Thursday, 16 June 2016

ஒருவிதத்தில் கதைகள்தான்,

நேர்மையாக என் படைப்புகளைத்  தண்ணீரிலும் , பிறகு சலவைத் தூளிலும்  போட்டு  அலசோ அலசென்று அலசி ஆராய்ந்து நேரத்தை செலவழித்து. பின்னர் அதை லைக் செய்து  , அதற்கு ஏற்றாற் போல சிறந்த கமெண்ட் எழுத வேண்டுமே என்று கடுமையாக மூளையைப் போட்டுக் குழப்போ குழப்பென்று குழப்பி, ஒரு வழியாக கமெண்ட் எழுத தட்டு முட்டென்று ஒழுங்காகக் கணனியில்  எழுத  முடியாத   தமிழில் தட்டச்சு செய்து  கருத்துப்  போட்டு  உற்சாகம் தரும் நண்பர்களே என்னோட ஸ்பெயின்  நாட்டைச் சுற்றிப்பார்த்த அனுபவங்கள்  எல்லாமே  ஒருவிதத்தில் கதைகள் தான்,  

                                               என்ன வரலாறும், அனுபவமும் சேர்ந்த   தெற்கு   ஐரோப்பாவில் உள்ள  ஸ்பெயின் என்ற நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான பார்சிலோனா, மாட்ரிட், செண்ட் செபஸ்தியான்  நகரங்களின்  வழிகள்  எல்லாம் சேர்ந்தே நடந்த பிரயாணக் கதைகள் தான். அதில்க்  கனவுகள்,  நம்பிக்கைகள் பொய்த்துப்போன ,தென் அமரிக்க கண்டதை  ஒருகாலத்தில் கட்டி ஆண்ட ஸ்பானியர்களின் இன்றைய நிலையின் அவலமான காட்சிகள் கசப்பாக இருக்கலாம்  ! 

                                                                  பார்சிலோனா நகரத்தின் மக்களின் இன்றைய நிலைமை பற்றிய என்னோட  பார்வைகள் ,தேடல்கள் தான் இதில்  அதிகம். அந்த நகரம் ஒரு  ஒப்பனைகள் இல்லாத  மேடை நடிகையின் நாடகங்களின்  நளினப் பிரமிப்புக்கள்  ஒவ்வொருநாளும் சலிக்கவிடாத   வாழ்வின்  ஒப்பற்ற  உற்சாகங்களை  நிரப்பிவிடும்  நகரம்.  அதை  உறங்காத  காதல்  நகரம் என்றுதான் சொல்லவேண்டும் . மிச்சம் ஸ்பெயின் நாட்டின் முக்கியமானமாட்ரிட், செண்ட் செபஸ்தியான் என்ற   இரண்டு நகரங்களின் அனுபவம் ! 

                                                       மூன்று வருடங்களின் முன் பார்சிலோனா  போயிருக்கிறேன். அப்போது பார்த்த உற்சாகம் இந்த முறை  இல்லவே இல்லை.  பணக்கார  டூரிசஸ்டுகள் அலை மோதிய வீதியெங்கும் ரகசியப் பொலிசார்கள்  , ATM காசு எடுக்கும் BANK ங்குகளின் முன்னால் " ஐரோப்பிய யூனியனில் " இருந்து உடனடியா வெளியேற சொல்லி கெட்டவார்த்தையில் திட்டுக்கள் நிறைந்த வாசகங்கள், ஜன்னல்களில் சோகமாக எட்டிப்பார்க்கும் தூங்கும் முகங்கள், சோர்ந்துபோன " காளை ஏற்ற" வீரர்கள் சதுக்கங்களில் சுற்றி இருந்து கொண்டு  " ஆண்டவன் புண்ணியத்தில் நல்லது நடக்கும் " என்ற எதிர்கால கனவுகளில் கைகளை முறுக்குகிறார்கள்,

                                               நல்ல நினைவுகள் எல்லாமே  பிய்ந்து போன பின்னும்   கடற்கரைகள் மட்டும் இன்னும் பழைய களியாட்டங்களில்  போதையோடு அலையடிக்குது , வெள்ளை  மணலில் கவுண்டு கிடக்கும் அரை நிர்வாணப் பெண்கள், பிள்ளையார் வண்டிய தடவிக்கொண்டு கையில "பீர் " போத்திலோட ஜெர்மன் டூரிஸ்ட்டுகள் ," மெளனம் அழகான மொழியென" ஒருவர் மீது சாய்ந்து " கலியாணம் கட்டாமல் பிள்ளைப் பெறுவதுக்குக்  "கனவுகாணும் இளம் காதலர்கள்,

                                                     எண்ணப் பறவை சிறகடிக்க வண்ணப் பறவைகளுக்கு நொறுக்கு தீனி வீசுபவர்கள், பிளாஸ்டிக் கோப்பையில் " சென்ஜெரோ .சென்ஜோரே " எண்டு  ஐரோப்பிய யூனியன்  கொடுத்த கடனோடு வட்டியையும் சேர்த்தே எடுத்துக்கொண்டு   பின்வாங்கியதால் குனிந்து வழிந்து பிச்சை எடுக்கும் நடப்பு நிலவரத்தில் வறுமையாகிய பிச்சைச்காரர்கள், வளையங்களில் குத்துக்கரணம் அடிக்கும் கோமாளிகள் , அவர்களை  உலகம் மறந்து ரசிபவர்களுக்கு இடையே வளைந்து, நெளிந்து ,நுழைந்து வேவு பார்க்கும் " பிட் பொக்கட் " திருடர்கள், 

                                                        80 களின் பழைய " பிளமிங்கோ "பாடல்களை கிடாரில் தடவி , பெட்டியில் மேளம் அடித்து வாசிக்கும் "ரும்பா கதலானா " தெருவோர இசைக் குழுக்கள்,  வியர்வை வழிய வழிய  உல்லாசப்பயணிகள்  விரும்பிக் கேட்ட கியூபன் மரிம்பா ரிதத்தில் வரும் லத்தினோ  பாடல்களையும் அவர்கள் சளைக்காமல் பாடினார்கள் .அவர்கள் அழகாக ஆட்டிப்,பாடி ,வாசிப்பதை " ஆ " எண்டு பார்த்து ,ரசித்து, காசு போடாமல், சத்தமில்லாமல் போகும் வெள்ளைக்காரர்கள், அந்த இசை தெருமுனையில் மழுங்கிப் போய் ,,மங்கிக்கொண்டு  திரும்ப ,அதன் தொடர்ச்சியாக இன்னொரு ஸ்பானிஸ்  ரிதம் அடுத்த தெருவில் ஆரம்பிக்கும் . 

                                                            காலாற நடக்க நீண்ட கடற்கரை , அந்தக்  கரை எனக்கும் நுரை தள்ளும் கடல்,  அதன் மீது விழும் சூரியனின் கதிர்கள் தெறித்து  ஆகாசம் நீலமாக , நீரலைகளில் நளினம் காட்டும் வைடூரிய மணிகள் என்ன காரணமோ  தெரியவில்லை, இந்தமுறை  குறைந்தது இவளவு என்னைச் சுற்றி நடந்தும் ,ஏனோ தெரியவில்லை என் மனம் என்னிடம் இல்லை ! ஒரு விடுமுறையிலும்  மனஅழுத்தங்களுடன் வாழ்வதில் அப்படி என்னதான் சுவாரசியம் இருக்கிறதென்று தெரியவில்லை.

                                                             ஹ்ம்ம் .பேசிக்கொண்டு இருப்பதுக்கு எல்லா ரெஸ்டாரென்ட் , பப்புகளில்  பெண்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.  அவர்கள் நீலக் கண்களில் நட்பு எப்போதும் மிகப் பரிட்சயமாக பரிசம் போடும் நேரங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு. ஆனாலும் .என்னத்தை சொல்ல , விடுமுறையில் தனிமையாய்  இருப்பதின் பலன்களை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறேன்.கால  நேரப்  பிரிவின் வதை. அதை நேற்று இரவு சொன்ன ஒரு பெண்ணின் அன்பின் வதையில் , என்னை  விமான நிலையம் வரை வந்து  வரை வழியனுப்பியவர்களிடம் நான் தனியப் போவது விருப்பமில்லை என்பது எதிரொலித்தது  ! 

                                                             எப்படியோ ஒரு ஆங்கிலப் புத்தகத்தை வேண்டி  அந்தப் புத்தகத்தை லயித்து படித்துக் கொண்டிருக்கலாம் எண்டு நினைத்து வந்தது சாத்தியமாக முடியவில்லை.. சந்தித்த  ஐரோப்பிய, வட அமரிக்க  ஆங்கிலம் பேசும் உல்லாசப் பிரயாண  நண்பர்களுடன் ,நண்பிகளுடன் உரையாடிக் கொண்டிருப்பதில் உற்சாகமாக  ஒண்டுமே இல்லை .  கடல்கரை ஓரங்களில்  " கத்தலோனா ரெஸ்டாரென்ட்  " க்கு வெளிய விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்பானிஷ்   குழந்தைகளின் நீலக் கண்களை மட்டும் பாத்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு ,

                                                          நீல மேகம் எங்கோ அவசரமாக ஊர்வலம் போகும் வானத்தில் , மைத்திய தரைக்கடல் மெடிடெர்னியன் சூரியன் மட்டும் வஞ்சகமில்லாமல் குளிர் உறைந்த தோலை எரிக்கிறது , அந்த எரிவு யாழ்பாணத்தை மறுபடியும் நினைவுகளில் பத்த வைக்குது.  இரவு நிலவு காயும் நேரம் ஏதாவது நடக்கலாம் என்ட நம்பிக்கையில் ," டிஸ்கோ டான்ஸ் " போய்ப் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் .பார்சிலோனா நகரம் இரவில்தான் விழித்துக்கொள்கிறதே 

                                                          "வாழ்க்கை இனிக்கும்" என சொல்வதற்கு இந்தமுறை பார்சிலோனாவில் நிண்டு சிரித்துக்கொண்டு சொல்ல வாய்வருகுதில்லை !.......காத்திருக்கிறது கனவும், நினைவும், எங்கிருந்து எங்கு போவதென்பதுதான், தற்போதைய குழப்பம் போலத்தான் முதல் ரெண்டு நாளும் இருந்தது. ஒரு நாடோடி போலவே அலைந்தேன். வாசனை நிரம்பிய அந்த நகரத்தின் வீதிகளில் ஆயிரம் விசியங்கள் பார்ப்பதுக்கு ரெண்டு பக்கமும் காத்திருந்தது என்பது என்னவோ  உண்மைதான்.!.


இன்று  ஸ்பெயினில்  மிதமான  வெயில் மட்டும் நல்லா இருக்கு , மற்றதெல்லாம் " சப் " எண்டு இருக்குது. சூரியனைப் பார்க்காத என் உடம்பு வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும், நேற்று இரவு "டிஸ்கோவில " புட்வைசர் பியரையும், மெக்சிகன் "திக்கிலா"வையும் வெறுப்பில கலந்தடிச்சு இப்ப அடி வயிறு நோகுது. அதன் பக்கவிளைவுகளில் மோசமானது ஒற்றைத் தலைவலி என்ற மைகிரேன் அதுக்குக் கைவைத்தியமே  இன்னொரு 
புட்வைசர் பியரும் , மெக்சிகன் "திக்கிலா"வும் தான் என்பதால் அன்றைய  நாளை அப்படிதான் தொடக்கவேண்டி இருந்தது 

                                                      ஸ்பெயினில எனக்கு பிட்டிகிட்டி போல  உலக மகா உத்தமமான  நண்பர்கள்  என்று யாருமே  கிடையாது அதனால் அவர்களின்   தத்துவ  அட்வைஸ்களை  எல்லாத்துக்கும் பலதிசையில் இருந்து எதிர்பார்க்க வேண்டிய பிரச்சனைகளில்லை . கடவுள் புண்ணியத்தில ஸ்பெயின்ல  குடும்ப கவுரவத்தைக்  கமக்கட்டில காவிக்கொண்டு திரியிற  சொந்தக்காரரும் இல்லை. உறவென்று சொல்ல இரவலாகவும்  யாருமில்லை .  அதால நேரம் காலம் இல்லாமல், என்னுடைய உளறல்களை யாரும் கேட்டு, "குட்டு உடைபடாமல் " குடித்துக் கொண்டிருக்கலாம். 

                                                       ஒரு உல்லாச மேடையில்  விடுமுறை அதால வேலை பற்றிய கவலையற்று நேரம் பற்றிய பதற்றங்கள்  இன்றி  மழைக்கால அட்டை போல சுருண்டு கிடக்கலாம். ஆனால் வேலை நாட்களில் வருவதுபோல ஏனோ  தூக்கம் வருகுதில்லை.  கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் மல்லாந்து கிடந்தபடி ,"மடிக் கணனியில்" எப்போது வேண்டுமானாலும் நிறைய எழுதலாம் போல இருந்தாலும் , "என்னைப்பார் ,என்னைப்பார் " எண்டு ஆயிரம் விசியம் நடகுது , சுற்றி நடக்கும் சம்பவங்களை சுவாரசியமா பார்கிற ஆர்வம்,  அதை எல்லாம் எழுத என்னவோ ஆர்வம் கொடுக்குதில்லை! 

                                                                  வெளியே வெண் மணல் கடட்கரையில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் "வெயில் நிழல் குடையின்" கீழ் யாருமே இல்லாமல் தனித்துக் கிடக்கின்றன ஓய்வு எடுக்கும் வாங்குகள், கறுப்பு மேகங்கள் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியங்களைச் சொல்லி வெருட்டுகின்றன ! சலனமில்லாத ஸ்பானிஷ் தொலைக்காட்சியில் காலங்காத்தாலயே   "கிளின் ஈஸ்ட்வுடோட" வெஸ்டேர்ன் "கௌ போய் " படம் அதுபாடுக்கு பார்க்க யாரும் இல்லாமல் ஓடுது , அதில் குதிரைகள் பிடரி மயிர் எழும்ப மெக்ஸ்சிகோ  அமரிக்க  எல்லைவரை பறக்கின்றன  

                                                         வெள்ளையும் சொள்ளையுமா "தவிடுக் குருவிகள்" போன்ற நிறத்தில் உள்ள  ஸ்பானிஷ் குருவிகள்  மட்டும் அங்கயும்,இங்கயும், அதுக்கு மேலாலையும், இதுக்கு மேலாலையும் ,கண்டபாடுக்கு " க்ரோஸ்" பண்ணி, பார்சிலோனா "டுரிஸ்ட் கைட் " புத்தகத்தை வாசிக்க விடாமல் கவனத்தை சிதறடிக்கின்றன ! ஸ்பானிஷ்  குருவிகள் பற்றி சொல்வதுக்கு என்ன இருக்கு . அவைகள் பறக்கும்போது விசிறிவிடும் காற்றில் ஒருவித மயக்கும் வாசனை பரவிக்கொண்டிருந்தது 

                                                               அந்நிய நாடுகளில் இருக்கும் போது ,அடுத்தவர்கள் என்ன செய்கிறார் என்பதை கவனிக்க துணிவு வருகிறது. அதுவும் ஒரு உல்லாசப் பிராணியாக  இருப்பதால் நாலு விசியங்களை நேராகவே பார்க்கும் ஒருவித அதிகார அங்கீகாரம் கிடைத்தது  போல தயக்கங்கள் கொஞ்சம் தள்ளியே நிற்குது. என் மேசைக்குப் பக்கத்தில் உள்ள மேசையில் அமர்ந்திருக்கும் பெண்ணைவிட எதிரில் உள்ள ஊஞ்சலில் காலை "எம்பி எம்பி "தள்ளி ஆடும் பெண் அதிகம் உடல் மொழியில் ஈர்க்கிறாள்! 

                                                                       எதிரில் மேசையில் அமர்ந்திருக்கும் பெண்ணின் முகத்தை கூச்சம் இல்லாமல் நேருக்கு நேர் பார்க்க பயமா இருக்கு, உஞ்சலில் ஆடும் பெண்ணின் முழு உருவத்தையும் சில நேரங்களில் தலை முதல் கால் வரை அவள் என்னென்ன செய்கிறாள், எந்த மொழியில் முணுமுணுக்கிறாள், எப்ப sms அனுப்புகிறாள் , எப்படி வரும் sms களுக்கு வாய்குள்ள சிரித்துக்கொள்கிறாள் என்பது வரை நேரம் போவதே தெரியாமல், "டுரிஸ்ட் கைட் " புத்தகத்தை ஆர்வமாய் பார்ப்பது போல் அங்குலம் அங்குலமாய் ரசிக்கலாம் போல இருக்கு. 

                                                        இதுக்கு மேல விவரிப்பதில் என்னோட கவுரவம் அடங்கி இருப்பதால் அவளவுதான் இப்போது  சொல்லுகிறேன் . விடுமுறையில் தன்னும் பலவிதமான எண்ண ஓட்டங்களை கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்து  மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லையே என்று ஜோசித்தாலும் குற்றவுணர்வுகள் இல்லாமல் இல்லை.! எனக்கான பாதைகளில் எங்கே எல்லைக்கோடுகள் வரையப்பட்டிருக்கு என்ற தன்னுணர்வு தெரியும்வரை பிரச்சினைகளில் அதிகம் தலை போடும் அவசியம் இல்லை என்கிறது பார்சிலோனா நகரம்,

                                                           இண்டைக்கு உலகப் புகழ்பெற்ற  மொடேர்ன் ஆர்ட் ஓவியத்தின்   தந்தை எனப்படும் ஆர்டிஸ்ட் பபெலோ பிக்காசோவின் "  காலி எனபர "  என்ற  "சொர்கத்துக்குப் போகும் வாசல் " எனத்  தமிழில் மொளிபெயர்க்கக்கூடிய அவரின்  வழிநடத்தல்  படியே  கட்டிய  ஒரு  கலைக் கோவில் ,மற்றும் அவரோட உலகப்புகழ்பெற்ற  ஓவியங்கள் உள்ள  "மாடர்ன் ஆர்ட் முயுசியம்" பார்க்கப் போகபோகிறேன். இப்படிக் கலையே வாழ்வின் நிலையென்று  சொல்லிக்கொண்டு  வெளிக்கிடுகிறேன் . எது எப்படியோ மறுபடியும் சொல்லுறன் என் மனம் என்னிடம் இல்லை! .

                                                             கடற்கரையில் நேற்று இரவு ஸ்பனிஷ் கிடாரிஸ்ட் ஒருவர் தனிய இருந்து "பல்லவி இல்லாமல் பாடுகிறேன்"  போலவே மெட்டு உள்ள ஒரு ஸ்பானிஸ்  பாடலைப் பாடிக்கொண்டு இருந்தார். யாழ்பாணத்தில O/L எடுத்து போட்டு ,ரிசல்ட் வரக்காத்திருந்த போது , காதல் மட்டும் நாடி,நரம்புகளில் எகிறிப்பாய , துரதிஸ்டவசமாக   காதலிக்க யாரும் இல்லாமல் இருந்த நேரம், வெலிங்கடன் தியட்டரில்  பார்த்த ," உயிரே உனக்காக ", தமிழ் படத்தில் இந்த தமிழப் பாடல் மெலோடி நினைவில வர ,இன்று youtube இல் தேடினேன் அந்தப்  பாடல் வந்தது, பாடலுக்கு முதல் திரையில் வரும் அன்பான வரிகள் ஏனோ இண்டைக்கு ரெம்பவே அர்த்தம் உள்ளவை போல இருந்தது ...

.                                                          ஸ்பெயினில் என் அழகையோ .அழகின்மையையோ காட்ட நினைத்தாலும்,பார்க்க யாருமே இல்லாதமாதிரி ஒரு வெறுமை , என்னதான் எதிரில் ரசித்தாலும், சுற்றி வந்து ஈர்த்தாலும் கடைசியில் , உபயோகமாய் வாழ்க்கையைப்பற்றி அதிகம் சிந்திக்க வைக்கிறது பழைய வீட்டு நினைவுகள்!  வீட்டை இன்னொரு அந்நிய  நாட்டில் அலையும்போதுதான்  அதிகம் உணரமுடிகிறது ,ஒவ்வொரு சின்னச் சின்னச் சம்பவங்களின் முடிவிலும் அந்த நிகழ்வின் காரண காரியமாக  வீடுதான் வந்து ஒட்டிக்கொண்டுவிடுகிறது   இன்று  கொஞ்சம் நான்  இப்போது  நடந்து கடக்கும் நகரத்தைப் பற்றிச் சொல்கிறேன் . முக்கியமாக இன்று ஒரு தேவாலயம் பார்க்கப் போனேன். ஸ்பெயினின் இரண்டாவது பெரிய,ஆனால் காலாசர முக்கியம் வாய்ந்த, முற்காலத்தில்" கத்தலோனா" எண்டு அழைக்கப்பட்ட இன்றைய பார்சிலோனா நகரத்துக்கு ,உலகம் எங்கும் இருந்து உல்லாசப் பிரயாணிகளை அழைக்கும்  "sagrada familia" கட்டிடம், பார்பதுக்கு "திகில்" படங்களில் பேய் வசிக்கும் இடம்போல இருந்தாலும், அது   ஒரு  கிறிஸ்தவ தேவாலயம் .

                                     1882 இல் கட்டத்தொடன்கிய அந்தக்   " கத்தலோனா " ஸ்டைல் மொடேர்ன் தேவாலயம் 2030 இல் தான் கட்டிமுடியும் என்கிறார்கள்!  கட்டிடக்கலை  நவீனமான  உலகத்தில்  இவளவு நீண்ட வருடங்கள் இந்த உலகத்தில ஒரு கட்டிடம் கட்டப்படுவது இது ஒன்றுதானாம்.அப்படி என்ன அதில இருக்கு என்றால் அது வடிவமைக்கப்பட்ட மாதிரியே அதை கட்டிமுடிப்பதில் உள்ள சவால்கள்தான் இவளவு காலத்துக்கும் காரணம் என்றார்கள் 

                                  இதை வடிவமைத்த ,1852 இல் இதே பார்சிலோனா நகரத்தில், ஒரு ஏழ்மையான கத்தோலிக்க மதபற்றுள்ள குடும்பத்தில் பிறந்த ,அந்தோனியோ கைடி ,இன்றுவரை " மொடெரன் ஆர்கிடெக்சர் " அதிசம் எண்டு அழைக்கப்படுவதால் உலகம் எங்கும் இருந்து கிளாசிகல்,மொடேர்ன் " ஆர்கிடெக்சர்" படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு மக்கா,மதினா போல இருப்பதால், வந்து ,சுற்றிப் பார்த்து ஒவ்வொரு " Catalan Modernisme " விசியதையும் ஆரவமாகப் பார்த்து, குறிப்பு எடுகின்றார்கள்!

                                       கைடி இதை அவரோட 35 வயதில் கட்டதொடங்க, வடிவமைத்து மட்டும் தான், இப்ப வேறு பல ஆ ர்கிடேக்சர்கள் ,தொடர்ந்து அவரோட" Neo-Gothic period பிளானை " வைத்து 2030 இல கட்டி முடிபபத்தாக உறுதி எடுத்துள்ளார்கள். அந்த தேவாலயத்தை வடிவமைத்த  கைடியின் ஆதார  வரைபடங்களை கண்ணாடியில் தலைகீழாகப் பிடித்துப் பார்த்தால் தான் அதன் அமைப்பே விளங்கும் என்கிறார்கள்  

                                                 பல ஆர்கிடெக்சர் விசியன்களில் ஆதாரமகாவே புதுமை செய்துள்ளார் கைடி , பாவனைக்கு உதவாத பிங்கான் கோப்பைகளை, பாவித்த இரும்புகள்,வேறு என்ன என்ன "ரீ -சய்கிளிங் "செய்ய முடியுமோ அவளதையும் வீண் ஆகாமல், எல்லாவற்றையும் ,அங்க,இங்க செருகி , "முப்பரிமான "கலை அம்சம் ஆக்கியுள்ளார். அது அந்த தேவாலயத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன கற்களிலும் காணமுடிகிறது 

                                      அந்தோனியோ கைடி இந்த தேவாலயத்தை வடிவமைத்து " இது கடவுளின் வாசஸ்த்தலம் " எண்டு சொன்னதால்,அவரை "கடவுளின் ஆர்கிடெக்சர்" என்கிறார்கள் ஸ்பனிஷ் மக்கள்! அப்படி சொன்னது மட்டுமல்ல இன்றுவர இந்த தேவாலயம் கட்டுவதுக்கான செலவு பார்சிலோன நகர மக்களின் பொதுப்பணம்! 

                                                       அந்தோனியோ கைடி, கலியாணமே கட்டாமல், மனதை ஒருமுகப் படுத்தி , இதை வடிவு அமைத்து இருக்கிறார் ,ஆனாலும் அவர் வாழ்ந்த விதம் கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு,தனிமையில் ,சமுகத்தில இருந்து ஒதுங்கி , நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவாலயத்தில் பிராத்தனை பண்ணிக்கொண்டு , ஆடம்பரம் இல்லாமல் ஒரு பிச்சைகாரன் போல வாழ்ந்திருக்கிறார்.

                                                                அவரோட 72 வது வயதில் ,ஒரு சாலை விபத்தில் இறந்துபோக,யாரோ ஒரு பிச்சைகாரன் போல அவர் இருந்ததால, அலட்சியமான பார்சிலோனா மக்கள், அவர் யார் எண்டு தெரியாமல் , கவனிக்காமல் விட , அம்புலன்ஸ் வண்டி தாமதித்து வர,அவர் சில மணித்தியாலங்களில் இறந்து போய் விட்டாராம்,அதன் பின் செய்தி கசிய, இன்ருவரை ஸ்பெயின்ல் நடந்த மிகப் பெரிய ஊர்வலம் அந்தோனியோ கைடியின் மரண ஊர்வலம் என்கிறார்கள்.

                                                         இந்த முடிவுறாத , அவரின் வாழ்நாள் வடிவமைப்பை, அவர் இரவும், பகலும் கண்ட கனவின் தொடர்ச்சியா , sagrada familia தேவாலயத்தின் முதல் நிலத்தடி தளப்பகுதியில் அவரோட பூதவுடலை அடக்கம் செய்து இருக்கிறார்கள் பார்சிலோனா மக்கள்.!

                                                       இந்த  மிகச் சிறந்த மொடேர்ன் ஆர்கிடெக்சர், அந்தோனியோ கைடி, இறப்பதுக்கு சில வாரம் முன் ஒரு குறிப்பு ,தான் ஏன் ,எல்லாரையும் போல இல்லாமல் ,விதியாசம்கா வாழ்ந்தேன் என்று எழுதி வைத்ததை ,அவரோட கல்லறையின் அருகில் ஸ்பானிஷ்ல் எழுதி வைத்திருந்தார்கள்,.அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்படி தொடங்குகின்றது...".My good friends are dead; I have no family and no clients, no fortune nor anything. Now I can dedicate myself entirely to the Church......".
                                                            

ஸ்பெயின் விடுமுறை அனுபவதில் முக்கியமானது,இந்தமுறை பார்த்த , சனிக்கிழமைகளில் மட்டும் நடக்கும் " காளை அடக்கி மடக்கும் " வீர தீர விளையாட்டு! நீங்களும் அதுபற்றிக் கேள்விப்பட்டு இருக்கலாம். என்னோட அபிமான எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்க்வே இதை பற்றி அவரோட எல்லா நாவலகளிலும் குறிப்பிட்டு இருந்தாலும், இந்த விளையாட்டை வைத்து , அவர் ஸ்பெயின் பொம்பலொனாவில் சில வருடம் வசித்து எழுதிய" The Sun Also Rises" வாசித்தபோது, ஒரு நாள் இதைப் போய் பார்த்தே ஆகவேண்டும் எண்டு நினைத்தேன்

                                              பலர் இன்றுவரை அந்த நாவலை அவரின் சிறந்த நாவல் எண்டு சொல்கிறார்கள். ஸ்பெயினிற்குப் பெருமளவு உல்லாசப் பிரயாணிகள் வரவும் இந்த வீர தீர விளையாட்டு ஒரு காரணமாக இருக்கு. நான் போன சனிக்கிழமை அந்த அரங்கில் உலாவிப் பார்த்தபோது உல்லாசப் பிரயாணிகள் அதிகம் இல்லை, உள்ளூர் ஸ்பானிஷ் மக்கள் நிரம்பி இருந்தார்கள்

                                                  அரங்கின் ஓரத்தில் ,காலுக்கு மேல காலைப் போட்டு கொண்டிருந்த, " டைட்டானிக்" படத்தில வாற "கேட் வின்சிலோ" போல முகமுடைய ஒரு அழகான ஸ்பானிஷ் பெண் அருகில் போய் பவ்வியமாக இருந்தேன். அவள் என்னைப் பார்கிறதை விட்டுப்போட்டு மாடுகள் எகிறிப் பாய்கிரத்தையும், அதை திரத்தி ,சிவப்பு சீலையால் அதுகளை ஏய்க்கும் வீரகளையும் கண்கொடாமல் மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்!

                                      ஒருக்கா மட்டும் என்னைப் பார்த்து சிரித்த சமயத்தில்,நானும் சிரித்து

                                      "உனக்கு இந்த விளையாட்டு ரெம்ப்பப் பிடிக்கும் போல இருக்கே ",

                                                          எண்டு சொன்னேன், அவள்

                                        "இது எனக்கு உசிர்,என்னோட பாய்ப்ரெண்ட் இது விளயாடுகிரான் "

எண்டு மைதானத்தில் நின்ற ஒரு இளம் "காளை அடக்கி மடக்கு " வீரனைக் காட்டினாள்,

                                           " ஒ ,அப்படியா , இது ரெம்ப ஆபத்தான விளையாடுப்போல இருக்கே "

                                                          எண்டு சொல்ல,சொன்னமாதிரியே, ஒரு காளை மாடு ஒரு வீரனை கொம்பால இடிச்சு, காத்தில தூக்கி எறிஞ்சு ,காலால ஏறி முதுகில உளக்க ,மற்ற வீர்கள் அந்த காளையை ,சிவப்பு சீலையை அங்கால இங்கால காட்டி,மாட்டை திசை திருப்பி,அந்த வீரனை தூக்கிக்கொண்டு போக, அம்புலன்ஸ் "நோய்ன்க் ,நோய்ன்க் " எண்டு கூவிக்கொண்டு வந்தது.

                                                 என் அருகில் இருந்த அந்தப் பெண் அதை சும்மா திரில் படம் பார்க்கிறமாதி ,சுவிங்கத்தை சப்பிக்கொண்டு,இடைக்கிடை , சுவிங்கத்தை பலுன் போல வாயில ஊதிக்கொண்டு , சுவாரசியமா பார்த்துக்கொண்டு

                                                          " இது இடைக்கிடை நடக்கும், இப்படிக் காயம் பட்டு ,முறிந்து பல வீரர்களின் கை,கால்களில் இரும்புத் தகடுகள் பொருதுவார்கள் , உனக்கு தெரியுமா ,அவர்கள் ஆசுபத்திரிய விட்டு, வீட்டை போகாமல் முதலில் இங்கதான் திரும்பி வருவார்கள், அவளவு "அதிரினளின் கிக்" அவர்களுக்கு இந்த விளையாடில் "

                                                    என்று சொல்லி

                                               " நீ எந்த நாட்டவன்,,,இந்தியாவா ,,"

                                                    " இல்லைப்பா,,நான் ஸ்ரீலங்கா என்ற நாட்டவன், ஆனால் இப்ப ஐரோப்பாவில் நாட்டில்லாத அரசியல் அகதியாக வசிக்கிறேன் "

                                         " உங்கள் ஊரில் இப்படி எல்லாம் விளையாட்டு இல்லையா ? "

எண்டு என்னைப் பார்க்காமல் கேட்டாள் ,

                                                 நான் " ஜல்லிக்கட்டு எண்டு ஒண்டு இருக்கிறதா கேள்விப்படேன், மற்றப்படி எங்கள் ஊர்ர் ஆம்பிளையள் மாடு மேய்க்கத்தான் லாயக்கு "

                                                         என்றேன் , அவள் சிரித்து,

                                                     " இது பரவாயில்லை , இன்னுமொரு இடத்தில, வெள்ளிக்கிழமைகளில் நடக்கிறதில் ,காளைமாட்டை அடக்கிரவன்,அந்த மாட்டை கடசியில் வாளாள குத்திக் கொன்று,அதன் காதை வாளால் அறுப்பான்"

                                  என்றாள் ,நான் சுவாரசியம் இல்லாமல்

                                  "பாவம் அந்த மாடுகள் ,அதைப் பற்றி நான் படித்திருக்கிறேன், எர்னெஸ்ட் ஹெமிங்க்வே அதை கவலையா எழுதியிருக்கிறார், அதால் தானோ என்னவோ அவர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்தார் போல "

                              என்றேன் , அவள்

                                "வாவ்,ஹெமிங்வே ,எனக்கும் பிடிக்கும், உங்கள் ஊரில் மாட்டை கடவுளாக வழிபடுவார்களாமே ,உண்மையா ?"

                                 "இந்துக்கள் என்ற சமயத்தவர்களுக்கு காளை மாடு புனிதமானது ,,பசுமாட்டை இன்னும் அதிகமாக நேசிப்போம் "

                                  "  அப்படியா  ,,ஏன்  அப்படி,,இங்கே ஸ்பெயினில் அப்பிடி எல்லாம் இல்லை  "

                                   " பசுமாடு  பால்  தருமே "


                               "  அட அட அட ,,அது  பெரிய விசியமா ,ஆடும் தானே பால்  தருகிறது,ஸ்பெயினில் ஆட்டுப்பால் மிகவும் பிரபலம் அது உனக்குத் தெரியுமா  "

                         "  மாடு  அம்மா  அம்மா  என்று கத்தும்,,,அது எங்களுக்கு எங்கள் அம்மாவை நினைவுபடுத்துவதால் ,,நாங்கள் பசுமாட்டை எப்போதும் வணங்குவது  பா ."

                              "   ஒ ,,அப்படியா  இது  நல்ல  லாயிக் ஆக இருக்கு...அம்மா  என்றால் யாருக்குத்தான் பிடிக்காது ,,சொல்லு பார்ப்போம் "

                                   "உன்னோட நீலக் கண்கள் அழகா இருக்கு,, மை   லவ்விங்  ஸ்பானிஸ் ஆயிஸ்  என்று  என்ஜெல்பேர்க் ஹம்பர்டிக் பாடிய  பாடல்  தெரியுமா  "

                               "வாவ்,,,,அந்த  பாட்டு  உலகம் முழுதும்  கலக்குது,,தெரியும் பா...ஸ்பானிஸ்  அயிஸ் ,ஹ்ம்ம்...என்ஜெல்பேர்க் ஹம்பர்டிக்  ,,ஹ்ம்ம்,,அவரோட  குரல்  ஸ்பானிஸ் பெண்களின் நீலநிறக் கண்களைவிட கிறங்க வைக்கும் இனிமைப்பா "

                               "உண்மைதான்,,அதை  நான்  எப்போதும் அவதானிப்பேன்  " 

                                   என்றேன் ,அவள் அதன் பின் என்னைப் பற்றி  எனக்கு  முக்கியம் இல்லாத என்  ஊர் ,பேர் ,தொழில், பற்றி ஆர்வமாக விசாரித்து, முக்கியமான நான் "கேர்ள் ப்ரெண்ட்" இல்லாமல் தன்னம் தனியா இருக்கிறேன் எண்டதைப் பற்றி ஒண்டுமே கேட்கவில்லை  .
             
                                         அவள் ஸ்பானிஷ் மக்களுக்கேயுரிய வெளிப்படையான நட்பான பெண் போல இருந்தாள், அவளிடம் ஸ்பெயின் "காளை அடக்கி மடக்கும்" பல விசியங்களை கேட்டேன், அழகாக விவரித்து சொன்னாள் , நான் அவள் சொல்லுறதை சின்னக் குழந்தைகள் கேட்பது போலக் கேட்டுக்கொண்டு,முற்றும் துறந்த முனிவர் போல அவளைப் பார்த்துக்கொண்ருந்தேன் .....

                                                      அவளின் " புசுக்கு புசுக்கு" எண்டு சுருண்ட தலை முடியையும் , அகன்ற பெரிய நீலக் கண்களையும், மா நிற கலரில் இருந்த அவளின் வட்ட முகத்தையும், அளவுக்கு அதிகமா "மஸ்கார "போட்டிருந்த இமைகளையும், ஹிட்லர் போல நீண்ட கிளி மூக்கையும் ,மேல் வரிசையில் வரிசை தவறிய ஒரு தெத்துப் பல்லையும், பாம்பு போன்ற நீண்ட கழுத்தையும்,அதுக்கு கீழே இரண்டு மாலைதீவு செவ்விளனியையும் ,அதுக்கு நடுவில ஓடும் மகாவலி கங்கையும், .........இதுக்கு மேல வேண்ட்டம்பா . .....

.                                    அந்த உரையாயடலின் இறுதியில்

                                          " உனக்கு ஒரு ஜோக் தெரியுமா ,அந்த கடசியில் வாளாள குத்திக் கொல்லும் காளை மாட்டின் "....."இரண்டையும் எடுத்து ,இங்குள்ள ஒரு பேமஸ் ரேச்டோறேண்டில் அவித்து விற்பார்கள்,அதுதான் பொம்பலூனா ஸ்பெயினில் விலை கூடிய உணவு"

                                               என்று சொல்லி வாயைத் திறந்து சிரித்தாள்,,நான் புரியாமல்

                                                "இது ஒரு ஜோக்கா ?" என்றேன் ,அவள் .

                                                "இல்லை, சொல்லுறன் கேள் ,

                                   " சரி சொல்லு "

                                    "என்னோட ஆங்கிலம் உனக்குப் புரியுதா,,,எனக்கு ஸ்பானிஷ் தான் ஒழுங்காப் பேசமுடியும் "

                                " இல்லை,,உன்னோட ஆங்கிலம் அமர்களமாக இருக்கு "

                                   " அப்படியா,,,தேங்க்ஸ்,,கிராசியஸ் மொச்சோஸ் கிராசியஸ் "

                            அதென்ன கிராசியஸ் மொச்சோஸ் கிராசியஸ்,,,அந்த அமரிக்கரின் பெயரா "

                                 " இல்லை,,ஸ்பானிஸ் மொழியில் அப்பிடி சொன்னால் நன்றி,,மிகவும் நன்றி என்று அர்த்தம் "

                                                         " சரி,,அந்த .......ஜோக்கை சொல்லுப்பா "

                                                " ஒரு அமரிக்கர் இதைக் கேள்விப்பட்டு,அந்த ரேச்டோறேண்டுக்கு போய் , அவித்த உருளைக்கிளங்கு போல இருந்த படம் போட்ட அந்த விலைகூடிய இரண்டு அவித்த காளை மாட்டின் "...." மெனுவை ஓடர் பண்ணி இருக்கிறார், "

                            " ம்,,,,பயங்கரப் பசியில இருந்து இருப்பார் போல "

                           " ஹ்ம்ம், அவர் ஆர்வமாக சாப்பிட ரெடியான போது ,அங்கு வேலை செய்த பரிமாறும் பெண் , இரண்டு பிலாக்கொட்டை சைசில் உள்ள "....." களை பிளேடில் அவர்முன் வைக்க,அவருக்கு கோபம் வந்திட்டுது ,"

                            " அதென்ன சுத்துமாத்து "

                                        " அவர் கோபமாகி , நீங்கள் , வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் , மடக்கி அடக்கப்பட்டு ,தோற்கடிக்கப்பட்ட காளை மாட்டின் "......"இரண்டும் உருளைக்கிளங்கு போல இருந்த படம் போட்ட மெனுவைப் பார்த்துதான் நானே ஓடர் பண்ணினேன் ,இது என்ன இவளவு சின்னதா இருக்கே?" என்று கோபமாகக் கேட்டாராம் "

                                " அப்புறம் "

                                                                      " அந்தப் பரிமாறும் பெண் இயல்பாக, நாங்க என்ன சார் செய்யிறது, சிலநேரம் காளை மாடு வெல்லுதே எண்டு சொன்னாளாம் ,"

                                " ஹஹஹஹஹ "

                                "அட,,உனக்கு நல்லா ஜோக் விளங்குதே "

                                                     " ஹஹஹஹ "

                                    " போதும்பா,,,அதிகம் சிரிக்காதை..காளை .மாடுகள் ஒருவிதமா கலவரமா உன்னைப் பார்க்குதுகள் "

                                    என்டு சிரிக்காமல் சொன்னாள் .அந்த நீலநிறக் கண் ஸ்பானிஸ் பெண்!.......


ஸ்பெயினின் உள் நாட்டு யுத்தத்தில் இறந்தவர்களில் "மியூசியத்தில் "மனிதாபிமானம் ஒரு கொடூரத்தின் பின்னணியில் கன்னத்தில் அறைகின்றது . எங்கள் தாய்த் திருநாட்டில் நடந்தது போலவே, எல்லா விதத்திலும், எல்லாராலும், படுகொலை செயப்பட்டவர்களின் அந்த நினைவு இடத்தை சுற்றிபார்த்த போது ஒன்று தெரிந்தது. உலகம் முழுவதும் அடக்கப்படும் இனங்களின் விடுதலையின் தியாகங்கள் ஒரே மாதிரிர்தான் இருக்கிறது.

                                                        ஸ்பெயினின் உள் நாட்டு யுத்தம் ஒரு சோகமான சரித்திரத்தின் வாசனை! எல்லா பக்கங்களிலும் " கெக்கே பிக்கே " என்று அதிகாரப் பிதற்றல்கள்! , சொல்லி வைத்த மாதிரி வெற்றிகள் ,தோல்விகள் ,அப்பாவி மனித இழப்புக்கள் ! உள்நாட்டு யுத்தமே அந்த நகரத்தில்  இரத்த  ஆறு ஓடிய அடையாளங்களை வரைந்து வைத்திருக்கிறது 

                                        ஒரு நாட்டை சுற்றிப் பார்ப்பது என்பது நினைவுகளின் வாசனை! சில நேரங்களில் ஆயிரம் வரலாற்று விசியம் அறிந்து கொண்டாலும், கசப்பான வரலாற்றுப் பக்கங்களில் எப்பவுமே துரோகத்தின் வலி இருக்கும் ! ஸ்பெயினின் அண்டை நாடுகளின் துரோகம் ! பிளவுபட்ட சொந்த நாட்டு மக்களின் அரசியல் பரிகசிப்பு ! ஒரு நாடோடியின் நாட்குறிப்பு போல என்னோடு இந்த பயண அனுபவங்களில் வரலாறு  பற்றி  ,நிறைய எழுத நினைத்தேன்  ஆனால்  கொஞ்சம்தான்  எழுதினேன் ,

                                      எல்லா சம்பவமும் இதில்  உடனுக்கு உடன் நடந்த அன்றே எழுதியது என்று சொல்ல முடியாது! நெஞ்சத்தில் தேக்கி வைத்து , புரண்டு புரண்டு படுத்து, தூக்கம் வராமல், "குவாடரை " உள்ளுக்க தள்ளி , தனிமையில் சோர்வாக எழுதிய வார்த்தைகளாக இருக்கலாம்! ஆனால்  அதில பல சம்பவங்களில் உயிர் என்பது மெல்லவே எழுந்து நடமாடியாது. வேறு எப்படிதான் எழுதுவதாம் . 

                                    பார்சிலோனா தெருவெங்கும்    கேட்ட ஸ்பானிஷ் பாடல்களில்  ,பிடித்த பாடல்களின் வரிகள், அதில் பிரிவின் விளிம்பில் வரும் காதலைப்பற்றிய வர்ணனைகள் கொஞ்சம் நினைவு இருக்கு ! முகம் அறியா யாருக்கோ உதவிய குறிப்புகள், குத்து மதிப்பாக எல்லாம் எழுதி இருக்கலாம். மதிய தரைக்கடல் ,மேடிடேர்நியன் சூரியன் தந்த உடலெங்கும் பரவும் ஒரு புத்துணர்ச்சியோடு உருவாகும் வார்த்தைகளோடு அந்த பக்கங்கள் நிரப்பப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறன் !

                                                               சங்கிலியால் பின்னைக்கப்பட்ட ஒரு அடிமையின் அவலக் குரல் போலவும் அது இருக்கலாம், ஏமாற்றத்தில் புலம்பியது போலவும் இருக்கலாம் ! படிக்க முடியாத வார்த்தைகலில் எழுதியது போலவும், நினைக்கக்கூடாத கற்பனைகள் கடசியில் நடந்தது போலவும் ஒரு வக்கிரமான எழுத்துக்களாக இருக்கலாம்! ஆனால் டயரி  போலவே ஒவ்வொருநாளும்  கொஞ்சமாவது   எழுதிக்கொண்டே இருந்தேன் .அதில் என் ஆத்மா நனைந்துகொண்டிருந்தது உண்மைதான் 

                                                       பார்சிலோனாவில் பழைய நகரத்தில் பிக்காசோ போன்ற ஆர்டிஸ்ட்கள் வாழந்த, ஏழ்மையான,விபசாரிகள் வாழ்ந்த குறுகிய வீதிகலில், கதை இல்லாத வீதிகளே இல்லை. பிக்காசோவே அந்த விபசார விடுதிகளில் எடுபிடி வேலை செய்தாரம் சிறு வயதில், அந்த இடத்தை நேற்று சுற்றிப் பார்த்தேன் . வறுமையான பகுதிகள் போலிருக்க கற்பனைக்கும்  யதார்த்தத்துக்கும் இடையில் கோடுகளும் நிறங்களும் மண்டையுள் ஓவியமாகியது 

                                                                 அந்தப் பழைய நகரத்தின் நகரின் ஒவ்வொரு பாதைகள், வளைவுகள்,சந்துகள் பின்னேயும் ஒரு சிற்பியின்  அல்லது  ஓவியனின்  கதையிருக்கிறது. அந்தக் கதை ஒரு காலத்தில் ஏழ்மையாக வாழ்ந்து பின்னர் உலகப் பிரபலமான  பபிலோ பிக்காசோ போன்ற அத்தனை கலை ரசிக மனிதர்களின் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக  மறைத்து வைத்திருகிறது .  நின்று நிதானித்துப் பார்த்தால், காலத்தில் பிரயாணம் செய்வதுபோல முடிச்சு முடிச்சா அவிழ்க்கவும், அவிழ்த்துப் பின்னர் பின்னவும் கூடியது !

                                                           உலகம் என்கும் இருநது வந்து அந்த ஆர்டிஸ்ட் மேதைகள் நடந்த தடங்களில் , பகலிலும் இரவிலும் ஒரே மாதிரி சனம் நெரியும் தெருக்கள். அந்தப்  பழைய நகரத்தின் உயர்ந்த நாடக தியேட்டர்களை மூடி "கச கச "எண்டு விளம்பரப்பலகைகள் வைத்திருகிறார்கள், பல இடங்களில் பழைய கட்டிடங்களை இடித்துக் கண்ணாடியில் மாளிகை செய்து வைத்திருகிறார்கள்  !

                                                             பர்சிலோனாவின்  அழகே நிறங்கள்.  அதன் இன்னொரு  நளினம்  அதன் அதிகாலை வாசனை , அது  எல்லா  அவநம்பிக்கைகளையும்  பிடித்து வெளியே தள்ளிவிடும்  அலாதியானது, வசதி பார்த்து  வாய்ப்புக்கள் தேடாமல்  நட்பாகப் பழகும் ஸ்பானிஷ் மக்களின் நெகிழ்ச்சி! பகலிலும் இரவிலும் ஒரே மாதிரி சனம் நெரியும் தெருக்கள், இரவுகளில் சதுக்கங்களில் எப்போதும் மெல்லிய பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கும் பெண்களின் நடமாட்டம்,

                                                                ஒரு காலத்தில் செழிப்பாக இருந்து , புரிந்து கொள்ளமுடியாத பொருளாதார விதியின் கைகளில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டது போன்ற ஸ்பானிஷ் மக்களின் அன்றாடவாழக்கைச் சோகம் தான்  குழப்பமாக இருக்கு. ஸ்பானிஸ் மக்கள் இன்று எங்கே ஓடித்தப்பி எப்படிப் பிழைக்கலாம் என்பதில் இடிந்துபோய் இருக்கிறார்கள் .அதனால் கலாச்சாரப் பெறுமதிகளில் அள்ளிக்குவிக்கும் பார்சிலோனா போன்ற நகர்த்தைக் கைவிடவும் தயாராக  இருப்பது போலிருக்கு  .....

                                                                          எது எப்படியோ, என் அனுபவ முடிச்சுக்கள் சொல்லித் தந்த பாடம்    கொடுமையான வெயில் நாட்களில் குளத்தில் குதித்து கும்மாளம் போடுவது போன்றதுதான் பார்சிலோனாவின் வாழக்கை . குளத்தில குதிக்கிறது மட்டுமே நாங்கள் செய்யவேண்டிய ஒரு வேலை,மிச்சத்தை அந்த உயிர் உள்ள நகரம் பார்த்துக்கொள்ளும்!

                                                             Barcelona - Such a beautiful horizon, a gentle breeze, The bells are ringing out......And if God willing we will meet again someday!.என்ற பிரடிக் மெர்குரி பாடின பாடல்  உங்கள் எல்லாருக்கும் தெரியும், அதுதான் அந்த நகரத்தின் ஆத்மா . அதுதான் என் காதுகளில் அந்த அதிசயமான நகரத்தை வெயிலோடு  சுற்றிக்கொண்டு  இருந்த ரம்மியமான பொழுதுகள் எப்போதும் ஒலித்துகொண்டிருந்தது . 

                                                பயணக்கட்டுரை எழுவதும்  அடிப்படையில்க் கதை எழுதி காதில பூ சுத்திவிடுவது போலத்தான். ரெண்டுக்குமே சுவாரசியம் குறையாமல் எழுதும் மூடு மந்திர வித்தை தெரியவேண்டும் .      என்னோட ஸ்பானிஷ் விடுமுறை அனுபவங்களை " பயணங்கள் முடிவதில்லை " எண்டு கிறுக்கி எழுத நேரம் இல்லாமல் "துண்டைக் கானம் துணியக்கானம்" எண்டு ஓடும் வாழ்கையை நினைக்க வெறுப்பு வருகுது  என்று சொன்னாலும், என்னை அந்த நாடு ஒரு மனித வாழ்வின் ஒரு சுற்றில் அதிகம் பாதித்த நாடு .


  

ஸ்பெயினில் பார்த்த கிளுகிளுப்பான அனுபவம், ஸ்பெயின் நாட்டின் பெயரை இசை உலகம் எங்கும் எதிரொலிக்கச்   செய்யும் " பிளெமிங்கோ நடன இசை வடிவம் ". பிளெமிங்கோ ஒரு ரொமாண்டிக் இசை வடிவம், அதைக் கேட்டால் யாருக்கும் காதல் உணர்வு வரவேண்டும், வராவிட்டால் , அது பிளெமிங்கோ நடன இசையின் பிழை இல்லை,பதிலாக கேட்பவர்களின் " செக்ஸ் ஹோர்மோன் "களில் குளறுபடி இருக்குது எண்டு அர்த்தம் என்கிறார்கள்.

                                                    " பிளமிங்கோ ரொமாண்டிக் டான்சும் " அப்படிதான் ,அதைக் கேட்க , லத்தின் அமெ ரிக்கன் டான்ஸ் பழகியவர்களுக்கோ , அல்லது பழகாதவர்களுக்கோ , " வா ,வந்து என்னோட ஆடவா , என் இடுப்பைப் மெதுவாகப் பிடித்து ,சுற்றி சுழண்டு ஆட ஆடவா " எண்டு கால் இழுக்கும், அப்படி ஒரு பெண்ணும் ,ஆணும் அசங்காமல், கசங்காமல் மல்லிகைப்பூப்போல ஆடக்கூடிய அழகு நடனம் பிளமிங்கோ !

                                                 பிளமிங்கோ நடனதுக்குக்கென்று பிரத்தியேக சட்ட திட்டமே இருக்கு பிளெமிங்கோ இசை வடிவத்துக்கு , அந்த பிளெமிங்கோ நடனத்துக்கு பெண்கள் அணிய பிரத்தியேக நீண்ட டிசைன் உள்ள "கவுன்" போன்ற உடையே உள்ளது, குதிக்கால் உயரமான ஹீல்ஸ் இருக்கு. அந்த நீண்ட டிசைன் உள்ள பிளமிங்கோ உடையை அணித்து ஆடுவதுக்கு பிரத்தியேகமான நடன இடங்களே உள்ளது! கடசியில் ,அந்த பிளமிங்கோ நடனம் ஆடுவதுக்கு பிரத்தியேக நேரமே இருக்குது! 

                                                        இவளவு மரபு ரீதியான கலாசார அணுகுமுறைகளை உடைத்து ஒரு திறந்த வெளி மேடையில்,யார் வேண்டும் எண்டாலும் ஆடலாம், என்ன உடுப்பு போட்டும் ஆடலாம்,யார் வேண்டும் எண்டாலும் மேடையில் ஏறி பிளமிங்கோ இசையை கிடாரில் வாசிக்கலாம் என்பது போன்ற ஒரு பூங்கா போன்ற இடத்தை பார்சிலோனாவில் பார்த்தேன்! 

                                                            வெளிய நல்ல வெயில் அடிக்க , வியர்வை வழிந்தோட ,கையில "பியர் " போத்திலை பிடிச்சுகொண்டு , இடைக்கிடை "தாக சாந்தி " செய்துகொண்டு ,வெட்டி வெட்டி பிளமிங்கோ நடனம் ஆடும் பெண்களைப் கண்கொட்டாமல் இரசித்து பார்க்க்கொண்டு , அந்த நடனத்துக்கு பின்னணி இசையாக தலையைக் குனிந்துகொண்டு , கிடார் வாத்தியத்தை பூனையை தடவுவது போல நோகாமல் தடவி வாசிக்கும் கலைஞ்சைப் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்து ரசிக்க முடிந்தது.

                                                         நேரம் போவது தெரியாமல் காதோடு இசையாக ,நெஞ்சோடு நினைவாக , விழியோடு கனவாக, மனம் எல்லாம் மகிழ்வாக , இசையும் கதையும் போல ,சின்னக் குழந்தையின் சிரிப்புப் போல , மணிரத்தினம் படங்களில் வரும் காதல் பாடலில் வரும் " கனவு சீன்" போலப் போனது பார்சிலோனா விடுமுறை நாட்கள் அந்த நகரின் பழைய பெயரான கத்தலோனா ரிதமில் கண்ணுக்கு முன்னாள் கரைந்து போனது !

                                                    பல வருடம் முன் ஸ்வீடனில் " பிளமிங்கோ, சம்பா, சலசா , தங்கோ, மரிம்பா " போன்ற "லத்தின் அமரிகன் டான்ஸ்" ஒரு ஸ்பானிஷ் டீச்சரிடம் கொஞ்சநாள் பழகினேன். கிடாரில் ஸ்பானிஷ் பாடல்கள் வாசிப்பதால், ஒரு ஆர்வக்கோளாரில் பழகப்போனேன் ,போய்ப் பழகிய போதுதான் தெரிந்தது அது நாங்க நினைக்கிற மாதிரி அவளவு சுலபம் இல்லை எண்டு, அதால இருந்த கொஞ்சநஞ்ச "லத்தின் அமரிகன் டான்ஸ்" ஆர்வமும் போனாலும், அதை சொல்லித்தந்த ஸ்பானிஷ் டீச்சரின் இடுப்பு " பிளமிங்கோ,சம்பா, சலசா , தங்கோ, மரிம்பா " எல்லா நடனத்தையும் விடக் கவர்ச்சியா இருந்ததால கொஞ்சநாள் விடாம படு ஆர்வமாகப் படிச்சேன்.

                                               "லத்தின் அமரிகன் டான்ஸ்" ஆடப் பழகினால் ஆண்களுக்கு தோள்ப்பட்டை முதுகுப் பகுதி விலா எலும்புகள் விரிய , முதுகு நாலுக்கு நாலு தீராந்தி அறுக்கக் கூடிய மாதிரி விசாலமா மேல் உடம்பு வருமாம் , அப்புறமென்ன பெண்களுக்கு ஆண்களில் பிடித்த பிரதேசமே விசாலமான " V " சேப் முதுகுதானே என்கிறார்களே செக்ஸ்சியோலாயிட்ஸ்டுகள்! 

                                                    அதே நேரம் பெண்களுக்கு இடுப்பு நல்ல " சேப் "ஆக " ஸ்பானிஷ் அக்கொச்டிக் கிட்டார் " போலவரும், அவர்களின் மார்புப்பகுதி "ஸ்டாண்டர்ட் சைஸ் " இக்கு வர, பின்புறம் கொஞ்சம் எக்ஸ்ராவா வாட்டர் மிலான் பழம் போல வாளிப்பா நளினம் காட்டும் என்கிறார்கள் ! எங்களின் குலதெய்வம் வீராளி அம்மாளாச்சி மேல சத்தியமா சொல்லுறேன் அது உண்மைதான் கண்டியளோ .

                                                 அந்த ஸ்பானிஷ் டீச்சர் ,CD இல டான்ஸ் பாடல் போட்டுட்டு , என்னோட இரண்டு கைகளையும் பிடித்து, அங்க இழுத்து, நிறுத்தி இங்க இழுத்து, இயல்பாக என்னை நெருக்கிப் பிடித்து, கால்களை மெதுவாக அகட்டி, சடார் எண்டு ஒடுக்கி, வாயால

                                                     "லா - டூ-   டூ    -பெ --லா    லா டு     டு பே     பே - " 

                                                எண்டு ஸ்பானிஷ் மொழியில் " ஸ்டெப்ஸ் சொல்லி" தருவா . அவாவை நடனம் முடியவும் , நான் அவாவின் இடுப்பை இறுக்கி பிடிச்சிருப்பேன், பின்ன என்ன நான் டான்ஸ் பழக வந்ததே அந்த இடுப்புக்கு தானே!, 

                                                 அவா கஷ்டபப்பட்டுதான் என்னைப் பிரிச்சு தன்னை விடுவித்துக் கொள்ளுவா. நான் அப்படி ஆர்வமா நடனம் பயில்துக்கு கோபமா ஒண்டும் சொல்லமாட்டா . ஆனால்

                                                 " என்னோட இடுப்பை விடடா ,பாட்டு முடிஞ்சு அரை மணித்தியாலம் ஆகிவிட்டதடா , நாசாமாப் போனவனே ,அனக்கொண்டா பாம்பு இறுக்கி பிடிக்கிற மாதிரி பிடிகிறியே , பழகும் போதே பழக்கிற டீசரோடையே இப்படி ரொமாண்டிக் கோளாறு எண்டா ,அப்புறம் இளம் பெண்களுடன் ஆடும்போது என்ன என்ன வில்லங்கம் வரப்போகுதோ " 

                                         எண்டு என்னைப் பெருமையாக சொல்லி சிரிப்பா.

                                              நான் என்னோட வாழ்கையில் எதையுமே முழுமையா செய்யுறது இல்லை, அதால கொஞ்சநாட்களில் நான் டான்ஸ் பழகுவதை விட்டு விட்டேன் ! இப்பொது சில நாட்டகளில் ஒஸ்லோவில் உள்ள டிஸ்கோ நடன கிளப்பில், கொஞசம் சோமபானம் தலைக்கு ஏற , ரொமண்டிக் ஹோர்மோன் நரம்பை முறுக்க , " வந்தா வா , போனாப்போ " என்று "லத்தின் அமரிகன் டான்ஸ்" முறைப்படி பழகிய வெள்ளைப் பெண்களுடன் ஆடுவேன், 

                        அது எப்பவுமே "கம்மாக்கோ ,சிக்காக்கோ " எண்டு வில்லன்கதிலதான் நகைசுவையாக முடியும் , நான் பெருமைக்கு சொல்லவில்லை, நான் அந்த கிளப்பில் ஆடுவது எண்டால் பார்பவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள்! சில நேரம் கவலையா இருக்கு ஏன் அதை முழுமையாகப் பழகிப் ,படிக்காம விட்டேன் என்று!!!
.
.