Monday, 18 December 2017

பூவரசம் பூக்கள்...

‘நினைவின் துணைகொண்டு இயன்ற வரையிலும் சத்தியத்தை உருவி  இலக்கியத்தில சொல்கிறவனின் சத்தியமே முக்கியமானது, தூய்மையான வெள்ளங்கி போட்ட பாதிரியாரால் மிகச்சிறந்த படைப்பைத் தரமுடியாது. ஒரு திருடனால் மிகச்சிறந்த நாவலை எழுதிவிடமுடியும்.’ என்று கன்னியாகுமரித் தமிழில்  எழுதியிருப்பார் ஒரு விமர்சனக் கட்டுரையில் தமிழ்நாட்டு அல்பேர்ட் காம்யூ 
சுந்தர ராமசாமி .

                                                           எவ்வளவு பெரிய உண்மை அது. சுயம் என்பது ஒருவரின் சுதந்தரம். அதன் வீச்சு விரியும்  எல்லைகள் அனுபவ  
 இலக்கியத்தின் ஆகப்பெரிய பலம். அனுபவங்கள் காலம் கடந்தும் நினைவுகளில் அப்பிக்கொண்டு இன்றைய வாழ்வியலைப்  பாதிக்கும்போது  அந்த  எண்ணங்களும், சிந்தனைகளும் புரிந்துகொள்ளும்  தன்மைக்கேற்பத் தளமாற்றங்களை  நிகழ்த்துகின்றன. அதுக்கு இப்போது வசிக்கும் நாடு எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை. 

                                                        புலம்பெயர் வாழ்வென்பது பல வெளிய சொல்லமுடியாத காரணங்களுக்காய்  கைகளை உதறிவிட்டு  ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு எல்லைகள் தாண்டி ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்து  வெறுமனே இடம்பெயர்வதில்லை. விட்டு விட்டு வந்த தாய்திரு நாடு, அதில் வாழ்ந்த வாழ்க்கை, அதன் அபரிமிதமான இயற்கை,   நம் மனதில் உருவாக்கும் உண்மையான  பிம்பம் என்ன என்று பல நேரம் ஜோசிப்பது. 

                                                     நீண்ட பனைவடலிப்  பாதையொன்றிலிருந்து  கிளைகள் பிரிந்து அக்கிளையிலிருந்து மேலும் கிளைகள் பிரிந்து செல்வது போல . வழியெங்கும் நாயுண்ணிச் செடிகள் , எருக்கலம் புதர்கள், காட்டாமணக்குப் பூக்கள்  ,  பொறிபறக்கும் வெப்பம், எண்ணற்ற ரகசியங்கள் , இந்தப் பாதாள உலகத்தில் கைவிளக்கு ஒன்றை ஏந்தி  நினைவுகள் முன்செல்ல நாம் பின் தொடர்கிறோம். அந்தப்  பயணம் தீர்த்தயாத்திரை. 


                                        கவிதை மொழியில் அந்த  ஆழத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதைகளை எழுத முடியுமா ? முக்கியமா என்னால் எழுத்தமுடியுமா என்று ஜோசிப்பது. அந்தம் என்று எதுவுமில்லா  முடிவற்ற அதன் எதிர்வினைதான் இந்த முயட்சிகள்.  என்னால் முடிந்தளவு, என் அனுபவத் தடங்களில் கிடைத்த   ஆளுமைக்கு ஏற்றபடி சதையும் ரத்தமுமாய் நம்முன் தள்ளிவிட்டுச் சென்றுவிட்ட ஒரு காலத்தின் நினைவுகளை ஸ்கண்டிநேவியா என்ற வடக்கு ஐரோப்பாவில் உள்ள சுவீடன் என்ற  உறைபனிக் குளிர் நாட்டில் இருந்து எழுத முயட்சித்தவைகள் இவைகள். 
.
.........................................................................
.
அப்போதெல்லாம் 
புழுதி விழித்துக்கொண்ட 
எருக்கஞ்செடித் தரவைகளில் 
மழையிறங்கிய சந்தங்களில் 
உட்காந்துகொள்ளும் 
ஒரு மொழியில்தான்
பயிற்றம்பூக்களின்
பூந்துணர்கள் அதிகமிருந்தது !


பின்னர்
ரத்தம் வெளிறிப்போன
ஆண்டுவ பாஸாவில்
வெயில் கொளுத்திப்போட்ட
தீர்க்கமான நகரமொன்றில்
சமாளிப்பு வார்த்தைகளில்
சில முணுமுணுப்புக்கள் சேர்ந்துகொண்டன!

ரெண்டு கண்டங்கள்
நாலாயிரம் மைல்கள் நகர்ந்து
ஓங்கிப்புறந்தள்ளியது
முடிவில்லாப் புலம்பெயர்வு !
இடையிலொரு
எச்சில்க் கையில்
உறைபனி ஈரங்கள் ஒட்டிய
இன்னொரு சம்பாஷணை !

இப்போதெல்லாம்
என்னிட
ருக்கும்
வெள்ளை மொழியில்
குளிர் மோதிப்போன காற்றிலும்
வெறும் இரைச்சல்களே!

.
............................................................................
.
மணல்த்தறைகளில் 
பாதங்களைக் குத்திநடக்கும்
தித்திப்புக் குழந்தைகளின் 
சலனமற்று மிதக்கும் துள்ளல்! 


மோகனரங்கமான 
குறுகுறுப்பில்
உள்வாங்கிக்கொள்ள
பிரியமான நீல மேகங்கள் ,
பேசும் விழிகளில்
அதிகாலைப் பூக்களின் குளிர்ச்சியை
மனததெல்லாம் நிறைக்கும்
 நதியின் ஏகாந்தம் !


கைகளைத் தொங்கவிட்டபடி
அசைந்தாடிக்கொண்டிருக்கும்
தூங்குமூஞ்சி மரங்கள் !

காற்றின் முதுகிலேறி
பெயர் தெரியாமல் வந்திறங்கும்
இசைப் பறவைகள்,

மயக்கங்களின் ஊடாக
சேர்த்தே வாசிக்கமுடிந்த
ஒரு தியானப்பொழுது

அது
தொலைந்துகொண்டிருந்தபோதிலும்
சில வாசனைகளை
இறுக்கிப்பிடித்திழுக்கமுடிந்தது !

.
..................................................................................
.
முன்னொரு 
பழங்காலத்தில் 
வெறுங்கால் வழியெங்கும் 
கிளுவங் கதியால்களும் 
கிடுகுவேலிகளும் 
வெய்யில் வெளுத்தபடியே
கோணலாகத்தான் இருந்தது
தேர்முட்டியிலிருந்து
செங்கழுநீர்த்தொட்டிவரை
அம்மன்கோவில்வீதி !

பவதாரணி போல ,
சித்திரைக் கஞ்சிபோல ,
அம்மச்சியா குளம்போல
மானம்பூ திருவிழாபோல ,
சொக்கன்கடை வடைபோல,
பாசிக்கிணறுபோல ,
அன்னமடத்துத் திண்ணைபோல ,
கட்டைப் பூவரசம் பூக்கள்போல
உலகத்தில்
வேறெங்காவது அதிசயமிருக்கா
என்றெல்லாம் நீயும் நானும் பேசியிருக்கிறோம். !

ரெண்டு கண்ணிலும்
தூரப்பார்வை பறிபோனதுபோல
நான் இங்கு வந்துவிட்டேன் !

நீ
அங்கிருந்தபடியே
வெளிச்ச நாளொன்றில்
கைபேசிக் காணொளி அனுப்புகிறாய் !

நண்பா
சீமெந்துக்கொங்கிரீட்
காலூன்றிய கட்டிடங்களைத்தவிர
வேறு ஒன்றுமேயில்லையே அதிலே !
ஆனாலும்
எல்லாத்திலுமே ஒரு நேர்த்தியிருக்கு
அதில்த்தான் நண்பா
வெளியேறியேவிட்டதே
நமக்கெனவே வடிவமைக்கப்பட்ட
எல்லா விதமான இன்பங்களும் !

நன்பா
நாங்கள் கடந்த பாதையை
நீ
இருட்டிலேயே எடுத்து அனுப்பியிருக்கலாம்
இதில்
வெட்கப்பட இனி ஏதுமில்லையே !

.
..............................................................................
.
அங்கிருந்துகொண்டு
பொழுதுகள்
இரவோடும் பகலோடும்
சுவாரசியாமாய்ப் போகுதென்கிறாய் !

எரிந்து போன 
சோயாமீட் கறியையும் ,

நடுங்கித் தவறி விழுந்து
உடைந்து போன
கையடைகியையும் ,

நிரந்தரமில்லாத
தட்காலிக வேலையையும்

அடிவரை முடிந்துபோன
வோ
ட்காப் போத்தலையும் ,

அழுக்கு நிறைந்த
கண்ணாடி ஜன்னல்களையும்,

அடிக்கிவைத்துள்ள
கடனடைப்புக் கடிதங்களையும்,

மாறி மாறிப் பார்த்தவாறு
மயங்கிகொண்டிருக்கும் மந்திமயக்கத்தில்
சுரமிழந்த
கடைசிக் குரலில்

" வாழ்க்கை
சுவாரஸ்யமாய்ப் போய்க்கொண்டிருக்கு
இங்கேயும்தான் "  என்கிறேன் !

.
....................................................................................
.
ஒரு 
தூக்கணாங்குருவியின் 
திருப்திகரமற்ற கூட்டை 
தலைமுறைக்கும் 
வீடு சேர்ப்பிக்க நினைத்ததில் 
என்னவோ
மிகைப்படுத்தல்
கலந்திருந்தது போலிருந்ததா ?

அல்லது
வானத்தைத் தேடும்போது
உருவாக்கப்பட்ட
பறவையின் அந்தரிப்புக்கள்
பின்தொடர்வதில்
தவறவிடப்பட்டிருக்கலாமா ?

சப்பென்ற குறியீடுகள்
பறத்தலுக்காக
உருமாற்றப்பட்டவையென்றால்
மரணத்தை வினைக்கும்
ஆதாரமான செய்திகள்
உருவப்பட்டவையென்றால்
உள்ளடக்கப் பார்வையில்
அனுதாபங்கள் இருக்கவில்லையே !

நான்
எதிர்பார்த்ததுபோலவே
சிதைக்காமல் உயிர்ப்புடன் கொண்டுவருகிற
பறவையின் உயிர்பற்றிப்
பேச்சடிபட்டு வந்ததுபோது
காலம் மறக்கடித்துவிட்ட
சிறகுகளுக்குள்
ஒன்றாகிவிட்டது
கவிதை !

.
.......................................................................................
.
என் கால்களில் 
முன்னம்போலத் திராணியில்லை 
குதிப்பாதக் கரடுமுரடுகள் 
குமைந்து வெளிறிப்போனதில் 
ஒவ்வொரு அடியெடுப்பும் 
எச்சரிக்கை நீட்டிப்பில்
திட்டமிட்டும்
சறுக்கலான
முன்பாச்சலாகவேயிருக்கு !

அதுதான் காரணமாகவிருக்கலாம்
ஏற்றமான வளைவோடும்
புராதனமான பாதைகளிலும்
சந்தேகங்கள்
ஒவ்வொரு
படிப்படிப்படிப்படியாகக் காத்திருக்கு,

சின்னவயதுப் பயம்,
வளர்ந்தகாலக் கைவிடுதல்,
நிஜங்கள் நசிந்துபோன
அச்சம்தரும் திகில்,

ஒரு
முடிவெடுக்க அவகாசமில்லாக்
காலத்தில்க் காலாற
வெறுங்காலில்
ஆற்றுமணல்மேடுகளை
அசைவில் அசைபோட்டுக்கொண்டே
நடந்துகொண்டிருப்பதென்னவோ
இதமாகத்தானிருக்கு !

.
...............................................................................
.
விழுந்துவிடாது
கொப்பிழக்க
வைத்தகுறி தவறிவிடாது
பற்றிப்பிடித்த கைகளுக்கு
இப்போதெல்லாம் 
வேலைகள் அதிகமில்லை,

அறிமுகமே இல்லாதபோதும்
கைகுலுக்கிவிட்டு
விசுக்கும்போதே
வெவ்வேறுவிதமாகிவிடும்
விசித்திரமான எண்ணங்கள்

பாதங்களில்த்தான்
பாரமில்லாத பயிற்ச்சிகள்
அது

பதிவுசெய்யும்
குறுக்கும் நெடுக்குமான
வளம்மாறிய காலடிகளில்
நடைப்பயணம்
மெல்ல ஆரம்பிக்கின்றது

ஈர்ப்புநிலை தவறாத
ஆதி்ககாலமொன்று இருந்ததென்று
பரிணாம மீட்டல்

ஒரு 
மரத்தை உற்றுப்பார்க்கும்போது
நினைவுபடுத்துகிறது
இறங்கிவந்து
நிமிர்ந்து நடக்கவாய்த்த
அந்தக் கணத்தை !

.
.....................................................................................
.
சட்டென்று சுதாரித்து 
திருப்பிப் பாதைகளை மாற்றிவிடுகிற
புலம்பெயர்ந்த
எனக்குதான் எதுவும் 
திருப்திகரமாக அமையவில்லை !

மின்னேறிஞ்சான் திருவிழாவையே
மூக்குத்திக்கு மேல்
உயிர்ப்புடன் மெருகேற்றி
முகம்சுளிக்காமல் சிரிக்கும்
பவதா
இப்போது எங்கிருக்கிறாள் ?

நல்ல வேளை,
எல்லாரும் நேசித்தும்
கடிதம் எழுதிக்காட்டி வாசித்தும்
காதலுக்கு உடன்படாத
பவதா
எப்படிக் கலியாணம் கட்டினாள் ?

கச்சிதமான தூய்மையில்
கலையாத சேலையில்
முழுமையையும் ஒருமையையும்
ஒளியும் ஓலியுமாக
வீராளியம்மன் வீதியெங்கும்
தீராக் கனவுகளைக் கடத்திய
பவதா
இன்னுமப்பிடியேதான் இருக்கிறாளா நண்பா ?

நீயும்தான்
இடம்பெயர்ந்து
வட்டமடித்து சிக்கிச் சீரழிந்துவிட்டதில்
பழசுகளை நெருங்கும்போது
நினைவிழந்திருக்கலாம் !

நான் கேட்பது
எங்கட பவதா
எங்க ஊர் பாவதாரணியடா

அவளாவது
தேங்கியிருப்பதை எல்லாம்
இழுத்துக்கொண்டுபோகும் காலத்தில்
இன்னும் மிச்சமிருக்கிறாளாடா நண்பா ?

.
.....................................................................................
.
எப்படித்தான் 
அதட்டி வெளியேற்றுவது 
அந்தரங்கமான நேரத்தில் 
சத்தமாகக் கதவுதட்டித்திறக்காமல் 
உள்நுழைந்துவிடுகிற 
அதிகாலைக் கனவுகளை ?

காலத்தில்ப்
பெறுமதியற்ற சம்பவங்கள்,
விதியோடு

அகாலமான விபத்து,
தெரிந்தே
செய்துவைத்த துரோகம் ,
தந்திரமாகக்

கைவிடப்பட்ட அன்பு,
என்றென்றைக்குமாக
வெறுப்படையவைக்கும் முகங்கள்,
ஏமாற்றத்திலும்

தந்திரமான வெற்றி ,அர்த்தங்கள்
அறியவிரும்பாத செய்திகள்,
தூக்கியெறிந்துவிட்டுப்போகமுடியாத
இவையெல்லாம்தான்
தூக்கத்துக்குள்
குப்பையாகக் குவிந்துவிடுகின்றன !

.
........................................................................................
.
எத்தனை பெரிய வாழ்வின் புரிதல்
உச்சித்தலை நனைக்கும்
அய்ப்பசி மழையின்
பனிநீர் விசிறல்களில்
என்னையுமிழந்து 
மிதந்த பறந்த சமயங்கள் .

ஒருசில
நுண்ணசைவுகளின்
சூழலில் கிடைத்த வாய்ப்புக்களில்
வெள்ளித்துளித் தூரிகைகள்
மொழியாகிப் பாடம் சொல்கிறது
அதை வாசிப்பதில்
முழுநாளுமே
மழையாக நகர்ந்தது

அதன் சிறப்பம்சம்.
எந்தவொரு பொழிவுச்சித்தரிப்பும்,
விவரணையும்
தனித்தனியாக இல்லை.

தெருவோரங்களை அழைத்துக்கொண்டு
இறுதியேயில்லாததுபோல
கால்போனபோக்கில் நடந்தேன்
நேற்றுமுழுவதும்

எப்போதோ
தொலைத்துவிட்டு வந்த

மண்புழுதி வாசங்களையும்
வெள்ளவாய்க்காலையும்
செங்கால்நாரைகளையும்
செண்பகப்பூக்களையும்
கூரையில் சொட்டிய வடிசல்களையும்
மழை
மீட்டெடுத்தது என்னை உறுத்தவில்லை.
மழையின் இயல்புதானே அது.

.
.................................................................................
.
சோம்போறித்தனம் 
எப்போது முடியும் 
என்பது போன்ற எரிச்சல், 
இப்போதோ அதன் தந்திரங்கள் 
அத்துப்படியாகிவிட்டது
இப்படித்தான் இருக்கவேண்டுமென்ற
வழிமுறைகளையும்
விம்பங்களையும்
தீர்மானங்களாக்க அனுபதிப்பதில்லை!

அதிஷ்டவசமாக
எல்லாவற்றையும் விளையாட்டாக்கும்
நியதிகளே
என் பேசும் மொழி
அதனாலோ தெரியவில்லை
என்னைச் சுற்றிச்
துதிபாடிகள் இல்லை
தற்பெருமையும் வாய்க்கவில்லை
புகழும் சுற்றிவளைக்கவில்லை !

படித்தவர்களின் பாஷையில் சொல்வதென்றால்
பார்வையிழந்தது போலிருக்கும்
அபூர்வமான அதிகாலைகளில்
இரைச்சல்கள் நழுவிவிட
மனவோசை
மகிழ்ச்சியோடிருக்கும்போது
பொழுதுகளைக் கட்டுபடுத்தமுடிகிறது

அப்போதெல்லாம்
பனித்துளிகளைச் கொட்டிக்கொண்டிருக்கும்
ஒரு
மார்கழிமாத மரத்தின் கீழ்
நிற்பது போன்ற பிரமை !

.
.................................................................................
.
ஒரு
கவிதைக்கான
வீச்சை முடிவுசெய்வது
காட்டைக் கடந்து செல்வது போல
ஆழ்மனதில் 
அதன் சவால் மிகப்பெரியது,.

நடந்துகொண்டேயிருத்தல்
என்ற அந்த நிகழ்வைத் தாண்டி
அதுவொரு கனவுக்களம்,

எதட்காக
வெறியாட்டங்களுக்கு நடுவேயிருக்கும்
நளினமான நகரத்தைப் புறக்கணித்து
போலிகளை நம்பாத
அடர் காட்டுக்குள் இறங்கினேன் ?

யாரோடும்
சேர்ந்துகொள்ளாத
மேன்மைதரு மரங்களின்
தேக்கமான புதர்களின்
கிசுகிசுப்புகள் போலாகிவிட்ட சருகுகளின்
உண்மைத்தன்மையை
நானாகப் புரிந்துகொண்டு
தொட்டுப்பார்க்க விழைந்த விஷயங்கள்
வெவ்வேறுவிதமான பரிசோதனைகள் !.

வாழ்வைப்பற்றின
புதிய கதையாடலை துவக்கி வைத்த
நெடும்பயன நடைமுடிவில்
ஒரு
நல்ல வாசகனாக
கவிதைகளிலிருந்து விலகி ஓடுவதே
நல்லதென்று முடிவுசெய்தேன் !

.