Tuesday, 13 February 2018

பன்சாலை !

லங்காபுரியில் உள்ள ராகம என்ற நபெருநகரத்தில் உள்ள மஹாபாகே என்ற சிறு நகரத்தில் மார்கிட் உடன்  வசித்த சில வருட  காலத்தில் இயன்றளவு ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் நாங்கள் வசித்த வீட்டுக்கு அருகில் இருந்த பன்சாலைக்கு போவது.. அது ஒன்றுதான் பவுத்த மத வழிபாட்டுத் தலமான  பன்சாலைக்கு சிங்கள மக்கள் எப்படி அவர்களின் புனிதமான நாளை  புத்தபெருமான் காலடிகளில் தேமாப் பூக்கள் வைத்து வழிபடுகிறார்கள்  கொண்டாடுகிறார்கள் என்று  விடுப்புப் பார்க்கப்  போன அனுபவம்..

                                                                    மற்றப்படி ட்ரைனில் பஸ்ஸில் போகும் போது எப்போதுமே பன்சாலைகளை ஜன்னல் வழியாகக் கடப்பது அவளவுதான்.சிங்கள பகுதியில் வசித்தாலும், சிங்களம் பேசத்தெரிந்தாலும்   பஸ்ஸை விட்டு இறங்கி . ஒரு பன்சாலைக்குள் போவது என்பது ஒரு தமிழனாக தெரிந்துகொண்டே  பாம்புப் புத்துக்குள் கையை விட்டுத் துலாவிப் பார்ப்பது போன்ற ஆபத்துகள் இருந்தன .

                                                                        மஹாபாக்கேயில் அப்படி இல்லை. அதை விட மார்க்கிட் சுவிடீஷ் நாட்டு வெள்ளைப்பெண் . எங்கள் அயல் அட்டையில் என்னை ஒரு தமிழனாக இருக்க வேண்டும் என்ற சந்தேகங்கள் இருந்தபோதும், நாங்கள் இருவரும் ஒரு சுவிடீஷ் உதவி நிறுவனத்தில் அப்போது வேலை செய்தோம், அந்த நிறுவனத்தின் முழுமையான பயனாளிகள் அப்பகுதியில் வசித்த  மாற்றுத்திறனாளி  சிங்கள மக்கள். அதனால் படலையைத் தட்டித் துறக்காமல் உள்ளிடும்  ஒரு வித அங்கீகாரம் இருந்தது .

                                                    மகாபாகே போதிபுத்த பன்சாலை கம்பஹா நெடுஞ்சாலையில்  மீகமுவு நோக்கிப் போகும்  வீதியில் இருந்தது.,வயக்கெட்டு  வயதான  ஒரு அரசமரம், சின்ன ஒரு வெள்ளைத் தாதுகோபத் தூபியுடன் ஒரு பவுத்த கோவில், பவுத்த பிக்குகள் வசிக்கும் ஓடு போட்ட  சிறிய செங்கல்லு கட்டிடம் , அதுக்கு முன்னே கோடியில் பிக்குகள் அவர்களின் காவி உடையை அலசிக் காயப்போட்டு தொங்கவிட்ட இழைக்கயிற்றுக் கொடி,   அதைச் சுற்றி  செவ்வலரி  மரங்கள்,, சீமெந்தில செய்த  யானை  உருவச் சிலைகள், சுவர்களில் சிகிரியா குகை ஓவியப் பெண்கள் மஹாபரிநிர்வான  புத்தபெருமானுக்குச்  சாமரம் வீசும் ஓவியங்கள்.

                                                                  பவுர்ணமி அன்று நிறைய சிங்கள மக்கள் வெள்ளை உடுப்புகளோடு வந்து அரசமரத்தை சுற்றி இருப்பார்கள், பல வயதானவர்களே சின்ன வயது இளம்  பிக்குகளின் காலில் விழுந்து வணங்குவார்கள், கிரிபத் தானம் கொடுப்பார்கள், இடைவிடாத சாமபிராணி, ஊதுவத்தி புகை அந்த இடத்துக் காற்றில்  தெய்வீகம் இறங்கிவிடாதபடி அலைந்துகொண்டிருக்க, லவுட் ஸ்பீக்கரில் எப்பவுமே பிக்குகள்  பாளிமொழியில் மஹா மந்திரம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள், அது அருணாசலக்கவிராயரின் ராமநாம கீர்த்தனைகள் போலிருக்கும்.

                                                                         இதுதான் ஒரு பன்சாலைக்குள் போய் மவுனமாக இருந்து கவனித்த  அனுபவம், அது ஆத்ம விசாரணைகளுக்கு அப்போது  போதுமானதாக இருந்தது, வருடத்தில் வரும் ரெண்டு முக்கிய பவுர்ணமி நாட்களான  வெசாக் நாட்களில் கழனிய ராஜமஹாவிகாரையில்  சிறிய அளவிலான மாநுவரப்    பெரகர பார்த்ததும்  ,  மற்ற முக்கிய நாளான  போசன் நாட்களில் பேலியகொடை பாலத்தில் சோடனைகள் பார்த்து நவலோக பந்தலில் டான்சல் சாப்பிட்டது   போன்ற ஆடம்பரமான அனுபவங்களும் இருந்தது இது ரெண்டும் கொஞ்சம் கலகலப்பான  அனுபவி ராஜா அனுபவி வகை,

                                                                              இதெல்லாம்  நடந்த  சில வருடங்களின் பின் நானும் மார்கிட்டும் மறுபடியும்  சுவீடன் வந்து சில வருடங்களில்  பிரிந்து விட நான்  அயல்நாடான   நோர்வே போய் வசிக்க வேண்டுய பல குளறுபடியான நிலைமைகள் உருவானது, இப்புதும் போல நானே அதை உருவாக்கி எனக்கு நானே சூனியம் வைச்சேன். போனாலும் போனேன் நோர்வேக்கு  அங்கேயாவது வாலைச் சுருட்டி வைச்சுக்கொண்டு இருந்தேனா இல்லையே, அதனால அங்கிருந்து மறுபடி சுவீடனுக்கு நோர்வேக்காரனே குண்டியில உதைஞ்சு அனுப்பிபோட்டாங்கள்


பூட்டி வைச்ச நாடுக்கோட்டை   செட்டியார் அலுவல் இல்லாமல் எப்பவாவது ஆற்றுக்குள் இறங்கி இருக்கிறாரா ? இல்லையே ! அதுபோல  இனித்தான் முக்கியமான கதைக்குள் உங்களோடு இறங்கப்போறேன்  ,

                                                                       சுவீடன் வந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதமும் நான் தங்கி இருப்பது ஒரு விசித்திரமான இடம் . ஒரு பவுத்த பன்சாலையில் தங்கி இருக்கிறேன். பல வருடம் முன் அந்தப் பவுத்த கோவில் பிக்குவைத் தெரியும் என்பதால் எனக்கு இருக்க இடம் தந்தார் அந்த மகான். ஏறக்குறைய நானே எதிர்பார்க்காத ஒரு இடத்தில இருப்பது கஞ்சி கண்ட இடம் கைலாசம் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பதுபோல என் நிலைமைகளோடு அனுசரித்துப்போகுது

                                                                            ஆடு கொழுக்கிறதெல்லாம் இடையனுக்கு லாபம் போல ஒரு எழுத்தாளனுக்கு விந்தையான இடங்களும் விசித்திர மனிதர்களும் எப்பவுமே முக்கியம். பவுத்த பன்சாலையில் இவளவு நாளும் என் அனுபவம் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு விசயத்தையும் ஆர்வமாகக் கவனிக்கிறேன் . கதைகளுக்குள் தொடர் கதைகள், அவற்றை இணைக்கும் சிறுகதைகள், ஆன்மிகத்தை அன்றாட வாழ்க்கையோடு சமன்படுத்தும் கவிதைகள் என்று எழுத நிறையவே கச்சாய் சரக்கு கைவசம் கிடைக்குது .

                                                                                    பவுத்த பன்சாலையில் நான்கு பிக்குகள் இருக்கிறார்கள். மூன்று இளம் வயது பிக்குகள். ஒரு வயதான பிக்கு . அவர்தான் பன்னரத்தின வடடப்பன தேரர். கண்டியில் பிறந்தவர். முப்பது சொச்சம் வருடம் சுவீடனில் இருக்கிறார். அழகாக சுவீடிஷ் மொழி பேசுவார், பாளி மொழியில் MA டிகிரி செய்தவர் .தமிழ் மொழி வாசிக்க தெரிந்தவர் . எல்லாத்துக்கும் சிங்களத்தில் " ஹொந்தாய் ஹொந்தாய் " (மிகவும் நல்லது மிகவும் நல்லது ) என்று சிரித்துக்கொண்டு சொல்லுவார். பன்சாலைக்கு வந்த முதல் கிழமையில் மனஅழுத்ததில்

" வாழ்க்கைக்கு என்ன அர்த்தமென்று தெரியவில்லை  ஹாமத்துருவான்னே "

என்றேன். அதுக்குக்  " ஹொந்தாய் ஹொந்தாய் " என்று சொன்னார்


" வாழ்க்கை வெறுக்குது, நாடு நாடாய் விசர் நாய்போல அலைய விருப்பம் இல்லை ஹாமத்துருவான்னே "

என்றேன். அதுக்கும் " ஹொந்தாய் ஹொந்தாய் " என்று சொன்னார்.


" தட்கொலை செய்யும் உத்தேசத்தில் இருக்கிறேன் ஹாமத்துருவான்னே "

என்றேன். அதுக்கும் " ஹொந்தாய் ஹொந்தாய் " என்று சொன்னார்.

                                                                தூக்கி வாரிப் போட்டுது. அவர் நான் சொல்வதைக் கேட்டுத்தான் பதில் சொல்லுறாரா, அல்லது இதுதான் அவர் அணுகுமுறையா என்று தெரியாமல் குழம்ப , அவரும் திடுக்கிட்டு

" இப்ப என்னப்பா சொன்னாய், சொல்லு பா "

" தட்கொலை செய்யும் உத்தேசத்தில் இருக்கிறேன் ஹாமத்துருவான்னே " என்றேன்

                                                                         கொஞ்சம் ஜோசித்துப் போட்டு, தனக்கு முன்னால நாலு தப்படிகள் முன்னும்  பிறகு திரும்பி  பின்னும் நட பார்ப்பம் என்று கேட்டார் , நான் அன்ன நடை நடந்து காட்டினேன், என்ன என்னோட நடையில் கவனித்தாரோ தெரியவில்லை

"   ஓ.,,,,ஹ்ம்ம்,,, இப்ப சொல்ல விருப்பம் இல்லை,,சொல்லுறதும் எங்க  புத்தாகம வரன்முறைக்கும்   பிழை ,  பாரம்பரிய சிங்கள வைத்திய முறைக்கும் பிழை, அதனால   இரவுக்கு உன்னோட கதைக்கிறன் மகனே  "

                                                                                   என்று சொன்னார்.  இரவு எனக்கு அறிவுரை சொன்னார், அதில அதிகமாக சிங்க ஆயுர்வேதம் மருத்துமுறை இருந்தது, அவருக்கு " பரம்பாராவ கமே பேத்  வெத மாத்தைய  வைதிய சாசனய " என்ற   சிங்கள மருத்துவம் தெரியும் என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன்

பிக்குவின்  தபோவனப் பன்சாலை, ஸ்டோக்ஹோலாம் நகரத்துக்கு வெளியே பூட்சீர்க்கா  என்ற கிறித்தவ முனிசுபால்ட்டியின் நிர்வாகத்தில் உள்ள நகரத்தில்    ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏழாவது மாடியில் உள்ளது. ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட், .அதில் உள்ள பெரிய ஹாலை சிவப்பு நிறத் துருக்கி நாட்டுப் பருத்திக்  கம்பளங்களால் கந்தர்வக்  கோவில் போல அலங்கரித்து வைத்திருக்கிறார்கள் ,

                                                                   ஒரு சின்ன மேடை. அதிலேதான் தேரர் எப்போதும்  அத்வைதம் சொன்ன  ஆதிசங்கரர் போல   சம்மணம் கட்டிக்கொண்டு இருப்பார். அருகில் ஒரு    சின்ன அருவிபோல் ஒரு அமைப்பு செய்து அதிலிருந்து தண்ணி நதி போல ஓடி, சொர சொர என்று சந்தம் தவறாமல் சாரல் போலவே  விழும் சத்தம் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும் , அதுதவிர அந்த அப்பாட்மென்ட் காற்று அசைவது கூட கேட்க்காத அளவு  சுடுகாட்டு மயான அமைதி..

                                                             அடுத்தநாள் காலை தேரர், என்னைக் கூப்பிடு தனக்கு முன்னால இருதிப்போட்டு

" உன்னைப்போலவே இதுக்கு முதலும் மண்டை விராஸ் ஒருத்தன் வந்து நிண்டு கொண்டு தட்கொலை செய்யப்போறேன் எண்டு கொண்டு நாண்டுகொண்டு நிண்டான் ",

"அவனுக்கு என்ன அட்வைஸ் சொன்னிங்க ஹாமத்துருவான்னே "

" போய் பால்கனியில் இருந்து குதி என்று சொன்னேன் அவன் பால்கனியில் போய் எட்டிப்பார்த்துப் போட்டு வந்து "

" அடக் கடவுளே அப்பிடி சொல்லலாமா,,அவனுக்கு என்ன என்ன உயிர் போற பிரச்சினையோ ஹாமத்துருவான்னே "

" நீ வேற,, அவன் உச வடி நே ஹாமத்துருவான்னே (ஏழாம் மாடி உயரம் அதிகம் பவுத்த பிக்குவே ) என்று சொன்னான். அவனுக்கு போய் வாழுற வேலைய பார் என்று சொன்னேன். இப்ப அவன் கலியாணம் கட்டி நல்லா இருக்கிறான் "

                                                                      நீயாகவே சாகிறதை புத்தசமயம் எதிர்க்கிறது, அது மறுபிறப்பை நம்புகிறது என்று எனக்கு அட்வைஸ் சொன்னார் பன்னரத்தின வடடப்பன தேரர்.

நகைச்சுவையை நாமெல்லாம் ரசிக்கிறோம். அது எந்த இடத்திலும் எப்போதும் நிகழலாம்.   கமக்கட்டில கையை வைச்சு நோண்டி கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறதுபோல பலர் எழுவதை உங்களைப்போல நானும் வாசித்து அப்பப்ப நடு மண்டையை சொறிஞ்சு இருக்கிறேன்.

                                                            ஆனால்    பிக்கு  பயங்கரமாகக் காமடி கதைப்பார். நாமெல்லாம்  பிச்சை எடுக்க வேண்டும் அவரின் டைமிங் ஜோக் உடன் ஒப்பிடும் போது .எனக்கு சிங்களம் தெரியும் என்பதால் நான் ஒரு தமிழன் போல அங்கெ யாரும் நினைப்பதில்லை.

                                                                          பன்சாலையில் எப்படியும் ஒவ்வொருநாளும் ஒரு சாப்பாடு நான் சமைக்க வேண்டும், அது அவர்களின் அன்பு வேண்டுகோள் ,அதனால் ஒருநாள் ஸ்ரீலங்கா ஸ்டைலில் மைசூர் பருப்பு சமைத்துக் கொண்டிருந்தேன் , பன்னரத்தின வடடப்பன தேரர் அருகில் வந்து

" பொடிக்கால ஹோமத ஜீவித்தாயே உக்கலாங்கே யாப்பனே பத்த "( சின்ன வயசில் எப்படி வாழ்க்கை உன் யாழ்ப்பாணத்தில் )

                                                           என்று கேடடார் , என்னோட வாழக்கையில் பல விசயங்களை சின்ன விசயங்களை இழந்தேன், என்னோட அப்பா சின்ன வயசில் இறந்துவிடடர் , அதைச் சொல்ல

" கொடாக் மிஸ்ஸுன்னானே ஹமாதுருவான்னே," ( நிறைய விசயங்களை இழந்தேன் பவுத்தபிக்கு )

என்று சொன்னேன் , அவர் டக்கென்று, அதைக் காமடியாக்கி

" பருப்புத? ," (,பருப்பா ? )

                                                            என்று நான் என்னவோ சின்ன வயசில் பருப்பு தின்னக்கிடைக்காமல் மிஸ் பண்ணியது போல கேட்டார் , அவரின் டைமிங் காமடியை நினைச்சு அன்று இரவு முழுதும் சிரிச்சே வீணாப்போனேன்.

 எனக்கு நவுசாத்  என்ற ஒரு நண்பர் இருந்தார் பலவருடம் முன்..அவருக்கு பிக்கு நல்ல பழக்கம், சிரித்து சிரித்து ரெண்டு பேரும் இன  மத அடையாளங்கள் மறந்து மனிதர்களாக மனம் விட்டுக்   கதைப்பார்கள்., அது எனக்கு நல்ல நினைவு இருந்தது.     இன்னொருமுறை அவருக்கு இந்தப் பன்சாலைக்கு நவுசாத் என்ற இஸ்லாமிய நண்பருடன் பலவருடம் முன்னம் வந்திருக்கிறேன் என்று சொன்னேன்

" எந்த நவுசாத்,,நினைவில்லை,,எப்போது "

" நவுசாத்,  இலங்கையில் ,ஏறாவூர்,,மட்டக் களப்பு ,,தெரியுமா "

" அவ்..அவ்... ஓம்,,,தெரியும்,,இப்ப நினைவு வருகுது  ,,ஆள் இப்ப எங்க,,தொடர்பே இல்லை "

" ஓம்,, அவர் இப்ப இந்தியாவில மனுசியுடன் போய் நிக்குறார்,,"

  " ஓ அப்படியா,,என்ன விசேஷம், மொக்கத்த ஹேதுவ ?

" கனகாலம் கலியாணம் கட்டி ,,பிள்ளைகள்  இல்லை "

 " அத்தத,   ஓ அதுக்கு ,,எதுக்கு இந்தியாவுக்கு "

" அங்கே  போய் நிண்டு நிறையக் காசு செலவழித்து பிள்ளை உருவாக்க  வயித்தியம் செய்யுறார்"

 " ஏ மத,    அட,,அதுக்கு,,எதுக்கு  இந்தியா , என்னிடம் வந்திருக்கலாமே "

" என்னது,,ஹாம்துருவான்னே "

" என்னது  என்றா  என்ன,?  என்னிடம் கைவசம் எல்லாம்  இருக்கே ,நான் வேலையைக் கொடுத்து இருப்பனே
 (தடபட கால வட தெண்ட புளுவாங்   மங்காவ வட தியானவனே ,)

" என்னது,,ஹாம்துருவான்னே இப்பிடி சொல்லுறீங்க "

" எனக்கு தெரியுமே அதுக்கு எங்க என்ன  செய்யவேணும் எண்டு , மட்ட புளுவாங் "


 " அட ராமா   என்னது,,ஹாம்துருவான்னே இப்பிடி சொல்லுறீங்க "

" இப்ப நீ எதுக்கு பதறியடிச்சு குளம்புறாய் , என்னவும் டபுள் மீனிங் இல் சொல்லுறேன் என்றுதானே நினைக்கிறாய் "

" ஹஹஹஹ,, அப்படித்தான் "

" நினைச்சேன்,உன்  சத்துவ குண மனது அப்படி கலவரமாக இருக்கு,ஏன் அப்படி நினைத்தாய் ,,சொல்லு ,,"


" எங்களின் சமயத் துறவிகளின் மடாலயங்களில் நடக்கும் லீலைகள் அடிக்கடி செய்திகளாக இப்பெல்லாம் வருவதால் மூளை அந்தப்பக்கமாகவே ஜோசித்தது  "

" அப்படியா,,எல்லாத் துறவிகளும் புனிதர்கள் இல்லைதான்,,அதுக்காக துறவிகள் எல்லாருமே நல்நடத்தை இல்லாதவர்கள் என்று நினைப்பது தவறுப்பா "

" ஹ்ம்ம்.."

" நான் சொன்னது  என்னிடம் மருந்து இருக்கு எண்டுபா..சும்மா , மனம் போன போக்கிலே அலையாதே "

                                                                   என்று சிரிச்சுக்கொண்டு சொன்னார். ஆனால் இதுக்குள்ளே உள்ள காமடி ஒருவேளை அவரின் பிளாக் ஹியூமர் வகைக்  காமடியாகவு இருக்கலாம்.

தேரருக்கு சிங்கள மரபு ஆயுள்வேத மருத்தவம் மட்டுமில்லை, அவருக்கு பருப்பு தானிய வகைகளில் உள்ள புரோட்டின் சத்துக்கள் பற்றியும்,,அவை சார்ந்த உணவுகள் விதம் விதமாக  சமைப்பது பற்றியும் நிறையவே தெரியும் என்பதையும் பலமுறை பார்த்திருக்கிறேன். பன்சாலையில்  பகல் உணவு எப்பவுமே அவித்த பொட்டுக் கடலைகள்,துவரம்  தானியங்கள், பாசிப் பருப்புகள் குத்தரிசி சோறுடன் சின்னப்பிக்குகள் சமைப்பார்கள்.முன்னர் காலையில் இலைக்கஞ்சி செய்வதாகவும் இப்ப  இயறகை உரம் போட்டு வளர்க்கும் இலைகள் கிடைப்பது அரிதாகிவிட்டதால் அதை நிறுத்தி விட்ட்தாகவும் சொன்னார்..

                                                                            நான் சமையல்காரன் ஆகவே பல வருடம்  வேலை செய்திருக்கிறேன் என்று சொல்லி இருந்தேனா  ஒருநாள் என்னை சமையலில் கைவேலையாக  உதவும்படி கேட்டார் ,கொஞ்சம் இஞ்சிக்கிழங்குகள் தந்து அதன் தோலை உரிக்கும்படி கேட்டார், நான் ஏனோ தானோ என்று மேக்கப் போடுற  பெண்கள்  பவுண்டேசன் கிறீம்  நோகாமல் முகத்தில தடவுற மாதிரி கத்தியால் சுரண்டிக்கொண்டு இருந்தேன், இஞ்சித்தோல் முழுமையாக பல கிழங்குகளில் அகற்றப்படவில்லை , அதைப் பார்த்துப்போட்டு ,

" உனக்கு மரக்கறிகளும் கூட  எப்படி உடல் நலத்தைப் பாதிக்கும் என்று சொல்லும்  ஒரு முதுமொழி தெரியுமா "

                                                                       என்று சிங்களத்தில் கேட்டார், இலக்கண மொழியாடலில் வரும் தரமான வார்த்தைப் பிரஜோகங்கள் உள்ள எழுத்துமொழிச்  சிங்களம் அந்தளவு எனக்கு விளங்காது, என்றாலும் என்ன சொல்லுறார், விளங்காட்டி திருப்பிக் கேப்பம்  என்று ஜோசித்துப்போட்டு   தெரியாது என்று சிங்களத்தில்  சொன்னேன்  .அவர்  தடுமாற்றம் இல்லாத தமிழில்

" இஞ்சிக்குத் தோலும், கடுக்காய்க்கு விதையும் நஞ்சு என்று சொல்லுவார்கள் "

" அப்படியா,,இது எனக்கு தெரியவே தெரியாது, ஹமதுருவான்னே, அதுவும் தமிழில் சொல்லி இந்த ஆலமரத்தையே  அசத்திப்  போட்டிங்களே  "

" உனக்கு இல்லை பலருக்கும் தெரியாது "

                                                                            என்று மறுபடியும் சிங்களத்தில் சொன்னார் . அவர் தமிழில் பழமொழிபோல சொன்னது ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு தமிழ்மொழி தெரியும் என்பது எனக்கு சந்தோசமாய் இருந்தது. மனுஷன் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் போல இருக்கவேண்டும் என்று நினைச்சது உண்மைதான். அதை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருந்தார்.

இரவு நிறையப் பருப்பு வகைகள்  எடுத்து ஒரு வெள்ளிப்  பாத்திரத்தில் குளிர் நீரை நிரப்பி  உறவைச்சார், நாளைக்கு காலை இதுக்கு வேலை கொடுக்க போறேன் என்றார்,ஏதாவது சிங்கள சாப்பாட்டுக்கு எடுப்பு எடுக்கிறார் என்றுதான் நினைச்சேன் .  ஆவர்க்கோளாறில்  என்ன சமைக்கப் போறீங்க என்று கேட்டு தொலைச்சிட்டேன்

" சீராளம் "

" அப்படி என்றால் என்ன ,,சிங்கள சாப்பாடா "

" இல்லைப்பா,,இதுவும், உக்கலாங்கே  தெமிளு மினிசு ,  உங்கட ஆட்களின் சாப்பாடுதான்பா "

" நான் கேள்விப்பட்டதே இல்லையே,,ஹமதுருவான்னே "

" ஹ்ம்ம்,,இப்பெல்லாம் இப்படியான  புரதச் சத்துள்ள உணவுகளை யாரும் சமைப்பதில்லைப்பா ,"


" கேரளா  மலையாளிகளின் உணவு போல இருக்கலாமா

" இல்லைப்பா,,,,இது அஹ்ரகாஹரா சமையல் பா"

" அப்படி  என்றால் "

" பிராமணர்கள் என்று இருக்கிறார்களே ,,அவர்கள் சமைப்பதுப்பா "

" அது உங்களுக்கு எப்படி தெரியும் ஹமதுருவான்னே "

 " பழமையான சமையல் குறிப்புகள் வாசிப்பது எனக்கு மிகவும் விருப்பம்பா "

" இது எப்படி இருக்கும் "

" சொல்லப்பட்ட மாதிரி இருக்கும் , நாலுவகைப் பருப்பு உறவைச்சு செய்வதுப்பா"

" ஓ அவ்வளவுதானா "

" இல்லைப்பா, ரவை, வெள்ளை அரிசி அதுவும் சேர்த்து அரைக்க வேணும் "

" என்னமாதிரியான பதத்தில் அரைக்க வேண்டும் ஹமதுருவான்னே "

 " உக்கலாங்கே  தெமிளு மினிசு , உங்க  தமிழ் ஆட்கள்  ஆனந்தபவான் ஹோட்டலில மசாலாவாடை அரைப்பான்களே அந்த பதத்தில்   அரைச்சு  செய்யலாம்,"

" வாவ்,,எப்படி அரைச்சதை வைச்சு என்ன செய்விங்க"

"  உக்கலாங்கே  தெமிளு மினிசு ,உங்க தமிழ் ஆட்கள் கோமதிவிலாஸில தோசை வார்ப்பார்கள் இல்லையா,,அதுபோல சின்ன சின்ன தோசை போல   "

                                                                                      " உக்கலாங்கே  தெமிளு மினிசு ,  உக்கலாங்கே  தெமிளு மினிசு ( உங்க  தமிழ் ஆட்கள்,   உங்க  தமிழ் ஆட்கள் ) ," , என்று அவர்  சிங்களத்தில் சிரிச்சு சிரிச்சு சொல்லிக்கொண்டு இருந்தது கலகலப்பாக இருந்தது. சிங்களம் ஒருவிதமான கலகலப்பு மொழி அதில யாரையும் மட்டம் தட்டிக் கதைத்தால் கோபம் வராது பதிலாக கலகலப்புதான் வரும்.   காலையில் பிக்குவே அதை செய்து எனக்கும்  ரெண்டு சீராளம் வைச்சு இருந்தார் .

அந்த நாட்களில் மனஅலைச்சலிலும்,,நிறைய இடங்கள் நடந்த கால் அலைச்சலிலும்  இரவு தூங்கும் போது கர்ண கொடூரமாகப் போர்ப்பறை   டமாரம் அடிச்சு ஊரையே எழுப்பிற மாதிரி  மாதிரி   நான் குறட்டை விட்டு இருக்கிறேன். அங்கே தங்கி இருந்த வேறு இரண்டு மனிதர்கள், இரவு நித்திரை குழம்பி பிக்குவிடம் முறையிட்டு இருக்கிறார்கள்., பிக்கு அவரோட நித்திரையில் இருந்து  எழும்பி வந்து என்னை வலது இடது பக்கமாக புரட்டி விட்டு இருக்கிறார், எனக்கு அது நித்திரையில் தெரியாது  காலையில்

" என்னப்பா,மான்   வேட்டைக்குப் போட்டு வந்து படுத்த  சிங்கம் போல குறட்டை விடுகிறாய்,,இரவு  குதிகாலில் தண்ணிச் சீலை பிழிஞ்சு துடைச்சு மூன்றுதரம் ஒருக்கழிச்சு  பிரட்டிச்  சரிச்சு விட்டேன் தெரியுமா "

என்று  சிரித்துக்கொண்டு சொன்னார், அவரைப்பார்க்க என்னோட அப்பா போலவே இருந்தார் அந்த நேரம். ,

.என்னோட நோக்கம் பன்சாலையில் இருப்பதில்லை. என்னை இந்த நாட்டில் சில விடயங்களில் சுவிடீஷ் அரசாங்கத்துக்கு " என்னையும் கவனியுங்கப்பா புண்ணியமாப் போகும் " என்று ஒவ்வொருநாளும் கிச்சு கிச்சு மூட்டி அலுப்புக் கொடுத்து என் வாழ்க்கையை இஸ்திரப்படுத்தும் வரையில் இந்த இடம் தூக்கனாங் குருவியின் மழைக்கால அடைக்கலம் போல இருக்கு.


அங்கு ஆரோக்கியமான இளம்வயது பிக்குகள் இருந்தாலும்,  சமயலறையை அவரே கழுவி துடைப்பார்.  சப்பிட்ட பீங்கான்களை அவர் மிக மிக நேர்த்தியாக கழுவி அடுக்குவார். காவி வேட்டியைத்  தெருச்சண்டியர்கள் போல  மடிச்சுக்கட்டிக்கொண்டு ஒவ்வொரு ஜன்னலையும் சின்ன துணியில் தொற்றுநீக்கி  மருந்து கலந்த தண்ணியில் தோய்த்து அங்குலம் அங்குலமாகப் பார்த்துப் பார்த்து துடைப்பார், நிலத்துக்கு வக்கும்கிளீனர் பிடிப்பார்,  ஒருநாள் நானே கேட்டேன்

" ஏன் ஹமதுருவான்னே நீங்க இப்படி முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்யுறீங்க, அதுவும் இந்த வயசில  "

" இதில என்ன சந்தேகம் "

" பிக்குகள் இப்படி கஷ்ட்டப்பட்டு வேலை செய்வார்களா "

" செய்வார்கள்,  செய்ய வேண்டும்,,கவுதம புத்தாவே சொல்லி இருக்கிறார் "

" நான் நினைச்சேன் பிக்குகள் என்றால் எப்பவும்  தியானம் போலத்  தவம் செய்துகொண்டு இருப்பார்கள் என்று"

" இதுவும் தவம் தானப்பா  "

" அப்படியா "

" ஆமாப்பா ஒரு துறவியாக வாழ்வதே தவம்தான் பா "

" ராத்திரி நீங்கள் எல்லாரும் சாப்பிட்ட பிறகு மிஞ்சி இருந்த கொஞ்ச உணவை சாப்பிட்டிங்க, அதை நான் கவனித்தேன்,,ஆனால் அந்த உணவு பழுதடைந்தது போல வாசம் வந்ததே "

" இருக்கலாம்,, உணவை எறியக்கூடாது. உனக்கு ஒரு சம்பவம் தெரியுமா "

" சொல்லுங்க "

" கவுதம புத்தா அவர் இறக்கும் முன் கடைசியாக ஒரு ஏழையிடம் இரசித்து உணவுவேண்டி சாப்பிட்டார் , அந்த ஏழை கொடுத்த உணவு பழுதடைந்து இருந்தது, அந்த ஏழையிடம் வேறு உணவு இல்லை, இரசித்த பழுதடைந்த உணவை அவர் அப்படியே உண்டார்."

" ஓ,,அதனாலதான் ,,பூட்இன்பெக்சன் வந்து இறந்தாரா "

" இல்லப்பா, அவர் இறக்கும் நேரம் அவருக்கு தெரியும். அவர் இறக்கவில்லை, குஷி நகரில்  இயற்கையாக போதி அரசமரத்தின் கீழே பரிநிர்வாணம் அடைந்தார் "

" ஹ்ம்ம் "

  " அவர் மோட்ஷமாகிக்கொண்டிருக்க அந்த அரசமரத்திலிருந்து விழுந்து உதிர்ந்த சருகுகள் பழையபடி பச்சை இலைகளாக மாறிக்கொண்டிருந்தன,,"

                                                                                  என்று சொல்லிப்போட்டு ஒரு அலுமினிய ஏணியை இழுத்து அதிலேறி ஜன்னல்களில் மேல் விளிம்புகளைத் துடைக்கத் தொடங்கி விட்டார்


 பன்சாலையில் எப்பவுமே சில சட்டதிட்டங்கள் இருக்கு. கொஞ்சம் கடுமையான நடைமுறை அது. காலையில் ஆறுமணிக்கு எழும்பவேண்டும். இரவு ஏழு மணிக்குப் பிறகு சத்தம்போட்டு கதைக்க முடியாது. டெலிபோன் பேச முடியாது. பகல் முழுவதும் நாலு வேளை " சம்மா சாம்பூதிஸ்ஸ சம்மா சாமலோகய.." என்று பாவனா, போதிபூசை என்று மந்திரம் சொல்லுவார்கள் .கேட்க அருமையாக இருக்கும்.

                                                                           " ஒளியின் வழியில் போதிசத்துவ புத்ததர்மா " என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆன்மிகம் எப்பவுமே எனக்கு ஒரு அடங்காத ஆசையாக ஆத்மாவின் ஒரு ஓரத்தில் இருப்பது பன்னரத்தின வடடப்பன தேரருக்குத் தெரியும் .எப்படித் தெரியும்? ,,அதுதானே நானே எப்பவும் குறுக்கமறுக்க தண்டவாளம் போட்டமாதிரி அவரிடம் பல கேள்விகள் கேட்பேன். அமைதியாக ஆழமாக விளக்கம் சொல்லுவார்.

                                                                             அடிப்படையில் நான் ஒரு " மோடோர்ன் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் அறிவியல் " அஸ்கு பிஸ்க்கு ஆர்வக்கோளாறு. அதனால் என் கேள்விகள் எப்பவுமே புளியைக் கரைக்கும் வில்லங்கமாக இருக்கும் .பன்னரத்தின வடடப்பன தேரர் இப்படியான என்னைப்போல அரைகுறை அவியல்களின் கூத்தாடி கிழக்கே பார்த்தான் கூலிக்காரன் மேற்கே பார்த்தான் போன்ற கேள்விகளில் திணறுவதில்லை. அவரின் உலகம் சூரியன் போல பிரகாசமானது

                                                                                          என் பாதைகள் எங்கே போகும் எப்படிப் போகும் என்று இன்னும் சில வாரங்களில் தெரியவரும். அதுவரையில் பண்சாலையில் இருக்கப்போறேன். எனக்கு இந்த இடம் பிடித்து இருக்கு. மனதை வெறுமை வெளியாக்கும் முயட்சிகளில் அது மிகவும் பிரயாசையுடன் ஒத்துழைக்குது.`இங்கிருந்து போவதே ஒட்டைக்கூதன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள் போட்டது போல முடியுமோ என்று கவலையாக இருக்கு. பன்னரத்தின வடடப்பன தேரரும் பல நேரம் அவருடன் நான் செய்யும் உரையாடலின் முடிவில்,

" ஏன்பா ,,உன் நன்மைக்குத்தான் சொல்லுறேன் "

" சொல்லுங்க ஹாமத்துருவான்னே ."

" நீ நம்ம ஆளுப்பா,, பேசாம எங்களோடு வந்திருப்பா,"

" என்னது  சொல்லுறீங்கோ  ஹாமத்துருவான்னே ."

" இந்த உலகத்தில் ஆசை அதிகமாகத்தான் துன்பங்கள் அதிகம் ஆகும் , உன்னிடம் ஒருவித ஆன்மிக இருள் இருக்கு, "

"??????????????????????? "

" கவுதமபுத்தரின் போதனைகள் உன்னை மஹாபரிநிர்வான நிலைக்கு கொண்டு வரும்,"


"   ஹாமத்துருவான்னே "

" ஏன்பா ,,உன் நன்மைக்கு உண்மையாத்தான் சொல்லுறன்.."

" சொல்லுங்க ஹாமத்துருவான்னே ."

" நீ நம்ம ஆளுப்பா,, ஏன்பா , பேசாம எங்களோடு வந்திருப்பா,, பிறகு எல்லாமே உனக்கு ஹொந்தாய் ஹொந்தாய் தான் "

என்று சொல்லுவார். சிலநேரம் ஜோசிப்பது மொட்டையப் போட்டு மஞ்சள் காவியச் சுத்திக்கொண்டு பனை ஓலை விசிறியை விசிக்கிக்கொண்டு " புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி " என்று பாவனா போதிபூயை மந்திரம் சொல்லிக்கொண்டு பெயரையும் நாவுக்கண்ண அரசண்ண தேரர் என்று மாற்றிக்கொண்டு ஒரு மார்க்கமாய் போயிரலாமோ என்று.

                                                                       "   ஹ்ம்ம்,, போகலாம் தான் ,பிறகு ,குதிரை குருடானாலும் , கொள்ளு தின்கிறதில் குறையா போல எனக்கு இன்டர்நெட் வலை முழுவதும் உயிரைக் கொடுக்கும் அன்பு நெஞ்சங்கள் அதிகம் . அந்தப் பேஸ்புக் இளமை இதயராணிகள் நொந்துபோவார்களே. அதால அந்தத் திட்டத்தை முடிந்தால் வயசானபிறகு பார்க்கலாம் என்று விட்டு வைச்சு இருக்கிறேன் "

                                                                             இப்படித்தான் அவருக்கு சொல்ல நினைசேன், ஆனால் சொல்லவில்லை,, அனால் என் முகத்திலதானே வீணாப்போனவன் என்பது எழுதி ஒட்டி இருக்கே, அதை பிக்கு நிச்சயம் வாசித்திருப்பார்.


சில வாரங்களில் நான் பன்சாலையை விட்டு வெளியே வேறு இடத்துக்கு போய் விட்டேன். பல சமயம் நினைப்பது ஒருமுறை போகவேண்டும் என்று ஆனாலும் ஏறக்குறைய ஒருவருடமா அந்தப் பக்கமே போகவில்லை. சில வாரங்களின் முன் பிக்குவை ஒரு பாதையில் சந்தித்தேன்.

                                                            நான் சிகரெட் பத்திக்கொண்டு இருந்தேன், அவரைக் கண்டவுடனே அதைக் காலுக்கு போட்டு மிதிச்சிட்டேன். ஆனால் கொஞ்சம் புகை என் மூக்கிலே இருந்து ஷண்டிங் எஞ்சின் போல வெளியவந்தது . பிக்கு அதைக் கவனித்தார், சிரித்தார். ரெண்டு தோளிலும் துணிப் பையில நிறைய மரக்கறிகள் வேண்டி டைந்து கொண்டு உறைபனி சறுக்கும் பாதையில் நடக்கமுடியாமல் தடுமாறி நடந்துகொண்டு வந்தார். என்னை அடையாளம் கண்டு சுகம் விசாரித்தார்,

" கேள்வி கேட்ட்டே என்னைத் துளைத்து எடுத்தவனே,,ஏன்பா,,  பன்சாலைக்கு ஒருமுறையேனும் வரவேண்டும் என்று தோன்றவில்லையா "


                                                                      என்று கேட்டார். நான் அவரோட ரெண்டு மரக்கறி பாக்குகளையும் வேண்டி அவருக்கு உதவிசெய்ய நினைத்தேன், அதனால கேட்ட்டேன் . அவர் மறுத்துவிட்டார் . இதுவும் தவம்தான் என்று சொல்லிப்போட்டு, மனதை சுத்தமாக வைத்திரு எல்லாம் நல்லபடியே நடக்கும் என்று சொல்லிப்போட்டு பனிப்பாதையில் மெல்ல தாண்டி தாண்டி நடந்துபோனார்,

                                                         இவர் துறவியா ?, கடவுளா ? , மதபோதகரா? சீர்திருத்தவாதியா ? நடைமுறைவாதியா ? ஆஸ்திகரா ? ஆன்மிகவாதியா ? என்று ஜோசித்துக்கொண்டு நின்றேன். பணிபுகாருக்குள் பிக்கு மறைந்துவிட்டார். என் ஆத்மா மனதோடு கேட்ட கேள்விக்கான விடையை ஒரு பறவையின் கடைசிப் பறப்பில் சிறகுகளின் பாரம் எப்படி அந்தப்பறவைக்கு ஓய்வாகுமோ அதுபோல   இலகுவாக வந்தடைந்தது 

                                                                   மனிதன் !