Sunday, 24 December 2017

பழைய நானும் பழையபடி அவளும் !

                                                                                    கிராமப்புற சுவிடனில் உள்ள  க்ரான்னேர்பேர்க், ச்ர்ன்ஹோவ், என்ற ஒரு அமைதியான கிராமத்தில் உள்ள ஸ்டெர்ன்செட்டர் என்ற குக்கிராமத்தில்   பலவருடங்கள் பின்  மார்க்கிட்டுடன்    வாழும் சந்தர்ப்பம் கிடைத்தது.   சோர்மலன்ட் என்ற விவசாய, காடுகள் , புல்வெளிகள், ஏரிகள், பந்தயக் குதிரை வளர்க்கும் திடல்கள், உள்ளூர் உட்பத்தி பொருட்கள் உட்பதிசெய்யும் சின்ன தொழிட்சாலைகள்  நிறைந்த நாட்டுப்புறப் பிரதேசம் அது. 
.                                     
இந்த மரவீடு 
பசுந்தீவனப்புற்களின் 
சேமிப்புக்களஞ்சியமாயிருக்கலாம் !
குதிரைகளின் 
பிராண்டல் வாசம் 
பழைய நண்பன் போல
நினைவழியா
இதயசுகமாயிருக்கு,


வாசனை முழுவதும்
நினைவுகள்
தாங்கிப்பிடிப்பதால்
கழுத்தைத் திரும்பிப் பார்க்காமல்
கடந்து போவது
இலகுவாயிருக்கவில்லை,


காலத்தை
உதாசீனம் செய்துகொண்டதாலோ
தெரியவில்லை
பண்ணைக்களஞ்சியம்
ஒரு பக்கம் சாய்ந்துவிட்டது,


கறலரித்துக்கொண்டிருக்கும்
இரும்புத் திருப்புமுனைகள்,
இடுக்குகளிலும்
சிலந்திவலைகளைத் தாண்டி
உள்நுளையமுடியாத
பழைய வெய்யில் ,


உக்கிக்கொண்டிருக்கும்
வைராக்கிய மரச்சட்டங்கள் .
தூசி அப்பிப்படிந்தும்
நிலையாமையை நியாயப்படுத்த
சிதைவுகளோடு எதிரியாகி
மாறிமாறி முரண்படும்
வரலாறு ,


நான்
குதிரைலாயத்தை
கொஞ்சநேரம் தான்
நடைநிறுத்தி நின்றுபார்த்தேன்


அதற்குள்ளேயே
வாழ்ந்தழிந்து முடியும் போதும்
தொடக்கப்புள்ளியில்
கொண்டுவந்து நிறுத்திய
அதன் பிடிவாதங்கள்
என்
நிகழ்காலத்தை நிராகரித்துவிட்டது !

.
                                                          கோடைகாலம் என்பதால் எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று  மார்க்கிட் அவளோட ஸ்டோபெரி தோட்டதில் குனிஞ்சு நிமிர்ந்து விவசாயி போல வேலை செய்து பார்க்க   கொஞ்சம் வேலை வேறு கொடுத்தாள். எனக்கும் அது மிகப் பயங்கரமான தனிமை பரிசளித்தாலும், கொஞ்சம்  புத்துணர்ச்சி கொடுத்தது  என்பதும் உண்மை.
.
அகலமான
தொடக்கம் போலத்தான்
நெடுஞ்சாலையோடு
கைகொடுத்து இணைந்துகொள்ளும்
முடிவும் ! 


எப்போதாவது தான்
தனிமைக்குள்ளிருந்து
வெளியே எடுத்து விடப்பட்டதால்
பிரசன்னமாகும் ஒருவர் ,


அல்லது
தவிர்க்கமுடியாத கேள்விகளோடு
ஓரங்களில்
தடம்புரண்டு நடக்குமொருத்தி,


அல்லது
பறத்தலுக்கும்
இருத்தலுக்குமிடையிலான
அந்நியத்தை
பெரிய வானத்தால் நிரப்பும்
ஒரு தவிட்டுக்குருவி ,


அல்லது
எல்லை வரையறைகளில்லாப்
பெருவெளிக்குப் பின்னால்
பறித்துக்கொள்ளமுடியாத
சுதந்திரத்தில்
பாதைகடக்கும் மான்கள் ,


அல்லது
கண்களைப் பொத்திக்கொள்ளவைக்கும்
ஜூன்மாத வெய்யிலுகேயுரித்தான
பகல் வெளிச்சம் ,


அல்லது
உறுதியற்ற கனவுகளின் மீது
இழுத்துப்போர்த்தப்பட்டிருக்கும்
அழுக்கான இருட்டு,


அல்லது
வெற்றிடத்தில் அடிமையாகி
இலட்சியங்கள் இழந்துபோன
மவுனம் ,

இந்தப்பாதையின்
இப்போதைய சாத்தியங்கள்
இவளவும்தான் !

.
                                                                                          எல்லை      வரையறைகளில்லாப் பெருவெளி  பறித்துக்கொள்ளமுடியாத சுதந்திரத்தில்  பாதைகடக்கும்   க்ரான்னேர்பேர்க், ச்ர்ன்ஹோவ்  கிராமத்தில்     மார்க்கிட் எலிசபெத் நிலாண்டர்ஸ்  நகர வாழ்க்கையைப் புறக்கணித்து அவளுக்கு சொந்தமான நோர்டன்மார்க் பண்ணைக்  காணியில் புதுவீடு கட்டிக்கொண்டு  வாழ்ந்துகொண்டு இருந்தாள்.
.
ஓ,,,மனசே 
ஓட்டிகொள்ளாத
இரண்டு கோணங்கள் 
எப்போதும் வேண்டுமென்பதை 
சங்கீதங்கள்தான் 
ஆத்மாவைப் பிசைந்து
சொல்லித்தரவேண்டுமா ?


வாதாபிகனபதேம்
இன்றைய காலையை
ஹம்சத்வனியில் தொடக்கியது!

கடந்த பாதையில்
இத்தனை தடுமாற்றங்களா
நினைக்கவே
ஆயாசமாக இருக்கிறது!


அலைச்சல் நாட்களுக்குப் பிறகு
வரும் ஓய்வில்
ஆரபி இராகம்
சாடிஞ்சனே ஓமனசாவில்
எங்கேயோ ஆரம்பித்ததை
எங்கேயோ இணைக்கும்
பிராயத்தனங்கள் !

குத்துமதிப்போடு
ஏக்கமாக எதிர்பார்த்ததெல்லாதையும்
இந்தாபிடி என்று அள்ளிக்கொட்டுது
கீர்த்தனைகள் !

ஏதோவொரு நிறத்தில்
ஏதோவொரு பூவைப் பார்த்துக்கொண்டு
ஏதோவொரு அந்நிய மொழியில்
கதைத்துகொண்டு
அர்த்தங்களை
மட்டமாக மொழிபெயர்துக்கொண்டு

விலகலைவிலத்தி நகரும்
இந்த நொடியிலும்
ஓர் உணர்வுப் பிணைப்பை
நிசப்தங்களுக்குள் நுழைந்து வெளியேறி
ஏற்படுத்தியேவிட்டது
கடைசிக் காயத்திரி மந்திரம் !

.
                                                                                  அங்கே அவளோட பழைய பரம்பரை வீடும் அருகில் இருந்தது. அது முக்கால்வாசி மரத்தால் கட்டப்பட்ட தொன்மையான மூன்று மாடி வீடு. அருகில் குதிரைலாயம், குதிரைப்புல்  சேமிப்பு களஞ்சியம், விண்டருக்கு எரிக்கும் விறகுகள் பிளந்து சேமிக்கும் களஞ்சியம், ஒரு சின்ன காப்பெண்டர்  மரவேலைத்தளம். பராமரிப்பின்றி இத்துப்போன  விவசாய உபகரணங்கள்    என்று ஒரு கிராமத்துப்   பண்ணையார் வீடுபோல இருந்தது.
.
அவ்வளவு
ஆத்மநெருக்கமான
மரணம் போன்ற அமைதி,

ஒரு வாகனம்
உறுமிக்கொண்டு போகும்
இரைச்சலான நேரநிறுத்தங்களில்
எத்தனிப்போடு மொத்தமாக
காற்றின் வேகத்தில்
ஒரு
கனதியான கதையைத்தான்
இரைமீட்டுக்கொண்டிருந்தேன்!

கை வீசிக்கொண்டு
மனிதர்களே இல்லாத இடத்தில்தான்
மனதோடு
உரத்துப் பேசமுடிகிறது !


முடிச்சவிழக்கூடிய
திருப்பங்களோடு
ஜவ்வாது பூசிய
பளிச்சென்ற சுகந்தங்களோடு
புல்வெளிகள் ,

நிசப்தத்தை
உத்தரவாதமாகக்
கதையாக்குவதென்ற
நிச்சயப்படுத்தலோடு
கதாசிரியனாகிக்கொண்டிருந்தேன் ,

இந்தத் தொலைதூரக்கிராமம்
என்னிடமிப்போது
வேறென்ன எதிர்ப்பார்க்கமுடியும் ?


ரெண்டு சோடி
இளமான்கள் பரந்தவெளியைப்
பதட்டத்தோடு பாய்ந்து கடந்தன !

அவளவுதான்,!!!!!!!!!!!
கதை அந்தக் கணம்
சொற்பவார்த்தைப் பொழிவுகளோடு
கவிதையாகிவிட்டது !

.

                                                                   என் வாழ்க்கையில் அந்த சில வாரங்களே ஒரு விவசாயிபோல வாழ்ந்தேன், நிறைய விசயங்கள் கற்றுக்கொண்டன். முக்கியமாக சின்ன வயசில் படித்த  ஒவ்வையார் பாடலில் வருமே " நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசியுமாம் " என்ற வரிகளில் உள்ள உண்மைத்தன்மையை நேரடியாகவே கண்டுகொண்டேன். 
..
முடிவில்
வெல்வது பற்றிய
விருபங்கலேயில்லாததாகி
மறுபடியும்
சுதந்திரமான அந்தக் காலத்துக்குள்
போகமுடியுமா ?

முகர்ந்து முத்தமிடுவது போல
வாசனை பார்க்கப்பட்ட
சீட்டுக்கட்டுகள்
கலைத்துப் பிரிக்கப்படுகின்றன,


தலையைக் கோதி
அடங்கமறுக்கும் சுருள்முடியை
பின்தள்ளி விழுத்துகிறாள்
என் முன்னாள் மனைவி !,

விசிறிபோல
பரப்பிக்கொண்டு
தலையைக்குனிந்துகொண்டு
விரல்களை நகர்த்துகிறேன் .

மைபூசிய மயில்விழிகளால்
சிரிக்கிறாள் .


வளவளப்பான சீட்டுகள்
கைமாறிமாறிக்கொண்டே
கருங்காலிக் கண்ணாடி மேசையில்
ஒன்றன்மேலொன்று
மல்யுத்தம் போடுகின்றன !

தோற்றுப்போனதுபோல
பின்வாங்கி
வாழ்க்கை போலத்தான்
கடதாசி விளையாட்டுமென்று
விளையாட்டாகச் சொல்கிறாள்,


என்
எண்ணங்களை துருப்புச்சீட்டாகித்
தூக்கிப்போடுகிறேன்,
சட்டென்று வாசித்து
சொண்டை நெளித்தாள்,

ரம்மியமான
பொழுதொன்றைச் சிதைக்கும்
இரகசியத்திட்டத்தை
ஒத்திகை பார்க்கும்
ஓரங்கநாடகம் போலிருந்தது
அதன்பின்னான மவுனம்,


கம்பீர ராஜா
காதல்ராணி உட்பட
எல்லாப் பெறுமதியான சீட்டுகளும்
அவளிடமேதான்
அடைக்கலமாகிக்கொண்டிருந்தன,


அட சொல்ல மறந்திட்டேனே
சூதாட்டத் தொடக்கத்தில்
எனக்கே எனக்காக வந்த சேர்ந்த
முதல்ச் சீட்டே ஜோக்கர்தான் !.

.
                                                         ஏனென்றால் ஸ்ட்ரோபெரிக்கு இறைத்த நீரில் அருகில் புல்லும், களைகளும் தான் ஸ்டோபெரியை விடவும் வேகமாக உயரமாக வளர்ந்தன, எவ்வளவு பெரிய நடைமுறை உண்மை பார்த்திங்களா பல்லில்லாத  ஒவ்வைப் பாட்டி எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னம்  சொன்னது.
.
நகரங்களை விட்டு 
ஓடிவந்து
தட்டான்பூச்சிகளோடு
தனியாக வாழ்ந்துகொண்டிருக்கும் 
கிராமங்களின்
அழகே நிறங்கள்தான் .

அதன் இன்னொரு நளினம்
புற்களின் நுனியைக்
கவிக்கொண்டிருக்கும் பனித்துளிகளின்
அதிகாலை வாசனை ,


அது
எல்லா அவநம்பிக்கைகளையும்
பிடித்து வெளியே தள்ளிவிட
அலாதியாகி
வசதி பார்த்து வாய்ப்புக்கள் தேடாமல்
நட்பாகிவிடும் நெகிழ்ச்சி!


பகலில்
ஒரே மாதிரியான
வெளிப்படையான ஓசைகள் !

இரவுகளில்
எப்போதும் மெல்லிய பதற்றம் !

சங்கிலியால் பினைக்கப்பட்ட
அடிமையின் அவலக் குரல் போல
ஏமாற்றத்தில் புலம்பியது போல
முடியாத வார்த்தைகளில் எழுதியது போல
நினைக்கக்கூடாத கற்பனைகள்
கடைசியில் நடந்தது போல
ஒரு
ஏக்கமாகவிருக்கலாம்!


அதுவும்கூட
உண்மையேதான் !
ஆனால்
நாட்குறிப்புப் போலவே
ஒவ்வொருநாளும் எழுதவைத்தது .

அதிலென்
அந்தரங்கமான ஆத்மா
நனைந்துகொண்டேயிருக்க
அட்டகாசமான சம்பவங்கலேயில்லாத
சூனியவெறுமையில்
அடங்கமறுக்கும்
உயிர்
மெல்லவே எழுந்து நடமாடியது. !

.
                                                                                            க்ரான்னேர்பேர்க், ச்ர்ன்ஹோவ்,  நிசப்தமான இடம் எழுதுவதுக்கு நிறையவே சரக்குத் தந்தது, அந்த இடமும் அலாதியான ஒரு இடம். போட்டோகிரபி முன்னம் விருப்பமான ஒன்று. இப்போது அலுத்துவிட்டது, ஆனாலும் சில படங்கள் என்னுடைய  சாம்சங் கலக்சி மொபைல் போன் கையடக்கியில்  எடுத்தேன், அவை பல கோணங்களில் புதிய திசைகளைத் தேர்ந்தெடுத்து எழுதவைத்தது.
.
குதிரைகள்
சடையைக்கிளப்பி
முந்தின பிறவியொன்றின்
எஞ்சிப்போன வேகங்களை
மெலிந்த மூட்டுக்கால்களில் 
மீட்டு எடுத்துக்கொண்டு பாய்கின்றன !

பந்தயம் கட்டியவர்களின்
பேரவையில்
பார்வைக்கு எட்டியவரையில்
வெற்றிமமதை ! .
சிலர்
கைகளைப் பினைகிறார்கள் !

கோரைப்புட்கள் போன்ற
பொன்னிற மேனி ரோமத்தில்
வியர்வை வீழ்ந்துகொண்டு பிரகாசிக்குது !


ஒரு
பார்வையாளனாக எனக்கு
மிரளாமல்
பின்னம் காலில் எம்பிக் குதித்த
குதிரைகள் ஓடிப்போன
தடத்தின் நீளத்தையும்
வளைவுகளையும் பார்க்கும்போது
மட்டமான
சூதுவிளையாட்டுப்போல
அனுமானிக்கமுடியவில்லை !

கெண்டைச் தசைகள்
களைத்துப்போன
குதிரைகளின் வாய்நுரையில்
இன்னும் கொஞ்சம் உயிர்மிச்சமிருக்கு !


மற்றப்படி
யார் எல்லாம் வென்றது
யாரெல்லாம் தோற்றது என்பதுபற்றி
பந்தயக்குதிரைகள்
அலட்டிக்கொள்வதில்லை !

.
                                                                     நான் வசிக்கும்  ஸ்டாக்ஹோலம்  நளினமான நவீன   பெருநகரத்தில் இருந்து , நாகரிகத்துக்கு வெகு தொலைவில் ஒரு   அத்துவானத்தில்  இருக்கும்      க்ரான்னேர்பேர்க், ச்ர்ன்ஹோவ்  கிராமத்துக்குப் போக ரெண்டு ரெயில் ஏறி இறங்கி மாறி  போய் இறங்கி சொர்மலாண்ட் உள்ளூர் பஸ் எடுக்க வேண்டும். நேரம் கெட்ட நேரம் போய் இறங்கினால் அந்த பஸ்சுக்கு மணித்தியாலக்கணக்கில் காத்திருக்க வேண்டும் . ஆனால் பிரயாணிகள் எப்போதும் சுவாரசியம்,,அதிலும் இளையவர்கள்,,அம்மாடி !                                                                       
.
காதலர்களின் 
தளிர்மேனிமினுக்கிகொண்டிருக்கும் 
முகப்பிரகாசங்களை
ஒரு 
பஸ்தரிப்பிலிருந்து 
விழுங்கிக்கொண்டிருக்கிறேன் !


சூனியக்காரியின்
அசிங்கமான சிரிப்புப்போல
தெருவிளக்குகள்
கசியவிடும் வெளிச்சம் !


சுயகட்டுப்பாடிளந்து
பின்புறத்தை உள்ளங்கையிளிறுக்கி
ரசனையோடு முத்தமிடுகிறவனோடு
துவண்டுவிடுகிறாள் 

அவள் !

இருட்டில்
முகத்தைத் தேய்த்துவிட்டு
சுளித்துக்கொண்டு
மேமாதக் காற்று !


நம்பிய காதல் வார்த்தைகள்
எல்லாமே பொய்யென்று
குற்றம் சாட்டும் அவளைத்
தூக்கியெறிந்து
கைகளை விசுக்கிச் சாடுகிறான்
அவன்!


குமுறல்களை
மரியாதையோடு கேட்டுக்கொண்டிருக்கும்
கருங்கல்லு வீதி
உச்சுக் கொட்டுகின்றது !


வெறி ஏறிய கூச்சலோடு
ரெண்டு பெண்கள்
இடுப்பை வளைத்துக் கழுத்தை
சங்கப்படுத்துகிறார்கள் !


வழிப்போக்கர் போலவே
நெருக்கி நடந்துகொண்டிருக்கும்
இராத்திரி மனிதர்களின்
யாத்திரை !


ஏமாற்றங்களை
அலட்சியம் செய்துகொண்டிருக்கும்
இன்றைய இரவின்
காம இணைப்புகளை
அடுத்தக்கடத்துக்குக்
காலம் கொண்டுபோகுமா ?

ஜோசித்து முடிப்பதுக்குள்
இரவுபஸ் தரிப்பிடத்துக்கு வந்துவிட்டது !


                                                                                      க்ரான்னேர்பேர்க், ச்ர்ன்ஹோவ்  கிராமத்தில்  மழை எப்போதும் அழகாக இருக்கும். அதன் சத்தம் தெளிவாக இருக்கும். மண்ணில் விழுந்து உள்நுழையும் வாசனைகள் மூக்கை நிறைக்கும், மழையும் ஒருதலைக் காதல் போலத்தான்  ஒதுங்கியிருந்தால் நனையாமல் ரசிக்கலாம் போலிருந்தது ,அதையே காமமாக நினைத்தால்  நனைத்தால் முழுதாக நனைய வேண்டும் போலிருக்கும்...                                                           
.

பெரிய கண்ணாடி ஜன்னலின்
இந்தப்பக்கம்
காலப்பிசகுகளின் இடைவெளியில்
கூரான ஆணிகள்
மன்டைக்குள் இறுங்குவது போல 
நான் !

எதையெல்லாமோ
நிரூபித்துவிடுவதுபோலவே
துறுதுறுவென்று துருவிக்கொண்டு
அந்தப்பக்கம்
மழை !


வெண்மஞ்சளாகப்
புளியமிலை அவிச்சநிறத்தில்
துளிகளை நெருக்கிக்கொண்டு
கோடைப்புழுதியில் உள்ளிறங்க
மாதவிலக்கு
வாசனை வேற,!


இது
எத்தனையாவது மழையென்று
நினைவெடுத்துச் சொல்ல முடியவில்லை,
மலைப்பாம்புபோல
சாலை மருகிரண்டிலும்
வெள்ளம் நெளியுது !


என்
களங்கப்படுத்தப்பட்ட நிலைமைக்கு
நானே
ஏகோபித்த
காரணமாயிருப்பது
எரிச்சலூட்டிக்கொண்டிருந்தாலும்
மழையை
வெறுக்கும் முடிவை
நினைக்க முடியவில்லை !

.
                                        .பல குளறுபடிகளில்  நாங்கள் சரியான புரிந்துணர்வு இல்லாமல் சட்ட்டப்படி பிரிந்து போனாலும், கடமைகள், கட்டுப்பாடுகள், பொறுப்புகள் மனிதர்களின் நெருக்கத்தை விலைபேசாதவரையில்  வாழ்க்கை இனிமையானது  என்ற முன்னெடுப்பில்   மார்கிட்டும் நானும் நண்பர்கள் போலவே இன்னொரு அவதாரத்தில் வாழ்ந்தோம்
.
நேர்த்தியாக
வரிசைக்கிரமம் தவராத
புத்தக அலுமாரி ,
வெளிக்கதவு முகப்பில்
புஷ்டியான 
மஜந்தாநிற கிரிசாந்திமப் பூக்கள்,

விசாரணையோடு
புறங்கையை நக்கும்
நாய்க்குட்டிகள் ,
ஜன்னல்த் திரைசசீலைகளில்
மூச்சுமுட்டும்
தீராத லாவண்டர் வாசனை,

ஒரு
திறக்கப்படாத வைன்போத்தல்
ரெண்டு
இடுப்பை நெளிக்கும்
சம்பெயின் கிண்ணங்கள்,

சுவரெல்லாம்
விடுமுறையில் எடுக்கப்பட்ட
உலாப்போகும் நிழல்ப்படங்கள்.
வரவேற்பு அறையை நிரப்ப
பெருமூச்சுடன்
ஞாபகங்களை எரிக்கும்
கைவிடப்பட்ட காலம் ,

வெளியே
போண்லேதர் மர இலைகளைக்
கிச்சுகிச்சுமுட்டி
அசைத்துவிடும் கிராமத்துக்காற்று,

வருடங்களாகி
விட்டுவிலகிக்கொடுத்து
சிக்கல்கள் இல்லாமல்
பாதைகள் தேர்வுசெய்த
இருமனங்களின் திருமணமுறிவு ,

விதி
அழுத்தி எழுதிய
நேற்றைய நாளொன்றில்
மிக மிக இயல்பாக
ஐந்தடி தள்ளிவைத்த இடைவெளியில்......


பழகிய உரையாடலில்.....
பழக்கமான பார்வைகளில்.....
பழைய நானும்
பழையபடி அவளும் !

.
                                                                               கரைகள் ஓய்வை விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை..இலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை போலவே காலமென்பது நமது கண்ணுக்குமுன்னாலேயே தண்ணிகாட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பது. மாறிக்கொண்டேயிருக்கும் அதன் அபரிமிதமான அபத்தக் குழப்பங்களில் இருந்து பின்னோக்கிய ஒரு இறந்தகாலத்திட்க்குள் நுழைந்து பழைய நினைவுகளை அப்பப்பப்ப விடுவித்துகொள்வது அவ்வளவு இலகுவான சமாளிப்பு அல்ல.
.
எப்போதுமென் 
நம்பிக்கைக்குரிய பிசாசு 
தன் 
திருமணமுறிவு பற்றி 
ஒருநாள் என்னிடம் புலம்பியது!

ஒரு
ரத்தக்காட்டேரி திருவிழாவில்
தன்
காதலி பசாசைச் சந்திச்சுதாம்!
ஒரு
பரிபூரண அமாவாசை இரவு
சவுக்கம்தோப்பு மயானத்தில் வைச்சுக்
காதலை சொல்லிச்சாம் !

பிறகு
சாத்தான்கள் வேதமோத
இரத்தத்திலகமிட்டு
தேடாவளயத்தில் மூன்று முடிச்சுப்போட்டு
ஒரேயொருவருடம்
புளியமரமொன்றில் தனிகுடித்தனமாம் !

பிறகு வந்ததுதான்
செய்வினை சூனியமாம் !

பக்கத்து முருங்கை மரத்தில்
தனியாகத்தொங்கிகொண்டிருந்த
வேதாளன் என்ற கட்டழகனுடன்
கள்ளத்தொடர்பாம் !

அகோரப்பற்களை
நறநறநறநறநற வென்று நெரிச்சு
குரல்வளையை அறுத்துப்
பழிவேண்டப்போவதாக சபதம்செய்தது !

பிசாசின்
ஸ்டேட்மென்டில் 

எனக்கு நம்பிக்கை வரவில்லை !
உன்
காதலுக்கும் கலியாணத்துக்கும்
இறுக்கமான ஆதாரம் என்னவிருக்கென்று 

கேட்டேன் !
பிசாசு
சடாரென்று உருவி எடுத்துக் காட்டிய
செல்பி படத்தில
ஒரு
சவக்குழிக்குக்கு மேலே
இதழ்களை ஒட்டிவைச்சு முத்தமிட்டபடி
பிசாசும் பசாசும் நெருக்கமாக
மன்மதனும் ரதியும் போலிருந்தார்கள் !