Sunday 4 March 2018

டிம்பிள்.

டிம்பிளுக்கு எழும்பில  வலிக்குதா, அல்லது மேலோட்டமாக  நோகுதா என்று சொல்லுமுடியாதவாறு முனகிக்கொண்டு வெங்காயச் சாக்கில் ஒருபக்கம்  முண்டுகொடுத்துப் படுத்திருந்தது. ஒருநாளும் இப்படி அது படுத்து இருந்ததே இல்லை. ரெண்டு முன்னம் கால்களையும் நீட்டி  அதில முகத்தைப் போட்டு அடிக்கடி நிமிர்த்து பார்த்து,  பிறகு  வாலை ரெண்டுதரம் ஆட்டிப்போட்டு அரக்கப்பரக்க  வேலை உள்ளநேரமே வேலை இல்லாத மாதிரி  நிம்மதியில் இருக்கும். 

                                                     சில்லறைக்கடை வியாவாரத்தில் முன்னுக்கு வேகமாக இயங்கிக்கொண்டிருந்த சுப்பிரமணியத்துக்கு டிம்பிள் அப்பப்ப எழுப்பிக்கொண்டிருந்த ஈனச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது,வீதியால போற வாகனங்கள் எடக்கு முடக்கா குறுக்க கடக்கும் மனிதர்களுக்கு நுனி விளிம்பில் உரசுர மாதிரி சைட் கொடுத்து அபாயமாக எழுப்பும் ஹோர்ன் சத்தம் எப்பவுமே இரைச்சலாக இருக்கும் , 

                                                           மற்றப்படி சில்லறைக்கடைக்கு வார வாடிக்கையாளரோ அவர்களோடு சுப்பிரமணியமோ உரத்துக் கதைப்பதில்லை.

                                                              டிம்பிள் பகல் நேரங்களில் வெய்யில் அதிகமாக இருந்தால் கடைக்கு பின்னால புகையிலை சிப்பம் அடிக்கி வைச்சு இருந்த இடத்துக்கும் அரிசி மூட்டைகள் அவிட்டுக்  குத்தி நிமிர்த்திவைச்சு இருந்த இடத்துக்கும் நடுவில கிடைக்கும் இடத்தில படுத்து இருக்கும். அதன் பாதங்கள் வெக்கையில் வியர்த்துக்கொண்டிருக்கும்.. இப்ப அந்த இடத்தில இன்றோடு ரெண்டு முழுநாள் டிம்பிள் அசையாமல் படுத்துக்கிடந்தது

                                                               மனியம்    அடிக்கடி வந்து எட்டி எட்டிப் பார்த்தார். வலது கால் இடுப்புப் பொருத்தில் முற்றாக விலகியிருந்தது. சேனைக் கிழங்கு போல தொடை எலும்பு இடம்மாறி  துருத்திக்கொண்டிருந்தது. மெல்ல விரலால தொட்டுப் பார்த்தார். கீழே    வலது தொடைப்பாதம் வீங்கிய இடத்தில நல்லெண்ணெய் தடவிவிட்டார்.டிம்பிளின்  முகம் ஒருபக்கம் பீட்ருட் நிறத்தில வீங்கியிருந்தது.



ஒரேயொருநாள்  டிம்பிள் ஒரு பெரிய விளமீனை வாயில கவ்விகொண்டுவந்து, குசினி வாசலில் நின்ற  சுப்பிரமணியத்துக்கு  முன்னால போட்டுடு அவரோட முகத்தைப் பார்த்தது, மணியத்துக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது, டிம்பிள் களவெடுக்கும் எண்டு அவர் ஒருபோதும் நினைத்ததில்லை, அதைப் பழகியதுமில்லை, அப்படி ஒரு நிகழ்வை  அவர் விரும்பவுமில்லை, சனிக்கிழமைகளில் அவர் எப்பவுமே எலும்பும், சவ்வும் சேர்ந்த ஆட்டு இறைச்சி வேண்டி அரை அவியல் வைச்சு டிம்பிளுக்கு கொடுப்பார்  

" இதென்ன புதுவிதமான கூத்து,,எங்க இருந்து கிளப்பிக்கொண்டு வந்தனி சொல்லு,,டிம்பிள்,,இப்ப சொல்லு."

டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, 

" சொல்லு,,இப்ப  சொல்லு,,இதென்ன கேடுகெட்ட  பழக்கவழக்கம் புதுவிதமா  இருக்கே ,",

 டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, 

" சொல்லு,,இப்ப ஆரும் ஆக்கள் இங்கே தேடிக்கொண்டு வராமல் சொல்லு,,பரிசுகெடுக்க முன்னம் சொல்லு "

டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, 

" இப்ப சொல்லபோறியா இல்லையா,,நாலு உதை விட்டன் எண்டா உண்மை தானா வெளிய வரும்,,அதுகுமுதல் சொல்லு "

டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, 

" சொல்லு,,கெதியா சொல்லு,,முன்னுக்கு ஆட்கள் வந்து கடைவாசலில் நிக்குதுகள்  சொல்லு இப்ப "

இப்ப பின்னுக்கு மதிலால மசுக்குட்டி மாமி மணியத்தை கூப்பிடுற சத்தம் கேட்டுது, மானியம் போய் எட்டிப் பார்த்தார், அங்கே மசுக்குட்டி மாமி கிணத்துக்கட்டுக்கு பக்கத்தில இடுப்பில ரண்டு கையையும் வைச்சுக்கொண்டு நிண்டா, அவா முகத்தில கோபம் எள்ளும் கொள்ளுமா வெடிச்சுக்கொண்டு இருந்தது, மணியம் தலை மதிலுக்கு மேலால வெளிப்பட 

" மணியம்,,சொல்லிப்போட்டன்  வளர்ப்பிணியளுக்கு உந்த ஊத்தைப் பழக்கத்தைப் பழக்கிபோடாதை ,,இதுதான் முதலும் கடைசியுமா இருக்கவேணும் ,,"

" ஹ்ம்ம் "

" சும்மா வந்து வாலை ஆட்டிக்கொண்டு இருந்திச்சு நானும் பார்த்துக்கொண்டு இருந்தேன்,,    எழும்பி ஒருக்கா குசினிப்பக்கம் போட்டுவர கவ்விக்கொண்டு போட்டுதே "

" ஹ்ம்ம்,இங்கதான் கொண்டுவந்து வைச்சுப்போட்டு எண்ட முகத்தைப் பார்த்துக்கொண்டு நிக்குது,,கழுவிப்போட்டு கொண்டுவந்து தரவே "

" வேணாம்,,ஆனா மணியம்  இனிமேல் இது நடந்தா நல்லதுக்கில்லை சொல்லிபோட்டேன் "

சுப்பிரமணியம் உள்ளுக்குவந்து பார்த்தார் டிம்பிள் மீனை அப்படியே நிலத்தில வைச்சுக்கொண்டு இருந்தது, வாயில தொடவேயில்லை , சுப்பிரமணியம் நாடியத் தடவிக்கொண்டு நின்றார், டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது,   டிம்பிளுக்கு  மசுக்குட்டி சொன்ன கடைசி எச்சரிக்கையை சொன்னார், அதுக்கும் டிம்பிள் வாக்கு கொடுப்பது போல தலையைத் தாழ்த்தி   அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது, , ,


அதுக்குப் பிறகு இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை, டிம்பிள் கொடுத்த வாக்கை அதன்பிறகு மீறியதில்லை.  அலுமினியத்  தட்டில சாப்பாடு போடும் போது டிம்பிள்  அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும், பிறகு அவர் சாப்பாட்டை குழைத்து மசித்துக்கொண்டிருக்கும் போதும்  , அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்,, பிறகு சாப்பிடு என்று சொன்ன பிறகுதான் முகத்தை கீழே குனித்து சாப்பிடவே தொடங்கும் .

                                               

சென்ற வெள்ளிக்கிழமை இரவுதான் அந்த சம்பவம் நடந்து இருக்கவேண்டும். எத்தினை மணிவாக்கில் நடந்தது என்று அவரால் கணிக்கமுடியவில்லை. டிம்பிள் இரவுகளில் எப்பவும் கடைக்கு வெளியே தட்டித் தாழ்வாரத்திலதான் படுத்து இருக்கும். சும்மா கிடக்கிற கல்லை எடுத்து எறிஞ்சு வெருட்டி விளையாடும் அரைகுறைப் பிறவிகளோடோ  , அல்ல அதன் இனத்து உறவுகள் வம்புக்கு இழுக்கும் வில்லங்கங்கள் என்று தேடிவந்தாலோ  அனாவசியமா எழும்பி இறங்கி, பாரதி சிலையாடிக்கோ அல்லது ரோட்டுக்கோ போகாது .

                                 பிறகு என்னதான் நடந்து இருக்கும் ?



சுப்பிரமணியம் ஒரு பழைய பஞ்சாங்கம், பாக்கிறதுக்கு மண்ணெண்ணெய் பரல் போல வாட்ட சாட்டமான உடம்புள்ள அவர் ஒரு நாளுக்கு ஒரு சுருட்டுதான் பத்துவார், சுருட்டை வாயில வைச்சு கொண்டு இருப்பார் பத்தவே மாட்டார் , ஆனால் பத்தினா, அது பத்தி முடியும்வரை அணுக்குண்டு வெடிச்சாலும் அசையமாட்டார். அவர் கடையில் சேட்டுப் போட்டாமல் , கட்டி இருக்கிற சங்கு மார்க் சாரத்தை பொம்பிளையல் குளிக்கும்போது பாவாடையை உயர்த்திக் குறுக்குக் கட்டு கட்டுவது போலக் கட்டிக்கொண்டு புழுங்கல் அரிசி மூட்டைக்கு மேலே ஏறி இருப்பார் .


சுப்பிரமணியத்துக்கு அது விளங்கவேயில்லை . காலையில் திறக்கும் போது , டிம்பிள் எழும்ப முடியாமல் சவட்டிப் படுத்திருப்பதைப் பார்த்தார்.. பதறிப்போனார்.ஒரு சுருட்டை எடுத்து பத்த வைக்காமல் சொண்டில கொழுவிக்கொண்டு ஜோசித்தார். டிம்பிள் ஒவ்வொருநாளும் கடைக் கதவு திறக்க அந்த நீக்கலுக்கால  ஓடிவந்து காலை நக்கும். நாலுதரம் " நான் நல்லா இருக்கிறேன் "  என்று சொல்லிக் குரல்கொடுக்கும் . 

                                  அவர் முகத்தை வாஞ்சையோடு பார்க்கும்.  அவர் அதன் தலையை தடவிகொடுப்பார். இராத்திரி முழுதும் நல்ல சேவகன் போல காவல் காத்த நன்றியை அவர் அப்படித்தான் தெரிவிப்பார்.

                                                          

புதன் கிழமை, வியாழக்கிழமை ரெண்டுநாளும் டவுன் பக்கம் ஒரே அமளி துமளி.பகல் முழுவதும் மாறிமாறி  ரெண்டு பக்கமும் அடிபாடு.  கடல் பக்கம் செல் அடி தொடர  தரைப் பக்கம் சன்னங்கள் பறந்தது. பெல் ரக ஹெலி வந்து சுழன்று சுழன்று பிப்டி கலிபரால் முழங்கிக்கொண்டு இருந்தான். , நாலுதரம் சியாமா செட்டி போர் விமானம் குத்தி எழும்பி இலக்கில்லாமல் குண்டு  போட்டுது.

                                                        ஆவணி மாதம் பகல் எல்லாம் வீராளியம்மன் கோவில்  தீக்குளிப்புக்கு தணல் விழுத்தி இழுத்துப் பரவின மாதிரி  நெருப்பு வெய்யில்  .அதைக் கொஞ்சம் தணிக்க  பின்நிலவு நேரம். காற்று கைவீசிக்கொண்டு நடை பழகிக்கொண்டிருந்தது. அம்மச்சியாகுள  வெள்ளைவாய்க்காலில்  மாரி வெள்ளம் பாய்ந்து  வடிந்து ஒடிக்களைத்தமாதிரி   இரவுகள்  கொஞ்சம் அமைதியாதான் இருந்தது

                                                       டவுன் பக்கம். வெள்ளிக்கிழமை பகல் அசாதாரண அமைதி . ஆனால் திடீரெண்டு  இரவு முன்னேற்ற முறியடிப்பு சண்டை தொடங்கின மாதிரிதான் இருந்தது . அவ்வளவு பிக் அப் உறுமல் ஓட்டம். சுப்பிரமணியம் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு ஒவ்வொரு பிக் அப் உறுமலையும் கவனித்துக்கொண்டிருந்தார்.சில நேரங்களில் மனிதர்கள் இடம்பெயர்ந்து கோவிலடிப்பக்கம் போற சத்தங்களும் கேட்டது  . 

                                                                டிம்பிள் கடைக்கு வெளியே முன்னால சத்தமில்லாமல் படுத்திருந்தது. அதிகாலை போல அவர் தூங்கிப்போய்விட்டார் .




சுப்பிரமணியம் தனியாத்தான் அந்தக் கடையை நடத்திக்கொண்டு இருந்தார் , அவருக்கு மனிவி பிள்ளைகள் இல்லை எண்டுதான் ஊருக்குள்ள அறிய்பட்டாலும், அவர் கடைக்கு பின்னாலா ஒரு பத்தி இறக்கி சின்ன இருட்டானா ரூமில , நிறைய யானைச் சோடாப் பெட்டிகளால் அந்த ரூம் வாசலை மறைச்சு அதுக்குள்ளே தான் சமைச்சு சாப்பிட்டுக்கொண்டு அந்த சில்லறைக்  கடையை மசுக்குட்டி மாமியிடம் வருஷக் குத்தகைக்கு எடுத்து  நடத்திக்கொண்டிருந்தார்.

                                                       நாலு பெரிய வீதிகள், ரெண்டுகிரவல் ஒழுங்கை வந்து சேர்ந்து கைவிரகள் இடுக்கில்  பிரிவது போலப் பிரியும்   பாரதி சிலையடியில்  ரெண்டே  ரெண்டு தெருவிளக்குகள்தான். ஒன்று ஞானப்பிரகாசம் ஹோட்டலுக்கு அருகில் இருந்தது. மற்றது கிணத்தடி வயிரவர் கோவிலுக்கு முன்னால அன்னமக்கா  வீட்டு வேலியோடு  இருந்தது. ரெண்டிலும் பல்ப் இல்லை. பதிலாக சில மண்ணெண்ணெய் விளக்கு முனுசுபால்டி தொங்க விட்டு ஒரு ஆள் வந்து பின்மாலையில் திரி பத்த வைப்பார்.

                                                   சில இரவுகளில் சிலநேரம் சண்டை டவுன் பக்கம் நடந்தால் ஹெலி வந்து அவடத்தைச் சுற்றி அடிப்பான் எண்டு அதை எரிய விடுறது இல்லை.

                                                                       டிம்பிள் சில நேரம் ஞானப்பிரகாசம் ஹோட்டலில் கொத்துரொட்டி போடுற கொத்து மேசைக்கு கீழே சிதறிக்கிடக்கும்  சின்ன சின்ன இறைச்சி துடுகளைத் தேடிப்போகும். அது எப்பவுமே ஞானப்பிரகாசம் ஹோட்டல் இரவு நடுச்சாமம் வியாபாரம் முடிச்சு இழுத்து மூடின பிறகுதான் .அளவுக்கு அதிகமாக தண்ணி அடிச்சுப்போட்டு பாரதி சிலையடியில் படுத்துக்கிடந்த கொண்டு முப்பது கோடி முகமுடையாள் ..எண்டு பாரதியாரையே கிண்டல் அடிச்சுப்  பாட்டுப்பாடி கொண்டிருக்கும் வெறிக்குட்டிகள் இருந்தால் தவிர மற்றநேரம்  பாரதி சிலையடி பிசாசு நடமாடும் அமைதி போலிருக்கும்.

                                                                       வயிரவர் கோவிலில் ஒரு கருங்கல்லு நாய் சிலையாக செய்து வாசலில் வைத்து இருந்தார்கள். அம்மாவாசை  இருட்டுப்போல கறுப்பு அது . அதன் முகத்தில கண் எது காது எது என்று உற்றுப்பார்த்தால் தான் தெரியும் . அது முகத்தை ஒருபக்கமா திருப்பி சந்தியைப் பார்த்துக்கொண்டிருப்பது போலிருக்கும். சில நேரம் டிம்பிளும் அதுபோலவே பார்த்துக்கொண்டு கடை வாசலில் படுத்திருக்கும். அதுவேற இதுவேற.  வைரவரின் நாய் அவரோட பிரைவேட் வெயிக்கிள். டிம்பிள் சுப்பிரமணியத்தோட பெஸ்ட் பிரென்ட். 




பிக் அப் ஓடிகொண்டு வந்தவன். திடகாத்திரமான இளம்பொடியன்.மன்னார் மாவட்டம்.  பேசாலைக் கடலில கடலட்டை  பிடிக்கிற   தொழில் செய்த குடும்பத்திலிருந்து பதினாறு வயதில லீமா 16  பயிட்சிப் பாசறைக்கு  ட்ரைனிங் எடுக்கப் போனவன். நெஞ்சில ஹோல்சர் கட்டி இருந்தான். பக்கத்தில  வூட் பட் ஓரியினல் ரசியன் 
ஓடோமாட்டிக்   கலாஸ்னிக்கோவ் சேப்ட்டி மொட்டில அவனோட இடுப்போடு சாய்ந்துகொண்டு இருந்தது.

                                                          முறைப்படி வீதி ஒழுங்குகள் தியரியாகப்    பயின்று , ட்ராபிக் இன்ஸ்பெக்ட்டருக்கு பவ்வியமாக   ஓடிக்காட்டி சாரதி அனுமதிப் பத்திரம் எடுக்காதவன். அநுமானைப் போல  இராசாவும்  பரசுராமன்  போல  சேவகன்களும் இருந்த  அந்த யுத்தகால நேரம்  பிக்அப்புகள்  ஓடித்திரிந்த எல்லாருமே  அப்படித்தான் இருந்தார்கள்.

                                                                  மழைக்கருக்கலில்   மின்னல் அடிச்சு மாதிரி ஹெட் லைட் போடாமல்   வேகமாக ஓடுவார்கள். புழுதிக்கால புகுந்து புழுதிக்கால தலையை வெட்டிக்கொண்டு  வெளியவாற மாதிரி இருக்கும்  பறக்கும் வேகம் .. பக்கத்தால  பிக் அப் வேகமெடுத்துப் பறக்கிற    சிலநேரம் பாரதி சிலையடியில்  சாரம் கட்டிக்கொண்டு விடுப்போடு ஆவெண்டு வீதியை வேடிக்கை பார்த்துக்கொண்டு   நிக்கிற ஆட்களின் சாரத்தையே  உயர்த்தி எல்லாத்தையும் காட்டிப்போட்டுத்தான் போகும்.

                    " பொடியள் இண்டைக்கு என்னமோ  பொறுத்த இடத்தில வைச்சு ஆமிக்காரனைப்  முறையாப் பிரட்டப் போறாங்கள் "

                                                      என்பது என்பது போன்ற கிசுகிசுப்புகளோடு அந்த ஆரவாரம் புழுதி அடங்கின கையோடு அமுங்கிப்போகும் 


பிக் அப் ஓடிக்கொண்டிருந்தவனுக்குப்  பக்கத்தில முன் சீட்டில இருந்தவன் வோக்கி செடில கதைத்துக்கொண்டு இருந்தான். அவன் விட்டுவிட்டு வெட்டிக்கொண்டு இருந்த உரையாடலை நேர்ப்படுத்த  நம்பரை ஏற்றியும் இறக்கியும் டுயுணர் கொன்றோழில்  சவுண்டை உயர்த்தியும்  உத்தரவு கொடுத்துக்கொண்டிருந்தான்.  கவுண்டர் பிரிக்குவஞ்சியில் ஆமிக்காரன் சிங்களத்தில  கதைக்கிறது வோக்கி செட்டில இடைஞ்சலாகவும் இரைச்சலாகவும் குறுக்கிட்டுக்கொண்டிருந்தது  

                                                      எவ்வளவு கெதியா முன்னரங்கம் போக முடியுமோ அவ்வளவு கெதியா கொண்டுபோய்ச் சேர் என்பதுதான் பிக் அப் ஓடிக்கொண்டிருந்தவனுக்கு  அதை ஸ்ட்ராட் செய்த நேரம் அவனால்க்  கொடுக்கப்பட்ட உத்தரவு.

                                                 பிக் அப் பழைய இஸ்ஸு ஜப்பான் வகை. நாலு சில்லும் டெர்ப்போ எஞ்சினுடன் நேராகக் கிராங்  சாப்ட்டில் இணைக்கப்பட்டிருந்தது. பறக்கும் சாத்தான் !  பின்னுக்கு பத்துப் பொடியள் எல்லாரும் ஹோல்சர் கட்டி துவக்குகளை மேல்நோக்கி நீட்டிக்கொண்டு நெருக்கி அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள். நடுவில ஒரு பசுக்கா டார்பிடோ பாட்டில விழுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் முகங்களில் சண்டைக்குப் போகும் வீராவேசம் பூசணிப் பவுடர் போல பூசியிருந்தது.

                                                   பிக் அப் ஓடினவன் பாரதி சிலையடியில் இருட்டு மம்மிக்கொண்டு இருந்ததை பார்த்தான். அடிக்கடி ஓடிக்கொண்டு திரிந்த ரோட்டுதான்.சாமியம்மா ஒழுங்கை இறக்கத்தில மண் ஒழுங்கை முடிவில இருந்து கியர் போட்டு இழுத்து சந்தியால ஏத்தி வலது பக்கம் திருப்பின நேரம் சடார் எண்டு டயருக்க என்னவோ மாட்டினா மாதிரி சத்தம் வந்தது.கொஞ்சம் பிக் அப்பை வேகம் குறைத்து எட்டிப்பார்த்தான். பார்த்திட்டு

" சனியன் இந்தநேரம் வந்து குறுக்க மாட்டுதே "

என்று சொல்லி செட்டில கதைச்சுக்கொண்டிருந்தவனைப் பார்க்க அவன்,

" ச்சே இப்..இப்ப என்ன ?????????"

" டயரில் என்னமோ செருகிப்போடுது போல சத்தம் "

" எட்டிப் பாரடா,,முதல் டயரில் காத்து இறங்குதா என்று கவனிச்சியா"

" காத்து ஓகே, நாய் ஒண்டு அங்கால எகிறி விழுந்து கிடக்குது "

  " அது கிடக்குது சனியன்,  இப்ப  இதுவா முக்கியம்,,நிப்பாட்டாம அமத்தி   எடுத்துக்கொண்டு ஓடு,, ஆமி ரோமியோ நவம்பர் கட்டவுட் உடைக்கிற மட்டில நிக்கிறான் ,, இறங்கி அடிக்கப்போறான்.போல எடுப்பு எடுக்கிறான்." .

                                               என்றான் .பிக் அப் உறுமி எடுத்துக்கொண்டு பாரதி சிலைக்கு புழுதியை அப்பிப் போட்டு இருட்டில ஓடி மறைஞ்சிட்டுத்து.

                                                             
மணியத்துக்கு ஹிந்தி நடிகைகள் மீது அவ்வளவு மோகதாபம். அதுக்கு அவர் கடையே ஒரு  முன்மாதிரி . . மணியம்கடை என்று ஊருக்குள்ள எல்லாரும் அதைக் சொன்னாலும்  அவரோட சில்லறைக் கடைக்கே " ஹேமமாலினி ஸ்டோர் " எண்டுதான் பெயர் வைச்சு இருந்தார் .தனியா இருக்கிற மனுஷன் எல்லோரும்போல இல்லாமல் பிரத்தியேகமாக   சில விசயங்கள் அந்தாளுக்குப்  பிடித்துபோகுது. நமக்கு என்ன அதில நஷ்டமா இலாபமா என்பதுபோல யாருமே அதை அலட்டிக்கொள்ளவில்லை .

                                                                  சிங்கி மாஸ்டர் ஒருவர்தான் ஒருமுறை சுப்பிரமணியிடம் கேட்டார் 

" மணியம்,,உதென்ன வடக்கத்தி பெடிச்சி,,ஹேமமாலினி பெயரில கடை போட்டு வைச்சு இருக்கிறியள்"

" ஏன் மாஸ்டர் இப்ப என்ன வில்லங்கம் அதில "

" இல்லை,,தேவிகா,,சாவித்திரி,,பத்மினி,,இவையளுக்கு என்ன குறைச்சல்   "

" யார் சொன்னது ஹேமமாலினி வடக்கத்தி எண்டு,,அவள் தமிழ்,,தமிழ் நாட்டில பிறந்த பொம்புளை "

" தமிழ் படம் ஒண்டிலையும் நடிச்சாப்போல நான் கேள்விப்பட்டது இல்லையே "

" அதுதான்,,,பிரச்சினையோ,,அந்த நேரம் சிவாஜி, எம்ஜியார் எல்லாம் என்னைப்போல கட்டைப் புட்டுக்கள்,,ஹேமமாலினி எழும்பின உயரமான பொம்பிளை,,"

" அட,,அட,,அதுக்கென்ன மணியம் "

" எங்கட ஹீரோக்கள் ஹேமமாலினியோட நடிக மாட்டினம் எண்டு எல்லோ சொல்லிப்போட்டினம் ,,அதாலதான் ஹேமமாலினி ஹிந்திக்கு போனது,,அங்கே ஹீரோக்கள் எல்லாம் நல்ல உயரம்,,நல்ல தோதான சோடி "

" ஓ..இப்பிடியும் எல்லாம் நடந்திருக்கோ."

 " ஓம்,,ஓம்,,இப்ப கதை விளங்குது தானே " 


பிக்கப் ஓடினவன் இரவு முழுவதும் முன்னரங்கத்தில் நின்றான். எதிர்பாத்த முன்னேற்ற சண்டை நடக்கவில்லை. ஆனால் பொசிசனில் அவதானிப்போடு   நித்திரை முழித்திருந்தது   களைப்பாக அவன் முகமெல்லாம் விடியாமலிருந்து .  காலையில் திரும்பி பிக்கப்பில் பாரதி சிலையடியைக் கடக்கும் போது, கொஞ்சநேரம் அவடத்தில நிறுத்தி இறங்கி சுற்றிப் பார்த்தான். அவனுக்கு இருட்டிலையும் டிம்பிளின் தோற்றம் கொஞ்சம் தெரிந்து இருக்கவேண்டும். அல்லது வேற என்னவும் காரணமா தெரியவில்லை. 


டிம்பிள் நாட்டிலையும் றோட்டிலையும் மழையோடு வெயிலோடும் வாழ்ந்து கெடும் தெருநாய்கள் போல இல்லை. இது உயர்ந்த உயர்குடி  வளர்ப்பு ரகம், டோப்போமான் வகையும் புள்டேரியர்  வகையும் கலப்பினமாக சேர்ந்த வகை. அதன் ரெண்டு கண்களும் கலப்பில்லாத  நீல நிறம்.தோற்றத்தில் அலாதியான  ஓரியினல் கார்னில்லொப்பஸ் ஜீன்கள் அதன் உடல்வாகில் விசேஷமாக  இருந்தது.   டிம்பிள் எங்கிருந்து மணியத்துக்கு கிடைத்தது போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியாது. 

                                                         
                                                                           மணியம் ஒழுங்கா , ஸ்டைலா இல்லாட்டியும் அவர் வளர்த்த ஜீவனுக்கு   மொடேர்னா " டிம்பிள் " எண்டு பெயர் வைச்சு இருந்ததுக்கும் அதுதான் காரணம்  , கழுத்தில போட்டிருந்த பட்டியில் டிம்பிள் என்று கறுப்பு மார்க்கிங்  பேனையால எழுதி இருந்தார். ஒன்றுவிட்டு ஒருநாள்  அவர் கடையில விக்கிற ஆணைக்கோட்டை உதயசூரியன் நல்லெண்ணெய் போட்டு போலிஷ் பண்ணுவார். டிம்பிள் நல்லென்னைப் போத்தல் போல மினுக்குமினுக்கு எண்டு இருக்கும் . ஹிந்தி நடிகை டிம்பிள் கபாடிய போலதான் அதுவும் பவுசு விட்டுக்கொண்டு அவரோட காலுக்கை முகத்தைத் தேய்த்துக்கொண்டு திரியும்.

                                                    இனி அப்படி திரியுமா என்பது இப்போது மணியத்துக்கு கேள்வியாகி அது  சங்கடப்படுத்திக்கொண்டிருந்தது .


நாளுக்கு நாள் டிம்பிள், அசைவுகள் காட்டுவதிலும் , மூச்சு இழுத்து விடுவதிலும், முனகுவதிலும்   பின்வாங்கிக்  கொண்டிருந்தது . இன்றோடு ஒரு முழுநாள் இரவும் பகலும் கல்லுப்போல அசையாமல் கிடந்திட்டுது . சுப்பிர மணியம் ஒரு அலுமினிய சட்டியில் வைச்ச தண்ணியையும் அது ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அப்பப்ப அதுக்கு பழக்கமான வாடிக்கையாளர் முன்னுக்கு கடையில் வந்து நிண்டு  டிம்பிள் எங்க டிம்பிள் எங்க என்று விசாரிக்கும் குரல்களைக்  கனவுபோல மிதக்கும் வாசனைகளையோடு  அது தெளிவாக அடையாளம்கண்டுகொண்டிருந்தது.

                                                              சுப்பிரமணியம் முதலில் புண்ணியக்குஞ்சியிடம் என்ன செய்யலாம் என்று கேட்க நினைத்தார்.ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.போல புண்ணியக்குஞ்சிக்கு நிறைய ஆட்களைத் தெரியும். அவருக்கு தெரிந்த அவரோடு ஜால்றா போடும் ஆட்கள் உருப்படி இல்லாட்டியும்   குஞ்சி எப்படியும் இப்படியான துயர நேரங்களில்  ஒரு ஐடியா கொடுப்பார் .

                                               அதனால  புண்ணியக்குஞ்சியைக் கையோடு கூட்டிக்கொண்டு வரச்சொல்லி சிங்கி மாஸ்டருக்கு ஒரு கட்டு வையண்ணாசீனா சுருட்டு கையில கொடுத்து ஒரு ஒரேன்ச்பார்லி சோடாவும் உடைச்சுக் கொடுத்தார்.   


சிங்கி மாஸ்டர் போல  ஊரில இன்டலக்சுவல் எண்டு சொல்லும் அறிவு ஜீவிகள் நிறையப்பேர் அந்த நாட்களில் இருந்தார்கள் , இருந்தார்கள் எண்டு சொல்வது பிழை, அவர்கள் அதை ஒரு ஸ்டைல் போல ஆக்கி வாழ்ந்தார்கள்,சிங்கி மாஸ்டரும் அப்படிதான் ,அவர் எப்பவுமே ஒரு பருத்தி சீலையில செய்த பையைக் தோளில மாட்டிக்கொண்டு ,சோக்கிரட்டிஸ் போல முகம் முழுவதும் தாடி வளர்த்து , தலைமயிர் அதுபாட்டுக்கு அலை அடிக்க, போடுற உடுப்பில அக்கறை இல்லாமல் அலையும் உள்ளூர் தத்துவஞானி . அன்றாடம் சாப்பாட்டுக்கே அல்லாடும் அறிவு ஜீவன் 

                                                  
அன்று இரவு கடை சாத்தும் வரைக்கும்  புண்ணியக்குஞ்சி தலைக்கறுப்பு பாரதி சிலையடிப்பக்கம் இல்லை.  , என்ன தாமதம், அல்லது குஞ்சி அவரோட செட் அப் சின்ன வீடுகளை நலம்விசாரிக்க  சிங்கள நாட்டுக்கு போயிடாரோ என்பது  என்ற செய்திகளோடோ  சிங்கி மாஸ்ட்டர் திரும்பி வரவேயில்லை. 

                                                       ஒரு முடிவோடு கடையை ஒரு நாள் இழுத்து மூடிப்போட்டு மிருக வைத்தியரிடம் டிம்பிளைக் கொண்டுபோக ஜோசித்தார் .வார விடுமுறை சனி, ஞாயிறு பொறுத்திட்டு, திங்கள் காலை அதை கொண்டுபோறதா டிம்பிளுக்கு பக்கத்தில இருந்து தடவிக்கொடுத்து சொன்னார்  அதை .  டிம்பிள் கண்ணைத் திறந்து கேட்டுது, மிருக வைத்தியர் என்ற சொல்லை அது முதன் முதலில் அன்றுதான் கேள்விப்பட்டது .  அதுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருந்திருக்கலாம்.


திங்கக்கிழமை அதிகாலை  விடிய வீராளியம்மன் கோவில் துர்க்கையம்மன் மணி அடிச்ச கையோடு சீர்காழி கோவிந்தராஜன்  மின்னெறிஞ்சான்வெளிப்  பக்கமாக கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டிருந்த     லவுட் ஸ்பீக்கரில்  " தார் அமர் கொன்றையும்  சண்பக மாலையும் சாத்தும் ஊரார் தம் பாகத்து உமை மைந்தனே " என்று அபிராமி அந்தாதி தொடக்க  மணியம் ஒரு வெள்ளை எட்டுமுழ  வேட்டியும்,பீதாம்பர பட்டுச்   சால்வையும் எடுத்து வெளிக்கிட ஆயத்தமாகுமுன், ஒருக்கா எட்டிப் பார்ப்பம் என்று    டிம்பிளை வந்து பார்த்தார்.

                               டிம்பிளின் சிலமன் இல்லாமல்  சரிஞ்சு விழுந்துகிடந்த   முகத்தில  ஏற்கனவே மாட்டு இலையாங்கள் மொய்க்கத் தொடங்கியிருந்தது.



சுப்பிர மணியம் டிம்பிளைத் தூக்கி அந்த பீதாம்பர பட்டுச்   சால்வையால் சுற்றினார். கொஞ்ச நேரம் நின்று ஜோசித்தார். பின்னுக்கு மசுக்குட்டி மாமி வீட்டில நீண்ட வளவு இருந்தது. அதில ஒரு கிடங்கு அன்னமுன்னா மரத்துக்கு அருகில் வெட்டி அன்றைக்கு மத்தியானம் டிம்பிளை அடக்கம் செய்திட்டு. அந்த பீதாம்பர பட்டுச்   சால்வையை  நாலாக மடிச்சு  டிம்பிள் படுத்து  இருந்த இடத்தில மடிச்சு வைச்சிட்டு, அதுக்கு மேலே சுவரில் ஒரு ஆணி அடிச்சு டிம்பிளின் கழுத்தில அவர் போட்டு இருந்த பெல்ட்டைட் கொழுவி தொங்க விட்டு,  அதில ஒரு சின்னக் குத்து விளக்கு கொழுத்தி வைச்சார்.

                                             நாளே நாலுநாள்தான் அவர் டிம்பிள் இல்லாமல் இருந்தார். அவரிடம் வருத்தப்பட அனுதாபங்கள் இல்லை. திடமாக இருந்தார். சிங்கிமாஸ்டருக்கு மட்டும் டிம்பிள் பற்றி சொன்னார். சிங்கிமாஸ்டர் அதுக்கு 

                                                  " மணியம்  உனக்கு ஒண்டு சொல்லட்டே ,  பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.நூல் கொண்டு ஆடும் பொம்மைகளை ஆண்டவன் விரும்பியபடி ஆட்டுகிறான், விரும்பியபடி அறுத்துவிடுகிறான்,  இடையில் வாழும்போது  நமக்கென வந்தவர்கள் அவர்களுக்கான நேரங்களில் போய்விடுகிறார்கள் , நம்ம நேரத்துக்கு நாம் காத்திருக்கிறோம் "

                                                                  என்று சொன்னார் . பிறகு ரெண்டு பேரும் சுருட்டு குடிச்சுக்கொண்டு இருந்தார்கள் .மணியம் அன்று கடை திறக்கவில்லை. பின்னேரம் சின்ராசாவின் வீட்டுக்கு போய் மூக்கு முட்ட தென்னம் கள்ளு குடிச்சுப்போட்டு வந்து கடை வெளி வாசலில் படுத்திட்டார், பின்னிரவில் பிக் அப் ஓட்ட்ங்கள் அதிகமாக எழும்பிப்போய் உள்ளுக்கு டிம்பிள் கடைசியாக படுத்து இருந்த இடத்தில இருந்த பட்டுச் சால்வையை நீட்டி விரிச்சுப்போட்டு  படுத்திட்டார். 


'அதுக்கு அடுத்தநாள் அவர் காலையில் வீராளியம்மன் கோவில்  லவுட் ஸ்பீக்கரில்    அபிராமி அந்தாதி கேட்டுமுடிய மஞ்சள் தண்ணி தெளிச்சுக்கொண்டு கடையின் முன் கதவைத் திறக்க டிம்பிள் எப்பவுமே வாலை ஆட்டிக்கொண்டு நிக்கிற இடத்தில இன்னொரு ஜிஐவன் நின்று வாழை ஆட்டி, அவர் காலை நக்கியது, டிம்பிள் போலவே தோற்றம், அனால் நேரம் குறைவு., பிடிகிரி தூய்மை அதன் கண்களில் இல்லை,  கலப்பு இனம் போலிருந்தது .

                                                               ஆனால் அதன் கழுத்தில் பெல்ட் இருந்தது.பெல்ட் உள்ள ஜீவன்கள் வீட்டு வளர்ப்புகள். அவற்றுக்கு உரிமையாளர் இருக்கிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை இது என்னத்துக்கு இங்கே போன ஒன்றை இட்டு நிரவல் செய்ய வந்து நிக்குது என்று ஜோசித்தார், இன்னொருவரின் ஜீவனை ஆதரிக்க முடியாது, உடையவன் ஒருநாள் வந்து கூடிக்கொண்டு போய்விடுவான், அதைவிட வீண் பிரச்சனை வரவும் வாய்ப்பு இருக்கு

                                                              சுப்பிரமணியம் அதில பெயர் என்ன எழுதி இருக்கு என்று தேடினார், பெயர் ஒன்றும் இருக்கவில்லை.,அதனால அதுக்கு ஜீனத் அமன் ஹிந்தி  நடிகையின் அபிமானத்தில் ஜீனத் என்று பெயர் வைச்சார்.    ஜீனத்  கொஞ்ச நாள் முன்னுக்கும் பின்னுக்கும்  அவரோட காலுக்கு நிண்டு சுழண்டதுக்கு. ஆனால் அதன் கண்களில் நிராகரிக்கப்பட்ட கோபம் இருந்தது. அதை மணியம் கவனித்தார், ஆனாலும்    அதுக்கும் டிம்பிள் போலவே ஒரு குற்றம் குறை இல்லாமல் கவனிச்சார்.

ஒருநாள் பெட்டிசம் பாலசிங்கம்  மணியம் கடையில்  வந்து சந்தோசமாக  நிக்கிற ஜீனத்தைப் பார்த்தார். அவருக்கு சுருக் என்று தூக்கி வாரிப்போட்டது. !

                                                  ஊரில   ஒப்பரேஷன் செல்லத்துரை  வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் . அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ஆங்கிலத்திலும் எழுதக்கூடிய புலமை உள்ளவர். அதாலா பெட்டிசம் எழுதுறது, யாரை யாரிட்டப் போட்டுக் கொடுக்க வேண்டும் எண்டு இலங்கை ஜனநாஜக சோஷலிச குடியரசின் நீதி நிர்வாக  சட்ட திட்டங்கள் நல்லாத் தெரியும்.

                                                               பெட்டிசம் அதை ஒரு சமூக சேவைபோல தான் செய்தார் ,ஆனால் அவரின் சேவை பலருக்கு பீதியக் கிளப்புவதால்  அவரை ஊருக்குள்ள ஒருத்தருக்கும் பிடிக்காது . அயலட்டையில் யாருமே அவரோடும் ,அவரின் மனைவியோடும் கதைபதில்லை , நன்மை தீமையில் அவர்களை ஒதுக்கித்தான் வைத்து இருந்தார்கள் ,பெட்டிசம் மென்மையான மனிதர், அதிர்ந்து பேசமாட்டார் , வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் போல " வாடின பயிரைக் கண்டபோதெல்லாம் வாடீனேன்,," என்பதுபோல நிலம் அதிராமல் , தலையைக் குனிந்துகொண்டு போறது தெரியாமல் போவார் , வாறது தெரியாமல் வருவார் ,ஆனால் அவருக்கு ஊருக்குள்ள என்ன நடக்குது எண்டு கடுவன் பூனை போல எல்லாம் தெரியும் ,

                                                          பெட்டிசம் முக்கியமா, ஊருக்குள்ள விதானை வசதியான யாருக்கு கூப்பன் காட் கொடுத்திருகுரார் எண்டு A.G.A என்ற உதவி அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார் , A.G.A எந்த மதகு கட்டுற கொன்ட்ராகில எத்தினை சீமெந்து பாக்கை சுருட்டினது எண்டு G.A என்ற அரசாங்க அதிபருக்கு போட்டுக் கொடுப்பார், பெட்டிசம் தனிப்படவும் புரளியைக் கிளப்புவார் ,  ஒருவரைத் தவிர எங்கள் ஊரில் அவரோட  வேறு  யாரும் நேருக்கு நேர் நிண்டு கதைக்க மாட்டார்கள் , கதைச்சால் விளக்கெண்ணெய்க்க வெள்ளைப் பூடு போட்ட மாதிரி வில்லங்கம் வெடிக்கும் .

தொடரும்