Thursday, 5 March 2015

" சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..."

இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பாடிய இளமைப்பருவப் பாடகி ஒருவர் இந்த வட இந்தியக் குரல் தமிழில் அதிசயங்கள் பாடி அசாத்திய திறமையில் பலரை வியக்க வைத்த அந்தப் பாடகி அழகி படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வெஸ்டர்ன் ரிதம் இசையின் பின்னணியில் பாடிய " பாட்டு சொல்லிப் பாடச் சொல்லி .." தமிழ்ப் பாடலுக்கு தேசிய விருது பெற்ற ஹிந்தி மொழிப் பாடகி சாதனா சர்க்கம் .
தமிழில் பாடிய பல பாடல்களில் இன்றுவரை அலைபாயுதே படத்தில் அல்லா ரக்கா ரகுமானின் இசையில் பாடிய " சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே..." பாடல் ரகசியமாக தமிழர்கள் எல்லாரையும் வயது வேறுபாடு இன்றி இந்தக் குரல் சின்னச் சின்னதாய்க் கோரிக்கைகள் வைத்து கவர்ந்து சென்றது . அல்லா ரக்கா ரகுமான் ஒரு பேட்டியில் தான் கொடுக்கும் மெட்டைத் தான் எதிர்பார்ததுக்கு மேலாக அட்டகாசமாகப் பாடி அசத்தும் ஒரே பாடகி சாதனா சர்க்கம் என்று சொல்லியுள்ளார்,
சாதனா சர்க்கம் ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதம், வட இந்திய கஸல், தும்மிரி இசை வடிவங்கள் எல்லாம் முறைப்படி சின்ன வயசிலேயே படித்து அதில் இருந்து சினிமா பின்னணிப்பாடகியாகி மெல்லிசைக்கு வந்த பாடகி. தன் உடல் அமைப்புக்கும் கணீர் என்ற சுருதி பிசகாத பிச்சில் பாடும் குரலுக்கும் சம்பந்தமே இல்லாமல் பாடும் சாதனா சர்க்கம் தமிழ் சினிமாவின் எல்லா முன்னணி இசை அமைப்பாளர்களோடும் தன் குரலைப் பதிவு செய்துள்ள பாடகி,
" சிநேகிதனே, சிநேகிதனே ரகசிய சிநேகிதனே.." பாடல் மூன்று ராகங்கள் கலந்த ஒரு ராகமாலிகா என்று சொல்லுறார்கள்,சரியா எனக்கு தெரியவில்லை ,பல்லவியில் சாருமதி, சிந்துபைரவி, இராகமும் சரணத்தில் மோகனம் என்றும் சொல்லுறார்கள் ,இது சரியா என்று எனக்கு தெரியலை யாரவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
https://www.youtube.com/watch?v=xVQBOAajJF0


சிக்கல் பிக்கல் பிடுங்கல்..

" வாழ்கையே சிக்கலாகவும் எது செய்யவும் வெறுப்பாகவும், விரும்பிற மாதிரி எதுவுமே நடக்காததால் அலுப்பாகவும், மிக மிக சிக்கலாகவும் இருக்கிறது " என்று ஒரு அன்பர் உணர்ச்சிப் பிளம்பாகிப் பதிவு போட்டு இருந்தார், அவர் அது என்ன சிக்கல் என்று சொல்லவில்லை. இங்கே பேஸ் புக்கில் உள்ளவர்கள் எல்லாருமே சிக்கல் பிக்கல் பிடுங்கல் சோலி சுரட்டு எதுவுமே இல்லாமல் நின்மதியா இருப்பது போலவும் தான் மட்டும் சிக்கலில் அவதிப்படுவது போலவும் போட்டிருந்தார்.
அதுக்கு முதல் கருத்து பதிவிட்ட இன்னுமொரு அன்பர் , " நான் நினைக்கிறன் உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கு போல " என்று போட, அந்தப் பதிவு போட்டவர் " அதெப்படி அவளவு கரெக்டாக் கண்டு பிடித்தீங்கள் " என்று பதில்க் கொமென்ட் போட, அதுக்கு அந்த அன்பர், " நீங்க வெறுத்துப்போய் எழுதிய விதத்திலையே எனக்கு விளங்கியது நீங்கள் எவளவு கஷ்டப்பட்டு எழுதி இருப்பிங்க என்று அதை வைத்து மலச்சிக்கல் இருக்கு என்று கண்டு பிடித்தேன் " என்று எழுதி பாட்டி வைத்தியம். சொல்லுறேன் பேர்வழி போல ,
" மலச்சிக்கலுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம்பழத்துடன் எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு சிறிய இஞ்சித் துண்டை நறுக்கிப் போட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் விளாம்பழத்தையும் கலந்து வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அந்தச் சிக்கலுக்கு நல்ல பயன் பெறலாம் "
என்று நாட்டு வைத்தியர் அளவுக்கு அட்வைஸ் எழுதி இருந்தார்.
ஏன்பா தெரியாமத்தான் கேட்கிறேன், வருத்தம் துன்பம் வந்தால் அதுக்கு அதுக்கு என்று படித்துள்ள டாக்டரிடம் போகாமல், இப்படி குய்யோ முறையோ என்று அதை இங்கே போஸ்டிங் ஆகப் போட ,அதை வாசிக்கிற அரைகுறை அறிவுக் கொழுந்துகள் சொல்லும் அட்வைசை நம்பினால்,கடைசியில் பைத்தியம் பிடித்து வைத்தியம் அதுக்கும் இல்லாமல்ப் போய் கடைசீல இங்கேயே உங்க மரண அறிவித்தல் போட்டு அதுக்கு கண்ணீர் அஞ்சலிக் கவிதையே எழுதவேண்டி வரும்பா.
...... என்ன சீவியமடா இது.
.

மனதோடு மட்டுமே....

தலைக் கனம்
பிடித்திருந்து
விழுத்த முடியாதவர்களையும்
வழுக்கி விழுத்தி .
அழகு பார்த்த 
உறை பனி
அக்கறை காட்டத்
தேவையில்லாமல்
பாதை ஓரங்களில்
விடை பெறுகிறது.....
நிலை தடுமாறி
சமநிலை இழப்பது
கவனிக்க வேண்டிய
முக்கிய காரணமாகி .
அதிலிருந்து
தனிப்பட்டு
வேடிக்கைப் பார்க்க
முடியவில்லை..
இவ்வளவுநாளும்...
இன்னும்
சில நாட்கள்
சூரிய வெப்பம்
வெறுமனே
கவனித்தால் போதும்.
கீழ்ப்படிதலோடு
அவை
வாதம் செய்யாமல்
அழிந்து விடும்.....
புதிதாகும்
எல்லாவற்றையும்
கொண்டாடுகிற
வசந்தகால .
ஆன்மாவை
நேசிக்கின்ற
புற்களின்
முதல் வரவுக்கு இனி
எந்த வரைமுறையும்
கிடையாது...
உறைபனிக் கால
சப்பாத்துக்களின்
புரிந்துணர்வோடு
பயமின்றிப் பயணம்
செய்து முடித்த
பாதை நிகழ்வுகளின்
ஆவணங்கள்
உருகி மறைந்து
இல்லாமல் போவது
மனதோடு
மட்டுமே
முழுமையாக
எஞ்சியிருக்கட்டும்.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 05.03.15