Thursday, 23 April 2015

பாத்திமா ! ஒரு புயல் .

ஒரு காலத்தில், ஒரு இடத்தில வாழ நிர்பந்திக்கப்பட்ட வழிப்போக்கன் போன்ற வாழ்க்கை வந்துபோன நேரம் ஏனோ வாசல்கள்  மூடியே கிடந்ததால் தேவை இல்லாமல்த் தட்ட தேவை இருக்கவில்லை. அந்த வயதும் அப்படியே ஒரு வித  மாயவித்தை சுழன்டுகொண்டிருக்க தேடிஅறியும்  உண்மைகள்  தேடாமலே  தெரியவரும்  கொழும்பு நகரத்தின் உண்மை மவுனம் கிழிக்க இதயம் இரந்து இறங்கி எழுத வைத்தது ஒரு கதையின் தொடக்கத்தை. அதன் பின்...

                                                                   பாத்திமா எவளவு அழகா இருந்தாளோ அதே போல கிராண்ட்பாஸ் புற நகரமும் , பாதை ஓரம் குப்பை கொட்டிய தெருக்கள், சனிக்கிழமை அதிஸ்ட லொத்தர் விற்பவனின் லவுட்ஸ் ஸ்பிகர் அலறல் , ஆனந்தபவான் தோசைக்கடையில் பாடம் நடத்தும் பழைய தமிழ்ப் பாடல்கள் , நடை பாதையில் லேகிய வித்தை காட்டுபவர்கள் , வருசமாய் விக்காத அற்ப பொருட்களை தலையில கட்டி விட இழுத்துப் பிடிக்கும் பேமென்ட் வியாபாரிகள், பள்ளிவாசலில் அஞ்சு வேளை பாங் ஓதும் புனிதப் பிராத்தனை, எல்லாத்தையும் தாண்டி களனிகங்கைத் தொடக்கத்தில் ஒருபக்கம் ஆளை ஆள் முட்டிக்கொண்டு இடிச்சுக்கொண்டு இடைவெளி இல்லாமல் பறக்கும் மனிதர்களின் நெரிசலிலும் கிராண்ட்பாஸ் எப்போதும் அழகாதான் இருந்தது,
                                                     
                                                         மறுபடியும் சொல்லுறேன் கிராண்ட்பாஸ் குப்பையில் குண்டுமணி போல அழகா இருந்ததுக்கு முக்கிய காரணம் பாத்திமா என்று சொன்னால் நான் காதல்ப் பித்தம் இரப்பையை விட்டு தலைக்கு ஏறிப் பிசத்துறேன் என்று எடுத்த எடுப்பில சொல்லுவிங்க ஆனால், என்னைப் பொறுத்தவரை, உண்மை அதுதான். ஆனால் பாத்திமா சிம்பிளா இருந்தாள் ,அதுதான் அந்த பேலியகொடை விளிம்பில் இருந்த கஞ்சலான புற நகரத்துக்கு வெசாக் கால மின்மினி விளக்குகள் போல அழகு கொடுத்தது.
                                                       
                                                               கொழும்பு ஒரு அலாதியான நளின நகரம். அந்த நகரத்தின் உயிர் முன்னேற நம்பி வந்த பலரோட விதியை வீதியில் இருந்து மாட மாளிகைக்கு ஏற்றி வைத்தது. எல்லா இன மக்களும் பல்லினக் கலாச்சாரத்தில் வாழும் அந்த அவசர நகரத்தில் நடக்கும் காதல் சந்திப்புக்கள் எப்பவுமே அவசரமா இருக்கும். அப்படி மதம் வேறான இருவர் சந்தித்த, பல காரணங்களால் அந்தக் காதல் ஆரம்பத்திலேயே புரிந்துகொள்ளப்படாமழ்ப் போன ஒரு சம்பவத்தை சிறுகதை போல எழுதுவதற்கு எல்லாராலும் முடியாது .

                                                முக்கியமா என்னால் முடியுமா என்று எப்பவும் நினைப்பது . அதுக்கு முதலில் சொந்தமான ஒரு படைப்பு மொழியில் எழுத்துநடையை உருவாக்க வேண்டும். அந்த உரையாடல் மொழி ஒரு பொது மொழியில் வந்தாலும் மனிதர்களின் குணங்கள் , இயல்புகள் , வருத்தங்கள், எதிர்பார்புகளை , மனோபாவங்களை சுவாரசியம் குன்றாமல் எழுதும் நுட்பமான மொழியில் ஒருவனுடைய அழிந்து போகாத தனிப்பட்ட குரல் போல இதை எழுத வைத்தவள் பாத்திமா. 
       
                                                           கதையை இப்படிதான் தொடக்க வேண்டி இருக்கு. ஆயிரத்து தொளாயிரத்து என்பத்தி ஒன்பதாம் ஆண்டு என்று நினைக்கிறன், யாழ்பாணத்தில் இருந்து யாழ்தேவி ரெயிலில், தலை மறைவாக,தலையைக் குனிந்துகொண்டு வவனியா தாண்டி மதவாச்சி வந்த பின்னர் தலையை நிமிர்த்திப் பார்த்து கொழும்புக்கு வந்து வேறு வழி இல்லாமல் ஒரு தமிழர்களின் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் கணக்கு வழக்கு பதிவு செய்யும் வேலை சில வருடங்களே வேலை செய்தேன். அந்த இடத்தில என்னோட வேலை செய்தரவர்தான் ரியாஸ் முஹம்மத்.

                                                  ரியாசுக்கு என்னோட வயசுபோலதான் இருந்தார், சொந்த இடம் ஓட்டமாவடி என்று ஒரு முறை சொன்னார், வடக்கைப் போலவே கிழக்கிலும் அரசியல் இஸ்திரமின்மை ஆயுதம் கைகளில் வைச்சு இருந்தவர்களின் கைகளில் இருந்ததால் அவர் மட்டுமில்லை அவர் குடும்பமே கொழும்புக்கு வந்து கிராண்ட்பாஸில் இருந்தார்கள். ரியாசுக்கு ஒரே ஒரு தங்கச்சி . அவள் தான் பாத்திமா. இப்ப கதை எங்க இழுத்துக்கொண்டு போகப் போகுது என்று உங்களுக்கு கொஞ்சம் விளங்கி இருக்கும் என்று நினைக்கிறன்.

                                               அவரோட உம்மவோடும் ,பாத்திமா என்ற  தங்கையுடனும்  எகலியகொடை  கிராண்பாஸ் இல ஒரு சின்ன வீடு வாடகைக்கு எடுத்து வசிப்பதாகச் சொன்னார். கொழும்புதானே  வாழ்வுக்கு அண்டிவந்த மக்களை வாரியணைத்து முன்னேற்றும் நகரம். முன்னேறிய ஆகவேண்டும் என்று ஒரு துரும்பு  அளவில் ஒரு நம்பிக்கையை  இறிக்கிப்பிடித்த மனிதர்களையும்  அது ஒருநாளும் கைவிட்டதில்லை 

                                      தன்னுடைய தங்கை   பாத்திமா  கவிதை எழுதுவாள் என்றும், கிழக்குமாகான கவிஞ்சர்களை அதிகம் முன்னிருத்து வந்துகொண்டிருந்த தினகரன்  பத்திரிகையில் அவள் கவிதைகள் பாத்திமா  ரிஸ்வான  என்ற பெயரில் வந்துருப்பதாகச் சொல்லி ஒருநாள் தினகரன் வாரமஞ்சரி பேப்பரில் வந்திருந்த ஒரு கவிதை  காட்டினார் அது  ஒன்றே போதும்போலிருந்தது  பாத்திமாவின் உலகத்தை  அறிய 

                                   அதன் பின் நீ சொல்ல விரும்பியே 
                                   சொன்னதை 
                                    நான் 
                                  கேட்க விரும்பியே
                                  கேட்பது போலக் 
                                  கேட்டேன்.....
                                  எல்லாத் 
                                  தெரிவுகளுக்கும் 
                                  தடை போட்டு  
                                  அலையவைத்த 
                                   நேசிப்பின் 
                                   பெறுமதியை 
                                   மறுபடியும் 
                                   ஜோசிக்க வைக்குது
                                   முடிவில்லாக் கேள்விகளை 
                                   ஒவ்வொன்றாய் 
                                   நீ வைத்துவிட்டுப் போன நாள் 

                            இப்படி  இருந்த அந்தக்  கவிதையின் கீழே  அதை  எழுதியது   பாத்திமா  ரிஸ்வான, ஓட்டமாவடி .  என்று  இருந்தது. நான் என்ன காரணம் என்று சொல்லமுடியாத ஒரு உந்துதலில் அந்தக் கவிதையை அப்படியே பேபரில்  இருந்து கிழித்து எடுத்து வைத்து இருந்தேன். அந்த  வரிகளில் சிலது சில வருடங்களின் பின் எனக்கே எனக்காக எழுதப்பட்டது போன்ற ஒரு சம்பவம் பின்தொடர்ந்தது தான் வாழ்கையின் விசித்திரங்களில் ஒன்று.        

                                          ரியாஸ் அந்த நிறுவனத்தில் அதிகம் ஆர்வம் இல்லாமல் வேலை செய்தார், அவர் சில மாதங்களில் டுபாய்க்கு போகப் போறதா எப்பவும் சொல்லுவார், ஆனால் அவர் வாழ்க்கை பற்றி நிறைய விசியம் எப்பவும் என்னோட கதைப்பார். யாழ்பாணம் பற்றிக் கேட்பார் ,நான் ஒண்டுமே சொல்ல மாட்டேன்,பதிலா அவரிடம் கிழக்குமாகாணம் பற்றிக் கேட்பேன்,எல்லாம் சொல்லுவார்,
                             
                                   ஏறக்குறைய யாழ்ப்பாணம் எவளவு அல்லோல கல்லோலம் பட்டுக்கொண்டு இருந்ததோ அதேபோல தான் அவர் கதைகளும் நடப்பு நிலவரமும் இருந்தது,அதனாலோ தெரியவில்லை அவர் என்னோட மிகவும் நெருக்கமாக எப்பவும் இருப்பார்,கதைப்பார். ஒருநாள் வேலை முடிந்து புறக்கோட்டை பஸ் நிலையம் வரை நடந்து கொண்டே கதைத்துக்கொண்டு போனபோது .

                                      " நாளைக்கு என்கள்ண்ட வூடுக் கடப்புக்கு பணிய உள்ள தர்காவில் அந்திக்குப் போல கந்தூரி சமைச்சு தானம் கொடுக்குறாங்க , நீங்க வாங்களேன், ஏனம் ஒண்டு எடுத்திண்டு போய் ஒள்ளுப்பம் போல கந்திரி வேண்டியாந்து சாப்பிடலாம் , அப்படியே எங்கள்ண்ட வூடுக்கும் வாங்க,உம்மாவும் பாத்திமாவும் இருகுராக, அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் " என்றார் ரியாஸ்.

                                            நான் " பரவாயில்லை எல்லாரோடும் சேர்ந்து பள்ளிவாசலுக்கு முன்னால் இருந்தே சாபிடுறேன் அது எனக்கு விருப்பபம்,எங்கள் ஊரில வீராளி அம்மன் கோவிலில் சித்திரைக் கஞ்சி ஊத்தும் போது அப்படிதான் அடிபட்டுக் குடிப்போம் " என்றேன்.
    
                                      அதுக்கு ரியாஸ், " அதெல்லாம் ஒண்ணும் வேணாம், வேண்டிய மாதிரி சாப்பாடு இரிக்கி , எங்க பெரிய வாப்பா தான் பள்ளியில வேண்டிய மாதிரி மவுலவி , நாங்க வேண்டிய மாதிரி வூட்டுக்கே எடுத்திண்டுப் போயிட்டு வேண்டிய மாதிரி சாப்பிடலாம். " என்று சொல்லிப்போட்டு,

                                     " பிஸ்மில்லாஹ் , நான் வார மாதமளவில் டுபாய் போயிருவேன். அதுக்கு முதல் இவளவு நாளும் என் ப்ரெண்டா இருந்து இரிக்கிரிங்க, அதனால கட்டாயம் மறுப்பு சொல்லாமல் வாங்க "

                                 என்று சொன்னார்.மொபைல் டெலிபோன் இல்லாத அந்த நாட்களில் மனிதர்களின் வார்த்தைகள் மிகவும் நம்பிக்கை தருவதாக இருந்ததால் அவர் வாயால நேராகச் சொன்னார் அதை  நான் கேட்டேன் என்ற வார்த்தை உத்தரவாதம் போதுமானதாக இருந்தது. வாழ்க்கை அப்பெல்லாம் மிகவும்  நம்பிக்கையாக எளிமையாக  நட்பின் அடையாளங்கள் சிக்கலான  குழப்பத்திலும் சந்தோசமாக இருந்தது 

                                            எனக்கு கந்திரியில் தென்னம் ஓலையில் பிளா போலக் கோதிக் கட்டிக் கொடுக்கும் ரம்பைக் குழை போட்டு தம் பிடிச்சு அவிச்சு வடிச்ச வெள்ளை சோறும், முந்திரி நெய்யில மிதக்கும் ஆட்டுக்கால் பாயா ஆணமும்  தின்ன நல்ல விருப்பம் .அதைவிட ஒரு இஸ்லாமியர்களின் வீடு எப்படி இருக்கும்,அவர்கள் எப்படி வாழுவார்கள் என்று பார்க்க மிகவும் விருப்பமா இருந்ததால் வாறன் என்று சொன்னேன். ஐயர் வீட்டு நாய்க்கு அலியார் வீட்டுச் சோறு என்ற பழமொழி போல சாப்பாட்டுக்கும் சமயத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று என் சிறுகுடல் பெருங்குடல் சாட்சியாக எப்பவுமே நம்புபவன்.

                                           " உங்க வூடு போல நினைச்சே வாங்க. ஒன்னும் அலடிக்கொள்ளாம வாங்க, மார்க்கம் வேறா இருந்தாலும் நாமெல்லாம் ஒண்ணுக்க ஒண்ணு மனுசங்க தானே, நீங்க வேற கொழும்பில தனியா இருகுரிங்க "

                                            " கொஞ்சம்  தயக்கமா  இருக்கு  ரியாஸ்,  நான்  இதுக்குமுன்  இசலாமிய ஆட்கள் வீட்டுக்கு போனதே  இல்லை "

                                             "   அட, விடுங்க , இதென்ன  பெரிய  கதயா,, எங்க  ஊரில  பட்டிகளோ தமிழ் ஆட்களோட  பெருநாளுக்கு  நாங்க  எல்லாம்  போவமே,,விடுங்க "

                                          "  ஹ்ம்ம் "

                                            "   கல்முனையில  ஒரு  அம்மன்  கோவில் இருக்கு  தெரியுமா,,அதில தலைக்கு குடம் வைச்சு தீ மிதிப்பாங்க ,,நாங்க  போவம்  பார்க்க ,,அதென்ன  கத "

                                        "   எனக்கு  பட்டிகளோ  தெரியாது ,ரியாஸ், அங்கெ போனதே இல்லை "

                                          "  சரி வுடுங்க,,அதெல்லாம்  இப்ப முக்கியமொன்னும்  இல்லை ,நீங்க வாருவிங்க தானே,,என்ன  கத  "

                                           "   சரி,,நீங்க  கேட்கிறதால வாறன்  ரியாஸ் "

                                           "  எங்கண்ட  ஆட்கள்  யாழ்பாணத்தில மிச்சம் காலம் இருந்து இருக்காங்க தானே ,,இல்லையா,"

                                               " ஓம்,,பொம்மைவெளி, அஞ்சு சந்தி  போன்ற இடங்களில்  இருந்து இருக்கிறார்கள் "

                                           " அதானே,,நா  கேள்விப்பட்டு இருக்கேன்,எங்க உம்மாவோட  உறவுக்கார  சாச்சா ஒருவர் அங்கினையதான் புடவைக் கட வைச்சு இருந்தார்  "

                                             "  ஓம்,,யாழ்ப்பான டவுனில நிறையக்  கடைகள்  இருந்தது , எனக்கு பள்ளிக்கூ டத்தில  சயன்ஸ்  படிபிச்சவரே ஒரு அன்பான மாஸ்டர்  அவர் பெயர் காதர் மாஸ்டர் "

                                   "   உண்மையாவா,,எங்க  சாச்சாவுக்கும்  அப்துல்காதர் தான் பெயர்,,பாவம் அவங்க  இப்ப  புத்தளத்தில்  அகதி முகாமில இருக்காகா என்று  உம்மா சொல்லுவா "

                                               "  ஓம்,,யாழ்பாணத்தில்  இருந்து  இஸ்லாமிய மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது  நான்  அங்கேதான் இருந்தேன் "

                                             " அப்துல்  சாச்சா ,நல்ல வசதியா  இருந்திருக்கார்,,பெரிய கல் வீடு,,கடை,,எல்லாம் இருந்திசாம்  ஆனால்  வெளிகிடச் சொன்ன போது  ஒரு சொப்பிங் பாக்கோட  போக சொல்லி இருக்காங்க"

                                                  " ஓம்,,அப்படிதான்  நானும்  அறிந்தேன் "

                                          "   சரி வுடுங்க,,நமக்கு  அல்லா இருக்கான்,,அவன் சரிபிழை  பார்த்துக்குவான் , "

                                                  என்று சொன்னார் ரியாஸ்

                                            அதனால் அடுத்தநாள் பின்னேரம் ரியாஸ் சொன்ன அட்ரஸ் இக்குப் மட்டுமில்லை முதல் முதலா கிராண்ட்பாஸ் என்ற இடத்துக்கே இழுபட்டுப் போனேன், அன்று ரியாஸ் வேலைக்கு வரவில்லை,ஆனால் அவர் வீட்டு அட்ரஸ் , எடுக்கவேண்டிய பஸ் நம்பர்,இறங்க வேண்டிய பள்ளிவாசலடி எல்லாம் விபரமா ஒரு சின்னப் பேபரில் முதல் நாளே எழுதித் தந்திருதார்.

                                                      அவர் சொன்ன பள்ளிவாசலடியில் போய் இரைச்சலோடு இறங்கினேன். அவர் தந்த அட்ரஸ் வீரகேசரி பத்திரிகை அடிக்கும் பிரிண்டிங் அச்சகம் இருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு சின்ன கை ஒழுங்கை போல இருந்த இடத்துக்குள் இறங்க முதலே பின்னுக்கு வந்த மக்கள் என்னை முன்னுக்கு தள்ளிக்கொண்டு போனார்கள். பள்ளிவாசலுக்கு முன்னாள் பெரிய அண்டா வைச்சு அரிசி வடிசுக்கொண்டு இருந்தார்கள், பெரிய பெரிய ரப்பர் மரக் கட்டைகளைப் பிளந்து போட நெருப்பு ஜுவாலை விட்டுக் கிளம்பப், பல வறிய மக்கள் பாதை ஓரமாக வெத்திலை போட்டுக்கொண்டு குந்தி இருந்தார்கள்.

                                                   அந்த இடத்தில ரியாசைத் தேடினேன் அவர் இல்லை. ஒருவேளை கந்திரி கொடுக்கத் தொடங்கத்தான் வருவாரோ அல்லது ஒருவேளை என்னை முதலில் வீட்டில் சந்திக்க விரும்பினாரோ எண்டு ஜோசிதுப்போட்டு. வீதி தொடக்கத்தில் எழுதி இருந்த பெயர்களை வாசிக்க முயற்சிக்க, அந்த முடுக்கில் இருந்த சுவர்களில் ஒட்டி இருந்த சுபிட்சமான எதிர்காலத்துக்கு  வாக்குக் கொடுத்து வாக்கு சேகரிக்கும்  அரசியல் கட்சி ஒன்று தேர்தலில் வாக்குறுதி கொடுக்கும் வின்ஞாபன நோட்டிஸ்களை ஒரு மாடு சுவரில் இருந்து இழுத்து சுவாரசியமா திடுண்டுகொண்டு இருந்தது. முடிவில் ரியாஸ் தந்த அந்த சின்னப் பேபரை எடுத்து அருகில் இருந்த வீதியின் பெயர்களைப் பார்த்து தேடிய வீதியைப் பிடிச்சேன்.

                                                     அந்த சின்னப் பாதையின் ஆரம்பத்தில் சுலைமானியா என்று பெயர் போட்டு ஒரு முஸ்லிம் ஹோட்டல் இருந்தது. அதன் கண்ணாடி சோக்கேசில் வட்டிலப்பம் சின்ன சின்ன கிண்ணத்தில் வைச்சு,கலர் கலரா மஸ்கட் அடுக்கி ,முந்திரிப்பருப்பு போட்ட தொதல் பெரிதாக வைச்சு இருந்தார்கள்,கொஞ்சம் தள்ளிப்போக ஒரு டேயிலரின் கடை வந்தது அதில ரியாஸ் தந்த வீட்டு இலக்கத்தை தமிழில் கேட்டேன்,

                                       " சுருக்கெண்டு கொஞ்சம் பணியப் போங்க, ஒரு சின்ன முடக்கு வரும், வுடாம கொஞ்சம் நடந்து அங்கனய இருந்து வலது கையைப் புடியுங்க , செக்கால அபூபக்கர் பாறை வரும் அதில ரோஸ் கலர் வூட்டுக்கு இங்கிண்டு தண்ணித்தாங்கி கழிய மையத்தில இந்த நம்பர் சேர்ந்த வூடு பசுந்தா வரும் " என்று சொன்னார்கள்,

                                                     அந்த டியிலரிங் கடையில் பூவாளி மார்க் லுங்கிகள் முன்னுக்கு தொங்க விட்டு இருந்தார்கள், ஒரு வயதான நசருதீன் முல்லா போல இருந்த அய்யா ஒரு வயதான சிங்கர் தையல் மிஷினில் நிமிர்ந்து பார்க்காமல் இருந்து காலால் அமதிக்கொண்டு இருக்க ஒரு சின்னப் பையன் சேட்டுப் பொத்தான் தைத்துக்கொண்டு ரோட்டை விடுப்புப் பார்த்துக்கொண்டு இருந்தான், அந்த டேயிலரிங் கடை முதலாளி கழுத்தில அளவு நாடாவைப் போட்டுக்கொண்டு சோக் கட்டியால அங்கேயும் இங்கேயும் துணியில் கோடு இழுத்துக்கொண்டு இருந்தார்.

                                 ரியாசின் வீடுக்கு கிட்டக் கிட்டப் போக சன நடமாட்டம் கொஞ்சம் குறைந்து, ஒரு வயதான தாத்தா தலையில லேஞ்சியைக் கட்டிக்கொண்டு அவர் வைச்சு இருந்த சவ்வரிசிக் கஞ்சி விக்கிற வண்டிலின் அலுமினிய தட்டில் விரல்களால் தட்டிக்கொண்டு இருக்க ஒரு சிரங்கு வந்த நாய் சவ்வரிசி கஞ்சி வண்டிலைப் பார்த்துக்கொண்டு இருந்தது. . வேற மனித நடமாட்டம் அந்த இடத்தில இருக்கவில்லை.

                                       " இந்த நம்பர் சேர்ந்த வூடு பசுந்தா வரும் " என்று டெயிலர் சொன்னாலும் அபூபக்கர் வீதியில் அரை மணித்தியாலம் கிடந்தது அலைஞ்சேன் ..கடைசியில் முன்னுக்கு முற்றம் இறுக்கமான, சுவரோடு சுவர் உரசிக்கொண்டு நெருக்கமா சின்ன சின்ன வீட்டுகள் இருந்த இடத்தில அந்த இலக்கத்தைக் கண்டு பிடிச்சேன் .நல்ல காலம் .ரியாஸ் அவர்கள் வீட்டு வாசலில் நின்றார்.

                                        " வாங்க வாங்க எங்க வூடு பஞ்சிகாவத்தை கொரியா வூடு போல உங்களுக்கு சிலநேரம் இருக்கும், வாப்பா எங்களை வுட்டுப்போட்டு போன பின்னாடி  பெரிய றாசாத் நானா தான் இந்த வூட்டுக்கு எல்லாம் கொடுத்து எடுத்து தந்தார் , றாசாத் நானா இல்லைனா நாங்க இப்ப இதுவும் இல்லாமல் இருந்து இருப்போம்,நானா மவுத் ஆனா நேரம் நாங்க யாருமே அவருக்கு அருகில இருக்கலை " என்றார் ரியாஸ். .
                   
                         நான் ஒண்டும் சொல்லவில்லை ,ரியாஸ் இன் அண்ணா எப்படி  கல்முனையில் வைத்துக் கண்கள் கட்டப்பட்டு கடத்தப்பட்டுக்  கொல்லப்பட்டார் என்று அவர் ஏற்கனவே சொல்லி இருந்தார் 

                                   " இங்கேயே வூட்டில சாப்பிடுவம். உம்மா ஏனத்தில் கந்தூரி எடுத்து வைச்சு இரிக்கா, "

                          எண்டு அவரின் அம்மாவைக் கூப்பிட ஒரு வயதான அம்மா தலையை மூடிக்கொண்டு வந்து

                                " மகன் ,வேண்டிய மாதிரி போட்டு சாப்பிடுங்க ,"

                                "  ஓம் அம்மா ,,எனக்கு கந்திரி  சாப்பாடு நல்ல விருப்பம் அம்மா "

                      "  எங்கட வயலே கல்முனையில் இருந்தது,,இப்ப அங்கே போகமுடியாம அவனுகள் தடை போட்டு வைச்சு இருக்காங்க "

                                      "   ஹ்ம்ம்,அப்படியா ,"

                                     "  இல்லேன்னா நாங்க மூணுவேளை கஞ்சி குடிச்சாவது அங்கேயே இருந்து இருப்போம் "

                                           "   ஹ்ம்,,ஓம் அம்மா  சொந்த இடத்தில இருக்குமாப்போல ஒருநாளும் வராது அம்மா "

                                         "  என்னோட பெரிய மவன் மவுத் ஆனதில இருந்து அந்த ஊர்ல இருக்க பயம்,,அதான் ரியாஸையும் பாத்திமாவையும் கையோட கூட்டிக்கொண்டு இங்கே கொழும்பு வந்தோம் "

                                         " ஓம்,அம்மா  இப்பிடித்தான்  பலரோட நிலைமை இப்ப "

                                         " இப்ப ரியாஸ் சுருக்குப் பண்ணி சுருக்குப் பண்ணி டுபாய் போக நிக்குறான் ,,அவனும் போனா  நம்ம வாழ்க்கை கொஞ்சம் அல்லாடிப் போயிடும் போல இருக்கு,,ஆனாலும்  அல்லா  அவனை அனுப்பி வைக்கணும் என்னு நினைச்சா  நா  என்ன பண்ணமுடியும் ,,இல்லிங்களா மகன் "

                                       "  ஓம் அம்மா,,ஜோசிக்க வேண்டாம்,,அம்மா,,ரியாஸ் போறது  உங்களுக்கு பினான்சியலா சப்போட் ஆக இருக்குமெல்லோ "

                                  "  பாத்திமா வேற கடப்பு வருஷம் மட்டில்  மருதானை ஸாஹிரா கொலீஷில் படிச்சி முடிச்சி வூட்டோடவே இருக்கா ,,,அன்றாடம் காச்சி வடிக்கற செலவு நம்ம தலையை மீறிப் போகுது "

                                                        "      ஹ்ம்ம் "

                                     "   என் மகேன் உங்களை பற்றி சொல்லி இரிக்கான், நாமளும் அல்லல்ப்பாட்டு பாடி முன்னப்பாட்டு திரியாத இடமான இங்கே வந்தும் இன்னிக்குப் பாட்டு வரைக்கும் அந்தரிக்க வுடாம  அல்லா வைச்சிரிக்கான்  அவன் கருணையால் ஏதோ இருக்கோம் "
                                          என்று ஒரு பெரிய பாத்திரத்தில் சோறும்,ஒரு பித்தளைப் பாத்திரத்தில் சொதி போல குழம்ம்பும் கலந்த கறி இருக்க ,அவர்களின் அந்த சின்ன வீட்டில இருந்த சின்னக் குசினி வாசலில் செவ்வரளிப் பூப் போட்ட துணியில் தலையை மூடிக்கொண்டு ஒரு சின்னப்பெண் அவள் முழங் கைகளில் எதுவும் இல்லாமல் காப்புப் போல எதுவோ இருப்பது போல உள்ளங் கைகளை மாறி மாறித்  தடவிக்கொண்டு எழுதத் தொடங்காத ஒரு கவிதையின் கடைசி வரிகள் போல என்னைப் பார்த்தாள். அந்த பாஸ்மாதிப்  பார்வை மிச்சக் கதையை எழுத வைத்தது  .....

.....தொடரும் .............

.