Saturday, 12 January 2019

நினைவுக்கிடங்கிலிருந்து 003

" அரசியல் என்பது அறம் " என்று நீதியின் நிழலில் முன்னோர்கள் ஏட்டில் மொட்டையாக எழுதிவைத்தது மட்டும்தான் போலிருக்கு , ஏனென்றால் அதிகமான முன்னோர்களின் சாம்ராச்சியங்களே அதை நடைமுறைப்படுத்தியதில்லை.! இது வரலாறு ! இந்த வரலாறு முடிவில்லாமல் இப்பவும் தொடராவதுதான் நம் காலத்தின் கொடுமை ..
                                                             
                                                                     இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில ஏதோவொரு அவமானமான அதேநேரம் அவலமான சம்பவங்கள் ஆட்சிசெய்யும் அரசாங்கங்களின் கண்களுக்கு முன்னால் நடப்பதாக செய்திகளில் கேட்கும்போதெல்லாம் அதன் முழுமையான வீரியம் யாரோ ஒருவருக்கு வேறெங்கோ நடக்கிறதுபோல காற்றலைகளில் இடம்மாறிப் போய்விடுகிறது .
                                                     
                                                                     சுவீடன் இந்தப் பந்தியின் முதல் வசனத்தை நிறையவே நடைமுறையில் வைத்திருக்கும் நாடு. அதன் தலைநகர் ஸ்டோக்ஹோலாமில் நகர மையத்தில் சேர்க்கிள்டோர்க் என்ற திறந்த வெளியை ஒரு உரிமைக்குரல் அரங்கமாக வைத்திருக்கிறார்கள். அதில ஒவ்வொருநாளும் ஏதோவொரு உரிமை ஆர்ப்பாட்டம் , வன்முறை எதிர்ப்பு ,அராஜகக் கண்டனம் , சமூக விழிப்புணர்வு, என்று அமைதியாக நிகழ்வுநடக்கும் .
                                                         
                                                                       அரசியல் அகதிகளாக தங்கள் தாய்நாட்டில் இருந்து தப்பி வந்த உறவுகள் அங்கே இருந்து தப்பி வரமுடியாத தங்கள் உறவுகளின் உயிர்ப் பிரச்சினையை மனிதாபிமான உரிமைகளை இங்கே இந்த அரங்கில் வைத்து உரத்து சொல்லுவார்கள்.
                                                             
                                                                உணர்வுபூர்வமாக இருக்கும் அவர்களின் பிரச்சினைகளை அறியும் போதெல்லாம். அவசரமான வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகளை தலையில போட்டுகொண்டு இந்தத் திறந்த வெளி அரங்கைக் வேகமாகக் கடந்துசெல்லும் மனிதர்கள் கண்டும் காணாமலும், கேட்டும் கேளாமலும் கடந்து செல்வார்கள்.சில நாட்களின் முன் ஒருநாள் சேர்க்கிள்டோர்க் பக்கமாக போகவேண்டி இருந்தது.அங்காடிக்காரியை அவரோகணம் பாடச்சொல்ல அவள் வெங்காயம் கறிவேப்பில்லை என்றாளாம் என்பது போல அரசியல் பற்றிய அடிப்படை அறிவிலதன்னும் இன்னும் நான் முதலாம் வகுப்பு தாண்டவில்லை.
                                                 போராட்டம் ,விடுதலை , புரட்சி போன்ற பிசுக்கங்காய் வார்த்தைகளைக் கேட்டாலே உடம்பில நாயுன்னிச் செடியை உரசின மாதிரி சொறியத்தொடங்கும் அதனால மனசாட்சியோடு உரிமைமீறகள் முரண்படும் கோட்ப்பாடுகளில் எனக்கு ஆர்வம் இல்லை.
                                                  சும்மா இது என்னதான் ஆர்ப்பாட்டம் என்று மேஞ்சு பார்க்க கொஞ்சநேரம் அவடத்தில நின்று கேட்டேன். அம்னஸ்டி இன்டெர்னசினலும் , ஓர்கனைசனன் எகனைஸ்ட் எக்ஸ்சிகுயுசன் என்ற அமைப்பின் ஆதரவில் மனுநீதிகேட்டு வசந்தகாலக் கவிதையொன்றில் வாழ்விழந்த வரிகளை வேறெங்கோ தொலைத்துவிட்ட இரானிய மக்கள் சோகமாக நின்றார்கள்.
                                                  அப்போதுதான் மரணதண்டனை எதிர்நோக்கி காத்திருக்கும் தங்கள் உறவுகளின் படங்களைப் தூக்கிக்காட்டியபடி நின்றவர்களுக்கு நடுவில் சுவீடனில் வசிக்கும் ஒரு வயதான அப்பா ஈரானில் தூக்கில தொங்க காத்திருக்கும் தன்னோட மகளின் படத்தை கழுத்தில மாட்டிக்கொண்டு கைவிரல்களைக் கோர்த்து ஒரு வித நம்பிக்கையில் மவுனமாக எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தப் படத்தை எடுத்தேன்.
                                                   
                                                    பிறகு அவருடன் தனியாகக் கதைத்தேன். பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடிய தன்னோட மகளை இரானிய அரசாங்கம் குற்றம் சாட்டி சிறையில் அடைத்து மரணதணடனை கொடுக்க வைத்திருப்பதாகவும், தன்னோட மகள் இந்த நிலைமையில் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகவும் சொன்னார். ஈரானில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் முடிவில் குறைந்தது பத்துப்பேர் தூக்கில இழுக்கப்படுவதாகவும் சொன்னார் .
                                                            அவளவுதான் சொன்னார் , அதுக்குமேல நானும் ஒன்றும் கேட்க விரும்பவில்லை. மனித உரிமை அமைப்புகள் சொல்வதைப் பாலைச் சுண்டக் காச்சி ஆறவைச்சு அதுக்குக் கள்ளப் பூனையைக் காவல் வைச்ச மாதிரி அரசியல்வாத அரசாங்கங்கள் மண்ணாங்கட்டிக்கும் கணக்கில் எடுப்பதில்லை.
                                                             
                                                              மரணத்தை நிமிடங்களில் எண்ணிக்கொண்டு கைவிரல்களைக் கோர்த்து ஒரு வித நம்பிக்கையில் மவுனமாக எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தவிர இந்த வயதான அப்பாவால் சுவீடனில் இருந்துகொண்டு வேறு என்னதான் செய்யமுடியும் ?

                                                                 
கையில கமராமொபைல்போன் இருக்கிறதால சாகடிக்கிறது போல அதுபாட்டில இருக்கிற இயற்கையையும், நிலைமாறாத இடங்களையும், நிம்மதியான மனிதர்களையும், கனவில்ப் பயணிக்கும் காலநிலைகளையும் சுழட்டி சுழட்டி எவ்வளவோ அலப்பறைப் படங்களை எடுத்து நானே இங்கே என் சுவரில் போட்டு அதுக்கு கவிதைவேற எழுதுறேன் பேர்வழி என்று உங்களின் உசிரை பலமுறை எடுத்து இருக்கிறேன் .

                                                சலிப்புத்தரும்படியாக
எரிய வேண்டிய சுடர் அணைந்துகொண்டிருந்த
  போதிலும்  இந்தப்படத்தில முகமறியாத யாரோ ஒரு ஜீவனுக்கு கொஞ்சம் உயிர் கொடுத்ததுபோல ஒரு மனஅமைதி !எழுதக்கூடியவர்கள் ஒரே இடத்தில ஒரே நகரத்தில் இருந்து குப்பை கொட்டுவதில் அதிகம் சுவாரசியங்கள் கிடைப்பதில்லை . அப்படி இருப்பதே குட்டையில் தேங்கிய தண்ணியின் மெல்லிய சலசலப்பு ஏட்படுத்தும் சின்ன அலைகளைத் தவிர வேற ஏதும் நடப்பதில்லை.

                                                      புதிய நாடு ,,புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய முகங்கள் ,புதிய வாசங்கள் என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியின் அனுபவம் போல ஏகப்படட புது விசயங்கள் ஒவ்வொரு பொழுதும் கிடைக...
்குது. பழைய பழகிய பாதைகள் அவை தேக்கி வைத்திருக்கும் நினைவுகள் . கோடையும் உறைபணியும் தந்த பாடங்கள்.

                                                                   இப்போது ஸ்டாக்ஹோலம் என்னோட புதிய தளம். ஒரு காலத்தில் சுவீடனில் படித்த போது இந்த நகரத்தையும் சல்லடை போட்டு தேடித் தேடி ரக்ஷித்து இருக்கிறேன். காதுக்குள் மிக ஆழத்தில் அமுங்கிப்போன சுவிடீஷ் மொழி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டிக்கொண்டு வருகுது. மிக நெருக்கமான ஸ்டாக்ஹோலம் நிலத்தடி ரெயிலில் பிரயானிக்கும் போதெல்லாம் சக பயணிகளின் உரையாடல் வெளிகள் அந்த மொழியின் அலாதியான போக்கை இன்னொரு முறை மீட்டு எடுத்துத் தருகிறது.

                                                      பிடிகொடுக்காமல் உதறி எறிந்து பிடிக்காத நகரம் கொஞ்சம்   கொஞ்சமாய் பிடிக்கத் தொடங்குது . என்னதான் இருந்தாலும் ஸ்டாக்ஹோலம் விசாலமான ஐந்து சந்திகளில் விவரணம் காட்டும் பரந்து விரிந்த நகரம், பிரிந்து போன என் அன்புக்குரிய ஒஸ்லோ மிகச் சிறிய மூத்திரச் சந்து போன்ற நகரம். ஆனாலும் அது தந்த ஆதர்சங்கள் மறப்பதுக்கில்லை . மறைப்பதுக்குமில்லை .

                                              

ஒஸ்லோவில் அனாமிக்கா என்னை எழுத வைத்தாள்.. என்னை ஆச்சரியம் கலந்த நனவோடைக்குள் இழுத்துச் செல்கிற அதிசயாமாக ஸ்டோக்ஹோலம் எழுத்தாளர்களைக் கொண்டாடும் நகரம்,அவர்கள் வாழும் காலத்திலேயே உலகம் எல்லாம் இருந்து அவர்களை அழைத்துக் கவுரவப்படுத்தும் நல்ல வாசக உள்ளம் உள்ள சுவிடீஷ் மனிதர்கள் வசிக்கும் நகரம், இந்த மாதம் இந்த நகரத்துக்கு சில எழுத்தாளர்கள் வருகிறார்கள் என்ற விளம்பரம் தான் இது.
                                                       ஸ்டாக்கோலம் தியேட்ட்ட்ர் கலரிக்கு முன்னால் இருந்தது. அதில வாசித்துப்பார்க்க ஓரேன் பாரமுக் என்ற துருக்கி நாட்டு இலக்கிய நோபல்... பரிசுபெற்ற ஒருவரின் பெயர் தவிர வேறு பெயர்கள் அறிந்ததில்லை,

                                                        ஒரேன் பாராமுக் எழுதிய ஒரு நாவல் ஆங்கிலத்தில் வாசித்ததுண்டு, தமிழில் மொழிபெயர்ப்பாக " என் பெயர் சிகப்பு " என்ற ஓரன் ப்ரேமுக்கின்  வரலாற்று நாவல் வாசிக்க கிடைத்தும் இங்கேயும் அங்கேயும் இன்றி சில அத்தியாயங்கள்  பிரட்டியதைத் தவிர  முழுமையாக வாசிக்கவில்லை,                                                            அவரின் எழுத்துநடை அபாரமானது. உண்மையானது. நிறைந்த வாசிப்பு அனுபவம் நிச்சயமாகக்  கிடைக்கும் . " என் பெயர் சிகப்பு  " இன்றைய இஸ்தான்புல் நகரத்தையும் பழைய ஒட்டுமேன் சாம்ராச்சியத்தையும் , இஸ்லாத்தையும் பின்னிய ஒரு கதை . அது வரலாற்றோடு சமாந்தரமாகப் பயணிக்கும். 


                                           அரசியல் காரணங்களுக்காக இந்தமானுட எழுத்தாளரை     துருக்கி நாடுகடத்தியது. பலவிதமான விவாதம், சர்சை, என்று அவரோட ஆளுமை எப்போதுமே ஒரு சவாலாகவே இருக்கிறது இப்ப அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து வாழ்கிறார். இப்பவும் எழுதிக்கொண்டிருக்கிறார் .

                                                                           மற்றப்படி அதில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ள det var inte jag igen அந்த சுவிடீஷ் வாசகம் கொஞ்சம் ஜோஷிக்கும் படியான அர்த்தமுள்ள வாசகம் ,it was not me back என்று ஆங்கிலத்தில் சொல்லலாம் . தமிழில் மொழிபெயர்த்தால் , " புதிதாக எதுவுமில்லை அந்தப் பழைய நானேதான் " என்று வரும்,

................சிலநேரம் எனக்கும் அது பொருந்தலாம்.!.......


Stockholm, Sweden.