Friday, 13 July 2018

அம்மாவின் முதல்க்கேள்வி !

தங்கபஸ்பத் தலைமுடியை
தொன்மையான காற்று
தொட்டுப் பரிசீலிக்க
எதற்காக
எனக்கெதிரே
முன்வந்திருக்கிறாள் ?...
நகரத்தின் நியான் வெளிச்சம்
ஒளிமுறித்தெறிப்பில்
சொண்டெல்லாம் சொரிய

எதற்காக
காதொலியில் இரைச்சல்களை
அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறாள் ?
நீண்ட பாம்புக் கழுத்தில்
தூக்கில்போட்ட செயின் !
எதற்காக
வைன்கிளாசில் விரல் சுண்டுகிறாள் ?
புளிப்பேறிய கன்னங்களில்
திராட்ஸை மதுவின் ரஸபோதையேற்றி

எதற்காக
விரத மவுனமாகவிருக்கிறாள் ?
என்
!!!!!!!!!!!!!!!!!!!!!! மாகி
?????????? களுக்கு
.................... வைக்க
என்
முதல் கேள்வியைத் தயார்ப்படுத்தினேன் !
சட்டென்று
நிமிர்ந்து பார்த்துப் பின்வாங்கி
நீலக் கண்கள்
தீரவெறித்துப் பார்த்தபோதும்
ஓரப்பார்வை
வெட்கப்பட்டு விலத்திக்கொண்டது !*

தனித்து
ஊஞ்சலாடும் காற்று,
தனக்குள்தானே
ரகசியம் பேசும் குளிர்,
அநிச்சயமாகப் ...

பேரம்பேசும் இருட்டு,
இந்த நேரம்கெட்ட
நேரத்தில்
இழுத்துப்போர்த்திய
வெண்பனிக் கம்பளத்திலோ
கல்யாணக்களை !*

அக்கறையின்மையில்
நாள்ப்பட்ட புதர்த்தாடி
நேரமொதுக்கி
நேர்த்தியாக மழுப்ப வழித்து
பனிப்பொலிவோடு வெளியேறிவர ...

பிரியமான
நெடுநல் வாஞ்சையோடு
கன்னத்தைத் தடவுது
ஜில்லென்ற குளிர்காற்று !
.*

ஒரு
உண்மைக்கதைக்குள்
சார்புகளற்ற மனசாட்சியை
உள்நுழைத்து
குற்றவுணர்ச்சியை ...

விசாரித்துக்கொண்டிருந்தேன்
அந்தவொரு
முழுமையற்ற நாளுமே
பொய்த்துப்போய்விட்டது !
.*

நான்குமுறை
பரபரப்பாக விவாகரத்தான
விருதுவென்ற நடிகையின்
சுயசரிதை
அமோகமாக விற்றுத்தீர்க்குது !...

ஒரு
ஆணாதிக்கனின் அடாவடித்தனம்
ஒரு
காமப்பசாசின் வெறியாட்டம்
ஒரு
பச்சோந்தியின் துரோகத்தனம்
ஒரு
நயவஞ்சகனின் கபடத்தனம்
வலுக்கட்டாயமாக
வார்த்தைகளுக்குள்ளிறங்கி
விலாவாரியாக விபரிக்கப்பட்டிருந்தது !
கனதியானபுத்தகம் முழுதும்
பதின்மஇளமைக்காலத்திலிருந்து
அறிமுகமானவொருவன்

உலாவிக்கொண்டிருந்தான் !
காதலுக்கும் நேசத்துக்கும்
வாழக்கிடைக்காத அவன்தான்
ஆதர்ஷ மனிதனாக
நேர்மறை உதாரணசாட்சியாகவிருந்தான்! !
அவன் முகத்தை
முடிவுவரையிலுமவள்

வெளிப்படுத்தவில்லை .


*

நான்
இள வெய்யிலை
நினைத்துக்கொண்டே
கோடைமழையை
நனைத்துகொண்டிருக்கிறேன்!
ஒவ்வொரு
மணித் துளிகளும்
கிலேசம் தரும்
காமரஸப் போதையுணர்வுகள் !
அவை
மழைக்கும் எனக்குமான
அந்தரங்க உரையாடல் !
நீங்கள்
குடைகளின் கீழ் ஒதுங்கி
சாரல்களைத்
திரத்திப்பிடித்து எடுத்து
பொய்களில் கவி வடிக்கிறீர்கள்!
எனக்கு
மொழி முக்கியமில்லை
இன்பமானவந்த வலி முக்கியம் !
என்மேல்
விழுந்துருண்டு நெளியும்
ஒவ்வொரு
மென் தூறல் முத்தும்
எனக்கான
இதழ் முத்தப்பரிசளிப்புக்கள் !
அதனால்த்தான்
அசையாமல் நி
ற்கிறேன் !


*வெளிச்சமும் 
முன்னிருட்டும் 
முரண்பட்டுக்கொள்ளும் 
பழுப்புநிறத்தில் 
கிறங்கிக் கிடக்கும் 
சருகளுக்காக
இரக்கப்பட்டுக்
குளிரோடு போர்தொடுக்க
தேர்ந்தெடுத்த
புதிய
வார்த்தைகள்தான்
என்
அமைதியுடன்
அசைவற்றுக்கொண்டே
அதிகமாய்
அடம்பிடிக்கின்றன !

*

உறைபனியிலும்
வெய்யில்
விசாரிக்க வந்தது,
நிலவும்
விடாப்பிடியாக 

வளர்ந்துகொண்டிருந்த
இலையுதிர்வில்
பனிமழை பெய்தது !
இனி
நெருங்கும் கோடையில்
மலர்களுக்கும்
சிருங்காரம் சேர்ந்துகொள்ள
மேகங்கள்
ஓடியாடி விளையாட
பிறப்புக்கும் இறப்புக்கும்
வியாக்கியானம் போலவே
தேவதைகள்
அந்திமச் சிலிர்ப்புக்களுடன்
உலாவருவார்கள் !*


எதிர் எதிரில்
சந்திக்கவைத்த
வெகுதொலைவில்
நமக்கெனவே
நெருக்கமான மழை !

ஒவ்வொரு துளியிலும்
பிரிக்கமுடியாத
நிலாக்கால நேரம்.!
நெஞ்சில்
பாஞ்சு வழிந்துபோன
அதையெல்லாம்
தாலாட்டுக்கள் போலவே
மறந்தேவிடு !
விலகிப் போகும்
விழிக் கண்ணீரில்
கண்கள் கண்டதெல்லாம்
நிழல்களின் நிழலில்
என்னைக் கொடுத்த
நீயும்
உன்னைத் தொலைத்த
நானும்
தேகதாகம் தனித்த
மழையும் தான்!

*


நேற்றுவரையில்
தந்திரங்களில்லை
அதனால்
விலைகளில் மாற்றமில்லை !
வாசலில் 

வாதக்கால்களை அகட்டி வைத்து
பிச்சை எடுக்கும் நாடோடிக்கு
கொஞ்சம்போல
வருமானமிருந்தது !
இன்றைக்கு
ரெண்டு எடுத்தால்
ஒன்றின் கொள்விலை !
நிரம்பி வழிந்து
தள்ளுபடி அங்காடியைத்
நெருக்கியடித்து
தள்ளி விழுத்தாத குறையாகக்
தலைகளின் கூட்டம் !
நாடோடியின்
ரெண்டு கால்களும்தான்
முடங்கி ஒடுங்கியபடி
ஒன்றாகிவிட்டது !

*
காட்சியறையில்
ரசித்துப் பிடித்தமான
ஆடம்பர வேகக்காரின்
அபரிமிதமான விபரங்களைத்
திரத்தியபடியே வாசிக்கிறான் 

அவளின் அவன் !
அரங்கு வாசலில்
புதுப்படக் கதாநாயகனின்
வலுவான கட்டழகை
அடைந்துகொள்ள வெறிக்கிறாள்
அவனின் அவள் !
உறைபணியில்
நினைவெய்திய மலர்களோடு
தோளில் சாய்ந்து
நாளை மாலையிலிருவரும்
சந்திக்கும் உத்தேசம் !
நீண்டநேரம்
மயங்கிக்கிறங்கிய
இவ்விரண்டு சம்பவத்தையும்
ஒருவருக்குள் ஒருவர்
பகிர்ந்துகொள்வார்களா ?*

வருடக்கணக்கில்
நிலத்தில்விழுந்து
ஊர்ந்துசெல்வது போல
தனியாகத்தான் இருந்தான்!
என்னோடு 

எழுந்து நின்று
அழகிய பெண்கள்
ஆலகால விஷம் என்றெல்லாம்
நிறுவிக் கதைப்பான் !
சென்றகிழமை
இன்னொருத்தியோடு
கொஞ்சுவதைப் பார்த்தேன் !
கண்டும் காணாமல்
என்னைக் கடந்துகொண்டிருதான் !
மூன்றுநாள்முன்னர்
வேறொரு பேரழகிக்கு
மலர்கள் திணித்துக்கொண்டிருந்தான்!
நான்
வியர்த்துக்கொண்டிருந்தேன் !
நேற்று முன்தினம்
சாலையோரம்
வாலைக் குமரியொருத்திக்கு
முத்தங்கள் நிறைத்துக்கொண்டிருந்தான் !
நான்
வியந்துகொண்டிருந்தேன் !
நேற்றவன்
இன்னொருத்தியின்
பின்புறம் ஒருகை பிசைந்தபடி
மறுகைகோர்த்து நடக்கிறான் !
நான்
பார்த்த இடத்திலேயே
விஷபல்லு நாக்கில கடிபட
பாம்பாகி விழுந்து விட்டேன் !

*

" சாப்பிட்டியா? "
அம்மாவின்
முந்திக்கொள்ளும்
முதல்க்கேள்வி !
" முதலில் சாப்பிடுப்பா " 

ஒரே வயிற்றின்
அதீத அக்கறை !
பிறகு
" என்ன சாப்பாடு? "
ஆதரவின் ஆதங்கம் !
என் பதில்கள்
வழமைபோலவே சலிப்புகள் !
" ஏன் சமைக்கவில்லையா? "
மூன்றாவது அரவணைப்பு !
இப்பெல்லாம்
அன்பு விசாரிப்புகள்
துரமாக்கிக்கொண்டுபோய்விட்டது !
நினைக்கும் போது
பசிக்கிறது !