Sunday 10 January 2016

மங்கல்ஸ் ,,முடிவான கதை

இங்கிலிங் மர மேசையில் எனக்கு முன்னால் நேர் எதிரே இருந்தாள். மங்கல்ஸ் அந்த மர மேசையின் ஒரு பக்கத் தொங்கலில் இங்கிலிங் இக்கு ஹாய் சொல்லிப்போட்டு விழுகிற மாதிரி  தொங்கிக்கொண்டு விருப்பமே இல்லாத  மாதிரி இருந்தா.  கையில வைச்சு இருந்த ஆப்டன் போஸ்டன் பத்திரிகையால் முகத்தை மறைத்துக்கொண்டு அதைத் தீவிரமா  வாசிக்கிற மாதிரி பாவனையில் செய்துகொண்டு இருந்தா .இங்கிலிங் என்னோட கதைத்தாள்

                            "  எப்படி இருகிறாய் ,  என்னது இங்கே இன்ஸ்பெக்சனுக்கு வெள்ளிகிழமை ரெண்டுபேர் வாறது என்று கேள்விப்பட்டேன் ,என்ன நடக்குது இங்கே "

                           "  நடக்க வேண்டியதுதான் நடக்குது இங்கிலிங் ,என்னக்கு ஆப்பு வைக்கத்தான் அவங்கள் வாறாங்கள் "

                              " ஒ அப்படியே,,அப்பிடி என்ன குழப்பம் இங்கே,,நீ தான் நல்ல ஒழுங்கா வேலை செய்யுறியே ,நல்லா சமைக்கிறியே "

                              "   நீ தான் இங்கே சாப்பிடுவதில்லையே,பிறகு எப்படி சொல்லுறாய் இங்கிலிங் "

                              " நான்   இங்கே சாப்பிடுவதில்லை.அது உண்மை நான் வெளியே எங்கேயும் சாப்பிடுவதில்லை, ஆனால் இங்கே சாப்பிடும் பலர் நீ ஒரு நல்ல சமயல்க்காரன் என்றுதான் சொல்லுரார்கள்,விதம் விதமா வித்தியாசமாக  மெனு போடக்கூடியவன் என்று சொல்லுறார்கள்."
                             
                                " அது உனக்குத் தெரியுது ,,உலகத்துக்கும் தெரியுது,,சிலருக்கு மட்டும் அது குத்திக் குடையுது "

                                  "  உனக்கும் உன் வேலைக்கும்  ஒன்றும் நடக்காது ,நான் ப்ரே பண்ணுறேன் உனக்காக, கர்த்தர் எப்பவுமே என்னோட பிராதனையைக் கேட்பார் , அது ஒருநாளும் வீண்போகாது "

                               "   உண்மையாவா சொல்லுறாய் இங்கிலிங்,,ப்ரே பண்ணினால் நாங்கள்  வேண்டுவது நடக்குமா "

                                 " நிட்ச்சயமா நடக்கும்,பைபிளில் அப்படிதான் சொல்லி இருக்கு ,ஜெகோவா தேவனோட வாக்குத்தத்தம் ஒருநாளும் வீண்போனதில்லை "

                              " அப்பிடியே என்னோட எதிரிகளுக்கும் ப்ரே பண்ணு, இங்கிலிங் ,அவங்களும் பாவம் தானே,,பிழைச்சுப் போகட்டும் "

                          " ஹ்ம்ம்.. ஜெகோவா தேவனின் இராச்சியத்தில் புலி புல்லுத் தின்னும்,,மானும்  சிங்கமும் ஓடி விளையாடும்,,இரவே இல்லாத பகல் ,,மனமெல்லாம் அமைதி  இருக்கும்,, கட்டாயம் நான் உனக்காகப் ப்ரே பண்ணுவேன் "

                                   என்றாள் .மங்கல்ஸ் நியூஸ் பேப்பரை மேசையில் அடிச்சு வைச்சுப்போட்டு. என்னை " குசினிக்குள்ள  வா, உனக்கு இண்டைக்கு இருக்கு  மவனே ," என்பது போலப் பார்த்தா. பார்த்திட்டு எழும்பிப் போட்டா . நான் கொஞ்ச நேரம் இங்கிலிங் உடன் கதைச்சுக்கொண்டு இருந்திட்டு குசினிக்குள்ள வந்தேன் .மங்கல்ஸ் முகத்தில கடுகு வெடிச்சு தாளிக்கக் தொடங்கினா,

                                      " அவள் ஒரு விசரிபோலக்  கதைக்கிறாள் ,நீ அதை ஒரு விசரன் போலக் கேட்குறாய்,,ப்ரே பண்ணினால் என்ன நடக்கும் சொல்லு பார்ப்பம்,,ஒண்டும் நடக்காது,,யாருக்குக் காது குத்துறாள் அவள்  "

                            " அப்படி இல்லை மங்கல்ஸ்,,நம்பிக்கை தான் பிராத்தனை "

                                " அப்படியோ,, எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கு,யாழ்பாணத்தில் எங்கட வீட்டு வளவுக்கையே ஒரு சின்ன வைரவர் கோவில் கட்டி  வைச்சுக் கும்பிட்ட ஆட்கள் நாங்கள் ,,நீ எனக்கு சாமிப்  படம் போட்டுக் காட்டாதை   "

                            " ப்ரே பண்ணினால் அது பலிக்கும் என்று இப்ப இந்தக் குசினிக்க வைச்சே நிரூபிக்கவா மங்கல்ஸ் "

                        " ஒ சவால் விடுறியா,,எங்க நிரூபித்துக்காட்ட்டிப் போடு பார்ப்பம். நான் யுனிவேர்சிட்டியில் படிச்சவள்,,நீ பத்தாம் வகுப்பே படிச்சியோ தெரியாது,,திருவிளையாடல் படத்தில நாகேஷ்  நடிக்கும் தருமி போல எனக்கு சவால் விடுறாய்  "

                          "  மங்கல்ஸ் ஒரு சின்னச் சட்டியில் எண்ணை கொஞ்சம் எண்டுங்க,,அதை இந்த மைக்கிரோ அவனுக்க வைச்சு அவனை ஹை டேம்பிரேச்சர் லெவலில் ஒன் பண்ணுங்க,,அதைச் சூ டாக விடாமல் ,நான் ப்ரே பண்ணுறேன் ,,என்ன நடக்குது என்று  பாருங்க "

                             உடனயே மங்கல்ஸ் மரக்கறி எண்ணையை எடுத்து ஒரு சின்ன சட்டியில் ஊற்றி மைக்கிரோ அவனில வைச்சு ஹை ஹீட் இல செட்பண்ணி வைச்சா. நான் ப்ரே  பண்ணுவது போல மவுனமாக நிண்டுகொண்டு இரவுக்கு எந்தப் பப்புக்கு தண்ணி அடிக்க யாரோடு போகலாம் என்று ஜோசித்துகொன்டிருன்தேன் . மங்கல்ஸ் பத்து நிமிடம் கழிச்சு எண்ணையை ஒரு சூடு தாங்கும் கிளவுஸ் கைக்குப் போட்டு வெளிய எடுத்தா. எண்ணை உள்ளுக்கு வைச்ச மாதிரி இருந்தது , எந்த மாற்றமும் இல்லை .

                             "   ஹ்ம்ம்,,,என்ன நடந்தது ,, எண்ணை அப்படியே இருக்கே, இந்த மைக்குறோ அவன் வேலை செய்யுது இல்லை போல "

                             " இல்லையே நீங்க இதுக்கு முதல் என்னவோ வைச்சு சூடாக்கினின்களே , "

                            " பொறு இன்னொருக்க வைச்சுப் பார்கிறேன், நீ என்னவும் மயிக் காட்டி இருகிறாய்,,உன்னோட  பிரேயர் எண்டது பொய்,,இதுக்குள்ள என்னவோ ட்ரிக்ஸ் இருக்கு "

                                 " சரி இன்னொருமுறை நல்ல வடிவா வைச்சு,,பக்கத்தில் நின்றே செக் செய்து பாருங்க."

                          மங்கல்ஸ் மறுபடியும் எண்ணையை உள்ளே வைச்சுப் போட்டு பத்து நிமிடம் கழிச்சு எண்ணையை ஒரு சூடு தாங்கும் கிளவுஸ் கைக்குப் போட்டு வெளிய எடுத்தா. எண்ணை உள்ளுக்கு வைச்ச மாதிரி இருந்தது , எந்த மாற்றமும் இல்லை.

                               " ஹ்ம்ம்,,எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,,ஆனால் இது என்னவோ உன்னோட சுத்துமாத்து ,,அது மட்டும் நல்லாத் தெரியுது "

                                         இந்த விளையாட்டை நான் வேண்டும் என்றே மங்கல்ஸ் இக்கு மண்டையைக் குழப்ப செய்தேன் , மைக்குரோ அவனில எண்ணை யார் வைச்சாலும் சூடாகாது.கடவுளே வந்து வைச்சாலும் சூடாகாது ,அதுக்குக் காரணம் சயன்ஸ். என்னோட பிராத்தனை அல்ல. எண்ணையின் மோலிக்குயுலர் அணுக்களின் மூலக்கூறு  வடிவம் அதன் மழுப்பிய முனைகளில் வழுக்கும் தன்மை உள்ளது. தண்ணி போல மைக்குரோ வேவ் அதில மோதி வெப்பம் உண்டாக்க முடியாது. அதுதான் காரணம் . மங்கல்ஸ் கொஞ்சம் ஜோசிதுக்கொண்டு நின்றா

                                 " சரி விடு,,நாளைக்கு உனக்கு விசாரணை இங்கே நடக்கப்போகிறது ,என்ன செய்யிற பிளான் அதுக்கும் என்னவும் ப்ரே பண்ணி திரிக்கிஸ் காட்டாலாம் என்று நினைக்காதை ,அது ஒண்டுமே நடக்காது "

                                "   ம். அது எனக்கும் தெரியும் "

                              " நீ தனியாவா இருகிறாய்,, இண்டைக்குத்தான் கடைசி நாள் உன்னோட கதைச்சு முடிக்க அதால கேட்குறேன் "

                               "  ம்,, தனியா இல்லை .."

                               " யாரோடு இருகிறாய்,,உன்னோட நோர்க்ஸ் உச்சரிப்பைப் பார்த்தா ,,யாரோ நோர்ஸ்கியோடு இருக்கிற மாதிரி இருக்கு..சில புக்மோல் சொற்கள்  அப்படியே நோர்க்ஸ் இல  அழகா சொல்லுறாயே, அதால கேட்டேன் "

                               " ஹ்ம்ம்... அதைப்பற்றிக் கதைக்க விருப்பம் இல்லை மங்கல்ஸ் "

                         " உனக்கு ஒரு விசியம் தெரியுமா,,இந்த நாலு நாள் நான் இங்கே ரிப்போட் எழுத வந்த நாட்கள் போல வேற எங்கேயும் எனக்கு எரிச்சல் தாற மாதிரி இருக்கவில்லை,,அதுக்குக் காரணம் யார் தெரியுமா "

                                " தெரியும்,,நான் தான் மங்கல்ஸ் "

                                 " அட அட அட அதெல்லாம் நல்லா உனக்கு விளங்குதே..நீ ஒருவிதத்தில் எனக்கு தம்பி போல ,,சிலநேரம் உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை ,எனக்கு வீட்டில எவளவு பிரசினை என்று உனக்குத் தெரியாது "

                       " ஹ்ம்ம்,,எல்லா வீட்டிலையும் பிரச்சினைகள் இருக்கு தானே "

                        "  என்னோட புருஷன் என்னோட முகம் பார்த்துக் கதைப்பதில்லை,,நான் இப்ப குண்டு ஆகிட்டனாம்,,கலியாணம் கட்டும் போது நல்ல மெலிசா இருந்தேன்..பிள்ளைகள் பிறந்த பின்  குண்டு ஆகிட்டேன்  அது அந்தாளுக்கு ஒரு பெரிய பிரசினை "

                             " ஹ்ம்ம்,,ஜிம்முக்குப் போகலாமே உடம்பைக் குறைக்க மங்கல்ஸ் "

                             " போகலாம்தான் அதுக்கு நேரம் வேணுமே ,,வீட்டை வேலை முடிஞ்சு வந்தா என்னோட புருஷன் இந்தியன் சட்டலைட்  டிவியில் சித்தி சீரியல் பார்த்துக்கொண்டு சோபாவில் இருப்பார்,,ஒரு சின்ன உதவிதன்னும் எனக்கு செய்வதில்லை,,வேணுமெண்டு அப்படி செய்யுறார் "

                                  "   ஹ்ம்ம் "

                                " என்னோட ரெண்டு வளர்ந்த பெட்டையளும் அம்மா சாப்பிட்டிங்களா என்று ஒருநாளும் கேட்காதுகள் ,,ஆனால் நான்தான் சமைக்கிறேன் ஒவ்வொரு நாளும் "

                                " ஹ்ம்ம் "

                          " என்னோட மகன் தான் தலை இடிக்குது என்றால் உடன நெத்தியில் விக்ஸ் தேச்சு விடுவான் "

                                  "  ஹ்ம்ம் "

                        " எனக்கு ரெண்டு தம்பி, ஒருத்தன் லண்டனில்,,மற்றவன் ஜெர்மனியில் ,,அவங்களை நான் தான் வெளிநாட்டுக்கு எடுத்து விட்டேன் பிறகு ,ரெண்டு பேருக்கும் நான் தான் பொம்பிளை பார்த்துக் கலியாணம் செய்து வைச்சேன்  "

                                " ஹ்ம்ம்,  அது நல்ல விசியம்தானே மங்கல்ஸ் "

                        " அப்படிதான் நானும் நினச்சேன்,,கடைசித் தம்பியின் மனுசிக்கு என்னில பொறாமை ,,மங்களம் மச்சாள் உங்களுக்கு கதைக்கப் பேசத் தெரியாது எண்டு எனக்கே வாய்க்கு வாய் காட்டுறாள்..அவளே ஒரு கஷ்டப்பட்ட குடும்பம்,,நல்லா வரட்டும் என்று நினைச்சு தம்பிக்கு கட்டி வைச்சேன் "

                             "   ஹ்ம்ம் ,,"

                             " இலண்டனில் உள்ள மற்றத் தம்பி மக்டொனாலில் மனேச்சர் ,,அவன் இரவிரவா முறிஞ்சு உழைக்க அவனோட பெண்டில் சீட்டுப் பிடிச்சுக்கொண்டு திரியுறா,,நகை வேண்டுறது,,சீலை வேண்டுறது ,,பிறகு அதை எனக்கு காட்டி நாக்கு வழிக்கிறது "

                              "  ஹ்ம்ம் "

                               "   யாழ்பாணத்தில எனக்கு அப்பா அம்மா சீதனமா தந்த காணியை ஆமிக்காரர் அதியுயர் பாதுக்காப்பு வலயமெண்டு பிடிச்சு,,வீட்டைத் தரை மட்டம் ஆக்கிப்போட்டாங்கள் "

                                " ஹ்ம்ம்,,இப்ப  ஆட்கள் கொஞ்சம் போய்ப் பார்கிறார்கள் என்று சொன்னார்களே "

                               "  நானும் ஆட்கள் அனுப்பிப் பார்க்க இப்ப அந்தக் காணியை யாரோ வைபோசா பிடிச்சு வைச்சு தாய் உறுதி எல்லாம் மாத்தி எழுதி வைச்சுக் கொண்டு  இருக்குதுகளாம் "

                               "   ஹ்ம்ம்,,,அப்படியா,, பரமார்த்த குரு கொள்ளிக்கட்டை ஆற்றுத் தண்ணிக்க  வைச்சுப்  பார்த்த மாதிரி இது வேறயா  "

                       "  நான் எவளவு மனத்தால தனிமை ஆக வாழுறேன் என்று வெளியால ஒருத்தருக்கும் தெரியாது..சரி  என் கதையை விடு,,நீ ஏன் இப்பிடி தலையால தெறிக்கிறன்  எண்டு நிக்கிறாய் "

                              "  ஹ்ம்ம்,,,எனக்கு விசர் "

                         " அப்படியா,,ஆனால் நீ நல்ல திடகாத்திரமாய் இருகிறாய்,,நல்லா சிந்திக்கிறாய்,,விசர் என்டுறாய் ,,ஒண்டுமே என்னால அனுமானிக்க முடியவில்லை ,,என்னவோ நான் ரிப்போட் எழுதிட்டேன்,,நாளைக்கு விசாரணை,,இனி நீயும் உன் பாடும்,,ஆளை விடு ,,சீ எண்டு போகுது உன்னை நினைச்சால்  "

                       " மங்கல்ஸ் இன்றைக்கு கடைசி நாள்,,நான் நல்ல தமிழ் சாப்பாடு சமைக்கவா உங்களுக்கு ,தமிழ்ப் பண்பாட்டில் சாப்பாடு போட்டு வழியனிப்பி வைக்க ஆசைப்படுறேன்,,இது என்னோட அன்பான வேண்டுகோள் " 

                                  என்றேன் , மங்கல்ஸ் வேற என்னவோ ஒரு விசியம் பற்றிக் கேட்கப்போற மாதிரி என்னைப் பார்த்தா. ஏனென்றால் தலைவாழை இலை போடும்  தமிழ்ச்  சாப்பாடு செய்யத்  தேவையான சேர்மானப்  பொருட்கள், சுவை சேர்ப்பிகள் , அந்த நோர்க்ஸ் எல்டர் சென்டரில் இருப்பதுக்கு வாய்ப்பே இல்லை. ஆனால் நான் எல்லாவிதமான மசாலாத்  தூள் , சரக்குத் தூள் ,அரைத்த தூள் ,வறுத்த தூள் என்று ஏறக்குறைய ஒரு நாட்டுக்கோட்டை செட்டிநாட்டுச்  சமையல் அறையே அதுக்குள்ளே ஒரு இடத்தில ரகசியமாக வைத்து இருந்தேன். 

                                  " இந்தக் குசினியின் ஒரு இடத்தில உள்ள ஸ்க்ரப் இல் நிறைய இந்திய  இலங்கை வகை சரக்குத்தூள் எல்லாம் ரகசியமாக ஒழிச்சு வைச்சு இருக்கே அதெல்லாம் உன்னோடது தானே "

                            "   ஓம்,மங்கல்ஸ்  ,,அதை பாவித்து தான்  சமைப்பேன்,,எனக்கு மட்டும்,,சில நேரம் .."

                                   " என்ன சில நேரம்,,,அதையும்  சொல்லு "

                                "   ஒவ்வொரு நாள் மெனுவில் வரும் உணவோடு சில நேரம் என்னோட ஸ்டைல் உணவு போடுவேன்,,,அப்போது இதுகளைப் பயன்படுத்துவேன் "

                              "  பார்த்தியா,,கடைசியில உண்மையைக் கக்கிட்டியே ,,அது நோர்வே சத்துணவு சட்டப்படி பிழை தெரியுமா அப்படி எழுதப்பட்ட விதிகளுக்கு எதிராக  செய்வது,,"

                               "   தெரியும்,ஆனால் வயதானவர்கள் ஒன்றும் சொல்வதில்லை,,ரசித்து சாப்பிடுவார்கள் மங்கல்ஸ் "

                               "  வயசான பழசுகளுக்கு நாக்கு நம நம எண்டு  இருக்கும்,,அதுக்கு நீ நாரத்தங்காய் தேய்ச்சு விடுறாய், சோ அதனால நீ செய்யிறது எல்லாம் நல்ல நியாயமான  செயல் , சோ, அதனால நீ சட்டத்தை மதிக்காமல் மீறலாம் அப்படித்தானே "

                             "   என்னோட  சிந்தனை இந்த மனிதர்களுக்கு என்னவெல்லாம் அவர்கள் இறுதிக் காலத்தில் செய்தால் சந்தோசமாக்க முடியுமோ அதெல்லாம் செய்வதில் சட்டம் என்ற ஒன்று தேவை இல்லை,,என்பது என்னோட கருத்து..சத்துணவு சட்டப்படி சமைச்சால் என்ன சமைக்காவிட்டால் என்ன,,,அவர்கள் எப்படியோ சாகத்தான் போகிறார்கள் "

                              "  அது உன் தனிப்பட்ட கருத்து,, நான் ஒரு அதிகாரியாக இங்கே நின்று உன்னைப்போல  எடுத்தேன் கவிட்டேன்  எண்டு  கருத்துச்  சொல்ல முடியாது,  

                                " உங்க கருத்தா இப்ப  முக்கியம் ,,எனக்கு பசிக்குது மங்கல்ஸ்,சொல்லுங்க உங்களுக்கு சமைக்கவா இப்ப "

                        "  ஹ்ம்ம்,,,என்ன சமைக்கப் போறாய்  சரி ,உன்னோட ரகசிய மசாலாத்தூள் பெட்டகம்  இருக்கே அதில பாட்ஷா மசாலா தூள் என்று ஒரு டின் இருக்கே,,அதென்ன நான் கேள்விப் பட்டதே இல்லையே,,அது எதுக்கு பயன்படுத்துவாய்   "

                                "  அது,,நோர்த் இண்டியன் ஸ்டைல் சாப்பாடு செய்யும்போது பாவிப்பேன்  மங்கல்ஸ்....இன்றைக்கு ஹைதராபாத் நிஜாம் றோயல் புரியாணி தம்பிடிச்சு சமைக்கப் போறேன் "

                                "   ஹ்ம்ம்,,பெயரைக் கேட்கவே ஒரு மாதிரி இருக்கு,,இதெல்லாம் எங்கே சமைக்கப் பழகினனி "

                                   "  இந்தியன் ரெஸ்ட்ரோரண்டில் வேலை செய்த நேரம்  பழகினேன் ,,இன்றைக்கு உங்களை சிரிக்க வைக்கவா "

                             " என்னது,,என்னை சிரிக்க வைக்கப்போறியா,,,,அது  நடக்காது,,எங்கே சொல்லு எப்படி சிரிக்க வைப்பாய் ,,சொல்லு "

                             " ஒரு கதை சொல்லுறேன் ,,கேட்குறிங்களா மங்க்ல்ஸ் "

                       "  ஹ்ம்ம்,,சரி  சொல்லு "

                              " ஒரு ஊரில ஒரு ராஜா அரண்மனையில் இருந்தான் "

                              " ராஜா அரண்மனையில் தான் இருப்பான்,,வேறன்ன ஹோட்டலிலா இருப்பான்,,கதை தொடக்கிற விறுத்தத்தைப் பார் "

                                " அந்த ராஜாவுக்கு முன்னால முதல் மந்திரி இருந்தார் "

                                "  ராஜாவுக்கு முன்னாலதான் முதல் மந்திரி இருப்பார்,,வேற எங்க சிக்கியூரிட்டி போல வாசலியா இருப்பார்,,சரி கதையைச் சொல்லு "

                            "  அந்த ராஜா அந்த மந்திரிக்கு ஒருநாள் ஒரு ஐடியா சொன்னார் "

                                " என்ன சொன்னார் "

                              " அந்த  ராஜா ஒரு கட்டளை போட்டார்........அதைக்கேட்ட முதல் மந்திரி நல்ல ஐடியா என்றார்,,ராஜா  உடன  நீ தானே முதல் மந்திரி அப்ப  இண்டைக்கு  இரவு .உன்னோட மனுசியை முதல் முதல் அனுப்பு என்றார்....அதன்படி  ......மந்திரி  இரவு வீட்டை போய் அவர் மனுசிக்குச் சொல்ல..."..

                        "  ஒ இது கொசப்புக் கதை போல இருக்கே,,,எனக்கே இந்தக் கதை சொல்ல உனக்கு துணிவு வருதே ,,சரி சொல்லு இன்டரஸ்ட் ஆக  இருக்கே.."

                            "    இல்லை மங்கல்ஸ் ,,உங்களுக்கு பிடிக்காவிட்டால் சொல்லவில்லை,,"

                            "  இல்லை சொல்லு,,தொடக்கிப்போட்டு நிப்பாட்டாதை...எனக்கு இப்பவே கற்பனை தாறுமாறாப் பாயுது .."

                             "  ராஜா  போட்ட கட்டளைப்படி,,,மந்திரி  மனுசியை அரண்மனைக்கு இரவு கொண்டுவந்து விட்டுப்போட்டு   ,,வெளியே ரோட்டில நிண்டார் ..."

                               " அய்யோ  ,,இது  என்ன கதை,,படுக்கை அறைக் கதை போல இருக்கே "

                         "   மங்கல்ஸ்  இதுக்கு மேலே ,,உங்களுக்கு பிடிக்காவிட்டால் சொல்லவில்லை,,"

                        " அடக் கடவுளே,,இதென்ன கதை,,பயங்கரக் கொசப்புக் கதை போல இருக்கே.."

                           " இதுக்கு மேல  தான்  கிளைமாக்ஸ் வருகுது ..கொஞ்சம் ஓப்பின் ஆக வரும் ..சொல்லலாமா எண்டு ஜோசிக்கிறேன் ..உங்களுக்கு பிடிக்காவிட்டால் சொல்லவில்லை,,"

                                  "  இனி என்ன முழுவதும் நனைஞ்ச மாதிரி,,இனிக் குடையப் பிடிச்சு ஒண்டும் வரப்போறதில்லை,,சொல்லு ..பிறகு,,        "

                                "    .......................................................   ..................  ..................."

                           " அடப்பாவி..இதென்ன கதை..அய்யோ,,கேட்கவே ஒரு மாதிரி  இருக்கு "

                           " அப்ப நான் சொல்லவில்லை,,,நான் சமைக்கத் தொடங்கிறேன் "
             
                               "  ஹ்ம்ம்..பரவாயில்லை .சொல்லு  ..எனக்கு முடிவைக் கேட்காவிட்டால் தலை வெடிக்கும் போல இருக்கு "

                              "  ......  ,,,,,,,,   .....   அந்த நேரம் பார்த்து ஒரு பிச்சைக்காரன் வந்தான் ,,,அவன் முதல் மந்திரியிடம்  கேட்டான் ....."

                           "    என்ன கேட்டான்.."

                            "   பிச்சைக் கேட்டான் "

                        " ஒ ,,அதுக்கு  மந்திரி  என்ன சொன்னார் "

                          " ஹ்ம்ம்,,இது  சொன்னால் கோவிக்காதீங்க,,கொஞ்சம் ஓவர் இது."

                         " அட அட இவளவும் சொல்லிப்போட்டு நல்லவனுக்கு நடிக்கிறதைப் பார் ,,சொல்லு  ,,சொல்லாட்டியும் நீ ஒரு  உதவாக்கரை ஊத்தைவாளி தான்  அதில சந்தேகம் இல்லை "

                              " அப்ப நான் சொல்லவில்லை "

                             " டேய் ,,சொல்லடா,,இல்லாட்டி எனக்கு இரவு  நித்திரை வராது ..சொல்லு,,சொல்லித்தொலை..என் விதி கேட்டுத் தொலைக்கிறேன் "

                            "  மந்திரி சொன்னார்,,,,,ராஜாவுக்குக்  கேட்கிற  மாதிரி  ....நாட்டை ஆளுற ராஜாவே ,,,,,,,,,,  ,,,,,,,,,,  ,,,,,,,..உனக்கு  என்னடா பிச்சை வேண்டிக் கிடக்கு ,,என்று  சொன்னார் "

                                 " ஹஹஹஹா  ஹஹஹஹா  ஹஹஹஹா  ஹஹஹஹா ..அய்யோ சிவபெருமானே,,நீ எங்கதான் இந்தக்  கதை எல்லாம் கேட்டுப் படிசுக் கிழிச்சியோ,,,ஹஹஹா  ஆனால்  என்னை சிரிக்க வைச்சிட்டாய்,,எனக்கு இனி அந்தப் பிச்சைக்காரனை நினைக்கிற நேரம் எல்லாம் சிரிப்பு வரப்போகுதே..பாவி ."

                              அன்று நான் சொன்ன மாதிரியே ரோயல் புரியாணி, ரேக்க சலாட், பாஸ்மாதி ரைஸ் புலாவ்  சமைத்துக் கொடுத்தேன்.மங்கல்ஸ் அதில அரைவாசியை  பார்சல் கட்டிக்கொண்டு வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போனா. அது எப்படி செய்வது என்று மங்கல்ஸ் இக்கு நான் கொஞ்சம் சொல்லிக் கொடுத்தேன். மங்கல்ஸ் எனக்கு சமைக்கத் தெரியும் என்பதில் நம்பிகை வந்த மாதிரி மனது கொஞ்சம் லேசாக இருந்த மாதிரி என்னோட கதைத்தா.

                              அதில கொஞ்சம் அக்கறை இருந்தது.ஆனால் ரிப்போட் பற்றி கடுமையாகவே சொன்னா, அது அவாவின் கடமை என்று சொன்னா. நான் அதுக்கு ஒன்றுமே சொல்லவில்லை. இடைக்கிடை என்னைப் பார்த்து  சிரிச்சா. பிறகு தனிய சிரிச்சா .அந்தப் பிச்சைக்காரனை நினைச்சு சிரிச்சு இருக்கலாம் என்று நினைக்கிறன் .


                                           அடுத்தநாள் காலை நான் வேலைக்குப்போகும் போது ஒரு நடுத்தர வயது  ஆணும் ஒரு  இளம் பெண்ணும் ரெஸ்டாரென்ட் மூலையில் இருந்த ஒரு மேசையில் பைல் வைச்சுக்கொண்டு இருந்தார்கள் . நான் " தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை. நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி .." என்று அவர்களைப் பார்த்து பாடிக்கொண்டு .குசினிக்குள்ள போனேன்.

                                          மங்கல்ஸ் ஜன்னலுக்கால வெளியே பார்த்துக்கொண்டு எனக்கு முதுகைக் காட்டிக்கொண்டு நின்றா. என்னோட கதைக்கவில்லை. நான் ஒரு எக்ஸ்பிரசோ கோப்பி போட்டுக் குடிச்சுக்கொண்டு இருந்தேன். பிறகு அதைக் குடிச்சு முடிய அவர்கள் என்னை விசாரணைக்கு  வரச்சொல்லி அழைத்தார்கள் .

                                     விசாரணையில் நான் சத்துணவுச் சட்டத்துக்கு எதிராக அதை மதிக்காமல் காலுக்க போட்டு மிதிச்ச  எல்லா விசியங்களையும் ஒவ்வொன்றாகக் கேட்டார்கள்.எல்லாத்துக்கும் " ஓம் " என்று சொன்னேன். அவர்கள் கேட்ட சில கேள்விகள் விளங்கவேயில்லை . அதுகளுக்கும் "ஓம் " என்று சொன்னேன் . " இல்லை என்று மறுத்து ஒரு பதிலும் நீ சொல்லுறாய் இல்லையே " என்று கேட்டார்கள்.அதுக்கும் " ஓம் " என்றேன். " நாங்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் விளங்குதா " என்று அந்த இளம் பெண் கேட்டாள்.அதுக்கும் " ஓம் " என்றேன் .

                                    நோர்வேயில் என்னவும் தவறு செய்தால் எழுத்தில் வைக்கும் ஒரு டாக்குமென்ட் ஆதாரத்துக்கு " இன்னதெல்லாம் செய்தியா "என்றுதான் கேட்பார்கள்." ஏன் செய்தாய் " என்று கேட்கமாட்டார்கள் . ஒருவன் தவறு செய்வதுக்கு அவன் மனநிலை அளவில் காரணங்கள் இருக்கும். அதை பெரிய நியாயஸ்தன் போல துக்கிப்பிடித்து அவர்கள் விளக்கம் கேட்பதில்லை. சில நேரம் சைகாற்றிஸ் அல்லது பொலிஸ் கேட்கலாம் என்று நினைக்கிறன்.

                             அந்த நடுத்தர வயது அதிகாரிதான் மங்கல்ஸ் எழுதிக் கொடுத்த ரிப்போட்டை வைத்துக்கொண்டு கேள்விகள் கேட்டார்  நான் அந்த விசாரணை தொடக்கம் முதல் முடியும் வரை அந்த இளம் விசாரணை அதிகாரியாக வந்த இளம் பெண்ணின் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட எண்ண ஓட்டத்தை உள்ளே இறங்கி வரிக்கு வரி வாசிப்பது போல இருந்தது. இயல்பாகவே அவளோட முன்வரிசை மேற்பற்களின் ஒழுங்கில்  கங்குவேலி வரிச்சு மட்டைபோல நீக்கல் விட்ட இடைவெளிகள் இருந்தது.   முடிவில் எனக்கு கடிதம் அனுப்புவோம் என்று சொன்னார் அந்த ஆண் அதிகாரி .

                                        அந்த இளம் விசாரணை அதிகாரியாக வந்திருந்த இளம்பெண் அதன்பின் என்னோட சில விசியம் தனிப்படக் கதைக்க முடியுமா என்று நட்பாகக் கேட்டாள், ஓம் முடியும் , வெளியே வா மர வாங்கில் இருந்து  கதைக்கலாமே என்று சொன்னேன் ,அவளுக்கும் எனக்கும் ரெண்டு கோப்பி போட்டு எடுத்துக்கொண்டு போனேன் , கையைக் கொடுத்து ஹாய் சொல்லி , அறிமுகத்துக்கு  என்னவோ ஒரு அதரப்பழசான அதிகம் பாவனையில் இல்லாத நோர்க்ஸ் பெயர் தன்னோட பெயர் என்று  சொன்னாள்,அது எனக்கு நினைவில்லை, அவள் கேட்டாள் 

                                   " உன்னை இதுக்கு முதல் எங்கயோ பார்த்து இருக்கிறேன்,,எங்கே என்று சரியாக நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை ,,ஹெல்ச முன்டிக்கெட் தலைமை அலுவலகம் வந்து இருக்கிறாயா "

                                      " இல்லை அந்த இடங்களுக்கு நான் வாசல்படியே மிதித்ததில்லை "

                                       "  பிறகு,,வேற எங்கே உன்னைக் கண்டேன்,,சொங்க்ஸ் பிறிவில்லிக் சென்றால் பக்கம் வந்து இருக்கிறாயா "

                                " ஓம்,,,அங்கே என்னோட பிரெண்ட் சிசிலியா வேலை செய்தாள் "

                          " யெஸ்,,அங்கே தான் உன்னைப் பார்த்து இருக்கிறேன்,,அங்கே நான் உப்பிளாரின் பயிற்ச்சி எடுத்தேன்,,சிசிலியாவைத் தெரியும்,,நல்ல பெண்மணி ,,உன்னிடம் ஒன்று கேட்கவா "

                              "  கேள் "

                             "  உனக்கு இந்த இடத்தில வேலை செய்யப் பிடிக்கவில்லையா "

                                  " ஓம்,,அது தான் உண்மை "

                               " ஹ்ம்ம்,,உனக்குப் பிடிக்காத வேலையையோ,,பிடிக்காத இடத்திலையோ வேலை செய்வது கஷ்டம் தான்,,வேற ஒன்றும் இல்லை,,சிசிலியாவைச் சந்தித்தால் என்னோட அன்பைச் சொல்லு ,ஓகே தானே "

                                      "  ஓகே,,கட்டாயம் சொல்லுவேன் , ஆனால் சிசிலியா இப்ப கிரீஸ் நாட்டில கோடை விடுமுறையில் சுற்றிக்கொண்டு நிக்கிறாள், வந்தபின் சொல்லுறேன், நன்றி என்னோட கதைத்ததுக்கு "
                                         

                                 ஐயர் வரும் வரைக்கும்  அம்மாவாசை சில நேரம் காத்திருந்தாலும்  காத்திருக்கும் ஆனால் நோர்வேயில் அள்ளி வைக்கிற கடிதங்கள் கொள்ளி வைக்க உடன உடன வரும். அந்தக் கடிதம் திங்கக் கிழமையே கைக்கு வந்திட்டுது. நாலு பேப்பரில் வந்தது. அதை கொஞ்சம் வாசித்தேன். பிரோகிரட்டிக்கள் உத்தியோகபூர்வ  வார்த்தைகள் தேர்ந்து எடுத்து எழுதிய நோர்க்ஸ்கில்  இருந்தது. அதை மேலோட்டமா வாசித்தேன் . அதில ஒரு மண்ணும் விளங்கவில்லை. அதை சரக் சரக் சரக் என்று துண்டு துண்டாக் கிழித்தேன் , அந்த சத்தம் கேட்கவே இனிமையாக இருந்தது. 

                                                அந்த வேலைநீக்கக்  கடிதத்தில் கடைசிப்  பக்கத்தில் ஒரு பேப்பர்  வெறுமையாக  இருந்தது . வெற்றுத்தாள்களை  எதற்க்காக  கிழிக்கவேண்டும்  என்று ஜோசிப்துப்போட்டு  அதில  கவிஞ்சர்  கலாப்பிரியா  எழுதிய  விதி  என்ற  கவிதையை  எழுதினேன். அந்தக்  கவிதையின்  வரிகள் வரிக்குவரி  நினைவு  இருந்ததால்  அதை  எழுது  முடிந்தது 

                                   அந்திக் கருக்கலில் இந்தத் திசை தவறிய
பெண் பறவை தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய் அலைமோதுகிறது
எனக்கதன் கூடும் தெரியும் குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன் பாசை புரியவில்லை

என்று எழுதி எல்டர்சென்டரில் இருந்த நோட்டிஸ் பலகையில் அந்தப் பேபரைக் கொழுவிவிட்டேன்.

                                    செவ்வாய்க்கிழமை என்னோட கடைசி நாள் அந்த எல்டர் சென்டரில்.வயதானவர்களுக்கு நான் வேலையை விட்டுப் போறேன் என்று சொன்னேன்.என்ன நடந்தது என்று சொல்லவில்லை. அவர்கள் நான் என்னமோ பதவி உயர்வு பெற்று பெரிய இடத்துக்குப் போறமாதிரித்தான் நினைசார்கள். என்னோட கையைப்பிடித்து," நீ நல்லா வருவாய்  பயப்படாதை " என்றும் மறக்காமல் அம்போ எண்டு விட்டுவிட்டுப் போகாமல்  அடிக்கடி தங்களை வந்து பார்க்கச் சொன்னார்கள்.

                                          மங்கல்ஸ் போகும்போது என்னை மறுபடியும் சந்திக்கவே கூ டாது என்று சொல்லி வாழ்த்திப் போட்டுத்தான் போனா, ஆனால் விதி எப்பவுமே வேறுவிதமாக கோடுகள் கீறி வைக்கும் என்று அவாவுக்குத் தெரிய நியாயம் இல்லை.    அதுக்குப்  பிறகு நான் அந்த எல்டர் செண்டர் பக்கமே போனதில்லை, அந்த வேலை விட்டு கிட்டதட்ட ஆறு மாதங்களின் பின்

                               ஒருநாள்

                         ஒஸ்லோ சென்றல் ஸ்டேசனில் மெட்ரோ ட்ரைன் எடுக்கப் போகும்போது எனக்கு முன்னால ஒரு பெண் மங்களேஸ்வரி  போலவே தயங்கித் தயங்கி  நடந்து போனா. பந்தயத்தில் வாத்துக்கு  வளையம் எறிஞ்ச மாதிரி சும்மா " மங்க்ல்ஸ் " என்று கூப்பிட்டுப் பார்த்தேன் ,சடார் என்று திரும்பிப் பார்த்தா.பயம் வந்திட்டுது. தேவை இல்லாத அட்டமத்துச் சனியன் மறுபடியும் அடிச்சுப் பிடிச்சு ஓட்ட வருகுதே என்று செருப்பைக் கழட்டி அடிக்கப் போறாவோ என்று ஜோசிக்க ,மங்கல்ஸ் சிரிச்சா .

                            " ஹ்ம்ம்,,என்ன செய்யுறாய்,,எப்படி  இருக்கிறாய் ,,நல்லா இருக்கிறியா "

                             " என்னவோ இருக்கிறேன் மங்களேஸ்வரி  ..இப்ப சன்விக்காவில் பள்ளிக்கூடம் கழுவுற வேலை செய்யுறேன் "

                              " ஒ அது நல்லமே.எல்டர் செண்டர் வேலை போய் கிட்டதட்ட ஆறு மாதத்துக்கு மேலேயே,,,

                                  "ஓம்   "

                                 "  ஹ்ம்ம்,,சோசியல் அது இது எண்டு நோர்வே அரசாங்கத்திட்ட பிச்சை எடுக்காமல் வேலை செய்யுறாய்  அதுவே பெரிய விசியமே,,உன்னைப் பொறுத்தவரை"

                             "  இப்ப கொஞ்சம் திரிந்திட்டன் ,,பொறுப்பு வந்திருக்கு  மங்களேஸ்வரி  ,  " 

                         "  ஹஹஹஹா ,,அதை நீ சொல்லுறாய்,,ஹ்ம்ம், "

                          "  நீங்க  இப்ப  எப்படி  சுகமா  இருகுரின்களா  மங்களேஸ்வரி ,,இப்பவும்  ரிப்போட்  எழுதுற  வேலையா  செய்யுரிங்க "

                            "   இல்லை,,இப்ப  வேற  வேலை  ஆனால்  அதே  உணவுத்துறையில்  தான் ,,சரி  இப்ப  உன்னோட  நிண்டு  கதைக்க  நேரமில்லை  ,,போகபோறேன் "

                                 " சரி  போட்டு  வாங்கோ "

                            அவளவுதான்  மங்கல்ஸ்  வெடுக்கெண்டு  போக  வெளிக்கிட்டா. நானும்  ரெயில்வே ஸ்டேசனுக்கு போகும்  எலிவேடரை  நோக்கி  நடக்கத்  தொடங்கினேன் . சும்மா  ஒருக்கா  மங்கல்ஸ் ஐத்  திரும்பிப் பார்க்க ,அவா  என்னை  நோக்கி  வருவது  தெரிய  அவடதிலையே  நின்றேன்,கிட்ட  வந்தா,வந்து  

                            " ,நீ மங்கல்ஸ் என்று கூப்பிட ஏன் சடார் என்று திரும்பிப் பார்த்தேன் தெரியுமா ? "

                           " தெரியலை நீங்களே சொல்லுங்க "

                          " உன்னோட அந்த எல்டர் சென்டரில் இன்ஸ்பெக்சனுக்கு வந்த நேரம்,,நீ தானே எனக்கு மங்களேஸ்வரி என்ற பெயரைக் கோணல் மாணலாக்கிக்  கெடுத்து மங்கல்ஸ் என்று வைச்சாய்..அதை என்னோட அவருக்கு,,வீட்டில வந்து சொன்னேன்,,,அன்றில் இருந்து அந்தாளும் என்னை மங்கல்ஸ் எண்டுதான் வீட்டில கூப்பிடுவார்,,,இப்ப நாங்கள் சந்தோசமா இருக்கிறோம். "

                               என்று சொல்லிப்போட்டு  மங்கல்ஸ்  சிரிசுப்போட்டுப் போட்டா .     நான்  அந்த  ரெயில்வே ஸ்ட்சனில்  கொஞ்சநேரம்  ரெயில்கள் தண்டவாங்களை  மாற்றி  மாற்றி  வேகமெடுத்துப் போவதைப்  பார்த்துகொண்டிருந்தேன் . சில  ரெயில்கள்  மயில்க்க் கணக்கில்  ஓடிவந்த  களைப்பில்  அமைதியாக  ஆசுவாசமெடுத்து  நின்றுகொண்டிருந்தன. ஒஸ்லோ நகரம்  இரைச்சலாக அவசரங்களை  நெருக்கி  அடிக்கிக்கொண்டு நாலா  பக்கமும்  நெருங்கிக்கொண்டிருந்தது .

.
                             
.