Saturday 19 November 2016

என்ன சீவியமடா இது / பாகம் ஒன்று /

நோர்வேயில அந்தரிச்ச நேரம் பக்கத்தில கூடப்பிறந்த சகோதரங்கள் , நெருங்கிய சொந்தக்காரர் ,ரத்தம் கொடுக்க ரத்த உறவுகள் இல்லாட்டியும் இந்த நாட்டு அரசாங்கம் " பஸ்ட்லேக " என்று எல்லாருக்கும் ஒரு குடும்ப டாக்டர் வைச்சு இருக்கிறார்கள். நல்ல காலம் அந்த டாக்டருக்கு எங்கள் குடும்பத்தைப்பற்றி அதில் உள்ள கேவலங்கள் பற்றி ஒன்றுமே தெரியாது.

                                             ஆனால் குடும்பத்தில் இருந்து வரக்கூடிய பரம்பரை நோய்க் கூற்று வியாதிகள் பற்றி நல்லாவே தெரியும் . உடம்பு நல்லாவே இல்லை இன்று அதனால டாக்டரிடம் போகலாம் என்று நினைச்சேன் . ஆனால் அந்த பஸ்ட் லேகைக்கு முதல் காசு கட்ட வேணும் அப்பத்தான் அந்தாள் எனக்கு உயிர் இருக்கோ என்றே முதல்செக் பண்ணுவார்

                                              அதுக்கு காசு கட்ட இல்லாட்டி பிறகு பில் அனுப்பு என்று சொல்லலாம், அதைவிட அந்த டாக்டர் வயதான ஒரு கிழவன். பாட்டி வைத்தியம் போல அட்வைஸ் தான் இருத்திவைத்து சொல்லுவார் . அதுக்கு எதுக்கு காசு கட்டிப் பார்க்க வேண்டும் என்று போட்டு அதால இண்டைக்கு ஓசியில உலை வைக்க முன்னர் சமையல் வேலை செய்த ஹெல்த் செண்டரில் உள்ள நேர்ஸ் இடம் போனேன்.

                                       அந்த இடத்தில ரெண்டு நேர்ஸ் வயதானவர்களுக்கு மருத்துவ உதவிக்கு இருப்பார்கள். ரெண்டு பேருமே வசந்தகாலப் பூக்களுக்குப் போட்டியாக இளமைத் திருவிழா நடத்தும் இந்திரவிழாவில் நாடியம் ஆடும் சுந்தரிகள்.

                            எல்டர் செண்டர் போன நேரம் அவளவு உடம்பு அசதி ஆனால் அவளைப் பார்த்த உடன அரைவாசி அசதி போன இடம் தெரியவில்லை .

                        " என்ன பிரசினை உனக்கு இப்ப " என்று மாரியம்மன் கோவிலில் வேப்பிலை அடிக்கிற மாதிரிக்கேட்டாள் .

                                      " நேற்று காய்ச்சல் அதான் உடம்பு அசதியா இருந்திருக்கும். வேற என்னவும் குண்டக்க மண்டக்க இருக்கா என்று பார்த்து சொல்லுப்பா " என்றேன்

                                 அவள் கிட்ட வந்து ஷகிலா மலையாள பிட் படத்தில உரசுற மாதிரி செமையா நெருங்கி இருந்து கையைப் பிடிச்சு

                               " பிளட்பிரஷர் இருக்கா " என்று கேட்டாள்.

                                  " நிறைய பிரசர் இருக்கு ,பிளட் பிரஷர் இருக்கா என்று தெரியாது நீயே பார்த்து சொல்லுமா,"

                                  என்றேன் , கையில காக்கி துணி சுத்தி பிரஷர் மிசினை வைச்சு,கையில ஒரு சின்னப் பந்துக்கு காத்து அமுக்கி அமுக்கிப் பார்த்தாள், அவள் என் கையைத் தொட்டவுடன எனக்கு 
எனக்கு ஹை பிரஷர் ,லோ பிரசர் , ஹோட் பிரஷர். கொம்பிரசர், எல்லாம் தாறுமாறா கொன்ரோல் இல்லாமல் ஏகிறிட்டுத்து . அந்த பிரஷர் மிசினே பிச்சுக்கொண்டு போகும் போல இருந்திச்சு

                                         பிறகு கழுத்தில கொழுவி இருந்த செத்த ஸ்கோப்ப்பை நெஞ்சில வைச்சு பார்த்து

                                " வித்தியாசமா சத்தம் கேட்குது " என்றாள்

                                   " வித்தியாசமா எப்படி கேட்டுகுது என்று எனக்கும் சொல்லுப்பா " என்று கேட்டேன் ,

                                  " சங்கு ஊதிற சத்தம் கேட்குது " என்று சொன்னாள் ,

                          நான் " சேமக்கலம் அடிக்கிற சத்தமும் கேட்குதா " என்று கேட்டேன்.

                                   " நல்ல காலம் அது கேட்கவில்லை " என்றாள் .

                                 பிறகு இன்னொரு தெலுங்கு சமந்தா போல நேர்ஸ் வந்து அந்த கோப்பையை வைச்சுப் பார்த்தாள். அவள்செம பிகர்,அவள் ஏன் நேர்ஸ் வேலை செய்து வாழ்கையை வீனாக்கிறாள் என்று நினைச்சுக்கொண்டு இருக்க . அவள் கொஞ்சம் சீரியஸ் ஆக என்னோட இதயம் அடிக்கும் சத்தத்தைக் கேட்டுப்போட்டு

                                  " நீ ஸ்ரீலங்கா தமிழா " என்று கேட்டாள்

                                     " ஓம் "

                              " ஏன் காச்சல் அடிக்குது என்று நினைக்கிறாய் "

                              " காஞ்ச மாடு கம்பில விழுந்தா
 காச்சல் அடிக்கும் என்று நினைக்கிறன் "

                                   " என்னது அது,,இப்பிடிப் பிசத்துறியே,,மலேரியாக் காச்சல் போல இருக்குமோ "

                                   " போலன் அலேர்யி எனக்கு இருக்கு " என்று சொன்னேன்


                                "   டேய் மவனே என்ன மெடிக்கல் பிரசினை  எண்டு நாங்கள்  சொல்லுவோம் , நீ  ஒண்டும் சொல்லாதே ,    என்ன மண்ணாங்கட்டிக்கு மூன்று வருஷம் வேலை மினக்கெட்டு  நேர்சிங் கோர்ஸ்  படிச்சம் ,,சொல்லு பார்ப்பம் "

                        " அய்யோ தெய்வங்களே,,தெரியாமல் வாய் உளறிப்போட்டேன் "

                                  " உன் இதயம் அடிக்கும் சத்தம், தாரை தப்பட்டை படத்தில இளையராஜா போட்ட மூசிக் போல அடிக்குதே "

                                   " என்னது,,என்னாப்பா சொல்லுறாய் "

                              " எல்லாரோட ஹார்ட்டும் லப் டப் லப் டப் எண்டு அடிக்கும் உ ன்னோட ஹார்ட் லவ் லவ் லவ் லவ் எண்டு அடிக்குதே " எண்டு போட்டு

                                       " உனக்கு போலன் அலேர்யி இல்லை, இது வேற விதமான அலேர்யி " என்றாள்.
                                       
                                     " ஏன்பா இப்பிடி வித்தியாசமா அடிக்கு " என்று கேட்டேன்.

                                       " நீ என்ன நினைசாய் இங்கே வரும்போது "

                                     " கந்தர்வன் எப்படிக் கலியாணம் கட்டுவான் என்று ஜோசிதுக் கொண்டு வந்தேன் "

                                      " அட அட அட ,,இங்கே ஒரு ஸ்ரீலங்கா தமிழ் டாக்டர் நிக்குறார் அவரோடு கதைக்கப் போறியா" என்று கேட்டாள்

                                      " அவர் எப்படி எனக்கு உதவி செய்ய முடியும் " என்று கேட்டேன்

                                    " அது எனக்குத் தெரியாது,அவர் நல்லா கட்டிலில் படுக்க வைச்சு எல்லா இடமும் அமுக்கிப் பார்த்து, உனக்கு என்ன பிரசினை என்று சொல்லுவார்,,அவர் நல்லா அமுக்குவார்,,அது மட்டும் தெரியும் "

                                        " அதென்ன அவளவு தெளிவா சொல்லுறாய் "

                                  " ஹ்ம்ம் ,,நேர்ஸ் என்றா என்ன சும்மாவா ,,ஹ்ம்ம் எல்லாம் என்னோட அனுபவத்தில் இருந்து சொல்லுறேன் "

                                   " இங்கே டாக்டர் யாரும் முன்னம் இல்லையே "

                                   " ஹ்ம்ம்,,,இல்லைதான் இன்று இவர் ஒரு அவசரக் கேஸ் பார்க்க வேண்டியதால்,,நாங்கள்வரவழைத்தோம் "

                                 " அப்படியா,,பார்த்து மு டி ஞ்சு தோ,,,,"

                                    " ஹ்ம்ம்,,உனக்கு தெரியும்தானே ,,நானும்,,மற்ற நேர்சும் மட்டுமே இங்கே வேலை செய்வது "

                                       " ஓம்,,ஓம்,,அது நல்லாத் தெரிந்தபடியால்தான்நானே இங்கே வந்தேனே "

                                       " என்னது,,பிசத்துறாய்...."

                                      " அட அட அட என் அப்பன் பழனி ஆண்டவன் என்னை சரியான இடத்தில தான் கொண்டுவந்து வைச்சு அமுக்கி திருவிளையாடல் பார்க்கிறான் "

                                         " என்னது மூளை மலேரியா காச்சல் போலப் பிசத்துறாய் , மலேரியா நோர்வேயில் வர சந்தர்ப்பம் இல்லையே "

                                " நான் சும்மா நேரமே அர்த்தமில்லாமல் பிசத்துவேன் "

                                        " சொல்லு,,அவரை வரச் சொல்லவா,,உன்னோட நாட்டு ஆள்..உனக்கு கட்டாயம் உதவி செய்வார் "

                                   " ஓம்,,கதைக்குறேன் " என்றேன்

                                           அந்த தமிழ் டாக்டர் வெளிய வந்தார். அவரைப்பார்க்க நிறையத் தமிழ் இனமானத் தன்மான உணர்வு உள்ளவர் போல இருந்தார். ஆனால் சுருளிராஜன் போல சிரிக்கிறதைப் பார்க்க போலி டாக்டரா இருப்பாரோ என்று பயமா இருந்தது. வாயால புழுகித்தள்ளும் பேர்வழி போலதான் வெளிய பார்க்க தெரிந்தார்.

                                       நான் நினைச்ச மாதிரியே அவர் வெளிய வரும் போதே என்னைப் பார்த்து ,வலதுகைப் பெருவிரலை உயர்த்தித் தம்ஸ் அப் அடையாளம் காட்டி ,

                                  " உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு, மரணம் வந்தாலும் சூடு சொரணையோடு வாழ்பவன் தமிழன் "

                               என்று சொன்னார். எனக்கு அந்த நேர்ஸ் சங்கு ஊதிற சத்தம் கேட்குது என்றது நினைவு வர டயறியா போல வயித்தைக் கலக்கிற பயம் வந்திட்டுது.

                                " டாக்டர் நான் ஏற்கனவே பயந்துபோய் இருக்கிறேன்,,இப்பிடி டயலக் சொல்லி என்னை பயப்பிடுத வேண்டாம்,நான் பாவம்ஸ் டொக்டர் "

                          என்று தமிழில் சொன்னேன். அந்த டாக்டர் என்னை அடையாளம் பிடிச்சிட்டார்.

                              " நீ அவன்தான் தானே " என்று கேட்டார்

                                   " நான் எவன் என்று தெரியுமா " என்று கேட்டேன்

                           " ஹ்ம்ம்,, என்ன சீவியமடா இது என்று பேஸ்புக்கில் எழுதிக்கொண்டு இருக்கும் அவன் தானே"

                                     " அவனேதான் "

                                   " ஹ்ம்ம்,,,எல்லாருக்கும் கஷ்டம் இருக்கும் அதைக் குருவி தலையில பனங்காய் போல அடுத்தவர் தலையிலையும் ஏற்றிவிடுற மாதிரி இருக்கே சில நேரம் "

                                " ஓம்,,டொக்டர்,,,அது சும்மா என்னைப்போல அஞ்சாம் வகுப்பு படிச்ச ஆட்களுக்கு காமடியா எழுதுறது,,நீங்க படிச்சவர் அதெல்லாம் வாசிக்கக்கூடாது "

                              " என்னசெய்யுறது,,,என்ன சீவியமடா என்று சொல்லிக்கொண்டுதான் வாசிக்கிறது "

                             " அப்படியே,,அப்பிடி என்றாள் ஓகேதான் டொக்டர் "

                               என்று சொன்னேன் .அவர் மிகவும் நல்ல டாக்டர். என்னை கட்டிலில் குப்புறப் படுக்க வைச்சு நல்லா செக் செய்து ,

                                " உன்னோட ஈரல் வீங்கி இருக்கு,,சிரோசிஸ் வர சந்தர்ப்பம் இருக்கு ,,ஈரலைக் கவனி, ட்ரிங்க்ஸ் ,,அல்ககோல் ,குடிப்பியா,,என்ன குடிப்பாய் "

                              " ஓம்,,பியர் தான் தண்ணி போலக் குடிப்பேன் "

                                   " எவளவு குடிப்பாய் "

                                 " என்னவோ ,வீராளி அம்மாளாச்சி புண்ணியத்தில் ,என்னோட உடம்பு தாங்கி தொண்டைக்குழி நிரம்பும் வரை குடிப்பேன்"

                                 " ஹ்ம்ம்,,அது ஆபத்து ,,ஈரலில் பாதிப்பு ஏற்கனவே இருக்கலாம் ,,மண்ணீரல் கல்ஈரல்,சதயிரல் ,,எல்லாமே பாதிக்கும் "

                                  " அப்படியா ,,டாக்டர்,,இனி அளவோடு ஒரு நாளைக்கு ரெண்டு தரம் மட்டுமே குடிகிரதோட நிறுதிக்கொள்ள முயற்சிக்கிறேன் "

                                    " ஹ்ம்ம்,,,அட அட என்ன ஒரு பொறுப்புணர்வு "

                           " வேற ஒன்றும் பிரச்னை இல்லைதானே டொக்டர் "

                                 " உனக்கு வேற ஒன்றுமில்லை கொழுப்புதான் கொஞ்சம் அதிகம், அதைக் கரைக்க வேணும் " என்று சொல்லி எனக்கு மருந்து எழுதித் தந்து இருக்கிறார்.


                     ..................என்ன சீவியமடா இது ...................

யாழ்பாணத்தில்,சின்ன வயசில , எங்க வீட்டில Dr .நந்தாதேவ விஜியசேகர என்ற சிங்களவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு "முன்னைச் சிங்கள ஓவியங்கள் " இருந்தது. நந்தாதேவ அந்தப் புத்தகத்தை கல்கத்தா யூனிவேர்சிடியில் Phd ஆய்வுக்காக எழுதி இருந்தாலும் ,அதில நிறைய பழைய சிங்கள ராஜ்தானிகளின் விபரம்,வீராதி வீர மன்னர்கள் ,அவர்களின் பராகிரம சாதனைகள் எல்லாம் இருந்தது!
                                    பின்னாட்களில் வளர்ந்தபின் அந்த இடங்களைப் பார்க்கவேண்டும் எண்டு அதை வாசிக்கும் போதெல்லாம் நினைத்தது கடசியில நடந்தது! என்னோட ஸ்வீடிஷ் மனைவி இலங்கையில் என்னோடு வந்து வசித்தபோது இலங்கையின் தொன்மையான வரலாறை ஆர்வமாக ஆங்கிலத்தில் வாசித்து, ஏனோ தெரியவில்லை சிங்களமொழி பேசுவதுக்கு சுவாரசியமாக இருக்கு என்று விரும்பிப்படித்தாள் !

                                       எனக்கு சிங்களம் பேச முடியும் .சிங்களவர் சிங்கம் போல தமிழர் மீது பாய்ந்து இலங்கை இனப்பிரச்சினை அகோரமாக நடந்துகொண்டு இருந்தாலும் தனிப்பட சிங்கள மக்கள் நல்லவர்கள், துவேஷம் இருந்தாலும் அவர்களுடன் சிங்களத்தில் சலாப்பினால் ஓட்டிக்கொள்வார்கள் .வயித்தில பூசணிக்காய் அளவு குண்டைக் கட்டிக்கொண்டு நல்லா சிங்களத்தில் கதைத்தால் அதை வெடிக்க வைக்கும்வரை அதைப்பற்றி சந்தேகமா ஜோசிக்கவே மாட்டார்கள். அவளவு வெங்காய ஏமாளிகள் .

                                     சிங்களப் பகிடிகள் தமிழ் பகிடிகளை விட அருமையாக இருக்கும். சிங்களமே ஒரு காமடியான மொழி. சிங்கள மக்கள் எல்லாத்தையும் பகிடி ஆக்குவார்கள்,,அரசியல்வாதிகளே பாராளுமன்றத்தில் பயங்கரப் பகிடி விடுவார்கள் . பல தமிழருக்கு சிங்களம் தெரியாது ,அதைவிட பகிடி எண்டா என்ன எண்டு தெரியாது. அதால அவர்களால விளங்கமுடியாது , என்னை பொறுத்தவரை சிங்கள மக்கள் வாழ்க்கையை பகிடியாக்கி விடுவார்கள். பெண்களே டபுள் மீனிங் பகிடி விட்டா வயிறு குலுங்கும்

                                  அதால பிளான் போட்ட மாதிரி , ஒரு குறிப்பில் எல்லா இடங்களையும் குறித்துக்கொண்டு, "காலாச்சார முக்கோண வலய" தில் இருக்கும், தம்புள்ளையில் தங்கத்தால செய்த குகைப்புத்தர் கோவில், வரலாறுக்கு முற்பட்டு வானியலின் விபரம் உள்ள சந்திர வட்டக்கல், அப்புறம், அனுர மன்னர்கள் ஆண்ட அனுராதபுரதில பிரமாண்டமான ருவான்விலிசாய, இடிந்து விழும் நிலையில் உள்ள முன்னைச் சிங்கள "ஆர்கிடெக்சர்" ஆச்சரியம் அபயகிரி தாதுகோபம் , குசீநகரில் புத்த பெருமான் மகா பரிநிர்வாணம் அடைந்த மரத்தின் கிளையில் வளர்ந்த ஸ்ரீ மகா போதி அரசமரம், எல்லான் என்ற சோழ மன்னன் கட்டிய சிவன்கோவில் இதெல்லாம் அனுராதபுரதில் பார்த்தோம்

                               பிறகு மஹா பராக்கிரமபாகு மன்னன் கட்டிய பராக்கிரமபாகு சமுத்திரம், அவனே "மனச்சோர்வில் " பயந்து ஓடிப்போய் ஒளித்து இருந்த சிகிரியா மலைக் கோட்டை , தாதுசேன மன்னன் கொலை செயப்படக் காரணமா இருந்த காலவாவி, எல்லாம் சுற்றி , மகிந்த தேரர் ,அவரின் சகோதரி சங்கமித்யுடன் வந்திறங்கிய தம்ப்பபன்னி , குளக்கோட்டன் என்ற தமிழ் மன்னன் கட்டிய தம்பகாமம், இதெல்லாம் பார்த்தோம்

                                          இன்னும் பல இடங்கள் சுற்றியபோதுதான் தெரிந்தது, ஒரு வரலாறை புத்தகத்தில படிப்பதும் ,அதையே நேரடியாகப் போய் பார்ப்பதும் வேறு வேறு அனுபவங்கள். நேரடியாக பார்ப்பதில் எப்பவுமே ஒரு" த்ரில் ",அதேநேரம் அந்த வரலாறுக்கு முற்பட்ட இடங்களில் ஒருவித "Energy" இருக்கிறது என்பதும் தெரிய வந்தது !
                                         ஐரோப்பிய காலனிகாரர் வரமுன்பு ஐக்கிய இலங்கை ஒரு " பொருளாதார தன்னிறைவு விவசாய " நாடக இருந்தது எண்டு பாடசாலையில் படித்ததை நேர்ல உணரமுடிந்தது! அப்படி நிர்பாசன திட்டம் போட்டு வளமாக்கி இருகிறர்கள் பண்டைய சிங்கள மாமன்னர்கள்! அதனைக் கைவிட்ட அடையாளங்கள் பார்க்கும்போது மிகவும்கோபம் வந்தது . ஐரோப்பியர் இலங்கை என்ற குட்டித் தீவில் சுதேசிய மனிதர்களின் நாட்டில் சுய மரியாதையைக் காலுக்குள் போட்டு மிதித்தது கேவலமாயிருந்தது
                                           இலங்கையில் அப்போது வடக்கிலும்,கிழக்கிலும் சண்டை நடந்ததால் , கண்டி தலதா மாளிகை வேறு சக்கை லொறியால தாக்கப்பட்டதாலும், பல இடங்களில் கடுமையான கெடுபிடி இருந்தது! நான் கதைத்த சிங்களத்தில் பனங்கொட்டை தமிழ் வாசம் வீசியதாலும், என்னோட மனைவி வெள்ளை இனத்தவா என்பதாலும் , உத்தரட்ட மாநுவர என்ற இராஜசிங்கன் என்ற தமிழ் மன்னன் ஆண்ட கண்டியில் பல இடங்களில் ராணுவத்தினர் மறித்து ,
                          " உன்னுடன் வரும் வெள்ளைப்பெண் வெளிநாட்டு பத்திரிகையாளரா, எதுக்காக இந்த இடமெல்லாம் சுற்றுகிறாய், இந்த இடங்கள் அதியுயர் பாதுக்காப்பு உள்ள இடங்கள் தெரியுமா ?"
                               எண்டு சந்தேகமா என்னைத்தான் பார்த்துக் கேடார்கள், நான் ,சிங்களத்தில் கதைத்து ,அந்த போலிஸ் இடமிருந்து தப்பிக்கப் பொய் சொல்லி ,
                          " அவா சிங்கள காலாச்சார வரலாறு பற்றி ஆராச்சி செய்கின்றா, அதனால சுற்றிப் பார்க்கிறோம் "
                              " ஜெர்னலிஸ்ட்களுக்கு விசா கொடுப்பதே நாங்கள் தீவிரமா விசாரித்த பின் தான் அது தெரியுமா உனக்கு "
                                 " தெரியும் மாத்தையா. நீங்கள் எல்லாம் தீவிரமா விசாரித்து தானே செய்யுரிங்க "
                                    " இவளிடம் விசா இருக்கா , அதென்ன விசா உல்லாசப் பயணிகள் விசாவா "
                                    " இல்லை,,மாத்தையா , அவளிடம் ரெண்டு வருடம் இங்கே வசிக்க விசாவே இருக்கு "
                                     " அதெப்படி கொடுத்தார்கள்,,சொல்லு "
                              " அவள் என்னோட பொஞ்சாதி ,அதால பமிலி வதிவிட அனுமதி விசா எடுத்துக் கொடுத்தேன் ,மாத்தையா "
                               " உண்மையாவா சொல்லுறாய், இப்ப எல்லாம் உருவி செக் பண்ணுவோம்,எங்களுக்கு அதிகாரம் இருக்கு தெரியும் தானே "
                                  " ஓம்,,மாத்தையா,, எங்களிடம் உருவி துருவி செக் செய்ய ஒண்டுமே இல்லை , மாத்தையா "
                             " நீ ,,எந்த இடம்.. கம கொய்த ,,"
                            " நான் யாழ்பாணம் மாத்தையா "
                      " யாப்பானே, புலிகளின் யாப்பானே , நீ கொட்டியா "
                           " மாத்தையா நான் கொட்டியும் இல்லை ரொட்டியும் இல்லை,,சும்மா ஒரு அப்பாவி மாத்தையா "
                                " ஹறி,,இந்த சுத்தி வெள்ளைக்காரிக்கு எங்கள் நாட்டைப்பற்றி உண்மையை சொல்லு..கொட்டி நாட்டை அழிக்குது என்று "
                                      " ஓம் மாத்தையா , அவளுக்கு ஏற்கனவே நல்லா எல்லாம் தெரியும் , யார் நாட்டை அழிக்கிறது என்று "
                                   " வெளிநாட்டு ஜெர்னலிஸ்ட் நாட்டுக்கு உள்ளே வந்து சுத்திப்போட்டுப் போய் எங்களைப் பற்றி பொய்யாக எழுதுகிறார்கள் "
                                    " அதுபற்றி எனக்கு ஒண்டுமே தெரியாது, மாத்தையா "
                                   " இவள் ஜெர்னலிஸ்ட் என்று தெரிஞ்சா,,உன்னையும் அவளையும் உள்ளே போட்டு நாரியை முறிச்சு உழக்க்கிப் போட்டுதான் விடுவோம் ,,அதுக்கு எங்களுக்கு பயங்கரவாத சட்டத்தின் படி அதிகாரம் இருக்கு தெரியுமா "
                                        " தெரியும் மாத்தையா, அவா சிங்கள காலாச்சார வரலாறு பற்றி ஆராச்சி செய்கின்றா, உங்களைப் பற்றி நல்லா புகழ்ந்து எழுதுவா, பயப்பிட வேண்டாம் மாத்தையா "
                              என்றேன்,அவர்கள் வாயைப் பிளந்து
                          "ஏமத ,எமனம் ,நியம வட தமாய், " (அப்படியா,,அப்படி என்றால் சூப்பர் )
                                          எண்டு வழிவிட்டார்கள்! கையில துவக்கு இருந்தால் அவங்கள் சொன்ன கடைசி வார்த்தையோடு அவளவு பேரையும் போட்டுத் தள்ளிப்போட்டும் போயிருக்கலாம் .
                                                   என்னோட வெள்ளைக் குதிரை அந்த விசாரணை உரையாடல் நிகழ்ந்த நேரம் புத்த பெருமானின் புனிதப் பல்லு உள்ள பேழையைப் பார்த்துப் படம் எடுக்கப் போகிறேன் என்று சொல்லிப்போட்டு தலதா மாளிகையின் உள்ளே போய்விட்டாள். அவள் திரும்பி வரும்போது போலிஸ்காரங்கள் என்னை மறித்து வைத்து கதைப்பதைப் பாத்துப்போட்டு வந்து சிங்களத்தில் தடக்கித் தடக்கி
                                            " இங்கே,,,,,,, என்ன,,,,,, நடக்குது,,எதுக்காக இவனை ,,,,,,வைத்து ,,,,,,,,,,விசாரிக்கிறீங்கள் "
                                         என்று கேட்டாள். அந்த கும்பலில் நின்ற ஒரு போலிஸ் காரன் தடக்கித் தடக்கி ஆங்கிலத்தில் ஏன் விசாரித்தோம் என்று சொன்னான் .அவளுக்குக் கோபம் வந்திட்டுது ,சிங்களத்தில் கோவமாக
                                  " பிஸ்சுக் கத்தாவ "
                                   என்று சொன்னாள், லூசுத்தனமான உரையாடல் என்று அதுக்கு அர்த்தம், போலீஸ்காரங்களுக்கு சிரிப்பு வந்திட்டுது. கிடந்தது
                              " இங்கே பாரடா,,வெள்ளைக்காரி சிங்களம் கதைகிறதை "
                           என்று சொல்லிச் சிரிச்சுக்கொண்டு இருந்தாங்கள்.
                           அனுராதபுரத்தில் சுற்றிய போது "புனித நகர்" எண்டு ஒரு பகுதிய பெயர் போட்டு வைத்திருந்தார்கள்,அவசரத்துக்கு மூத்திரம் முடுக்க,
                                 " எங்க மறைஞ்சு மூத்திரம் பெய்யலாம் இந்த இடத்தில "
                                  எண்டு வழியில் சந்தித்த ஒருவரிடம் சிங்களத்தில் கேட்க அவர்,அந்த "புனித நகர்" பகுதியைக் காட்டி சிங்களத்தில்
                                 "அங்கதான் நாங்கள் எல்லாம் அவசரத்துக்குப் போவோம் "
                                          என்று அவர் அந்த புனித நகர் பகுதியைக் காட்டிச் சொன்னது ஆச்சரியமாகக இருந்தது!
                                      சிகிரியாவில் குரங்குகள் கை விரல்கலால் "........." எண்டு கெட்ட செயல் காட்ட ,வெளிநாட்டு டுரிச்டுகள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்! பொலநறுவையில் வெள்ளத்துக்கு ரயில்வே தண்டவாள சிலுப்பர் கட்டை மிதக்க ரயில் அங்கால,இக்கால அசைந்தது . உறங்கா நகரம் தம்புள்ளையில் அதிகாலை நாலு மணிக்கே மரக்கறி கொழும்பு போகும் லொறிகளில் ஏற்றிமுடிய, காலை ஆறு மணிக்கே சீட்டு விளையாட ஆரம்பிக்கிரார்கள் ,
                                           போகொல்லையில் பன்சாலைக்குப் பின்னால புத்தபிக்கு ஒளிஞ்சு நிண்டு புகையிலைப் புகை விட்டார், வரெகம என்ற பொறுத்த சிங்கள இடத்தில ஒரு காரைநகர் தமிழர் சில்லறைக் கடைவைச்சு, கடைக்கு மேல பூசணிக்கொடி வளரவிட்டிருந்தார்,இப்படி பார்த்தவை , எல்லாம் இங்க எழுத நேரம் இல்லை ! என்னோடு மனைவி கவலைப்பட்டாள் ,
                                     "நீ பிறந்த யாழ்பாணத்தை இப்படி சுற்றிப் பார்க்க எனக்கு போக முடியாமல் இருக்கிறதே "
                             எண்டு ! ஹ்ம்ம்! பல சமயம் ஜோசிப்பது , வடக்கிலும் சங்கிலியன்,வன்னியில பண்டாரவனியன், என்று வரலாறு இருக்கிறது , புலம்பெயர் நாடுகளில் நவீன வீடியோ தொழில்நுட்பம் படிதவர்கள் இருக்குறார்கள்,அவர்கள் அங்கு போய் அந்த "பண்டைய தமிழ் மன்னரின் " வாழ்விட வரலாறை ஒரு "டாகுமென்ட்" ஆகவாவது எடுத்தால் ,அடுத்த தலைமுறைக்கு குறைந்தபட்சம் ஒரு "டாகுமென்ட் " வடிவிலாவது "தமிழ் மன்னரின் "வரலாறு காப்பாற்றப்படும்!.....இல்லையா ?
                             ......................என்ன சீவியமடா இது...............

பேஸ்புக்குக்கு எதற்காக மூஞ்சிபுத்தகம் என்று அந்த மார்க்சுக்கர் பேக்கு போயும்போயும் இப்படி ஒரு பெயர் வைத்தான் என்று எப்பவுமே ஜோசிப்பது. ஒருவேளை காலையில் எழும்பி மூஞ்சி கழுவாமல் பல்லு விளக்காமல் அதை வைச்சு நோன்டும் ஒரு நிலைமைக்குள் அது எதிர்காலத்தில் பலரைத் தள்ளிவிடும் என்பதால் அப்படி பெயர் வைத்தானா தெரியவில்லை! 

                                         மூதேவி வாலாயம் பிடிச்சவனுக்கு முழுவியளத்திலும் விடியாதது போல இந்தப் புத்தகம் போதைவஸ்துக்கு அடிமையானது மாதிரி ஒரு அர்த்தமில்லாமல் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நடுத்தொண்டைகுழியில நிண்டு கொண்டு இன்னும் எவளவு காலம்தான் வாழ்கையில் அனுபவித்து வாழவேண்டிய அற்புதமான தருணங்களைத் திருடி எடுத்துக்கொள்ளுமோ தெரியவில்லை.


                                     இப்படி நிலைமையிலும்   பேஸ்புக் என்ற மூஞ்சிப்  புத்தகத்தைப்  பலர் கிண்டல் அடித்துக்கொண்டு அதில பல வருடம் விடாப்பிடியாக இருக்குறார்கள் ! இந்தப் புத்தகத்தில் பல நல்ல விசியங்களும் இருக்கு. ஒன்று உலகம் எங்கும் சிதறிய நண்பர்கள், உறவுகளை அது தேடி எடுத்துத் தந்துள்ளது . இன்னொன்று என்னைப்போன்ற எந்த இலக்கியப் பின்னணியும் இல்லாத பலரை எழுதுவதுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுத்திருக்கு . ரெண்டும் மறைக்க முடியாத உண்மைகள். 

                                            மூஞ்சிப் புத்தகம் அரம்பத்தில அமைதியா உருவாகியதே ,பல்கலைக்கழகத்தில் தன்னோடு  கொம்புடர் படித்த  நண்பர்களுடன் மார்க் சுகர்பெர்க் இலகுவா மாலையில் எங்கே சந்திப்பது , எந்த பப்பில தண்ணி அடிப்பது, எந்த பிகரோட கடலை போடுவது  போன்ற ஆரம்ப சோசியல் ஒன்று கூடலை அமைக்க, அவரோட படித்த   கொஞ்சம் நண்பர்களை இணைத்து  சத்தம் இல்லாமல் உருவாக்கியது இந்த பேஸ் புக் என்கிறார்கள்  ! 

                           மூஞ்சிப்  புத்தக ஆரம்ப வருடங்களில் , அமரிக்கா , ஐரோப்பா , மற்றைய முனேறிய நாடுகளில் ,நன்கு தெரிந்த  குடும்ப நண்பர்கள் , குடும்பப உறுப்பினர்கள்  , ஒரே விசியன்களில் இண்டேறேச்ட் உள்ள நண்பர்கள்தான் அதில் இணைந்து ஒருவித கட்டுக்கோப்பாபாடு  இருந்தது ! இன்று  அது உலகம் முழுவதும் அது  பரவி, ஏழை ,வறிய,வளர்முக நாடுகளிலயே அது  தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவைபோல வீட்டு படுக்கை அறை வரையும்  பரவி  ,அப்புறம் இப்ப எப்படி அது இருக்கு எண்டு உங்களுக்கே தெரியும் !

                                          மூஞ்சிப் புத்தக  உலகத்தில ஒரு நாளைக்கு எவ்வளவு லைக்குகள், எவ்வளவு பாராட்டுக்கள், எவ்வளவு அவமதிப்புகள், எவ்வளவு எதிர்மறைக்  கமெண்ட்கள், எவ்வளவு கழுத்தறுப்புக்கள்,  எவ்வளவு வைரஸ்  ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்கள், எவ்வளவு சம்மந்தா சமந்தம் இல்லதா  tag தொந்தரவுகள், எவ்வளவு ஆன்லைன் சாட்டிங் சமாளிப்புகள், எவ்வளவு fake id குளறுபடிகள், எவ்வளவு வில்லுபாட்டு வைபவர்களின் இடியப்ப  சிக்கல்கள் ,  பதிவுகளில் வந்து கும்மியடிப்பவர்களைய சமாளிக்கும் குத்துக் கரனங்கள் , இதுக்கெல்லாம் எவ்வளவு பல்டி அடிக்கும் திறமை வேண்டும் எண்டு  இங்க குப்பை கொட்டுற உங்களுக்கு நல்லா  தெரியும்.

                                         இவளவு துன்பதிலயும்  பெண்களின் சேலைக்குள் ஒளிந்து நிண்டு கொண்டு ஆண்மைச் சவால் விடும் ஆர்வக் கோளாறுகள், ஆண் நடிகர்களின் படத்தில உலாவரும்  கடலை மன்னன்கள், அவர்கள் உண்மை எண்டு நம்பி சிக்னல் கொடுக்கும், இளம் சினிமா நடிகைகளின் ப்ரோபில் படத்தில உல்டா விடும் கிழவிகள்.  இந்த இம்சையை விட மகா இம்சை  மூஞ்சிப் புத்தக  உலகத்தில , கருத்தை வெளிபடையாக  சொல்ல முடியாது ! அப்படி இல்லை எண்டு   எல்லோருக்கும் நல்லவனா இருக்க வேண்டுமானால் ...சிவாஜி ,ரஜனி கமலை விட சிறப்பாக  ஜால்ரா போட்டு நடிக்கத் தெரிய வேண்டும்..! 

                                     மூஞ்சிப் புத்தகத்தில  நல்ல நல்ல , ரசிக்கும் எழுத்துநடையில் எழுதிய சிறுகதைகள் , சமூக விழிப்புணர்வு , பெண் அடிமை கொடுமைக்  கடுரைகள், மொழி பெயர்ப்பு கட்டுரைகள் , ஏகாதிபத்திய அரசியல் எதிர்வு வினைகள் ,  போன்ற  அறிவுபூர்வமான விசியங்களுக்கு  எல்லாம் யாருமே அசந்தும் லைக் போடாமல் , சும்மா தன்னும்  உற்சாகக் கொமண்ட் அள்ளி தெளிக்காமல் , பிச்சைக்காரன் வைச்சிருக்கும் சில்லறைப் பாத்திரம் போல அனாதையா ஒரு மூலையில கிடக்கும்!

                                                அதே நேரத்துல ஊருல இருக்குற எல்லா மொக்கை போஸ்டிங் , டபிள் மீனிங் ஜோக்ஸ், விளங்காத காலண்டர் தத்துவம் ,  டெலிவிஷனை வீட்டுக்  ஹோலில் எங்க  வைப்பது போன்ற   வாஸ்து சாத்திரம் , நாறிப்போன  பிரதேச மாகாண  அரசியல் , முதல்  வரிக்கும கடைசி வரிக்கும் சம்பந்தம் சம்பந்தமில்லாத " ஹைக்கு " காதல் கவிதைகள்,  நடிகைகளின் சேலை அவிழ்ந்து விழுந்த கிசு கிசு, சாதி மத அடிதடி ஸ்டேட்டஸ், " கொசுக் கடி மன்னன்களின் " மரண மொக்கை ஸ்டேட்டஸ் , 

                                              அழகான பெண்களின் சுய புராண ஸ்டேட்டஸ் ,  இந்தியாவில் இருப்பவர்  காலையில வந்து சொல்லும் குட் மோர்னிங் இக்கு, நியுசிலாந்தில் இருப்பவர் சொல்லும் குட் நைட்,( இருந்தாலும், நேரம் காலம் தெரியாத, அவர்களின் கடமை உணர்ச்சிய பாராட்டத்தான் வேண்டும் ),மற்றவர்களுக்கு விடுற தூசன எச்சரிக்கை ஸ்டேட்டஸ் எல்லாம் சூரன் போர் போல பட்டையை கிளப்பும் !

                                                      அண்மையில்  நண்பர் ஒருவர்  ஸ்டேடஸ் போடிருந்தார் , அதில  ஒரு முகம் தெரியாத ,ஒரு சினிமா இளம் நடிகையின் படம் போட்ட  அழகான  பொண்ணு , அக்கறையா உலகம் விடிய 'good morning'னு status போட்டிருக்கா . கடமை உணர்சியுள்ள  178 பேர் like போட்டுருக்கான்கலாம்! நன்றி மறவாத மன்னன்கள்   'same to u' னு 83 பேர் comment பண்ணி வழிஞ்சிருக்காங்களாம் .  அதுல ஒருத்தன், அந்த பொண்ணோட 'good morning' message ஐயே share பண்ணி  அவனோட சுவரில போட்டு இருக்கணாம் !! அததான்டா என்னால தாங்கவே முடியல. எதுக்குடா share பண்ண ? நீயே good morning  எண்டு நாலு வரி எழுதி இருக்கலாம் இல்லையா ?

                                       இந்த இம்சை தாங்காம  காலப்போக்குல நல்ல நல்ல ஸ்டேட்டஸ் போடுறவங்களும் கடைசியா வெறுத்துப்போய் , நொந்து சைனிஸ் நுடுல்ஸ் போல நூலாகி போய், " கம்மக்கோ சிக்காகோ ,, வந்தா வா போன்னாப் போ" எண்டு துணிந்து கவிதை எழுதி , சின்ன சின்ன போஸ்டிங் போடும் மொக்கை ரூட்டுக்கு போகவேண்டி வருகிறது , பாவம் .....!!! நானும் அப்படி  வெறுப்பில கதை ,கவிதைபோல எல்லாம்  கிறுக்க வெளிக்கிட்டவன் தான்!


                                ............என்ன சீவியமடா  இது.............


பலவருடமா எழுதுவதுக்கு விசைப்பலகை ஆக இருந்த என்னோட மடிக்கணணி சில நாட்கள் முன் கையைவிட்டுவிட்டது. அது ஒரு நல்ல நட்பான மடிக்கணணி நான் மணித்தியாலக்கணக்கில் கதைவிட்டு உடான்ஸ் கதைகள் எழுதும் போது மூச்சு வாங்க வாங்க வேலைசெய்யும். என் கதைகளை முதன் முதலில் அதுதான் வாசிக்கும். அதனாலோ தெரியவில்லை ஒருநாளும் முகத்தைச் சினுங்கியதில்லை

                                          சென்ற கிழமை சனிபெயர்ச்சி நடந்ததால் என்னிடமிருந்து அது தப்பிப்போக சான்ஸ் கிடைத்த அதுவா அல்லது வேற என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. காலையில காயத்திரி மந்திரம் கேட்போம் எண்டு அதை வலது கையால ஓன் செய்து போட சட்டென்று இயங்க மறுத்து முறுக்கிக்கொண்டு அடம்பிடித்தது.

                                  ஒஸ்லோவில் இருக்கும் ஒரு சாமியார் நல்லா கன்னிகளை,,அடச் சீ..கணணிகளை நல்லா புரட்டி எடுத்து சப்பித் துப்பி திருத்துவார் என்று தெரியும்அவர் என் நண்பரும் தான். அதனாலஅட்வைஸ். கேட்டேன். டெக்னிகலா சில விசியம் சொன்னார் . கையோடு கொண்டுவந்தால் தட்டித் தடவிப்பார்த்து என்ன வியாதி எண்டு சொல்லுறேன் என்றார்

                                          என்னிடம் பக்அப் என்று சொல்லுவார்களே வெத்திலைப்பெட்டி கையைவிட்டா கொட்டாப் பெட்டிக்க கையை விடுற மாதிரி ஆத்திர அவசரத்துக்கு சப்போட் கொடுக்கும் என்று ஒருமணிக்கணணி பக்அப்பில் வைச்சு இருந்தேன். நண்பர்கள் போல உடுக்கை இழந்தவன்கைபோல அது இடுக்கண்களைக்கும் என்று வேற அதை நம்பிக்கொண்டு இருந்தேன்

                                          அந்த பக்அப் மடிக்கணணியை மடியில வாஞ்சையோடு தூக்கி வைச்சு ஆன் செய்து தொடக்க அது நண்பர்கள் போல பொறுத்த நேரம் மக்கர் பண்ணத் தொடங்கியது. கோவத்தில அதை தூக்கி பக்அப்பிலேயே போட்டுவிட்டு. அடைமழைக்கு குடை இல்லாதவனுக்கு ரெண்டு பொஞ்சாதி போல நிலைமை ரெண்டு மணிக்கணணி வைச்சு இருந்தும் வந்திட்டுதே என்று ஜோசிதேன்

                                    ஆனாலும் என் பிடிவாதமான நல்ல குணங்களில் ஒன்று இலற்றோனிக் உபகரணங்களைத்திருத்துவதில் எனக்கு அதிகம் உடன்பாடு இல்லாத பஞ்சாயத்து எப்பவும் நடக்கும். அதனால ஒரு புது மடிக்கணணி ஒரு வினோதமான உடன்படிக்கையில் வேண்டினேன். அதுக்கு அவசரமான அந்த நேரம் என் பிரியமான சஹி ஒருவர் ஹுண்டாய் கார்ல ஓடி வந்து கைகொடுத்தார்.

                                          பழையதை திருத்தி இருக்கலாம் தான். அந்த கொம்புடர்எஞ்சினியர் சாமியாரும் அப்படிதான் சொன்னார். ஆனால் சரியான நேரத்தில புத்தியைக் காட்டி கரணம் தப்பிக் கைவிடும் இலற்றோனிக் உபகரணங்களை வேலைமினக்கெட்டு திருத்துறதும் ஓடிப்போன பொஞ்சாதியை திருப்பிக் கூட்டிக்கொண்டுவந்து வைச்சுக் குடும்பம் நடத்துறதும் ஒன்றுதான் என்பதால் அதுகளை திருத்துறது காலவிரயம்
                              நேற்று அந்த கணணி சாமியாருக்கு புது மடிக்கணணி வேண்டிய விபரம் மயிலில் சொன்னேன்,,அவர்
                                " என்னையா செட்டியாருக்கு சந்தனம் கூடக்கிடந்த நேரம் அதைக் குண்டியில தடவின மாதிரி என்ன பசை அதிகமா இருக்கோ ,,நான் எவளவு பேருக்கு எவளவு செய்து இருக்றேன்,,இது செய்யிறது பெரிய வேலையா "

                                    என்று சொன்னார்..
                                          அவர் எவளவு பேருக்கு எவளவு செய்தார் போன்ற புள்ளிவிபரங்களில் ஆர்வம் இல்லாததாலும் ,சாமியார்மாருடன் தனகுறது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதில்ல என்பதாலும் அவர் ஒரு சாப்வார் எஞ்சினியரா வேற இருப்பது என்னோட இன்டர்நெட் எழுத்துலக சித்துவேலைகளுக்கு அவரின் டெக்னிகல் தேவை இருப்பதாலும் அப்படியே சாஸ்டாங்க நமஸ்காரமா காலில விழுந்திட்டேன்
                                     ஆனலும் நண்டுக்குக் கொழுப்பு வளைக்குள்ளே எடுத்த மாதிரி வாய்க்கொழுப்பில் // ஓடிப்போன பொஞ்சாதியை திருப்பிக் கூட்டிக்கொண்டுவந்து வைச்சுக் குடும்பம் நடத்துறது ///...உதாரணத்தை விளக்கி மயில் அனுப்பினேன். பிரைவட் பிரைவசி இல தானேபெண்டுகளைக் காமடி செய்கிறேன் என்ற துணிவில் அனுப்பினேன்
                                            அவர்ஒரு நல்ல எழுத்தாளர் அந்த மயில்உரையாடலை மயிலறகு போல மெல்ல உருவி எடுத்து அப்பிடியே நிலைத்தகவல் ஆக அவரோட சுவரில போட்ட்டு கொக்தத்தடியில கொழுவி இழுத்த மாதிரி என்னோட பெயரையும் டக்கி செய்து பப்ளிக்கில் என்னோட காமடி உணர்வை வெளிக்கொண்டு வந்துள்ளார்
                                           இப்ப இந்த அலட்டல்புராணத்தை புதிய மடிக்கணணியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். சும்மா சொல்லக்கூடாது புத் மடிக்கணணி அமர்களாமா வேலை செய்யுது. என்ன சில ப்ரோகிராமை உள்ளே நுழைக்கவேண்டிய நேரங்களில் புதுப் பெண்டாட்டி போலவெட்கப்படுகுது. மற்றப்படி அதன் எல்லா அம்சங்களும் புதுப்பெண்டாட்டிபோலதான் ஜொலிக்கு .
                                          கண்ணை வெட்டி வெட்டி எல்லாவிதமானபுத்தம்புதிய கணணி அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியையும் அதன் முகம் முழுக்க பிரகாசமாக்கி திரையை வெள்ளித்திரை ரேஞ்சுக்கு உயர்த்துகிறது. சவுண்டு சும்மா லண்டன் றோயல் பில்ஹார்மோனிக்கா சிம்பொனி ஒர்கேச்டிரா வந்து காதுக்குள்ள இறங்கின மாதிரி இருக்கு, விசைப்பலகை விரலை வைக்கவே மடல்வாழை இதழில் கொங்குநாட்டு தேன் வழிந்த மாதிரி வழுக்கிஓடுது.
                                          ஆளில்லா ஆலமரத்தில் ஆட்டுவிக்க யாருமின்றி அதுவாய் அசைந்தாடும் ஊஞ்சலின் சுகமாய் இப்பவே இணையவலையில் அது போடும் ஆட்டத்தைப் பார்க்க முதலிரவு இல்லாத ஒரு குறைதான் மற்றப்படி கல்யாணக்களைத்தான் போங்கோ..இதுக்கு மேலே சொல்ல எனக்கே வெட்கம் வெட்கமா வருகுது

                     .......................என்ன சீவியமடா இது.....................

ஒரு நாட்டைப் பற்றி புத்தகத்தில் படிப்பது என்பது வேற அந்த நாட்டை சுற்றிப் பார்ப்பது என்பது வேறு,இரண்டும் வேறு வேறு அனுபவங்கள். முக்கியமா ஒரு நேரடிப் பயணத்தில் ரியலிடியில் பார்க்கும் அனுபவம் அலாதியானது,அதை விட ஒவ்வொரு நகரத்திற்கும் பிரத்தியேக வாசம் இருக்கு அதை சுவாசிக்க முடியும், கலாசாரம் வழியும் பழைய இடங்களில் ஒரு வித பூமி சக்தியை உணர முடியும் ,
                                               இப்படி என்னைப்போல உலகம் சுற்றும் தனிப்பிரகிரதிகளின் அனுபவம் அலாதியாக இருந்தாலும் . பலருக்குப் பிரச்சினையே ஒரு நாட்டை எப்படி சுற்றிப் பார்ப்பது என்பதுதான், தனியாக வாழ்பவர்கள், என்னைப்போல தோளில ஒரு ட்ரவல் பையைக் கொழுவிக்கொண்டு,கையில லோன்லி பிளானெட் ட்ரவல் கைடு புத்தகத்தை வைசுக்கொண்டு கிறிஸ்தோபர் கொலம்பஸ் போல வெளிகிடலாம்,
                                                  பயணக் கட்டுரை ஒரு தனி மனிதனின் தனி அனுபவம்,அதை வைத்து ஒரு நாட்டை ஓட்டு மொத்தமா எடை போட முடியாது என்ற போதும் சில வருடங்கள் முன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோன,மட்ரிட்,சென் செபஸ்தியான் நகரங்களை ஒரு கிழமை கிடந்தது சுற்றினேன்,அங்கிருந்தே அந்த நகரங்களைப் பற்றி இங்கே சுட சுட ,சில நேரம் சூடு ஆறமுதல் எழுதினேன். அதை அண்மையில் நானே படித்த போது மறுபடியும் அங்கே நிற்பது போல இருந்தது,
                                          சில இடங்களின் வாசமும்,சில பெண்களின் வாசமும் நினைவு வர, பார்சிலோன நகர தெருவோர ரூம்பா காதலான இசை காதுக்க கிடுகிடுத்தது. பிரயாண அனுபவங்கள் எப்பவுமே அப்படித்தான், நினைவுகளின் இடப்பெயர்வு தான் பயணம், மறந்து போன ஒரு வாழ்வின் தொடர்ச்சி பயணங்களில் நிறைவு பெறலாம் போல இருக்கு,
                                                  ஆனாலும் எல்லாருக்கும் இப்படி உலகம் சுற்றிப் பார்க்க வாய்ப்பு, வசதி இல்லை என்பதை நினைக்கும் போது கவலையாவும் இருக்கு . சிலருக்கு இருக்கு அவர்களும் வீட்டை விட்டுக் காலடி எடுத்துவைத்து தீர்த்தயாத்திரைகள் தொடக்குவதில் பல குழப்பங்கள் எப்போதும் இருக்கு.
                                       குடும்பமா குழந்தை குட்டிகளுடன் போறவர்கள் அதிகம் வெளிய கவனிக்க நேரம் கிடைப்பதில்லை. பிரான்சில் வசிக்கும்,யாழ்பாணம் கம்பசிஸ் ஜோக்கிரபி படித்த ஒரு என்னுடைய உறவினப் பெண் ஒருவர் அண்மையில் கனடா போய் வந்தா எண்டு சொன்னா,
                                       " வட அமரிக்கா ஐரோப்பாவைவிடவும் நிலவியல் அமைப்பில் வேறுபட்டது , நீங்க கனடாவில் என்ன எல்லாம் பார்த்திங்க " எண்டு கேட்டேன்,
                                   " சும்மா பார்த்தேன்,பிள்ளைகளை ஒண்டையும் பார்க்க விடவில்லை , சின்னதுகள் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு இருந்ததுகள் , எண்ட மனுஷனுக்கு காலால் நடக்கப் பஞ்சி. அவருக்கு காலுக்க அக்சிலேட்டரை மிதிச்சு மிதிசுக் கார் ஓடி ,,நடக்க கால் சுளுக்குதாம் என்றார் " எண்டு சொன்னா,
                                   நான் " றோண்டோவின் லேன்ட் மார்க் ஆனா C N N கோபுரம் பார்த்திங்களா, அது எல்லாரும் விரும்பிப் பார்ப்பாங்களே " எண்டு கேட்டேன்,
                                அவா " அவடத்தை போனோம் ,நிமிர்ந்து பார்க்க சரியா நேரம் கெடைகேல்லேயே " எண்டு சொன்னா,
                                       நயாகரா வீழ்ச்சி பார்த்திங்களா எண்டு கேட்க வாய் எடுத்து, நயாகரா போய்க் குனிச்சு பார்க்க நேரம் கிடைக்கவில்லை எண்டு சொல்லுவாவோ எண்டு பயத்தில நான் கேட்கலை.
                                                      அந்த உரையாடலின் முடிவில் அவா போன எங்களின் உறவினர் வீடுகளில் என்ன மாதிரியான மொடேர்ன் கார் வைதிருக்கிரார்கள், என்ன அளவு பிளாஸ்மா ஸ்மார்ட் டெலிவிசன் ,எவளவு பெரிய வீடு, அதில உள்ள அறைகள் எண்ணிக்கை, எந்தப் பிள்ளை மெடிசின் படிக்குது, எந்தப் பிள்ளை எஞ்சினியரிங் படிக்குது போன்ற தமிழ் கலாசாரா அடையாளமான விடுப்பு விண்ணாணம் அறிவதில் ஒரு குறை வைக்காமல் விபரம் சொன்னா.
                                         இதில ஆகப் பெரிய காமடி ஐரோப்பாவில் வசிக்கும் பல தமிழருக்கு ஐரோப்பிய நாடுகளே உலகப் படத்தில எங்கே இருக்கு எண்டு தெரியாது,இங்கிலாந்தில் இருந்து கொண்டு கடவுளின் கனவு  என்ற  ஒரு வெப் ப்ளாக் வைச்சு எழுதும்  வேதா  என்ற  ஒரு பள்ளிக்கால தோழன்,சில வருடம் முன் நான் சுவிடனில் வசித்ததாக் கேள்விப்பட்டு,
                                     " நீ வசிக்கும் சுவிஸ் பேங்க் உள்ள சுவீடனும், நோபல் பரிசு கொடுக்கும் சுவிச்லாந்தும் வேற வேற நாடுகள் எண்டு அண்மையில்தான் தெரியும் "
                                   எண்டு சொன்னான், நான் பதில் ஒண்டும் சொல்லி அவன் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை, பரிசில் வசிக்கும் என்ஒ ன்றுவிட்ட சகோதரிக்கு பிரான்ஸ் தெற்கு ஐரோப்பாவில் எங்கே இருக்கு எண்டு தெரியாத அப்பிராணி . பிரான்சை சுற்றி உள்ள நாடுகளின் பெயரே தெரியாது,
                                   ஆனலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அவர்கள் காரில GPS நேவிகேசன் பொருத்தி ஓடி ,சாமத்திய வீடு,கலியாண வீட்டுக்கு அடிக்கடி போவார்கள், சாமத்திய வீடு,கலியான வீடுகளில் பார்த்த விசியங்கள்,நிறை,குறை.பெறுமதி,மினுக்கம்,விசியங்கள் நல்ல தெளிவா தெரியும்.
                                             சுவீடனில் என்னோட நண்பர் தலையிடி எண்டு ஒருவர் இருந்தார் ,அவருக்கு மப்பில் கண்டு பிடிக்க கடினமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்,தலை நகரம், அந்த நாடுகளின் அருகில் உள்ள நாடுகள் , எல்லைகள், ஏற் போர்ட் பெயர், அங்கே பேசப்படும் மொழி, பாவனையில் உள்ள காசின் பெயர் எல்லாம் தலைகாரணமா தெரியும்,அதுக்காக அவர் யுனிவெர்சிட்டி இல ஜோக்கிரபியில மாஸ்டர் டிகிரி முடித்தவர் எண்டு நீங்க நண்பினா நான் பொறுப்பில்லை,அவர் என்ன செய்திருப்பார் எண்டு பலருக்கு தெரியும்.
                                    பத்திரிகைத் தொழில் ரீதியாக பிரயாணம் செய்து நாடுகளை சுற்றிப் பார்த்து எழுதுவதை " ரவல் ஜெர்னலிஸ்ட் " எண்டு சொல்லுறார்கள்,சிலர் படம் எடுத்து போட்டு கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள் அவர்களை " ரவல் போட்டோ ஜெர்னலிஸ்ட் " எண்டு சொல்லுறார்கள்,
                                           சாதாரண ஆர்வக்கோளாரில் வெளிக்கிடும் என்னைபோல ஊர் சுற்றிகளுக்கு முன்னப் பின்ன தெரியாத ஒரு நாட்டில், அந்த நாட்டின் உள்ளூர் மொழி புரியாமல் சுற்றிப் பார்ப்பது எப்பவுமே, முன்னப் பின்ன தெரியாத ஒரு இளம் பெண்ணை இரவின் அமைதியில் நேருக்கு நேர் பார்ப்பது கொடுக்கும் த்ரில் போல இருக்கும்,நல்லதும் கெட்டதுமா சில விசியங்கள் நடந்தாலும் அதுவும் அந்த பயணத்தின் மறக்க முடியாத ஒரு அங்கமாக வரலாம்.
                                       நான் ஸ்பெயின் போய் சுற்றிய போது அந்த நகரங்களின் படங்கள் உள்ள நிறைய பிக்சர் போஸ்ட் கார்ட் அந்த அந்த நகரங்களில் இருந்து வேண்டி,ஆங்கிலத்தில் கொஞ்சம் காமடியா எழுதி ஒரு மத்திய ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரியின் பிள்ளைகளுக்கு அனுப்பி இருந்தேன், குழந்தைகள் வேகமா,வேறு கோணத்தில் எல்லாத்தையும் கற்றுகொள்வார்கள் என்பதால் அப்படி செய்தேன்
                                      அதைப் பார்த்த அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியாது, ஒருவேளை பெரிய உலகம் சுற்றும் அறிவுக் கொழுந்து எண்டு அறிந்து இருப்பார்கள் எண்டு அதைப் பற்றி அறிய அவர்களிடம்
                                " அந்தப் படங்கள் எப்படி இருந்தது , ஏதாவது பிடித்து இருந்ததா, ஸ்பெயின்உ அழகான காலாச்சார நாடு ,,சரி உங்களின் அம்மா என்னைப்பற்றி என்ன சொன்ணா "
                                எண்டு ஒரு முறை கேட்டேன்,
                                          " அவர்கள் படங்கள் சூப்பர் அங்கிள் , உங்களைப் பற்றி கேட்க அம்மா சொன்னா சும்மா,வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுத்துரவன் அனுப்புற படங்களைப் பற்றி தெரிந்து என்ன வரப்போகுது எண்டு சொன்னா அங்கிள் "
                                     என்றார்கள் அந்தப் பிள்ளைகள். இது எல்லாம் கலி முத்திப்போன காலக் கொடுமை என்பதால் அதுக்குமேலே ஒன்றுமே கேட்கவில்லை.
                                      அதற்காக நான் யாரையும் குறைசொல்லவில்லை . வெயிலோடும் மழையோடும் மனம்போல நடந்து புதிய புதிய நாடுகளின் ஆத்மாவோடு பேசுவது எனக்குப் பிடித்திருக்கு . அதுவே எல்லாருக்கும் பிட்டிக்கவேண்டுமென்ற அவசியமெல்லாம் இல்லைதான் .இதுதான் வாழ்க்கைப் பயணம்......

                     ...............என்ன சீவியமடா இது...........................

உங்களுக்கு எல்லாம் அறிமுகமான சஞ்சயன் செல்வமாணிக்கம் என்ற ஒரு சீரியஸ் ஆனா எழுத்தாளரும் ஒரு காமடிப் பீஸ் எழுத்தாளரும் நோர்வேயில் ஒஸ்லோ நகரத்தில் சந்தித்தால் என்ன கதைப்பார்கள் ? ஆனால் சந்தித்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் எழுத்து சம்பந்தமானது இல்லை. சஞ்சயன் அமர்க்களமான ஒரு எழுத்தாளர் என்பதை விடவும் ஒரு சிறந்த கணனி மென்பொறியியளாளர்.

                                                 நான்சொல்லும்படியாக சாதனை செய்ததெல்லாம் சமையலில். நானே அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன கழுதை மேய்ந்தாலென்ன போன்ற ஒரு சமையல்காரன். ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருப்பது போல என் கணணி அறிவு இருந்தாலும் இந்த இலற்றோனிக் வட்டங்களை விட்டு அப்பப்ப பலவிசியங்கள் பேசிக்கொண்டோம்,

                                                    உண்மையில் நான் அஞ்சாம் கிளாஸ் பையன் அன்ட்டாடிக்கா எப்படி இருக்கும் என்பது போல கொம்புயுடருக்கும் கோவேறுகழுதைக்கும் என்ன வித்தியாசம் என்பதுபோல நோண்டி நோண்டிக் கேள்வி கேட்டேன் பொறுமையாக பதில் சொன்னார். இடை இடையில் தாறுமாறா நான் எகிறினதும் உண்மைதான். அவர் என்னைக் குண்டியில் உதைத்துக் கலைக்காமல் விட்டதே பெரிய விசயம்தான்.

                                                         என் மடிக்கணணி " உனக்கும் எனக்கும் இனிப் பேச்சுவார்த்தை இல்லை " என்று நேற்று இரவு விவாகரத்து வரைக்கும் போவதுபோல மறுபடியும் கையை விட்டது. அதுக்கெல்லாம் நான் பயப்படுவேனா? ,சொல்லுங்க பார்ப்பம். அதுவும் பரசுராமர் போல என் அவலத்தில் பக்கம் நிக்க சஞ்சயன் போன்ற ஒரு கணனி மென்பொறியியளாளர். இருக்கும்போது. அதுதான் நடந்தது .

                                                  என்னோட மடிக்கணணியை அலவாங்கு பிக்கான் கோடாலி மண்வெட்டி எல்லாம் போட்டு பிளந்து எடுத்து இன்று ஒரு வழிக்குக் கொண்டு வந்தார் கணனி மென்பொறியியளாளர். சஞ்சயன். என்னைப்பொறுத்தவரை சஞ்சயன் பற்றி அவர் மென்மையான மொழியில் பொருளோடு பேசும் அவர் ஆளுமை பற்றி நிறைய விசியங்கள் எழுதலாம்,

                                       பொதுவாக ரெண்டு எழுத்தாளர் எடக்கு முடக்கா சந்தித்தாலே ஈகோ பேசவே விடாது. ஆனால் எனக்கும் கணனி மென்பொறியியளாளருக்கும் . அப்படியான ஒரு பஞ்சாயத்தே இல்லை. அது இயல்பாக ஒரு உரையாடலுக்கு நெருக்கமாக இருந்தது. என்னோட மின்னேறிஞ்சவெளி என்ற வலைப்பூங்காவை எலிப் புழுக்கை போல உருளாமல் உருண்டாலும் உருளு மூஞ்சூறுபோல என்று உட்சாகம் தந்து உருவாக்கித் தந்தவரே சஞ்சயன் தான்.

                                       பனைமரம் என்ற பல்மேரா இலங்கைத்தமிழ் உணவகத்தில்தான் சந்தித்தோம். வேறு பல தமிழரும் அந்த உணவகத்தில் சாபிட்டுக்கொண்டிருந்தார்கள். ரெண்டு உலகப்புகழ் பெற்ற உரலில் அகப்பட்டது உலக்கைக்கும் தப்புமா என்று நவீன இலக்கியம் எழுதிக் கொல்லும் இரண்டு எழுத்தாளர்கள் ஒரு மேசையில் இருப்பதைக் கொஞ்சம் தன்னும் கவனிக்காமலே மாசால் தோசையும் உழுந்துவடையும்தான் என்னவோ படைப்பாளிகளின் உலகம் என்று அவர்கள் அதை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
                                              ஒரு விசியம் மட்டும் சொல்லுறேன் , அதுவும் அதை ஆங்கிலத்தில் சொன்னால் தான் அதுக்கு வயக்கிரா குளிசை போல வீரியம் கிடைக்கும் என்பதால் சொல்கிறேன்.கணனி மென்பொறியியளாளர் சஞ்சயன் " ஹி இஸ் எ ஜென்டில்மேன். .நான் ஒரு " டமால் டுமில் டோல்கி டப்பா உடான்ஸ் " அதுதான் உண்மை. நம்பினால் நம்புங்க நம்பாட்டிப் போங்க

                          ...............என்ன சீவியமடா இது ................
நட்புநாள் வாழ்த்துக்கள் எல்லா நண்பர்கள் நண்பிகளுக்கும். முகநூல் மூலமாக உலகம் எங்கும் பறந்து பரந்து சிதறிவாழும் பள்ளிக்கால இளமைக்கால இடைப்பட்டகால நண்பர்களை என் முத்திப்போன போண்டா மூஞ்சியை எத்தைனையோ வருடங்களின் பின் அடையாளம் கண்டு பலவிதமாக தொடர்புக்கொள்ளமுடிந்ததும் உண்மைதான்
                                    குத்துக்கல்லாட்டம் இருந்து கொண்டு அங்கெ இங்கே அசைந்து நடமாடி நிஜமான நட்புகளை சந்திக்கும் உதேசங்களில் அதிகம் ஈடுபாடு இல்லாத எனக்கு முகம் அறியாமல் செட்டியார் வீட்டுக்கலியாணம் போல ஒரு படையாகக் கிளம்பிவந்து புதிதாக வந்து இணைந்துகொண்ட நண்பர்கள் நண்பிகள் எப்போதும் என்னோட அபிமான வாசகர்களாக அமையப்பெற்றது ஒரு வரப்பிரசாதம்.
                                   இப்படி இணைந்தவர்கள் பலர் உள்வீட்டுப் பிள்ளைகள் போல என் அறுவைகளையும் அலட்டல்களையும் தாங்கிக்கொண்டு அன்னியோன்னியமாகப் பழகி என் இருத்தலின் முக்கிய அடையாளமாக மாறிய அதிசயம் இந்த முகநூல் என்ற ஒன்று வந்தே இருக்காட்டி சாத்தியமேயில்லை என்று தோன்றுகிறது.
                               என் எழுத்துகளை உட்சாகப்படுத்தும் பல படைப்பு இலக்கியதில் சாதனைகள் செய்த நல்ல இதயங்கள் என் நட்பில் இருப்பது ஒரு அதிரினலின் கிக் கொடுக்கும் நிகழ்வு. அது எப்போதும் என்னை ஏதாவது எழுதவைக்கும் ஒரு அலாதியான பொழுதுகளை காலமில்லா நேரத்திலும் உருவாக்கிவிடுகிறது
                                      என்னைத் கைதூக்கி விட்டு. எழுந்து ஓட வாய்ப்புக்கள் தந்த நண்பர்கள் பலருக்கு நான் பிரதியுபகாரமாய் ஏதும் செய்ததில்லை. அவர்களுக்கும் இந்த இனிய நாளில் நன்றி சொல்லிக்கொள்வதில் மனதளவில் மனசாட்சி ஒருவிதமாகத் திருப்திகரமான நிலைக்கு வந்துவிடுகிறது
                                        மிகவும் அந்நியமான கடல் கடந்த ஒரு கலாச்சாரத்தில் இரவல்மொழி பேசி குப்பைக்கொட்டிக்கொண்டு இருந்தாலும் தமிழ் மொழியான என் தாய்மொழியின் முதுகை வளைத்து நாரியை முறிச்சு வலி கொடுக்காமல் இயல்பாக எழுத முடிந்ததே என்னோட மிகப்பெரிய பலமாகி இவளவு நட்புக்களை தலைவாழை இலைபோட்ட விருந்துக்கு அழைத்து வந்திருக்கு என்று நினைக்கிறேன்
                                         இதை எல்லாம் ஒரு பெரிய அளவிலான வரமாக நினைக்கும்போது எதெல்லாம் நடக்கவேண்டும் என்று விதி எழுதி வைத்ததோ அதெல்லாம் சரியான நேரத்தில் நடந்தேதீரும் என்பதில் நிறைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சந்தோஷ அலைகளைக் அள்ளிக்கொண்டு ஒரு சுனாமிபோல வருகிறது.

                                 ..............என்ன சீவியமடா இது ..............

இன்னும் ஒழுங்கா நாரியைச் சூடாக்கும் வெப்பம் உள்ள கோடை வரவில்லை, அதுக்கு முதலே என்னோட குடிகாரக் குப்புசாமி நண்பர்கள் கொண்டாடத்தை ஆரம்பித்துவிட்டார்கள். சுவாரசியமான, பரந்த மனது அன்பான, ஆத்திர அவரசரத்துக்கு அஞ்சைப் பத்தைப் பிரட்டிக் கடன் வேண்ட, நாட்டு நடப்புக் கதைக்க மனிதர்கள் நம்மைச்சுற்றி இருப்பது எப்புவுமே அலாதியான தருணங்கள்.

                                        நோர்வே மக்களை நண்பர்களாவைத்து இருந்தால் எப்பவுமே சோலி சுரட்டு இல்லை. கமக்கட்டில கையை வைச்சுக் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைக்காமல் இயல்பாகவே பயங்கரமான பகிடிகள் சொல்லுவார்கள் . அவர்களுடன் உரையாடும்போது எப்பவுமே நிறைய உலகத்த்தரமான விசியங்களை அறியமுடியும்.

                                                  முக்கியமாக நான் பெரிசு என் மண்டை பெரிசு என் அறிவு பெரிசு என்அனுபவம் பெரிசு என்ற அல்டர்ஈகோ எல்லாம்அவர்களிடம் இல்லை. மிக மிக அடக்கமாகப் பேசும்போதே ஒரு பெரிய உலகத்தைத் திறந்து விடுவார்கள். அதில் நமக்கு வேண்டிய எல்லாம் இருக்கும். நான் எவளவு பெரிய முட்டாள் என்று அப்போது உணருவேன்.

                                       நான் ஒரு டமால் டுமில் என்று கொக்கு தலையில வெண்ணையை வைச்சு உல்டா விடுற கதாசிரியர் என்று அவர்களுக்குத் தெரியவே தெரியாது .அதைச் சொன்னால் நம்பப்போறதுமில்லை. எனக்கு கதைவிட என்னவெல்லாம் தேவையோ அதை சத்தமில்லாமல் உருவி எடுப்பேன். அதுக்கு வெய்யில் வெங்காயம் விக்கும் கோடை காலத்தை நல்லாப் பயன்படுத்துவேன்.

                                                நோர்வே நண்பர்களோடு நட்பாக இருப்பதில் உள்ள முக்கிய நன்மை அவர்கள் ஒருநாளும் என் தனிப்பட்ட வாழ்கையில் மூக்கை நுழைச்சு எனக்கு மனைவி, காதலி, சின்ன வீடுகள், குழந்தைகள்,உருப்படியான வேலை ,பெறுமதியான கார் இருக்கா என்று சிம்மக் கல்லில அருவாள் வைச்சுத் தீட்டி வெட்டுற கேள்விகள் கேட்பதேயில்லை

                                                  இதில அமரிக்க ஆதிவாசி இந்தியர் ஸ்டைலில் இருக்கும்அண்ட்ரிஸ் நோர்வேநாட்டு கொமோண்டோ இராணுவத்தில் பணியாற்றியவர். மற்ற நண்பர் ரோவர் ஒரு ஓய்வுபெற்ற மனநலகாப்பகத்தில் வேலை செய்த நேர்ஸ். இப்படி ஒரு பட்டாளமே என்னைச் சுற்றி இருக்க என்னக்கென்ன கவலை. எனக்கென்ன குறைச்சல். சொல்லுங்க பார்ப்பம். உலகம் என் கையில்.

                                           இது நிம்மி அலெச்சான்றா எடுத்த படம் அவளுக்கு மட்டுமே என் உலகத்தில் என்னை எங்கே ஓடவிட்டு ஒரு கணத்தில் நிக்க வைச்சு எப்படி படத்தில விழுத்த வேண்டும் என்று நல்லாவே தெரிந்த சின்னப் பெண். நிம்மி ஒரு இயற்கையுடன் மனித உணர்வுகளை சமாந்தரமாகப் பயணிக்கவைக்கும் போட்டோகிராபர் .


                                     ..................என்ன சீவியமடா இது ...................


முன்னமெல்லாம் கடன் வேண்டியவர்களிடம் இருந்துதான் எப்போதும் சுடுகுது மடியப்பிடி என்று காசுப் பிரசினைகள் வரும். இப்போது அதுகள் ஒரு இஸ்தாபனமயப்படுத்தப் பட்டது போல பல சமயங்ககளில் அரசாங்கத்தோடு சில்லெடுத்துகொண்டு மோத வேண்டி இருக்கு 


                                    அன்பின் மொழி பேசும் அமைதி நாடு நோர்வேயில் இனத்துவேசம் ,நிறத்துவேசம் மறைமுகமாக கச்சிதமாகத் திட்டமிட்டபடி இயங்கிக்கொண்டிருக்கு என்று என்னைப்போல வந்தேறுகுடி நண்பர்கள் வந்த கதை வந்து நொந்த கதை சொல்லுவார்கள் .

                                         நான் மிகவும் அதிகமாக வெள்ளைமக்களுடன் நெருக்கமாக ஐக்கியமான ஒரு சாதாரண பொதுஜனன் . அதை அதிகம் நம்புவதில்லை .பல நடைமுறை பக்கச்சார்பு காரணங்களுக்காக அதை ஒருவித முயலாமை அற்ற இயலாமை என்று நினைப்பது

                                          பேயே நடுச் சாமாத்தில ஜமுக்காளதைப் இழுத்து மூடிக்கொண்டு உலாவின மாதிரி அது எனக்கும் கம்பியை பழுக்கக் காச்சி செருகி விளையாட்டுப் பார்க்குது. தலை இடியும் காச்சலும் அதுவும் தனக்குத் தனக்கு அதுவும் தண்ணி அடிச்சாத்தான் வருமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன் .இப்பதான் வலி தெரிகிறது .

                                         குற்றவாளிகளை அரசாங்கமே ஒருவிதத்தில் உருவாக்குது என்பது கொஞ்சம் நம்பமுடியாத உண்மை. ஆனால் இன்றைய நடப்பு நிலவரத்தில் டிபிலோமாடிக் திருடர்களே அரச நிறுவனங்களில் வெள்ளையும் சொள்ளையுமா இருந்துகொண்டு டெக்னிகலா திருடுகிறார்கள் .


                                    இதெல்லாம் மூன்றாம் உலக ஏழைநாடுகளில் வழமை என்று இருந்தது இப்ப அதுவே முன்னேறிய நாடுகளுக்கும் முன்னேறி வந்திட்டுது. உலக மயமாக்கல் போன்ற காரணிகள் அவர்கள் வயிற்றில் அடிச்சாலும் என்னைப்போன்ற அன்றாடம் காச்சிகளும் அதில் ஒருவிதத்தில் பாதிக்கபடுகிறார்கள் .

                                        இதுல உள்ள இன்றைய காலக்கொடுமை இந்த இன்டர்நெட். எல்லா அலுவலகமும் இப்போது ஒஸ்லோவுக்கு வெளியே எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் குந்திக்கொண்டு இருந்து. ஈ மயிலில் தொடர்பாடல் செய்கிறார்கள். ஒரு பிரசினை வந்து நாலு கேள்வி நாக்கைப் பிடுங்கிற மாதிரிக் கேட்கவேண்டுமென்றால் அந்த குக் கிராமத்துக்கு வழி தேடிக்கொண்டு போகவேண்டும்

                                                அதுக்கு ஒரு முழுநாளும்,ஏறி இறங்கப் போக்குவரத்துச் செலவும் வேண்டும்.அப்படி இல்லை என்று அவர்கள் கஸ்டமர் லைன்னைப் பிடிச்சு போன் செய்தால் " எதுவா இருந்தாலும் இன்டர்நெட் மயிலில் தொடர்பு கொள் " என்று தெனாவெட்டா வெட்டு ஒன்று துண்டு நாலு என்றது போல இரக்கமில்லாமல் சொல்லுறார்கள்.

                                             யாரோடு நோகேன்யார்க்கெடுத்து உரைப்பேன் என்று மாணிக்கவாசகர்  போல பொறுமையாகப் போக ஏனோ வைராக்கியம் விடுகுதில்லை நேராகவே போய் அடிச்சு உடைச்சுப்போட்டு கொஞ்சநாள் ஜெயிலில் நின்மதியாக இருக்கலாம் போல இருக்கு.இந்த மாதிரி நேரங்களில் நாலு நாட்டு வெடிகுண்டு செய்ய அட்வைஸ் கேட்க நண்பர்களும் இல்லை

 ...............அம்மாவானதான் சொல்லுறேன்.என்ன சீவியமடா இது...............