Wednesday 14 October 2015

சிலையும் இல்லை, ஒரு மயிரும் இல்லை..

காலம்  எவளவு  வேகமாக  ஓடிப்போய்விட்டது என்று ஒரு வாழ்க்கை முறையின்   பிறழ்வுகளில்  முன்னேறிய ஒரு  மேலைநாட்டில்  இருந்துகொண்டு  நடுமண்டையச்  சொறிஞ்சுகொண்டு நாட்களைக் கடத்திக்கொண்டிருக்க  அப்பப்ப வரும்  சமய நிகழ்வுகள்  சில  சம்பவங்களை  உயிர்ப்பித்து விடுகிறது. அதிலொன்று இப்போது  இதுவுமாகிப் போய்விட்டது, மற்றப்படி யாருக்கும்  நெஞ்சறிய விரோதமில்லை......!

                                          ஊரில முன் ஒரு காலத்தில் இருந்த எங்களின் வீட்டில நடு  ஹோலில ஒரு " பிளாஸ்டர் அவ் பரிஸ்" என்ற வெண் சீமேந்தில் செய்த பிள்ளையார் சிலை சுவரில் கட்டப்பட்ட ஒரு  உப்பரிகை போன்ற சீமேந்துத் தட்டில்  இருந்தது . எங்கள் வீட்டுக் ஹோலில் இருந்த கவர்சியான ஒரே ஒரு கவனிப்புப் பொருளே பல வண்ணக் கலரில் இருந்த அந்த  பிள்ளையார் தான் . வேறு  சொல்லும்படியாக  எதுவுமே  அந்தளவு  பிரகாசமாக  இருந்ததில்லை .

                                             அதை என்னோட மூத்த அண்ணன் நல்லூர் கோவில் திருவிழாவில, பிள்ளையார் அழகா "கொழுக்கு மொழுக்கு" எண்டு கொழுக்கட்டை போல இருந்ததால் ஆசைப்பட்டு வேண்டிக் கொண்டு வந்து வைத்தார்! வேழமுகமும் விளங்குசிந்தூரமும் அஞ்சு கரமும் அங்குசபாசமும் நெஞ்சிற்குடிகொண்ட நீலமேனியும் நான்றவாயும் நாலிருபுயமும் மூன்றுகண்ணும் மும்மதச்சுவடோடு அந்த வாதாபி விநாயகர் இருந்தார்.

                                    அந்தப் பிள்ளையார்  வந்த  நேரம்  வீடே  கோவில் போல இருந்தது. ஆனால்  சில நாட்களில் அந்த  ஆனைமுகன்  எவளவு அலுப்பு பின்நாட்களில் கொடுக்கப் போறார் என்று அவர் வந்த நேரம் தெரியாது. 

                                     ஆனைமுகன் அம்பலவன்  அருள் பொழிவது போல இருந்த அந்த சிலையைப்  பார்த்த அப்பா   ,ஒவ்வொரு நாள் காலையிலும் , மாலையிலும் சாப்பிட முதல் அந்த பிள்ளையாருக்கு சூடாமணி விளக்கு கொளுத்தி, சாம்பிராணி பத்த வைத்து , பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய  இரண்டாம் திருமுறையில் உள்ள " வேயுறுதோழி பங்கன் விடமுண்ட கண்டன்..." என்ற கோளறு திருப்பதிகதில் உள்ள ஒன்பது  படலையும் பாடமாகச் சொல்லி ,அதைப்  பாடும் படியும் , அதைப் படித்தால் வீட்டில் " பிணி,துன்பம், கோளாறு " நீங்கி நன்மை உண்டாகும் என்று அன்பாக சொல்ல ,

                          " அந்த இந்தக் கதை தேவையில்லை, பிள்ளையார்  வந்ததே  இவங்களைத்  திருத்தி எடுக்கத்தான், அதால  ஒழுங்கா கடவுள் பக்தியோட அதைப் படித்தால்தான் காலையும்,,மாலையும்  சாப்பாடே தருவேன்  "

                                       எண்டு அம்மா கண்டிப்பாக கட்டளைபோட, பல வருடம் காலையிலும் , மாலையிலும் சாப்பிட முதல்,கை கால் முகம் கழுவி ,நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு  பிள்ளையார் சிலைக்கு முன்னுக்கு நின்று " ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்லஅடியாரவர்க்கு மிகவே..."  என்று  அதைப் படித்தோம்!

                                      வெள்ளிக்கிழமைகளில்  காலையில் பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டுபோய் கிணத்தடியில் வைச்சு துலாக் கயிறில தண்ணி இழுத்து வாளி வாளியா தலையில  அள்ளி ஊற்றிக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து வைச்சா  பிள்ளையார் பொன்ஸ்பவுடர் அடிச்ச பண்டிக்குட்டி போல பளிச் என்று இருப்பார். கிணத்துக் கட்டில சந்தனம் அரைக்கிற கல்லு இருந்தது அதில உரசி எடுத்த வாச கோபுர சந்தனத்தில் பொட்டும் வைச்சு விடுவோம் .  

                                       நான் விருப்பம் இல்லாமல் பக்தியைத் தூக்கி பக்கிஸ் பெட்டிக்க எறிஞ்சு போட்டு ,பசிதாங்க முடியாமல் , வேற வழி இல்லாமல்தான் படித்தேன் .என் சகோதரங்கள் எப்படிப் படித்தார்கள் என்று எனக்கு இன்றுவரை தெரியாது. குமுத சகாயன் குணத்தையும் கூறிஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் நன்றாகவே அறிந்த அந்த விநாயகக்கடவுளுக்கு என்னோட நிலைமை தெரிந்து இருக்கலாம். ஆனால் அவரும் ஒரு அக்சனும் பிராக்டிகலா எடுக்கவில்லை .

                                          பசியோட பிள்ளையாருக்கு அந்தப் தேவராப் பாடல்களைப் பாட எனக்கு கோபம் கோபமா வரும்! நெற்றியில திருநீறு பூசிக்கொண்டு , மனதுக்குள் பிள்ளையாரை திட்டிக்கொண்டுதான், அவரோட காலுக்க மிதிபட்டுக் கொண்டு இருக்கும் சின்னஞ் சிறு  மூஞ்சூறுக்காக இரக்கப்பட்டுக் கொண்டு, அவருக்கு அருகில் அடுக்கி வைத்திருக்கும் மோதகத்துக்காக ஏங்கிக் கொண்டு 

                             ".மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிசனிபாம் பிரண்டும் உடனே.." 

                                               எண்டு  ஒரு கிழமையில் ஒரு நாள் தன்னும் லீவு இல்லாமல் " ரன்னிங் கொமன்றி " போல அது காலையிலும் மாலையிலும் ஓடிக்கொண்டு இருந்தது.

                                பிள்ளையார் சிலை இருந்த ஹோல் மூலைக்கு அருகில் இருந்த பெரிய கண்ணாடி யன்னலுக்கால் வெளிய பார்க்க வாய்க்காலோடு வளர்ந்து சைடைச்சு நின்ற மஞ்ச வண்ணா மரம் தெரியும், அதில காலையில் குயில்கள் வந்திருந்து பாடும் . மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்,," என்று நாங்க பாடிக்கொண்டு இருக்க, ஆண் குயில் " ஏலேலங்  குயிலே என்னைத் தாலாட்டும் இசையே உன்னைப் பார்க்காத நாள் இல்லையே ..." என்று பெண் குயிலை நினைத்துப் பாடிக்கொண்டு இருக்கும். உண்மையில் நாங்கள் பாடுவதை விடக்  குயில் பாடுவதைக் கேட்க நல்லா இருக்கும் .

                             கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்று  சைவசமயத்தாருக்கு ஞானசம்பந்தரால் உறுதி  கொடுத்து சொல்லப்பட்ட  அதை உருகி உருகி பசியோட வீட்டில் "கோளறு திருப்பதிகம்" படித்தும் " பிணி,துன்பம்,கோளாறு " பல வருடம் உடம்பில ஊத்தை போல ஒட்டிக்கொண்டு இருக்க , கோளாறு போன மாதிரி இல்லாமல் ,கடைசில கோதாரி வந்தது போல , சில வருடங்களில் அப்பா இறந்து விட்டார்!

                                           அவரோட சடலத்தை, தலை மாட்டில குத்துவிளக்கு ஏற்றிவைத்து , அந்தப் பிள்ளையார் சிலைக்கு முன்னால ஹோலில் வைத்தோம், பிள்ளையார் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார் ஒண்டுமே செய்யவில்லை. அப்பா அகாலமான  அதுக்குப் பிறகு நிறைய " பிணி,துன்பம், கோளாறு " அதிகமாகிய நேரம் ஏனோ தேவாரம் படிக்கிரத்தை கொஞ்சம் கொஞ்சமா மறந்துவிட்டோம்!

                        அப்பா அகாலமாக  இறந்ததால் அம்மாவும் கடவுள்களில் நன்பிக்கை இழந்தோ,அல்லது வளர்ந்த நாங்கள் சொல்வழி கேட்கமாட்டம்  என்றோ ஒண்டுமே சொல்லவில்லை.முக்கியமா நான் சொல்வழி கேட்கும் நிலையில் அப்போது இருக்கவில்லை. முண்டினால் பிள்ளையார் சிலையே உடையும் போல கோவத்திலயும் ,கொமினிஸ்ட் சோஷலிசக் கொள்கைகளில் தீவிரமாக  இருந்தேன் .

                                            ஆனாலும் பிள்ளையாருக்கு விநாஜக சதுர்த்தி,சரஸ்வதிப் பூசை, நவராத்திரி,சிவராத்திரி நாட்களில்  பூ, புனஸ்காரம், படையல் எல்லாம் வைத்து எங்கள் " பிணி,துன்பம்,கோளாறு " நீக்க சொல்லி மன்றாடி கேட்டும், அப்பவும் பிள்ளையார் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார் ஒண்டுமே செய்யவில்லை. ஆனால் அப்படியான விசேட நாட்களில் அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி போல பிள்ளையார் அலாதியாக என்ஜாய் செய்துகொண்டு இருந்திருக்கலாம் 

                                  அதுக்குப் பிறகு  அந்தப் பிள்ளையார் பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல வீட்டு ஹோலில அவர் பாட்டுக்கு கவனிப்பார் அற்று இருந்தார் ! அம்மா மட்டும் தவறாமல் நித்திய கல்யாணி பூ புடுங்கி காலையில்  ஒவ்வொரு நாளும் வைப்பா! சொல்லும்படியாக எந்தவிதமான அதிசயங்களும் நடக்கவில்லை .

                                       வீட்டு நிலவரம் இப்படி இருக்க, அந்த நாட்களில் ஒரு "குண்டக்க மண்டக்க " இசைக் குழுவில்  நான் கிட்டார் வாசித்தபோது, எங்களின் எல்லா நிகழ்ச்சியிலும் தொடக்கமா " உச்சிப்  பிள்ளையார் கோவில் கொண்ட இடம் ...." பாடல் பாடும் போதெல்லாம் எங்களின் வீட்டில் இருந்த பிள்ளையாரை நினைத்துதான் நான் கிட்டாரை வாசிக்கத்  தொடங்குவேன்!  எனக்கு அப்பெல்லாம் சரியாக கிட்டார் வாசிக்கத் தெரியாததால் சும்மா சடைஞ்சு வாசிக்க அந்த  "பிளாஸ்டர் பரிஸ் பிள்ளையார் " செய்த உதவிதான் காரணம் என்று நினைக்கிறேன்.  அவர் இல்லாவிட்டால் என்னால் சமாளித்து இருக்கேவே முடியாது. 

                                          என்னோட அம்மாவே "உச்சிப் பிள்ளையார் கோவில் " பாடல்,நல்ல ஆசீர்வாதமான பாடல், அதைப் பாடினால் வீட்டில "அருள்,பொருள்,ஆனந்தம் "பெருகும் " எண்டு நம்பிக்கையில் சொன்னா, அவா சொன்னமாதிரி உச்சிப்பில்ளையா கூரையைப் பிச்சுக்கொண்டு வந்து எங்களுக்கு " அருள்,பொருள்,ஆனந்தம் "ஒண்டுமே கொடுக்கவில்லை! அதன் பின் சில வருடங்களில் என்னோட சகோதரியின் சாமத்திய வீடு நடந்தது,அது ஒண்டுதான் எங்க ள் வீட்டில நடந்த ஒரு நல்ல மங்களகரமான விசியம், பிள்ளையார் அதை சந்தோசமா சிரித்துக் கொண்டு பார்த்துக்கொண்டு இருந்த மாதிரி இருந்தது அவரின் முகம் !

                                         கொஞ்ச வருடங்களின் பின் என்னோட பாட்டி இறந்தா, அவாவின் சடலத்தை , பாட்டி ஆசைப்பட்டபடியே அவாவின் தலை மாட்டில, தூண்டாமணி விளக்கு விளக்கு ஏற்றிவைத்து,அந்தப் பிள்ளையார் சிலைக்கு முன்னால ஹோலில் வைத்தோம், மறுபடியும் பிள்ளையார் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார் , " செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இருநிதியம், வையத்து அறும்-பாவம்  என அறிந்து அன்றிடார்க்கு இன்றுவெறும்பானை பொங்குமோ " என்பது  போல அந்தப் பிள்ளையார் ஒண்டுமே செய்யவில்லை!

                                   அதுக்குப் பிறகு என்னோட உடன்பிறப்புகள் ஒவொன்றாக எட்டு திசை எங்க்கும் பிரிந்து போக, கடசியா சூரிய கதிர் ராணுவ நடவடிக்கையில் யாழ்பாணத்தை விட்டு வெளியேறிய பின் எனக்கும் அந்த வீட்டுக்கும் தொடர்பு இல்லாமல் போய் ,சில வருடங்களில் அதை என்னோட சகோதரிக்கு அம்மா சீதனமா கொடுக்க ,வெளிநாடில் இருந்த அந்த சகோதரி ,நாங்கள் அரை குறையாக வாழ்ந்து, பின் நாட்களில் ,சிறப்பாக வாழ வழி இருந்தும், அதைப் பராமரிக்க யாரும் இல்லாமல், சொல்லாமல் கொள்ளாமல் அதை அறவிலைக்கு வித்துப் போட்டா!

                             ஒரு காலத்தில் நடந்து இன்னொரு காலத்தில் இன்னொரு விதமான நினைவுகளின் அனுபவம் கொடுக்கும் என்பது உண்மை . புலம்பெயர்ந்து  கலாச்சார  வெற்றிடம் உள்ள ஒரு நாட்டில் வாழ்வதால், பழசையெல்லாம்  நினைக்கும்போது , ஒரு காலத்தில் பிடிக்காமல் இருந்த பிள்ளையார்  ,எப்படியோ  குழப்பத்திலும் எனக்கு ஒருவிதமான அனுசரணையுடன் தான் இருந்து இருக்கிறார் . அதனால்  அந்தப் பிள்ளையாரில் கோபம் இல்லை. 

                            சமைக்கத்தெரியாதவன் சட்டிபானை சரியில்லை  என்று சொன்னதுபோல  சொல்லுறேன்  என்று நினைக்க வேண்டாம். வாழ்கையில் பலவிசியங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களின் பார்வையில் புரிவதில்லை. அதை எல்லாம் புரிந்துகொண்டு  என்ன வெட்டிக் கிழிக்கவா போகிறோம்  என்று  நினைச்சாலும் நெஞ்சாங்கூட்டில் சில  சம்பவங்கள்  கிரீஸ் கத்தியால  குத்துவது போல நடக்கும்.  

                          அதுக்கு இன்னுமொரு முக்கிய  காரணம்  நாங்கள் வளர்ந்துகொண்டு இருந்த போது எங்களின் வீட்டில் நடந்த எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த ஒரே ஒரு  ஐ விட்னஸ்  சாட்சி அந்த " பிளாஸ்டர் அவ் பரிஸ் " பிள்ளையார். அதனால் அந்தப் பிள்ளையார் சிலையை எப்படியும் எடுப்பது என்று நினைத்தேன் . அதைக் கடல் கடந்து வாழும் என் சகோதரங்கள் இருவருக்கு டெலிபோனில்  சொன்னேன். அவர்கள் இருவரும் என்னை

                         " என்ன இவனுக்கு  இந்த வயசிலையே மண்டைப் பிழை வந்திட்டுதே,,,"

                                        என்பது போல சந்தேகமாகக் கதைத்தார்கள்.என் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் விக்கிரமாதித்தன் போல  சில வருடம் முன் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் என்னோட " பிசினஸ் மக்னட் " தம்பி நல்லூர் திருவிழாவுக்கு யாழ்பாணம் போனபோது, அவனுக்கு சொல்லி , 

                    " அந்தப் பிள்ளையார் சிலை அந்த வீட்டில் இருந்தால் , அந்த வீட்டை வேண்டியவர்களுக்குப் பணம் கொடுத்து , சிலையை எடுத்துக்கொண்டு வரமுடியுமா "

                              எண்டு கேட்டேன் , அதுக்கு யாழ்பாணம் போய் வந்த அவன்,

                       " அண்ணே , நான் போய் விசாரிச்சன் அண்ணே  , அந்த வீட்டை வேண்டினவன்  என்னோட  கதைக்க  விரும்பவில்லை  அண்ணே "

                          "   நீ  என்ன  அவன்ட  வீட்டில  சம்பந்தம்  பேசிக்  கலியாணம்  முடிக்கிறதா  கேக்கப் போனனி ,,,பழைய  சாமான்  என்னவும்  இருந்தால்  தரச்சொல்லி  தானே "

                         " ஓம்,,ஓம்,,,அதுதான்  அண்ணே   ,,ஆனால்  அவன்  ஒரு  விடாக்கொண்டன்  மடாக்கொண்டன்  போல  திமிறிக்கொண்டு நிண்டான் "

                            " என்ன மண்டை விறாசா இருந்தாலும்  உனக்கு  என்ன "


                           "   ஓம்,,ஓம்,,அவன்   படலைக்கு வெளியால ரோடில வைச்சே என்னோட கதைச்சான் , உள்ளுக்க சும்மாவும் வீட்டை வெளியால பார்க்கவும் விடமாட்டான் என்டுட்டான் "

                               " சரி,,படலைக்கு  வெளியே  நின்றே  கேட்டு  இருக்கலாமேடா "

                              "   ஓம் , ஓம்,,  அதுதான்   ,,நானும்  செய்தனான்  அண்ணே"

                            "  சரி,,நீ என்ன  கேட்டாய்,,,என்னண்டு  கேட்டாய்  "


                              "   ஓம்நா,,ஓம் ,நான்  பார்த்துப்போட்டு எங்களின் பிள்ளையார் சிலை ஒன்று ஹோல் மூலையில் வைச்சுக்  கும்பிட்டணாங்கள் ,அந்த சிலையை மட்டும்  தரமுடியுமா, வெளிநாடில் இருக்கிற அண்ணன் ஒருவர் கேட்டார், அதுதான் கேட்குறன் எண்டு  கேட்டேன் "

                            "    அதுக்கு  அவன்  என்ன  சொன்னான் "

                            "  ஓம்,,ஓம்,,அவன்  ஒண்டுக்கும்  காது  கொடுத்துக்  கேட்கவில்லை.."

                            " ஹ்ம்ம்,, காசு  தாரன்  எண்டு  சொல்லிப் பார்த்தியே,,நான்  காசு  அனுப்பி  இருப்பேன்  எண்டு தானே  சொன்னேன் "


                            " ஓம்,,ஓம் ...காசு தாறம் எண்டு கடைசியா கேட்டுப் பார்த்தேன் அண்ணே "

                         "  வாவ்,,என்ன  சொன்னான்,,காசு  என்டவுடன  சவண்டு குத்துக்கரணம்  அடிச்சு  விழுந்து  இருப்பானே "

                                      " இல்லை,,அண்ணே , அவன்  இங்க ஒரு சிலையும் இல்லை, ஒரு மயிரும் இல்லை,, இந்த  விசர்க்  கதைகளோடு  இனி  இங்கே படலைப் பக்கம்  வந்தா  போலிசுக்கு  அடிச்சு  சொல்லுவானம்  எண்டு பேசி அனுப்பிப்போட்டான் அண்ணே "

                             "   அட,,,ஹ்ம்ம்,,,இனி  ஒண்டும்  செய்ய  ஏலாது "

                            " ஓம்,,ஓம் ,,     பிள்ளையாரை எங்கயும் ஒரு மூலையில் தூக்கி எறிஞ்சு இருப்பான் போல ...நான் அதுக்கு மேலே ஒண்டும் கேட்க்கவில்லை, " 

                                  "   சரி,,விடு "

                                  "    ஓம்,,ஓம்,,அண்ணே   இங்க சாமிப்படம் விக்கிற  கடையில வேண்டிய மாதிரி ,வேண்டிய சைசில் , வேண்டிய  கலர்ல பிள்ளையார் சிலை விக்குறாங்கள்."

                              " இல்லைப்பா,,,எனக்கு அந்தப்  பிள்ளையார்தான்  வேணும்..இல்லாட்டி  எந்தப்  பிள்ளையாரும்  தேவை  இல்லைப்பா "

                             " ஏன்  அண்ணே,,அப்படி  சொல்லுறியள் "

                            "  இல்லைப்பா...ஏன்  என்று சொல்லதெரியவில்லை "


                             "  நீங்க  இப்ப  சொல்லுங்கோ..உடன  கையோட  ஒரு சிலை வேண்டி டி எச் எல் இல அனுப்பவா   " 

                        "   இல்லைப்பா,,தேவை இல்லை, அதுகள் வேற  நான் தேடுறது வேற  "


                             "    சரி,,நான்  என்னால முடிஞ்ச வரை  முண்டுகொடுத்துப்  பார்த்திட்டேன்,,உங்களுக்கு  அந்தப்  பழைய  பிள்ளையார் தான்  வேணும்  எண்டுகொண்டு  நிண்டா  நான்  என்ன  செய்ய, 

                                "   சரி விடு,,எல்லாம்  காலக்கொடுமை ,வேற  என்ன  "

                                     " இப்ப வேணுமென்றால் ஒரு பத்துப் பதினஞ்சு பிளையார் சிலை வேண்டி அனுப்பலாம்,,கோவிலே கட்டிக் கோபுரமும் கட்டி  கும்பாவிஷேகமே செய்யலாம்     " 

                                         " அதில ஒண்டுமே இல்லை, நானே  இங்கே  வேண்டலாம் ,,அது ஒரு  பிரச்சினையே இல்லை "

                                    "  நான்  என்னவோ சொல்லுறதை சொல்லிபோட்டேன்  அண்ணே "

                                   "   அதுதான்   இதை  இனிக் கதைக்கவேண்டாம்  எண்டு சொல்லுறேன் "

                                      "  அண்ணே,,நான்  இப்ப  வைச்சு ஓடுற  வானுக்கு  ஏசி போடால்  நல்லம் போல  இருக்கு,,இப்ப  எங்கட  வெளிநாட்டு தமிழ்பாட்டிகள் அறம்பிறமா  வருகுதுகள், ஏசி வான் தான் வேணும்  எண்டு கேட்கினம் "

                                     "   ஹ்ம்ம்,,"

                                   "   சும்மா  ஒரு  பிள்ளையார் சிலையை  இவளவு காசு  செலவழித்து பாசல் செய்து  எடுக்கிறன்  எண்டு அழுங்குப் பிடியா நிக்குரிங்க,,பிள்ளையார் சிலை  என்ன  அள்ளிக்கொட்டப் போகுதே "

                                   "   ஹ்ம்ம்  "

                         " அண்ணே,,நான்  என்ன  சொல்லவாறன்  எண்டு  விளங்குதே "

                              "   ஓம்  ஓம்  நல்லா விளங்குதுப்பா  "


                        " அப்ப பின்ன டக்கெண்டு  அதுக்கு  அலுவலைப்பாருங்கோவன்,,எக்கவுண்ட்  நம்பர்  இருக்குதானே,,பழைய பாங் நம்பர்தான் ,,அண்ணே ,  " 

                                     இதுதான் வாழ்க்கை !



"பொம்மை வீடு " ஒரு சமூகப் பிறழ்வு

யாழ்பாணத்தில புத்தகங்கள் படித்த காலத்தில, நோர்வே நாட்டு ஹென்றிக் இப்சன் என்ற ஒரு நோர்வேயிய எழுத்தாளரின் நாடகத்தை, எளிய தமிழில் மொழிபெயர்த்து வந்த "பொம்மை வீடு " என்ற சுருக்கிய புத்தகத்தைப் படித்த நினைவு இருக்கு!
                               அந்தக் காலத்தில் அப்படி நிறைய வெளிநாட்டு எழுத்தாளரின் புத்தகங்கள் சுருக்கிய வடிவில் வந்திருக்கு! உள்ளூர் ஆட்கள் எழுதுதும் ஜீவாவின் " மல்லிகை" , ஜேசுராசாவின் "அலை", போன்ற இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள் மொழிபெயர்த்து வந்திருக்கு !
                                ஹென்றிக் இப்சன், நோவேயில் 18ம் நுற்றாண்டில் வசித்த ஒரு நடக்க ஆசியர் ,அவரை ஆங்கில மேடை நாடக இலக்கியத்தின் தந்தை வில்லியம் சேக்ஸ்பியருக்கு அடுத்ததாகச் சொல்லுறார்கள் !
                          யாழ்பாணத்தில அவரின் "பொம்மை வீடு " படித்த போது உலக இலக்கியம் எல்லாம் பிரித்துமேயும் அளவுக்கு அறிவு இல்லை ,சும்மா வாசித்த நினைவு இருக்கு அதில வாற நோரா என்ற பெண்மணியின் வாழ்கை மட்டும் இன்றுவரை நினைவு இருக்கு !
                          சில வருடம் முன் நோர்வேயில் அவரின் "பொம்மை வீடு " நாடகத்தை தேட , அது மூன்று பெரிய புத்தகமாக இருக்க , அதை எப்படி யாழ்பாணத்தில சுருக்கிய புத்தகமாக ஒரு நெருப்புப் பெட்டி சைசுக்கு மொழிபெயர்த்தார்கள் எண்டு குழப்பமா இருந்தது !
                                       நோர்வே மொழியில் "பொம்மை வீட்டை " கொஞ்சம் நோன்டிபார்க்க , அது வேற மாதிரி அனுபவம் கொடுத்தது ! யாழ்பாணத்தில வாசித்து நோர்வேயிய மொழியில் இருந்து நேரடியாக மொளிபியர்ததா அல்லது மொழிபெயர்த்ததா என்பதிலேயே குழப்பம் வந்தது !

                            "பொம்மை வீடு " ஒரு சமூகப் பிறழ்வு நாடகம் ஹென்றிக் இப்சன் எழுதிய எல்லா நடகங் களும், அந்தக்கால , வறிய, ஆண் ஆதிக்க , நோர்வேயின் 18 ம் நுற்றாண்டு சமுக வாழ்கை அவலம் என்கிறார்கள் !
                                    பெண்கள் மீது இரக்கம் உடையவர் இப்பசன்.அதுக்கு காரணம் அவரின் சின்ன வயசில் பெற்றோர்கள் வறுமையில் வாடிய நேரம் ,உயர்குடிப் பிரபுக்களின் வைப்பாடிக்கள் வீட்டில் அவர் எடுபிடியாக வேலை செய்துதான் வளர்ந்தார்.
                                  அந்தப் பெண்கள் அவரோடு அன்போடும் கனிவோடும் அவரை தங்கள் பிள்ளைபோல வளர்த்ததால்,பின்நாட்களில் அவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியர் ஆனபின் முடிந்தவரை பெண்களின் அவலத்தை, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை எல்லாம் நாடகத்தில் எழுதினார்
                                   பெண்கள் பிறந்ததே கலியாணம் கட்டவும் ,பிள்ளை பெறவும் ,குடும்பத்தைக் காக்கவும் என்பதை உடைத்து நோரா என்ற பெண்மணி ஆண்களைப் போல உலக விசியன்களில் நாட்டம் கொள்ள , அதை சுற்றி நடக்கும் குடும்ப சமுதாய பிரிவினை தான் "பொம்மை வீடு " நாடகம் என்கிறாகள் !
                                         நோரா அப்படி குடும்ப சமூக எல்லைகளை உடைத்தபோது எவளவு விமர்சனம் யதார்த்த வாழ்கையில் வந்திருக்குமோ அவளவு விமர்சனம் ஹென்றிக் இப்சன் எழுதிய "பொம்மை வீடு " நாடகத்துக்கும் பிற்போக்கு , கட்டுப்பெட்டி 18ம் நுற்றாண்டு நோர்வேயில் வந்ததாம் !
                                       ஒரு மொழி என்பது கலாசாரம் ,சமூக ,வாழ்வியல் சம்பனதமானது ! ஒரு மொழியின் ஆளுமை அந்தத் தாய் மொழியில் எழுதிய இலக்கியங்களில் இருக்கு. பிற மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் பலர் வெறும் மொழி வல்லுணரா மட்டும் இருந்தால் பல விசியங்கள் மொளிபெயர்ப்பில் இருட்டு அடி வேண்டின மாதிரி இருக்கும் ,
                                சரி அப்ப வேறு எப்படி பிறமொழி இலக்கியத்தை தாய் மொழியில் மாற்றுவது என்றால் ? அவர்களே கொஞ்சம் இலக்கிய சம்பந்தப்பட்டவர்களாயின் ,உயிரோடு விளையாடியும் இதயம் கிழிபாடாமல் மூல செய்தி வந்துசேர வாய்ப்பு இருக்கு ! "பொம்மை வீட்டை " வாசிக்க அப்படி நல்லதும் ,கெட்டதும் நடந்திருக்க வாய்ப்பு இருக்குபோல இருக்கு !
                                        
                                         இந்தப் படத்தில் பின்னுக்கு உள்ள கட்டிடம் "நேஷனல் தியட்டர் " என்ற ஹென்றிக் இப்சன் நாடகங்கள் அரங்கேறிய இடம் ,இதற்கு அருகில் ,தங்களில் இலக்கியப் பிதா ஹென்றிக் இப்சன்சனுக்கு வெங்கலத்தில் சிலைவைத்து கவுரவிதுள்ளார்கள் நோர்வேயிய மக்கள். இப்சன் எழுதிய நாடகங்கள் இன்றைக்கும் இங்கே நடக்குது ! அவர் மீதும் அவரின் இலக்கியதின் மீதும் மதிப்புள்ள பல வெளிநாட்டினரே வந்து பார்க்கிறார்கள் !
                                           நான் ஒரு நாடகமும் இதுக்குள்ள போய் இன்னும் பார்க்கவில்லை ! ஒருவேளை எனக்கு இன்னும் அந்தளவு இலக்கிய முதிர்ச்சி வரவில்லையோ தெரியவில்லை .பொதுவாக எனக்கு 18ம் நுற்றாண்டு கிளாசிகல் முயூஸிக், ஓவிய ,இலக்கிய விசியங்கள் கேட்க ,படிக்க ,பார்க்கப் பொறுமை இல்லை , அந்த வரலாற்று முக்கிய இடங்களுக்கு முன்னால நிண்டு, எதோ பெரிய அறிவுக்கொழுந்து போலப் படம் எடுக்க மட்டும் நல்ல விருப்பம் !!!
.
.