Saturday 27 August 2016

அன்னமிக்கா ,பதின்நாலு கவிதைகள் .


......................................................................047
எது கவிதை
என்ற குழப்பத்தோடுதான்
இதயம் தாண்டி வந்து
இதையும்
எழுதிக்கொண்டிருக்க
முழங்கையில்
வியர்த்து வடிந்த முகத்தை
புறங்கையால்
தேய்த்தெடுத்தாள் அனாமிக்கா
ஏரிக்கரையில்
நீலத் தண்ணி
ஒப்பீடுகள் எல்லாம் சேர்த்து
மேகத்தைப் பிரதியெடுத்து முடிய
அதில் நான் எறிந்த கல்
அலைகளை
ஆவேசமாக்கிவிட்ட நேரம்
வானம் துண்டுதுண்டாக உடைந்தது
இலை நுனியை விட்டு
நழுவிவிடும் பனித்துளி போல
அளவீடுகளில்
புதிதாக எதையும் சேர்க்காத
வரன்முறைகளுக்கு உட்பட்ட
வாழ்க்கை
அதன் எல்லைக்கோடாக
உணர்ச்சியையே வைத்திருக்கென்றாள்
அனாமிக்கா
நான்
குறிபார்த்து எறிவதுக்கு
இரண்டாவது குறுணிக்கல்
தேடினேன்
தனிமையையாவது
அமைதியாக இருக்கவிடடாவென்று
சிரித்துக்கொண்டே
மூக்கில் சினந்துகொண்டாள்
இப்படியான
தருணங்களில் தான்
வார்த்தைகள்
மதன சுரங்களின்
நிறங்களில் மயங்கிவிட
என்னையே எனக்குப் பிடிப்பதில்லை
.

..............................................................048


நிர்பந்தங்களிலிருந்து
ஆகாயம் போன்ற நிம்மதி
ஒரு கணம்
செய்துகொண்ட ஒப்பதத்தை மறந்து
இன்னொருமுறை 
அனாமிக்காவின்
சுவடுகளைச் சேகரிக்க
ஆரம்பித்துக்கொண்டிருந்தது

தேவைக்கேற்றபடி
சட்டென்று முடிவு எடுக்க முடியாத
சலிப்புக்கள்
எரிச்சலாகித் தலைகோதும்
உலக வாழ்வியல்அவஸ்தையாக
உறைபனியில்
அவள் நடந்த பாதையில்
முன்கோடையின்புழுதி
வசவு போலவே அப்பியிருந்தது.
குறித்த சில நாட்களில்
ஏற்பட்ட பரீட்சயம்
ஒப்பீட்டளவில் ஆவியாகி
மிகக்குறைந்த நேரத்தில்
கிடைத்தற்கரிய
அனுபவம் எல்லாமே
படபடப்புகளாகிக் கொண்டிருந்தன.
காத்திருப்பில்
வண்ணத்துப்பூச்சிகள்
வானவில்லுகுப் போட்டியாக
நிறங்களைப் பூசிக்கொண்டபோதும்
நுழைய இடமில்லாத
இடப்பற்றாக்குறையை
ஏற்படுத்திய காற்று
அங்கலாய்ப்பாகவிருந்தது
பொறுமையோடு
இருத்தலென்பது
என் சக்குப்பிடித்த மூளையின்
நப்பாசை.
அசல்பிரதிகளை விட்டுவிட்டு
நகல்களில் நளினம் தேட
நகரவேமாட்டேன் என்ற
நினைவுகளின் ஞாபகமூட்டலில்.
அனாமிக்கா
அழுந்தப் பிடித்துக்கொண்டு
அதே புன்னைகையில்

..............................................................049

அந்தக்கதை
அதிகம் அறியப்படாத
இயல்பு நிலைகளில்
சிதைக்கப்பட்டிருந்த
முகவரிகளில் ஒதுக்குப்புறமானவொரு
இடைப்பட்ட நகரத்தில்
இந்தா அந்தாவென்று
அறுபடக்காத்திருந்தது
நான்
அதன் முதல் பகுதியை
ஒரு அனிச்சை விதமான
தயக்கத்துடன்
ஈனமனதின் ஈரக்குரலாகத்
ஒற்றி எடுத்து எழுதியதென்பது
அனாமிக்காவுக்காக மட்டுமே
யாரோ ஒருவருக்காகவென்று
வாசிக்க விட்டுச் செல்லப்பட்ட
அந்தக் கதையில்
விடுகதைகளோ
அதீதமான புனைவுகளோ
ஜோசிக்கவைக்க
இடைவெளிகள் கொடுக்கும்
முஸ்திப்புக்களோ இல்லையென்று
அனாமிக்காவே முன்வந்து
ஒத்துக்கொண்டாள்
தொடங்கியபோது
ரெண்டாவது பந்தியில்
எல்லாக் கதாபாத்திரங்களுமே
திசையறியாமல்
திணறிவிட்டன என்றவள்
பலவீனங்களைச் சொன்னதும்
உண்மைதான்
" எரிந்துகொண்டிருக்கும்
அந்தக் கதையின்
செந்நிற ஒளிச் சிதறல்களை
இரவெல்லாம்
நசிந்துபோன ரகசியத் தொனியில்
தத்தளிப்புகளாக்கி
விவரித்துவிடு " என்றாள் அனாமிக்கா
அசட்டையாகவே இருந்தேன்
விடிந்து பார்க்கக்
கதை எரிந்து சம்பலாகியிருந்தது.

..................................................................050

எல்லாவிதமாயும்
காய்ந்துபோன சருகுகளை
வாரியணைத்துக்கொண்டு
தூர வீசியடித்த
குறுணி மணல்களையும்
கூ ட்டிக்கொண்டு
மழையின் வடிசல் தண்ணி
தெருவெங்கும் அதன்
வந்து போன அடையாளத்தைப்
பதிவுசெய்திருந்தது
முதல் திருப்பத்தில்
அன்னாமிக்கா
எதிரும் புதிருமாக
நனைந்து போன
சுருள்முடியை ஒருக்களித்து
பின்னுக்கு விழுத்திய போது
மூச்சு முட்ட மூன்றுமுறை
தும்மினாள்
பிரியத்துடன் அலைந்து
எப்போதும் போல
அளவில்லா ஆனந்தத்தையும்
அடர்த்தியான அமைதியையும்
மேகத்திலிருந்து
இறக்கிக் காட்டிவிட்டு
எடுத்துக்கொண்டுபோனது போலவே
குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது
வக்கிர குரூரங்களும் ,
அதீத சுயநலன்ங்களும்,
ஆழ்மன வக்கிரங்க்களும்,
பலவீனங்களும் தின்ற
மீளமுடியா துயரமாக
எனக்கு ஒரு மழைநாளின்
முன்னிருட்டு
அவலமாக இருக்கிறது
எனக்கும்
அனாமிக்கா போலவே
பொதுவாகப் பெய்யும்
மழையில் நனைய பிடிக்கும்.
தனிப்பட
மனப்பிறழ்வில்
இருக்கும் பொழுது
எப்படி எல்லோருக்குமான மழையில்
ரசித்து நனையமுடியும்?

............................................................051

பழையவீடு
ஒரு மூலையில் கிடந்த
கத்தரிப்பூ விழிகளில்
அனாமிக்கா
மிகப்பழைய அல்பமொன்றை
ஊதித்தள்ளி தூசுதட்டி
சுட்டு விரலை நிமிண்டித்
தடவிக்கொண்டே
அற்புதங்களாய் விரிந்துகொண்டிருந்தாள்
அதிலிருந்த
எல்லாப் படங்களிலும்
காலத்தின் மழுங்கடிப்புகள்
மங்கியே போய்க்கொண்டிருக்க
அன்னாமிக்கா
பருத்திப்பாவாடை சட்டையில்
தாவணிப்பருவத்தின்
விளிம்பில் நின்றுகொண்டிருந்தாள்
ஒரு பொழுது
அம்மாவின் மடியில்
இன்னொருபொழுது
அப்பாவின் தோள்களில்
ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில்
தாத்தா பாட்டியின்
புறங்கையை இறுக்கிப்பிடித்து
ஒரு கறுத்தப் பூனையின்
கழுதை வளைத்துக்
கன்னத்தைத் தேய்த்துக்கொண்டு
வயது வந்துகொண்டும்
போய்க்கொண்டுமிருக்கும்
இடைவெளிகளில்
வெற்று நினைவாக முடக்கப்பட்டால்
உனக்கே உனக்கானதென்று
நினைவூட்டுவது
எதெல்லாம் என்று கேட்டேன்
எல்லோரும்
ஏதோவொரு பிரிதலில்
புரியமுடியாத பதில்களைச்
சொல்லிவிடுவதுக்கு முன்னே
தொலைந்துவிட்டார்கள்
நேற்று வரையிலும்
அதுபாட்டில்கடந்த
அன்றாட நான் இன்று நானாக மாறிவிட்டேன்
என்றாள்
அதுக்குப்பிறகும்
அந்த அல்பத்தை வைத்தவளை
விசாரித்து
நோகடிக்கலாமாவென்று ஜோசிக்க
அனாமிக்கா
அதிலிருந்து ஒரேயொரு படத்தை
உருவியெடுத்து
நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

...................................................................052

காலடி ஓசைகளில்
சிரிப்பொலிச் சிதறலுடன்
மிதந்துக்கொண்டிருந்த
கடைசிநொடி
சட்டென்று அறுபட்டு
விழித்தெழுந்துகொள்ள
சலிப்பான
மரணவேதனையில்
ஒரு பகலின் நீட்சி தொடங்குகிறது
பேசிமுடியாத
மிச்ச வார்த்தைகள்
அயர்விலும் ஆற்றாமையிலும்
நெடுநேரம் காத்திருந்த
அந்தக் கனவை
மஞ்சள் வெளிச்சம்
வடிகட்டி எடுத்து
சொல்லாமலே வெளியேற்றியது
நிசப்த சஞ்சரிப்புக்கள்
சங்கடப்படுத்தும்
படுக்கையறையின்
ஒரு முக்கோண மூலையில்
இரவெல்லாம் வந்து உரிமையெடுத்து
சிதிலமாக்கிப்போனதுக்காக
கொஞ்சம்
இருட்டுப் பதுங்கிகொண்டிருந்தது
அவசரமாய் உதறிப்போன
அச்சமூட்டும்
நவரச வாசனைகளுடன்
கனவில் வந்தவள்
அனாமிக்காவாக என்று
அதிகாலை நினைவுகளைத்
தோண்டியெடுத்து
தீவிரமாய்விசாரித்தேன்
இப்பிடித்தான் பலமுறையும்
இமைச்சிறகுகள் செரிகிக்கொண்ட
கணநேரங்களில் தான்
அனாமிக்கா
நடந்து கொண்டு வருவாள்
எதற்காக வருகிறாள்
என்பதைக் கனவுகள் சொன்னதில்லை
போனாப்போகுதெண்டு
காலடி ஓசைகளையாவது
சேர்த்து வைக்கு முன்னேயே
அரக்கப்பரக்க
விடிந்துவிடுகிறதே.

...................................................................053

வைகறையில்
விழித்துக்கொண்ட அனாமிக்கா
தலைக்கு முழுகி
திருவிளக்குப் பற்றவைத்து
கூந்தல் துவட்டிய துவாயால்
என்முகத்தை ஒற்றி எடுத்து
இன்றைக்கு
வரலக்ஸ்மி விரதம்
தொடங்குதென்றாள்
நானோ
படுவிரிப்புகளைச்
முறுக்கி உருடுடிச் சுருட்டி
சொகுசுகள் நடுவில்
உரிமைஎடுத்து
அலாதியான உலகம்
என்ன மண்ணாங்கட்டிக்கு
அவசரப்பட்டு விடியுதென்று திட்டி
அயர்த்துகொண்டிருந்தேன்
அனாமிக்கா
இன்னும் அலங்கரித்தாள்
கழுத்தோடு ரெண்டு பக்கம்
குஞ்சர மல்லிகை
நெற்றியில் கோபுரசந்தனம்
பிறைபோல அம்மன் குங்குமம்
நடு வகிட்டில்
அய்யாங்கார் பொட்டு
அப்புறம்தான்
நானே கண்ணைக் கசக்கி
முழிச்சுப் பார்த்த நேரம்
நாவல் நிறத்தை மினுக்கிய
செம்பகப்பூ
கண்டாங்கி சேலை
புள்ளிக் கோல
மஜெந்தாநிற ரவிக்கை
இன்றைய
திருப்பள்ளி எழுச்சி
ஆனந்த விவரணமாகியதை
விவரித்துக்கொண்டிருக்க
ஆச்சரியங்களுக்கு
அவசியமில்லை என்பதால்
ஒரேவரியில் சொல்லுறேன்
அனாமிக்கா
என்
அம்மாபோலவேயிருந்தாள்.

..........................................................054

ஜன்னலில்
தட்டி எழுப்பும் துளிகள்
அதன் தாலாட்டில்
மீண்டுமொரு முறை
எந்தப் பொறுப்புகளும் முளைவிடாத 
இளமை வளரும் வயதில்
ஒரு மழை நாள்
ஆனால்
இப்போதெல்லாம்
அதே நெகிழ்ச்சியுடன் ரசிக்கமுடியவில்லை
எத்தனை துன்பம்
எத்தனை அவமதிப்பு
மனதுக்க்குள் இரகசியமாக
நுழைய முயன்று தோற்றது
பின் ஜெயித்தது
ஒருபோதுமில்லா நடுக்கத்துடன்
அனாமிக்கா
பிரிவின் வரி சொன்ன இரவு
அன்றும் இப்பிடித்தான்
மழையும் சேர்ந்தே அழுதது
நுட்பமான
குளிர்ச்சி உணர்ச்சியின்
அலைக்கழிப்புகளுக்குள்
நம்மையறியாமல்
ஆட்படுத்தக் கூடிய
மழை பெய்யும்வரை
நேசங்களை மறப்பதற்கில்லையென்று
ஆத்மாவை சமாதானமாக்கிவிட்டாள்
அனாமிக்கா
அதுவும் இயல்பான
போலிருந்தாலும்
வாழ்தலின் சந்தோஷங்கள் மீதான
எல்லா நம்பிக்கையும்
ஒளித்து வைத்துக்கொள்ளும்
வரைவுகள்
விதிமுறை மீறிவிட்டதே என்றேன்
இதுதான் விதி என்றாள்
அனாமிக்கா.

...............................................................055

அனாமிக்கவுக்கும்
இது வலி
காதலர்கள் போலவே
விழாக்காலமென்று நினைத்த
விரல் பிடிப்புகளுடன்
வீதி உலாப்போன
மிகப்பெறுமதியான
எதிர் காலமே
நிரவமுடியாத ஒரு சந்தேகத்தில்
தவறவிடப்பட்டிருக்கலாம்
இன்னொருமுறை
நமக்கென அமைத்த சவுகரியமான
தட்டிக்கழிப்பில்
சொல்ல முடியாத
அழுகை விக்கி விக்கி வரும்
அதை ஜதார்த்தம் எண்டு
சமாளிப்பேன்
அனாமிக்கா அவள்வேலைக்காக
ஓடிக்கொண்டிருப்பாள்
பயந்துபோய்
முடிவெடுத்து முன்னிறுத்தி
சந்தோஷவானில்
இறக்கை விரித்துப்
பறக்கும்சந்தர்ப்பங்கள்
சாரைப்ப்பாம்புகள் சருகுவது
போலவே இருந்தது
இன்னொரு யுத்த முனை என்று
நினைத்தால்இன்றும்
நண்பர்கள் ஆகவே முடியாதென்றபோது
அனாமிக்கா
கன்னத்தைத் தந்தாள்
பிறகு
நெஞ்சின் மேல் விளிம்பைத்
தந்துவிடுவேன் என்று தந்தாள்
நான்
என்னக்கு எப்பவுமே பிடித்த
அவள் உள்ளங்கையை இறுக்கிப்பிடித்தேன்

...................................................056

கிலேசங்களில்
எதுவுமேயில்லை
உடன்பிறப்புக்கள்
பரந்து இருக்கிறார்கள்
தேசங்களின் பூகோள எல்லைகள்
தந்திரமா விரிந்தது
அனாமிக்கா
ஒருத்திதான் என்னருகில் இருக்கிறாள்
ஒரு நேரம் சாப்பிட்டு
முழுநேரம் பசியிருந்து
இளமையின் எல்லாவிதமான
பூரிப்புகளையும்
உருவி எடுத்து
எழுதி முடித்துக் களைத்துப்போய்
போயே போய்விட்டது
நேற்றுவரையான ஆசுவாசங்கள்
இரவிரவாக
இருட்டைக் களவாடியவர்கள்
வெளிச்சத்தில்
விலாவரியாக உலாவிக்கொண்டிருக்க
உறவுப்பாசம்
கறல் பிடித்து திறக்க முடியாத
பூட்டுக்குப்
போட்டு நெம்பி எடுக்கும்
பொருந்தாத சாவி என்றாள்
அனாமிக்கா
நல்லாகவே கவனித்தேன்
அனாமிக்கா
அமைதியாக இருந்தாள்
இருத்தலை இலகுவாக்கிய
அவள் மட்டும் இல்லையென்றால்
இந்தக் கவிதையின்
கடைசி வரிளோடு
நானே தற்கொலை செய்திருப்பேன்
அதைச் செய்யவில்லை
அதனால்த் தான்
முழங்காலிட்டு அவளை விட
இன்னுமின்னும்
அமைதியாக இருக்கிறேன்
இப்போதைக்கு
நான்செய்ய முடிந்தது எல்லாமே
அதுதான்.

.....................................................057

காட்டுப்பாதை
முக்கோண வடிவில்
ரெண்டாகப் பிளந்த
தொடக்கத்தில்
அடர்த்தியாக வளர்ந்திருந்த
மரங்களோடு
நல்ல சிநேகமிருந்தது
ரெண்டுவழியும்
புதர்கள் மண்டிக்கிடந்த
பூக்களின்பெயர்களையும்
அனாமிக்கா
ஒவ்வொன்றாய் பிரியமெடுத்து
சொல்லி இருக்கிறாள்
தொடக்க வாசல் படிகளில்
வாசம்போலவே
விட்டகுறை தொட்டகுறையாக
நடந்து நடந்து கடக்கவே
அடியெடுத்துக் கொடுக்கும்
கழிவிரக்க நினைவுகளுக்கும்
பஞ்சமில்லை
ஒற்றையடிகள்
சேருமிடம் நிர்ணயித்துப்
பலமான தீர்மானங்களோடு
அனாமிக்கா
திர்கதரிசியாகி வென்றுவிடுவாள்
பலவீனமான எனக்கு
இப்போதுள்ள பிரச்சினை
எந்த வழித்தடத்தில்
வாஞ்சையோடு இறங்குவதென்பது
நீளமான விசும்பு
புல்நுனிகளில் உலகத்தையே
புள்ளிகளாக
ஆட்டி வைத்தாலும்
முடிவு எங்கு போகுமென்று
அனாமிக்கா வந்து சொல்லாதவரை
என் விடிவுகளில்
வெள்ளிகள் தெரிய வாய்ப்பேயில்லை.

அனாமிக்காவுக்கு
விருப்போடு வேண்டிக்கொடுத்த
ராகமாலிகா சேலையை
அவள்
ஒருநாளும் கட்டியதில்லை
அதன் சருகு மடிப்புக்கள்
கலையாமல்
முகர்ந்து பார்த்து
அப்பிடியே வைத்துவிடுவாள்


...............................................058

அந்த சேலைக்கு
அளவெடுத்து பிளவுஸ் வேற
தைத்துக்கொடுத்தேன்
அவளோ
அதையும் சேலையின்
நடுவில் பிடிவாதமாக செருகி
வெள்ளிக்கிழமைகளில்
மட்டுமே அதை
பூ வாசம் போல எடுத்தணைப்பாள்

அதயவள்
கட்டுவதுக்கான சாத்தியங்கள்
ஊர் கோலம் போகும்
மோகன ராக மேகங்கள்
புதுமஞ்சள் பூசி
கல்யாணம் பேசி
தலைவாழை இலை போடும்
ஒரேயொருநாள்
அதிசயமாக நடக்கலாம்

இல்லை என்றால்
என் வாழ்வோடு பேசி
வலிகளை இன்னுமின்னும்
அதிகரித்து
கட்டாமலே போகலாம்
அதன் விகசிப்புக்கள்
எனக்குப்பிடித்த எல்லாமே
நிறைவேறாமல் போகும்போதுதான்
நானும்
உயிரோடிருப்பதுபோலவே உணரவைக்குது


.............................................................................059

வெளிச்சம்தான்
வெள்ளாந்தியாக இருக்குமென்று
நினைக்க
இருட்டும் கூட
இரைச்சலான இசையோடு
வெளிவந்துகொண்டிருந்தது
கைகளைத்
தட்டிகேளிக்கையில் ஆரவாரிக்கும்
கூட்டதிலிருந்து
வெகுதுாரத்தைத் தேர்ந்தெடுத்து
விலத்தி வைத்தது போல
அனாமிக்கா
தனிமையோடு பேசிக்கொண்டிருந்தாள்
" உனது அலட்சியங்கள்
ஏதேனும்
ஒரேயொருநாள்
வலிந்து வந்து
இதயத்தை திறக்கிற நொடியில்
காதல்
எதுவென நீ நினைக்கிறியோ
அதுவே நான் " என்று
உருகிக்கரைந்துகொண்டிருந்தான்
மேடைப் பாடகன்
எதைப்பற்றியும்
பிரகரணப்படுத்த முயற்சிக்காமல்
காற்றில்
நுழைந்து வெளியேறும்
சொற்களோடு
தோழமையான சுரங்கள்
ஆத்ம பரிசோதனை செய்வதை
நானும் ரசித்துகொண்டிருந்தேன்
அலங்கோலமாய் இருக்கிறது
தனிமையைப் பற்றி
காதுகிழியப் பாடுவது
என்று அனாமிக்கா
சொன்னபோது
அதுவரையில்
அமைதியை அநாவசியமாய்
புரட்டி போட்டுக்கொண்டிருந்த
அந்த நிகழ்ச்சி
முடிந்தே போனது

.........................................................................060

நடுவகிடு எடுத்து வெய்யில் 
உச்சியில் பிளக்க 
என்னோடுதான் 
நுரை தள்ளும் கடற்கரையில் 
நடந்துகொண்டிருந்தாள் அனாமிக்கா 
அவள் நிழல்
என் நிழலோடு
வாரிச் சுருட்டி
கிளிஞ்சல்கள் எல்லாத்தையும்
கூட்டிக்கொண்டு வந்தது

ஒரேயொரு
வழி தவறி வந்த அலை
சிலிர்த்துக்கொண்டு
அவளின்
பிரத்தியேக வியர்வை
வாசங்களைக் கெஞ்சிக் கேட்டது

நேசமான சில அலைகள்
தலையைக் கரையில்
முட்டி முட்டி மோத
கடல்ப்புறாக்கள்
இரைச்சலாகச் சத்தமிடத்தையாவது
நானவள் நின்று ரசிப்பாளென
நினைக்க
கண்டும் காணாதது போலவே
அதையும் கடந்தாள்

அதிராத குதிக்கால்
வெண்மணி மணலில்
வேகம் குறையாமல்
தாளம் போட
அவளின் நீண்ட நிழல்
என் மீது பக்கவாட்டில் சேர்ந்த நேரம்
அனாமிக்கா திரும்பினாள்

இப்பிடித்தான் எப்பவும்
அவள் எறியும்
நிழல்களை மட்டுமே
சேகரித்து வைப்பதே
எனக்கும் வெய்யிலுக்கும்
வேலையாகவே போய்விட
சேரவே முடியாதவர்களைச்
சந்திக்கவே விரும்பாத அலைகள்
பின்வாங்கிவிட்டது .

.