Wednesday 15 August 2018

கனவிலும் மீதமிருக்கலாம் .!

யாருமில்லாத யாரோ ஒருவன் வயோதிபத்தில்  எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை போன்றது  பல சமயங்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இருந்து போட்டு கொஞ்ச நாட்கள் எழுத ஏதுமில்லா வெறுமை வெளிக்குள் சஞ்சரிப்பது. எழுத இடையூறுகள் இருந்த போதும் மற்றவர்கள் எழுதுவதை  வாசிப்பது.  அதிலுள்ள இன்னொரு குழப்பம்  வித்தியாசமான பேசுபொருட்கள் இல்லாத  கவிதைகளின் தேக்கநிலயை  பலசமயம் அவதானித்து இருக்கிறேன், நீங்களும் கவனித்து இருக்கலாம்.


                                                              ஓரளவுக்கு எல்லாக்  கவிதைபோன்ற எழுத்துக்களையும்  மின்னெறிஞ்சவெளி வலைப்பூங்காவில் தொகுத்து முடிந்தாகிவிட்டது என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன் , ஆனாலும் இன்னும் பல ஆங்கங்கே ஒரு ஒழுங்கு முறையில் இல்லாமல் சிதறிக்கிடக்குது, அவற்றையும் தொகுத்து முடியத்தான் மனது அப்பாடா என்று ஆசுவாசம் கொள்ளும்போல இருக்கு . இவைகள் இந்த வருடத்  தொடக்கத்தில் முகநூலில் எழுதியவைகள்,


*


என் 
சிந்தனையின்
தொடக்கத்திலும் 
முடிவிலும்
காது நுனியில்
வண்ணாத்திப்பூச்சி போல
வாசனைக் காற்று
வந்தமர்ந்துகொண்டது
அதன்
நாடியைப் பிடித்து
உள்ளங்கையில் உரசி 
நாள்ப்பட்ட
பழைய நட்பை
விசாரித்துக் கொண்டேன்.!




*


முதல்க் காதலி 
திடுக்கித் தடுமாறி 
போயே போய்விட்ட 
காலப்பிரமானக் கணக்கில் 
தவறிப்போன 
கண்களைப் பிரகாசமாக்கி
போதுமென நினைத்து
சட்டென்று சந்திப்பைமுடிக்க
தலையைத்

தாழ்த்திக் கொண்டாள்,
அவள்
இத்தனை வருடங்களில்
இந்தப் பழக்கத்தை
ஏதுக்காக 

இன்னும் மறக்கவில்லை?. 



*

உறைபனிக்கு
இடம்பெயர்ந்து போன
பறவைகள்
திரும்பி வரும் போது
வெயிலோடு போராடி 
நிறங்கள்
மாறினாலும்
வாழ்வு கொடுத்த
மரங்கள்
வாக்குத் தவறி
மற்றொன்றாக
மாற முயல்வதில்லை..!

*

சிந்தித்திருக்க வாய்ப்பில்லா 
நேரங்களில்தான் 
படபடப்புப் பார்வைகள்

மோதிக்கொள்ளும், 
அதுதான்

இதயம்வரை 
பிராண்டிச் சீண்டுகிறது 
அதில் தேற்றுதல்கள் இல்லை! 
பிரிந்துபோன

காதலின் ரணமே 
அயர்வுகளில் ஆறவிடாத
மனசாட்சியின் தொந்தரவு !
அந்தக் குற்றவுணர்ச்சியை 
ஒத்துக்கொண்டுதான் 
இளவட்ட வயதின்

குருட்டுத்தனமான 
குழப்ப உணர்வுகளோடு 
எல்லை தாண்டவேண்டியிருந்தது!



*
பனி
உறைந்த
நிகழ்காலத்தில்
வெப்ப மண்டலப் பறப்பு,
இங்கே
வெயில் விரித்துவைக்கப்பட
சலிக்க விடாமல்
கூட்டிக்கொண்டு வந்த
குஞ்சுகள்
கிளைகளில் அலகு தீட்டி
அரிவரிகள்
அனுபவிப்பதைத்
தாய்ப்பறவை
தூரவிருந்து   ரசிக்கிறது  !




*



ஒரு 
முடிவைச் 
சொல்லிமுடிப்பத்துக்குக் கூட 
அச்சம்தரு சூழல் 
அப்போதிருந்ததுபற்றி 
சமாளிப்புகளோடு 
பேசிக்கொண்டு 
முட்டாள்தனமாக வெட்கப்பட்டேன் .
அவள்
மவுனமாகவே 
அப்போதுமிருந்தாள் !
தோற்றுப்போன 
எல்லைகளுக்குள் நின்று
ஒரேயொருமுறை 
திரும்பிப்பார்த்தாள் ,
அவ்வளவுதான்
அந்த அதிகாலைக்கனவில் 
முப்பது சொச்சம் வருடங்கள் 
வரமாகத் திருப்பிக்கிடைத்தது ....!


*
எல்லாமே அழகாக
ஒருங்கிணைந்து
செல்லும்
இயற்கையில்
வாழ்வின்
அற்புதங்களில் இருந்து
நம்மைப்
பிரித்துப் போடும்
அறிவு தான்
எப்பவுமே எதிரி.!



*





காச்சலடிக்கும்
கணச்சூடு போல
கொஞ்ச நேர
வெய்யிலோடு
விடாப்பிடியாக
நிலத்தை
ஆக்கிரமித்தபடி
மல்லுக்கு நிக்குது
உறைபனி !


*
நெருக்கமான
தேவையாக இருந்த
மரங்களின் 
மவுனத்தைப்
பறவைகள்
பறித்தெடுத்துத்
தொலைத்துவிட்டன !






*


கோடை காலம்
முழுவதுமே
பறவைகளும்
மரங்களும்
ஏற்படுத்திக்கொண்ட
புரிந்துணர்வுதான் தான்
முதலும்
கடைசியுமான
சுதந்திரம். !




*



உயிருள்ள வீடுகளின் 
இருண்ட சன்னல்களும் 
வெளிக் கதவுகளும் 
இன்னும் இறுக்கியே 
சாத்திக் கிடக்கின்றன, 
துக்கம் அதிகமாகி
மாரடித்துப் புலம்பிய
விண்டர் உறைபனி
கரைந்து போனாலும்,
கொஞ்ச நேர சூரியனால்
பஞ்சுக் குளிரை
விரட்ட முடியவில்லை





*

இரவெல்லாம்
ஊர்க் கதைகள்
முணுமுணுத்த
ஊதல்க் காற்று
காலையில் வாசலில்
தேங்கியிருந்த
மழையின் தண்ணீரை
கிள்ளிப் பார்க்கிறது,
வரப்போகும்
வசந்தகாலம்,
அதன் இலை துளிரும்
சாத்தியங்கள் ,



*

அடிவானில் சிரிக்கும்
விடி வெள்ளி போல
ஒளிரத் தொடங்குது,
அந்த நம்பிக்கையில்
சின்னக் குழந்தைகளின்
பிஞ்சுப் பாதங்களில்
நசிபடும் புற்களின்
இலைகளில் தொங்கும்
பனித் துளிகளில்
உயிர்கள் மீதான
ஆழமான அக்கறை
மீண்டும் ஒருமுறை
கசியத் தொடங்குகிறது....







*


மார்ச் மாதக் 
கடைசி உறைபனி
மெதுவாக
பரபரப்புச் செய்திபோல 
சத்தமில்லாமல் 
சோளப் பொரிகளாக
இறங்கி நிறைக்கிறது....
விரும்பிய எதுவுமே
மறுபடியும்
திரும்பி வராததுபோல
மனிதர்கள்
அலையும் போது
விதவையின் ஏக்கம்
போலக்
கிசுகிசுக்கத் தொடங்குகிறது
மழை... !







*

இறுகிச் சாத்திய
கோப்பிக் கபேக்களின்
ஜன்னல்களில்
நடுங்கிய விம்பங்களின்
உரையாடல்களில் 

தெறிக்கிறது
சொல்ல விரும்பாத
ரகசியங்கள்.....
தற்செயலாகச்
சந்தித்த
பழைய காதலர்கள்
கனவுகள் இறந்து போய்
பிரிவை உறுதிப்படுத்திய
கடைசி
இரவைப் போலக்
கை குலுக்காமலே
சிரித்துக் கொள்கிறார்கள் ....





*

வண்ணாத்திப்பூச்சியைத்
திரத்தும் வெய்யில்,
அலகு தீட்டும்
மொர்க்கோ பார்வை,
பவுர்ணமியில் முழுகிய 
சந்தன நிலவு,
வளைக்காப்புப் போட்ட
பேர்ச் மரங்கள்,
விம்மிக் கொண்டிருக்கும்
குன்றுகள்,
நச்சென்று குட்டும்
நடை பாதைகள்,
நெளிப்புக்காட்டி ஓடும்
நதி,
வயதில் பக்குவப்பட்ட
பைன் மரவீடு,
அன்பை மொழிபெயர்க்கும்
வெள்ளைக் குழந்தைகள்,
அவன்,
அவள்,
அது !



*

நட்சத்திரங்களற்ற
நவீன நகரம்
வீம்புக்குக் குந்தியிருக்கும்
கும்மிருட்டு
வளைக்காப்புப் போட்ட

பேர்ச் மரங்கள்
வெள்ளைச் சருகில்
உறங்கும் உறைபனி
வெளிச்சங்களின்
விலாசம் மறந்தாலும்
ஒரு செக்கன்
நிற்க வைத்து
பார்த்து ரசி!







*

பூங்காவில்
கோடைக் காலத்தில்
ஆடியது போலவே
குழந்தைகளுக்காவும்
கதகதப்பான வெய்யிலுக்காகவும்

ஏங்கிய ஊஞ்சல்கள்
வளவை வசீகரித்தபடி......
அரை குறையாக
நினைவுகளில்
தாண்டிப் போய்க்கொண்டு
சேர்ந்து நடக்க
விரும்பாதவர்களை
முன் மாலை இருட்டில்
விட்டுப் போட்டு
விலத்தி நகர்கிறது
பாதையின் முடிவில்
நகரம்..!





*

ஏதோவொரு 
கனவிலும்  மீதமிருக்கலாம் 
அதனால்த்தான் 
விடியவிடிய 
சுருண்டு படுத்திருக்கு

உறைபனி !
இன்று
எதட்காக
வந்ததும்வராததுமாய்
அதட்டி எழுப்புகிறது
காலை வெய்யில் ?







Thursday 9 August 2018

வரலாற்றின் விருப்பம் !

உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் அது கொஞ்சம் அவசரமாக  அலட்டிக் கொள்வதுதான்போலிருக்கு . வரலாறு எப்போதுமே ஒருமித்த திசையில் ஒத்திசைவான கருத்துக்களுடன் பயணிப்பதில்லை. வேறுபாடான  கொள்கைகளோடு முட்டி மோதிக்கொண்டே நிறையப் பலமான விசியங்களே பலவீனமாகிவிட்டது.  அதில ஏகப்பட்ட குளறுபடிகள் இன்னமும் மறைக்கப்பட்டு இருக்கிறது.


                                                              பலநேரங்களில் இவற்றை எல்லாம் எதுக்கு இப்போது சொல்லவேண்டும் என்று நினைப்பது . ஆனாலும் சில கனதியான நாட்களில் சிலதைப் பதிவுசெய்துவிடும் போது மனது லேசாகிவிடுவது போலிருக்கும். அப்படி எழுதியவைகள் இவைகள் , தவறவிடாமல் தொகுப்பு ஆக்கியுள்ளேன் .


                                                                மின்னெறிஞ்சவெளி வலைப்பூங்காவில் இவைகளும்  நடுகற்கள் போல இருந்திட்டுப் போகட்டுமே



*





இரண்டு தளபதிகளும் 
கிழமையொருநாள் 
நட்பாகக் கை குலுக்கினார்கள்,


ரகசியமான 
முன் எச்சரிக்கைகள் 
மொத்தத்தையும் திரட்டிக்கொண்டு
தீர்ப்பு நாளுக்குள்
இறங்கியடிக்கக் காத்திருந்தது,


பனி மூடியிருந்த
அராலித் தரவைக் கடலும்
வெள்ளைவாய்க்காலும் சந்திக்குமிடத்தில்
ஆள்காட்டிக் குருவிகள்
தயங்கியபடியே
நாடோடி யாத்திரைக்காரணின்
அகாலமான முடிவுபற்றிப் பாடுகின்றன,


எதிர்காலத்துக்கு எந்தவிதமான
உத்தரவாதங்களும் தரமுடியாத
இந்த
ஒடுக்கமான வர்ணனையை நீங்கள்
பொய்யென்று சொன்னாலும்
பரவாயில்லை


சொல்லியேவிடுகிறேன்
பொழுதொன்றில்
அவர்கள்
ரவைகள் ஏற்றிவைத்த
துவக்குகளை நீட்டிக்கொண்டு வந்தபோது
இவர்கள்
வீங்கிச் சிவந்து கசியும்
கண்கள் திறக்க முடியாத
நோயின் உபாதையில்
அரண்டு கலைந்து

சுருண்டு கிடந்தார்கள் !


சிதைக்கப்பட்ட
அறைக்குள் வைத்துதான்
நினைவுக் கதவுகளை
இறுக்கமாக மூடியிருக்கிறார்கள் !



தாழ்வாரத்திலும்
வாசல்ப் படிகளிலும்
விழிசொரிந்த மேகங்களின்
மேமாத மழை நீராலும்
ரத்தத்தைக் கழுவமுடியவில்லை !



ஆயிரம்முறையும்
மன்னிக்க மனதில் இடம்வைக்காமல்
கடைந்தெடுக்கிற கண்களில்
தளபதின் கையில்
ஆட்டொமேடிக் கலாஸ்னிக்கோ 47 !



அந்த இவர்கள்
கண்களை ஒருமுறை திறக்கவே
நேரம் இருக்கவில்லை
அதட்குள்
எல்லாத் தலைகளுமே சிதறிவிட்டது!





*




நம்பமுடிகிறதா ?
ஏதுமறியாமல் 
அதுபாட்டுக்குப் பூவரசம் பூக்களோடும் 
தைலமர வண்டுகளோடும் 
உச்சிக்கொட்டி விடிகாலை,!




திட்டமிடுதல்கள்
கசிந்துகொண்டிருப்பது பற்றியெல்லாம்
நாலு திசைகளிலும்
வெக்கப்பட்டுக்கொண்டே
இயலாமையில் மவுமான
அந்ரங்க அமைதி,!



கற்றைக் கோடு கிழிக்கும்
விசிலடிப்புச் சத்தங்களுடன்
குறிபார்த்து நேர்கோட்டில்
தணல் உரசிய
சடசடசடசடசட என்ற
சனங்களின் சிதறல் வெடிப்புகள் !



தெருவோரப் பாதிகளில்
சிதறி விழுந்த தசைகள்
வைகாசி வெய்யிலில்
சட்டென்று
காய்ந்து போன இரத்தம்,



மின்விளக்குகளில்
விரல்கள் முறிக்கப்பட்டுப்
பிணைக்கப்பட்ட புறங்கைகள் ,



சந்தையருகில்
சவுக்கம் தோப்பில்
முச்சந்திமுடுக்கில்
முகங்களில் இலையான் மொய்க்கும்
உருக்குலைந்த சடலங்கள் !



வாய்திறக்க முடியாத
இனமொன்றின் ஈரமில்லா ஓரவஞ்சனை
நடுவில் முறிக்கப்பட
அதட்டி எழுப்பப்பட்ட
சிதிலமாக்கப்பட்ட நீண்ட கனவு , !



ஒரு கணம்
நம்பத்தான் முடிகிறதா ?
முப்பத்தியொரு வருடங்களின்முன்
இந்த வாரத்தில்த்தான்
இதெல்லாம்தான் நடந்தேறியதை ?








அந்த
அமைதியலைந்த சனிக்கிழமை ,
அந்தத்
தந்திரச் சுற்றிவளைப்பில்
செம்பாட்டுமண் செறிவில் 

கிழக்குப் பார்த்த புகையிலைத்தோட்டம் ,



சீமைக்கிளுவை வேலிகளில்
ஆங்காங்கே முருங்கைப் பூக்களையும்
பதறவைத்த
காட்டுத்தனமான கூச்சலடங்க
தனித்து ஒருமித்த
தானியங்கித் துப்பாகியொன்றின் முழக்கம்!



பிறகு
செம்புலப் பெயர் நீர் போல
அன்னங்கை மண் உறிஞ்சிய இரத்தம்
பிறகுகளை முடிவாக்கிவைக்க
ஒரு
சுருக்கமான விளக்கம் !



வன்முறைகளை
முடிந்தவரை எதிர்ப்பதுபற்றி
அனுதாபங்களை வேண்டிக்கொள்ள
எதிர்பார்க்கப்படும் மொழியில்
அந்த
முடிந்துபோன சம்பவத்தை
சுழண்டுகொண்டிருக்கும்
மனதின் கண்களிலிருந்து
வெளியேற்றி
இனியொருபோதும்
நகரவேமுடியாதவாறான
சதுரமொன்றுக்குள் அடக்கிவிடுவது
என் நோக்கமல்ல !



ஆனால்
வரலாற்றின் விருப்பம்

அதுவாகவேயிருக்கும்
மயக்கம்தரும் பொழுதொன்றில்
முகத்தைப்
புற முதுகின் பக்கமாகத்
திருகித் திருப்பி வைத்து ,
தீக்கோழிகள் போலவே
தலைகளைப் புழுதியில் ஆழப்புதைத்து ,
குரல் அடைத்த அத்தனை
மனிதாபிமான மனசாட்சிகளும்
குற்றவாளிகளே !




Tuesday 7 August 2018

ஒரு கனவென்பது....!

ஏறக்குறைய கடந்த ரெண்டு வருடங்கள் விட்ட குறை தொட்ட குறையாக    முகநூலில் எழுதிப்போட்டு ஆங்காங்கே சிதறிக்கிடந்த எல்லா கவிதைமொழிப் பரிசோதனை முயற்சிகளையும் ஒவ்வொரு தலைப்பில் என்னோட வைப்புச் சொப்புக்கள் எல்லாம் பதுக்கி வைத்திருக்கும்  மின்னேறிஞ்சவெளி வலைப்பூங்காவில்  தொகுத்தாகி முடிந்து விட்டது .


                                                               இதை எல்லாம் தொகுப்பதே எனக்கொரு சத்தியசோதனை போலிருந்தது . நீங்க பிறந்த ஜனன ´லக்கின  கிரக ராசிக்பலன் படியும் இனி உங்களுக்கும் சோதனை அதிகம் இருக்கப்போவதில்லை.  இதுதான் கடைசித் தொகுப்பு, இதோடு வாசிக்கிறது தொல்லையில் இருந்தும்  உங்களுக்கும்  களிப்புக்  கழியுது.


                                                 தொடர்ந்தும் எழுத முடியுமா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கு. நிண்டான் திண்டான் பாஞ்சான் போல எப்பாவது சில நாட்களே முகநூல்ப் பக்கம்  வரவும், வந்து பதிவுகள் வாசிக்கவும், வாசித்து லைக்கவும் , சிலநேரம் கொமெண்டவும்  முடிகிறது. அவளவுதான் இப்போதைக்கு சொல்லமுடிகிறதும் !




*


இந்தப் பூவோடு
அனுக்கிரகத்தை நினைப்பதை 
நிறுத்திவிடுங்கள் ! 
கொடியில் 
தளிர் அரும்பாகி 
செடியினில்
குளிர் விடியலோடு
தென்றல் தாலாட்டி மலர்ந்து
மடியில் விளையாடும்
மயில் ஊஞ்சல்
வயதொன்றில்
கதவுகளற்ற
கர்ப்பக் கருவறையில்
கடவுளின் காலடியில்
பிய்த்து எறியப்பட்டாள்
காஸ்மீர் ரோஜா !
இனியாவது
ஆண்டவனுக்கு
மலர்களை அர்ப்பணித்து
அவமதிக்காதீர்கள் !




*


நொதித்துக்  கொதிக்கும்
ஆடி  மாதம் ,
நீள வாக்கில்
வெட்டி வைச்ச
தர்ப்பூசணி,
அதன்
குங்கும நிறத்தில்
வெய்யின் ருசி !



*

ஒரு 
விடுமுறை நாளில் 
ஒரு 
சாவோடுசம்பந்தப்பட்ட
ஒரு 

பொருந்திவராத நேரம்

ஒரு
அடிவானத்தை

வடிவமைத்துக்கொண்டிருக்கு
முகில்களோடு மோதும்

ஒரு
வானம்பாடி!




*

நீலக் கடலும் காற்றும்
நிறைவு வாழ்வும்
நுரைபொங்கி
அலை தவழும் நினைவு,
களைத்துப்போன மனது ...
உயிர்வாழ்வதை
எனக்குள்ளேயே
வலிய மறுதலிக்க
இரவின் போர்வை விலத்தி
விடிந்தது
சென்ற வருடமொன்றில்
இறந்துபோனவளின்
பிறந்தநாள் !



*





ஒரு
உண்மை

ஒரு
இடம்மாற்றிவைத்த உத்தி
ஒரு
நியாயத்தை அநியாயப்படுத்த

அறுதியிடுகிறது
ஒரு
அலங்கரிக்கப்பட்ட

பொய்.






*

மனப்பிரமைகளை
இன்னொருவரில்த்
தேடிக்கதைக்கும் போதெல்லாம்
செவிப்பறை கிழிகிறது !
இதுதான் ...

நடந்துமுடிந்ததென்று
என்னமோவெல்லாம்
உருவாக்கிப் பிசத்துகிறாய் !
சரி
ஒத்துக்கொள்கிறேன்
மிகவும் அயர்ச்சியான
உள்மனப் பிறழ்நிலமைகளை !
ஆனாலும்
நண்பா
நானில்லாமல்ப் போனபின்னாவது
நிரூபிக்கமுடிந்த எல்லாவற்றையும்
சொல்லவிரும்பாமலிருந்ததை
ஒப்புக்கொள்வாயா ?


*


ஒரு
கண்ணாமூச்சி விளையாட்
டு
ஒரு
பறத்தலுக்கான போராட்டம்

ஒரு
அகாலமான நினைவு 
 
ஒரு
பதற்றமான திசைப்போக்கு

ஒரு
பரபரப்புகளில்லா வானவெளியில்
ஒரு
ஊகிப்பதற்கான இடைவெளியை
நிராகரித்துவிடுகிறது!





*


நீண்ட
வழித்தடத்தில்
இருட்டு ,
கோடை மழையில்
நெருக்கமான
முத்தச் சூடு,
நட்சத்திரங்களெல்லாம்
விருமுறைக் கொண்டாட்டத்தில் 
பால் வீதியில்
உறங்கியபடி,
நான்
எனக்குள்ளேயே
என்னோடு
தனித்துப்போய்யிருக்கிறேன்......
எனக்குத் துணையாகாவே
வெளிச்சங்களை
அளவாகவே
கசியவிட்டபடி
விடியும்வரை 
அலைக்கழியுது
வசந்தகாலக் காற்றில்
ஏற்றி வைத்த
அகல் விளக்கு !

*











தலை வாழை
இலை போட்ட
விருந்து ..

நீ
குனிந்து
நிமிர்ந்து பரிமாறுகிறாய்
,
திறந்த ஜன்னல்களில்
வெட்கப்பட்டுக்கொண்டிருக்கு

தென்றல் ..!

*


இசையோடும்
கதையோடும்
இலங்கை வானொலியில்
பொங்கும் பூம்புனல் ..
சிறப்புக் கதை சொன்ன
ஆனந்த விகடன்


மாமரத்தில மஞ்ச மைனா
மஞ்சவண்ணாவில மாங்குயில்....
வெய்யிலை விழுங்கிய
வேப்பமர நிழல்கள்...
அலட்டிக் கொள்ளாத
நீல வான மேகம்...
வாசமள்ளி எறிஞ்ச
மல்லிகைப் பந்தல் .....
நினைவுகளில்

ஒரு
கனவென்பது
நிண்டு கொல்லும்

அந்தக்
கணாக் காலம்!


*



ஒரு
புத்தம்புதிய

காலத்தைத் தேர்ந்தெடுத்து
ஒரு
வாழ்கையைக் கொண்டாடிவிட
ஒரு
சொர்கமில்லை என்று

அங்கலாய்க்குது
ஒரு
பெயர் வைக்கப்படாத

பறவை !


*



விட்டில் பூச்சிகளை
நெருங்கிப் பார்க்கவிடாமல்
இரவுமுழுதும்
எதையோ
மறைக்கவிரும்புகிறது
சிம்மினி விளக்கின்
கண்ணாடிகளில்
திரைபோடும்
கரும்புகை !



*


ஒரு
எரி கல்லுப்போல
ஒரு
செங்கோணமுக்கோணத் திசையிலிறங்கி
ஒரு
தீர்மானமான உறுதியோடு
ஒரு
வெற்றிடமான நொடியில்
ஒரு
தற்கொலை !



*

இந்த மரவீடு 
பசுந்தீவனப்புற்களின் 
சேமிப்புக்களஞ்சியமாயிருக்க
லாம் !



குதிரைகளின் 
பிராண்டல் வாசம் 

பழைய நண்பன் போல
நினைவழியா
இதயசுகமாயிருக்கு, !



வாசனை முழுவதும்
நினைவுகள்
தாங்கிப்பிடிப்பதால்
கழுத்தைத் திரும்பிப் பார்க்காமல்
கடந்து போவது
இலகுவாயிருக்கவில்லை,



காலத்தை
உதாசீனம் செய்துகொண்டதாலோ
தெரியவில்லை
பண்ணைக்களஞ்சியம்
ஒரு பக்கம் சாய்ந்துவிட்டது,



கறலரித்துக்கொண்டிருக்கும்
இரும்புத் திருப்புமுனைகள்,
இடுக்குகளிலும்
சிலந்திவலைகளைத் தாண்டி
உள்நுளையமுடியாத
பழைய வெய்யில் ,



உக்கிக்கொண்டிருக்கும்
வைராக்கிய மரச்சட்டங்கள் .
தூசி அப்பிப்படிந்தும்
நிலையாமையை நியாயப்படுத்த
சிதைவுகளோடு எதிரியாகி
மாறிமாறி முரண்படும்
வரலாறு ,



நான்
குதிரைலாயத்தை
கொஞ்சநேரம் தான்
நடைநிறுத்தி நின்றுபார்த்தேன்



அதற்குள்ளேயே
வாழ்ந்தழிந்து முடியும் போதும்
தொடக்கப்புள்ளியில்
கொண்டுவந்து நிறுத்திய
அதன் பிடிவாதங்கள்
என்
நிகழ்காலத்தை நிராகரித்துவிட்டது !






Wednesday 1 August 2018

ஜீவனைத் தீண்டும் கண்களில்...

வளைந்து நெளிந்து 
நகர்ந்துகொள்ளத் தடுமாறும் 
பார ஊர்திகள் ! 
முடிவேயற்ற 
மூச்சு ஏற்றத்தில் 
நீண்ட நெடுஞ்சாலை !
நடைபாதையில்
படுத்திருக்கும்
பளிங்குச் சலவைக்கற்கள் !
கோர்வையாக நெய்யப்படும்
நேர்க்கோட்டில்
தடுமாற்றமில்லாத
எறும்புகள்!





*
வெளியேறவேண்டிய 
சரியான தருணம் 
திகைப்பில் தாமதிக்குது,
இனி 
நடனமாடியபடியே 
சுழன்றடிக்க
இடைவெளிகளுமில்லை !
பலவிதத்திலும்
தனித்து நிற்கிறது
முடிவின்மையின் காத்திருப்பு !
ஆயாசமானவைகளைத்
தவிர்த்த பிறகும்
எதற்காக
மவுனமாகவிருக்குது
நேரம்?



*
மழை பெய்யும் நாட்களில் 
மரணம் 
நெஞ்சில் அடைப்பது போலிருக்கும்
எதிர்காலத்தைத் 
தெளிவுபடுத்தமுடியாமல் 
மவுனித்திருப்பேன் !
வெய்யில் நேரங்களில்
மீதமான வாழ்க்கை
வெளியே அழைப்பதுபோலிருக்கும்
சமீபிக்கின்ற ஓசைகளிலிருந்து
இறந்தகாலத்தை
வித்தியாசப்படுத்தத் தெரியாமல்
நடந்துகொண்டிருப்பேன் !
இரவுகள்
ஆழந்த அமைதியோடு
முத்தமிட்டுக்கொள்ள
மனசெல்லாம்
மெல்லத் திரும்பிவிடுகிறது
தற்போதைய நிலவரத்துக்குள் !





*

காலம் மங்கிய 
கறுப்பு வெள்ளைப் 
புகைப்படங்கள் !
நிதானமாகத்தான் 
பார்க்கவேண்டியிருந்தது !
ஒவ்வொன்றிலும்
வாழ்ந்துபோன மனிதர்களைப்
பாரமாக்குகின்றது
தலைமுறைத் திசைமாற்றங்கள் !
நிறங்களில் இல்லாத
சந்தோஷ அலைகளை
நிரம்பியிருந்தது
அவர்களின் முகங்களில் !





*

தேவாலயத்துக்கு 
மிக அண்மையிலிருந்தது 
சவுக்காலை ! 
தங்களில் 
யாரோவொருவரைப் புதைத்துவிட்டு 
மவுனத்தை வெளியேற்றும்
வயதான மனிதர்கள் !
சற்றுநேரம்
நானும் இறந்து போய்விட்டேன் !
பிறகு
புரிதலற்ற இடைவெளியைக் கடந்தபடி
கைகளை உதறிக்கொள்கிறேன் !
இப்போது
ஒவ்வொருவரும் அவதியாக
வாழ்வைத் துரத்த வெளிக்கிடுகிறார்கள் !
எனக்குரியவைகளைப் பின்தொடந்தபடி
நானும்தான் !
உயிரோடு
விலகிநின்று பார்த்ததனால்
ஒரு சிரிப்போடு
சமாளிக்கமுடிந்தது !



*

வெய்யிலில் 
வேடிக்கைபார்க்கவும் 
மனதில்லை !
எங்கேயோ 
அனர்த்தங்கள் 
நிகழவாய்ப்பிருக்கின்றது போல
தசைகள் முறுக்கிக்கொள்கின்றன !
இந்த வலி
தனிப்பட்ட துயரம்,
உலகத்தை அளித்துச் செல்கிற
பின் உளைவு !
இது
நிரந்தரமாகவே
சஞ்சரிக்கும்
நேரங்களிளெல்லாம்
கைவிடப்பட்ட உணர்வு !





*
மிகப்பெரிய
வேடந்தாங்கல் 
நீர்ப்பரப்பை அளவெடுத்தபடி ,
கோடைக் காற்றோடு 
சிறகசைந்தபடியே 
கரணமடித்து வந்திறங்கியவுடன்
மூச்சு முட்டி நிற்கின்றன
திசைப் பறவைகள் ,
இந்த வெற்றிடம்
நீண்ட பறத்தலில்
தற்காலிகமானதுதான் !
இப்படியான
இடங்களுக்குள்
நானெப்போதும்
தனியனாகவே நுழைய விரும்புகிறேன்.!





*
பழைய வீதி
நேற்றுப்போட்ட நடைபாதை 
புத்தம்புதிய வீடுகள்
நவீனமான நெருக்குதல் 
நான் 
முகத்தைத் துடைத்து
என்னோடும்
வெய்யிலோடும் நடந்த
உன்னோட காலடிகளைத்
தேடுகிறேன் !
அதே
மணிப்புறாக்கள் பறக்கின்றன
அதே
குடை விரித்த மரங்களிலிருந்து !
இப்போது
எல்லாமே பழையதாய் மாறுகிறது!





*

" அவள் எங்கேடா " மச்சான் ?
அதே வழக்கமான புன்னகையோடு 
நெடுநாளைய நண்பன் 
ஆரம்பிக்கின்றான் !
நினைவுகளை 
உறிஞ்ச ஆரம்பிக்கிற
வாசனைகளெல்லாம்
மிதக்கத்தொடங்குகிறன !
" எங்கேயென்று
தெரியாதடா மச்சான் " என்கிறேன் !
அவளுக்கேயுரிய
ஜீவனைத் தீண்டும் கண்களில்
அதே மின்னொளி ஆச்சரியம் !
சட்டென்று
நிசப்த மனசாட்சி
நீண்ட இரைச்சலாகியது !
எதற்காகப் பொய் சொன்னேன் ?
மவுனத்துக்குள்
நுழைந்துகொள்ளும் மனதுக்குள்
நினைவுகள்
உறிஞ்ச ஆரம்பிக்கிற நேரமமெல்லாம்
அவள் இங்கேதானேயிருக்கிறாள் !





*

உஷ்ணமாகும்
வருடத்தின்
இந்த மாதத்துக்கு
இது
மிகவும்குளிர்தான் , 

வடமேற்கே
நீல மலைகளில்
இன்னும் பனிபடர்ந்திருக்கிறது,
வெடித்தபடி
நொறுங்கிக்கொண்டிருக்கிற
அசையா நதியின்
சரிவான கரையில்
சறுக்கியபடி கீழிறங்குது
உறை பாளங்கள் ,
தேவையற்ற சுமையென
நினைத்திருக்கலாம்
ஒரு
மஞ்சள்ப் போர்வையை
போர்த்திவிட்டு நகருது
வடதுருவ சூரியன் !

 

*



தீவிரமாகத் தேடிப்பார்த்து
எல்லைகள்
கிழிக்கப்படுகின்ற
இடத்தில்
தூக்கத்தைக் கெடுக்கிறதுபோல 

அந்தக் கனவு !
என்னைத்தவிர
யாரெல்லாருமோ
அந்தரங்கமான
பங்கெடுப்புக்களில்
வந்துவந்து போனார்கள் !
என்னையறியாமல்
நுழைந்தபோதும்
திருப்திப்பட்டுக்கொள்ள
ஏதுமிருக்கவில்லை !
சில சமயம்
ஒரு கனவென்பது
எனக்குரியதென்பதையும்
தாண்டிப்போய்விடுகிறது.!




*




குறுகலான 
சந்து முடுக்கில் 
இருட்டுப் பிரவேசம் ! ,
சட்டென்று 
உரையாடல் துவங்கும் போதே 

ஒருமையில் தான்
ஆரம்பித்துவிடுகிறது!
நொடிப்பொழுதில்
அடையாளம் கண்டு
விசாரிக்க வருகிறார்கள்!,
நான்
நானாகவேயிருக்கிறேன் !
இப்போதெல்லாம்
முன் போல்
கோபப்படமுடிவதில்லை.
என்னிடமிருந்து
மனம் அயர்ந்து விடுகிறது.1
இப்போது
நான் நிட்பதைக்
கணக்கிலெடுக்காமல்க்
கடந்துவிடுகிறார்கள் .!
வெளியேறிவிட
அந்த
விளிப்பு ஒன்றே
போதுமானதாயிருந்தது.


 

*


பின் மனசில் 
அலைக்கழிப்புக்கள்
மேல் அமிழ்த்தி 
ஓடிக்கொண்டேயிருக்கும் 
காட்சி ஞாபகம் ,

புரிதல்கள்
முற்றிலும் வேறாகவிருந்தாலும்
தினவாழ்க்கை
கொஞ்சமாய்
என்னவென்று தெரியாத
ஏதோ ஒன்றை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது,
கண்

காணாமல்
அடிமனசில் ஒளித்து
அது
எப்போது வேண்டுமானாலும்
தீர்ந்து போகக் கூடும் !