Sunday, 11 October 2015

வெரோனிக்கா ..02

அவள் கொஞ்சம் சந்தேகமாக என்னைப் பார்த்தாள். பிறகு இரவு உடுப்பை அவள் சூட்கேஸ்சில் இருந்து எடுத்து நிண்ட நிலையிலேயே போட்டாள். களைப்பா இருப்பது போல கொட்டாவி விட்டாள். பைபிள் போல என்னமோ ஒரு சின்னப் புத்தகத்தை தலையனைக்கு அருகில் வைத்தாள் .இன்றைய நாளுக்கு நன்றி  குட் நைட் என்று சொன்னாள். நான் அறைக் கதவை  இறுக்கி மூடிக் கொண்டு படு  என்றேன். அவள் செபம் போல என்னவோ சொன்னாள். காலையில் பார்க்கக்  கதவு மழைக்குப்  பாறி விழுந்த கிடுகு வேலி போல ஆவெண்டு திறந்து கிடந்தது.

                                           வெரோனிக்கா வந்த அந்த முதலிரவில் என்னோட கட்டிலில் படுத்தாள். நான் சோபாவில் உடும்புபோல நெளிஞ்சு வளைஞ்சு படுத்துக்கொண்டு இருந்தேன். காலையில் எழுப்பி அவள் படுத்து இருக்கிற விறுத்ததைப் பார்த்தேன். சின்னக் குழந்தைகள் உலகம் மறப்பது போல எல்லாத்தையும்  சுருட்டி பூனைக்குட்டி போல இறுக்கிக்கொண்டு அலங்கோலமாய்ப் படுத்து இருந்தாள்.

                                                 நான் போய் பெட்சீட்டை இழுத்து மூடிவிட்டேன். அன்றைய நாள் எப்படி விடியும் என்று தெரியாததால் முக்கியமா என் வேலைக்கு பகலே போக வேண்டி இருந்ததால் ஒரு பேப்பரில் " குசினியில் கோப்பி போட்டு வைத்து இருக்கிறேன் நீ எழும்பினவுடன் குடி " என்று எழுதி பெட்ரூம் கதவில ஒட்டி வைத்துப்போட்டு  வேலைக்குப் போட்டேன்.

                                             பின்னேரம் வேலை முடித்து வந்த போது வெரோனிக்கா கட்டிலில் படுத்து இருந்தாள். அடி வயிறு நோகுது போல முகத்தை இறுக்கி மூடிக்கொண்டு குப்புறப்படுத்து இருந்தாள் . நானே ஒரு குத்து மதிப்பில் ஒஸ்லோவில் உள்ள தமிழ்க் கடையில் வேலை முடியப்போய் வெந்தயம் வேண்டிக்கொண்டு வந்து இருந்தேன், அதை பச்சை தண்ணியில் போட்டு ஊறவைத்தேன். ரோடியோவைப் போட்டு பாட்டுக் கேட்க ,கொஞ்ச நேரத்தில் அவளே விழித்து என்னையும், தான் எங்கே இருப்பது போலவும் பார்த்தாள். எப் எம் ரோடியோவில் பாடின " La isla bonita " என்ற ஸ்பானிஷ் ஸ்டைல் ஆங்கிலப்  பாடலை முனுமுனுத்தாள். 

                           " ஒ உனக்கு அந்த மடோனா பாடின பாடல் விருப்பமா,,,நல்லா பாடுறியே ,,எங்கே கொஞ்சம் பாடிக்காட்டேன் எனக்கும் "

               " ஓகே,,நான் ஸ்பெயினில் சில மாதம் இருந்து இருக்கிறேன்,,இந்தப் பாட்டு சொல்லும் இடமான சென்ட் பியாகோவை சுற்றிப்பார்த்து இருக்கிறேன் "

             " ஒ அப்ப கட்டாயம் உனக்கு பாடல் வரிகள் நினைவு இருக்குமே,,அந்த இடத்தைப் பற்றிதானே அந்தப் பாடலே "

              " எஸ்,,,கொஞ்சம் பாடுறேன்,இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் உலகத்தின் கவலைகள் மறந்துவிடும்  
         
          Tropical the island breeze
          All of nature, wild and free
          This is where I long to be
          La isla bonita
          And when the samba played
          The sun would set so high
          Ring trough my ears and sting my eyes
          Your Spanish lullaby.....ஹ்ம்ம்,,,நல்லா இருக்கா என் குரல் "

           " யெஸ்,  இதுதான் அந்தப்  பாடல்,,,ஸ்பெயின் எனக்கும் மிகவும் விருப்பம் .."

            " ஸ்பெயின் பற்றி ஸ்பானிஷ் இல España, pasado y presente. donde comenzó donde alcanzó a  இப்படி சொல்லுவார்கள்,,"

               " கிழிஞ்சுது போ ,எனக்கு ஸ்பானிஷ் தெரியாது, ஆங்கிலத்தில் சொல்லுப்பா "

                 " ஓகே , அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு spain, past and present. where it began where it reached to... என்று வரும் "

                   " என்னோட தாய் நாடும்  ற்றொப்பிகல் என்ற வருடம் முழுவதும் வெய்யில் எறிக்கும்,,,தோலை  எரிக்கும் நாடு,, ஆனால் ஸ்பெயின் போல கடற்கரைகள் இருக்கு ஆனால்  நீல நிற கண்கள் உள்ள  அழகான   பெண்கள் அங்கே  இல்லை, மிக மிகக் குறைவு ..,"

                  " ஒ உன் தாய் நாட்டில் பெண்கள் வேறு எப்படி இருப்பார்கள் ,,உன்னைப்போல கறுப்பு தலைமயிர், ,பிரவுன் கலரில் சுமாரா இருப்பார்க்களா "

                         " எங்கள் நாட்டில் பெண்களும் ஆண்களும் ஏறைக்குறைய ஒரே மாதிரிதான் இருப்பார்கள்,,அதென்னவோ என் நாட்டு பெண்களின் முகத்தில் அதிகம் பெண்ண்மை இல்லாத மாதிரி இருக்கும்,,கண்கள் வெறும் கண்கள் எவளவுதான் மை பூசினாலும் ஸ்பானிஸ் ப்ளு ஐஸ் போல வரவே வராது .."

                       " ஹ்ம்ம்,,,அதுக்கென்ன நான் உனக்கு இருக்கிறேனே,,நீலக் கண்ணுடன்,,,ஹ்ஹஹஹாஹ்..சும்மா  ஜஸ்ட் எ  ஜோக்  ஆக சொல்லுறேன்,,ஹ்ம்ம்  .. "

                " ஒ நன்றி , உனக்கு பசிக்குதா வெரோனிக்கா, வயிறு நோவதுக்கு வெந்தயம் வேண்டிக்கொண்டு வந்து இருக்றேன் ,அதை ஊறவைத்த தண்ணியைக் குடி உனக்கு ஓகே ஆக இருக்கும் "

                    " அதென்ன ,,வெந்தயம் ..எனக்கு தெரியாதே, சூப் ஏதும் செய்வியா,ப்ளிஸ் அது செய்து தா " 

                  " வெந்தயம் ஊறவைத்த தண்ணி, அதுவும் ஒரு வகையில் சூப் தான் ,,ஹ்ம்ம்  அதுக்கு என்ன பெயர் என்று தெரியாது ,,சம்போ சிவசம்போ என்று உன்னைச் சந்தித்த நினைவாகப் பெயர் வைத்துக்கொள்ளலாம்.." 

             " ஒ மை காட்...பெயரைக் கேட்கவே பயமா இருக்கு,சரி அந்த சம்போ சிவசம்போ வையும் குடிக்கிறேன்,ஹ்ம்ம்  நீ செய்வதால்,வேற ஏதும் தெரிந்த பெயருள்ள சூப்பும்  செய் ," 

              " ஓகே ,செய்யலாம்,,உனக்கு என்ன சூப் இப்ப வேணும் ,,இருக்கிற மரக்கறி எல்லாம் போட்டு ஒரு சூப் செய்யவா "

                 " ஹ்ம்ம்..மினிச்ரோனி சூப் செய்வியா ,அது எனக்கு விருப்பம் ,"

             " ஓகே செய்யுறேன் , ஆனால் மினிச்ரோனி உனக்கு இப்ப சரிவராது ,அது ஹெவியான சூப் ,நான் சிம்பிள் சூப் செய்யுறேன் ஓகேயா " 

                 " ஹ்ம்ம்..ஓகே. நீ என்ன செய்தாலும் நான் அதை ரசிர்த்து குடிப்பேன் போல இருக்கு இப்ப..ஏன் காலையில் எனக்கு குட் மோர்னிங் சொல்லவில்லை "

                  " இல்லை, வெரோனிக்க நீ நித்திரையா இருந்தாய்,,நான் குழப்ப விரும்பவில்லை.,,அதால் பேப்பர் எழுதி ஓட்டிப்போடுப் போனேன் .."

                 " ஹ்ம்ம், நீ என்னை இழுத்து மூடிப்போட்டு போகும் போது நான் முழிப்பா தான் இருந்தேன் ..ஹ்ம்ம்.."

                     " ஒ அப்படியா எனக்கு அது தெரியாதே ,நீ ஒரு துகில் உரி நடனக்காரி என்று தான் இதுவரை நினைத்து இருந்தேன்,,நீ ஒரு நடிகை எண்டு எனக்கு தெரியாமல் போச்சே  "

                     " நான் நடிகை இல்லை ,உயிர் உள்ள, உணர்வு உள்ள  பெண் " என்று எழும்பி வந்தாள்,மேலாடை போல ஒன்றைக் கொழுவிக்கொண்டு வந்த எனக்கு முன்னாள் மேசையில் இருந்தாள்

                 " இப்ப எப்படி இருக்கு உன் வயிறு நோ.ஓகே யா..நல்ல சுடு தண்ணியில் குளி ,அது உடம்பில் உள்ள நோவுக்களுக்கு நல்லது "

               " ஹ்ம்ம்,,அது எனக்கும் தெரியும், அம்மாவும் அப்படிதான் சொல்லுவா ,நீ நல்லா குடும்ப வைத்தியம் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறாயே, அவசரத்துக்கு என்ன செய்யவேண்டும் என்றெல்லாம்  என்று ,நீ இன்றைக்கும் வேலைக்கு போகப்போறியா "

                 "பொஞ்சாதி இங்கே முக்கியமில்லை ,ஆனால்  வேலை இங்கே முக்கியம் என்று உனக்கே தெரியும், துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடிக்கொண்டு கொஞ்சநாள் வேலை செய்வேன்,,பிறகு அந்தக் காசில் ஜாலியா  ஊர் சுற்றுவேன்.."  

                " ஒ அது நல்ல ஐடியா,,உலகத்தை ரசிப்பது முக்கியம் என்று நானும் நினைப்பது,,உனக்கு தெரியுமா எதையுமே ரசிக்காமல் ஓடி ஓடி கொண்டு இருக்கும் மனிதர்கள் வயதாகி திரும்ப்பிப் பார்க்க அவர்கள் விட்ட இடத்தில வாழ்க்கை இருக்காது,,," 

                                     " அப்படியா,,வெரோனிக்கா "

                                  " இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்காது,,என்னடா இன்னும் முளைச்சு நாலு இலை விடவில்லை அதுக்குள்ள பெரிய தத்துவம் சொல்லுறேன் என்று நினைக்கிறியா " 

                                        "இல்லை,,நீ விபரமானவள்  வெரோனிக்கா  " 

                                         "    புத்தகப்  படிப்பும்  இருக்கு  கொஞ்சம்,,வாழ்க்கை  அதன்  வழியில்  வந்து  வேண்டாத  எவளவோ  விசியங்களில்  என்னிடம்  விட்டுச்  சென்றுள்ளது  " 

                    " இல்லை,,,நீ சொல்வதில் விசியம் இருக்கு , 

                         " சரி  ஏன்   அவசரப்படுறாய்...என்னோட  கொஞ்சம்  கதையேன்,,குறைஞ்சா  போயிடும் "

                                   "   இப்ப  நேரம்  மட்டு மாட்டா  தான்  இருக்கு  வெரோனிக்கா "

                                     "  என்னது,,காசுக்குப்  பின்னால  ஒடப்பறியா,,சரி  போ,,எனக்கு  யாரோடும்  இப்ப  அன்பா  கதைக்க வேணும்  போல  இருக்கு "


                             "யெஸ்,  வெரோனிக்கா, வேலைக்கு போகப்போறேன் ,சூப்  செய்து போட்டு போறேன், உனக்கு ஏதாவது சாப்பாட்டு வேண்டுமென்றால் அதையும் செய்து வைச்சிட்டுப் போறேன் "

                " பரவாயில்லை, நானே பின்னேரம் ஏதும் சமைக்காவா உனக்கும்,,எனக்கும்,ஏன் வேலை வேலை என்று ஓடுறாய் ,ஒருநாள் தன்னும் உனக்கு லீவு இல்லையா  "

                  " ஓகே,சமை,குசினியில் என்ன இருக்கு என்று பார், ,டீபிரிசரில் கனக்க இறைச்சி,மீன்  பிரீஸ் ஆகி கன நாட்கலாய்க் கிடக்கு விரும்பினதை வெளியே எடுத்து வைச்சுப்போட்டு உனக்கு விரும்பின மாதிரி சமை, சமையல் வேலை செய்வதால் நானே எனக்கு சமைக்க விருப்பம் இல்லை,,வேற ஆட்கள் சமைச்சால் எப்பவும் சாப்பிட விருப்பம் "

                    " சரி , அப்படியே செய்கிறேன்.. இந்த வீட்டில் நீ தனியா இருக்க போரிங்கா இருக்காதா உனக்கு, ஏன் நீ தனியா இருக்கிறாய் ,விரும்பினால் சொல்லு ,,விருப்பம் இல்லாட்டி சொல்லாதை "

                 " ஹ்ம்ம், இதைப்பற்றி நான் இப்ப கதைக்க விரும்பவில்லை,வெரோனிக்கா ,"

                 அன்று  மத்தியானம் அவளுக்கு,வெந்தயம் ஊற வைச்ச தண்ணியை ஒரு கப்பில் வடிச்சு வைச்சுப்போட்டு  மரக்கறி சூப் செய்து வைச்சுப்போட்டு  நான் வேலைக்கு போயிட்டேன். இரவு தான் வேலை முடிஞ்சு திரும்பி வந்தேன். வெரோனிக்கா அழகா உடுத்துக்கொண்டு டெலிவிசன் போட்டு அதில குழந்தைப்பிளைகளின் கஸ்பர் அண்ட் லீசா கார்டுன் சனல் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் போட்டிருந்த டுன்னிக்கா  மேலாடை  ஏறக்குறைய  எல்லா  ஜவ்வன வளைவுகளையும் வஞ்சகம்  இல்லாமல்  வடிவமைத்துக்கொண்டிருந்தது 

                                     என்னிடம் இருந்த சின்ன சாப்பாட்டு மேசையை துடைத்து, எங்கேயோ ஒரு மூலையில் கிடந்த சின்ன பிளாஸ்டிக் பூங்ககன்றைக் கழுவி நடு மேசையில் வைச்சு , சாப்பிடும் போது பற்றவைக்கும் வாச மெழுகுதிரி பற்றவைத்து இருந்தாள். என்னோட அப்பார்ட்மெண்ட்டில் என்னவெல்லாம் இருக்கு என்று கொஞ்சம் நோண்டிப் பார்த்தது போல இருந்தது அவள் பார்த்த பார்வை .

              " ஹ்ம்ம்,,வேலை மிகவும் கஷ்டமா இன்று உனக்கு ,,களைச்சுப்போய் வாறாயே ,, நீ கிட்டார் வாசிப்பியா,,"

             " வேலை  எப்பவும் போல வேலை,,,எப்படி தெரியும் அது உனக்கு நான் கிட்டார் வாசிப்பேன் என்று "

               " ஒரு அக்கோஸ்டிக் கிட்டார் தூசு படிந்து போய் மூலையில் கிடக்கே ,,ஹ்ம்ம்,,என்னோட அம்மா பியானோ வாசிப்பா,,அதை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து தான் அப்பா எங்களை விட்டுப்போன பிறகு சீவியதை தள்ளிக்கொண்டு போனோம்,,"

                               "  நீ பாவம்,வெரோனிக்கா "

                              "   ஒலிவியா நல்ல பியானோ வாசிப்பாள்,,எனக்கு முயூசிக்ல  இண்ரெஸ்ட் இல்லை.." 

            " கிட்டார் எப்பவாவது சும்மா வாசிப்பேன்,,அதை முறைப்படி படிக்கவில்லை...சரி ஒலிவியா, அது  யார் "

           " அவள்தான் என் தங்கச்சி,,நாங்கள் ரெண்டு பேர் தான்,,ஒலிவியா ஒஸ்றியா போய் வியன்னாவில்  கிளாசிக்கல் பியானோ படிக்க ஆசைப்பட்டாள்..ஹ்ம்ம்,,,எங்கள் நாடு ஹங்கேரி இப்ப பொருளாதாரம் உடைந்து,,,எல்லா படிப்பு வசதிகளுக்கும் ஆப்பு விழுந்திட்டுது "

           " ஒ அப்படிதான்  நானும் கேள்விப்பட்டேன்,,கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு காலத்தில் செல்வச் செழிப்பா இருந்து இருக்கு,,,ஹ்ம்ம்,,,நான் நினைக்கிறன் கொமினிசம் ஆட்சியில்  இருந்த போது என்று "

            " அதை விடு ,,எனக்கு அரசியல் அரசியல்வாதிகள் ரெண்டையும் கண்ணில காட்டக்கூடாது,,அவளவு கோபம் வரும்,,நீ களைச்சுப்போய் வருவாய் என்று ஒரு சின்ன சாப்பாடு செய்து வைச்சு இருக்றேன்..ஹ்ம்ம்,,,உன்னைப்போல பெரிய குக் இல்லை நான்,,எனக்கு தெரிஞ்ச மாதிரி சமைத்து வைத்துள்ளேன் "

            " ஒ அப்படியா ,,சரி வா சாப்பிடுவம்....சாப்பிட்டு சாப்பிட்டு மிச்சக் கதை கதைப்பம் ."

            " என்ன ஒ அப்படியா  என்று மட்டும் சொல்லுறாய்,,உனக்கு தெரியுமா அன்பா யார் சமைத்தாலும் அது ருசியா இருக்கும்,,சமைக்கும்போது அன்பான எண்ணங்கள் உருவானால் அந்த எண்ண அலைகள் சாப்பாட்டுடன் ஒட்டிக்கொள்ளும் "

         " ஒ அப்படியா,,,நானும் கேள்விப்பட்டுள்ளேன் ,,சரி இன்றைக்கு பிராக்டிக்கலா பார்க்கலாம் "

                    வெரோனிக்கா லசானியா போல என்னமோ செய்து, அதுக்கு உருளைக்கிழங்கு அவிச்சு வைச்சு இருந்தாள். சீசர் சலாட் போல என்னமோ கிடந்த இலை எல்லாத்தையும் வெட்டிப் போட்டு, சைனிஸ் டூபுவை சின்ன சின்ன சதுரமா வெட்டி அதுக்குள்ளே ஒலிவ் ஒயில் சரிச்சு ஊத்தின மாதிரி இருக்க அதில உள்ளியை முழுதா தோல் உரிச்சுப் போட்டு செய்து இருந்தாள். கொஞ்சம் டெக்னிகலா மெடிடேர்நியன் நாடுகளின் சமையல் அவளுக்கு தெரியும் போல இருந்தது. கதைத்துக்கொண்டு இடை இடையே ஜன்னலால் வெளியே பார்த்துக்கொண்டு  சாப்பிட்டாள். முகம் மெழுகுதிரி வெளிச்சத்தில் பிரகாசமாக ஒளிர்ந்தது 

                 " வெரோனிக்கா,,உன் அம்மா இத்தாலி என்றாய் ,,பிறகு ஏன்,,நீயும் உன் அம்மாவும் தங்கச்சியும்  ஹங்கேரியில் வசிக்கவேண்டிவந்தது  "

                      " அது என் அப்பாவின் நாடு.அம்மாவுக்கு இத்தாலியில் சொந்தமா  வைன் தோட்டம் இருந்தது, தாத்தா வைன் வடிசாயையே வைச்சு இருந்தாராம்,என்னோட அப்பா அங்கே கோடை காலத்தில் முந்திரி பிடுங்கும்  வேலை செய்ய வந்தார், அப்போதுதான் அம்மாவை சந்தித்து இருக்கிறார், "

                         " ஒ உன் அப்பா பெரிய வைன் தோட்ட வேலைக்காரன் போல "

                      " ஒரு மன்னாங்கட்டியும் இல்லை,,அந்தாள் பெரிய குடிகாரன்,,வந்ததே வைன் குடிக்கப் போல ரகசியமா தாத்தாவின் வடிசாலையில் இருந்து திருடிக் குடிப்பாராம்,,அம்மாவுக்கு கன மாதங்களின் பின் தான் தெரியும் "

              "  ஒ ,,பிறகு என்ன நடந்தது "

                        " தாத்தாவுக்கு அந்தாளைப் பிடிக்கவில்லை, அதால சொத்தைப் பிரிச்சு கொடுத்து அம்மாவையும் போகச்சொல்லி விட்டார் "

                   " ஹ்ம்ம் ,,அப்புறம் "

                     " ஹ்ம்ம் அப்புறம் ,அம்மாவையும் கூட்டிக்கொண்டு ஹங்கேரி வந்திட்டார். வந்து புடாப்பெஸ்டில் ஒரு மாத வாடகை வீட்டில் வசித்து இருக்கிறார்கள். "

                            "     ஹ்ம்ம்,,,"

                                     "  நானும் ஒலிவியாவும் ஹங்கேரியில் பிறந்தோம். ஹ்ம்ம்  எனக்கு இன்றுவரை ஒரு சொந்த வீடு எப்படி இருக்குமென்றே தெரியாது,,அதை உணர்ந்ததே இல்லை "

                " ஒ ஹங்கேரி வந்து உன் அப்பா குடியை விட்டு ஒரு நல்ல மனிதனாக மாறிவிட்டாரா "

                " ஒரு மண்ணும் இல்லை,,அந்தாள் ஹங்கேரி வந்து குடி மட்டும் இல்லை ,,குதிரையிலயும் தொடங்கிவிட்டார்....Functional retards everywhere !!!!!! "

               " ஒ பணம் கட்டிப் பந்தயம் வைத்து குதிரை ரேஸ் விளையாடுவாரா "

             " இல்லை,,குதிரைகள் அவருக்கு விருப்பம்,அதால குதிரைகள் வளர்க்குமிடத்தில் வேலை செய்தாராம், அங்கேதான்  குதிரைகளை நேசிக்கும் இன்னுமொரு பெண்ணை சந்தித்து...ரெண்டு குதிரையும் ஒரு நாள் ஒட்டிப் போயிட்டுதுகள் " 

                    " ஒ உங்களுக்கு கஷ்டமா இருக்கே உழைக்க ஒரு ஆம்பிளை இல்லாமல்..."

              " ஹ்ம்ம் அப்படிதான் இருந்தது, நல்ல காலம் ,அம்மா பியானோ படிப்பித்து மாத வாடகை கட்டினா ,இத்தாலியில் இருந்து தாத்தா மாதம் மாதம் செலவுக்கு பணம் அனுப்புவார்,,ஒரு நாள் சாப்பிட்டு ஒருநாள் பட்டினி கிடந்துதான் நாங்க வளர்ந்தோம்,,தாத்தா மிகவும் நல்லவர்,,பொறுப்புள்ளவர் ,கண்ணியமானவர் ,,யாரையும் மனம் நோக வைக்காமல் கதைப்பார்.."

                  " ஒ..அப்படி நல்ல மனிதர்கள் பல பேர் இருக்கிறார்கள்."

                "அவர் ஒவ்வொரு கிறிஸ்மஸ்க்கும் உடுப்புகள் தவறாமல் வேண்டி அனுப்புவார்.  தாத்தாவின் இத்தாலி வீட்டுக்கு  நான் பள்ளி விடுமுறைகளில் போய் இருக்கிறேன்..எப்பவும் என்னை மடியில் வைத்து கதைகள் ,அறிவுரைகள் போல சொல்லுவார்,மனிதர்களைப் புரிந்துகொள்ள அந்த சின்ன வயசிலேயே எனக்கு அவரின் அறிவுரைகள் உதவியது "

             " ஒ அதுதானா நீ சோசியோலோயி படிக்க விரும்பினாய் ,,சோசியோலோயி என்றால் என்ன "

                " ஹ்ம்ம் ,,,சோசியோலோயி என்றால் ,,நீ நான்,,சமூகம். அதுதான்.  தனிமனிதர்கள் சமூகம் ஆகும் போது வரும் பல நெருக்கடிகளை  ஒரு விஞ்ஞான அணுகுமுறையில்  கற்கும் கற்கை நெறி அவளவுதான் .."

             " ஓகே,,இன்றைக்கு காணும் வெரோனிக்கா..உன் கதை மனதை கடினமாக்குகிறது " 

             " ஹ்ம்ம்,,,மன்னித்துக்கொள் அப்படி உனக்கு கஷ்டம் கொடுத்து இருந்தால்..நாளைக்கும் வேலையா உனக்கு,,நாளைக்கு லீவு எடேன்,ரெண்டு பேரும் ஒஸ்லோ நகரம் சுற்றிப்பார்ப்பம்,,எனக்கு படிக்கவும்,,ஸ்ட்ரிப்பில் வேலை செய்யவே நேரம் போகுது,,,ஒரு நாள் தன்னும் காலாற நடந்து ஒஸ்லோ நகரத்தைப் பார்க்க முடியவில்லை "

                   " சரி நாளைக்கு லீவு போடுறேன் ,,உன்னைக் கூ ட்டிக்கொண்டு போய்க் காட்டுறேன் "

                   " உண்மையாகவா சொல்லுறாய்,,உன் கையைப்பிடித்துக் கொண்டு போகவேண்டும் போல இருக்கு " 

                                     என்றாள். நான் திடுக்கிட்டுப் பார்த்தேன்.அதை அவளும் திடுக்கிட்டுப் பார்ப்பாள் என்று நினைச்சேன் ஆனால் அவள் இயல்பாக பார்த்து சிரிச்சுக்கொண்டு இருந்தாள்.  அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும் என்னவும்  உபத்திரவம்  இதால வருமா  என்றும்  எதுவும்  சொல்லமுடியவில்லை 

              " கை எல்லாம் பிடிக்க வேண்டாம் ,சும்மா வா , " என்றேன் 

                  " ஏன்  என்  கையைப்  பிடிச்சுக்கொண்டு  நடந்தா  உனக்கு  என்ன குடத்துத்  தண்ணியில    குடியா  முழுகிப் போகிவிடும் "

                       " அப்படி  எல்லாம்  இல்லை  வெரோனிக்கா,, எனக்கு  அது  இப்ப  தேவை  இல்லை  என்று  நினைக்கிறன் "

                      "  சரி  வேற  எப்ப  தேவை  வரும்,,அதை  சொல்லு "

                       "      வெரோனிக்கா  உனக்கு  ஒஸ்லோ சிட்டி  சுற்றிக்  காட்டுறேன்,,அவளவுதான்  வேண்டும்  என்றால்  தாக்கோ டின்னர்  மெக்சிகன்  டோர்ட்டில்லா  ரெஸ்ரோரெண்டில்  சாப்பிடுவம்,,நான்  பில்  பே  பண்ணுறேன் "

                                   " அப்ப  கையே  பிடிச்சு  நடக்கவே  மாட்டியா,,இவளவு  ஒஸ்லோ சிட்டியில்  செய்வேன்  என்கிறாய்,,கை  தானே  பிடிச்சு  நடக்கக் கேட்கிறேன் "

                             "வெரோனிக்கா  ,,சும்மா  கனவில  கரட்டி  ஓனான்  வெருட்டிக்  கலியாணம்  கட்டுற  மாதிரிக்  கதைக்காதே "

                           "   ஹ்ம்ம்,,கையைப்பிடித்து  நடக்கும்போது எவளவு  உணர்வுகள்  பாயும்  தெரியுமா,,நேசம்  என்பதே  ஆண்களுக்கு  புரியாது,,மென்மையான  உணர்வுகள்தான் மேன்மை  என்பது  அந்த  மண்டுகளுக்குப்  புரியவே  புரியாது "

                          "  இப்ப  என்ன  பிரசினை  வெரோனிக்கா  உனக்கு,,எனக்கு  ஒன்றுமே புரியவில்லை "

                            " என்ன  புரியவில்லை  உனக்கு ,,சொல்லு "

                      " எங்க  நாட்டில  ஒரு  சொலவடை சொல்லுவார்கள்    ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? என்று "

                             "    அப்படி  என்றால்  என்ன  அர்த்தம்,,,,நான்  உன்  கையைப்பிடிச்சு    சும்மா காலாற   நடக்கக்  கேட்டால்  பெரிதா  என்னமோ  எல்லாம்  சொல்லுறியே "

                         "  ஹ்ம்ம்,,,அதுவும்  உண்மைதான்  வெரோனிக்கா "

                        "  சரி,,விடு...நான்  இனிக்  கதைக்கமாட்டேன்  இதுபற்றி "

                           " அதுதான்  நல்லம் ,,டியர்,  நாளைக்கு  குளிர்  காற்று  அடிக்கும்  எண்டு  காலநிலை  ரிப்போட்  டெலிவிசனில்  சொன்னார்கள்  ,,நீ  கதகதப்பா  உடுத்திக்கொண்டு  வெளிக்கிடு "

                                      "     வாவ்,,இப்ப  ஒரு  அன்பான  சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு "

                                     "  என்ன  சொன்னேன்,,கழுத்துக்கு  ஸ்கார்ப்  சுற்றிக்கொண்டு  இறங்கு,,இல்லாட்டி  குளிர்  பிடிக்கும்  வெரோனிக்கா  "

                              "  இப்ப  ஒரு  அன்பான  சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு ..ப்ளிஸ்  அதைக்  கேட்க  ஆசையாக  இருக்கு "

                               "     நான்  என்ன  சொன்னேன்,,நல்ல  கம்பளி  மேலாடை ஆடை  போடு  "

                       " இப்ப  ஒரு  அன்பான  சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு ,,ப்ளிஸ்  ப்ளிஸ் "

                             "  நான்  ஒண்டும்  சொல்லவில்லை,பிசத்தாதை  "

                         "  இல்லை  ,,இப்ப  ஒரு  அன்பான  சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு ,,என்னை பாசமாக அழைப்பது  போல,,ப்ளிஸ்   சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு "

                                     " நாளைக்கு  குளிர்  காற்று  அடிக்கும்  எண்டு  காலநிலை  ரிப்போட்  டெலிவிசனில்  சொன்னார்கள்  ,,நீ  கதகதப்பா  உடுத்திக்கொண்டு  வெளிக்கிடு என்று  சொன்னேன் "

                                "  அதில்லை,,,பிளிஸ்  சொல்லு "

                                 "   வெரோனிக்கா  நான்  திருப்பி  திருப்பி  சொல்ல  என்ன  டெலிவிசனில்  தலைப்புச்  செய்தியா  வாசிக்கிறேன்,,சும்மா  இரு "

                   அவள் அதுக்குப் பிறகு ஒன்றுமே சொல்லவில்லை. எழும்பிப் போய் ஜன்னால் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.நான் டெலிவிசனைப் போட அதில  ஜூலியா ரோபர்ஸ் நடித்த " வுமன் இன் லவ் " படம் ஓடிக்கொண்டு இருந்தது. சோபாவில் கால்களை நீட்டிக்கொண்டு அதைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். 

                        "குட் நைட் , இன்றைய நாளுக்கு நன்றி ,நாளைய நாள் அலாதியான அனுபவங்களைக் கொடுக்கட்டும் " 

                                           என்று சொல்லிப்போட்டு அவள் போய்ப்படுத்திட்டாள் 

                                                  வெரோனிக்கா   கொல்லப்பட்டதோடு   இந்தக்  கதை  முடியும்.   அப்பட்டமான உண்மைகள்  வெளியே வராத  பல  சம்பவங்களில்  அதுவும்  ஒன்றாக  ஒரு  உறைபனி மாத  ஒஸ்லோவில்  சந்தடி அதிகம்  இல்லாத  ஒரு  புறநகரப்  பாதையில்  வெரோனிக்காகாவின்  ரத்தம் வெள்ளை உறைபனியில் மெல்ல  மெல்ல  வழிந்தோடி முடிந்தபோது வெரோனிக்கா இந்த உலகத்தைவிட்டுப்  போயே போய்விட்டாள் . அவள் நீண்ட குதிக்கால் சப்பாத்து தாறுமாறாகக்  கால்களில்  பின்னிப்பிணைந்து கிடந்தது 
                                 

                         இரவு நல்ல நித்திரையிலா ,அல்லது அதிகாலையா தெரியவில்லை,,தேசிங்கு ராஜாவின் பஞ்சகல்யாணிக் குதிரை என்னைத் திரத்தி கொண்டு வைன் தோட்டத்தில் இருந்து வந்து எனக்கு மேல பாய நான் அய்யோ என்று குழறிக்கொண்டு சோபாவில் இருந்து உருண்டு விழுந்து எழும்பினேன்..வெரோனிக்கா இரவு முழுக்க நித்திரை கொள்ளாதது போல எனக்கு முன்னுக்கு இருந்தாள்....      

...தொடரும் ...  
.

   .