரியுறாய்


" காதுக்க யாழ்தேவி ட்ரைன் ஓடுற சத்தம் கேட்குது "


" பொறு மிச்சத்தையும் சொல்லி முடிக்கிறேன் "


" சரி சொல்லுங்கோ


" உனக்குத் தெரியுமா for one believe that there is more to this life than what we have been made to believe. my belief is in religion they teach you what they want. religion is the cause of most wars in the past and some in the,, "


"ம்.... மாஸ்டர் நீங்க சொல்லுறது ஒண்டுமே விளங்கவில்லை "


" அடேய் மோட்டுக் கழுதை இது தாண்டா ரியாலிட்டி "


" ம் ம் "


" பசிக்குது மணியம் கடையில் அரை றாத்தல் பாணும் ஒரு இதர வாழைப்பழமும் வேண்டித் தாரியா "


" ம் "


" என்னண்டு வேண்டுவாய் சொல்லு "


" அம்மா கொப்பிக்கு எழுதி அங்கே தான் சாமான் வேண்டுவா,,அதில போட்டு வேண்டித் தாறேன் "


" ஹ்ம்ம் அப்படியே நாலு சுருட்டும் வேண்டித் தருவியா "


" ஹ்ம்ம் வேண்டித் தாரேன் "


                                இப்படிதான் அவருடன் உரையாடல் எப்பவும் முடியும். ஆனாலும் இவை பற்றி இங்கே நான் எழுதுவது  பின்நவினத்துவ ஸ்டைல் கதை இல்லை,எனக்கு அந்த ஸ்டைலில் எழுத தெரியாது  . ஆனாலும் அவர் எனக்கு பல இசங்கள் அறிமுகம் செய்யப்பட்ட புத்தகங்கள்,அதை எழுதிய எழுத்தாளர் பற்றி எப்பவும் சொல்லுவார், முக்கியமா எப்பவும் போஸ்மோட்டம் இசம் எண்டு அடிக்கடி சொல்லுவார், போஸ்மோட்டம் என்ற இறந்தவர்களை சவச்சாலையில் வைச்சு கிண்டிக் கிளறுரதுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் எண்டு விளங்காமல் இருந்தது . 

                                 ஒரு நாள் சுப்பிரமணியம் கடைக் கட்டைக் குந்தில இருந்த நேரம், அவரிடமே கேட்டேன் ,நான் கேட்டவுடன அவருக்கு இலக்கியத் தாகம் வந்திட்டுப்  போல

                           "எடேய்   சொல்லுறன் முதல் ஞானம் கடையில் ஒரு பிளேன் டீயும் வாய்பனும் வேண்டிதாறியாடா  " எண்டு கேட்டார், நான் வேண்டிக் கொடுத்தேன் , அவருக்கு இலக்கிய உற்சாகம் வந்திட்டுது ,

                  " எடேய்  நீ கேட்ட அது போஸ்மோட்டம் இசம் இல்லையடா மடைச் சாம்பிராணியே  ,போஸ்ட் மொடேர்ன் இசம் ,தமிழில பின் நவீனத்துவம் எண்டு சொல்லலாம் , மிஷேல் ஃபூக்கோ தான் அந்த இலக்கிய எழுத்து முறையைக் கண்டு பிடித்தவர்டா மக்கு மடையா  " என்றார் ,நான் அதை புரியும் படி சொல்ல முடியுமா எண்டு கேட்டேன்,

            அவர் கொஞ்சம் ஜோசிதார் ,

                     " எடேய் முதலில் வெளிய வா , அடேய் அவசரத்துக்கு பிறந்தவனே  முதல் அவசரப்படாதை , மனியத்திட்ட கடையில ஒரு கனகலிங்கம் சுருட்டு வேண்டிதா சொல்லுறன் "

                             என்றார் ,நான் சுருடுக்கும் படி அளந்தேன். குந்தில இருந்து அதைப் பத்திக் கொண்டு இருக்க , அந்த நேரம் பார்த்து ஒரு நாய் வந்து, வைரவர் கோவிலுக்கு முன்னால இருந்த லைட் போஸ்ட்டை சுற்றி சுற்றி பின்னங் காலை தூக்கி மணந்து பார்கிறதை எனக்கு காட்டினார்,

                 " அடேய் இப்ப நாய் என்ன செய்யப் போகுது சொல்லு பார்ப்பம் " என்றார்,

                                 நான் " நாய் பின்னங் காலை வேற என்னத்துக்கு பரதநாட்டியம் ஆடவா தூக்குது, தூக்கி மூத்திரம் பெய்யப் போகுது " என்றேன்,

                              சொன்ன மாதிரி நாய் பின்னங் காலை தூக்கி வலு சிரத்தையா லைட் போஸ்டுக்கு தண்ணி வார்க்க , அவர் என்னைப் பார்த்து

                       " அடேய் விழுவானே இப்ப பார்த்தியா , இந்த நாய் முன்னப் பின்ன ஜோசிகாமல் இயல்பா பின்னங் காலை தூக்கிச்சுதெல்லா ,  இது பின் நவீனத்துவ நாய் " எண்டு சொன்னார் ,

                       " அப்ப நாய் முன்னங் காலைத் தூக்கி இருந்தா முற்போக்கு நாய் எண்டு சொல்லலாமா " எண்டு கேட்க நினைச்சேன் கேட்கவில்லை.

                              "அடேய் செம்மறி ,  பின்நவீனத்துவம் என்றால் ஒருவகை எழுத்து முறை என்று எண்ணிக் கொண்டிருக்கிராய் என நினைக்கிறேன். அப்படி அல்ல , அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு எழுத்துமுறையும் அல்ல. அது ஒரு சுவாரசியமான பொதுப்போக்கு மட்டுமேடாப்பா "

                          எண்டு சொல்லிடுப் போட்டார்! உண்மைதான்,,இந்த இசம்கள் இமசைதான் விளங்கிக்கொள்ள , இருந்தாலும் வாசிக்க சுவாரசியமா சில நேரம் இருக்கும் போல இருந்தது அவர் சொல்லும் விளக்கம் கேட்க .

                                          அதுக்குப் பிறகு அவருக்குப் பின்னாலா திரிந்து பின்நவீனத்துவம் என்றால் என்ன எண்டு நான் கேட்கவேயில்லை , ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கத் தொடன்கிய காலத்தில் அது என்ன விசியம் எண்டு நோண்டிப்பார்க்க , உண்மையில் அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியடைந்து, எல்லாவற்றையும் தர்க்கவியல் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் ஏற்பட்ட, அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப்படுத்துகிறார்கள். 

                                   பின் நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுவான எண்ணம், இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார் மிஷேல் ஃபூக்கோ, குறிப்பாக ஒழுங்கமைப்பு அதிகாரத்தையும் அதன் முறைமைப்படுத்தலையும் குறித்த சிக்கல்கள் பற்றி ஆராய்வது பின்நவீனத்துவம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இசம்கள் எல்லாம் ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையே அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாது ,எனக்கே ஆங்கிலத்திலதான் அது விளங்கியது.

                       எல்லா இயக்கமும் மும்மரமா யாழ்பாணத்தில் இயங்கிய காலத்தில் சிங்கி மாஸ்டர் எந்த இயக்கத்துக்கும் சார்பாக இருக்கவில்லை,ஆனால் அவர் கற்பனாவாத சோசலிசம் என்று ஒரு கட்டுரை உள்ளூர் பத்திரிகையில் எழுதி இருந்தார் என்று ஒரு முறை எனக்கு காட்டி இருக்கிறார் ,அதில அவர் எழுதியதுகளும் எனக்கு விளங்கவில்லை ,சுருக்கமா இதில என்ன எழுதி இருகுரிங்க என்று கேட்டதுக்கு, அந்தப் பேப்பரை வேண்டி சுழட்டி எறிஞ்சு போட்டு ,

                       " எடேய், நாசம் அறுவானே இதுவுமா உனக்கு தெரியாது ,   முதல் சோசலிச நாடாக சோவியத் யூனியனும் அதனையொட்டிப் பல நாடுகள் சோசலிச நாடுகளாக மாற ஒரு சக்தி வாய்ந்த சோசலிச முகாம் உருவாகியது. 
                          
                               "   ஒ ,,அப்படியா,,அதுக்குப் பிறகு என்ன நடந்தது .."

                       
                          " அத்தகைய மகத்தான சாதனைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ் வழியில் நின்று நிகழ்த்திக் காட்டிய லெனின், ஸ்டாலின் மறைவிற்குப் பின்பு பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டும் தத்துவத்தைச் செழுமைப்படுத்தும் போக்கிலும் சமூக நிகழ்வுகளின்  மாற்றங்களுக்கு உகந்த வகையில் வழிமுறைகளை வகுப்பதிலும் கோளாறுகள் ஏற்பட..." 

                                " அதார்  மார்குஸ்,,எக்ன்கிஸ் ,,லானின்,,,ச்ச்டிளின்   " 

                              "டேய்,கோவேறு  கழுதை  அவர்கள்  தான்,,கார்ல்  மாக்ஸ்,,,பிரெறேடிக்ஸ்  ஏங்கெல்ஸ்,,,வில்டாடிமிர்  உளியானிச்  என்ற  லெனின்,,மற்றது  ஜோசப்  ஸ்டாலின்,,,நல்லாக்  கேட்டுக்கோ   " 

                            " ஹ்ம்ம்,,  இரும்பு  அடிக்கிற  இடத்தில  இலையான்  வந்து  மாட்டின  மாதிரி  மாத்திப்போட்டனே   " 

                                "  என்னடா  உனக்குள்ள  பிசத்துறாய்  " 
                               
                           "  இல்லை,,இதெல்லாம்  தெரிந்து  எனக்கு  என்ன  வரப்போகுது "
                              
                            "  இதெல்லாம் தாண்டா ,,உலக அரசியலின்  போக்கு,,தெரியுமா   " 
                              
                                "  எனக்கு நான்  போற  போக்கே  பிடிபடுகுது  இல்லையே  மாஸ்டர்  "

                            "    பொறு,,மிச்சத்தையும்  சொல்லவிடு ,,"

                                "    ஹ்ம்ம்,,சொல்லுங்கோ "

                                   " அதன் விளைவாக வர்க்க சமரசப் போக்கும் நாடாளுமன்ற வாதமும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தோன்றி படிப்படியாக அக்கட்சிகளின் அடிப்படையையே சீரழித்துப் போட்டாங்களடா மூதேசிகள்  " 

                                       என்று கோபமாக, ஆனால் அவர் எப்பவும் கதைக்கும் பேச்சுமொழியில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு பொது மேடையில் பேசுவது போல  சொன்னார் .எனக்கு இவளவு முற்போக்கு சிந்தனையை ஜோசிக்கவே  மண்டைக்குள்ள யாரோ மணி அடிக்கிற மாதிரி இருந்தது.

                                  சிங்கி மாஸ்டர், கொஞ்சம் வித்தியாசமா , நிழலா இயங்கியதால் , அவரின் உண்மையான அறிவு வீச்சைப் புரிந்துகொள்ளாத பலருக்கு அவர் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்க,,யாரோ அவர் 

                          " ........ " தின்  உளவாளியா இருக்கலாம் எண்டு வதந்தியைக் கிளப்ப ,ஒரு இரவு அவர் வீட்டுக்கு வந்த " ......  " க்க ஆட்கள் , அவர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள் எல்லாத்தையும் இழுத்துக் கொட்டி ,தேடு தேடு எண்டு சல்லடை போட்டுத் தேடி , அவரின் கண்ணைக்கட்டி , கை இரண்டையும் பின்னாலா கட்டி வேனில ஏத்திக்கொண்டு போனதா ,மசுக்குட்டி மாமி சொன்ன செய்தி கொஞ்சம் கொஞ்சமா ஊருக்குள்ள கசியத் தொடங்கியது , 

                                 அவரை தேடுறதுக்கு அவருக்கு எண்டு ஒரு குடும்பமோ ,மனைவியோ ,பிள்ளைகளோ இருக்கவில்லை . அவருக்கு அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு யாருக்கும் தெரியாது. அவரைத்  தேட  வெளிக்கிட்டால் வீண்  சோலிகள் இன்னும் சந்தேகமாக வரலாம்  என்பதால் அப்போது   இருந்த  விடுதலைப்போராட்ட  கால நிலவரத்தில்   யாரும்  முன்னுக்குத்  தலையைக்  கொடுக்க  வரவில்லை .

                                 மசுக்குட்டி  மாமி  சிங்கி மாஸ்டர்  இருந்த  அறையைப் புதிதாக வெள்ளை  அடிச்சு  வாடைக்கு விட்டா. சிங்கி மாஸ்டர் சேகரித்து வைத்து இருந்த புத்தகங்களைக்  கழிவுப்  பேப்பர் விலைக்கு  நிறுத்து  வித்துப் போட்டு   முன்னுக்கு  ஒரு  சின்னப்  பத்தி  இறக்கி வாடகைக்கு விட்டா. அதைக்  குத்தைக்கு எடுத்த  பரமானந்தம் அவரோட தனலட்சுமி அச்சுக்கூடத்தில்  அடிக்கும் சிவாயி  எம் யி ஆர் சினிமாப் படங்களில் வரும்  பாடல்களை அச்சிட்ட  சின்னச் சின்னப்   புத்தகங்களை  அதில்  அடுக்கி  வைச்சு  இருந்தார்.
.
.