Friday 7 October 2016

பெரிய மாமா ...ரெண்டாவது பாகம்

 பல நேரங்களில் சொல்லிமாளாத  கதை போலத்தான் வாழ்கையும், அல்லது  வாழ்க்கையும் ஒரு கதைதான். என்ன முடிவில்லாத தொடர்கதை. பெரிய மாமா எப்படி அவரோட  மட்டக்களப்பில்  இருந்த  சின்னவீடு  பித்தளைக்குடத்தை  யாழ்பாணத்தில் இருந்த வீட்டுக்குள் கொண்டுவர வேண்டிய ஒரு நிர்பந்தத்தை விதி ஏற்படுத்தியதோ  அதேபோல அந்தப் பெண்மணியை வெளியேற்றி அனுப்பியதிலும் விதிக்கு நிறையவே பங்களிப்பு இருக்கு.   
                                             
                                                         பல  குளறுபடிகள் நடந்துகொண்டிருக்கும்  என்ற எச்சரிக்கையில் ஒரு கிழமைக்கு  பெரிய மாமா வீட்டுப் பக்கம் போறதில்லை  என்ற முடிவோடு இருந்தேன் . ஆனால் நிலைமை கொஞ்சம் அளக்கிற நாழிக்கு  அகவிலை அறியுமா? போல எசகுபிசகாகி பெரிய ராசன்  அண்ணை  ஜெர்மனியில் இருந்து வந்த  நாலாவது  நாள்  பெரிய மாமி  செத்துப்போனா . அன்றைக்கு  காலையில்  பெரிய மாமா உடனடியா வரச்சொல்லித்  தகவல் அனுப்பி  இருந்தார் . 

                                                           அந்த  மாதம் முழுவதும்  மழை வேறு அடிச்சி  ஊதிக்கொண்டிருந்தது. திருக்காத்திகை  விளக்கீடு  வருவத்துகு ரெண்டுநாள் இருந்த நேரம் பெரிய மாமி செத்துப்போனா. அது கிட்டடியில் நடக்கும்  என்று  எனக்கும் தெரியும், ஏனென்றால்  மாமி  இனி பழைய நிலைக்கு வரும் சாத்தியங்கள் எல்லாமே கைவிட்டுப் போயிருந்தது. நல்ல  சாவு  நல்ல நேரத்தில் வந்த மாதிரித்தான் இருந்தது .

                                            யாழ் ஒல்லாந்தர்  கோட்டையில்  இருந்து ராணுவம் டெலிகொமினிகேசன் பக்கமாக  வெளியேற முய்ட்சிப்பதுக்கு சப்போட்டாக மண்டைதீவு மினி முகாமில் இருந்து செல் அடி  நடந்தது. கொட்டடிப் பக்கமாக ராணுவத்தை வழிமறித்து முன்னேற விடாமல் இடை மறிப்பு சண்டையில் மாறி மாறி ரெண்டு பக்கமும் சனங்கள் பாஞ்சுகொண்டிருக்க ,ஒரு பெல் ரக ஹெலிகாப்டர் குருநகர் பக்கமாக பிப்டி கலிபர்ரேசர் ரவுன்ஸ் அடிச்சுக்கொண்டிருந்தது. 

                                                   நான்  போன நேரம்  மாமியை ஒரு பழைய மரவாங்கில கிடத்தி , கால்ப் பெருவிரல் ரெண்டையும் சீலம்பாய் துணியால ஒன்றாகக் கட்டி, கை ரெண்டையும் உள்ளங்கையில் ஒன்றாக்கி விரல்களைக் கோர்த்து , ரெண்டு  மூக்கிலயும்   பஞ்சு அடைஞ்சு     கண்களை இறுக்க மூட வைச்சு , தலைமாட்டில குத்துவிளக்குக் கொழுத்தி வைச்சு இருந்தார்கள். நிறைய  இலையான்கள் பறந்ததால் அருகில் ஒரு டேபிள்பேன்  வைச்சு ஓடவிட்டிருந்தார்கள் 

                                                    மாமியின் முகத்தில  ஒருவிதமான நின்மதியாகப் போய்ச் சேர்ந்த ஆசுவாசம்  இருந்தது. இதுக்கு மேலயும் கிடந்தது படுத்த படுக்கையாக உத்தரிப்பதில் இருந்து விட்டு விடுதலையான களை வெளிறிய முகத்தில்  தெரிந்தது.   மாமியின் வலது மூக்கில்  போட்டிருந்த வைரமூக்குத்தி  அவா உசிரோடு  இருந்த காலத்தில்  அதிகம் கவனிப்புப் பெறவில்லை . அது   இப்பதான் அடிவானில் எழும்  பிரகாச வடதுருவ  விடிவெள்ளி போல  ஜொலிப்பது போலிருந்தது .

                                        எங்கள்  ஊரில்  செத்த வீடு என்றால் பலவிதமான கதவழிகளில் பிரிந்து இருப்பவர்களும் ஒன்றாகி விடுவார்கள் .  பக்கத்து வீடு அயல்லட்டையில்  உள்ள சில நடுத்தர வயதுப் பெண்கள் ஹோலில் இருந்தார்கள். புண்ணியக் குஞ்சி  வெளிய ஈரப்பிலாக்கை மரத்துக்குக்  கீழே  சுருடுக் குடிச்சுக்கொண்டு இருந்தார். அவருக்கு முன்னால  நிலத்தில  சிங்கி மாஸ்டர் வெத்திலை   பொட்டுக்கொண்டிருந்தார். நான்  பெட்டிசம் பாலசிங்கமும்  நிக்கிறாரா  என்று தேடினேன், பெட்டிசம்  சிலமன் அதுக்குள்ளே  இல்லை . 

                                                   பெரிய மாமா வெளி விறாந்தையில்  கையைப்  பிசைந்துகொண்டு இருந்தார். சிவாயி கணேசன்  பழைய படங்களில்  சில நேரம் அழுவது  சிரிப்பது போலிருக்குமே  அதேபோல   அவர் அழுகிறாரா  அல்லது  சிரிக்கிறார , அல்லது  சிரிக்க  நினைத்து அழுகிறார, அல்லது  புரியமுடியாத ஒரு மோனோலிசா முகமா  என்று சொல்லமுடியாத ஒரு அஷ்டகோணத்தில் முகத்தை வைச்சுக்கொண்டு இருந்தார். ஆனால் அவர் முகத்தில் ஒரு  பேச்சுக்குத்தன்னும்  சோகம் அவளவாக இல்லை. 

                                    கொஞ்சம்  பொறு வாறன்   உ ன்னோட கதைக்க நிறைய விசியம் இருக்கு என்பதுபோல   என்னைப் பார்த்தார். அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும் என்பதுபோல  அவரைப்  பார்த்தேன் .  ஒன்று மட்டும்தெ ரிந்தது   அவர் செத்தவீடு ஒரு எழுப்பம் எழுப்பிச் செய்யப்போறார்  என்று  பிளான் போடுறார் போல இருக்கு என்று நினைச்சேன். நினைச்சேன் என்ன அதுதான் நடந்தது. அதுக்குத்தான் பிளான் போட்டுக்கொண்டிருந்தார் 

                                          நான்  பெரிய ராசன் அண்ணை  எப்படி  இப்ப இருக்கிறார் என்று பதினைந்து  வருடங்களின்  முன்  பார்த்த அவரைத் தேடினேன். ஜெர்மனியில்  இருந்து வந்திருக்கிறார், வெளிநாட்டு வெள்ளைக்காரன் போல நடை உடை பாவனை வெள்ளையாக  மாறி இருக்கும் என்று நினைச்சேன் .அவரோ வன்னியில உடையார்கட்டில   காடு வெட்டி  மிளகாய்த் தோட்டம் செய்துப்போட்டு வந்தவர் மாதிரி எந்த மாற்றமுமே இல்லாமல்  எங்கள் உள்ளூர் வாசிகள் போலவே இருந்தார் .

                                        இந்தக்  கதையின்  காப்பியாநாயகி பித்தளைக்குடம் என்ன செய்யுறா  என்று பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்ததால் அவாவைத் தேடினேன்.  பித்தளைக் குடம் எங்கே என்று அங்கே  யாரையும்  உத்தியோகபூர்வமாகக்   கேட்க முடியாது. ஏனென்றால் அநதப் பெண்மணி எப்படி அந்த வீட்டுக்குளே வந்து  உரிமையோடு சாவிக் கொத்தைக் கையில எடுத்தா, அல்லது பெரியமாமா எடுக்க இடம் கொடுத்தார் என்பது இரகசியமான ஒரு கதை. எனக்குதான் அது தெரியும். அதைதானே முதலாம் பாகத்தில் எழுதினேன். 

                                            பெரியமாமா  அவரோட  பெரிய குசினியின்  பின் பக்கத்தை அஸ்வேட்டஸ்  தகரக்  கூரை  போட்டு பின் பக்கமாக பத்திபோல இறக்கி வைத்து இருந்தார். சீமெந்து நிலம் இழுத்த அந்த இடத்தில்தான் கல்  உரல் வைச்சு மா இடிகிறது. இழுவை  அம்மியில் சம்பல் அரைக்கிறது. தோசைக்கு ஆட்டுக்கல்லில் உழுந்து ஆட்டுவது . தட்டு முட்டு சமையல் பாத்திரங்கள் அடுக்கி வைப்பது இதுக்குதான் அந்த இடம் பயன்பட்டுக்கொண்டிருந்தது. 

                                           பித்தளைக் குடம் கல் உரலைப்  பாட்டில விழுத்திப்போட்டு  அதில தனியக்  குந்தி இருந்தா. வாய் நிறைய வெற்றிலை போட்டிருந்தா. கொஞ்சம் இளைச்சுப் போனமாதிரி இருந்தது. மன உளைச்சல் நெற்றியில நிறைய சுருக்கம் விழுத்திக் கொண்டிருந்தது .  என்னைக் கண்டதும் வாய்விட்டுக் கதைக்க நிறைய விசியம் இருக்கிற மாதிரி கதைக்க ஆசைப்பட்ட, எனக்கும் வாயைக் கிண்டி கதை புடுங்கத்தான் விருப்பமா இருந்தது. அதுக்கு அந்த தனிமையான இடம்  

                                        " எங்க  ஓடி  ஒளிஞ்சு  போட்டீர், உம்மட கொண்ணை வந்ததை பார்க்க வருவீர் எண்டு  நினைச்சேன் ,,இப்ப பாடை தூக்க வந்து நிக்கிறீர் "

                              "   ஹ்ம்ம்,,, வேற  சோலி  சுரட்டு  அதில  ஓடுப்பட்டுத்    திரிஞ்சேன் "

                                    "   சும்மா அவிக்காதையும்,  இங்க வந்தா அவுகளுக்கும்  இவகளுக்கும் அப்பன்  சொத்தில  சண்டை நடக்கும்  எண்டு போல இங்கால வரேல்லப்போல "

                                 "   அப்படி  இல்லை,,என்ன  சண்டை "

                               "    என்ன சண்டையோ ,,ஹ்ம்ம்,,உம்மட  மாமா சரியான சருகுப்பு புலி போல சாமர்த்தியமான   புத்திசாலி "

                                   "   அதெண்டா உண்மைதான்  என்ன  செய்தார்  சொல்லுங்கோ "

                                "   உம்மட கொன்னார் வந்த கையோடு  என்னை இங்காலே  தள்ளி,,சமையல்காரி என்று சொல்லி, ஒரு மாதிரி  பூசி மழுப்பி  அலுவலைப் பார்த்திட்டார் "

                                  "   நீங்க  சமையல்காரி,,சமையல்  வேலைக்குதானே  இங்கே கொண்டு வந்ததா  எனக்கும்  சொன்னாரே "

                                     "     அடி  செருப்பால,,வாற  ஆத்திரத்துக்கு உலக்கையால  இப்ப நடு வீட்டில  வைச்சு  சாத்துவன் உம்மட பெரிய மாமாவுக்கு "

                               " ஹ்ம்ம்,,எனக்கு  ஒன்றுமே  புரியவில்லை "

                        "  எடுபிடி தொட்டாட்டு வேலைக்கு வந்தவள் எண்டு சொல்லிப்போடுதே  இந்த மனுஷன்,,எனக்கு  இரவு முழுக்க  அழுகையா வந்தது "

                         "    ஹ்ம்ம்,,,அவர்  அப்படிதானே "

                      "  எடுபட்டு  வந்த  சமயல்காரியாம்..அதுவும்  நான்  அவருக்கு "

                              " நீங்க  முழுவதும்  சொல்லுங்க,,இப்பிடி  கழுவுற மீனில  நழுவுற மீன்  மாதிரி  கதையளை   சொன்னா  என்னக்கு  என்ன  விளங்கும்  "  

                                 "  அடிடா  சக்கை  எண்டானாம்,கழுவுற மீனில  நழுவுற மீன்  மாதிரி  ,,,அய்யோ  மாமாங்கப் பிள்ளையாரே பாரு  இந்தக்  கதையை  ,  "   

                              "  ஹ்ம்ம்,,இப்ப  என்னத்துக்கு  கோவிகுரிங்க..அதுவும்  உள்ளே பிரேதம் விழுந்து கிடக்குது  இல்லையோ "

                             "   ஓம்,,அதுதான்  பேசாமல் அடக்கிக்கொண்டு  இருக்கிறேன் "

                            "  மாமா  என்ன   சொன்னார் "

                                 "  நடிக்கட்டாம்,,கொஞ்சநாள்  நடிக்கட்டாம்,,உம்மட கொண்னர்  திரும்பி வெளிநாடு  போகும்வரை  சமையல்காரி  போல  நடிக்கட்டாம் ,,எப்படி  இருக்கு  கதை  பார்த்தீரோ "

                              "  ஹ்ம்ம்ம்,,,இதென்ன  நாடகம்  ,,,இதென்ன  நடிப்பு  என்று  ஒன்றுமே விளங்குதில்லை "

                              "   அதுதான்  எனக்கும்  மட்டுப்பிடிக்க முடியவில்லை,,,இந்த வடமோடித்  தென்மோடிக்  கூத்துக்குள்ள  உம்மட  மாமி வேற செத்துப்போன "

                              "  மாமி  தப்பமாட்டா  என்று  தெரியும்  எனக்கு "

                            "  பார்ப்பமன்  இனி  உம்மட  மாமா  என்ன  செய்யுறார்  எண்டு,,இனியும் கரட்டி  ஓணான்  வெருட்டின  மாதிரிக்   குரளி வித்தை காட்டினால் ,,நான் விடமாட்டேன்,,நான்  ஆர்  எண்டு  காடுவேன்..நானும்  ரோசம் மாணம்  உள்ள  அப்பன்  ஆத்தைக்குத்தான்  பிறந்தனான் "

                        "  அய்யோ  சாமி,,முதல்  செத்த வீடு முடியட்டும்,,கொஞ்சம்  பொறுமையா  இருங்கோ ,,"

                           "  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்   அதுதான்  நானும்  விட்டுப் பிடிச்சுக்கொண்டிருக்கேறேன் ,,இல்லாட்டி வந்த  அண்டைக்கு  கொன்னருக்கு என்னை வீட்டு வேலைக்கு வந்த சமையல்காரி  என்று சொல்லிவைச்ச நேரமே  சண்டையைக்  கெம்பி எடுத்திருப்பேன் "

                               "  ஹ்ம்ம் ,,பொறுங்கோ  நான்  பெரிய மாமா என்னவோ  செய்ய வேணும் எண்டு சொன்னார்,,பிறகு  கதைகுறேன்  உங்களோடு "

                     "  ஹ்ம்ம்,,,என்னோட கதைச்சுப்போட்டு  அங்கலா போய் மருகா மருகா  பிரட்டிப்  பேசுறேள்ள  ,,சரி  தானே ,,பிறகு  எனக்கு  விசர்  வரும் "

                                     "    அதொண்டும் நடக்காது,,சும்மா  இருங்கோ "

                             "  அதையும்  தான் நான் இனிப்   பார்க்கப் போறனே,,இனியும்  உம்மட மாமாவின் இந்த சீனடி சிலம்படி விளையாட்டு  என்னட்ட எடுபடாது ,,தெரியுமா "

                                 "  என்னவோ  நடத்துங்கோ,,ஆனால் ஒரு கேள்வி கேட்கிறேன்  அதுக்கு  பதில்  சொல்ல முடியுமா "

                                " கேளுமேன்,,நீர்  ஒருவர் தானே  என்னட்ட கேள்வி கேட்கிறதும்,,நான் அதுக்குப்  பதில்  சொல்லுறதும்  நடக்குது,,இங்க வேற யாருக்கும் ஒளிச்சு மறைச்சு நடக்கிறது  ஒண்டுமே தெரியாதே  "

                            "    ஹ்ம்ம்,,கடைசியா  நான்  வந்திட்டுப் போன நாள் மாமி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தா,,பிறகு  யாரோடும் கதைச்சாவோ "

                           "     இல்லை,,அந்தக்  கோலம்தான் "

                            "     பெரிய ராசன்  அண்ணையோடு  கதைச்சாவோ "

                         "    இல்லை,,அவா  யாரோடும்  கதைக்கவில்லை,,அப்படியே  நாடி  விழுந்த மாதிரி  சீவன்  போட்டுது "

                        "    உண்மையாகவே  சொல்லுரிங்க    பெரிய ராசன்  அண்ணையோடு கதைக்கவில்லை  என்றோ "

                          "   உண்மையாதான் சொல்லுறேன்,  கதைச்சு  இருந்தா  கட்டாயம்  பிரசினை  எல்லோ  வந்து இருக்கும்  எனக்கு " 

                          "  ஹ்ம்ம்,,,அதுதான் கேட்டனான் "

                        "  பாத்தீரே  உமக்கும்  உம்மட மாமாபோல  மண்டைக்குள்ளே நல்ல திரிக்கிஸ் புத்தி ஓடுது,,"

                        "   இல்லை,,வந்து  வந்து ....  அப்படி  இல்லை,,ஒரு  தகவலுக்குக்  கேட்டேன் "

                       "   என்ன  வந்து  வந்து..     சும்மா இழுக்காதையும்     என்ன  இருந்தாலும்  சொந்த பந்த ரத்தம்  எல்லோ,,நான்  எப்படியும் அகத்தி  ஆயிரம் காய்  காய்த்த   பிறத்தி தானே "

                                "  சரி இப்ப இதை விடுங்கோ,,பிறகு  கதைக்குறேன் "


                               ஓரளவுக்கு நடந்த விசியங்கள் நசுக்கிடாமல்தான்  நடந்து இருக்கு, பெரிய மாமி வாயைத்திறந்து ஏதாவது பெரிய ராசன் அண்ணைக்கு  சொல்லி இருந்தால். நிட்சயம் வீட்டுக்குளே பிரகண்டம் வெடிச்சு இருக்கும் . அதன்  முடிவுகள் நல்லதாக இருந்தே இருக்காது . தலைக்கு வந்தது தலைப்பாகையைத்  தடவிக்கொண்டு போன மாதிரி இருந்தது நிலைமை. ஆனால் பெரிய மாமா ஒன்றுமே நடக்காத மாதிரித்தான்  எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி   போல பவுசாக  நடு  வீட்டில  நின்றார் .

                                           எங்கள்  ஊரில கலியான வீடுகள் நடை பாவாடை  விரிச்சு கொட்டில வெடிமருந்து அடைச்சு   வானவேடிக்கை  காட்டி  எழுப்பமாகச் செய்வார்கள். கோவில் திருவிழாவில ஏட்டிக்குப்  போட்டியா எம் கே பத்மநாதன்  ஏறுபடி மேளம் பிடிச்சு பந்தா  காட்டுவார்கள், சிலர் சாமத்திய வீட்டையே  கலியான வீடுபோல அமர்க்களப்படுத்துவார்கள். பெரியமாமா இந்த செத்த வீட்டை அப்படி  எழுப்பமாக செய்ய நினைத்தார், அதுக்குக் கையில காசும் ஜெர்மனில் இருந்து வந்த ராசன் அண்ணையிடம் இருந்தது ,

                                          என்னைக்  கூப்பிட்டு , யுத்த முனையில்  நிக்கும் ராணுவத் தளபதி போல எனக்குப்  பிளான் A  போல  கட்டளைகள் சொன்னார், அவரோட ஜெர்மனியில்   இருந்து   வந்து  நின்ற   மூத்த மகனுக்கு நாட்டு வளப்பம் நடைமுறைகள் தெரியாது என்பதும் உண்மைதான்  , பெரிய மாமாவுக்கு என்னில எப்பவும்  நிறைய நம்பிக்கை. ஆனால்  நானும் இந்த  செத்த வீடு முடிஞ்ச கையோடு அவரிடம்  இருந்து  கொஞ்சம் காசு ரொக்கமா உருவி எடுக்கிற பிளான் B போட்டு  வைச்சு இருந்தேன்  .

                                             " அங்காலே இங்காலே போகாதே என்னோட கையுக்க நில்லு,,என்ன  நான் சொல்லுறது விளங்குதே "

                                "  ஓம்,ஓம்  மாமா "

                              "நாளைக்கு  பிரேதம் எடுக்க வேணும் ,கிருத்திகை ஐயர் யார் சொல்லு பார்ப்பம்  கொண்டுவர பிளான் போட்டு இருக்றேன்  தெரியுமா "

                         "  எங்கட  வீராளி  அம்மன்  கோவில் ஈஸ்வர ஐயர்  நல்லா  செய்யுறாரே  மாமா "

                           "  என்ன,  காதைப்  பொத்தி  அறைஞ்சன்  எண்டா ,அவன்  ஒரு  மடையன்,,மந்திரம்  சொல்லத்  தெரியாத  அவன்  முதல்  சைவக் குருக்களே  "

                            "   அது  எனக்குத்  தெரியாது  மாமா "

                                " அவன் மடப்பள்ளியில்   மண்டகப்படி சமைக்கிற  கழுதை  எல்லோ  ,,அவனை வைச்சு  மரணக் கிரிகை  செய்தா  சனம்  என்னை  முதல்  மதிக்குமே,,அதை  சொல்லு "    

                                 "  அப்ப  யாரைக் கொண்டுவரப் போறீங்க "

                         " கரணவாய்  திருஞானசம்பந்தக் குருக்கல் ,,அவர் தான் வரவேணும்,,அதுதான்  என்னக்குப்  பெருமை "

                            "     மாமோய்,,காரணவாய்க்க்குப்  போய்  அவரை  யார்  இந்த சண்டை அடிப்பாட்டு நேரம் கூட்டிக்கொண்டு வாறது  மாமோய் "

                                   "   நீ இப்ப கையோட  போய்  பொன்னுத்துரையனைக்  கூட்டிக்கொண்டு வா "

                              "   மாமோய்..துரை  அண்ணை  வல்லைவெளிக்கு நடுவால  டாக்ஸ்சி ஓட மாட்டார்  மாமோய்..அந்தாள்  ஹெலி  அடிச்சா  ரோட்டுக்கே  இறங்க  மாட்டார் "

                            "    உனக்கு  இப்ப  விளக்கம்  சொல்லிக் கேட்டனா,,இப்ப  நீ  போறாய்  போய்க்  கையோடு  பொன்னுத்துரையனைக் கொண்டு வாராய்,,அவன்  ஓடமாட்டன்  என்டால்  பிறகு  பொன்னுத்துரையனின்ட  மொரிஸ் மைனர் கார்  ஊருக்குள்ள  ஓடாது.  சொல்லிப்போட்டேன் ,,கொளுத்திப் போடுவேன் "

                               " சரி  மாமோய்  நான்  போய்  முதல்  துரை  அண்ணையைக்  கொண்டுவாரன் "

                        " அதுதான்  ..கண்டியோ..நான்  சொல்லுறன்,,நீ  வாயைப்பொத்திக்கொண்டு  செய்யுறாய்,,இப்பவே  போ ,,"

                                   "  சரி  மாமோய்  நான்  போய்  முதல்  துரை  அண்ணையைக் கதைச்சுப்  பேசிக்  கொண்டுவாரன்,,மாமோய் ஒரு  நல்ல பனசொனிக்  ரேடியோ ஒண்டு நல்ல விலைக்கு வந்திருக்கு  "

                             " டேய்  எரியிற  வீட்டில  கொள்ளிக்கட்டை  எடுத்து சுருட்டுப்  பத்த வைச்ச  மாதிரி  கேட்கிறாய், நடு  வீட்டில  எண்ட பொஞ்சாதி செத்துப்போய்க் கிடக்கிறாள்  "

                                " இல்லை  மாமோய்  இப்ப அதை  விட்டா  பிறகு  வேண்ட ஏலாது,,பிறகு  நீங்க  என்னை  மறந்து போவிங்க மாமோய்  "

                                  "  ஏன்  உன்ர   வீட்டில ஒரு  ட்ரான்ஸ்சிஸ்டர்  ரேடியோ இருக்குதானே  அதுக்கு  என்ன  கொள்ளையே அல்லது  கோதாரியே "

                                      "  அதில யார் பாடினாலும் கண்டசாலா பாடுற மாதிரி அவிஞ்சு அவிஞ்சு  சவுண்ட் வருகுது, செக்குமாடு  இழுத்த  மாதிரி   சக்கடையாப் போச்சு அந்த ரேடியோ  மாமோய்  "

                                        "நீயும்  செத்த  வீட்டில  நிண்டுகொண்டு  அரியண்டம்  தாராயே ,  சரி  விடு  ,,நான்  வேண்டக்  காசு  தாரன்  ஆற்ர  வீட்டில  இருக்கு "

                              "   மசுக்குட்டி மாமி  விக்கப்போறாவாம் "

                               "  அந்த  அறுதலி  இன்னும்  உசிரோடு  இருக்கிறாளே,,,சரி  நான்  காசு தாரன்..முதல்  இந்த  அலுவலை முடி,, பொன்னுத்துரையனை  முதல் கையோடு  பிடிச்சுக்கொண்டு  வா "

                                 "  அது  நான்  வெண்டு தாரன்  மாமோய் "

                                               ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு  எண்டது போல  எங்கள் ஊரில ஓடிக்கொண்டு  இருந்த ஒரே ஒரு டாக்சி துரை  அண்ணையின் மொரிஸ் மைனர் கார். மடத்துவெளி ஆமை போல  இருக்கும்   அந்த சின்னக் காரின் மேல் மண்டையில் மஞ்சள் கலர் பெயின்ட் அடிச்சு துரை  அண்ணை  அதை ஓடிக்கொண்டு இருந்தார். ஆனால் அதிகம்  தூரம்  போக மாட்டார். ஹெலிகாப்டர்  சத்தம் கேட்டால் அவருக்கு உடம்பு உதறும் .

                                                 துரை  அண்ணை  சின்ன  உருவம்  உள்ளவர். முன் டிரைவின் சீட்ல  இருந்து ஓடினார்  என்றால் அவர்  இருகிறதே தெரியாது. ஸ்ட்ரிங் வீல் மட்டும் அசையிறது தெரியும்.  உடம்புக்கு  நோய் வந்து ஏலாமல்  அரக்கப் பரக்க அவசரத்துக்கு நடுச்சாமம் பெரியாஸ்பத்திரிக்குப்  போறவர்கள் தான்  அவரைப் பிடிப்பார்கள். அவர் ராசியான ஒரு டாக்சி டிரைவர். அவரோட டாக்சியில்  பெரியாஸ்பத்திரிக்குப்  போன  ஒருவருமே  திரும்பி  உசிரோடு வந்ததில்லை  அப்படியான  ஒரு  கைராசியான  டாக்சி டிரைவர் .

                                    
                               துரை  அண்ணையைக்  கையோடு  கொண்டுவந்தேன். அவர் தலைச் சொறிஞ்சு  சொரிஞ்சு 

                                          " ஹெலி அடி  பொம்பர் அடி அகோரமாய் இருக்கு ஆனையிறவு பக்கம் சண்டை வேற நடக்குது   வல்லை வெளி தாண்டி காரணவாய்க்கு  ஓட மாட்டேன்  " 

                                           என்றார், பெரிய  மாமாவுக்கு  ஓர்மம் வந்து 

                            "டேய்   நாளைக்கு  காலை நீ   கரணவாய் போறாய்  பொன்னுத்துரை ,,இல்லாட்டி  டாக்சியை  சந்தியில்  வைச்சுக்  கொளுத்துவேன்  தெரியுமா,,என்னை  ஆர்  எண்டு  நினைச்சுக்கொண்டு  இருக்கிறாய் "

                         என்றார்  ,,புண்ணியக்  குஞ்சி எழும்பி வந்து 

                        "  டேய்..துரையன் ,,வெள்ளைக் கொடி  கட்டிக்கொண்டு  ஓடு  ஒண்டும் வராது அச்சுவேலியில்  வைச்சு அமத்தினி  என்றால்  அங்காலே கட்டைவேலி வரைக்கும்  இழுத்து ஓடு  சும்மா கூழுக்கு மாங்காய் கொண்டாட்டமாம்  குரங்குத் தேங்காய் கொண்டாட்டமாம்  போல  விழல் கதை  கதைக்காதே ,,அலுவலைப்பார்  "

                          என்றார்,,,சிங்கி மாஸ்டர் வந்த 

                     "  துரை  நீ ஜோசிக்காதை நானும்  வாறன்,,முன் சீட்டில நான்  இருக்கிறன்,, ஹெலியும் புலியும் ..ஒண்டும்  வராது  வந்தா  நான்  திருப்பி அடிப்பன் ,,சாகப்  பயப்பிடுறாய்  நீ சாகத்தான்  பிறந்தாய்  அது தெரியுமோ  உனக்கு "

                     என்ற பிறகுதான் துரை  அண்ணை  ஓரளவுக்கு நம்ம்பிக்கை வந்தது " ஓம் நாளைக்கு   ஓடுறன் " என்றார் . அன்று  முழுவதும்  துரை  அண்ணையின் டாக்சியில்  சவப் பெட்டி எடுத்து, ஆறு கேஸ்  யானைச் சோடா,சவக் கிருத்தியத்துக்கு சாமான் சக்கட்டு,வாடகைக்  கதிரை  எல்லாம்  நான் தான் இழுத்துப் பறித்தேன் , பெரிய மாமா  ஓர்மம் வந்த சிங்கம் போல அங்கேயும் இங்கேயும் எனக்கும் மற்றவர்களுக்கும் ஓடர் போட்டுக்கொண்டு இருந்தார். அவர் மனைவியை ஏறக்குறைய நடு வீட்டில் மறந்தே போய் விட்டார் போல இருந்தது .

                                                       அடுத்த  நாள் பகல் பன்னிரண்டு  மணிக்கு  திருஞானசம்பந்தர் குருக்கள் கரணவாயில் இருந்து   வந்திட்டார். துரை அண்ணை அவரைக் கொண்டுவந்து இறக்கிப்போட்டு   கரணம் தப்பிய மரணம் என்று அதோடு எஸ்கேப்  ஆகிப் போட்டார். பெரிய மாமா சொன்ன மாதிரி  ரெண்டு செட் பாட்டுக்காரர் பிடிச்சுகொண்டு வந்து கொடுத்திருந்தேன் , தேவாரம் திருவாசகம் என்று அவர்கள் பி எச் அப்துல் ஹமித்தின்  பாட்டுக்குப் பாட்டுப் போல ஒரு கோஸ்டி  விட்ட இடத்தில இருந்து மற்றக்  கோஸ்டி பின் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள் 

                                                சாவு மேளம் அடிக்க ஒரு கோஸ்டி பிடிச்சுக்கொண்டு வந்து கொடுத்தேன் அவர்கள் பழைய பிஞ்சு போன ஓலைப்பாயை நெல்லி மரத்துக்குக் கீழே போட்டு அதில இருந்து முழக்கிக்கொண்டிருந்தார்கள்  ,பெரிய மாமா சொன்ன படியே ரெண்டாம் குறுக்குத்தெருவில் இருந்து  றேமன்ஸ்  கேர்க்ஸ்  பிரேத வண்டி சொல்லி வரச் சொன்னேன் .அவர்கள் வந்து இருந்தார்கள்.அது காணாது எண்டு சண்டிகைப்  பாடை  கட்டும் கோஷ்டிக்கு சொல்ல சொன்னார் .சொல்லி இருந்தேன்  அவர்களும் வந்து  நாக்கில  அமரிக்கன் மாவை  ஒட்டி ஒட்டி சோடனை செய்து கொண்டிருந்தார்கள் .

                            இவளவு அமளிதுமளியிலும் பெரிய ராசன்  அண்ணை  அமைதியாக இருந்தார். அவரின் அம்மாவுக்குத் தலைப்பிள்ளையாக  கொள்ளிக் குடம் உடைசுக் கொள்ளி வைக்கும் சந்தர்பம் அவர் வெளிநாட்டில் இருந்து வந்து நிக்கும் போதே கிடைத்தது ஒருவிதத்தில் திருப்தியாக இருந்து இருக்கலாம்,எப்பவும் அமைதியாக இருந்தார் .ஜெர்மனியில் வெள்ளைக்காரர் இப்பிடித்தான் மரண வீடுகளில் அமைதியா இருப்பார்களோ ,அந்தப் பழக்கம் அவருக்கும் வந்திட்டுதோ என்று நினைச்சேன் 
                                               
                                 செத்த வீட்டுக்கு  என்னோட  அம்மாவும்  வந்திட்டா. அம்மாவுக்குப்  பெரிய மாமாவில் பாசம்  அதிகம், அவர்தான் என் அம்மா கலியாணம் கட்டின நேரம் கன்னிக்கால் முள் முருக்கு நட்டத்தில்  இருந்து  பொன் உருக்கி தாலிக்கொடி செய்தது முதல் கலியாண மணவறை வரை நிண்டு நெஞ்சை நிமிர்த்தி உரிமையோடு எல்லாம் செய்தார் என்று சொல்லுவா . அம்மா   பெரிய  மாமாவோடு முன்  விறாந்தையில்  கொஞ்சநேரம்  கதைச்சுக்கொண்டிருந்தா , பிறகு  வந்து  ஹோலில்  ஒரு மூலையில் குந்தி இருந்தா . அதில இருந்துகொண்டு  என்னைக்  கூப்பிட்டு 

                                " அண்ணை  பாவம்,,கை  உடைஞ்சு போன மாதிரி  தனிச்சுப்  போட்டார்,,நீ தாண்டா  அவருக்கு  இனி  உதவியா  இருக்க வேணும் "

                         "  சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை,,மாமா தனியா  ஒன்றும்  இல்லை "

                            "  என்னடா  சொல்லுறாய் ,,  அண்ணைக்கு  இனி  ஆறுதலா  யார்  இருக்கினம்  சொல்லு  பார்ப்பம் "
                      
                         " சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை,,மாமாவுக்கு  ஆறுதலுக்கு  ஏற்கனவே  ஆட்கள்  இருக்கினம் "

                           "    என்னடா  சொல்லுறாய் "

                           "   விசர்க்  கதை கதைக்காதையனை,,உனக்கு  சொன்னா  விளங்காது "

                                "      என்னடா  விசர்க்கதை  நான்  சொல்லுறன்,,நீ  என்ன  சொல்லுறாய் "

                                     "   அம்மா,,உங்களுக்கு  ஒரு  மண்ணும்  தெரியாது,,சும்மா  இருங்க,,வாயைப்பொத்திக்கொண்டு "

                                 "  என்னடா  சொல்லுறாய் "

                               " ஹ்ம்ம்,,,நான்  என்ன  சொல்ல  எல்லாம்  அப்படி  அப்படி  நடக்குது "

                                நானும்  அம்மாவும்  ஹோலில்  நிலத்தில  பெரிய மாமியின்  பிரேதப் பெட்டிக்கு  கொஞ்சம் தள்ளி இருந்து கதைக்கிறதை பித்தளைக் குடம் பார்த்தா. அவாவுக்கு  என்னோட அம்மாவைத்  தெரியாது. ஆனால் நானும் அம்மாவும் பிடுங்குப் படுறதைப்  பார்த்திட்டு  குடுமிப் பிடி சண்டையில குத்தரிசி  குத்தலாம்  என்று  நினைச்சு நைசா வந்து என்னோட அம்மாவுக்குப் பக்கத்தில இருந்திட்டா , என்னோட அம்மாவே கதையத் தொடக்கினா,  என்  அம்மாவுக்கு  இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே என்று  ஆரும்  வந்து  மாட்டினா  கதைச்சுக்கொண்டே  இருப்பா 

                               "    இஞ்ச பாருங்கோ  நான் பெத்த பெடி  எனக்கு  ஒண்டும் தெரியாதாம்  என்று  திட்டுது "

                                     "  ஒ..அப்படியே சங்கதி,,உங்கட  மகனோ "

                              "  ஓம்  பாருங்கோ. எண்ட மூன்றாவது  பெடி  இது...என்னைத்  திட்டுறான்  எனக்கு ஒண்டும்  தெரியாதாம் "

                            "   அப்படியே,,,என்ன  தெரியாது  உங்களுக்கு "

                          "   இல்லைப்  பாருங்கோ ,,  அண்ணை  பாவம்,,கை  உடைஞ்சு போன மாதிரி  தனிச்சுப்  போட்டார்,,நீ தாண்டா  அவருக்கு  இனி  உதவியா  இருக்க வேணும்  எண்டு   சொல்ல  இவன்  என்னவோ விண்ணாணம் கதைக்கிறான்  "

                                  " அதுக்கு  உங்கட தர்மபுத்திரன்  என்ன  சொல்லுறார் "

                       "   சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை,,மாமா தனியா  ஒன்றும்  இல்லை ,,மாமா தனியா  ஒன்றும்  இல்லை  எண்டுறான் "

                                "   அப்பிடியே,,"

                   "   பெரிய  ராசன்  இனி  ஜெர்மனி  போயிடுவான்  பாருங்கோ,,அண்ணை  எல்லோ  தனிச்சுப் போட்டார் "

                             "    ஹ்ம்ம் ,,அப்பிடியே "

                       "  ஓம்  பாருங்கோ,,அண்ணை ராசாத்தியை அவள்  விருப்பத்துக்குக்  கட்டிக்கொடுக்காமல்  பிரசனை  எடுத்து  அவளும்  இனி  அப்பா  வேண்டாம்  எண்டு  எல்லோ  போட்டாள் "

                         " அப்பிடியே,,இவருக்கு  ஒரு  மகளும்  இருகிறாவோ "

                       "   ஓம்  பாருங்கோ,,நீங்கள்  இங்க  சமையல் வேலைக்கு  வந்ததால்  உதுகள்  தெரியாது "

                           "   ஹ்ம்ம்        எல்லாம்  என்  விதி "

                         "  மற்ற  மகன்  சின்ன  ராசன்  பிரான்சில  அவன்  தகப்பனோடு  தொடசல்  இல்லை,,அங்கினய  யாரோ  ஒரு வெள்ளைக்காரியைக்  சம்பந்தம்  முடிச்சதால்,,அண்ணை  அவனையும்  கை  கழுவிப்  போட்டார் "

                             "   அப்பிடியே,,எனக்கு  இதுகள் இண்டைக்குத்தான்  தெரியும்,,,ஹ்ம்ம்,,அதுவும்  என்  விதி "

                                     "   அப்ப ,,பாருங்கோ  வீட்டு வேலைக்கு வாற  எல்லாருக்கும்  அண்ணை  ஏன்  குடும்ப புராணம் சொல்ல வேணும்  இல்லையோ "

                               "  ஓம்,,ஓம்,,நான்  பிறத்தி ஆள்  தானே "

                        "  இல்லைப்  பாருங்கோ ,   அண்ணை  எவளவு  மரியாதையான  ஆள்..அவர்  ம்  எண்டா  நாங்கள் அங்கால இங்கால அசைய மாட்டம்  அவளவு பண்பாடு  பழக்க வழக்கம் "

                                 "   அட அட அட அட அப்பிடியே "

                                 "    அப்பிடித்தான்  பாருங்கோ...உங்களுக்கு  குசினியில் அவிச்சுக் கொட்டி  சட்டி பானை கழுவுற  சமையல்  வேலைதானே,  அதால அண்ணை  ஏன்  குடும்ப விபரம்  எல்லாம்  சொல்லப்போறார்  உங்களுக்கு,,,இல்லையோ "

                                "  அதெண்டா  உண்மைதான்,,உங்கட  மகன்  என்னத்துக்கு  உங்களோடு சண்டை  பிடிக்கிறார்  இங்கே "

                     "   ஓம்  பாருங்கோ  அப்பிடிதான்  இவனைப்  பீ அள்ளி  மூத்திரம்  அள்ளி வளர்த்துவிட  இப்ப  இளந்தாரி தலை எடுப்பில  சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை எண்டுறான் "

                                     அம்மா  இதைச்  சொல்லிப்போட்டு  சேலைத் தலைப்பை  எடுத்து  மூக்கு  சீறி சீறி விக்கி விக்கி  அழுதா. அம்மா அப்படி  அடக்க முடியாமல் அழுதது   பெரிய மாமி  செத்ததுக்கு  அழுத  மாதிரி  எனக்குத் தெரியவில்லை , என்னை  நினைச்சு  இந்த  உருப்படாதவனைப்  பெத்துப் போட்டேனே  என்று  நினைச்சு  அழுத மாதிரித் தான்  இருந்தது. அதுதான் உண்மையும் என்னோட   அம்மாவை  எனக்குத்  தெரியாதா, சொல்லுங்க  பார்ப்பம்  , பித்தளைக் குடம் என்னவோ யானை குதிரை போலப்   பதினாறு பிள்ளை பெற்று வளர்த்த மாதிரி ,

                           "  இளந்தாரிப்  பிள்ளையள்  இப்பிடித் தானே   சொல்வழி கேட்காமல்  தெறிக்கும்கள் " என்றா ,

                                   "  அண்ணை  பாவம்,  அண்ணி  மகராசி  பூவும் பொட்டும்  வைச்சுக்கொண்டே  போட்டா , அண்ணைக்கு  வலது  கை  உடைஞ்சு போன மாதிரி  தனிச்சுப்  போட்டார்,,நீ தாண்டா  அவருக்கு  இனி  உதவியா  இருக்க வேணும் எண்டுறன் சும்மா  விசர்க்  கதை கதைக்காதையனை,,மாமா தனியா  ஒன்றும்  இல்லை எண்டுறான் "

                           "  மாமா  தனியா  இல்லைதான் "

                           "   என்ன  பாருங்கோ  நீங்க  சொல்லுரிங்க "

                         "   என்னத்தை  சொல்ல ,,,"

                         பித்தளைக் குடம்  என்னோட  அம்மாவோடு கதைக்குக்  கதை  சொல்லிக்கொண்டிருந்தாலும்  முன்னுக்குக் குந்தி   இருந்த  என்னோட முகத்தை விட்டுக் கண்களை அங்காலே இங்காலே எடுக்கவில்லை.   எனக்கு  அவடதிலையே  விழுந்து கிடந்து  நரி பழைய புளிச்ச கள்ளைக்  குடிச்சுப்போட்டு விழுந்து உரண்டு  பிரண்டு  சிரிக்க வேணும்   மாதிரி  சிரிப்பு  வர  அடக்க முடியாமல் எழும்பி வந்து சாவு மேளம் அடிக்கிரவங்களுக்குப் பக்கத்தில  இருந்திட்டேன். 

                                            அவங்கள் "  நயினார் செத்தது நல்லது  நல்லது  நயினார் செத்தது  நல்லது  நல்லது "  என்ற  தாள கதியில் சாவுமேளம் அடிசுக்கொண்டிருந்தாங்கள் . நயினார் செத்து  இருந்தால்  இவளவு குழப்பம்  இலையே  அவர் தான் சாகவில்லையே,அதுதானே  முசுப்பாத்தியா  இருக்கு  என்று அவங்களுக்குச் சொல்ல நினைச்சேன். ஏன் வம்பு என்று பேசாமல் இருந்திட்டேன் .

                                  செத்த வீடு ஒருமாதிரி  பெரிய மாமா நினைச்ச  மாதிரித்தான்  ஆடம்பர டாம்பீகமக நடந்து முடிந்த நாளில் இருந்து நான் அந்த வீட்டுக்குப் போகவில்லை. பெரிய ராசன் நாலாம் நாளே கொழும்புக்குப் போட்டார். எட்டுச் செலவுக்கு போனேன். அதுவும் மாமா வலது கையா நில்லு அன்றைக்கும் எண்டு கேட்டதால் போனேன் . அங்கே அன்றைக்கு பித்தளைக்குடம் இல்லை .

                                         மாமாவே  என்னிடம் வந்து சொன்னார் 

                               "  ஹ்ம்ம்,, என்னத்தை சொல்ல,, வந்ததுகளுக்கும்  வாய் சரி  இல்லை ,,வாய்க்கு  வாய்  கட்டினாள். அடிசுக் கலைச்சுப் போட்டேன். என்னோட சரிக்குச் சரி  வாய்க்  கொழுப்பு எடுத்து கதைக்கிறாள்.முழங்காலை அடிச்சு அனுப்பி இருப்பேன்,,,என்ன  செய்ய கன வருஷமா  தெரியும் அதால வெளிய போகச்சொல்லிபோட்டேன் , இனி  இங்க வரப்பிடாது  எண்டு சொல்லிப்போட்டேன் "

                                                பெரிய மாமா  அவளவுதான் சொன்னார். அதுவே  போதும் போல இருந்தது. பித்தளைக் குடம்  பாவம்,,சிலநேரம்  என்னோட கதைக்க நினைத்து இருக்கலாம் சில பிரசினைகளை. நான் தான் அந்த இடைப்பட்ட நாட்களில் அவர்  வீட்டுக்குப் போகவில்லையே , எப்படியோ  உறவுகள் சிக்கலான ஒரு இடியப்பச் சிக்கல் என்று தெரிந்தாலும் பெரிய மாமா சுயநலம் மிக்கவர். அவர் சிந்தனையில் மனிதாபிமானம் இல்லை என்பது அவரின் அடுத்த பிளானில் தெரியவந்தது 

                                            எங்கள் ஊரில எங்களுக்கும்  பெரிய மாமாவுக்கும் உறவு முறையான திரிபுரசுந்தரி என்று ஒரு பெண் இருந்தா. முனிசிபல் லைபிறேரியில் அசிஸ்டெண்ட் லைபிறேரியன்  ஆக வேலை  செய்தா. நல்ல   அழகானவா .வாய்  திறந்து  பேசவே மாட்டா. ரமணி சந்திரன்  ரொமான்ஸ்  கதைகளில்  வருவதுபோல ஜவ்வனமான  இளமையின் மொழிபெயர்ப்புபோல  இருப்பா.   எப்பவும் கொட்டன்   சீலை  தான்  கட்டுவா, அன்பானவா   எங்களோடு  மிக நெருக்கமாக  சின்ன வயசில் வளர்ந்தவா. அப்பா அம்மாவுக்கு  ஒரே ஒரு செல்லப்பெண் . 


                                                    பெரிய மாமாவுக்கு அவா மருமகள் முறை . அவாவின் கணவர் கண்டி  கொத்தமலை   நீர்த்தேக்க அணைக்கட்டில்  சிவில் எஞ்சினியர் ஆக இருந்தார்.விடுமுறையில்  ஊருக்கு வந்த   ஒருநாள் கரன்  தியேட்டரில்  படம்  பார்த்திட்டு வர கோட்டை  ராணுவம் அடிச்ச சினைப்பரில் அவர் சூடு பட்டு இறந்திட்டார் . அவாவுக்குப் பிள்ளைகள்  இல்லை. வாழ வேண்டிய நடுத்தர வயதில்  விதவை ஆகி  இனிக்  கலியாணமே  வேண்டாம் என்று சொல்லி சாய் பாபா  பஜனை  பாடிக்கொண்டு இருந்தா. 

                                       பெரிய மாமா கொஞ்சநாள் தனியா  இருந்தார், அம்மா சில நாட்கள் போய்  சமைச்சுக் கொடுப்பா . பெரிய  மாமியின் முப்பத்தி ஒன்று  நிகழ்வுக்கு  போய்  இருந்த  என்னிடம் ,

                                      "    சுந்தரி  பாவம்  வாழவேண்டிய வயதில்  இப்பிடி  இருக்கிறாள்,,நீ  ஒருக்கா கொம்மாவை இங்க வரக்காட்ட  முடியமா,,நான்  சொன்னேன்  எண்டு  சொல்லு,,"

                                 "   ஓம்,,அம்மாவிட்ட சொல்லுறேன் "

                                         "    மனோன்மணி  கதைச்சால் , நல்லம்,,நானாப் போய் இதுகள்  கேட்கிறது  நல்லது  இல்லை,,என்ன  சொல்லுறாய் ,,சொல்லு  நாளைக்கு  மன்னோன்மணியை வரக் காட்டுவியா, "

                           "  ஓம்,,ஓம்,,கட்டாயம்  வரக்காட்டுவேன் "

                                    "  சுந்தரி  பாவம்  வாழவேண்டிய வயதில்  இப்பிடி இன்னும்  எவளவு  காலம் தான்  வாழா  வெட்டியா  இருக்கப்  போறாள்,,அவளும்  பாவம் தானே,,அவளுக்கும்  ஆசா  பாசம்  என்று  ஒரு  கனவு  இருக்கும்  தானே,,இல்லையா,,சொல்லு  பார்ப்பம் "

                             " கட்டாயம் இருக்கும் தான்  மாமோய்,  நீங்க ஆதங்கப்பட்டா  அதில ஒரு  அர்த்தம்  இருக்கும்  மாமோய் "

                                  அடுத்தநாள் மனோன்மணி, என்ற  என்   அம்மா அடிச்சுப் பிடிச்சு  அண்ணனுக்கு  உதவப்  போனா, சிவலோகநாதன்  என்ற எங்கள்   பெரிய மாமாவின் பிளான் ஓக்கே   ஆகிவிட்டது, அதுக்குப்  பிறகு  அவர் கொஞ்ச  வருடங்கள் தான் வாழ்ந்தார்.  எப்படி  வாழ்ந்தார் ?, என்ன  செய்தார் ?  என்பது எல்லாத்தையும் விட  அவர்  இறந்த விதம் பற்றிக் கேள்விப்பட்ட போது அந்த செய்தி  இயல்பாக  இருக்கவில்லை.  இப்போதும் அது  கொஞ்சம் நெருடலாகத் தான்  இருக்கிறது . நான் அப்போது சுவீடனில் இருந்தேன் . 
.
 .