Friday, 21 September 2018

நினைவுவரும் போதெல்லாம் !


மனதளவில்
" நான் "
தொலைந்து போனதாலோ
தெரியவில்லை
சிலசமயம்
நிலைகுலையச் செய்யும்
பிரார்த்தனை
நினைவுகளிலிருந்த
துயரங்களின் பிடிப்பை 

விடுவித்திருக்கிறது !


அது
காரணமாயிருக்கலாம் 

" நான் "
 ஒன்றுமே
செய்யவில்லை போலிருந்தாலும்
வாழ்கையின்
உண்மைத்தன்மையை
உரசிப்பார்த்தது  !" நான் "
வேறென்ன சொல்லமுடியும் ?
மனதளவில்
" நான் "
தொலைந்து போன
அட்ப மனிதர்களின்
பெருங்கனவுகள்
எப்போதுமே
சாதிக்கப்படுவதில்லை !*


முரண்டன் போலிருப்பேன்
ஆனால்
எனக்கு எதிரிகள் இல்லை,வெற்றித் திசையில் 
பழக்கமான  தோல்விகளோடு
மெல்லவே

நடந்துபோகிறேன்
ஆதலினால்
போட்டியாளர்கள் இல்லை !ஒவ்வொரு
ஈரமான கைகளையும்
வாஞ்சையோடு பற்றிக்கொள்வேன்
ஆகவேதான்
எஜமானர்கள் இல்லை.என் பார்வைகளில்
நான்
யாரையும் அஞ்சவில்லை.இரவு
இந்த அந்நிய நகரத்தில்
பயப்படாமல்
நடந்து செல்கிறது என்பதே
கிட்டத்தட்ட
அதிசயமாக இருக்கிறது.!*


சாதித்து முடித்து
ஓர்
அடையாளத்தை
சிறகென
விட்டுச் செல்வதால்

அந்த
அனுபவத்துக்கு
உண்மையாகவிருந்த
பறவையைப்பற்றி
எழுதியேயாக வேண்டுமென்றிருந்தது !என்னோடு
மாறுபட்டுக்கொண்டிருக்கும்
வார்த்தைகளில்
பறத்தலின் வீழ்ச்சி பற்றி
நம்பும்படியாக
வலியுறுத்தமுடியாது !நினைவு வைத்து
உன்னிப்பாக கவனிக்கிற
என்
மனசாட்சியோடு
மிச்சமிருப்பதெல்லாம்
அசல்த்தன்மைக்கு
முயற்சிப்பது மட்டுமே !அதுவே
நீண்ட பொழுதுகளை
மவுனிக்கப்போதுமானதாயிருந்தது !*


இரவுகள்
நேர்த்தியான
நீண்ட பயணம் ,
தூக்கிப்போடும் அலைச்சலிலும்
விழிப்புடன் இருந்தவர்கள் ...

மிகச் சிலரே ,


அதிகாலை
ஒவ்வொருவரும்
அவரவருக்கேற்ற
இடத்தில் இறங்குகிறார்கள் ,


அடையாளப்படுத்திக்
கோபப்படுத்துவது
இதுதான்:
பிடித்திருக்கிறதோ
இல்லையோ
திசையின்றி
அலைந்துகொண்டிருப்பவர்கள்
எதிர்பாராத இடங்களில்
தரை தட்டலாம். !


*


திரும்பத்திரும்பச்
சந்திக்கும் அதேசில
நண்பர்கள்,வாசனைகளோடு
ஒன்றிப்போன
சூப்பர் மார்க்கெட், ...


எப்போதாவது நினைவுவரை
ஒரு தேவையைக் குறைக்கிற
முடிவெட்டுமிடம்,


மிக மிக மலிவான
பொருந்தாத சராசரி
உணவகங்கள்,


மாதமொருமுறை
வலுவான பிணைப்புள்ள
ஆதார ஆஸ்பத்திரி,


வருடங்களில் 

மெல்லப் புரிந்தது
இந்த
அந்நிய மனிதர்களை !


பிறந்து வளர்ந்த ஊர்,
ஊரில் இருந்தவர்களெல்லாம்
என்னைப்பற்றி தெரிந்தவர்கள்.


இந்த
நினைவுவரும் போதெல்லாம்
ஒரு விதத்தில்
சற்று ஒதுங்கிக் கொள்வது நல்லது !*


பேச்சுவாக்கில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
பரிமாணங்கள் கொண்ட
காரணங்கள் !


ஒருவகைத்  

தேர்வுணர்வில் ...
வகைப்படுத்திப் புரிந்து கொண்ட
தொடர்பில்லாத
சம்பவங்கள்!


நிலவு தனித்தலைந்த
ஒரு
பருத்த பவுர்ணமியிரவில்
எதற்காக

நிர்மமூலமாக்கினார்கள் ?

கேள்வியின் விடை
திரும்பிவராமல்ப்போனவர்களிடம்
ஒளிந்திருக்கிறதுபோல
நிச்சயம்ஏற்றுக் கொண்டாக வேண்டும்
இடித்து தள்ளப்பட்ட நாள்
இன்னமும்
நன்றாய் நினைவிருக்கிறது!*


நீங்கள்
அதிகம் பிரஸ்தாபிக்குமிடத்தில்
என்
சுயத்தை பிரதிபலிப்பது
முக்கியமா ?...


ஒரு அங்கலாய்ப்புத் தான்.!
அது
அவசியம் என்பவர்களும்
அது
அலட்டல் என்பவர்களும்
விதிமுறைகளை மீறி
சம அளவில் இருக்கலாம் !


புனைவம்சங்களை
அறிந்து விலகிய
அனுபவத்துக்கு இடமளிக்கவேணும்
விரிசல்களில் நுழைத்துவிட
ஒருபொழுதும் முயன்றதில்லை !


ஆதலினால்
என்னைப் பற்றி
அதிகம் கற்பனை செய்யவேண்டாம் !*


ஒரு பயத்தை
ஊன்றி நிறுத்திவிட்டதுபோல
இரவுத் தெருவெல்லாம்
வெறிச்சோடிவிடுகிறது ,


பத்துப்பத்தரைக்கே ...

கதவை இழுத்து மூடிவிடுகிற
நடைபாதைக்

கோப்பிக்கடைகள் ,

ஆள் நடமாட்டமில்லாத

சதுக்கங்களில்
நிழல்களே
காலடியில்த் தேங்கியிருக்கும்
இருட்டை
வெருட்டிக்கலைப்பது போலிருக்கு, 


குடித்துவிட்டு உளரும்

 குரல்களும்
சமீபத்தில் கேட்கவில்லை,


நம்பிக்கை தருவதுபோல் 
சில நேரம்
நகரமே பெருமூச்சு விடுவதுபோல
ஒருவிதமான
ஊதல்க் காற்றுக் கடந்து போகும் ,


அதுவொன்றுதான்
இயல்பாகவே
கிட்ட வந்து நின்று
விசாரித்துவிட்டுப் போகுது !*


எவ்வளவுதான்
பொத்திப் பாதுகாத்த
கனவுகள்
ஆழப் புதைக்கப்பட்டிருந்தாலும்
யாரென்று அறியாமல் ...

ஒரு
கவிதைப் புத்தகத்தின்
உயிர்த்துடிப்பு ஒலிக்கிற
ஓரிரு பக்கங்களிலாவது
முழுமனதாய்
அவன் காலத்திலோ
அல்லது
அவள் காலத்திலோ
எழுதிக்கொண்டிருப்பதினுள்
மறைந்திருக்கும்
மரணபயத்தை மறுதலிக்கும்
ஏதோவொன்றுதான்
வாழ்தலைச் செலுத்துகிற
உந்துவிசை!*


சொல்ல முடியாதவைகள்
எனக்குள்
உள்ளார்ந்து
ஊர்ந்துகொண்டிருக்கிறது
அதில் ...


முன்னேற்பாடாய்ப்
பதுக்கி வைத்திருந்த
சில முடிவுகள் ,


வெகு காலம்

மறக்கப்பட்டுவிட்ட
ஒரு நம்பிக்கை ,
மர்ம பரிபாஷைகளில் எழுதப்பட்ட
நிகழ் குறிப்புகள்,


இவைகளையெல்லாம்
சலனத்தை
உருவாக்குவது குறித்த
பெருங்கனவுகளைக்
கலைத்துப்போட்டுவிட்ட
நினைவில் தெரியவில்லையே !