Thursday 12 March 2015

புறாக்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்……

விட்டுப் பறந்து
போய் விடுமோவென்ற
பயமெல்லாம்
நமக்குள்
கூடு கட்டி வாழ
வாய்ச்சண்டையைக்
விரும்பாத
புறாக்கள்
என்றும் தனித்து
வாழ விரும்புவதில்லை...
சுமையாகிப் போன
சின்னஞ்சிறு
விஷயத்தையும்
பார்ப்பதற்கு
கொண்டாட்டமாக
மாற்றி விட்டு
எந்தவித
எதிர்ப்பார்ப்புகளையும்
பதிலுக்குக்
கேட்பதில்லை.
குறைத்து மதிப்பிடுவது
கூடவே பிறந்த
எங்களிடம்
அன்பைக் கொடுத்து
நீங்கள்
என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளுங்களென்று
முழு சுதந்திரத்தையும்
அனுமதிக்கிறது.
தலைக்கனத்தால்
கற்றுக் கொள்ள
தவறிய
தன்னடக்கத்தை
புறாக்களிடம்
கற்றுக்கொள்ளுங்கள்..
முட்டாள்தனத்தை
குணங்களின்
குறியீட்டு சொல்லாகப்
பழக்கத்தில்
வைத்துள்ள
மனிதர்கள் போல
மற்றப் பறவைகள் பற்றிய
கதைகளை
அவை கேட்பதில்லை.
தத்திச் செல்லும்
நடையால் கவர்ந்து
வாஞ்சையோடு
பழக விரும்பும்
புறாக்கள் போல்
சில நிமிடங்களே
நடக்க முயற்சிக்கவும்
முடிவில்
மனிதன்தான் என்ற
நினைப்புக்கு
வந்து விடுகிறது
.
.// சில வாரம் முன்னர் வேலைக்குப்போகும் போது ஒஸ்லோ நகரத்தில் சந்தடியான ஒரு இடத்தில் இந்தப் புறாக்களைப் மொபைல் போன் கமராவில் படம் எடுத்தேன்///

இதுக்கு மேல என்ன வேண்டும் ! ஒஸ்லோவின் கதை 001.

ஐரோப்பாவின் மிகப் பழமையான கடலோடிகளின் வரலாற்றில் நிரந்தரமா முக்கியத்துவம்  சேர்த்த நகரம் ,வட துருவ நோர்வேயின் கலாச்சாரப்  ,பொருளாதாரத்  தலைநகர் , என்னைப்போல பல வந்தேறு குடிகள் ஆறு மாதம் குளிரைத் திட்டிக்கொண்டும் ,ஆறு மாதம் கொஞ்சம் மிதமான வெய்யிலில் சுகமான காற்றைச் சுவாசித்து  வருடக்கணக்கில் வசித்துக் கொண்டும்  இருக்கும் இந்த ஒஸ்லோ நகரம், தலைக்கணம் இல்லாத  சின்னத் தலை நகரம்.

                                     பல வருட அயல் நாடுகளின் கழுத்தறுப்புக்களை , இரண்டாம் உலக யுத்த நாஸி  ஜெர்மனியின் அழிப்புக்களை மவுனமாகத் தாங்கிக்கொண்டு , ஒரு காலத்தில் வைக்கிங்குகள் என்ற கடல்க் கொள்ளைக்காரரின்  தற்காலிக தங்குமிடம் இருந்த, ஒரு பக்கம் கடலும் மற்றைய மூன்று பக்கமும் மலைகளும் சூழந்த, நீண்ட நோர்வே நாட்டின் தெற்கில் கடல் விளிம்பில் இருக்கும்  விடிவெள்ளி நகரம் ஒஸ்லோ.

                                             " ஒஸ்லோ " என்று பெயர் வரக் காரணம், அந்தப் பெயரின் முதல் எழுத்தான  " ஒஸ் " என்பது பழைய நோர்வேயிய மொழியில் , வடக்கு கடலையும் அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கண்னுக்குள்ள  விரலை விட்டு ஆட்டிய வைகிங்குகள் என்று அழைக்கப்படும் கடல் கொள்ளைகாரர்களும் , வடக்கு நோர்வேயில் வசித்த  லாபியர்கள் என்ற நோர்வேயின் முப்பாட்டன் காலத்து   ஸ்கண்டிநேவியப் பழங்குடி மக்களும்  இயற்கையை வழிபட்ட காலத்தில், அவர்கள் வழிபட்ட ஒஸ் என்ற கடவுளின் பெயரை முன்னுக்கு வைத்துள்ளார்கள்.

                    ஒஸ்லோவின்  பின்  அடியாக வரும்  " லோ "  என்பது மலைகள், காடுகள் ,கடல் சூழந்த மலைகள் உள்ள நிலப்பரப்பு என்று பழைய நோர்வேயிய மொழியில் உள்ள வார்த்தையையும் இணைத்து ஒஸ்லோ எண்டு பெயர் வந்தது எண்டும் சொன்னாலும், எல்லா வரலாறுக்குக்  குழப்பம் போல இந்தப் பெயர் வரவும்  வேறு சில விளக்கம்களும் இருக்கு எண்டும் சொல்லுறார்கள்.

                                          பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னமே, கடல் வழி வியாபாரத்தில் பொருளாதார ரீதியாகப்  புகழ் பெற்று , புழக்கத்தில் இருந்த ஒஸ்லோ என்ற பெயரை, 1624 இல்  நோர்வே, சுவிடனை ஆண்ட டன்மார்க் நாட்டு சக்கரவர்த்தி கிறிஸ்டியான் IV தன்னோட பெயரையும் ,அவர் அம்மாவின் பெயரையும் இணைத்து கிரிஸ்தானியா என்று மாற்றி இருக்குறார்.

                                       1905 இல் நோர்வே அந்த சக்கரவர்தியின் டேனிஷ் ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் பெற்றாலும் 1925 இல் தான் மறுபடியும் , ஆக்கிரமிப்பின் அடாவடித்தனத்தில் இழந்து போன ஒஸ்லோ என்ற பெயர் உத்தியோக பூர்வமாக இந்த நகரத்திக்கு மறுபடியும் கிடைத்து இருக்கு. இன்றும் ஒஸ்லோவில் கிரிஸ்தானியா என்ற பெயரில் பல பழைய ஹோட்டல்  கட்டிடங்கள், சதுக்கம் வளைக்கும் இடங்கள், சிற்பங்கள் நிறைந்த பூங்காக்கள் , பழைய கருங்கல்லுப் பதித்த வரலாற்று வாசம் வீசும் வீதிகள் இந்த நகரத்தில் வரலாற்றின் கறுத்தப் பக்கத்தின் சாட்சியாக இருக்கு. 

                           இன்றைய திகதியில் இந்த நகரத்தின் முக்கிய லேன்ட் மார்க் என்று சொல்லப்படும் ஒஸ்லோ ஒபேரா ஹவுஸ் இருக்கும் பியோர்விக்கா என்ற இடத்திலும்,அதற்கு வெளியே ஒஸ்லோ பியோர்ட் கழிமுகத்தில் உள்ள ஹுவாட் ஓயா என்ற சின்ன தீவிலும் ,ஒஸ்லோ பியோர்டில் உள்ள இன்னொமொரு பெரிய தீவான மால்ம்ம் ஓயாவிலும் ஆயிரம் வருடம் முன்னமே எலும்பை உறைய வைக்கும் விண்டர் கால உறை பனியைச்  சமாளிக்கும் வசதிகள் ஏதுமற்ற காலத்தில்  மக்கள் வசித்து இருக்கும் அடையாளங்களைத் தோண்டி எடுத்து அந்த இடங்களில் இப்பவும் அந்த ஐஸ் ஏச் கால வாழ்விடங்களின் அடையாளங்களைப் பார்க்க முடியும். 

                                               இந்த சின்ன நகரத்தில் அண்மையில் செய்த கணக்கெடுப்பின் படி ஆறு அரை லட்சம் மக்கள் சண்டை சச்சரவு இல்லாமல்  அருகருகே அண்ணன் தம்பி போல வாளுறார்கள் எண்டும் ,இன்றைய திகதியில்  நகரத்தின் கால் வாசி சனத்தொகை நோர்வேயில் பிறக்காத வேற்று நாட்டு மக்கள், அவர்களின் பிள்ளைகள் என்றும்  சொல்லுறார்கள்.

                           பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் இந்த நகரத்தில் கையைக் காலை நீட்டி வைச்சு ,நெருக்கம் இல்லாமல் ஆசுவாசமாய் வெறும் முப்பதுணாயிரம் மக்களே பரந்து வாழ்ந்த இடத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சடார் எண்டு சனத்தொகை இரண்டு இலட்சத்தி இருவதுணாயிரமாக  உயர்ந்து உள்ளது எண்டும் புள்ளி விபரம் புள்ளி புள்ளியா சொல்லுது.

                               அதுக்கு காரணம் நோர்வேயையும் சுவீடனையும் இணைத்து காலுக்க வைச்சு நெரிசுக்கொண்டு இருந்த குட்டி நாடான டென்மார் இந்த இரண்டு நாட்டுக்கும் போனாப் போகுது எண்டு சுதந்திரம் கொடுத்துப் போட்டுப் போனது எண்டு சொல்லுறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஆனாலும் எவளவுதான் பல்லின மக்கள் வாழந்தாலும் இன்னும் இந்த சின்ன நகரம் மற்ற ஐரோப்பிய மெட்ரோபொலிட்டன்   ஆடம்பர அலங்காரத் தலை நகரங்களுடன் ஒப்பிடும் போது இன்னும் வயசுக்கு வராத பெண்ணின் அடையாளங்களுடன் தான் இருக்கு....

                                       ஹென்றிக் இப்சன் என்ற உலகப் புகழ் நாடக எழுத்தாளர் வசித்த, உலகம் வியக்கும் குஸ்தாவ் வியிலான்ட் என்ற சிற்பி கருங்கல்லில் சிலைகளுக்கு உயிர் கொடுத்த , உலகம் ரசிக்கும் எட்வார்ட் முன்ச்ச் என்ற ஓவியர் அபத்த நிறங்களில் வாழ்வின் அவலத்தை வரைந்த , மிகப் பழமையான பூங்காக்கள் , இயல் இசை நாடகக்  கலாச்சார  மையங்கள் இருக்கும்  ஒஸ்லோ ஐரோப்பாவின் குளிர்கால விளையாடுக்களின் தலை நகரம்.

                              இந்த நகரத்தில் இருந்து ஒரு இருபது நிமிடம் மெட்ரோ ட்ரெயினில் பிரயாணம் செய்தாலே உலகப் புகழ் பெற்ற ஹோல்மன் ஹொலன் குன்றுகளில், உலகத் தரமான ஒலிம்பிக் நடத்தக் கூடிய முக்கிய விண்டர் உறை பனியில்  சறுக்கும் செயற்கைத் தடம் இருக்கு, ஐரோப்பாவில் வேறு எங்கேயும் இப்படி நகரத்தில் இருந்து ஒரு இருபது நிமிடம் ட்ரைன் போகும் தொலைவில் உறைபனி சறுக்கும் மலைகள் இல்லை என்கிறார்கள். 2020 இல் ஒஸ்லோ விண்டர் ஒலிம்பிக் நடத்தும் சாத்தியம் இருக்கு எண்டும் சொல்லுறார்கள், 

                                    உலகத்திலேயே அதிகம் காப்பி உறிஞ்சிக் குடிக்கும் மக்கள் வாழும்,கடவுளை விடக் குழந்தைகளை அதிகம் நேசிக்கும் இதயத்தில் ஈரம் உள்ள மனிதர்கள் வாழ்கையை அழகாக்கும் ஒஸ்லோ,  நோர்வேயிய இளம்  பெண்களின் இடுப்புப் போல சின்ன நகரம்,அதன் பிரகாசம் நோர்வேயியப் பெண்களின் கண்கள் போல எப்பவும் பணிவுடன் மின்னும், உதவும் குணம் உள்ள மக்கள் எப்பவும் இயல்பாக இந்த நகரத்தை இயங்க வைக்கிறார்கள்.

                                  இந்த நகரத்தின் கவர்ச்சி கோடை காலத்தில் வானம் பாடிகள் நீல வானத்தில் எழுதிச் செல்லும் ஒரு புதுக் கவிதை, வெயில் கால அடர்ந்த இரவில் எண்ண முடியாத நட்சத்திரங்கள் அள்ளிக்கொட்ட,  மென்மையான,அதிர்ந்து பேசாத நோர்வேயிய மக்களின் மனம் போல விண்டர் உறை பனி வெள்ளைக் கம்பளம் விரிக்க, அமைதி அதன் அர்த்தத்தைத் உலகெல்லாம் தேடிக் கடைசியில் இங்கே கண்டு கொண்டது.

                                தெற்கில் நோர்டறஆர்கிர்  சின்ன மலைகள் மார்பை மூடித் தாவணி போட ,  பாதம் வரை சருகைபோட்டு மறைக்கும் குருறுட் டாலன் பள்ளத்தாக்குகள் பாவாடை கட்ட, இந்த சின்னப் பெண்ணின் இதயத்தை ஊடறுத்து ஆர்கிஸ் எல்வா ஆறு சலங்கை கட்டிச்  சதிராட,  காடெல்லாம் பேர்ச் மரங்கள்,  அதன் கரை எல்லாம் லில்லி மலர்கள், நாடெல்லாம்  நல்ல தண்ணி நளினம் காட்டும் ஏரிகள் ,  உயரத்தில் இருந்து விழியெல்லாம் மை பூசி ,  மொழி பேசி விரைந்தோடும் மேகங்கள்  விலாசம் சொல்லியே விரைந்தோட , கண்ணுக்கு எட்டிய வரை நீலக் கடல் அலைகள் நகரத்தின் தெற்கு  விளிம்பில்  " இதுக்கு மேலே சொர்க்கம் தான்.... " என்று நோர்வேயின் இசைப் பிதா எட்வார்ட் கிரிக் எழுதிய சிம்போனிகளை இசைக்க....,    

                                 இதுக்கு மேல என்ன வேண்டும் இந்த நகரத்துக்கு..

 .
நாவுக் அரசன் 
ஒஸ்லோ 05.09.14