Thursday, 14 January 2016

மறுபடியும் நினைவுக்கு..

விழாக்காலங்களில் வாழ்க்கையின் சந்தோஷ்பக்கங்கள்  பற்றி தெரிந்துகொள்ள வாழ்க்கையைப்  பற்றி கதைகளில் வந்த கதைகளை விடவும் அறிஞர்களும் ,ஞானிகளும் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையும்  தேடிப்போகாமல் ,பண்டிகை  விழாக்காலம் உருவாக்குகிற சாதாரண சம்பவங்களைத்  தேடிப்போக வேண்டி இருக்கு , அவைகளிடம் தான் விழாக்கால வாழ்க்கைக்கான உண்மையான பொருள் இருக்கும்

                                      ஊரில சின்ன வயசில் என்னோட அப்பா இறந்த பின் அம்மா ஒருநாளும் வெளிய முற்றத்தில் தைப்பொங்கல் பொங்கவேயில்லை. விதவைகள் முற்றத்தில்த் தைப்பொங்கல் பொங்கக் கூடாது எண்டு ஒரு பைத்தியக்காரச் சம்பிரதாயம் ஊரில தேசவழமைச் சட்டம் போல இருந்தது, அதால தானோ தெரியவில்லை இப்பவும்தான், அப்பவும்தான் தைப் பொங்கல் ஒரு இனிய அனுபவமாக எப்போதுமே இருந்ததில்லை!
                                       அம்மா வெளியே முற்றத்தில் , அயல் வீடுகளில் பொங்குவதுபோல சாத்திர, சடங்காக பொங்குவது இல்லைத்தான், ஆனால் எங்களின் விருப்பத்துக்காக வீடுக்கு உள்ள சமையல் அறையில் ஒவ்வொரு நாளும் சோறு வடிப்பதுபோல தைப்பொங்கல் சமைப்பா ! அது கலர்ப்படம் பார்க்க வேண்டிய நேரம் பிளக் அண்ட் வைட் படம் பார்ப்பது போல இருக்கும்.
                                          எங்களின் அயல் மன்னோன்மணி மாமி வீட்டில ,அதிகாலையே முற்றத்தில் மாட்டுச் சாணி போட்டு மெழுகி , சதுரமாக மாக்கோலம் போட்டு அதின் நாலு பக்கமும் வாசல் வைச்சு , மஞ்சள் இலை கட்டித் தொங்கவிட்டு , மண் பானையில் " பொங்கலோ பொங்கல் " எண்டு தைப்பொங்கல் பொங்கித் தள்ளுவார்கள்! " பொங்கலோ பொங்கல் " எண்டு சொல்லும்போது சீன வெடி சீனாவுக்கே கேட்கிற மாதிரி எங்கள் ஊரையே அதிரவைக்கும் .
                                            அம்மா வெளிய வீட்டு முற்றத்தில் தைப்பொங்கல் கடைசியாப் பொங்கினது நினைவு இருக்கு , பால் பொங்கி கிழக்குப் பக்கமா வழிய ,அம்மா சொன்னா
                          " கிழக்குப் பக்கமா பொங்கி வழியுது ,பால் பவுர்ணமி நிலவு போலப் பொங்குது , இந்த வருஷம் சுபிட்சமான வருசமா அமையப்போகுது, தை பிறந்தால் வழி பிறக்கும் "
                                       எண்டு முகமெல்லாம் சந்தோசமா சொன்னா, எனக்கென்னவோ அம்மா பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமா வேண்டும் எண்டே சரிச்சு வைச்சு இருந்த மாதிரி எனக்கு தெரிந்தாலும் நான் ஒண்டுமே சொல்லவில்லை.
                                  பொங்கல் பானையில் முதலில் பால் பொங்குறதுதான் முக்கியம் என்பது போலவும் அது எந்தப்பக்கம் பொங்கி வழிந்தாலும் பரவாயில்லை என்பது போன்ற சிந்தனை மன ஒழுங்கில்த்தான் நான் இருந்தேன். எது எப்படியோ அந்த வருஷம் அப்பா செத்துப் போனார், எங்களுக்கு இருந்த ஒரே ஒரே வழியும் அதோட வழிதவறிப் போனது !
                                  பொங்கலுக்கு எங்கள் வீட்டில் வெடி கொளுத்தக் கூட சந்தர்பம் கிடைத்தது இல்லை. வீடில பூந்திரி மத்தாப்பு மட்டும் வேண்டித்தருவார்கள், அம்மா வெடி தவறுதலாக வெடித்தால் கையைக் ,கண்ணைக் கொண்டு போயிடும் என்ற பயத்தில வேன்டித்தரமாட்டா ! அயல்வீடுகளில் தைப்பொங்கல் இரவு, பகல் எல்லாம் உலகம் அழியிற மாதிரி முழங்குவார்கள்! கேவலமா இருக்கும் !
                                         தைப்பொங்கல் அன்று வெடி கொளுத்தாத வீடு என்பது ஊரில் உள்ள வீடுகள் எல்லாத்திலும் தரக்குறைவான வீடு என்று மோட்டுத்தனமாக நினைத்துக்கொண்டு இருந்ததால், அதை மறக்க மற்ற அயல் நண்பர்கள் வீட்டுக்குப் போய்விடுவேன் , போய் அவங்களிட்ட வெடியை வேண்டிக் கொளுத்திக் கோவத்தில நாயிண்ட காலுகை போட அது உலகம் எல்லாம் கதறிக் கதறி " நாசாமாப் போன பொங்கல் ,, நாசாமாப் போன பொங்கல் ,," எண்டு திட்டிக் கொண்டு ஓடித்திரியும் !
                                  எங்களின் வீட்டுக் அருகில் அம்மன் ரோட்டிலதான் , " எடுப்பு செடுப்பு " பிடிச்ச , "உலக அழகுராணிகள் நினைபில" இருந்த அழகான ,அறிவான பெட்டைகள் வசித்தார்கள், அவர்கள் எங்களோட படிச்சாலும் , எங்கள் அழகில மயங்கி விழாவிட்டாலும் பரவாயில்லை, அசந்து மறந்து தன்னும் எங்களை ஏன் நாயே எண்டும் கணக்கில் எடுப்பதில்லை . அந்தக் கோவத்தில ,பொங்கல் இரவு வெடி அமோகமா முழங்குற நேரம் பார்த்து , நாலஞ்சு அனுமான் வெடிய ஒன்றாகக் கட்டி ,அதன் கந்தகத் திரிய நீட்டா வைச்சு அவர்களின் வெளி ரோட்டோரம் வாசலில் தொங்கும் தபால்பெட்டிக்க போட்டுடு நைசா நழுவிவந்திடுவம் ,
                                            காலையில அந்தப் பெட்டி " கிளைமோர் கண்ணி வெடியில அம்புட்ட கவசவாகனம் " போல , சிக்கி ,சிதறி ,சின்னா பின்னமாகி ,சீரளிஞ்சு தொங்கும். அதைப் பார்க்க ஒரு பழிவேண்டிய ஆத்மதிருப்தி கிடைக்கும். அந்த வெற்றிகரமானா தாக்குதலில் பங்கு பற்றிய சின்னக் கண்ணன் ,பின் நாட்களில் ," .........." என்ற இயக்கத்தில " வெடிகுண்டு நிபுணரா " இருந்து ..ஒரு தாக்குதலுக்குப் போகுமுன் தவறுதலா டிக்னேட்டார் இறுகி வெடிச்சு சிதறிப்போனான்.
                                       என் வயது அயல் வீட்டு நண்பர்கள் ஒரு முறை ,அவர்களின் வீட்டில அனுமான் வெடி, யானை வெடி , சங்கு வெடி ,சர வெடி எல்லாம் வேண்டி வைத்து இருப்பதாகவும்
                               " உங்கள் வீடில என்ன வெடி வேண்டினீங்கள் ?"
                                என்று என்னைக் கேட்டார்கள். அம்மா வேண்டித்தந்தது பூந்திரி ,மத்தாப்பு எண்டு சொல்லவது உலகமகா வெட்க்ககேட்டு, அதால
                                  " அணுக்குண்டு வெடி வாங்கி வைத்திருக்கிரம் "
                                என்று சும்மா சத்த வெடியைக் கொழுத்திப் போட்டன் ! அவர்கள் திகைத்து,"அது என்ன புதுவெடி,
                                   " அது எப்படி இருக்கும் ,நாங்கள் இதுவரை அப்படி ஒரு வெடி பெயரே கேள்விப்பட்டதில்லையே ?",
                                   என்றார்கள் நான் அது வெடித்தால் வரும் கதிரியக்க பக்க விளைவுகளை விளக்கி சொல்ல , அவர்கள் பதறிப்போனார்கள்!
                                  காலையில முதல் வேலையா எங்க வீடுக்கு வந்து என்னை எழுப்பி அந்த வெடிய கொளுத்தும்படி கேட்டார்கள், நான்
                                  "ராத்திரி பன்னிரண்டு மணிக்கே அதை நான் கொளுத்தி விட்டேனே "
                                       என்டு இன்னுமொரு தைப்பொங்கல் வெடிய போட்டன்! அவர்கள்
                                 "இப்ச் ,அடுத்தவருடம் , தவறவிடக்கூடாது "
                                       என்று தைப்பொங்கல் சபதம் எடுத்து கொண்டு போய்விடார்கள்!
                                          எங்கள் வீட்டில வெளிய " பந்தா போட்டு "பொங்காததால் எல்லா அயலட்டை வீடுகளிலும் இருந்தும் , பெரிய " பந்தா போட்டு " விதம் விதமான கலர்ல ,விதம் விதமான விறுத்ததில ,வெள்ளைப் பொங்கல் ,தைப்பொங்கல் சாதம்,சக்கரைப் பொங்கல் ,உளுந்துவடை வரும், வந்து அதுபாட்டில மேசையில எவசிலவ்ர் தட்டில கிடக்கும் ,அனாதையா காசு கொடுத்தாலும் சாப்பிட மனம் வராத மாதிரி இருக்க ,யாரும் சாப்பிடமாட்டம் !
                                               வருசத்தில எதுக்கு எல்லா வீடிலையும் ஒரே நாளில தைப்பொங்கல் பொங்குகிறார்கள் எண்டு நினைக்க வெறுப்புவரும் , வருஷம் ஒவ்வொருநாள், ஒவ்வொரு வீடில தைப்பொங்கல் பொங்கினால் என்ன குடியா முழுகிப் போயிடும் ? என்று அப்போது நினைத்ததுண்டு!
                                              எங்கள் வீடில மாடு இல்லை. பக்கத்து வீடு முத்துலிங்கம் முதலாளி வீட்டில தைப் பொங்கலுக்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல் வைப்பார்கள், அவர்களின் மாட்டுக் கொட்டிலில் எப்பவுமே மாடுகளும் கன்றுகளும் நிக்கும். பின் மதிலில தொங்கிக் கொண்டு நின்று பார்த்திருக்கிறன். அவர்கள் வளர்த்த பசு மாட்டை அன்றைக்குமட்டும், மாலை போட்டு , மஞ்சள்தண்ணி தெளித்து , முத்துலிங்கம் ஐயா ஏதோ ஜீவாகாருன்ஜ மூர்த்திபோல மாட்டுக்கு கற்பூர ஆரத்தி காட்டுவார் !
                                         மாடு இந்த தைப்பொங்கல் திடீர் அனுதாப மனிதப்பதர்களைக் கணகில எடுக்காத மாதிரி அதுபாட்டில தைப்பொங்கல் வைக்கலைத் திண்டு கொண்டு, கடசியா சந்தித்த காளை நாம்பன் மாட்டோட செய்த " ரோமான்ஸ் " ஐ நினைத்துக் கொண்டு ,அப்பாவியா இருக்கும் ! முத்துலிங்கம் வீட்டில மாலைய போட்டு , மஞ்சள்தண்ணி தெளித்து ,வீட்டோட செட்டில் ஆகிற மாதிரி அழகான பெண்களும் இருந்தார்கள்.....அது வேற கதை,அதையும் பிறகு சொல்லுறன் !
                                        சென்ற வருடம் ,ஒஸ்லோவில் , வெளிய ஸ்நொவ் விழுந்து , சூரியன் இல்லாத இருட்டு நேரம் என்னோட வீடில் , காஸ் குக்கரில் , " நொன்-ஸ்டிக் எனாமல் " பாத்திரத்தில்.....
                                   " தை திருநாள் இல்லம் எல்லாம் தளிர்த்திடும் தைபொங்கல் ,,இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல், கூவி அழைத்திடும் சேவல் கூவி விழித்திடுவோம் குளிப்போம் ".........
                                 எண்டு பாடிக்கொண்டு அரிசியைக் கழுவிப் போட்டு ..
.                             " புத்தாடை பூண்டு மனம் மகிழ்ந்திடுவோம் நாமே ,விரும்பிய மா வாழை பல விதம் விதமாய் கனிகள் "...
எண்டு பாடிக்கொண்டு,,போத்தல் பாலைச்  சரிச்சு பாத்திரத்தில் ஊத்தி ....
                     ." பாலெடுத்து பொங்கலுக்கு பானை வைப்பார் அப்பா .கோலம் இட்டு விளக்கேற்றி கும்பிடுவாள் அம்மா ".....
                                        எண்டு பாடிக்கொண்டு.. ,சக்கரை , காசுக் கொட்டை , முந்திரி பிளம்ஸ் ,நிலக் கடலை , பேரிச்சம்பழம் எல்லாத்தாயும் அள்ளி எறிஞ்சு ஆனதமாய்ப் பொங்கினேன் , பொங்கிப்போட்டு
                                  " பொங்கலோ பொங்கல், பொங்கல் "
                                     எண்டு பொங்கலைக் கண்டு பிடிச்சவனை வாயாரப் புகழ்ந்து பாடிப் போட்டு, நான் அதிகம் இனிப்பு சாபிடாததால் , " எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும், எல்லாரும் எல்லாவற்றையும் பகிர்ந்துண்ண வேண்டும்!" என்ற சமதர்மக் கொள்கையில் என் அயல் வீடுகளுக்கு பொங்கல் பாத்திரத்தை தூக்கிக்கொண்டு போனேன் !
                                         என்னோட வீட்டுக்கு பக்கத்தில அரபி பேசும் ஈரான் நாட்டுக் குடும்பம் இருக்கு ! அவர்களுக்கு கொஞ்சம் தைப்பொங்கல் கிள்ளிக் கொடுத்தேன் அவன்கள் முதலில
                                   " இது என்ன" ஹலாலா,,பார்க்க அழகா இருக்கே,,குக்குஸ் அரிசியில் அவித்து வடித்து செய்வதா இது "
                               எண்டு கேட்டாங்கள்
                               " இல்லை, இது வெறும் இந்திய வகை அரிசியும் , பாலும் , சக்கரையும் , இது சுத்த சைவச் சாப்பாடு "
                                 எண்டேன் ,அவர்கள்
                                          " இன்சா அல்லா, உன்னோட பெருநாளில் எங்களையும் இணைத்துக்கொண்டதுக்கு நன்றிப்பா "
                                    எண்டு சந்தோசமா வேண்டினார்கள் ! என் இன்னொரு அருகில் ஒரு வியட்நாம் நாட்டுக்காரி , சப்பட்டை மூக்கோடு ,பாம்பு போல வளைஞ்சு வளஞ்சு நடக்கும் ஒருத்தி இருக்குறாள், அவளுக்கு கொஞ்சம் கொடுக்க
                                        " இதை எப்படி சாபிடுவது,வாசம் அந்த மாதிரித் தூக்குதே "
                                 எண்டு கேட்டாள் ?
                                         " சைனிஸ் சோயா சோஸ் இருந்தா கொஞ்சம் விட்டு சாப்பிடு , சுவிட் அண்ட் சோர் சோஸ்,,ஏன் சில்லி சோஸ் இருந்தா அதுவும் விட்டு சாப்பிடு, அப்புறம் விரும்பினால் நீ பாவிக்கும் மூங்கில் தடியால கிள்ளியும்  சாப்பிடு ஒன்றும் குறைஞ்சு போகாது  "
                                          எண்டேன் , அவள் அன்பாக வேண்டினாள் ! முன் வீட்டில நோர்வே நாட்டு வெள்ளை கணவனும் மனைவியும் இருகிறாங்க! இனிப்பா எது கொடுத்தாலும் சும்மா வெளுத்தெறிவாங்கள் ! அவங்களுக்கு மிச்சம் முழுவதையும் பாத்திரத்தோட கொடுத்தேன்,ஆச்சரியமா பார்த்தாங்கள் 

                             " என்னப்பா,,இவளவு சாப்பாடு,,இதென்ன வகை சாப்பாட்டு பா, பார்க்க நோர்க்ஸ் ரைஸ் குரோத் போல இருக்கே,,ஆனால் கலர் என்ன இப்படி இருக்கு,,,யப்பா சாமி,,இப்படி வாசமா இருக்கே,,அப்பிடி என்னதான் போட்டு செய்தாய்,,பொறு ஒரு பிடிச்சிட்டு மிச்சக் கொமென்ட் சொல்லுறேன்  "

                              என்று அந்த மனைவி சொன்னாள். அவள் கணவன் சிரிச்சுக்கொண்டு பார்த்துக்கொண்டு நின்றான். கொடுத்து சில நிமிடங்களில் , தைப்பொங்கல வழிச்சு , தைப்பொங்கல துடைச்சு தைப்பொங்கல் பாத்திரத்தை திருப்பி தந்தாங்கள் !
                                               கச்சான் காத்தில வேப்பம் சருகு அள்ளி எறிஞ்ச மாதிரி அடிபட்டு, இடிபட்டு ,இடம்பெயர்ந்து,புலம்பெயர்ந்து , தாறுமாறாய் வாழ்க்கை வந்த வழி, போன வழி முழுவதும் வலி தந்து பண்டிகைக் காலங்களில் மட்டும்தான் சின்ன வயது நினைவுகள் இப்ப நான் வாழும் காலாச்சார சூழலில் இருந்து மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது ! இந்த வருஷம் பொங்கலும் இல்லை ,ஒரு படையலும் இல்லை , மனதுக்கு நெருகமானா பலர் தொடர்பு இல்லாமல் போனது முகியமானா காரணம் !

.