Monday 2 March 2015

ஊஞ்சல்கள்

மார்ச் மாதக்
கடைசி உறைபனி
மெதுவாக
பரபரப்புச் செய்திபோல
சத்தமில்லாமல் 
சோளப் பொரிகளாக
இறங்கி
தெருவை நிறைக்கிறது..
இறுகிச் சாத்திய
கோப்பிக் கபேக்களின்
ஜன்னல்களில்
நடுங்கிய விம்பங்களின்
உரையாடல்களில்
தெறிக்கிறது
சொல்ல விரும்பாத
ரகசியங்கள்..
தற்செயலாகச்
சந்தித்த
பழைய காதலர்கள்
கனவுகள் இறந்து போய்
பிரிவை உறுதிப்படுத்திய
கடைசி
இரவைப் போலக்
கை குலுக்காமலே
சிரித்துக் கொள்கிறார்கள் .
விரும்பிய எதுவுமே
மறுபடியும்
திரும்பி வராததுபோல
மனிதர்கள்
அலையும் போது
விதவையின் ஏக்கம்
போலக்
கிசுகிசுக்கத் தொடங்குகிறது
மழை...
அரை குறையாக
நினைவுகளில்
தாண்டிப் போய்க்கொண்டு
சேர்ந்து நடக்க
விரும்பாதவர்களை
முன் மாலை இருட்டில்
விட்டுப் போட்டு
விலத்தியே
நகர்கிறது நகரம்..
கடந்த
பாதையின் முடிவில்
நோர்ப்பேறி சேர்ச்
பூங்காவில்
கோடைக் காலத்தில்
ஆடியது போலவே
குழந்தைகளுக்காவும்
கதகதப்பான வெய்யிலுக்காகவும்
ஏங்கியபடி
ஊஞ்சல்கள்
தேவாலய வளவை வசீகரித்தபடி
ஆடிக்கொண்டிருந்தது.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 02.03.15

,