Thursday, 10 May 2018

ஒரேயொரு வார்த்தை.

வாழ்க்கை ஒரு முடிவில்லா அலைகளுடன் முட்டிமோதி நீச்சலடிக்கும் பயணம்.அதுக்கு முதல் உட்சாக வேலையே தண்ணிக்குள் பாய வேண்டும். நீந்துவது பற்றிக் கரையில் நின்று விவாதிப்பதில் அர்த்தமே இல்லை. யாரெல்லாம் தண்ணிக்குள் பாயத் துணிகிறார்களோ அவர்கள் வெற்றிக்கு அண்மையாகப் பயணிக்கும் சாத்தியங்களை அதிகமாக்குகிறார்கள் 

                                                     வாழ்வின் மிகப்பெரிய கொடுப்பினைகளைத் தேடியபடியே  இணையவலைகளில் நுழைந்து உத்தரவாதமிழந்து களைத்துப்போய் இயல்பாக சுற்றுச் சூழலில்  நட்புக்களும் , உறவும்  தேடும் மனிதர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்கள். 

                                                         வெய்யில் அவசரப்படாமல் உலாவித்திரியும் இந்த  வாரங்களில்  முன் கோடையைக் கொண்டாட்டும் உத்தேசங்களில் மனிதர்கள் சுமைகளைக் கொஞ்சம் இறக்கிவைத்துவிட்டு  ஆசுவாசமாய் இயற்கையோடு ஒன்றிப்போவது  இன்னும் இன்னும் புத்துணர்வு தருகிறது .


                                                               2017 இல் முகநூலில்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன்


ஒரு 
மரணவீட்டு அழுகுரலில் 
ஈரமாகிக்கொண்டிருக்கும்
வெற்றுக் கதிரைகள்.........., 

ஒரு 
குழந்தையின் சிரிப்புக்கு
காரணங்கள் கண்டுபிடிக்கமுடியாத
அம்மாவின் வியப்பு,.............


சிதிலமான
கூட்டின் முகவரியை
மறந்துபோனதால்
இடம்பெயர்ந்த பறவை ...............


நரை மயிரை
முன்னிறுத்திக் காட்டுவதால்
கண்ணாடியை
முறைக்கும் முகம்.................,


வெள்ளையாக
நிலம் எழுதப்பட்டிருக்கும்
ரம்மியமான இரவின்
பவுர்ணமி நிலவு................,


அளவோடு
அரிதாரம் பூசியவளின்
அசைவுகளையே
வன்புணரும் கண்கள் ...........


அதிகமதிகம்
பேச்சு மூச்சில்லை
இருந்தாலும்
அவனுக்காவேயிருக்கும்
அவள்................,


பிரிவு நாளின்
பயங்கரமான சொல்லாடலைக்
கிளப்பிக்கொண்டு வந்துவிடும்
பழைய ஞாபகம்............. ,


வந்து போன பாதைகளில்
கடினமாயிருக்கும்
காற்றை லேசாக்கிவிடும்
புல்லாங்குழல்............


ஹ்ம்ம்

விபரிப்பில் சம்பந்தமேயில்லாத
இதெல்லாத்தையும்
புள்ளியொன்றில் ஒருங்கிணைத்து
முடித்து வைப்பதுக்கு
ஒரு
சின்னக் கவிதை
திணறிக்கொண்டிருக்கலாம் !


........................................................................


இருபத்தைந்து வருடங்களின் பின் 
அவன் முகம் 
தட்செயலாக முகநூலில் 
கண்டபோது திடுக்கிட்டு 
வருடங்களின்பின் புன்னகைத்தாள் , 

கண்களை வைத்துதான்
சடுதியாக அடையாளம் கண்டாள் !


எப்போதுமில்லா வேகத்தில்
உள்ளே அல்பங்களில் நுழைந்து
குடும்பப்படம் தேடினாள்,


முதன் முதலில்
அவன் கல்யாண மனைவியின்
அழகை ஒப்பிட்டுக் கவனித்தாள்,

அவள் முகத்திலிருந்த
பூரிப்பில் பொறாமைப்பட்டாள்,


அவளை அகற்றிவிட்டு தன்னை
நெருக்கமாக நிறுத்தி வைத்து
வடிவு பார்த்துச் சிரித்தாள்,


அவன் வயதானதையும்
கவனிக்க மறுக்கவில்லை !


அவன் குழந்தைகளின்
முகத்தை தொடுதிரையில்
விரல்களால் தொட்டாள்,


நெருக்கமான அந்தப்படத்தில்
தன்னையும் உள்நுழைக்க
இடம்தேடிக்கொண்டேயிருந்தாள்,


மடிக்கணனி
விசைப்பலகையில் கண்ணீர் விழுந்ததை
ஏனோ கவனிக்கவில்லை

கவனித்த போது
மிக மிக மென்மையாகவதை
சேலைத்தலைப்பால்
நோகாமல் ஒத்தியெடுக்கிறாள்,


சமையலறையிலிருந்து அவள் கணவன்
" எடியே என்னடி உப்புச் சப்பில்லாமல்
சமைத்து வைச்சிருக்கிறாய் 

வந்து இன்னொருக்கா சமையடி 
மோட்டுக்கழுதை " என்கிறான்,

" ஹ்ம்ம்" என்று பெருமூச்சு விடுகிறாள்
அதில்
இருவத்தியைந்து வருடங்களின்
பிரிவு அதிகமாகிறது !


அவனை மென்மையாக
அணைத்துவிட்டு
மடிக்கணணியை விரக்தியாக
அணைத்துவிட்டு
கலைந்த படுக்கையறை
விளக்குகளை வேண்டுமென்றே
அணைத்துவிட்டு


மிகமிக மெதுவாக சுவாசித்தபடி
ஜடமாக எழுந்துபோகிறாள் !


.......................................................................................

அவனின்
சேதாரமில்லாத பொய்களை
மனதோடு மன்னிப்பவள்

அவனின்
திருத்தமுடியாத குழப்படிகளில் 
சின்னக்குழந்தைத்தனத்தை
தேடி வெளியேயெடுப்பவள்


அவனின்
பொறுப்பற்ற பொழுதுகளின்
அலட்சியங்களில்
தானாகவே வந்து நெருங்குபவள்

அவனின்
விழுந்த தோல்விகளில்
தன்னையும் முண்டு கொடுத்து
வெற்றியாகவிருப்பவள்


அவன்
பழக்கவழக்கங்களை
பொறுமையோடுசகித்துக்கொள்பவள்

அவனின்
தேவையற்ற பதற்றங்களில்
தேவையான அளவுகளில்
நம்பிக்கை கொடுப்பவள்


அவனின்
அவமதிப்பு நேரங்களில்
தலை கோதிவிடும்
தாயாகவேயிருப்பவள்

தேசங்களில் தூரமாயிருந்தாலும்
கரிசனையில் கிட்டவாகவேயிருப்பவள்


அவள்தான்
இன்றைவரையில்
சொல்ல முடியாத
ஒரேயொரு வார்த்தையை
தனக்கெனமட்டுமே ஒதுக்கிய
பிரத்தியேகமான இடத்தில
வைத்துக்கொண்டு 

காத்திருக்கிறாள் !

...................................................................................


கறள்பிடித்த தண்டவாளங்கள்
பயணத்தை முடித்துக்கொள்ள
கடைசி இடத்திலிருக்கும்
கடைசி நகரத்துக்கு
கடைசி ரெயிலில் சென்றிறங்கினேன்


அங்கொரு
வயதான நண்பர் இருக்கிறார்


பறிபோனத்துக்கான 
அத்தனை செய்திகளையும்
தலைப்பிலேயே சொல்லும் காட்சிகள்

அமைதி அலைகளோடு
மூச்சுமுட்டும் ஏரி

வலித்துக் களைத்த துடுப்புகளுடன்
கடலோடிகளின் பாய்மர வள்ளம்

அதில்
பறந்து களைத்த சிறகுகளுடன்
ஒரேயொரு
பெயர்தெரியாத பறவை


நவீனதத்துவ காலம்கடந்த
காழ்ப்புணர்ச்சியை
சுண்ணாம்பு காரையாகப் பெயர்ந்த
புராதனமான கட்டிடங்கள்

அதியுச்ச ஆடம்பரங்கள்
வெல்லமுடியாமல்க் கைவிடப்பட்ட
அடையாளங்கள் பாதைகளில்


ஒருகாலத்தில்
இரும்புத் தொழில்ச்சாலைகள் 

விலாசமாகிய
பேய்களின் நகரத்தில்
மருந்துக்கும் மனிதநடமாடமில்லை


முன்போல இயங்க முடியவில்லையென்று
ஒத்துக்கொள்ளும்படியாக
வரலாற்றின் முகத்தில் தோல்விகள்


என்
நண்பரின் வார்த்தைகளில்
எரிச்சல்நிறைந்த
உலகமயமாக்கல் விரோதங்கள்


நானோ
ஒரு ஓவியமாக வரவேண்டிய இடத்தை
பாழடைந்த மொழியில்
எழுத்தமுடியாமல் தவிக்கிறேன்.


......................................................................................


நண்பா
பரபரப்புத் தலைப்புச்செய்திகளின்
கிளுகிளப்பில்
உலகம் மறுப்பவன் நீ


ஒரு 
இருட்டு மூலையில் 
அர்த்தமிழந்த சொற்களைத்
தேடியெடுத்து
சிறகிழந்த பறவையின்
பறப்புப் பற்றியோ

ரெண்டுகால்கள் 
இழந்தவனுக்குக்கிடைத்த
சப்பாத்துக்கள் பற்றியோ

மழையைத் துளித்துளியாக
வெற்றுத்தாளில் வரைபவன் பற்றியோ

அலைகளேயில்லாத 
ஏரிக்கரை பற்றியோ
மரணசாசனமொன்றில்
ஊதுபத்தி வாசனை பற்றியோ

காதலையும் மண்வாசனையையும்
மகரந்தப் பூந்துணர்வோடு
இணைத்துவிடுவது பற்றியோ
எனக்கே எனக்கான
வார்த்தைகள் பிரஸ்தாபிக்கலாம்


அவற்றைக் குறிப்பிட்டு
நிறைமாத விஸ்கி மப்பில்
தேவையில்லாத குப்பை என்கிறாய்


நான்
எனக்குள்ள துணிவில்
அதைக் கவிதை என்கிறேன்


அளவுக்கதிகமான அறிவுள்ள நண்பா
உன் உலகத்துக்கு
நான் ஒருபோதும் இறங்கிவரமாட்டேன்


முடிந்தால்
பக்கம் நடக்க வா
எங்கே தொடங்கினோமோ
அங்கிருந்தே கூட்டிக் கழித்து
இன்னுமொரு 

முப்பது வருடங்களைப்
பின்னோக்கியே வாழ்ந்துவிடுவோம் !


......................................................................................


இறுக்கமெல்லாம்
தளர்த்திவிடுவது போலவே
உறைபனி பின்வாங்கிக்கரைகிறது
கொஞ்சம் கொஞ்சம்
நினைவுகளை வைத்துவிட்டுப்போக 
சிந்திக்கொண்டு மூசிப்பெய்யும்
மூடு பனியில்
முகமும் துடைத்துக்கொள்கிறது
முத்தாய்ப்பாய்
நல்ல மண்வாசனைகள்
மாசிமாத நடுவில் வரலாம்
கன்னத்தில் மஞ்சள்
அள்ளிப் பூசவிட்டு ரசிக்கும்
விசுவாசமான வெய்யிலோடு
லயித்துப்போகும் கோடை
ஒரு ஆச்சரியக்குறியாகவேயிருக்கு
ஒருகோடி இதழ்நுனிகளில்
அந்திவான மையெழுத்தியே
துளிர்த்துக்கொள்ளும்
செங்காந்தள் மலர்கள்

சம்பூரண ராகங்கள் தேர்ந்தெடுக்கும்
புவியீர்ப்புவிசை
சருகுகளைப் பறக்கவிட்டு
மிதந்து விழுத்தியே
பொறுப்பெடுத்துக்கொள்வது போலவே
பிரியமானவளே
உன் சூடான மடியில்
என்னை நீயே எடுத்துக்கொள்
பூச்சூடி நிலாப் பார்த்து
கையிரண்டிலும் இறுக்கமாகி
சந்தனமும் குங்குமம் 
வெண்சங்குகளும்
அவகைக்குள்ளேயே பேசிக்கொள்ளட்டும்!
....................................................................................................

பனிப்பொழியும்
ஒற்றை மழைக் குளிரோடு
மிக மிக இயல்பாகவே
ஓடிப்போன மஞ்சள் வெய்யில்
மனம் திரும்பிவந்து
வாழ்க்கையை ஆரம்பிக்கிறது


கசங்கிய முகம் திருத்தும்
காலை மனிதர்கள்
சடார் சடார் என்று கடந்தார்கள்


புராதன தேவாலயத்தில்
மிகச் சரியாகவே தேர்ந்தெடுத்து
எட்டுக்கு மணி அடித்தது


அகலமான நடைபாதைகளில்
உருமாற்றம்பெறத் தொடங்கி
உச்சக்கட்ட இரவின் அயர்வில்
கொட்டாவிட்டுக்கொண்டிருக்கும் வீதிகள்


எப்போதும்போல
என் விடியல் ஆயத்தங்கள்
சோம்போறித்தனமாகவேயிருந்தன


இயல்பான ஜோசனைகளையும்
கையிலில்லா முடிவுகளையும்
இடம்மாற்றி வைக்கும்
மனவிரிசல் எண்ண அலைகள்
ஸ்தம்பிக்கும் போலிருந்த போது
ஸ்டாக்ஹோலம்
என்னைப் பார்த்து பரிகசிக்கிறது


சலிக்கும்படியான அன்றாடம்தான் எனினும்
ஒருவிடிகாலையின்
உத்வேகமெடுக்கும் காட்சிகளின்
பிரத்தியேகமான பாதிப்பு
பிடரி மயிரைச் சிலிர்ப்படையச் செய்கிறது.


பின்னணியில் சொல்லப்படும்
விளக்கங்கள் அநாவசியம் எனும் அளவிற்கு
ஒரு காட்சியின் யாத்திரை
ஓரிரு வரிகளில் முடிகிறது.


..........................................................................................

ஜன்னலோரக் கதைகள் 
தொடருமென்று போடமுதலே 
ஒரு பொழுதில் 
சட்டென்று நின்றுவிட்டது 

தொலைத்தொடர்புவலை 
கிடைக்காத போதெல்லாம்
இடங்களை மாற்றி மாற்றி பேசினோம்

ஆனால்
அந்த ஜன்னலோர வெளிச்சத்தில்தான்
அம்சமான நீ
அழகாகவே இருந்தாய்


எத்தனை முறைதான்
பக்கவகிட்டில் அடங்காதகூந்தல்
கெம்பிக்கொண்டிருந்தாலும்
அதிலெல்லாம் ஒய்யார மயிலானாய்


விதம்விதமான நிறங்களில்
ஒவ்வொருநாள்
உடுப்பு விசாரிப்புகளில்
உன் சிரிப்பு முழுமையான பவுர்ணமி


தென்னம் ஓலைகள் அசையும்
பச்சைநிற அலைகள்
அந்த மாமரத்தில்
இப்பவும் குயிலிருந்து கூவுமா ?

அந்தரங்கமான
அந்த இருட்டு அறையில்
இப்பவும் எலிகள் ஓடுதா ?


திசை திருப்பும் நோக்கத்துடன்
ஒருசில நினைவுகளைக்
காவிக்கடப்பது எளிதல்ல

ஒரு தொடர்ச்சியின்
பழக்கத்துக்கு அடிபணிந்தேவிட்டேன்
குறைந்தபட்சம்
பேசிப் பேசி நீ நடந்தபோது
உன்பின்னால் இழுபட்டதுபோல....


.......................................................................எனக்கோ
நெருக்கித் தள்ளுகிறது
நீண்டுகொண்டேயிருக்கும் மவுனம் .


உன்
கண்களை பார்க்க அப்படித் தெரியவில்லை. 
ரகசியமான இமைகளுக்குப் பின்னால்
எப்போதும்
படிமமாகிய மன்மதப் புன்னகை

அதைத்தானே
தழுவிக்கொள்ளக் காத்திருக்கிறது
சற்றேனும் விட்டுக்கொடுத்து
விலகாத மனது .


குத்திட்டு நிட்கும்
நகரமுடியாத நினைவுகள்
நெருக்கம் கொடுக்கும் ஆசுவாசம்
விளங்கப்படுத்த
அவகாசம்தராத காலம் .


இனியும்
சமாளிக்க முடியாததை உணர்ந்த
கையறு நம்பிக்கை
விடைபெற்றுக் கிளம்பும்
கேள்விகளில்


நீ
மர்மமாயிருக்கிறாய்
துக்கம் சூழ்ந்துகொண்ட பதில்களோடு
இறுக்கம் தளர்ந்து
இன்னும் சிலவருடங்கள்
ஏற்படுத்தும்இடைவெளிகளைவிடவும்
இவளவு பழகியும்
பேசிமுடியா வார்த்தைகளை அறுத்துக்கொண்டு
இற்றைவரை
புரியமுடியாமலே
தொலைந்துபோகிறோமெனும்
அயர்ச்சி தரும் நடுக்கம்தான்
ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கிறது


.........................................................................


நீண்டு கிடக்கும் இரவுகளோடு
நீயும்
நெடும்பகையுடன் பயணங்களுமாக
நானும்
வானமில்லா நட்சத்திரங்கள் போலவே 
நம்பிக்கைகளும்
அருகருகே பயணிக்கும் போது......
இப்படித்தான் எழுத நினைத்தேன்
அது வேறெப்படி
கனதியான பதில்கள்
கசங்கிப்போய்க் காத்திருக்கும்
மனசைப்பிழியும் கேள்வியாகியது?
போதாத காலமும்
பொல்லாத நேரமும்
இந்த முறையும் எழுந்து அச்சுறுத்தியதில்
கைவிடப்பட்ட மனவிரட்டலோடு
உனக்கான பரிசாக
ஒருசில
தேறுதலான வார்த்தைகள்கூட
தேடியெடுக்கமுடியவில்லை!
பிரியமானவளே
அங்கிருந்து நீ எவ்வளவோவெல்லாம்
முன்னெடுப்பதே முழு அன்புதான்

நானோ
குளிர்காலக் கோபங்களுடன்
வீணாய்ப்போய்க்கொண்டிருக்கிறேன்

சேரவேண்டிய
விலாசம் எழுதமறந்த கடிதம்
தொட்டுவிடும் தூரத்திலிருந்தாலும்
எப்படி முகவரி சென்றடையும் ?