Thursday 10 December 2015

மங்களேஸ்வரி இரண்டாவது சண்டை

மூன்றாம்நாள் மங்களேஸ்வரி நேரத்துக்கு வந்து நான் என்ன சமைக்கிறேன் எண்டு பார்த்தா. சக்சுயுவர் கசுவல் சமர் டீசேட் மேல போட்டு ஒரு வடிவான நீலோட்பவ மலர்கள் நாவல் கலரில் அடுக்கி வைச்ச  ஸ்கார்ப் கழுத்தில சுத்திக்கொண்டு,  டிம்பர்லான்ட் டெனிம் கீழ போட்டு இருந்தா. அந்த டெனிம் ஜீன்ஸ்  அவாவின் குண்டு உடம்புக்கு தமிழ்நாட்டு பொலிஸ் போல இடைவெளிகள் விட்டு இன்னும் ரெண்டுபேரை  உள்ளுக்கு இறக்கலாம் போலப் வண்டிப் பக்கமா பிதுக்கிக் கொண்டு நிண்டது  எனக்கு வாயை ஒழுங்கா வைச்சுக்கொண்டு இருக்க முடியாது,

                           " மங்கல்ஸ் இந்த ஸ்கார்ப் நல்ல வடிவா இருக்கு உங்களுக்கு, பார்பரா ஸ்டைன்பில்ட்  பாடின ஐ  ஆம் எ வுமன் இன் லவ் பாட்டுக்கு அவா பாடுறதைப் பார்த்து இருக்கிறிங்களா , அவாவும் இப்படிதான் நாவல் கலர் ஸ்கார்ப் கழுதைச் சுற்றிக் கட்டிக்கொண்டு பாடுவா"

                        " ஒ அப்படியா நான் இப்ப இதெல்லாம் உன்னட்ட கேட்டனா.."

                       " இல்லை மங்கல்ஸ்,,உங்களுக்கு இந்த ஸ்கார்ப் அட்டகாசமா இருக்கு.."

                        " ஒ அப்படியா,,சரி  நீ வந்தா முதல் வேலையைப் பார், பெண்டுகளின் உடுப்புப் பற்றி சொல்ல நீ என்ன பெரிய பசைன் டிசைனரா,,நீ செய்ய வேண்டிய வேலையே உனக்கு ஒழுங்காத் தெரியாது "

                        " என்னோட கருத்தைச் சொன்னேன் மங்கல்ஸ் "
                 
                         " நீ கருத்தும்,,கிருத்தும் சொல்ல வேண்டாம்,,இதுக்கு உனக்கு நோர்வே அரசாங்கம் சம்பளம் தரவில்லை தெரியுமா,,வந்தமா அண்டா குண்டாவை உருட்டிப் பிரட்டி சமைக்கத் தொடங்கினமா எண்டதை விட்டுப்போட்டு ,பெண்டுகளின் தாவணியில் என்ன முடிஞ்சு இருக்கு எண்டு ஆராய்ச்சி செய்யத் தேவை இல்லை இப்ப, "

                          " தேங்க்ஸ் மங்கல்ஸ்,   வேலைக்கு வந்த முழுவியளத்துக்கு உங்களிடம் திட்டு வேண்டியாச்சு ,,மங்கல்ஸ் ,,இண்டைக்கு வேலை ஆகோ ஓகோ எண்டு பிச்சிக்கொண்டு போகப் போகுது "

                        " அப்ப உன்னில முழிக்கிற எனக்கு என்ன முழுவியளம்,,அதயும் சொல்லு "

                       " தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..."

                            " முதல் இந்தப் பாட்டை நிப்பாட்டு,,கேக்கக் கொதி வருகுது,,,நீ இவளவு நாள் சொல்லியும் திருப்பியும் திருப்பியும் என்ன மங்கல்ஸ் எண்டுதான் சொல்லுறாய்,,அதாவது இருந்திட்டுப் போகட்டும் ,,ஆனால் இந்தப் பாட்டை நிப்பாட்டு,,கேக்கக் கொதி வருகுது "

                               " சரி மங்கல்ஸ் இனி நான் இந்தப் பாட்டைப் பாடவில்லை,,ஓகே தானே "

                                 அன்றைக்கு புதன்கிழமை  மெனுவில் பெப்பர் ஸ்டேக் என்ற நோர்வே உணவு இருந்தது .பிரிச்சைத் திறந்து பார்க்க,அது செய்வதுக்கு மாட்டுத் துடை பீப் இறைச்சி குறைவாக இருந்தது,போன கிழமை நல்ல சூரியா வறுத்த மிளகாய்த்தூள் போட்டு அதில அரைவாசியை நானே பிரட்டல் கறி செய்து சாப்பிட்டது நினைவு வந்தது. .ஆனால் அந்த மெனுவில் சூப் இல்லை .நான் பீப் ஐக்கைக் கவர் பண்ண சூப் ஒன்று போட்டேன் .கொஞ்சம் இந்தியன் ஸ்டைலில் லென்டில் சூப் வேண்டுமென்றே மங்கல்ஸ் பார்க்கட்டும்  என்று போட்டேன்

                                             வயதானவர்கள் என்னோட சூப்புக்கு  எப்பவுமே அடிமை போல எப்ப வருகுது என்று பார்த்தே இருப்பார்கள். அதை செய்து எல்லாருக்கும் பரிமாறினேன். மங்கல்ஸ் சந்தேகமாப்  பார்த்துக்கொண்டு இருந்தா என்ன நடக்குது எண்டு. வயதானவர்கள் ரசித்து கடைசித்துளியையும் கரண்டியால் அள்ளி உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தார்கள் . அது அவாவுக்கும் அவாவின் சத்துணவு சட்டத்துக்கும் பிடிக்கவில்லை

                               "  பெப்பர் ஸ்டேக் தானே மெயின் கோர்ஸ் ஆக இருக்கு  என்னத்துக்கு இப்ப சூப் அதுக்கு முதல் செய்து கொடுக்கிறாய் அது சத்துணவுச் சட்டப்படி கலோரியை அதிகமாக்கும் அது உனக்கு சட்டப்படி பிழை என்று தெரியவில்லையா வயதானவர்கள் கையைக் காலை ஆட்டி எக்ஸ்ரா கொழுப்பை எரிக்க முடியாவிட்டால் இந்த சூப் ரத்த ஓட்டத்தில் உப்பை அதிகாரிக்கும்  அது உனக்குத் தெரியுமா "

                               என்று நான் எதிர்பார்த்த வில்லங்கமான கேள்வியைக்  கேட்டா
                                 
                                " சாப்பாட்டுக்கு முதல்    சூப்    ஒண்டு குடுத்தா,,அது நாக்கைத் திறக்கும் மங்கல்ஸ் "

                                " நாக்கை திறக்கிறதா ,இல்லை நாக்கை நீட்டுறதா எண்டு  நீ டிசைட் பண்ணக்கூடாது,அதை நாங்கள் தான் டிசைட் பண்ணுவம்.அது கட்டாயம் தேவை என்டா நாங்களே அதை இன்றைய மெனுவில் சேர்த்து இருப்பமே."

                              " சரி,,மங்கல்ஸ்,,இனி இப்பிடி செய்யவில்லை "

                               " இப்பிடித்தான் சொல்லுறாய்,,ஆனால் நீ நினைச்சதை செய்துகொண்டு தானே இருக்கிறாய், வியாழகிழமை உனக்கு விசாரணை மூன்று பேர் வருவாங்கள் உன்னை விசாரிக்க,அவங்களுக்கும் எண்ணுக்குக் காட்டுற மாதிரி வாய்க்கு வாய் காட்டாதை "

                                " சரி,,மங்கல்ஸ் ,,உண்மையைக் சொல்லுறேன் "

                                   " வெள்ளிகிழமை எனக்கு,,ஹ்ம்ம் , மங்களேஸ்வரிக்கு இங்கே  கடைசி நாள் ,,ஹ்ம்ம்,,,உணக்கும் கடைசி நாளா இருக்கும் இங்கே வேலை செய்வதுக்கு "

                                  " ஹ்ம்ம்,,சரி மங்கல்ஸ் ,,இதில ஜோசிக்க என்ன இருக்கப்போகுது "

                                    " ஹ்ம்ம்,,இந்த வேலை போனால் பிறகு என்ன வேலை செய்யிற உத்தேசம் .."

                                    " ஹ்ம்ம்,,ஒரு தமிழ் பிரன்ட் ரின்சோரின் பிர்மா வைச்சு இருக்கிறார்,,சன்விக்காவில் ஒரு பெரிய வீடறவன்ச ஸ்கூல் இல்  கழுவ வேலை இருக்கு விரும்பினா வரச்சொன்னார் "

                                     " ஒ ,,அப்படி வேலைதான் உணக்குச் சரிவரும்,,அதையாவது உருப்படியாச் செய்து வாழ்கையில் முன்னேறு,,ஆனால் நான் அடிச்சுச் சொல்லுறேன் நீ அதையும் ஒழுங்கா செய்ய மாட்டாய்,,இருந்து பார் "

                              "   ஹ்ம்ம், அந்த வேலையே இன்னும் தொடங்கவில்லை,,ஆனாலும் உங்கள் மங்களகரமான வாழ்த்துக்கு நன்றி மங்கல்ஸ் "

                          " கழுவல் துடையல் கொம்பனி,,அது உனக்கு ஒத்துவரும்,,மண்டையைப் பாவிக்கத் தேவை இல்லை அந்த வேலைக்கு "

                                  " நன்றி உங்களின் ஆசீர்வாதத்துக்கு மங்கல்ஸ் "

                            "  எனக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம்,,சிசிலியா யார் உனக்கு ,,அவள் பிறகும் இப்பிடி வேலை எங்கயும் பழசுகளிண்ட மண்டையைக் கழுவுற இடத்தில எடுத்து தருவாளே,,அவள் தானே இந்த வேலை எடுத்து தந்தது என்று பிளான்லாகனிங்  ஒப்பிஸ் இல் கேள்விப்பட்டனே "

                               "  ஒ சிசிலியாவை உங்களுக்கு தெரியுமா மங்கல்ஸ் ,சிசிலியா என்னோட பிரெண்ட்..

                               "  அது  தெரியுது  அந்த  எடுபட்டவள்  உனக்கு  ரெக்கமென்ட்  செய்து  இருக்கிறாள் ..அதுதான்  ஆச்சரியம் "

                                   "  சிசிலியாவை  அப்பிடி  சொல்ல  வேண்டாம் மங்கல்ஸ்   அவள்  நல்லவள் "

                                 "    அட அட  கோபம்  மூக்கில முட்டிச்சிவந்துகொண்டு வருகுதே "

                                 "  என்னைப்பற்றி  என்னவும்  சொல்லுங்கோ   சிசிலியாவை  விடுங்க "

                                    "அட அட  உன்னை  ஒருத்திபோய்  வேலைக்கு  ரெக்கமென்ட்  செய்து  இருந்தால்  அவள்  கட்டாயம்  எடுபட்டவளா தானே  இருக்க  வேண்டும் "

                                    "  அவளுக்கு ஏற்கனவே நிறைய அலுப்புக் கொடுத்திட்டேன்,,இனி அவளா வந்து ஏதும் வேலை எடுத்து தந்தாலும் போக மாட்டேன் "

                       "   பரவாயில்லையே,,குற்றவுணர்வு எல்லாம் இருக்கே உனக்கு , சிசிலியா யாரா இருந்தாலும் எனக்கு ஒண்டும் கொம்பு இல்லை,,நீ அவளை தலையில தூக்கி வைச்சு ஆடு..நான் அவளுக்கு பயமுமில்லை ..மதிக்க வேண்டிய அவசியமும் இல்லை.."

                               " ஹ்ம்ம் சிசிலியா நல்லவள்...அருமையான பெண் ,,என்னோட எல்லா அட்டகாசமும் ரசிப்பாள்...உங்களை மாதிரி ரிப்போட் எல்லாம் எழுத மாட்டாள் "

                                 " ஏனென்றால் அவள் உன்னை நம்புறாள் ,,அதால அவளிண்ட தலையைக் கழுவி நீ உன் வேலையைக் நசுக்கிடாமல் கொண்டு போறாய்..இதுதான் நடக்குது "

                                  "  சரி மங்கல்ஸ் நீங்க சொல்லுறது ,,அப்படிதான் நடக்குது "

                              " வெட்கமாக இல்லையா உனக்கு ஏமாந்த சோணகிரிப் பெண்டுகளின் தலையில இழுத்து இழுத்து சம்பல்அரைக்கிறாயே "

                              "  எனக்கு வெட்கமும் இல்லை ,ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை "

                                " அதெண்டா  உண்மைதான் , ரோச நரம்பு எப்பவோ அறுந்த மாதிரி உன் முகத்தில நல்லாவே எழுதி ஒட்டி இருக்கு "

                                        மங்கல்ஸ்க்கு கரிநாக்கு ,அவா சொன்ன மாதிரித்தான் அந்த சன்விக்காவில் கழுவுற  வேலையில் இருந்தும் ஒருநாள் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த பியானோவில் யாருமில்லாத நேரம்  அந்தப் பள்ளிக் கூடாப் பிரிஞ்சுபல் ரெபெக்காவை  மடியில இருத்தி வைச்சு பாட்டு வாசிக்கப் போய்...வேலைக்குச் சேர்ந்து   மூன்று மாதத்தில் தும்புக்கட்டையால அடிச்சுத் துரத்திப் போட்டாங்கள். மங்கல்ஸ்க்கு கரிநாக்கு ,அவா சொன்ன மாதிரியே தான் அது நடந்தது,,அதைப்  பிறகு ரெபேக்கா கதையில் சொல்லுறேன்...

                                              அந்த எல்டர் சென்டரின் இன்னொரு மூலையில் ஹெல்த் செண்டர் இருந்தது. அதில ஒரு நேர்ஸ் வேலை செய்தாள். வயதானவர்களின் பிளட் சுகர்  , பிரஷர் செக் பண்ணுவாள். பல  உடல்நலக்குறைவுக்கு பரிகாரம் சொல்லி அவர்களை வேண்டுமென்றால் டாக்டரிடம், சிலநேரம் தேவையென்றால் பிசியோதிரபி கொடுக்கும் இடங்களுக்கு அனுப்புவதுக்கு ஒழுங்கு செய்வது அவள் வேலை. முக்கியமாக வயதானவர்கள் அவர்களின் நடையில் , முகத்தில் வைச்சு அவர்களின் ஆரோக்கியத்தைக் கண்டு பிடிப்பாள்.

                                   அவளுக்கு நடுத்தர வயது. இங்கிலிங் பேரிட் சோல்பேர்க் என்று பெயர். ஸ்மார்ட் ஆக குத்திக் காலில  குத்திக் குத்தி மாரித் தவக்கை மண்டுவம் தண்ணியில நீந்துற மாதிரி கையை விசுக்கி நடப்பாள். சில நேரம் அவள் போலவே அவளுக்கு முன்னால நான் நடந்து காட்டுவேன்,ஈஈஈஈஈஈஈஈ எண்டு ருவாண்டா பபூன் குரங்குபோல சிரிப்பாள். சிலநேரம் என் முதுகில டோம் என்று ரெண்டு முஸ்டிக் கையாலும் குத்துவாள். இதை மங்கல்ஸ் ஒருநாள் பார்த்துக்கொண்டு இருந்தா. இதுவும் சத்துணவுச் சட்டப்படி பிழை என்று நினைச்சு இருப்பா.

                                இங்கிலிங் காசு குடுத்தாலும் கதிரையில் இருக்க மாட்டாள் எப்பவுமே என்னவாவது ஓடி ஓடிச் செய்துக்கொண்டு இருப்பாள்  . எல்டர் சென்டரில் வயதானவர்களுக்கு நான் சமைக்கும் சாப்பாடு ஒருநாளும் சாப்பிட மாட்டாள்.வீட்டில இருந்து சாப்பாட்டுப் பெட்டியில் பகல் உணவு கொண்டு வருவாள்.  சில நேரம் நான் என்ன தில்லுமுல்லு  சமையலில் செய்யுறேன் என்று அவளுக்கு நல்லாத் தெரிந்து இருக்கலாம். வந்த முதல் நாளில் இருந்து மங்கல்ஸ் அதையும் கவனித்துக் கொண்டு இருந்தா.

                                         ஒரு அற்ப விசியமும் என்னோட கதைக்காத இங்கிலிங் ஒரு விசியம் மட்டும் என்னோட எப்பவும் அவளாவே வந்து கதைப்பாள்.அவள் ஜெகோவா விட்னஸ் என்ற கிறிஸ்தவ நம்பிக்கை அமைப்பில் தீவிர விசுவாசியாக இருந்தாள்.அதால் அந்த அமைப்பு வெளியிடும் வோச் டவர்  என்ற பத்திரிகையின்  தமிழில் வரும் காவற் கோபுரம் மொழிபெயர்ப்பைக்  கொண்டு வந்து வாசிக்கச் சொல்லி தருவாள். அதில எப்பவுமே ஒரு கட்டுரை மோசமான மனிதர்களாக இருந்து எப்படி ஜெகோவா தங்களை முழுமை மனிதர் ஆக்கினார் என்று விசிவாசிகள் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை எழுதி இருப்பார்கள், அதை மட்டும் தான் அதில நான் வாசிப்பேன்.

                                     அன்றைக்கு வெளியால நல்ல வெய்யில் வசமா வடக்கு தெற்கு பக்கமா விழுந்து கொண்டு இருந்தது,மரங்கள் கொஞ்சம் பாசியாக பச்சை நிறத்தை உறிஞ்சிக்கொண்டே மெல்லிய குளிர் காற்றோடு பழங் கதைகள் கதைத்துக்கொண்டு   இருக்க , எல்டர் செண்டர் இக்கு வெளியே மரவாங்கில் இங்கிலிங் கோப்பி குடிச்சுக்கொண்டு இருந்தாள் ,நான் மங்கல்ஸ் ஐத் தேடினேன் அவா கண்ணாடி போட்டுக்கொண்டு,ஒரு மூலையில்  சத்துணவு ரிப்போட் எழுதிக்கொண்டு இருந்தா

                                " மங்கல்ஸ் ஒரு கோப்பி எடுத்துக்கொண்டு வாங்களேன் வெளிய போய் மரவாங்கில் கொஞ்ச நேரம் இருப்பம்."

                                      "  ஒ ,,இப்ப நான் பிஸி,,இப்ப நான் என்ன எழுதிக்கொண்டு இருக்கிறான் தெரியுமா "

                               " என்ன வேற  எழுதப்போரிங்க,,,எனக்கு ஆப்புத்  தானே எழுதுறிங்க,,அதைக் கொஞ்சம் வெளிய போய் முகத்துக்கு வெயில் பிடிச்சுட்டு வந்தா இன்னும் இறுக்கி எழுதலாமே "

                               "  உன்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை ,  உனக்குப் பயம் இல்லையா "

                             "  இல்லை மங்கல்ஸ் ,,பயத்தை எப்பவுமே பத்தடி தள்ளியே வைப்பேன்,பயம் உண்மையில் பிரயோசனம் இல்லை..சும்மா டைம் வேஸ்ட் அது ,நான் அதை மண்டைக்குள் ஏற்றுவதேயில்லை "

                                " ஒ.சும்மா  வாய்தான் ."

                                   " நெல்சன் மண்டேலா இருவத்தி மூன்று வருடம் ஜெயிலில் இருந்தாராம் , அவர் வாழ் நாள் முழுவதும் விரும்பிப் படித்த ஒரே ஒரு கவிதை Invictus ,,,அது  தெரியுமா மங்கல்ஸ் ."

                                   "இது எல்லாம் யார் உனக்கு சொல்லித் தந்தது, சிசிலியா  சொல்லித் தந்தாளா  " 


                                  " இல்லை ,,நானே அதன் தமிழ் மொழிபெயர்ப்பில் படிச்சேன் மங்கல்ஸ் " 


                           

                            " சரி, அதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம் "

                    

                                " வில்லியம் எர்னெஸ்ட் ஹென்லி என்பவர் எழுதியது அந்தக் கவிதை ,தன்னோட வாழ்கையில் முதலில் பயத்தைஅடியோடு அகற்றியது என்றும் பின் அகிம்சை வழிப் போராடதுக்குத் தன்னை  மாற்றியது என்றும் மண்டேலா எழுதி இருக்கார் "

          

                                 " ஒ,,, அதால இப்ப தாங்கள் சொல்ல வாறது என்னவென்று அறிய முடியாமா , மிஸ்டர் N ... "
     

                                  " அதெல்லாம் எல்லாம் படிச்சிருந்திங்க என்றால் இப்படி கேள்வி எல்லாம் கேட்க மாட்டிங்க மங்கல்ஸ் அதுதான் நான் சொல்ல வந்தது மேடம் " 


                              " பெரிய தத்துவத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை,,சரி கோப்பி மிசினில கோப்பி எடுத்துக்கொண்டு வாறன்,அந்த நேர்ஸ் உடன் எனக்குக் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை,,சும்மா வாறன் "

                           "  இங்கிலிங் நல்லவள்,,சும்மா வாங்க ,,வந்து இருங்க ,,அவள் ஒரு தண்ணி தெளிச்சுவிட்ட  பைபிள் கேஸ்..அவள் வாயைத்திறந்து விட்டால் சுவிசேசம் தான் கொட்டும் "

                                       " அந்த  அறுவையை  என்னையும்  கேட்கச்  சொல்லுறியா ,,நான்  சுத்த  சைவம்  தெரியுமா,,வெள்ளிகிழமை   பாம்புப்  பொத்துக்கு  பால்  ஊற்றி விரதம்  இருக்கும்  குடும்பத்தில்  பிறந்த  ஆள்  தெரியுமா  அது  உனக்கு "

                                    "பாம்பு  பால்  குடிக்காது....சயன்சில்  பாம்பு  பால்  குடிக்கும்  என்று  இல்லை,,,அது சும்மா  ஒரு  நம்பிக்கை  " 

                                     " அட  அட    ,,,பாம்பு  பால்  குடிக்காதா ,,உண்மையாவா  சொல்லுறாய் "

                                       " ஓம்...மங்கல்ஸ்  பாம்பு  பால்  குடிக்காது,,,நான்  சொல்லுறது  பொய்  என்றால்  ஒரு  பாம்பு  கொண்டுவாரன்  பால்  வைச்சுப்  பார்ப்பமா "

                                      " அய்யோ,,,ராமா  ஆளைவிடு ,,சரி  கோப்பி  குடிப்பம்..ஆனால்  நான்  அந்த  நேர்ஸ் உடன்  கதைக்க மாட்டேன் "

                                     ".சும்மா கதைப்பம் வாங்க மங்கல்ஸ் ,இப்பிடி ,ரிப்போட் எழுதி எழுதியே உங்களுக்கு ஒயில் இல்லாதா எஞ்சின் போல மண்டை இறுகப்போகுது "

                               "  அடி  செருப்பால ,,முதலில்  மேலதிகாரிக்கு  நக்கல்  நளினம்  நெளிப்புக்  காட்டாதை "

                                        ஹம்..செருப்பால  பிறகு  அடியுங்க,,இப்ப கோப்பி  குடிப்பம்  வாங்க  மங்க்ல்ஸ் 

                                      நான் ஒரு கோப்பிக் கோப்பையில் கோப்பி எடுத்துக்கொண்டு போய் இங்கிலிங்க்கு முன்னால இருந்தேன். மங்கல்ஸ் ஆப்டன் போஸ்டன் நோர்வே நியூஸ் பேப்பர் எடுத்துக்கொண்டு வந்து அந்த மரவாங்கின் தொங்கலில் இருந்தா. இங்கிலிங் மங்கல்சுக்கு ஹைய்  சொன்னாள், மங்கல்ஸ் ஹைய் சொன்னா, நியூஸ் பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு அதை ஆர்வமா வாசிப்பது போலப் பாவனை செய்துகொண்டு இருந்தா .

                                            நான் ஒரு பரமுன்ட் கோல்ட் சிகரட்டைப் பெட்டியில் இருந்து உருவி எடுத்தேன்.அதை மேசையில் மூன்றுதரம் பில்டர் பாக்கமாகத் தலை கீழாகத்  தட்டினேன், பிறகு அதை மேலும் கீழும் நீவி விட்டேன், பிறகு அதை முகர்ந்து பார்த்தேன். எரிஞ்சு கரியாகப் போகப் போற சிகரட்டில் தான் வாழ்வின் உன்னதமான விசியங்கள் அடங்கி இருப்பது போல அதை வைச்சு விளையாட்டுக் காட்டினேன். நான் எப்பவுமே அப்படிதான் சிகரட் பத்துறத்தை வளைக்காப்பு போட்ட பெண்கள் நடு இரவில் நடந்த சம்பவங்களை நினைப்பது போல  ஒரு நல்ல சந்தோஷ நிகழ்வாக நினைப்பது


                                       பிறகு நான் இங்கிலிங் உடன் கதைக்கத் தொடங்கினேன். அவள் 

                                 "  புதிதாக நோர்வேயிட்கு வந்துள்ள அரசியல் அகதிகளுக்கு ரோட்டில நிண்டு காசு சேர்கிறோம் உண்டியல் குலுக்க வாறியா " எண்டு கேட்டாள். 

                                      "  நானே  சீவியத்துக்கு  உண்டியல்  குலுக்கிக்கொண்டு  நிக்கிறேன் இங்கிலிங் ,,நீ  வேற முசுப்பாத்தி  விடுறாய் "

                                     "  உனக்கு  என்ன  குறை ,,நல்ல  குக்  வேலை  செய்யுறாய்  தானே "

                                " அதுவும்  சில  நாட்களில் கையை விட்டுப்போயிடும் இங்கிலிங் "

                               "   என்ன  சொல்லுறாய் ,,என்ன  நடக்குதுப்பா  உன்  வாழ்க்கையில்  "

                                    " காலைவார  ஒரு   கூ ட்டம்  இருக்கும்வரை ,,எது  எல்லாம்  நடக்கவேணுமோ  அதெல்லாம்  நடக்கும்  போலதான்  இருக்கு நடப்பு  நிலவரம்  இங்கிலிங் "

                                     "   அது  பெரிய பிரசினை  இல்லை ,,ஆண்டவர்  கைவிட  மாட்டார்  நம்பு  பைபிளில் ஏசயா  தீர்கதரிசி  சொல்லி  இருக்கிறார் தடம்புரளும்   நேரத்திலும்   ஆட்டுக்குட்டி  மான்  போலப்  பாயும்  ஆண்டவர்  உன்  கண்ணீருக்கு பதில்  தருவார்  என்று  பயப்பிடாதை "

                                      "   ஹ்ம்ம்,,ஆனாலும்  பசுத்தோல் போர்த்த  புலிகள்  தானே  நரிகள்  போல  உலாவுதுகள்  நம்மைச்சுற்றி இங்கிலிங் "

                                    "  ஹ்ம்ம்,,நீ  என்னவோ  வெறுப்பில  யாரையோ  குத்திக்காட்டும் நோக்கத்தில்  என்னவோ  சொல்லுறாய்,,ஒழுங்கா சொல்லு "

                                     " சொல்லுறதுக்கு  இதுக்குமேலே  ஒன்றுமில்லை இங்கிலிங் "

                                     "  சரி  விடு  ஜோசிக்காதை  நல்லதே  நடக்கும்  உனக்கு "

                                                 நான் உண்மையில் அவளுடன் அதிகம் பைபிள் பற்றி  கதைக்கவில்லை எண்டுதான் சொல்ல வேணும்  என்னோட கடைசி நரிக்குறவக்  குறளிவித்தையை அவளை நடுவில வைச்சு மங்கல்ஸ்க்குக் அதில காட்டினேன். ரெண்டாவது பொறுத்த சண்டை அந்த மேசையில் உருவாகும் என்று அம்மாவனா என்னோட வீராளி அம்மாளாச்சி சத்தியமா நான் எதிர் பார்க்கவே இல்லை,,,

............தொடரும் .........