Friday, 1 January 2016

கதையல்ல நிஜம்

யாழ்பாணத்தில எங்கட வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி வீராளி அம்மன் கோவில் ரோடில ,ஒரு பாரதநாட்டிய டீச்சர் மாடி வீட்டில இருந்தா, அந்த டீச்சர் பார்ப்பதுக்கு நாட்டியப் பேரொளி போல மின்னிக்கொண்டு, அவா சும்மா நடக்கும் போதே  நிருத்தம் நிருத்தியம நாட்டியம் மூன்றும் கால்கள் எடுத்து வைக்கும் அடிக்களில் தாளம் போட , தில்லானாவிற்கு அழகு சேர்க்கும் நீண்ட கூந்தலை அலைபாய விட்டு  சிலப்பதிகார மாதவிபோல  தக தக என்று தக்காளி போல இருந்ததால் எப்போதும்  அவா உதவி கேட்கும்  நேரம் நான்  எடுபிடி உதவிகள் மறுப்பு சொல்ல மனம் வராமல், பரதநாட்டியம் மீது உள்ள அபிமானத்தால் செய்வேன்  என்று சொன்னால் நீங்க " அடி செருப்பால " என்று உடனேயே சொல்லுவிங்க, ஆனால் நான் சொல்லுறதுதான் வீராளி அம்மன் மேல சத்தியமா உண்மை . 

                     என்னோட பள்ளியில் சக வகுப்பில் படித்த , பல விதத்திலும் என் " ரோட் சைட் ரோமியோ " நாடகத்தில் என்னோடு தோளோடு தோள் நின்ற நெருங்கிய  நண்பன் ஒருவன் அந்த வீட்டின் மேல் மாடியில் மாச வாடைக்கு இருந்தான் . அடிக்கடி அவனைப் பார்க்கப் போகும் போதெல்லாம் அழகான இளம்பெண்கள் அந்த டீச்சர் தட்டுக் கழி  மன்னை  என்ற பலகையில் கட்டையால தட்டிக்கொண்டு 

              "  நவரச நாயகி சிவனை மணந்த கதை ,புது ரசமாணதடி  கிளியே ..." 

                                             எண்டு பாட அந்தப் பெண்கள், "தா,  தீ,  தொம் , நம், தரிகிட , திரிகிட" எண்டு ஆட, மேல்வீடு அதிரும். எங்களுக்கு அந்தப் பெண்கள் ஆடுவதைப் பார்க்க விஷுவல் சந்தர்ப்பம் இல்லாததால்,கட்டை தட்டும் சத்தம் கும்மி ,கோலாட்டம்,வசந்தன் பள்ளு நாட்டுப்புற நடனம்  போல தான் அவற்றின் தாள கதி சத்தம் கேட்கும் 

                                      நானும், அவனும் போகும்போதும், வரும்போதும் கடைக்கண்ணால அந்த பெண்களைப் பார்பம் ,டீச்சர்ரும் போகும்போதும், வரும்போதும் கடைக்கண்ணால எங்களைப் பார்ப்பா. டீச்சர் தரையிலதட்டி தாளம்போடுற கட்டையால முதுகில" பளார்" எண்டு போடுவாவோ என்ற பயத்தில நேரடியாகப் பார்க்கப் பயம்,ஆனாலும் அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும்  அலாரிப்பு , ஜதிசுரம், சப்தம், வர்ணம், பதம் ,தில்லானா ,விருத்தம் ,மங்களம் போன்றவற்றுக்கு உதாரண  வரைவிலக்கணம் போல ஜொலிக்க  அந்த  இளம் பிள்ளைகளின் இடுப்பு " எப்படா ஒடிஞ்சி விழுமோம்னு " கெஞ்சுவது போல மெலிந்து இருக்க, அந்தப் பெண்களும் ஏதோ தேவலோகத்தில இந்திரனோட ஆடிக் களைச்சு  மந்திர உலகத்தில் இருந்து குதிச்சு வந்த இந்திரலோகத்து சுந்தரிகள்  மாதிரிதான் நிலத்தில கால்படாமல் நடந்து போவார்கள்...

                                 யாழ்பாணத்தில ஓரளவு வசதியானவர்களின் பெண்பிள்ளைகள்தான் பரதநாடியம் பயில்வார்கள், பயின்று ,மண்டபம் எடுத்து சோழ மன்னன் திருமாவளவன் முன்னிலையில் மாதவி அரங்கேறிய மாதிரி ஊருக்கே வெத் திலை  பாக்கு வைச்சு அழைப்பிதழ் கொடுத்து அரங்கேற்றம் செய்வார்கள், அதோட அவர்களின் கலைப்பயணம் முடியும்  . அப்புறம்

                          ‘ அங்கச்  சடச்சி  அக்கா வீட்டுக்குப் போனாளாம்,  அக்கா தூக்கி மச்சான் கிட்டப் போட்டாளாம் ’  

                                      கதை போல அந்தப் பிள்ளைகளை, சங்கீத அறிவே இலாத ஒரு ஞானசூனியதுக்குக் கட்டிவைக்க, அவனும் வந்த முதல் வேலையா  " அவுக்கு அவுக்கு "  எண்டு அஞ்சாறு பிள்ளைப் பாக்கியம் கொடுக்க, அந்த நாட்டிய தாரகைகள், சில வருடங்களில் நாட்டிய நர்த்தகி நளினத்தில் இருந்து இறங்கி வந்து , உடம்பு பெருத்து  பொம்முக் குட்டி அம்மா போல இருப்பார்கள். சிலர் கெட்டித்தனமா நடன ஆசிரியைகள் ஆகி அன்றாட குடும்ப சுமையோடு அதை மற்றவர்களுக்கும்  தொழில் ரீதியாகவும்  சொல்லிக்கொடுப்பார்கள்.

                         பரத நாட்டியம் ஆன்மீக பக்தி உணர்வுள்ள நடனம், மேடையில் ஆடுவதை ரசிகர்கள் பார்க்கும் நடனம். ஆனால் எல்லா வெஸ்டர்ன் டான்சும் மனதுக்கு உற்சாகம் தரும் சோசியல்  நடனம், எல்லா வெஸ்டர்ன் நடனமும் ஜோடி சேர்ந்து ஆடுவதுக்கு வடிவமைக்கப்பட்டது,பரதம் அப்படி இல்லை .ஆனால் இரண்டிலும் ஆபாசம் இருக்கு என்றால்  அது பார்பவரின் மன ஒழுக்கத்தைப் பொருத்தது. ரெண்டிலும் ஆபாசம் இல்லை என்றால்  அதுவும் பார்பவரின் மன ஒழுக்கத்தைப் பொருத்தது..

                      பரதமும், கர்நாடக சங்கீதமும் உயர் குடி இன் அடையாளமா,மிகவும் சாஸ்திரிய வித்தக நுட்பங்களுடன் இருந்தது,,அது இரண்டையும் கீழ இறக்கி எல்லா மக்களும் ரசிக்க வைத்தவர்கள் பரதத்தை பொறுத்தவரை தேவ அடியார்களும், கர்நாடக சங்கீதத்தை பொறுத்தவரை நாதஸ்வரக் கலைஞ்சர்களும் என்பது என் அவதானிப்பு.மற்றப்படி அந்த நடனத்தில் காமம் இருக்கு ,இல்லை என்பது " கல்லு உரலுக்கு மேல கொடியில காஞ்சு கொண்டு இருந்த சேலை தவறிவிழ அந்த கல்லு உரலை ஒருவன் இரவு இரவா ஒருதருக்கும் தெரியாமல் சுமந்துகொண்டு போனானாம் பொம்பிளை எண்டு நினைச்சு " என்ற கதை போல...

                பரதநாட்டியம் அளவுக்கு டான்ஸ் டெக்னிக் உள்ள நடனம் உலகத்தில் வேற இல்லை, காரணம் அவளவு சாஸ்திரிய நுட்பம் அந்த கிளாசிகல் நடனத்தில் இருக்கு. அதை நாட்டுக் கூத்து ரேஞ்சுக்கு எளிமைபடுத்த முடியாது அப்படி இல்லை என்று அதை எல்லாருக்கும் விளங்கிற மாதிரி எளிமைப்படுத்தினால் அதன் " ம்யுசிகல் ரோயல்னஸ் "  என்ற மேன்மைநிலை இல்லாமல் போயிடும்.பரதம் போல வேறு வெஸ்டர்ன் டான்ஸ் இல்லை.  உங்களுக்கு தெரியுமா கர்நாடக சந்கீததில் 35 தாளம் இருக்கு ,வெஸ்டர்ன் டான்சில், அல்லது லத்தின் அமரிக்க டான்சில் ,அந்தளவு  பீட் என்ற டெம்போ தாளம் இல்லை. வேற எந்த டான்சிலுமே அந்தளவு இல்லை ...

                      பரதநாட்டியதை எல்லாரும் உள்வாங்கி முழுமையா ரசிக்க முடியாது ,இதுதான் பரதநாட்டியம் நிறையப்பேரை சென்ற அடையவும் தடையா இருக்கு ,அதன் கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் போன்ற   விடயம் விளங்கினால் தான் சரியா அதன் இம்பிரசன் கிடைக்கும். இப்பெல்லாம் சும்மா தங்கள் காசின் பவர் காட்ட புலம்பெயர் தமிழர் நடன அரங்கேற்றம் செய்வார்கள். அவர்களின் மாமன்,மச்சான்,சித்தப்பன்,பெரியப்பன், போன்ற உறவினர் போய் இருந்து சுரக் கோர்வைகளும் ஜதிக்கோர்வைகளும் இருக்கும் ஜதிசுரம் என்றா என்ன என்றே விளங்காமல்  தலை ஆட்டுவார்கள். அவர்களில் எத்தின பேருக்கு அடவு, குத்தடவு, முத்திரைகளின் அர்த்தம் தெரியும், சும்மா டி ராஜேந்தர் பட சினிமாவில் பரதநாட்டிய சீன் பார்க்கிற மாதிரி பார்க்கவேண்டியதுதான்..

                      எங்கள் ஊர் வீராளிஅம்மன் கோவில் திருவிழாவில, அம்மனை வெளிவீதிக்கு உலாக் கொண்டு வரும்போது, ஒரு நடுத்தர வயதுள்ள அழகான பெண் , அம்மன் ஊர்வலதிட்கு முன்னால் தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர்,  நாட்டியம் ஆடிக்கொண்டு வருவா, என்னோட அம்மாவிடம்

                     "  ஏன் அம்மா அந்த  அன்ரி , பக்கவாத்தியம் , தடல் புடலான ஆடை அலங்காரம் இல்லாமல் சிம்பிளா அப்படி ஆடுற ?" எண்டு கேட்டதுக்கு,

                      " தெருவில ஆடுறவள் தேவடியாள், என்ன நீயும்போய் அவளோட சேர்ந்து ஆடப்போறியா "

                 எண்டு கோபமாகக் கேட்டா. இதுக்கு மேல விளக்கம் கேட்டா என்னோட அம்மா என்னை அனுமன் ஆட்டம் போட வைப்பா என்ற பயத்தில கேட்கவில்லை.

                       பரதம் பார்க்கும் பொழுது பாலியல் உணர்வு வருவதும் ,வராததும் அதைப் பார்பவர்களின் கண்களிலும்,மனதிலும் இருக்கு. என்னைப்பொருத்தவரை பரதத்தில் கஜுரோகோ சிற்பங்ககளில்,காம சூத்திராவில்,ராமாயணம்,மகாபாரதம் இல் உள்ள அளவு விரசம் இல்லை, ஆனால் அதை கவர்சியா ஆடினால் அது கவர்சியாதான் இருக்கும். சம்பிரதாயமான சாஸ்திரிய மேடைகளில் ஆடும் பரதத்தில் கவர்சி இல்லை, ஆனால் சினிமாவில் ஆடும் நடனத்தில் அது இருக்கு . முதல் சினிமாவில் ஆடுவது பரதமா என்பது வேறு ஒரு குழப்பம்.

                              நான் கொஞ்சம் தங்கோ,சலசா, பிளமிங்கோ  என்ற லத்தின் அமரிக்க டான்ஸ் பழகி இருக்கிறேன், சுவிடனில் அதை சொல்லித்தந்த  அழகான இளம் ஆசிரியை இடுப்பைக் கட்டிப்பிடிச்சு அதை சொல்லி தந்தாள்,நானும் அவள் இடுப்பை கலை ஆர்வமாக  இறுக்கிக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு  அதைப்  பழகினேன். அந்த டீச்சரும் சொன்னா  பரதநாட்டியம் போல கடினமான சங்கதிகள் உள்ள டான்ஸ் உலகத்தில இல்லை என்று. நானும் எல்லாரும் போல " கெட்ட கழுதை ஆத்துக்குப் போச்சாம், அங்க ரெண்டு கழுதை மறைவுக்கு வான்னுச்சாம்  "  என்பத  போல சும்மா பரதநாட்டியம் எல்லாரும் போல பார்ப்பேன்,  மேலோட்டமாய் ரசிப்பேன் அவளவுதான், அதுக்குமேல உள்ளே போய்  ரசிக்கும் அறிவு வீச்சு இல்லை,

                                  யாழ்பாணத்தில கலைகள் பழகுவதயையே பொருளாதாரம்தான் தீர்மானிக்கும், வசதியானவர்களின் பிள்ளைகள்தான் பரதநாடியம், வீணை ,வாய்ப்பாட்டு ,ஓர்கன் ,பியானோ,மிருதங்கம் ,கிட்டார் ,வயலின் பயில்வார்கள். வருமானம் குறைந்த ஏழைகள் அன்றாட வாழ்வே "தரி கிட தத் தம்" போடுவதால், திறமை உள்ளவர்களுக்குகூட சந்தர்பம் கிடைபதில்லை,

                   அப்படி இல்லை என்றால் அவர்கள் வீட்டில வயதான பெரியவர்கள் வாசித்த ஆர்மோனியப் பெட்டியை வைத்து அமுக்கி "நொயிங்ங்  ,நொயிங்ங்  " என்று வாசித்து பழகி கலைஞ்சர் ஆனாலும், அவர்களின் ஆர்மோனியப் பெட்டி, வில்லுப் பாட்டு,  நாடகம், நாடுக்கு கூத்து என்று கிராமிய அடையாளங்களைதான் சுற்றும். அதுக்குமே அவர்கள் கவனிக்கப்படவேமாட்டார்கள்! ஆர்மோனியப்பெட்டியை வாசிபத்தைக் கேவலமாகவும் ,அதை வாசிப்பவனை " பெட்டி வாசிப்பவன் " என்ற சுத்த பட்டிக்காட்டான் எண்டும் நினைத்த மனநிலையும் இருந்தது " யாழ் பாடி " வாசித்து காரணப் பெயர் வந்த யாழ்பாணத்தில!

                     பல மேடை நிகழ்சிகள்,பழைய  ஸ்டுடியோ ஒலிப்பதிவு விடியோக்கள் பார்க்கும் போது  மெல்லிசை மன்னரும் , இசைஞாணியும், திரைஇசைத் திலகமும் ஆதாரமாக ஆர்மோனியப் பெட்டியை வைத்துப் பின்னி எடுத்ததைப் பார்க்கும்போது , யாழ்பாணத்திலும் அப்படி ஒரு உலகத்தரமான இசைமேதை கவனிப்பாரற்று காணாமல்போய் இருக்கலாம்....

.

ஓசிச் சாப்பாடு

வருடத்தில் மார்கழி மாதம் ஒஸ்லோவில் ஓசிச் சாப்பாட்டுக்குக் குறைவு இல்லாத மாதம். ஜுலபோர்ட் என்று சுத்திச் சுத்தி கிறிஸ்மஸ் பாட்டிக்கள் குறைவில்லாமல் நடக்கும். இதுகள் தனிப்பட்ட கிறிஸ்மஸ் பாட்டிகள் அல்ல கும்பலில் கோவிந்தா போல அன்னக்காவடி தூக்கிக்கொண்டு அல்லாடும் மக்களுக்காக நோர்வே மக்கள் தங்கள் தராதரங்களில் இருந்து கொஞ்சம் இறங்கிவந்து எல்லாருக்காகவும் வைக்கும் பாட்டிகள். இவை அதிகம் முன்பு வேலைசெய்த, இப்ப செய்யும் இடங்களில், ரெஸ்டோறேண்டில், பொது இடங்களில்,கப்பலில், நடக்கும்

                            ஒஸ்லோவில் நிறைய உதவும் உள்ளம் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கள் உள்ளன. அவர்கள்தான் இந்த நகரத்தின் விளிம்புநிலை மனிதர்களைத் தாங்கிப்பிடித்து வைத்து இருப்பவர்கள். நோர்வே அரசாங்கம் வரிகளில் இருந்து கணிசமான அளவு இந்த அமைப்புகளுக்குக் கொடுத்தாலும் சென்ற தலைமுறையில் வசதியாக இருந்து இப்ப வயதுபோன நிறையப் பணக்கார மனிதர்கள் தான் அந்த கிறிஸ்தவ அமைப்புக்களின் பொருளாதார நாடித்துடிப்பு.

                                  சென்ற நூற்றாண்டில் விவசாயிகளாக இருந்த நேரம் நோர்வே மக்கள் என்ன இயற்கையாகப் பதனிடப்பட்ட இறைச்சி, மீன் உணவை உண்டு வாழ்ந்தார்களோ அந்த உணவுதான் இப்ப நோர்வே கிறிஸ்மஸ் இராப்போசன மேசையில் இருக்கும் அவர்களின் சம்பிரதாய உணவு. மார்கழி மாதம் இங்கே குளிர் அதிகம் அந்த கிறிஸ்மஸ் சம்பிரதாய உணவில் கொழுப்பு அதிகம், குளிரைத் தாங்க கொழுப்புக் கொஞ்சம் தேவை . அதால வேண்டிய மாதிரி சாப்பிடலாம் போல இருக்கும்.

                                  கிறிஸ்மஸ் இரவு 24 ம் திகதியில் இருந்து முதலாம் திகதிவரை நோர்வே மக்கள் தங்களின் குடும்பங்களுடன் தனிப்பட்ட குடும்பப் பாட்டிகள் வைப்பார்கள். அதில் மிகவும் நல்ல நெருக்கம் உள்ள நண்பர்கள் குடும்ப உறுப்பினர், உறவினர் இவர்களுடன் சேர்ந்து அவர்கள் வீட்டுகளில் நடக்கும். கிறிஸ்மஸ் இரவு 24 ம் திகதியில் இருந்து முதலாம் திகதிவரை நோர்வே மக்கள் ஒரு வேலையும் செய்யமாட்டார்கள் .அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார்கள்

                                    கிறிஸ்மஸ் இரவுப் பாட்டிகள் அதுக்கு என்னைப்போல வந்தான் வரத்தான் எல்லாரையும் தங்கள் வீடுகளுக்குள் உள்ளே எடுக்க மாட்டார்கள். அதைவிட நோர்வே நோர்க்ஸ் மக்களுடன் அவர்கள் வீடுகளுக்கு உள்ளே நடக்கும் பாட்டிகளில் நடக்கும் கலந்துரையாடல்களில் அதிகம் சுவாரசியம் இல்லை. கிளியைப் பிடிச்சு வைச்சு அதுக்கு இன்னொருமுறை பச்சைப் பெயின்ட் அடிச்சுக்கொண்டு இருப்பது போல இருக்கும்.

                                    என்னைபோல வந்தேறுகுடி மனிதர்கள் எவளவு கலாச்சார ,மொழி, பண்பாட்டில், பழக்கவழக்கத்தில் வேறுபட்டவர்கள் என்பதை நோர்வே மக்களுடன் அவர்களின் கொண்டாடங்களில் நாக்கு நனைச்சு நெருங்கிப்பழகும் போதுதான் நல்லாத் தெரியும். அவர்களுக்கும் என்னைப்போல தமிழ் அடையாளம் உள்ள ஆட்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு நோர்வே மக்கள் தங்களின் இன மக்களுடன் உண்மையானவர்கள் ,நேர்மையானவர்கள். என்னதான் நாங்கள் தலைகீழாக நிண்டு நல்லவன் எண்டு நிரூபித்தாலும் எங்களில் அதிகம் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.

                                 இரட்சணிய சேனை என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஒரு கிளையின் குசினியில் சில வருடம் வேலை செய்து இருக்கிறேன். அந்த அமைப்பிடம் இருந்து கிடைத்த அழைப்பால் இன்று டென்மார்க்க்கும் ஒஸ்லோவுக்கும் இடையில் ஓடிக்கொண்டு இருக்கும் DFDC என்ற உலாசப்பிரயான கப்பலில் இந்த வருடமும் ஓசியில் சாப்பாடு கிடைத்தது.

                                 அந்த நிறுவனத்தில் வேலை செய்த போது கொஞ்சம் நல்ல பெயர் இருந்தது அதால பல வருடமாக இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்துக்கொண்டு இருக்கு. என்னவோ பெரிய வெள்ளைக்காரன் போல இந்தக் கப்பலுக்குப் போனாலும், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நிலைமையை ஜோசிக்க மனதளவில் உண்மையில் பிச்சைக்காரன் போலத்தான் உணர்ந்தேன்.

                                     இந்த வருடம் கப்பலில் ஏறும் போதே, ISIS தீவிரவாதிகள் புண்ணியத்தில் பிரயாண ஆவணங்கள்உறுதிப்படுத்தல்,ரகசியப் பொலிஸ் கண்காணிப்பு என்று பயங்கரப் பாதுகாப்புக் கெடுபிடி அந்த உல்லாசப்பயணிகள் கப்பல் தரித்து நின்ற இடத்தில. போதாக்குறைக்குக் " கடி நாய் கவனம் " என்று யாழ்பாணத்தில் ஒரு போட் படலையில் தொங்கவிடுவார்களே அதுபோல கழுத்தில ஒரு அடையாள அட்டையையும் கட்டாயம் கொழுவிக்கொண்டே இறங்கும் வரை இருக்கவேண்டும் எண்டு சட்டம் போட்டு இருந்தார்கள்,


                                          வாழ்கையில் பல விசியங்கள் ஏன் " அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம் .." போல திடிர் திடீர் ஆக நடக்குது என்று யாருக்கும் சொல்ல முடிவதில்லை.
                                 அழைப்பிதழில் அந்த நிகழ்வில் " அல்கஹோல் பரிமாறப்படாது " என்று எழுதி இருந்தார்கள், நான் முன்னம் வேலை செய்த நேரமே கொஞ்சம் பிரச்சினையான ஆளா இருந்ததால் ," மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக்கூடாது " என்பது போல பிரச்சினை வரும் என்று தெரியும் .
                                    ஆனாலும் என்ன வெளியேதான் வேண்டிய அளவு அல்கஹோல் வேண்டிய மாதிரி வேண்டலாமே,,அதால வெளியேயே நல்லா நாலு கட்டைக்கு சுருதி ஏத்திக்கொண்டு, சதுஸ்ரசாதி திரிபுடை தாளம் போட்டுக்கொண்டு " குறை ஒன்றும் இல்லை மறை மூர்திக் கண்ணா...." என்று பாடிக்கொண்டு போனேன்...
                                      சில பழைய வேலை நண்பர்களை சந்திக்கவும் ,பல அழகிய இளம் பெண்களை ஜோள்ளுவிடவும் மட்டும் முடிந்தது .ஒரு நோர்வே வாழ் சாதாரணமான மனதுள்ள தமிழ் எழுத்தாள நன்பரையும் அந்த நிகழ்வுக்கு வரச்சொல்லி சந்திக்க நினைத்து இருந்தது சில பிரக்டிகல் காரணங்களால் சாத்தியம் ஆகாமல் போனது கவலையான விடயம்.
                                        மற்றப்படி அதில என்னதைப் பார்த்தேன் என்பதை " வீட்டுக்கு இருந்தால் வெங்கலப் பெண்டாட்டி வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி ..." பழமொழிபோல தான் என் வாழ்கையே இங்கே. இருப்பதால் .நேற்று இரவே வெறுப்பின் விழிம்பில் சில வரிகளில் கவிதை போல எழுதிப்போட்டேன்,
                                        அந்த நிகழ்வை கொஞ்சம் படங்கள் எடுக்க விரும்பி கமரா மொபைல் போனை எடுக்க ,அந்தக் கப்பலில் வேலை செய்யும் ஒரு இளம் டெனிஷ் பெண் வந்து டெனிஷ் பாசையில் ,கொஞ்சம் கடுமையாக " இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை " என்று சொன்னாள்.நான் ஆவலுடன் அவளிடம் அவள் அழகு பற்றிக் கதைத்தேன்,
                                                முக்கியமா அவளுக்கு ஒஸ்லோ பற்றி என்ன தெரியும் என்று கேட்டேன்,,என் நெஞ்சில பாலை வார்க்கிற மாதிரி ஒண்ணுமே தெரியாது என்று சொன்னாள்." மைலங்கி மைலங்கி பூ எங்கே வைத்தாய், வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன் " கதை போல அவளுக்கு கயிறு திரிக்கலாம் போல இருந்தது..

                               " என்னோட ஒரு நண்பன் நோர்வேயின் புகழ் பெற்ற போடோகிராபர் அவன் எடுக்கும் பெண்களின் படங்கள் நோர்வேயின் முக்கிய மொடல் மாத சஞ்சிகையில் முதல் பக்கத்தில் வரும் , அவன் நான் என்ன சொன்னாலும், நான் சொல்லும் பெண்களை தலை கீழாக நின்றும் மறு பேச்சு இல்லாமல் படம் எடுப்பான் ,அப்புறம் உன் விருப்பம் " என்றேன்
                  அவள் கொஞ்சம் ஜோசித்துப்போட்டு 
                               " உண்மையாகாவா சொல்லுறாய் , நான் இந்தக் கப்பலில் நாலு வருடம் வேலை செய்யுறேன் , நீ சொல்லும் அந்த நோர்வே மொடல் சஞ்சிகையின் பெயர் என்ன,உன் போடோகிரபி நண்பன் பெயர் என்ன "  

                      என்று கேட்டாள். நான் வாயில வழுக்கி வந்த ஒரு நோர்வே நாட்டவர் பெயரை சொல்லி,வாயில சறுக்கி வந்த ஒரு மொடல் மகசின் பெயரை சொல்லி

                           " அப்புறம் உன் இஸ்டம் ,," 

                என்று ஆர்வம் இல்லாத மாதிரி சொன்னேன் ,அவள் மிகவும் ஆர்வம் ஆகி என்னுடைய மொபைல் போன் நம்பர் கேட்டாள், நான் அஞ்சு வருசம் முன பாவித்து இப்ப பாவனையில் இல்லாத நம்பரைக் கொடுத்தேன்..
                                          " நான் இன்று இரவு இந்தக் கப்பலில் கோபன்ஹேகன் இரவு கப்பலில் போறேன்,,நாளண்டைக்கு ஒஸ்லோ இந்தக் கப்பல் திரும்பி வரும்,வந்தவுடன் உனக்கு டெலிபோன் அடிக்கவா,இதுபற்றி கொஞ்சம் உன்னோடு பேசவேண்டும் " 

                       என்று மிக மிக ஆர்வமாக் கேட்டாள். அவளைப் பார்க்க " ஏற்கனவே மாமி பேய்க்கோலம், அதிலும் மாரி காலம் கொஞ்சம் மாக்கோலம் போல " இருந்தாள். 
                             " அப்புறம் உன் விருப்பம் " 
                                            என்று சொல்லி முடிக்க முதலே ...அவளே என் கமரா போனை வேண்டி சில படங்கள் என்னை எடுத்தாள்,அதில ஒரு படம் தான் இது. புத்திசாலித்தனத்தை குதிரை மேல் ஏற்றி, சட்ட திட்டத்தின் தலையிலே புல்லுக் கட்டை வைத்தடிக்கிற காலத்தில வாயுள்ள பிள்ளை தான் வங்காளம் போகும் ,,இல்லையா ,,சொல்லுங்க பார்ப்பம் .....

..                                        .....என்ன சீவியமடா இது...