Thursday, 12 November 2015

ஓடிட்டர்

நம் வாழ்வில் கடந்து போன மனிதர்கள் சில நேரம் ஒரு காலத்தின் முழுமையான புரிதலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களை சாதாரணமானவர்கள் அல்லது அசாதாரணமானவர்கள்   என அவ்வளவு சுலபமாக அட்டவணைப்படுத்திவிட முடியாது. அதிலும்  ஈகோ என்னும் தற்பெருமைக்  குணம் ஆழமானது, புதிரானது. அதை முற்றிலும் புரிந்துகொள்ள நிச்சயமாக  முடியாது.  ஏன், சில நேரங்களில் அந்த மனிதர்களுக்கே  அது போட்டு சிப்பிலி ஆட்டுவதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை !

                                        ஓடிட்டர் வீடு  விளாத்தியடி ஒழுங்கையின் முகப்பில் இருந்த வெளிப் படலையோடு அரிநெல்லி மரம் சாஞ்சுகொண்டு நின்ற கல் வீடு. அதன் நீண்ட பின்வளவு வீராளி அம்மன் கோவில் பின் வீதியில் முடியும் .எங்கள் ஊரில் இருந்த முக்கியமான பரம்பரையாகப் படித்த வீடு என்று அதை சொல்லலாம் . அதில வசித்த ஓடிட்டர்  அவரும் படித்த ஒரு முக்கியமான ஆள். காரணம் அவர்  வாயத் திறந்தால் சேக்ஸ்பியர் வீட்டுக் கோடிக்கால ஓடிவந்த இலக்கண சுத்தமான ஆங்கிலம்  சட சட எண்டு வெள்ளாவி பிடிக்கிற கிடாரத்தைச்  சரிச்சு விட்ட மாதிரி விழும்.  


                                       ஒரு உதாரணம் சொல்லுறேன். ஒரு நாள் பகல் அவர் வீட்டுப் படலைக்க ,சைக்கிளில் பின்னுக்குப் பெட்டி கட்டி அதில மீன் கொண்டு திரிஞ்சு விக்கிற ,மீன்காரன் வந்து


                                "  அக்கோய்,,அக்கோய்  இண்டைக்கு அறுக்குளா துண்டு இருக்கு அக்கோய்,,செம்பாட்டுக் கொய்யும்,,,சின்னத் திரளியும்  இருக்கு அக்கோய்,,சொதிக்குக் கணவாய் இருக்கு அக்கோய்,,கருங்காலி நண்டும்  இருக்கணை  அக்கோய்  "


                                          எண்டு கையில வைச்சிருந்த ரபர்ப் பந்து  ஹோர்ன் அடிச்சுக் கத்திக்கொண்டு இருந்திருக்கிறான். ஓடிடர் மனைவி கட்டுக் கிணத்தடியில் குளிச்சுக்கொண்டு நிண்டு இருக்கிறா 


                                 "  இஞ்சேருங்கோ ,,அவனிட்ட என்ன இருக்கு எண்டு கொஞ்சம் பாருங்கோ ,,நான் குறுக்குக்  கட்டோட நிக்குறேன்,நாலுவாளி தலைக்கு ஊத்திப் போட்டு ,டக்கெண்டு  உடுப்பை மாத்திக்கொண்டு ஓடி வாறன்,,ஒருகாப் போய்ப் பாருங்கோ ,,அவன் அங்கால போயிடுவான் "


                                       "ஐ சே ஐ ஆம்  பிஸி வித் ரீடிங்,  அவனோட நான் போய் மல்லுக்காட்ட ஏலாது ,,நீர் போய் வேண்டும், எனக்கு இங்க அரியண்டம் தரவேண்டாம் நான் இப்ப முக்கியமான ஆர்டிகள்  வாசிச்சுகொண்டு இருக்கிறான் , திஸ் இஸ் ரியலி நோன்செசென்ஸ் "


                                    "  ஒருகாப் போய்ப் பாருங்கோ ,,அவன் அங்கால போயிடுவான்..அவன் வேதக்காரன்   நாளைக்கு ஞாய்ற்றுக் கிழமை வரமாட்டான் ,,டக்கெண்டு  எட்டி  ஒருகாப் போய்ப் பாருங்கோ ,,அவன் அங்கால போயிடுவான் "


                                 "  திஸ் இஸ் ரியலி நோன்சென்ஸ்,, ஹோவ் மெனி டைம்ஸ் ஐ டோல்ட் யூ டோன்ட் டிஸ்ட்ரப் மீ வென் ஐ ரீடிங் நியூஸ் பேப்பர் "


                             "  அவன் போயிடுவான் ,,நான் டக்கெண்டு பாவாடைக்கு மேல சீலையைச் சுத்திக்கொண்டு வாறன் ..சுருக்கெண்டு எட்டிப் பாருங்கோ "


                                     வெறும் உடம்பில சாரம் மட்டும் கட்டிக்கொண்டு சாய்மனைக் கதிரையில் இருந்து  " டெய்லி நியூஸ் "   ஆங்கிலப் பத்திரிக்கையில் " எடிட்டோரியல் "  வாசித்துக்கொண்டிருந்த ஓடிட்டர் ,மேலுக்கு ஒரு அயன் செய்த சேட்டை தூக்கிப் போட்டு, சண்டுல்ஸ் தோல் செருப்பைக் கொழுவிக்கொண்டு, வூடி அலன் போல அவர் போடுற  அரைவட்டக் கண்ணாடியை  போட்டு, நிலைக் கண்ணாடியில் நிண்டு தலையில  சீப்பால இந்தா அந்தா எண்டு இருந்த  நாலு மயிரை இழுத்து நடுமண்டையை மறைச்சு  போட்டு, மணிக்கட்டில  மணிக்கூட்டைக் கொழுவி அமதிக்கொண்டு , வேண்டா வெறுப்பாகப்  படலை வாசலுக்கு அவனிட்டப் போக ,அவன் 


                       " அய்யா ,,அறுக்குளா துண்டு இருக்கு ,,தலைத் துண்டு ,,அம்மா எப்பவும் வேண்டுவா ஒரு கண்டம் வெட்டவே ,,புளிக்குழம்பு வைக்க நாலு வீட்டுக்கு சுண்டி இழுக்கும் ஐயா "


                         " வட், வட் டு யூ  மீன் "


                       " அய்யா..அதுதானே சொல்லுறன் அறுக்குளா மீன் எண்டு "


                      " ஐசே  ஐ டோல்கிங் வித் யூ இன் இங்கிலிஸ் , வட் டு யூ  மீன்"  


                        " அய்யா..அதுதானே சொல்லுறன் அறுக்குளா மீன் எண்டு அம்மா வீட்டில இல்லையோ."


                        " யூ ஸ்டுபிட் இடியட் ,   ஐசே  ஐ டோல்கிங் வித் யூ இன் இங்கிலிஸ் ,,வட் டு யூ  மீன் "

                           " வேற என்ன மீன் இருக்கோ எண்டு கேட்குரின்களோ ..பாரை மீன்  ,,கொய் ,,திரளி எல்லாம் இருக்கு ,,எங்க அம்மாவிண்ட சத்தத்தைக் கானேல்லயே  ,,அவா இவளவு கேள்வி கேட்க மாட்டாவே  நான் சொல்லுற மீனைக் கேள்வி இல்லாமல் வேண்டுவாவே "

                        " யூ,,  அன்எடிகேட்டட்  ஸ்டுபிட் , திஸ் இஸ் ரியலி நோன்சென்ஸ் , ஐ டோல்கிங் வித் யூ இன் இங்கிலிஸ் ,,வட் டு யூ  மீன் "     

                             "  அய்யோ,இண்டைக்கு மீன்காரன் மாட்டிட்டான் போலக் கிடக்கே ,இதென்ன சீவியம்  இந்த மனுஷனுக்கு ஆர் எவர் எண்டில்லாமல் வாறவன் எல்லாரோடையும் இங்கிலிலீசில பினாத்திறதே வேலையாப் போட்டுதே "  

                                      என்று சொல்லிக்கொண்டு  நல்ல காலம் இதுக்குள்ள அவரோட மனைவி வந்திட்டா. 

                                  அவர்கள் வீட்டுக்கு தேங்காய் பிடுங்க நட்சத்திரம் என்ற மனுஷன் வந்தாலும்  ஓடிட்டர்  இப்படிதான் கதைப்பார். ஓடிட்டர்  வீட்டுக்க நிக்கிறதை நட்சத்திரம் கண்டால்  படலைக்க நிண்டு கொண்டு  "  தேங்காய் புடுங்க வேண்டுமா " எண்டு கேட்க மாட்டார்  ,அவர்  ஒரு விதமான அமரிகன் இங்கிலிஸ் கதைக்கிறன் பேர்வழி எண்டு 


                                     "   சேர் தேங்காஸ்  புங்காஸ்  .  மேடம் கோக்கனட் மரத்தில    தேங்காஸ்  புங்காஸ் ....அய்யா கோக்கனட்  மரம்  கிளைமிங்  பிறகு வட்டுக்குஸ் இருந்து  தேங்காஸ்  புங்காஸ்  ,,அம்மா தேங்காஸ்  புங்காஸ் கோக்கனட் மரம் க்ளைமிங்    "


                                       எண்டு ஒரு புதுவிதமான நெளிப்புக் காட்டுவார் .  ஓடிட்டர் பொஞ்சாதிக்கு ஏன் நட்சத்திரம் அப்படி கேட்குது என்று தெரியும். 


                                    "  ஹஹஹஹா  அய்யோ,,இந்த வீட்டுக்க நாள் முழுதும் நான் கிடந்தது இங்க நடக்குற கூத்துக்கு  சிரிச்சு சிரிச்சு அடிவயிறு நோகுது  இதுக்குள்ள நீயும்  வந்து என்ன சீலம்பாய்க்குச்  சிரிப்புக் காட்டுறாய் .." 


                               என்று  அவா வஞ்சகம் இல்லாமல் சிரிப்பா. 


                                      ஓடிட்டர் பென்சன் எடுக்க யாழ்ப்பாணம் டவுனுக்கு தான் பேங்க்க்குப் போக வேண்டும். பொஞ்சாதியையும் கூட்டிக்கொண்டு போவார். அவர்கள் பஸ் எடுக்கிறது எங்களின் வீராளி அம்மன் கோவிலுக்கு அருகில் அம்மன் கிளை சங்கக்கடைக்கு பக்கத்தில இருந்த பஸ் தரிப்பிடத்தில இருந்து. அதில  " ஹோல்டிங் பிளேஸ் " என்று ஆங்கிலத்திலையும்  , தமிழில பஸ் தரிப்பிடம் என்றும்,சிங்களத்திலையும் எழுதிய  ஒரு சின்ன தகர போட் லைட் போஸ்ட்டில கட்டி இருக்கும் .


                                    சில நேரம் மினிபஸ்காரன் லைனுக்கு டேர்ன் பிடிக்கிற கெதியில கொஞ்சம் அவசரத்தில அந்த போட்டுக்கு கொஞ்சம் முன்னால, அல்லது பின்னால நிற்பாட்டி ஆட்களை ஏத்தி அடைவான். ஓடிட்டருக்கு பஸ் ஹோல்டிங் பிளேஸ் என்ற போட்டுக்கு சரியா குத்தி பிரேக் அடிச்சு நேர நிக்கவேணும் , இல்லாட்டி உள்ளுக்க ஏறின உடன , இடிச்சுக்கொண்டு முன்னுக்கு போய் டிரைவரிட்ட 


                                "   ஐசே,,டூ யூ நோ வட் இஸ் த மீனிங் போர் ஹோல்டிங் பிளேஸ் "


                            எண்டு கேப்பார்,,அவன் பயந்துபோய் அவசரத்தில கியரைப் போட்டு எடுக்கிறதா ,அச்சிலேடரில் வைச்ச காலை அமத்துறதா ,பிறேக்கில வைச்ச காலை மிதிக்கிறதா என்று அமளி துமளியில் இந்தாள் என்ன சொல்லுது எண்டு முழிப்பான் 


                            "   ஐசே, ஐ ஆஸ்கிங் யூ,,கிவ் மி த ஆன்சர்,,,டூ யூ நோ வட் இஸ் த மீனிங் போர் ஹோல்டிங் பிளேஸ் ,,அண்ட் டூ யூ நோ வை தேர் இஸ் எ சைன் போட் விச்  ரிட்டின் இன் இங்கிலிஸ் ஆஸ் ஹோல்டிங் பிளேஸ் "


                             "அய்யோ அவனை விடுங்கப்பா,,அவனுக்கு எங்க இங்கிலிஸ் விளங்கப்போகுது,, இப்ப அவனுக்கு கோபம் வர எங்களை இறக்கி நடக்க வைக்கப் போறான், பிறகு நாங்க போறநேரம் பேங்க் பூட்டிப் போடுவாங்கள் , பேசாம வந்து இருங்கோ ..என்ன சிப்பிலயாட்டமடா ஆடுது இந்த மனுஷன் பஸ்சுக்குள்ள ,,இதில நான் இருந்த சீட்டில இருங்கோ "


                                      என்று அவரைப் பிடிச்சு இழுத்துக்கொண்டு வந்து அவா  சீட்டில் இருத்திப் போடுவா, பிறகு அவா பக்கத்தில நிண்டுகொண்டு டவுனுக்குப் போவா 


                                    இப்படியான ஒருவரிடம் தான் நான் ஆங்கிலம் படிச்சேன். அதை நினைக்க எனக்கே குந்தின இடமெல்லாம் சிந்தின மூக்குப் போல நினைவுகள் ஓடுது , அப்ப  படிச்ச நேரம் நடந்த சம்பவங்களை மறக்காமல் இப்ப எழுத வைப்பதே அந்த மனிதரின் விசித்திரமான அணுகுமுறைதான் .

                                      ஆங்கிலம் என்ற அந்த அடிமைமொழி,  அதைப் படித்த  மனிதர்களை  உலகத்தைப் படித்த மேன் மக்கள்  என்ற அடையாளம் போல இருந்த எங்களின் ஊரில், ஓடிட்டர்  அரசாங்கத்தில் ஓடிட்டர்  என்ற கணக்காய்வாளர் வேலை செய்து ஓய்வுபெற்ற கிளாஸ் வன் கவன்மென்ட் செர்வென்ட். அவரை கிளாஸ் வன் கவன்மென்ட் செர்வென்ட். என்று சொல்லாமல் ஓய்வுபெற்ற அரசாங்க சேவை ஊழியர் என்று சொன்னாலே அவரோட பெறுமதி இறங்கிப்போய்விடும்.  

                            காலையில் இருந்து இரவுவரை  வீட்டை கழுவித் துடைத்து ஆக்கிப் பெருக்கிச்  சமைத்துப் போட்டு ரெண்டுகாலில் இறக்கை கட்டி ஓடி ஓடி  இயக்கிக்கொண்டிருந்த அவர்   மனைவியோடு தனியா வசித்தார் அந்த வீட்டில். அவர் மனைவியை பரிபூரணம் அக்கா என்று என் அம்மா வயதுப் பெண்கள் சொல்லுவார்கள்.  பரிபூரணம் அக்காவுக்கு எடிக்கேசன் பின்னணி இல்லை.முக்கியா அவா கணவர் ஓடிட்டர் கதைக்கிற இங்கிலிஸ் விளங்கப் படிப்பறிவு இல்லை. ஆனால் புருஷனை நல்லாப் படிச்சு வைச்சு இருக்கிறா.  

                              அவருக்கு மூன்று பிள்ளைகள் . மூன்றும் ஆம்பிளைப் பிள்ளைகள் , ஒருத்தன் ரேடியோலோயிஸ்ட்  ஸ்பெசலிஸ்ட் டொக்டர். ஒருத்தன் மரைன் என்யினியர் ,ஒருத்தன் சாட்டட் எக்கவுண்டன். ஏறக்குறைய யாழ்பாணதில் எல்லாருக்குமே இதுதான் தங்களின் பிள்ளைகள் மீதான எதிர்காலக் கவுரவக் கனவு . ஓடிட்டர் அரசாங்க உத்தியோகம் பார்த்ததால் இடஞ்சல் இல்லாமல் பிள்ளைகளை படிக்க வைத்தார். அவங்களும் படிப்பில வரிப்புலி .அதால சொல்லிவச்ச மாதிரி அவர் சொன்ன பாதையில் பட்டதாரிகள் ஆனார்கள். ஆகின கையோடு கலியாணம் கட்டி , வெளிநாட்டுக்கு போட்டாங்கள் 


                                அந்த நாட்களில்  பாடசாலையை  அண்டிபார் பூச்சி மருந்து குடிச்ச மாதிரி வெறுத்துக்கொண்டும்,  அதில கெந்திக் கெந்தி  அரும்பட்டில வகுப்புக்கள் தாண்டி  படித்துக்கொண்டிருந்த  வயதில் அவரிடம்தான் நான் தனிப்பட பாடசாலை முடிந்தபின் ஆங்கிலம் படித்தேன். பின்னேரங்களில் அவரிடம் ஆங்கிலத்தைக் கண்டு பிடிச்சவனைத் திட்டித் திட்டிக் கொண்டுதான்   போவது. ஆங்கிலம் எனக்குப் பிடிக்காத  கனவிலையும் கழுசான்  கழண்டு விழவைத்து ஓட ஓடத் திரத்திற  பாடம், அதை வேறுவழி இல்லாமலும் , அம்மாவின் ஆக்கினையால்  ஓடிட்டர் இடம் போய்ப் படித்தேன். 


                                   ஓடிட்டர் எங்கள் ஊரைச்சேர்ந்தவர் இல்லை. அவர் மனைவி தான் தலைமுறைகளாக  டிஸ்ட்ரிக் ஜட்ச் ராஜரட்னம் என்ற நீதிபதிக் குடும்பத்தைச்  சேர்ந்த எங்கள் ஊர் அடி.  ஓடிட்டர் பருத்தித்துறைப் பக்கம் உள்ள ஒரு கிராமத்தில்  உள்ள ஒரு சின்ன  இடத்தைச் சேர்ந்தவர். வல்லிபுரப்பரியாரியின் பரம்பரையில் வந்தவர் .அதைவிட  இலங்கையிலேயே அறிவுக்குப் புகழ்பெற்ற ஹார்ட்லி கொலிச் இல புகழ்பெற்ற ஆசிரியர் பூரணம்பிள்ளையோடு ஒரே வகுப்பில்  படித்தவர்  என்று சொல்லுவார். அதையும் ஆங்கிலத்தில்தான் சொல்லுவார்.


                                   அவசரகாலச் சட்டம் போட்டால் நாடு எப்படி இருக்குமோ அதுபோலதான் அவர் வீடும் இருக்கும். இங்கிலிஸ் அவர் வீட்டில உலவும் காற்றிலும் இருந்தது. " டீசென்ட் டிசிப்பிளின்  " கண்டிப்பில் அங்கால இங்கால யாரும் அசைய முடியாது. அவர் மனைவி ஒரு அப்பாவி . அவாவின் ஆங்கில அறிவு எனக்கு அந்தநேரம் இருந்த அளவுதான் எண்டு நினைக்கிறேன். ஆனாலும் ஒரு மனைவியாக, ஒரு அம்மாவாக  வாழ்வதுக்கு,பிள்ளைகளை அன்போடு  பண்பு சொல்லி வளர்க  ஒரு அந்நிய மொழி தேவை இல்லையே என்பது போல வெற்றிகரமாக வாழ்ந்துகொண்டிருந்து பெண்மணி.


                                    ஓடிட்டர் எனக்குப் பாடசாலைப் பாடத்திட்டத்தில் இருந்த பாடப் புத்தகத்தை வைத்து சொல்லித்தரமாட்டார். அவருக்கு என்ன அந்த நேரம் தோன்றுதோ அதை சொல்லித்தருவார், இலக்கணம் ,இலக்கியம் என்று அது ஒரு இலக்கிலாமல் போகும். சிலநேரம் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையில் வரும் கட்டுரைகள் வாசிக்க தருவார். ஆனால் ஆங்கிலம் மட்டும் தங்கப் பவுன் போல மிகத் தரமா இருக்கும் . அதெப்படி அதன் தரம் எனக்கு விளங்கியதென்றால் அவர் சொல்லுறதுகள் ஒண்டுமே உடன விளங்காது. அதை வைச்சுதான் தரம் என்டுறேன்.


                                " டேய் , இண்டைக்கு இடியம் அண்ட் ப்றேசஸ் வேர்ட்ஸ் சொல்லிதாரன்,, "


                                  "  சரி  சேர் "

                                   " காதை அங்க இங்க விடாமல் வடிவாக் கேள் இதுதான் ஆங்கில மொழியின்  புலமைத்துவ அழகு, அதன் நுனி நாக்கு  நளினம்.."

                                    " ஓம்  ஓம்  சேர் "

                             "  இதை மட்டும் அப்பப்ப கதைக்கிற  நாலு வார்த்தைகளுக்கு நடுவில தட்டி விட்டா அந்த உரையாடல் நீயும் படிச்சவன் எண்டு நாலுபேர் நினைக்கிற மாதிரி  ப்ளையிங்க்ஸ் கலர்ஸ் இல பறக்கும்.. "

                              "  ரைட்  சேர் "

                              " எங்க உனக்கு தெரிஞ்ச ஒரு இடியம் சொல்லு பார்ப்பம்.."

                 " எனக்கு  அந்த இடியப்பமும் பிரஸ்சும் தெரியாது  சேர் "

                        "  என்னடா  சொல்லுறாய் ,,அதுக்குப்  பெயர் இடியம் அண்ட் ப்றேசஸ் வேர்ட்ஸ் "

                                       "  அதுதான்  எனக்கு  இண்டைவரை  ஒண்டுமே தெரியாது "

                                         "  சரி நான் சொல்லுறன்  To hit the nail on the head   என்று ஒரு வசனம் இருக்கு, அதுக்கு என்ன மறைபொருள் அர்த்தம் சொல்லு பார்ப்பம் ,,,  "  

                              " நடு மண்டையில் கறல் ஆணியை வைச்சு அடிச்ச மாதிரி  " 


                           " டேய்..இப்ப இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , ,ஒழுங்கா பதில் சொல்லு, எனக்கு விசர் வரப் பண்ணாதை " 


                                "To hit the nail on the head..  நடு மண்டையில் கறல் ஆணியை வைச்சு அடிச்ச மாதிரி  " 


                                 "   டேய் இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , அப்படி இல்லையடா ,,அதுக்கு விளக்கம்  டு டிஸ்க்ரைப் எக்ஸ்ச்சாட்லி வட்  ஸ்  கேசிங் எ சிட்டுவேசன் ஓர்  ப்ரோப்பிளம் "

                                
                                          அதைக் கேட்டவுடன எனக்கு உண்மையாவே  என்னோட  நடு மண்டையில்  கறல் ஆணியை வைச்சு அடிச்ச மாதிரி இருக்கும், அதுக்குப் பிறகு  விளக்கம் கேட்பார் நானும் அது இது  என்று வேற என்னவோ அர்த்தம் சொல்லுவேன் ,

                               " டேய் கேள்விக்கு பதில் மட்டும் சொல்லு, ஜஸ்ட் ஆன்சர் த குவஸ்டியன் புரோப்பர் வே,,தட்ஸ் ஒல்..நீ  அது,,இது  ஆத்தேண்ட   சீலைக்க  மயிலிறகு  எண்டு என்னடா  சடையிராய்,,,இங்கிலிஸ் நீ நினைக்கிற மாதிரி சும்மா லேசுப்பட்ட லான்குவேச் இல்லை..சறுக்கினா சங்கு ஊதிப்  பால் ஊத்திப்போடும் "


                                               இப்பிடித்தான் அவர் பாடம் தொடக்குவார். பிறகு எல்லாத்துக்கும் நான் இங்கிலிசில் சொல்ல வேண்டும் விளக்கம், படக்கு படக்கு என்று சுளகு அடிச்ச மாதிரி அவர்  " இடியம் அண்ட் ப்றேசஸ் வேர்ட்ஸ்  " வைச்சு வசனங்கள் சொல்லுவார் . நான் பின் தொடர முடியாமல் தடுமாறுவேன்.


                               அவரோட ஆங்கில இலக்கிய அறிவு அட்லாண்டிக் சமுத்திரம் போல, நிறைய மத்தியகால ஆங்கிலக் கவிஞ்சர்கள் ,எழுத்தாளர் ,நாவல்,சிறுகதை,நாடகம் ,புனைகதை  என்று ஆங்கிலத்தில் தொடக்கினால் சைவக் கோவிலில் கந்தபுராணம் ஒருவர் படிக்க மற்றவர் பொருள் சொல்லுற புராணபடிணம் போல அவரே தனக்குள்ளே சொல்லி ரசித்து ரசித்து விளாசுவார்.  அவர் சொல்லும்போது முடிவில்லாத அறிவின் பிரகாச ஒளி அவர் முகத்தில் தேம்ஸ் நதிபோலப் பாயும் . 


                           அவரோட  கிராமர் எப்பவுமே வெள்ளிகிழமை போல சுத்தம். ஆனால் ஒருவித  வெத்திலை போட்ட வாய்போல உச்சரிப்பில்  கதைப்பது சிலநேரம் குழப்பமா இருக்கும் .அதைத்தான்  உண்மையான ஆங்கிலம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் அவரிடம் படித்த  நாட்களில்,ஆனால் சில வருடங்களின் பின் அவர் உச்சரிப்பு யாழ்ப்பாணப் பனங்காய்ப் பணியாரத்   தமிழ் உச்சரிப்பில் ஆங்கிலத்தை உச்சரித்தார் என்று களவா " அடல்ஸ் ஒன்லி " இங்கிலிஸ் படங்கள் ரீகல் தியேட்டரில் பார்க்கக் கிடைத்த போதுதான் அறிய முடிந்தது.  


                                   ஆனால் எனக்கு அவர்  படிப்பிக்கிற ஸ்டைலே வித்தியாசம். அவர்கள் வீட்டு ஹோலில் ஒரு பிரம்புப் பின்னல் கதிரை இருந்தது, அதில இருந்துகொண்டு முன்னுக்கு ஒரு பலகையைக் குறுக்க வைச்சு அதில கொப்பி புத்தகம் வைச்சு எழுத வேண்டும், அந்தப் பலகை அவரோட பிள்ளைகள் வைச்சுப் படிச்சு பலகை. ஓடிட்டர்  ஹோலின் தொங்கலில் இருந்த பெரிய மகோஹனி மேசையில ஏறி ஒருகாலைத் தொங்க விட்டு,மறுகாலை தொங்கவிட்ட காலின் துடையில் தூக்கிப்போட்டு ரமண மகரிசி போல இருப்பார்.


                                  மேசைக்குப் பக்கத்தில பர்மாத் தேக்கில செய்த கைதடி வைச்சு இருப்பார்.  அதை அவர் நடக்கும் போது சிலநேரம் கொண்டு திரிவார் ,அவர் நடக்கிறதும் அளந்துதான் அதிலயும் கணக்கு வழக்குதான். .கைத்தடியை இங்கிலிசில் எப்பவும் வாக்கிங் ஸ்டிக் எண்டுதான் சொல்லுவார், அடிக்கடி அதைத் தடவி தடவிப்  பார்ப்பார், அதுக்கு கைப்பிடிக்கும் வளைவில் பித்தளைப் பூன் போட்டு இருந்தது. அவர் கேட்கிற கேள்விக்கு நான் ஏதும் பிழையா சொன்னால் கப்பூரம் பத்த வைச்ச மாதிரி அந்தாளுக்கு கோபம் வரும் ,உடன 


                              " டேய்..இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் ,ஒழுங்கா பதில் சொல்லு , இல்லாட்டி இங்க இருந்து என்னோட நேரத்தையும் உன்னோடு நேரத்தையும் வினாக்க தேவை இல்லை,,சொல்லிப்போட்டன் ..ஒழுங்கா பதிலை சொல்லடா ,,,டேய் படியாதவனை எருமை மாடும்  மதியாதடா ,"


                               என்று தொடங்குவார் . எனக்கு எப்பவுமே என்னோட நேரத்தையும் அவரோட  நேரத்தையும் வினாக்கிற மாதிரிதான் அந்த ஆங்கிலம் என்னோட உயிரையும் அவரோட சீவனையும்  எடுத்துக்கொண்டு இருந்தது. அவருக்கு கோபம் வந்தா  அவரோட பொஞ்சாதி அறைக்கு வெளிய தலையை நீட்டி 


                          " ஏனப்பா அவன் பொடியனை இந்தப் பாடுபடுத்தி வெருட்டுரீங்க ,,இப்படி வெருட்டினா அவன் பயப்பிடப் போறான் " என்று சொல்லுவா.


                       " இஞ்சேரும், அப்ப நீர் வந்து இங்கிலிஸ் படிப்பியுமன் , "


                             "   என்னப்பா  நீங்க   என்னை  வெருட்டுற மாதிரி     அவன் பொடியனை இந்தப் பாடுபடுத்தி வெருட்டுரீங்க"

                                    " என்னவோ பக்கிங்ஹாம் பலஸ்சில  குயின் எலிசபெத்துக்கு நீர்  தான்  இங்கிலிஸ் சொல்லிக் கொடுத்த மாதிரி நீர் கிடந்தது துள்ளுரீர் , "

                                         "கொஞ்சம்  அன்பா  சொல்லிக்கொடுங்கோவன் ,,அவன் பயதில கிடந்தது மிரளுறான் "

                                            "  நீர் உம்மட வேலையைப் பார்த்துக்கொண்டு அங்கால போம்,எனக்குத் தெரியும் என்னண்டு படியாத மாடுகளை வழிக்குக் கொண்டுவாறது எண்டு , "

                              "  அவன்  பாவம்  எல்லோ,,அவனுக்கு விளங்கிற மாதிரி மெல்ல மெல்ல சொல்லிக்கொடுங்கோப்பா  "

                              " இப்ப நீ  எழுதடா நான் சொல்லுற வசனத்தை பாஸ்ட் பார்டிசிப்பில் டென்ஸ் இல கொண்ஜன்ச்சன் ,ஹெல்பிங் வோர்ட்ஸ் எல்லாம் சரியான இடத்தில போட்டு...  " 

                                என்று பழையபடி சத்தியசோதனை தொடங்கும் , எப்படியும் ஒருநாளுக்கு பத்துத் தரம்  " இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , " என்று பேச்சு வேண்டுவேன். ஆனால் ஒருநாளும் அவர் வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சதோ,அது ரெண்டா உடைஞ்சதோ நடக்கவில்லை. 


                                 இப்படிதான் ஒரு சிலபஸ் இல்லாமல்  இங்கிலிஸ் கிளாஸ் நடக்கும் அதிகம் அவர் அவரோட வீட்டில உள்ள,வீட்டைச் சுற்றியுள்ள பொருட்களை வோக்கிங் ஸ்டிக்கை தூக்கி சுட்டிக்காட்டி அவைகளின் பெயர்சொல்லைச்  சொல்லச் சொல்லுவார்.அதுவும் ஒழுங்கா முன்னுக்கு வொவல்ஸ் என்ற ஆங்கில உயிரெழுத்துக்கும் ,கொண்சொனேன்ட் என்ற மெய்எழுத்துக்கும் ஏற்ற மாதிரி எ என்றும் அன் என்றும் பாவித்து சொல்ல வேண்டும். இல்லாட்டி 


                              " இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , "   வரும் .

                              ஒரு நாள் அவரோட ஹோல் ஜன்னலுக்கு அருகில் கட்டுக் கிணத்துக்கு அருகே கொடியில வெள்ளை நிற பெண்களின் மேலே போடும்  உள்ளாடை  காஞ்சுகொண்டு காத்துக்கு ஆடிக்கொண்டு இருந்தது.ஓடிட்டர் வோக்கிங் ஸ்டிக்கால அதைக் காட்டி 


                            " டெல் மீ நொவ்,,வாட் இஸ் தட், வாட் இஸ் த நேம் போர் தட்  வுமென் அண்டர் கார்மென்ட் , டோன்ட் டெல் மி த ஷோர்டிங்போர்ம் ,,ஐ வான்ட் த எக்ஸ்சாட் வோர்ட் போர் தட் "


                             என்று கேட்டார்.எனக்கு அதன் பெயர்  சுருக்கமா  பிரா என்று தெரியும்.  ஓடிட்டர் அதிண்ட ஷோர்டிங்போர்ம் சுருக்கம் வேண்டாம்  எக்ஸ்சாட் வோர்ட் தான் வேணும் எண்டுகொண்டு நிக்குறாரே  என்று ஜோசிக்க ,அதிண்ட உண்மையான பெயர் சரியா வராமல் அரைகுறையா 


                               "  பிரக்கிராசியர்   "


                                                           என்றேன் ..அந்தாளுக்கு கொதி பக்கெண்டு பத்திக்கொண்டு வந்திட்டுது 


                            " டேய், இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , பிரக்கிராசியரரோ ,,,டேய்  அது  லோயர், அட்வகேட்  அவங்களத் தாண்டா,,தமிழில பிரக்கிராசி,  அப்புக்காத்து எண்டுறது, ஒழுங்கா சொல்லடா ,


                                  என்றார் ,எனக்கு  அதன் முழுமையான பெயர் ஒழுங்காத் தெரியாது என்றேன் .


                             ,"  வாற விசருக்கு இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் , டேய் அதுக்குப் பெயர் பிறசியர்  டா  brassiere இது  இங்கிலிஸ் சொல் இல்லை,பிரெஞ்ச் சொல் , brassiere was gradually shortened to bra , அது மத்திய கால ஆங்கில  Victorian dress reform இல இருந்து  வந்தது  


                                                      என்றார்,,அது பிறசியரா இருந்தா என்ன   பிரக்கிராசியரா இருந்தால் என்ன, அதைவிட அது இங்கிலிஸ் சொல் இல்லாமல் பிரெஞ்ச் சொல்லா இருந்தாலும்  அதைத் தெரிந்து எனக்கு என்ன வரப்போகுது என்ற நினைச்சுக்கொண்டு இருக்க அந்தாள் அதை வைச்சு என்னவும் வசனம் எழுத சொல்லப்போகுதோ என்று நினைக்க ,நல்லகாலம் அப்படி ஒண்டும் கேட்கவில்லை. அதுக்குப் பிறகு கிணத்துக் கொடியில ஏதாவது தொங்கினா முதலே ஜோசிச்சு வைக்கிறது அதுக்கு என்ன இங்கிலிஸ் சொல்லு என்று. 


                                                  ஓட்டிடர் சில நேரம் வீட்டுக்கு போய் படிச்சுக்கொண்டு வரச்சொல்லி ஹோம் வேர்க் தருவார். ஒருநாள் எரிக்கா யங் எழுதின ஸ்டான்டிங் பிப்போர் த ஸ்டுடென்ட்ஸ்  என்ற கவிதையத் தேடி எடுத்துக்கொண்டு வந்து தந்து 


                                         ," டேய், இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் தெரியும் தானே ,  வீட்ட போய் அர்த்தம் அறிந்து முடிந்த அளவு கண்டுபிடிச்சு நாளைக்கு சொல்லவேண்டும் இல்லாட்டி , இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும்


                                  என்று சொன்னார், அந்தக் கவிதையை என்னோட அம்மாவிடம் காட்டி அதுக்கு என்ன அர்த்தம் ,அதில உள்ள சொற்களுக்கு என்ன அர்த்தம் எண்டு கேட்டேன் .என்னோட அம்மாவுக்கு பயங்கர ஆங்கில அறிவு இருந்தது. அவா இளவயதில்  ஆங்கில மீடியத்தில் மலேசியாவில் படித்தவா அம்மா கவிதையை ஒரு முறை வாசித்துப் பார்த்தா,பிறகு   என்னை ஒரு முறை பார்த்தா 


                           "   இதென்ன பொயம் ,,வில்லங்கமான கவிதை போல இருக்கே  ,,யார் ஓடிட்டர் தந்தவரோ இதைப் படிக்கச்சொல்லி "


                    "  ஓம் அவர்தான் நாளைக்கு விளக்கம் சொல்லச் சொன்னார் ,இல்லாட்டி  வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் எண்டு சொன்னார் "


                      "   அதென்ன  வோக்கிங் ஸ்டிக் ,,ஹ்ம்ம்,,,இதில வாற விசியங்கள் இப்ப இந்த வயசில உனக்கு கட்டாயம் தெரியத்தான் வேண்டுமோ ..ஓடிட்டர் ஏன் இதை படிக்கத் தந்தவர் என்று விளங்கேல்லேயே " 


                         " அந்தாள் இப்ப இப்பிடித் தான் ஏதாவது எப்பவும் கஷ்டமா தருவார்,அது செய்யாட்டி டேய், இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் எண்டுவார் , இந்தப் பொயம் என்ன விசியம்,,எனக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க ,,மிச்சம் நான் சமாளிப்பேன்  "


                         "   இந்தப் பொயம் என்ன விசியம் எண்டு எனக்கு விளங்குதில்லை,,ஆனால் இதில உள்ள சொற்கள் உனக்கு இப்ப கட்டாயம் தெரியவேண்டிய அவசியம் இல்லை ,"


                          " நாளைக்கு சொல்லாட்டி அந்தாளுக்குக் கொதி வரும்,,பிறகு டேய், இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் என்று கோவத்தில  பேசுவார்  "


                         " இல்லை,,நீ இனி அவரிட்டப் படிக்கப் போகவேண்டாம் ,,படிச்சது காணும் ,நீ அவரிட்டப் படிச்சும் டேர்ம் டெஸ்டில் ஒண்டும் வெட்டிக் கிழிக்கவில்லையே " 


                          என்று அம்மா சொன்னா. ஓடிட்டர் தந்த அந்தக் கவிதைக்கு அம்மா விளக்கம் சொல்லவில்லை, பின் நாட்களில் ஆங்கில அறிவு சுயமாக நான் கற்றுத் தேர்ந்தபின் அதைப் படித்திருக்கிறேன்,எரிக்கா யங் எழுதிய அந்தக் கவிதை ஒரு பெண் ஆசிரியையின் மனநிலையில் இருந்து எழுதப்பட்டது. மில்லியன் மனிதர்களின் மனசாட்சியின்  இதயத்தை கீறிப் போட்ட இந்த உலகத்தில்  எழுதப்பட்ட மிக முக்கியமான பெண் விடுதலைக் கவிதை அது என்று உங்களுக்கே தெரியும். என் அம்மாவுக்கு அது புரிய நியாயமில்லைத் தான்.


                             எப்படியோ அதன் பின் . ஓடிட்டர் வீட்டில இருந்து தப்பி வந்தது ஜெயிலில் இருந்து தப்பி வந்த மாதிரி இருந்தது. ஏறக்குறைய ஆங்கில மொழியிடமிருந்து தப்பி வந்த மாதிரித்தான் இருந்தது. ஆனாலும் சில இரவுகளில்


                           " டேய், இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும்  இப்ப இந்த வோக்கிங் ஸ்டிக்கால எறிஞ்சன் எண்டா  ரெண்டா உடையும் ,"  


                                  என்ற குரல் எதிரொலித்தது  மண்டைக்குள்ள கேட்கும்.


                                .ஓடிட்டரிடம் ஆங்கிலம் படிக்கப் போனதால் இங்கிலிஸ் மண்டைக்க ஏறாட்டியும் பல ஆங்கிலக் கவிஞ்சர்களின் பெயர்களையாவது நினைவு வெளியில் நிறுத்தி வைக்க முடிந்தது ,அதிலும் .ஓடிட்டர் அந்தக் கவிஞ்சர்களின் பெயர்களை முழுவதும் சொல்லுவார், வால்ட் விட்மன் , பேர்சி செல்லி, ராபர்ட் பிராஸ்ட் அவர்க்கு பிடித்த கவிஞர்கள் என்பார். 


                                 ராபர்ட் பிராஸ்ட் இன் கன்றுக்குட்டிய தடவிப் பார்த்துக்கொண்டிருந்தேன்  என்ற   கவிதையை அவர்  அக்குவேறு ஆணி வேறா ஒருநாள் விளக்கி சொன்னார். நடுவில நெட் வலை இல்லாமல் டெனிஸ் விளையாடுவது போன்றது புதுக்கவிதை என்று  அந்தக் கவிதையின் உள்ளே உள்ள மென்மையான பிரதேசங்களுக்கு ஊடாக அவர் ஒரு ஞானி போலப் பிரயாணித்து அதன் சாரத்தை ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியில் முடித்தார். அவர் சொன்னதின் முழு அர்த்தம் விளங்காமலே அதன் பிரமிப்பு அசரவைத்தது.


                                    அப்படிதான்  ஹென்றி வோர்ஸ்த்வோத்  அதிகாலை லண்டன் நகரத்தை வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் இருந்து பார்த்து எழுதிய ஸ்லீபிங் பியுட்டி கவிதையை அவர் சொல்லும் போது யாழ்பாணத்தில் நிண்டு கொண்டே தேம்ஸ் நதிகரையில் பிக்பென் பாலத்துக்கு மேலாகப் பறந்துகொண்டு  பார்ப்பது போல உணரமுடிந்தது ,  அதே வோர்ஸ்த்வோத் இன் வில்லேச் ப்ளக் சிமித் கவிதை அவர் சொல்லச் சொல்ல அந்த கவிதையில் வார சின்னப்பையன் கொல்லன் பட்டறையை எட்டிப்பார்ப்பது போல ஆச்சரியங்கள் அள்ளிக்கொட்டும்.


                                 ஓடிட்டர் நான் அவரிடம் படிக்கப் போறதை நிட்பாட்டின பிறகு ஒரு நாள் எங்களின் வீட்டை வந்தார். வந்த நேரம் அந்தக் கைத்தடியை ஊண்டி ஊண்டிக் கொண்டு வந்தார் , முழங்கால் சில்லு தேஞ்சு போட்டுது எண்டும் அதுக்கு ஒப்பெரேசன் செய்ய கொழும்புக்குப் போகப் போறதாகவும்  அம்மாவோடு கதைத்தார்.லண்டனில இருந்து டொக்டர் மகனும் கொழும்பு வாறதாகவும்   சில வாரங்களில் போகப் போறதாவும் சொன்னார்  ,


                                  " லைப் இஸ் மிஸ்செரபெல் வென் கெட்டிங் ஓல்ட்,,நத்திங் ஹப்பினிங் ஆஸ் வி பிளான், அட் எவெரி மொமென்ட்ஸ் , சோ டு ஸ்பீக்  இட்ஸ் டேக் இட்ஸ் ஓன் பாத் ,நோன்சென்ஸ்,,,நோ மீனிங் அட் ஒல்  இன் எ சேர்ட்டின் வே    "


                               என்று விரக்தியாகச்  சொல்லிக்கொண்டிருந்தாலும்  நான் ஏன் படிக்கவாறது இல்லை என்று ஒரு சின்னக் கேள்வியும் அம்மாவிடம் கேட்கவில்லை. என்னோடும் ஒன்றும் கதைக்கவில்லை . எங்களின் வீட்டில இருந்த பெரிய புத்தக அலுமாரியில் நிறைய ஆன்மிக,வேதாந்த,சித்தாந்த  புத்தகங்கள் இருந்தது .அப்படி  சேமித்து வைத்திருந்த புத்தகங்களில் சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்ட " விவேகானந்த ஞானதீபம் " என்ற தடித்த பன்னிரண்டு புத்தகத் தொகுதியும் இருந்தது, அதில ஒரு புத்தகத்தை எடுத்து முன் ஒற்றைகளைப் பிரட்டினார் ,,


                                     ஒரு இடத்தில என்னத்தை வாசித்தாரோ தெரியவில்லை,,அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 


                               " டிஸ்பொன்டன்சி  இஸ் நோட் எ ரிலியன் ,,ஒ  ராமகிருஷ்ணா பரமஹம்சரிடம் அவர் அன்புத் துணை  சாரதாதேவி நாங்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூ டாது  என்று கேட்டதுக்கு...பரமஹம்சர்  சொன்ன பதில், ஹ்ம்ம் ,,,,உலகத்துக்கு எல்லாம் அன்னை,,Nothing went as bad

as blame. ,யெஸ் ,,இதுதான்  ஆங்கிலத்தில்  டிஸ்பொன்டன்சி  இஸ் நோட் எ ரிலியன்..யெஸ் ..தமிழில் வாசிக்கத்  தவறிய  ஒரு அருமையான புத்தகம் போல இருக்கே இது,,.ஹ்ம்ம் பன்னண்டு புத்தகமும் வாசிக்க வேண்டும் .."..

                           என்று தனக்குள் சொல்லிக்கொண்டு இருந்தார் ,பிறகு அந்தப் புத்தகத்தை இரவல் வேண்டிக்கொண்டு போட்டார். " விவேகானந்த  ஞானதீபம் " முதலாவது புத்தகம் வாசித்து திரும்பிவர முதலே  ஜூலை மாதம் ஒரு நாள் பலாலி வீதியில் தபால்கட்டை சந்தியில் முதலாவது கண்ணிவெடி  இரவு பன்னிரண்டு மணியளவில் வீடுகளை அதிரவைத்து, வீட்டு லைட்டையும்  டிம் பண்ண வைச்சு வெடித்தது.. அது வெடித்து மூன்றாம் நாள்  கொழும்பில் கலவரம் தொடங்கியது. அந்த நேரம் ஓடிட்டர் கொழும்பில நிண்டு இருக்கிறார். 


                                        களனிப்  பாலத்துறை பாலத்தில்  இருந்து காடையர் கூட்டமாக வந்து கப்பியாவத்தைப் பிள்ளையார் கோவில் பக்கமெல்லாம் தமிழர்களின் கடையைக் கொளுத்தி,கொள்ளையடிச்சுகொண்டு ஜெம்ப்பட்டா தெரு வழியாக வந்து கொட்டகேனா கெசல்வத்தை சந்தியில் காடையர் பெட்ரோல் கான் வைச்சுக்கொண்டு நிண்ட நேரம் ஓடிட்டர் வோக்கிங் ஸ்டிக்கை கையில வைச்சுக்கொண்டு ரோட்டுக்கு இறங்கிப்போய்  காடையர்களை அடிக்கப்போய்  இங்கிலிசில் தாறுமாறா அவங்களுக்கு முன்னால நிண்டு பேசி சண்டை பிடித்திருக்கிறார்.. 


                                  ஓடிட்டர் கடைசியாக நிண்ட இடம் அதுதான். அங்கே  நின்றும் அவர் சேக்ஸ்பியர் ,மில்டன்,  என்று ஆங்கிலத்தில் முழங்கி இருக்கலாம். சிங்களமே ஒரு நாட்டின் தேசிய மொழி என்று சொல்லி நெருப்புப்பொறி பத்த வைத்தவர்களின் முன் அவர் மொழி எடுபட்டு இருக்காது .  அதுக்குப் பிறகு அவரைப்பற்றி ஒரு தகவலும் யாருக்கும் கிடைக்கவில்லை. அவளவு  பெரிய ஒரு இனப்பிரச்சினை அகோரமாக  இருந்த  நேரமும்  அவர் தன்னோடு தனித்துவ அடையாளத்தை இழக்காமல் இருந்த மனிதர் ஓடிட்டர் 


                                   ஓடிட்டர்  எனக்கு  நிறைய ஆங்கிலக்கவிதைகள் சொல்லித் தந்தார் .அதில் இப்பவும் பொன்மாலைப்   பொழுது மனதில் தங்கிய இன்னொரு ஆங்கிலக் கவிதை டென்னிஸன் எழுதிய “The Brook” எனும் கவிதை.  கவிதைகளில் இது சற்றே நீண்ட  வகைக்  கவிதை  அது . அதன் refrain வரிகள் மிகவும் பிரபலமானவை என்று ஆங்கிலம் என்ற மொழி கொஞ்சம் வாசிக்கத்தெரிந்த காலத்தில்  என் பின் மண்டையில் அறிவு சொல்லித் தந்தது . 

                                  “Men may come and men may go, But I go on for ever”  என்று முடியும் கவிதையின் இறுதி வரிகள்   இப்பவும் நினைவு இருக்கு.  இருத்தலுக்கும்  நிரந்தரமின்மைக்கும் உள்ள மாறுபாட்டை உணர்த்துவதாக இருந்த அந்தக் கவிதை ஒரு வானம்பாடியின்  வானத்தில் அதிசயமாகவே இடி மின்னல்களைத் தாங்க வைக்குது . என்னைப் பொறுத்தவரை ஓடிட்டர்  நம் காலத்தில்  உலகத்தின் உன்னதத்தை உள்வாங்கி உலாப்போக வைக்கத் தவறிய வரலாற்று  நாயகன் 
.
                                                                                             

"La Isla Bonita" Acoustic Cover

ஞாயிறு துள்ளல் இசைவிருந்து . ஒரு ஸ்பானிஷ் ஸ்டைல் பாடலை என்னோட ஸ்டைலில் வாசித்துள்ளேன். "La Isla Bonita" என்ற பாடகி மடோனா எழுதி இசை அமைத்துப் பாடிய பாடல்,ஆங்கிலத்தில் " The Beautiful Island " என்று வரும் இந்தப் பாடலின் தாளம் " Spanish motifs arrangements of Cuban drums ",
அப்புறம் இடையில் வரும் கிட்டார் சத்தம்,அதை வாசிக்கும் முறையை "Spanish guitar " ஸ்டைல் என்பார்கள். சம்பா என்ற பிரேசில் நாட்டு நடன இசை போல " maracas, harmonica, synthesized drumming " போன்றவை பிண்ணனியில் வர காலாலே தாளம் போடவைக்கும் பாடல்.
மடோனா இன் குரல் எவளவு அழகாக " C♯ minor " என்ற கோட்ஸ் இல் இருந்து " F♯ minor "என்ற கோர்ட்ஸ் இக்கு மாறி மாறிப் பாயும் அழகு ஒரு டெக்னிகல் அமர்க்களம். " interlude " இல் வரும் " Spanish guitar " நளினம் அதுதான் இந்தவகைப் பாடல்களின் நாட்டியம் .. "La Isla Bonita" பாடலை " Hispanic styled pop " என்று சொல்கிறார்கள்.
இத்தாலியில் பிறந்து அமரிக்காவில் உலகப்பிரபலம் ஆகிய மடோனா இந்தப் பாடலை லத்தின் அமரிக்க நாடுகளுக்கும், அதில் வசிக்கும் மக்களுக்கும் அர்ப்பணித்துள்ளார் . இந்தப் பாடலில் வரும் " San Pedro " என்ற சின்னக் கடற்கரை நகரம், மத்திய லத்தின் அமரிக்காவில் உள்ள பிசிலி என்ற நாட்டில் இருக்கு ,,இந்தப் பாடல் வந்து பிரபலம் ஆனபின் அந்த நகரத்தையே " La Isla Bonita " என்றுதான் இப்போது அழைக்கிறார்கள்.
ஒரு பாடல் ஒரு நகரத்தின் பெயரையே மாற்றி இருக்கு அதுதான் இசையின் வலிமை.
.