Thursday, 17 September 2015

ஒரு நாயும், ஒரு பூனையும் ,ஒரு சமூகப் பிறழ்வும் ..

எங்கள் எல்லாரோட  வாழ்கையும்  ஒரு  நாவல். ஆனால்  எல்லாராலும் அதை ஒரு கைதேர்ந்த  எழுத்தாளர் போல எழுத முடியாது. ஆயிரம்  கதைகள்  நிறைந்த  வாழ்க்கைப்பயணம்  ஒரு  நிஜமான அனுபவத் தொகுப்பு. சிலரால் மட்டுமே  அதை  ரசனையாக  எழுதமுடிகிறது. அவர்களை எழுத்தாளர் என்று சொல்கிறார்கள். சிலநேரம் அந்த எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தைவிடவும் சுவாரசியமாக இருப்பார்கள்.

                                                 ஒஸ்லோவில் சில நாட்கள் முன் நோர்வே மொழியில் எழுதிய புத்தகக் கண்காட்சி நடக்குது எண்டு செய்திகளில் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.அதை விட சில முக்கியமான எழுத்தாளர்கள் வேறு அந்த இடத்தில வந்து இருந்து கொட்டாவி விட்டுக்கொண்டு அவர்களின் புத்தகம் வேண்டும் பாவப்பட்ட ஜீவன்களுக்கு அந்தப் புத்தகத்தின் முதல்ப் பக்கத்தில் கையெழுத்து வைத்துக் கொடுப்பார்கள் எண்டும் பீதியக் கிளப்பிக்கொண்டு செய்திகளில் அழகான இளம் பெண்கள் விபரமா " ஏன் புத்தகங்கள் வாசிக்க வேண்டும் " எண்டு விளக்கம் வேறு கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்,

                        " அழகான இளம் பெண்கள் விளக்கம் கொடுத்தால் அதில கட்டாயம் விசியம் இருக்கும் " எண்டு என்னோட குருநாதர் " தமிழ்த் தென்றல் " பாவலேறு மன்மதராஜன் சொல்லி இருக்குறார் அதால வந்தா வா போனாப் போ எண்டு " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! " என்று சொல்லிக்கொண்டு போனேன்.  

                               வாழ்க்கையையே நினைச்சுப் பயப்பிடக் கூடாது எண்டு " நோதலும் தணிதலும் அவற்றோ ரன்னசாதலும் புதுவது அன்றே, வாழ்தல்இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் ..." என்று ஆயிரம் வருடம் முன் கணியன் பூங்குன்றனார் சொல்லி இருக்க,யாராவது புத்தகங்களுக்கோ,அல்லது அதை எழுதியவர்களுக்கோ பயப்பிடுவான்களா,சொல்லுங்க பார்ப்பம்...

                              தமிழே தடுமாறும் என்னைப் போன்ற " ஆ " வெண்டு அண்ணாந்து விடுப்பு பார்க்கும் அரை அவியல்களுக்கு நோர்க்ஸ் மொழியில் புத்தகங்களின் அறிமுகம் எல்லாம் கொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும்,  " புத்தகக் கண் காட்சி ஒஸ்லோவில்  " என்ற  தலைப்பில் ஒஸ்லோவில் வாழும் ,அழகான இளம் தமிழ்ப் பெண்கள் மளிகைக் கடையில வேண்ட வேண்டிய பொருட்களின்  விபரம் எழுதிய லிஸ்ட் ஐ உலகத் தரமான கவிதை எண்டு சொல்லி வேப்பம் குழை அடிக்கும்  தமிழ் எழுத்தாளர் அவரின் பொழுது போகாத நேரம் முதுகு தேய்க்கும் " ப்ளொக்கில்" இது தொடர்பாக எழுதியிருந்தார் .

                                     அது இன்னும் ஆர்வத்தைக் கிளப்ப ,  அங்கே போய் விடுப்புப் பார்த்த போது இந்தளவுக்கு  " தென்னாலிராமன் தென்னை மரத்தில ஏறிப்  புல்லுப் புடுங்கின " மாதிரி பாமரத்தனமாயா ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்  எழுதுவாரா  எனத் தான் நினைத்தேன்.

                         நான் அறிந்த மற்றும் உணர்ந்தவைகளை என் கோணத்தில் பகிர்ந்துகொள்வதே இந்தப் பதிவு.... 

                             நகரின் முக்கிய இடத்தில போடப்பட்ட பந்தல்களின் கீழே , தஞ்சைப் பெரிய கோவில் போல நிறையப் புத்தகங்கள் குவித்து வைத்து இருந்தார்கள். அவளவு படைப்புகள் ,கதைகள்,நாவல்கள்,உரை நடைகள்,புனை கதைகள்,கவிதைத்தொகுப்புக்கள் ,அதில வரும் சம்பாஷனைகள்,உரையாட்டல்கள்,வாக்கு வாதம்கள், எல்லாம் புத்தகங்களில் இருத்தும் அந்த இடம் மயான அமைதியாக இருந்தது. புத்தகங்கள் அப்படிதான் எவளவோ அறிவான விசியங்களை வைத்துக்கொண்டு அடக்கமாக இருக்கும் போல இருந்தது அந்த இடம் . 

                               நோர்வே பணக்கார நாடு, இங்கே புத்தகம் படிப்பவர்கள் அதிகம் இருக்குறார்கள் என்பதைப் பல வருடம் குப்பை கொட்டுவதால் அறிந்து இருக்கிறேன். அதனால உலகத் தரமான தரத்துடன், சும்மா கையை வைக்க வழுக்கிக்கொண்டு போகும் வள வள பேபரில்,அழகா பயின்டிங் பண்ணி, அதுக்கு

                                     " நட்டுவ மேளம் வாசிக்கிறவன் பொஞ்சாதி வெத்திலைப் பெட்டிக்க விழுந்த "

                                மாதிரி பரபரப்பான தலைப்பு வைத்து நிறையப் புத்தகம் ஒவ்வொரு வருடமும் பதிப்பித்து வெளியிடுகின்றார்கள் . இந்த நோர்வேயிய மொழிப் புத்தகங்களில் சொல்லும் விசியம், அல்லது சொல்லும் முறை எப்பவும் நோர்வே காலநிலை போலவே " சப் " எண்டு தாமோதரவிலாஸ் சாம்பாரு போலத்தான் அதிகம் இருக்கும். ஜோஸ்டின் கார்டரின்  " சோபிஸ் வேர்ல்ட் " போன்ற அட்டகாசமான கதை உள்ள சில நாவல்கள் எப்பவாவது சிலது உலக அளவில் நோர்வேயிட்கு வெளியே கவனிக்கப்படும். 

                                ஆனாலும் நான் போனேன், போய் சுவாரசியமான அந்தப் புத்தகங்களின் தலைப்புகளை கொஞ்சம் மேய்ந்தேன் . உண்மையில் பல புத்தகங்களின் தலைப்புக்கள் கவிதை எழுதக் கூடிய சில சாத்தியங்களை எப்பவும் போல தந்தது உண்மை. மற்றப்படி சில எழுத்தாளர்கள் கையில பேனையை வைச்சு சுழட்டிக்கொண்டு ,ஒவ்வொருத்தரும் கல்யாணராமன்கள் போல இருந்தார்கள்,

                             ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் எப்படி இருப்பார் எண்டு இதுவரை தெரியாததால் கொஞ்சம் கிட்டத்தில போய் அவர்களைப் பார்த்தேன்.  நம்பும்படியாக அவர்களும் என்னைபோலவே இருந்தார்கள். சிலர் என்னைவிடக் கேவலமா இருந்தார்கள். சிலர் பேனையை மேசையில் தட்டிக்கொண்டு அங்கே புத்தகங்களை பிரட்டிப் பிரட்டிப் பார்த்துக்கொண்டு இருந்த இளம் பெண்களின் பின் அழகையும், முன் அழகையும் இலக்கியத்தனமாகப் பார்த்துக்கொண்டு

                       " இவளை அடுத்த கதையில் காதலித்துக் கம்பி நீட்டுற மாதிரிப் போடுவமா, அல்லது அவளை அடுத்த கதையில் கதாநாயகி ஆக்கி சோரம் போக வைப்பமா "

                      எண்டு ஜோசிக்கிற மாதிரி இருந்தார்கள். 

                         ஜோ நாஸ்போ என்ற பிரபல கிரிமினல் நாவல் எழுதும் எழுத்தாளரைச் சுற்றி நிறைய அவரோட விசிறிகள் கும்பலா நிண்டுகொண்டு அவரின் அடுத்த புத்தகம் பற்றி திகில் முகத்தில தெறிக்க கேட்டுக்கொண்டு இருந்தார்கள், அந்தாள் அவளவு பேமஸ் இங்கே . அவர் கதைகளில் " சதக் சதக் " எண்டு கத்தியால கண்ட பாட்டுக்கு கண்ட இடமெல்லாம் குத்தி, " டுமில் டுமில் " எண்டு துவக்கால சுட்டுத் தள்ளி ,அவரோட நாவல்களில் உத்தரவாதமாக ரத்தம் வழிய வைக்கும் ஜோ நாஸ்போ நேரில் பார்க்க ஒரு சின்ன பூனைக்குட்டி போல இருந்தார், 

                                 குறைந்த பட்சம் ஒரு கடுவன் பூனை போலத் தன்னும் இல்லை அவரின் தோற்றம், ஆனால் அவரின் எளிமையின் பின்னே கண்கள் நிறைய மர்மங்களை மறைப்பது போல இருந்தது அவரின் ரகசியப் பொலிஸ் பார்வையில் நிறைய  முடிச்சுக்கள் அவிள்க்கப்படாத கதைகள்  கடைசி  வரிகளில்  எதிர்பாராத திருப்பங்களுடன் காத்திருப்பது போல இருந்தது  ... 

                   ஒரு வயதான எழுத்தாளர் தலையை எங்கோ எழுதத் தொடங்கின காலமே தொலைத்த மாதிரி,

                     " என்னத்தை எழுதிக் கிழிச்சு என்ன வரப்போகுது "

                                    என்பது போல சூனியதைப் பார்க்கிற மாதிரி பார்த்துக்கொண்டு சோகிரடிஸ் போல தாடி வளர்த்துக்கொண்டு இருந்தார்,ஒரு வேளை அவர் தத்துவ நாவல்,கதை எழுதுவாரோ எண்டு நினைச்சுக்கொண்டு அவரைப் பார்க்கவே மார்க்ஸ் அரேலியஸ் போலப் பாவமா இருந்தது. அதிசயமா அவர்தான் என்னோட கதைத்தார்.ஒரு வேளை அந்தாளோடு கதைச்சாலே வம்பு எண்டு பலர் கதைக்காமல் இருந்து இருக்கலாம் போலவும் இருக்கலாம்.அவர் என்னிடம் 

                      " என்ன விதமான புத்தகம் தேடுறாய் " எண்டு சிரித்துக்கொண்டு அன்பாகக் கேட்டார் ,¨

                                  நான் " புத்தகம் வாசிக்க நேரம் இல்லை ,அதால வேண்டுவதில்லை, சும்மா தலைப்புகளைப் பார்கிறேன் " என்றேன்,    

                           அவர்   " அப்படியா, ஏன்பா உன்னைபார்த்தாலே பொறுப்பு ஒன்றுமே இல்லாதவன் போல இருக்கிறாயே, ஏன் உனக்கு புத்தகம் வாசிக்க நேரம் கிடைப்பதில்லை "

                               எண்டு இன்னும் கொஞ்சம் அன்பாகக் கேட்டார் ,  அதுக்கு நான்

                        " கிடைக்கிற நேரங்களில் எங்கள் நாட்டின் சினிமா நடிகைகளின் சேலை இடுப்பில இருந்து ஏன் வழுக்கி வழுக்கி கழண்டு விழுந்தது போன்ற கிசு கிசு செய்திகள் வரும் பத்திரிகைகள் தான் அப்பவும் வாசிப்பேன் அய்யா "  

                        "  ஒ ..அதென்ன கிசுகிசு க் கதைகள் ஈரோடிக் இலக்கியம் என்று சொல்வார்கள் அதுவா  "

                               " இல்லை,,இது அதைவிடக்  கேவலம் அய்யா,,இரவு ராணிகளின் ஜில் ஜில் மசாலாக் கதைகள் அய்யா " 

                    " ஒ..அதுவா,,,அந்த மாதிரிப்  புத்தககங்கள் இங்கே இல்லையேப்பா...உன்னோடு முகத்தில  அதுகள் வாசிக்கிற  களை கொஞ்சம் தெரியுது ,,அதுகள்  புத்தகங்களே இல்லைப்பா..ஒரு  நல்ல புத்தகம் வாழ்கையின் பிரதி பிம்பம் பா ,," என்று சொன்னார் 

                       அவருக்கு நான் சொன்னது முழுவதும் விளங்கவில்லை போலவும்  ஆனாலும் அவர் இதை சொல்லியே ஆக வேண்டும் என்பது போல

                                   " சார்ல்ஸ் புயூகொவ்ஸ்கி சொன்ன மாதிரி புத்தகங்கள் ஒரு வாழ்க்கையின் வரன்முறைக்கு உட்படாத நிழலின் இருட்டு பிம்பம் , நாங்க எல்லாருமே எங்கள் வாழ்கையில் அரைவாசிதான் நாங்களா வாழுறோம், 

                             "  அப்படியா  அய்யா,,ஆச்சரியமா  இருக்கே "

                                    அல்லது     ஜீன் பால் சார்த்தர் சொன்ன மாதிரி இப்படியும் சொல்லலாம்,  யதார்த்தம் நினைவின் மீட்டல்களை மறுதலிக்கும் இயங்கியலின் வழி மொழிதலை மிகுதி அரைவாசி அபத்தமான அந்த அனுபவங்களுடன்  இரை மீட்டி வாழ்கிறோம்,"

                                    " இதைக்கேட்க  உடம்பெல்லாம்  புல்லரிக்குது,,ஆனால்  புரிந்துகொள்ள முடியவில்லை  அய்யா "

                                " புத்தகங்கள் மிச்ச வாழ்கையின் அர்த்தத்தை இன்னொருவரின் பிரஞ்சை இன் ஆத்மதேடுதலாய் இருப்பின் அர்த்தத்தைச் சொல்லும் "   

                                  "     ஜீன் பால் சார்த்தர்  யார்  அய்யா  "

                                " அவர் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர்,,சாத்தரிசம்  என்பதை  அவர்தான்  எழுதிக்காட்டினார் "

                                  "  அப்படியா,,இப்படியான  இசம்கள்  எனக்கு  விளங்காது  அய்யா "

                                " ஆல்பர்ட் காம்யு  தெரியுமா ,,அவர்  நாவல்  வாசித்து  இருக்கிறாயா "

                             "     ஓம்,,அய்யா  அவர்  எழுதின  அந்நியன்,,பிளேக்  ,,ரெண்டும்  வாசித்து இருக்கிறேன் "

                               " பிளேக்  ..அது  ஒன்று  போதுமே,,,உனக்கு  உலகத்தின் போக்கை விழிப்புணர்வு செய்ய வைக்க "

                             "   பிளேக்  ஜனரஞ்சக நாவல்  போலதானே  எனக்கு இருந்தது,,ஒரு  கதைசொல்லி போல  இருந்தார் ஆல்பர்ட் காம்யு  அதில "

                        "  இல்லை,,பிளேக்  நீ ஒருமுறை வாசித்தால்  அப்படி  இருக்கும்,,நாலுமுறை  வாசி,,நாலாவது முறை அதில உள்ள தத்துவம் விளங்கும்    "  என்றார்,

                               நான் குழம்பிப் போட்டேன். இந்த ஆளிட்ட வந்து தெரியாமல் மாட்டிப் போட்டேனே எண்டு ஜோசித்து, 

                           " நீங்க சொல்லுறதைக் கேட்ட என்னோட மண்டை பம்பரம் போல கிறுகிறுக்குது , புத்தகக் கண்காட்சி செய்தியில் விளம்பரத்தில் அந்த இளம்பெண்கள் இப்படி ஒரு விளக்கம் சொல்லி இருந்தால் நான் இந்த இடத்துக்கு வேலை மினக்கெட்டு வந்தே இருக்க மாட்டேன் " 

                       எண்டு காலில விழாத குறையாகச் சொன்னேன், 

                          அவர் சடார் எண்டு 

                             " என்ன இப்படி சொல்லுறாய்,என்னோட ஒரு நாயும் ஒரு பூனையும் ஒரு சமூகப் பிறழ்வும் என்ற நாவல் நோர்வே பல்கலைக்கழக தத்துவ டிகிரி மாஸ்டர் பாடத் திட்டத்தில் உள்ளது,உன்னைப்பார்த்தால் நிறைய ஜோசிக்கும் ஒரு ஆள் போல இருக்கே உன்னோட முன் நெத்தியில் ஒரு பொறி இருக்கு தத்துவ ஆன்ம விசாரணையின் போக்கு இருக்கே " எண்டு சொன்னார் ,

                         நான்  " ஐயா எனக்கு பொறியும் இல்லை, இப்ப வெறியும் இல்லை ,நானே போக்கிடமே இல்லாமல், " சக்கடத்தார் குதிரையில் ஏறிக் கூடவே மணியகாரன் பெண்டிலையையும் ஏத்தின  " மாதிரித் தடுமாறுகின்றேன் நீங்க என்னை வைச்சுக் காமடி செயுரின்களே ,என்னோட குல தெய்வம் வீராளி அம்மாளாச்சியே  இதைப் பொறுக்க மாட்டா " 

                      எண்டு சொல்லி முடிய, பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்று  நினைச்சு என்ன நடக்குது எண்டு பார்ப்பம் எண்டு போட்டு 

                       " நானும் சும்மா பேஸ் புக்கில ஆலை இல்லா ஊரில இலுப்பைப்பூ சக்கரை போல எல்லாரையும் குழப்பிக் கவிதை ,வெங்காயம் தெரியாத .. இக்கு ..... ஐ நல்லா இழுத்துக் காட்டின மாதிரி ரீல் விட்டுக் கதை விட்டுக் கதை எழுதுவேன் " எண்டேன்.

                         அந்தாளுக்கு " குருவுக்கும் நாமம் தடவி போட்டு, கோபால பெட்டியில் கைபோட்டது போல " கோபம் வந்திட்டுது, 

                              " பேஸ் புக்கில எழுதுறதும் நல்ல வெய்யில் எறிக்கிற நேரம் தார் ரோட்டில தூறல் மழை பெய்யுறதும் ஒண்டுதான் " எண்டு கையை மேசையில் பிடல் காஸ்ட்ரோ போல குத்தி கோபமா சொன்னார் ,

                               நான்  " ஐயா நானே கொஞ்சம் புது புது விசியங்களை,புது புது விதமாத் தொடக்கி எழுதுறேன், அதையே தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப் பொன் திருடுவான் பழமொழி போல  கொப்பி அடிச்சு எழுதுறாங்க ஐயா, என்னோட பல கவிதைகளில் இருந்து சில சில வரிகளையும், வசனம்களையும் ஒருவர்  சுட்டு ஒரு தனிக் கவிதை எழுதி ,அது புகழ் பெற்ற ஒரு இலக்கியப் பத்திரிகையில் வந்துள்ளது, "   எண்டு சொன்னேன்,

                    அதுக்கு அவர் 

                 " கொப்பி அடிக்கிறவன் பிட் பொக்கட் அடிக்கிறவனை விட கேவலம் கெட்ட மனுஷன், சரி நீ என்ன எல்லாம் எழுதுவாய் " 

                      எண்டு கேட்டார், நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அவர் கொஞ்சம் ஜோசித்தார் 

                     நோர்வே மொழியில் கதைத்துக்கொண்டு இருந்த அவர் சடார் எண்டு,ஆங்கிலத்தில பாஞ்சு

                      " Anyone who lives in her or his own world is crazy. Like schizophrenics, psychopaths, maniacs. I mean people who are different from others. Like you,me and anyone,,do you know most of the well known writers are Sociophobia affected ? 

                      எண்டு கேள்விக் குறி போட்டுக் கேட்டுப் போட்டு ,,அவர் ஆங்கிலத்தில் சொன்னதின் அர்த்தம் பிடிக்க நான் தடுமாறுவதைப் பார்த்து,

                    " கவிதை எந்த மொழியில் எழுதாவாய் " எண்டு நோர்ஸ்கில் கேட்டார், 

                     " "வட வேங்கடத் தென்குமரித் தீம்புனல் பெளவமென்று என் யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தில் அகஸ்தியர் பொதிகை மலையில்க் கண்டு பிடித்த என் தாய் மொழி தமிழில்த் தான் இலக்கணப்  எழுத்துப் பிழை விட்டு விட்டு எழுதுவேன் " ,

                     எண்டு சொன்னேன், அதுக்கு அவர் 

                         " ஏன்பா உன் தாய் மொழியைக் கழுத்தை நெரிச்சு கொல்லுறாய், நாசமாப்போக,,தன்னோட தாய் மொழியில் இலக்கணப் பிழை விட்டு எழுதுபவனை மன்னிக்கவே முடியாது "

                              எண்டு சொல்லிக் ,  கொஞ்சம் ஜோசித்துப் போட்டு ,

                          " தமிழ் மொழியா உன் தாய் மொழி,நல்லா இருக்கே கேட்கவே ,உலகத்தில் உள்ள ஆறு கிளாசிக்கல் மொழியில் அதுவும் , ஒரு கிளாசிக்கல் மொழியே , அப்படியான மொழியை கை விடாதை  ,என்னவோ எழுது, எழுத்து அழியும் வரை எழுது,முதலில் உனக்காக எழுது , ஒரு நதியில் நீர் ஓடுவது போல அந்த நதிக்கரை வழியே வரும் யாரோ ஒருவரை அது ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கும்....."  

                          எண்டு லொரியில அடிப்பட நாய் கடைசியா இழுத்து இழுத்து கத்தினது போல நோர்வே மொழியில் அழகா சொன்னார்.பாவம் அவர் எழுதியதும் ஒரு நடுக் காட்டில ஓடுற நதி போல அதன் ஆழம், அழகு, அர்த்தம் அறியப்படாமலே ஓடி, ஒரு பரந்த கடலின் கழிமுகத்தில் விழுந்து காணாமல்ப் போய் இருக்கலாம் போல இருந்தது ... 

                      அவரே கொஞ்சம் ஜோசித்துப் போட்டு 

                    " அறியாதவன் அறியாதவனைப் போலத் தானே நடப்பான். இதில் என்ன அதிசயம். அதனை எதிர்பாராதது உன் பிழையே. வெள்ளரிக்காய் கசக்கிறதா தூர எறிந்து விடு. வழியில் முள்ளா விலகிப் போ. அதை விட்டு விட்டு வெள்ளரிக்காய் ஏன் கசக்கிறது, முள் ஏன் தோன்றியது என்ற ஆராய்ச்சியில் இறங்குவது அறிவீனம். எல்லாம் எண்ணங்களே என்பதால் எண்ணங்களை சரி செய்தால் எல்லாமே சரியாகி விடும், அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் மார்கஸ் அரேலியஸ் " 

                        எண்டு பேஸ் புக்கில் இன்றைக்கு நடக்கும் அநியாயத்துக்கு அன்றைக்கே கிரேக்க தத்துவத்தில் பேதி மருந்து இருக்கு போல சொன்னார்..

                           நான் எனக்கு முன்னால நிண்ட இளம் பெண்ணுக்கு எதுக்கு மூக்கு கிளிச்சொண்டு மாங்காய் போல வளைஞ்சு இருக்கு எண்டு ஜோசித்துக் கொண்டு இருந்தேன்..... 

                         கொஞ்ச நேரத்தில அவரோட மேசையைச் சுற்றி நிறைய கம்பஸில் படிக்கிற பிள்ளைகள் வந்திடார்கள். அவர்களுக்கு அவரை விட அவரின் எழுத்து நெருக்கமாக இருந்து இருக்கலாம் போல இருந்தது , நான் ஒரு ஓரமாக ,ஒரு நல்ல வாசகன் போல ஒதுங்கி நிண்டு , அவர் அவர்களுக்கு என்ன சொல்லுறார் எண்டு கேட்டுக்கொண்டு இருந்தேன். அந்தாள் கம்பஸில் படிக்கும் மாணவர்களைக் கண்டவுடன் சந்தோசமாகி குழந்தைப்பிள்ளை போல அவர்களின் அறிவு மட்டத்துக்கு இறங்கி வந்து மிக மிக எளிமையாக அவரின் புத்தகம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார் .

                              அவர் அவர்களைத் அன்போடு அதரவா பேசி பல எழுத்து, எழுத்தாளர், உலக அளவில் அச்சில் வரும் புத்தகங்களின் முக்கியம் இன்டர்நெட் வந்தபின் குறைந்து போனது போன்ற விசியங்கள் சொல்லிக்கொண்டு இருந்தார். அதில அவர் மேசைக்கு முன்னால வந்து நின்ற எல்லாப் பிள்ளைகளும் அவரின் " ஒரு நாயும் ஒரு பூனையும் ஒரு சமூகப் பிறழ்வும் " புத்தகத்தை வேண்டி அதில கையெழுத்து போடக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள், அவர் அந்தப் புத்தகங்களின் கடைசி ஒற்றையில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக்கொண்டு இருந்தார்..

                        " உனக்கு என்னோட ஒரு நாயும், ஒரு பூனையும் ,ஒரு சமூகப் பிறழ்வும் புத்தகம் வேண்டும் என்றால் நானே இலவசமா தாரேன் கொண்டு போ ,கொண்டு போய் அதன் கடைசி பக்கத்தையாவது சாக முதல்ப் படி "

                          எண்டு இலவசமாகத்  தர முன்வந்தார் ,  நான் அதை முழுக்காசும் கொடுத்து வேண்டினேன்,

                     " ஏன் கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போட்டுக் குடுக்கிறிங்க அய்யா "

                           எண்டு என்னோட கடைசிக் கேள்வியைக் கடைசியாக் கேட்டேன்,

                   " எழுதினவன் முக்கியம் இல்லை எழுத்துதான் முக்கியம் "

                        எண்டு சொல்லிக் கடைசி ஒற்றையில் கையெழுத்து போட்டு தந்தார்,  வேண்டிக்கொண்டு வந்து மேசையில் எறிஞ்சு போட்டு , என்றோ ஒரு நாள் சாக முதல் படிக்கும் எண்ணத்தில் இருக்கிறேன்..,, 

                                        என்ன சீவியமடா இது.... 

 .

ஒஸ்லோ 17.09.14