Saturday, 26 September 2015

குளம் விழுங்கிய கதை .

எங்கள் எல்லார் வாழ்க்கையிலும் விதி அதன் கடைசி வரியை முடிவில் எழுதினாலும்,சிலரோட விடை பெறுதல் எதிர் பாராத நேரத்தில் எதிர் பாராத இடத்தில நடக்கத்தான் செய்கிறது. எங்களின் குளத்தடி குளப்படிக் குரூப்பில் எங்கள் எல்லாரிலும் மிகவும் உற்சாகமா வாழ்கையின் எதிர்கால கனவுகளைக் கலர் கலராக் கண்டு கொண்டு இருந்த ஜெகதீஸ் என்ற ஜெகதீஸ்வரனின் கதை சில அத்தியாங்களுடன், எங்களின் இளம் வாழ்கையில் அற்புதங்கள் அள்ளி எறிந்த குளத்திலேயே திருக்கார்த்திகை விளக்கீட்டு நாளன்று  முடிந்தது. அதை விட முக்கியத்துவமா  நினைவுகளின் நாட்குறிப்பில் அழைக்க விரும்பாத ஒரு அவலத்தின் அபத்த வரலாறாய் அதை விதி எழுத வைத்தது.

                                         ஜெகதீஸ் தான் எங்கள் குளத்தடி கிரிகட் டீமில் இருந்த ஸ்டார் ப்ளேயர், மேற்கு இந்திய தீவின் கிரிகெட் கறுவல் விளாசல் மன்னன்கள் போல விளையாடுவான். அவர்கள் போலவே உயரமா, கருப்பா இருப்பான், ஒடுங்கிய முகமும் சுருள் முடியும் அவர்கள் போலவே இருக்கும். 

                                         குளத்தடி வயல்வெளிக் கிரவுண்டில முழங்கையை ரப்பர் போல வளைத்து பெட் பிடிச்சு நாலு பக்கமும் சுழட்டுவான். அவனிட்ட சரியா அம்பிட்ட பந்து கதறிக் கதறித் தான் எல்லைக் கோட்டைத் தாண்டி,சிலநேரம் நடு குளத்துக்க விழும்,அல்லது வெள்ளைச் சொண்டன் வீட்டு விளாத்தி மரதுக்கால பிச்சுக் கொண்டு போய் தகரக்  குசினிக்கு மேலால தாளம் போட்டுப்  பறக்கும், அல்லது தெய்வேந்திரத்திண்ட பண்டிகள் நின்று உருளுற கொட்டகையின் கூரையைப் பிய்துக்கொண்டு போய் வயிரவர் வழவில விழும்.

                                   அவன் விளையாட வந்தால்த்தான் நாங்களே முக்கியமான பல கிரிகெட் டீம்களுடன் விளையாடவே சம்மதிப்போம், அந்த முக்கியம்னா டீம் களுடன் நாங்க ஒரு நாளுமே வெண்டதில்லை,ஆனால் ஜெகதீஸ் விளையாடிய எல்லா மச் இலும் நாங்க வேட்டி அவிண்டு விழுந்த மாதிரிக் கேவலப்படாமல் அரும்பட்டில தான் தோத்து இருக்கிறோம், அதனாலதான் அவன்  எங்கள் குளத்தடி கிரிகட் டீமில்  ஸ்டார் ப்ளேயர் அதால் அவன் வந்தால் மட்டும் விளையாட சம்மதிப்பது.

                                  குளத்தடி வயல்வெளிக் கிரவுண்டில  இருந்து கிழக்குப் பக்கம், நாவல் மரத்தோட போற கிடுகு வேலி வரிச்சு வைச்சுப் பிடிச்சு கட்டிய தவமணி அக்காவின் மேட்டுக் காணிக்கு கொஞ்சம் தள்ளி, இப்பில் இப்பில் மரங்கள் சரிந்து விழுந்து வேலியை சரிச்சு விழுதும் உடையார் வளவோடு சேர்ந்தால் போல , தெய்வேந்திரதிண்ட பண்டிகள் குறுக்க மறுக்க ஓடியும் ,அவைகளை கவனிக்காமல் பனை வடலிகள் சின்னப் பிள்ளைகள் போல அடக்கமா வளரும் காணிக்கு, தெற்க்குப் பக்கம் மதியாபரணம் டீச்சர் வீட்டுக் குசினியில் இருந்து வழியும் தாவாரத் தண்ணி வழிந்து ஓடும் ,விளாத்தி  ஒழுங்கை என்ற கை ஒழுங்கையில தான் ஜெகதீஸ் வீடு இருந்தது.

                          அவனோட வீட்டுக்க பக்கத்தில தான் நொள்ளைக்கண்ணா என்ற வாக்குக் கண்ணால பார்க்கும் சின்னக் கண்ணாவும்,  ஐஸ்பழம் என்ற மணிவாசகன் என்ற இன்னும் இரண்டு குரூப் மெம்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அவளவு முக்கியம் இல்லாத சோத்திகள் என்பதால்,ஜெகதீஸ் வீடு தான், குளத்துக்கு அந்தப்பக்கமும்,  வயல் வெளிக்கு இந்தப் பக்கமும், உங்களுக்கு உண்மையைச் சொன்னாலென்ன, எங்கட ஊரின் தாவணி போட்ட ,முகமெல்லாம் மாவிளக்குக் கோலம் போட்ட பெட்டைக்களின் ரகசிய இதயத்திலும்  பேமஸ் ஆக இருந்தது...... 

                                   ஜெகதீசுக்கு எங்கள் குரூ இப்பில் எல்லாரையும் பிடிக்கும் ,ஒருவனை மட்டும் பிடிக்கவே பிடிக்காது, அவன்தான் பாதருக்கு படிக்கப்போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன், ஜேசுதாசன் எல்லாத்துக்கும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எண்டு பைபிள் பிரசங்கம் செய்வதால்  ஜெகதீஸ் எப்பவும் ஜேசுவை நக்கல் அடிச்சுக்கொண்டு இருப்பான், ஜேசு கிரிகெட் விளையாட மாட்டான் அதால அவனை எப்பவும் அம்பியாருக்கு தான் விடுவம், ஆனாலும் அதுவும் ஜெகதீஸ் இக்கு வயித்தில புளியைக் கரைக்கும் ,

                      "அட விளுவான்களே ,  இந்த பரிசுத்த  பங்குத் தந்தையை என்னத்துக்கடா கிரிகெட் டீம் இல வைச்சு இருகுரிங்க,, இவனை விட தவமணியக்கா நல்லா கிரிகெட் விளயாடுவாவே ,அவாவை வையுங்கடா, கிளவி எண்டாலும் இவனை விட உருண்டு பிரண்டு பந்தைப் பிடிப்பா   " எண்டு சொல்லுவான் ,

                          ஜேசு பேசாமல் கேட்டுக்கொண்டு தலையைக் குனிந்து கொண்டு இருப்பான். நாங்க அதுக்கு ஒரு விமர்சனக் கருத்தும்  சொல்ல மாட்டாம், சொல்லி என்ன வரப்போகுது ஜெகதீசை எதிர்த்தால் ஏறக்குறைய எங்களின் கிரிகெட் டீமே இல்லை. அதைவிட காலுக்கு இடையால பந்து மெதுவாப் போனாலே குனிஞ்சு பிடிக்க விரும்பாத எங்கள் கிரிகெட் டீம் கப்டன் பித்துக்குளியும் ஜெகதீசும் வாயும் வயிறும் போல நல்ல ஒட்டு. ஒண்டுக்கும் உதவாத " காலுக்கு இடையால பந்து மெதுவாப் போனாலே குனிஞ்சு பிடிக்க விரும்பாத பித்துக்குளிய " எதுக்கு கப்டனா வைச்சு இருந்திங்க ?  எண்டு நீங்க கேட்பிங்க,அதுக்கு ஒரு இடக்கு முடக்கான கதை இருக்கு அதைப் பிறகு சொல்லுறேன்.

                                       எல்லா நாளும் போல இல்லாமல் ஒரு நாள், வாழ்க்கை  எல்லா விதத்திலும் குழப்பமான நிகழ்வுகளை ஒரு சின்னக் கால இடைவெளியில்க்  சிலரோட எதிர்கால நம்பிக்கையில் எதிர்பாராத சம்பவங்களுடன் கனதியாக்கும் . எல்லா இளையவர்களுக்கும் இருந்த வயதுக் கோளாறு அல்லது மோப்பம் பிடிக்கும் ஆர்வம், சில நேரம் பல வருடங்கள் தக்க வைத்த நல்ல பெயரை ஒரு சின்ன சம்பவத்தில் கிழித்து எறியலாம்,நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ அது பல சமயம் நடக்கத்தான் செய்கிறது. 

                                      அதன் காரண காரிய விளக்கம் யாரும் ஆராந்து பார்பதில்லை, தெருத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்ச மாதிரி ஊரில் உள்ள கொஞ்சம் நிழலான ஆசாமிகளே அந்த நேரம் நியாயஸ்தன் ஆகி அப்படியான சம்பவங்களுக்கு ஒரு வரலாற்று அந்தஸ்தும் கொடுத்துப்போட்டு அவர்கள் பாட்டில் போவார்கள்,,அப்படி அதிகம் எங்கள் ஊரில செய்து கொண்டு இருந்த நிழலான ஆசாமி புண்ணியக்குஞ்சி, ஜகதீஸ் அவரோட பெறாமகன் முறையானவன்.  

                                      மதியாபரணம் டீச்சர் வாசிக்க சாலையில் பின்னேரத்தில் தமிழ் பாடம் இலவசமா படிப்பித்துக் கொண்டு இருந்தா அந்த நாட்களில்,  " தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்...  " எண்டு மதியாபரணம் டீச்சர் தமிழ்ப் பாடத்தில் திருக்குறள் அழகா, அணி இலக்கணம் பிரித்து விளக்கிக்கொண்டு இருந்த ஒரு நாள்ப்  பின்னேரம், 

                                   மம்மலோடு குளத்தில கொக்குகள் ஓடு மீன் ஓடி  உறுமீன் வரும்வரை வாடி இருந்து இனி இருந்து வேலை இல்லை எண்டு பறக்க வெளிக்கிட்ட இருட்டின நேரம், வீராளி அம்மன் கோவிலில் துர்கை அம்மன் திருவிழாவில், செங்களுநீர்த் தொட்டித்  திருவிழா நடந்து கொண்டு இருத்த நேரம், கோவிலில் பயனை பாடப் போன புண்ணியக்குஞ்சி சித்தப்பா கவிஞ்சர் கந்தப்பு மாஸ்டரோட தேர் முட்டியடியில் வாக்குவாதப் பட்டுக் கொண்டு இருந்தநேரம், ஜெகதீஸ் அலவாங்கு இரவல் வேண்ட டீச்சர் வீட்டை போய் இருக்கிறான் , யாரோடும் அதிகம் வெளிய வந்து பேசாத, தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று பல்கலைக்கழகக் கனவுகளுடன் இருந்த டீச்சரின் ஒரே மகள் பவானி மட்டும் வீட்டில தனிய நிண்டு இருக்கிறாள்..

                           பவானிக்கு ,ஜெகதீஸ் பற்றி அதிகம் தெரியும், மதியாபரணம் டீச்சர் வீடு விளாத்தி ஒழுங்கையில் அயல் வீடு அதால எப்பவும் அடிக்கடி ஒழுங்கை முடக்கில் சந்திக்க வேண்டிவரும். இப்படி நெருக்கமாக  வேலி , மதில், ஒழுங்கை என்று சின்ன  மறிப்புகள்  மட்டும் பிரிக்கும் இடை வெளியில் வாழும் மனிதர்களுக்கு பல விசியம் அயல் அட்டையில் உள்வீட்டுக்க உலாவுவது போல தெரியும்.

                                    முதல் முறையா  பவானியின் பிறந்தநாளுக்கு பள்ளிக்கூடம் போட்டு வந்த  அவளை விளாத்தி  ஒழுங்கைளில் இடைமறித்து நெஞ்சுச் சட்டைக்க கண்டோஸ் சொக்கிலேட் செருகி இருக்கிறான் ஜெகதீஸ்.பாவனிக்கு அது பிடிக்கவே இல்லை. முக்கியமா அவன் முரட்டுத்தனமா அப்படி செய்தது அவளுக்கு அவனில வெறுப்பு வர வைத்தது. அதன் பின்  ஜெகதீஸ் இரகசியமாக பலமுறை தனியாக  பவானியோடு கதைக்க முயற்சித்து இருக்கிறான்.

                          நல்லகாலம்  மதியாபரணம் டீச்சருக்கோ ,அல்லது  புண்ணியக்குஞ்சி சித்தப்புக்கோ இதுகள் தெரியாது. தெரிஞ்சால் ஊருக்குள்ள அமளிதுளியாகத்தான் எப்பவும் போல முடியும் . பாவானி  எல்லா அலுப்புகளையும் சகித்துக்கொண்டு இருந்தாள். ஜெகதிஸ் அதை சாதகம் ஆக்கி வேண்டிய அளவு அவளைத்  தன்னைத் திரும்பிப் பார்க்க வைக்கப் போட்ட  முயற்சிகளில் எப்பவுமே தோல்விதான் அடைந்துகொண்டு இருந்தான்.

                           அதன் பின் ஒரு கட்டத்தில்  பாவனி அவனை நிமிர்ந்தும் பார்க்க  விரும்பவில்லை. காரணம் யாருக்கும்  தெரியாது . இளம்  பெண்களுக்கு சில இளம் ஆண்களை மட்டுமே பிடிக்கும், அதுக்குக் காரணம் சொல்ல எந்த அனுமானங்களும் உதவி செய்யாது.

                               எப்படியோ அன்றைக்கு மதியாபரணம் டீச்சர் வீட்டில இல்லாத நேரம் பவானி வீட்டுக்கு ஜெகதீஸ் போன நேரம் பவானி அவன் கேட்ட அலவாங்கை  எடுத்துக் கொடுத்துப்போட்டு

                   " ஜெகதீஸ்வரன் ,  எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா " எண்டு கேட்டு இருக்கிறாள்,

                            அவன் " என்ன செய்யவேண்டும் " எண்டு கேட்க,கொஞ்சம் தயங்கி என்னவோ சொல்ல நினைத்து, அதை விட்டுப்போட்டு வேற என்னவோ சொல்வது போல  

                        " நான் உங்களிடம் கேட்பதுக்கு ஒரு காரணம் இருக்கு, அம்மாளாச்சியான ஒருவருக்கும் சொல்ல மாட்டிங்க எண்டு சத்தியம் பண்ணிச் சொல்லுங்க " எண்டு கேட்க அவனும்,

                      " வீராளி அம்மாளாச்சியான யாருக்கும் பேச்சு மூச்சே நின்றாலும் வாயே திறக்க மாட்டேன், என்னை நம்பி சொல்லுங்க, யாரை நம்பாட்டியும் என்னை நம்பலாம்  " எண்டு சொல்ல 

                          பவானி ," உண்மையாதானே சொல்லுரிங்க,உங்கள் அம்மாளாச்சி மேல வைச்ச சத்தியத்தை நம்பலாம் தானே,பிறகு இது  அயலட்டையில் ஆருக்கும் தெரிய வந்தால் அம்மாவோட,என்னோட மானம் மரியாதை எல்லாம் போயிடும் " எண்டு சொல்லி,,

                                கொஞ்ச நேரம் ஜோசிதுப்போட்டு ஒரு பேப்பரை நாலா மடிச்சு,அதுக்கு ஸ்ட்ப்பிளர் கிளிப் அடிச்சு வைச்சிருந்த கடதாசியை ஜெகதீஸ் இடம் கொடுக்க எடுத்த நேரமே  ஜெகதீசுக்கு மின்னல் வெட்டி ....

                                         அவன் . வான வெளியில் பரசூட்டில்  பாரம் இல்லாமல் மிதந்து பறந்து பறக்க, பின்னணியில் இளையராஜாவின் வயலின் பின்னனியில் வரும் பாடல் கோரஸாகக்  கேட்க, நுனி நாக்கில தேன் விழுந்தது போல இருக்க, கால்களில் மெல்லிய நீரோடையின் தண்ணி மணலோடு அரிக்க, பவானி வீட்டைச் சுற்றியே கணபதி ஓமதுக்கு கிளம்புற மாதிரி குங்கிலிய வாசம் கிளம்ப ,அரேபியன் வெள்ளைக் குதிரை நாலுகாலில் பாஞ்சு பாஞ்சு போக அதன் சடை மயிர்கள் கம்பி போல நிலைக்குத்திட்டு நிக்க...உள்ளங்கை வியர்க்கத் தொடங்கியது.. 

                                       " எனக்காக இதை ,உங்களின் பெஸ்ட் பிரென்ட் சின்னக் கண்ணனிடம் கொடுபின்களா, அவங்க வீட்டுக்கும்  தெரியாமல் கொடுப்பிங்களா ,அம்மாளாச்சி மேல வைச்ச சத்தியம் போல யாருக்கும் சொல்ல மாட்டிங்க தானே " எண்டு சொல்ல,

                                     ஜெகதீஸ் அதிலேயே அரைவாசி சீவன் போனது போல  நாக்கில தண்ணி வத்தி  ,சின்னக்கண்ணன் பெயரைக் கேட்டவுடன  பிசுக்கங்ககாய் மாதிரி வெளிறிப்போயிட்டான். ஆனாலும் சமாளித்து, 

                                 " ..ப்பூ அட இதுவா விசியம்,இதுக்கு போய் இந்தப் பாம்புப்  பயம் போடுறிங்களே, ...ப்பூ இதென்ன சின்ன வேலை, கட்டாயம் கொடுப்பேன், கண்ணனுக்கு உங்களின்  காதல் கடிதத்தை நான்  கொடுக்காம வேற யார் கொடுகிறது ப்பூ... "

                                எண்டு அதை வாங்கி பொக்கெட்டில் வைச்சுக் கொண்டு , நெஞ்சு பக்கு பக்கு எண்டு அடிக்க, பவானியை நினைக்க தலை சுத்திர மாதிரி வர வியர்த்து விறு விறுக்க வீட்டை வந்து முதல் வேலையா அதை திறந்து வாசித்தான். அவன் அந்தக் கடிதத்தை சின்னக் கண்ணிடம் கொடுக்கவே இல்லை. அதைப் பற்றி சத்தியம் பண்ணிக்கொடுத்த மாதிரி வெறும்  ரெண்டு நாள் தான்  அவன் யாருக்கும் அதைப்பற்றி ஒண்டுமே சொல்லவில்லை. மூன்றாம் நாள் அவன் செய்து கொடுத்த சத்தியத்தை அவனே வேண்டுமென்றே மறந்திட்டான்.  ஆனால் அந்தக் கடித எழுத்துக்கள் மங்கும் வரை திருப்பி திருப்பி படிச்சுப்போட்டு...  

                                        ஜெகதீஸ் ஒரு நாள் குளத்தடிக்கு வந்தான்,வந்து கிணத்துக் கட்டில கைக்குழந்தையை வைச்சுப்போட்டு வந்த மாதிரி பதறியடிச்சான் முதல் வேலையா சின்னக் கண்ணன் எங்க எண்டு தேடினான், நல்ல காலம் அவன் அன்றைக்கு வெள்ளி திசை வேலை செய்ததால் விளையாட வரவில்லை. கேதீஸ் எங்கள் எல்லாரோடும் 

                                             " இண்டைக்கு இப்பவே ஒரு முடிவு எடுக்கக் கதைக்க வேண்டும்,நொள்ளை என்ன அந்த வடுவா ,பதுங்கி பதுங்கி இருந்து கொண்டு பெரிய தேசிங்குராஜ போல காதல் வேலை எல்லாம் செய்யுறன்  " எண்டு சொன்னான்,

                                     நாங்க ஒன்றுமே விளங்காமல் , எதுவா இருந்தாலும் கிரிகெட் விளையாடி முடிய புளியமரதுக்குக் கீழ போய் இருந்து கதைப்பம் எண்டு அவசரப்படாமல் சொல்ல 

                                 " டேய் அலுக்கோசுகளே ,இல்லை இப்பவே கதைக்க வேண்டும் எண்டு சொல்லுறன், நீங்கள் என்னடா சொல்லுறிங்கள், நொள்ளை இதோட அழியப் போறான்  " எண்டு கோபமா கிரிகெட் ஸ்டார் பிளையர் சிக்ஸர் விளாசினது  போல சொன்னான்,

                                 " சரி சொல்லு என்ன விசியம் கதைக்கப் போறாய் ,டவுனில அடல்ஸ் ஒன்லி இங்கிலிஸ் படம் ஏதும் வந்த சிலமன் அறிஞ்சனியா  " எண்டு பித்துக்குளி கேட்டான் 

                                   அவன் அதுக்கு , " டேய் எருமை மாடு அதுவா இப்ப முக்கியம் ,நொள்ளைக் கண்ணனை கிரிகெட் டீமில் இருந்து வெளிய தூக்க வேண்டும், நொள்ளைக்கு நான் ஆர் எண்டு இப்ப காட்டுறேன் பாருங்கடா,அவனுக்கு பெரிய கமலஹாசன் எண்டு நினைப்பு   " எண்டான்,

                                அதுக்கு ஐஸ்பழம் , " அட அவன்தான் நல்லா விளையாடுரானே,அதை விட அவன் நல்ல கீப்பர்,அவன் இல்லாட்டி ஒருத்தரும் எங்களில் கீப்பர் இக்கு சரிவர மாட்டமே " என்று சொல்ல, 

                                               " அட செம்மறிகளே நான் என்னவோ சொல்லுறன்,நீங்க என்னவோ பிணாத்துரின்களே எனக்கு அந்த இந்த விசர்க்கதை தேவை இல்லை,நொள்ளைக் கண்ணன் காகம் போல ஒன்டரைக் கண்ணால பார்த்துக் கொண்டு பெரிய நினைப்பு அவனுக்கு,முதல் அவனை இங்கே வரவே விடக் கூடாது " எண்டான்,

                                             நாங்க ஏன் இவன் இப்படி எங்கப்பன் குதிருக்குள்ள எண்டது போலக்  குதிக்கிறான் எண்டு விளங்காமல் முழிக்க , 

                                          ஜேசுதாசன் " முதல் என்ன நடந்தது உனக்கும் அவனுக்கும் அதைச் சொல்லு,நீயும் அவனும் தானே நல்லா மச்சான் மச்சான் எண்டு மாங்காய்க்கு உப்பு நீ தடவ,அவன் மிளகாத் தூள் தடவிக்கொண்டு ஒட்டி உறவாடிக்கொண்டு இருந்திங்களே,  " என்றான் 

                                         " அட பரதேசிகளே அப்படிதான் நானும் அவன் ஒரு முட்டாள் எண்டு நினைச்சு கொண்டு இருந்தேன் , அவன்  பெரிய வேலை எல்லாம் உங்களுக்கும் ,எனக்கும்  மண்டையில மண்ணைத் தூவிப்போட்டு செய்து இருகிறான். என்ட வீட்டு ஒழுங்கைக்க  வந்தே ,,ஹ்ம்ம் ... பவா .............  வேண்டாம்  அதை  நானே சொல்லக் கூடாது.மலிஞ்சா சந்தைக்கு வரத்தானே  வேண்டும்....ம்ம்  ... இப்ப முடிவா நீங்க என்னடா சொல்லுறிங்கள் " எண்டான், நாங்கள் ஏகமனதாக

                            " சின்னக்கண்ணன் எங்களுக்கு முக்கியம், அதைவிட அவன் ஒருதரோடும் ஒரு பிரச்சினையும் இல்லையே,உனக்கும் அவனுக்கும் தனிப்பட்ட பிக்கல் பிடுங்கல் எண்டா கிரவுண்டுக்கு வெளியால வைச்சுக்கொள் ஜெகதீஸ் ,இதுதான் எங்களின் முடிவுடா  " 

                                    என்றோம் . ஜேகதீஸ் கொஞ்சம் ஆவேசம் வந்த கோபமாக ,அவன் ஏற்கனவே எடுத்து வைச்ச முடிவு போல ,

                                 " அப்படியா கடைசில உங்கட கோணங்கா மானங்கா  புத்தியைக் காட்டிப் போடிங்கலேடா,,நான் இனி நொள்ளை கிரிகெட் டீம் இல இருந்தால் விளையாட வரமாட்டேன்,என்னோட பெயரையும் டீம் இல இருந்து எடுத்து விடலாம்,,நான் இல்லாட்டி தானே உங்களுக்கு அருமை தெரியும்,, காதல் மன்னன்,,ஹ்ம்ம் ,,  அந்த நொள்ளையை வைச்சு நீங்க என்னத்தைக் கிழிக்கப் போறீங்க எண்டு நான் பார்க்கத்தானே போறேன்,,, " 

                               எண்டு சொல்லிப்போட்டு, எங்க கிரிகெட் டீம் கப்டன் பித்துக்குளியை  மட்டும்  கூப்பிட்டு கையில பிடிச்சு இழுத்துக்கொண்டு ,

                                                 " இந்த லூசுகள் உருப்படாதுகள், பித்து , தனியா வாடா ,உன்னோட மட்டும் ஒரு விசியம் கதைக்க வேண்டும்,"

                             எண்டு அவனைக் குளத்துக் கட்டுக்கு கிட்ட உள்ள நாவல் மரத்துக்கு இழுத்துக்கொண்டு போனான்.கதைச்சு முடிய எங்களுக்கு கேட்காத தூரத்தில் நிண்டு தூசனத்தில்  சின்னக் கண்ணனைப் பேசினான், எங்களையும் "  ஊத்தைப் பண்டியோடு சேர்ந்து கிடக்கும்  ஊத்தைப் பண்டிகள் " என்று திட்டினான் ,நாங்க பேசாமல் பண்டிபோலவே கேட்டுக்கொண்டு நிண்டம். பிறகு திரும்பிப் பார்க்காமல் போட்டான்.

                                            பித்துக்குளியும் ஜெகதீசும் என்ன கதைத்தார்கள் எண்டு அடுத்தநாள் பித்துக்குளியே  வந்து கொஞ்சம் குளம் அதிர வைக்கிற மாதிரி சொன்னான். ஆனால் ஜெகதீஸ் சொன்ன மாதிரியே  அதுக்கு பிறகு கிரிகெட் விளையாட வரவில்லை, அவன் சும்மாவும் நாங்க என்ன செய்யுறோம் எண்டு பார்க்கவும் குளத்தடிப் பக்கமே வரவில்லை.

                                சில நாட்களின் பின் ,சின்னக்கண்ணன் பவானி காதல் கதை அம்மன் கோவிலில் திருவெம்பா பயனை நடக்கும் நேரமே தொடங்க்கி விட்டது எண்ட  அவளவு நாளும் எங்களுக்கு சொல்ல மறைத்த கதையையும், ஜெகதீசிடம் பவானி கடிதம் கொடுத்து அதை சின்னக் கண்ணனுக்கு கொடுக்கும்படி கேட்டதையும் பித்துக்குளி கிரிகெட் விளையாடி முடிய எங்கள் எல்லாரையும் வட்டமா இருத்தி வைச்சு சொன்னான்.

                                   திருவெம்பா பஜனையில் பித்துதான் அதை நடத்தப் பொறுப்பா ஆறுமுகநாவலர் போல திருநீறு எல்லாம் குறி போல இழுத்துக் கொண்டு , நாங்க பின்னால இருந்து பாட  முன்னால ஓதுவார் போல சப்பாணி கட்டிக்கொண்டு இருந்து பாடுவதை சரி பிழை பார்ப்பான். அவன் பார்வையில் ஒரு காதல் கதை தப்பிப் போய் இருக்கவே முடியாது,

                                        ஆனால் எப்படியோ பவானியின் இன்னுமொரு கடிதம் கொடுக்கும் முயற்சி வீராளி அம்மன் கோவிலடியில் கையும் மெய்யுமா பிடிபட,,டீச்சர் படிசுக் கிழிச்சது காணும் எண்டு பவனியை கொழும்புக்கு அனுப்ப...சின்னக் கண்ணன் பின் நாட்களில் ..... என்ற இயக்கத்துக்கு போய் சிலிண்டருக்கு சக்கை அடையும் போது டிக்னேடர் தவறுதலா இறுகி அது வெடிக்க சிதறிப்போன கதை. அதெல்லாம் தெரியாமலே பவானி கொழும்பில் வாழ்ந்த கதையை " ஒரு காதல் வந்தது " என்ற கதையில் எழுதி இருக்கிறேன் .

                                    அதன் பின் ஜெகதீஸ் ஒரு ஒரு முறைதான்  குளதடிக்கு திருக்கார்த்திகை விளக்கீட்டு நாள்  அன்று வந்திருக்கிறான். அந்த மாதம் பருவ மழை அடிச்சு ஊத்தி குளம் தழும்பு தட்டிக்கொண்டு நிரம்பி நிறைமாத கற்பிணிப் பெண் போல இந்தா அந்த எண்டு கட்டுக்கு மேலால பாயுறேன் எண்டு நிண்ட நேரம் அதிகம்  குளத்தடி குரூப் ப்ரெண்ட்ஸ் வயலில் நிற்கவில்லை, முக்கியமா நானே அன்று இல்லை ,பங்கர் வெட்ட வேறு ஒரு இடத்தில நின்டதால் நான் அந்த சமபவத்தைப் பார்கவில்லை,

                              ஜெகதீஸ் வந்து குளத்தைப் பார்த்திட்டு ,இந்தப் பக்கம் இருந்த நாவல் மரத்தடியில் இருந்து அடுத்த பக்கம் இருந்த தாளம் பத்தைக் கரை வரை நீந்திப் போய் திரும்பி வருவேன் எண்டு சவால் விட்டு இருக்கிறான். தான் ஒரு ஆண்மையுள்ள வீரன் என்பதை எல்லாருக்கும் காட்டிப் பழிவாங்கும் நோக்கம் போல , அடி வேண்டிக் காயம்பட்ட புலிபோல  அவன் அங்கேயும் இங்கேயும் திரிஞ்சு இருக்கிறான்.

                                   அந்தக் குளத்தில் யாருமே இறங்கி குளிக்கவோ, நீந்தவோ மாட்டார்கள். நிண்ட பொடியன்கள்

                         " டேய் ,உனக்கு என்ன விசரா , இப்ப இதுக்குள்ள குதிச்சு யாருக்கு நீ என்னத்தை நிரூபிக்கப் போறாய்,  குளம் நிரம்பி நிக்குது இப்ப நீந்த வேண்டாம், கரையில நிக்கவே கட்டு வழுக்கி விழுத்துது ,உனக்கு இப்ப என்னத்துக்கு இந்த தேவையில்லாத வேலை  "

                                 எண்டு சொல்லி இருக்கிறாங்க.

                                    பண்டி வளர்கிற தெய்வேந்திரம் மட்டும்  தண்ணி அடிச்சுப்போட்டு வெறி ஏற ஏற குளத்தடியில் கள்ளுப் போத்தலைக் கட்டிப்பிடிசுக்கொண்டு இருப்பார். அவருக்குள்ள தண்ணி அதிகமா உள்ள இறங்கின நேரம் கெட்ட நேரம் குளத்துக்க கோவணத்தோடு நிண்டு நீந்திக்கொண்டு அவரை விட்டுப் போட்டு  ஓடிப்போன அவரோட ரெண்டாவது பொஞ்சாதியை நினைச்சு " பேசாதே வாயுள்ள ஊமை நீ, சொந்தம் என்ன பந்தம் என்ன போனால் போகுமே , பேசாதே.பேசாதே வாயுள்ள ஊமை நான் ... ."   எண்டு வாய் கிழியப்பாடி வெறியில் நீந்துவார்...

                                    ஜெகதீஸ் , சவால் விட்டு சொல்லிக்  கொஞ்ச நேரத்தில் ,பொடியன்கள் சொன்னதைக் கேட்காமல் குளதுக்க பாஞ்சு இருக்கிறான். அரை வாசி நீந்திப் போய் நடுக் குளத்துக்குக் நின்று தண்ணியை வேகமாக கையால வலிச்சும், பின்னம் காலால அடிச்சும் அந்தரிச்சு கையை காட்டி,

                                " காப்பாற்றுங்கடா,,,சுழி  இழுக்குது,,,,டேய்  ,,யாரவாது  பாஞ்சு  வாங்கடா    "

                            எண்டு ஒரே ஒரு தரம் கத்திப்போட்டு  உள்ளுக்க தாண்டு போட்டான். அதை பார்த்துக்கொண்டு நிண்ட ஜேசுதாசன் ஒருவன் மட்டுமே சடார் எண்டு குதிச்சு அரைக் குளத்துக்கு நீந்திப் போன நேரம், ஜெகதீஸ் தாண்ட இடத்தில இருந்து ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருக்க, ஜேசுவும்

                        "  செபமாலை மாதவே ,, சுழி இழுக்குது,  பயங்கரமா  சுழி இழுக்குதடா  "

                          எண்டு கஷ்டப்பட்டு வலிச்சு அடிச்சு திரும்பி நீந்தி வந்திடான், பண்டி வளவில நிண்ட  தெய்வேந்திரம்,பொடியன்கள் ஓடுப்பட்டுத் திரிய  வெறியில ஓடிவந்து பார்த்திட்டு,

                                             ," எண்ட அம்மாளாச்சி,  சரி பொடி .....சரி. ..தண்ணியோட விளையாடினா ஒரு நாள் அது அதன் பலத்தைக் காட்டும்,,மூன்று தரத்துக்கு மேல மன்னிக்காத தண்ணியோட விளையாடி இப்ப பொடி போயிட்டுதே ,,ஒடுங்கோடா ஓடிப் போய் அயல் அட்டை சனத்தை இழுத்துக்கொண்டு வாங்கடா " 

                                                எண்டு பதறியடிச்சு குழற ,,அயல் அட்டை குளறி அடிச்சுக்கொண்டு வர,,,ஜெகதீஸ் விழுந்த குளம் எப்பவும் போல அமைதியா இருந்தது, இந்தக் கரையில் நாவல் மரம் மழைக்கு நனைஞ்சு வழிய,அந்தப் பக்கம் தாளம் பத்தைக்கள் ஒண்டுமே நடக்காத மாதிரி காற்றில் அசைய,தெய்வேத்திரதிண்ட பண்டிக்கள் கீய் கீய் எண்டு வழமை போல கத்திக்கொண்டு இருக்க, ஆள்க்காட்டிக் குருவிகள் தாழப் பறந்து பாடிக்கொண்டு இருந்தது

                       அந்த  மார்கழி மழை இரவிலும் ஒரே ஒரு நட்சத்திரம் சுட்டு விரல் மோதிரம் போல மின்னி மறைய, குளக்கரையில் சதக் சதக் எண்டு நாங்கள் நடந்து திரிந்த இடமெல்லாம் மாரித் தவளையும்,  மண்டுவம் தவளையும் மாறி மாறிக் சாகப் போற மாதிரி கத்திக்கொண்டு கிடக்க, குளத்து தண்ணியோடு மெல்ல கோரைப் புல்லுகள் பாரம் தாங்க மூடியாமல் சரிஞ்சு படுத்துக் கிடக்க , குளத்தடிக் குருப்பில் இருந்த எல்லாரும் குளத்தைச் சுற்றி கையாலாகாத் தனத்தில் கையைப் பிசைந்து கொண்டு நிக்க...      

                                   ஜெகதீஸ் மட்டும் இல்லை !

                                        திருக்கார்த்திகை விளக்கீட்டு இரவுக்கு ரோட்டில விளக்கு வைக்க வாழை மரம்,பாப்பா மரம் நட்ட எல்லா வீடுகளும் அதைப் பிடுங்கி எறிஞ்சு போட்டு விளாத்தி ஒழுங்கையில் செத்த வீடு கொண்டாடப் போக ,நாங்க இரவு முழுவதும் மழையில நனைஞ்சுகொண்டு பெட்ரோல் மக்ஸ் கொளுத்தி குளத்து தண்ணி ஓடி வெளியேறும் வாய்கால் பண்ட்டுக்காலத்தான் பிரேதம் இழுபட்டு வரலாம் எண்டு குளத்தை சுற்றிக்கொண்டு  இருந்தம்.  

                                       வயசான  புண்ணியக் குஞ்சியும்  வந்து கதைக்குக் கதை சொல்லிக்கொண்டு , விளக்கத்துக்கு விளக்கம்  எடுத்து விட்டுக்கொண்டு.  அவரும், கழுத்தில இருந்து காது தலை எல்லாம் மப்பிளரைச் சுற்றிக்கொண்டு  இரவு முழுவதும் வையன்னா சீனா கூணா கடை  சுருட்டை தொடர்ச்சியாகப்  பத்திக்கொண்டு,

                             " இதால எழும்பும் பாருங்கடா ,,மோட்டுக் கழுதை இவன் உங்களோடு குளத்தடியில் எடுபட்டுத் திரியும் போதே இப்படி ஒரு நாள்  இந்தப்  பிரகண்டம் நடக்கத்தான் போகுது எண்டு எனக்கு தெரியும் ,,இனி என்னத்தைக் கதைச்சு , நான் நினைக்கிறன்  மேக்கால வாய்க்கால் போக்கு  பிரேதம்  சில நேரம் அதால எழும்பும்.. "

                                எண்டு ஒவ்வொரு திசையாய் தேடிக்கொண்டு எங்களோட இருந்தும், விடியும் வரை ஜெகதீஸ் வரவில்லை.

                                                 காலையில் முதல் முதல் தலை மட்டும் மிதந்து புன்னியக்குஞ்சி சொன்ன இடத்தில எழும்பி வர, அவனோட உடம்பில பல இடங்களில் மீன் கடித்துத்  தின்ற அடையாளங்கள் இருக்க, அவனோட கை ரெண்டும் குறண்டிப் போய் இருந்தது, புண்ணியக் குஞ்சி அதைப் பார்த்திட்டு, 

                               " அருமந்த பொடி , பொடிக்கு தண்ணியில  சரணவாதம் வந்திருக்கு  அதுதான் நீந்த விடாமல் இழுத்துப் போட்டுது,நல்ல தண்ணியில் நீந்துறது லேசுப்பட்ட விசியம் இல்லை, உப்புத் தண்ணி போல தூக்கிக் கொடுக்காது, நாலு  அடி நீந்தும் போது கையாளும்,காலாலும் அடிக்கத் தவறினாலே உள்ளுக்க இழுக்கும் , இனி இதைக் கதைச்சு என்ன வரப்போகுது, சரி ஆளை ஆள் வாயப் பார்க்காமல் எல்லாரும் சேர்ந்து தூக்குங்கடா ...  " 

                                   எண்டு சொன்னார்.

                        குளம் அப்பவும் அமைதியாக " ..ப்பூ அட  இதுவா விசியம், இதுக்கு போய் இந்தப் பாம்புப்  பயம் போடுறிங்களே, ...ப்பூ " எண்டு சப்புக்கொட்டிச்  சொல்வது போல மூச்சு விட்டுக்,  கேட்டுக்கொண்டு  இருந்தது.......
.

.26.09.14.


.
26.09.14

Sunday, 20 September 2015

ஒரு காதல் வந்தது ....

சின்னக்கண்ணன் ,பவானி  காதல் கதையை எப்படி தொடக்குவது என்று பல நாட்களாய் ஜோசிதுக்கொண்டு இருந்தேன்.அண்மையில்  மதியாபரணம் டீச்சர் பற்றி மிகவும் துயரமான செய்தி ஒன்றைத் ஊமல் கொட்டையாக இருந்த நேரமே எங்களோடு உருண்டு பிரண்டு இப்ப அமரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும்  ஒரு மிகப் பழைய ஊர்ப் பனங்கிழங்கு ஒருவன்  தகவல் பகிர்ந்திருந்தான்.  இதுக்குப் பிறகும் அதை எழுதாமல் இருந்தால் பிழை என்பது போல அதனோடு இணைந்த சம்பவங்கள் சோளப்பொரி போலே பொங்கி வெடித்தது  எப்படியோ  இதை எழுத வைத்தது.

                                          கதை இளவயதில் பல கதைகள் தொடங்கிய குளத்தடி கிரிகெட் கிரவுண்டில தொடங்கி , குளத்தடி  குழப்படிக் குறுபில் உள் நுழைந்து ஆணைக்கு அறம் என்றால் உடனே பூனைக்கு புறம் , குதிரைக்கு குறம் என்கிற மாதிரி கொஞ்சம் எங்களின் ஊருக்குள்ள சுற்றிச் சுழண்டு எதிர்பாராத இடமான கொழும்பில் உள்ள வெள்ளவத்தையில் முடியும்..அது முடியிற கட்டத்தில்  இந்தக் கதையுக்க வந்த பல இளையவர்களின்  வாலிபம் முதிர்ந்து திசைகளை விரித்து பறந்து விடும் 

                                                ஒரு காதல் கதையில் காதலைத் தவிர வேற என்ன இருக்கப் போகுது  என்று நினைப்பவர்களுக்கு   இந்தக் கதையின் வண்ணாத்திப் பூச்சியின் சிறகுகள் விரியும் போக்குப் பிடிபாடமல் போகலாம். ஒரு காலகட்டம் அதுவும் யுத்தம் தொடங்கிய வருடங்களில் நிறையப் புரட்சிகரமான எண்ணம்கள் நுரை தள்ளிக்கொண்டு இருந்த போதும் அதற்குள் காதல் இருந்தது .அது அழகா வேற இருந்து.

                                                 பழைய சேலையை அடிச்சுப் பிழிஞ்சு தோச்ச மாதிரி  அறுக்காமல் கதையைச் சுருக்கென்று  சொல்லுறேன், பவானியின் வீடு வீராளி அம்மன் கோவில் பின் வீதியில் இருந்தது.ஆனால் அதுக்கு வாசல் கோவிலுக்கு சம்பந்தமில்லாத எதிர் முனையில் ஒரு விளாத்தி மரங்கள் நின்ற வெறும் வளவுக்கு நடுவால இருந்த குச்சு ஒழுங்கையில் இறங்கி வர கிரில் கதவு போட்ட கடைசிக் கல்வீடு, அதுக்கு " அன்னவாசம்  " என்று பெயர் சீமெந்து சுவரில எழுதி இருந்தது .வீட்டைச் சுற்றி இருந்த சுற்று மதிலில்,யாரும் ஏறிக் குதிக்க முடியாதவாறு  போத்திலோடு உடைச்சு வைச்சுக் கட்டி இருந்தது.

                                                முதலில் பவானி யார் என்று சொல்லுறேன், மதியாபரணம்   டீச்சர் ஒரு " சயன்ஸ் கீராயுவெட் "  , டவுனில இருந்த லேடிஸ் கொளிச்சில் சயன்ஸ் படிபிச்சா. புருஷன் உசிரோடு இருந்தும் நெத்தியில பொட்டு,கழுத்தில தாலிக்கொடி எதுவுமில்லாமல் தனிய இருந்தா .அவாவின் அப்பா ஒரு தமிழ் அறிஞ்சர் அதால்  தமிழ் சைவசமயப் பற்று அதிகம். சங்கீதம் படித்ததால் கேதாரகவுரி விரதம் போன்ற எல்லா அம்மன் விரதத்துக்கும்  கோவிலில் கர்நாடகசங்கீத கீர்த்தனைகள்  பாடுவா.

                                   அவாவின் ஒரே ஒரு மகள் தான் பவானி . அவள்  படிப்பில பாயும் புலி . வடிவில தேவதச்சன் எழுதிய கவிதைக்கு  ரவிவர்மா  வரைந்த  கலை மான்.வெள்ளை என்று சொல்லமுடியாது, கழுவிக் காயப்போட்ட வெந்தயக் கலர். வடகலை ஐயங்கார் பொட்டு கறுப்பாக மேல்  நெறியில் இருந்து  மூக்கு தொடங்கும் இடம் வரை இழுத்து இருப்பாள். மூன்று முடிச்சு சிறீதேவி போல அடர்த்தியான ரெட்டைப் பின்னல் சடை . ஆனால் மிகவும் அடக்கமானவள் . ஒரு காதல்  கதைக்கு ஒப்பனைகள் எதுவுமே தேவையில்லாத  கதாநாயகி .

                                                    டீச்சரின் மனுஷன்  மிஸ்டர் மதியாபரணம் போஸ்ட் மாஸ்டர்.ஆனால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.போஸ்ட் மாஸ்டர் எங்களின் ஊருக் குள்ளே மசுக்குடி மாமியின் வீட்டுக்கு அருகில் இருந்த வீட்டில் வேற ஒரு மாமியோடு வசித்தார். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்று தெரியாது  ஆனால் ஒப்பெறேசன் செல்லத்துரைக்கும் புண்ணியக் குஞ்சிக்கும் இடையில் நடந்த  சண்டைக்கு பின் சில நாட்களில்  பிரிந்தார்கள் என்று மட்டும் தெரியும் .அதை கோபுர சந்தனம் அரைச்சு முதலியார் நடு முதுகில தடவின மாதிரி சொல்லிக்கொண்டு இருப்பது இந்தக் கதைக்கு சம்பந்தமில்லாத சமாச்சாரம் .

                                                     சின்னக்கண்ணன் , குளத்தடி  குழப்படிக் குறுபில் எங்களோடு இருந்தவன். படிப்பில சொல்லும்படியாக  எதுவும் இல்லாதவன். எங்கள் ஊர் பள்ளிகூடத்தில் கஷ்டப்பட்டு ஒவ்வொரு வருடமும் வகுப்புகளைக் கடந்து கொண்டு இருந்தவன்.  ஆனால் துணிந்தவன்,கொஞ்சம் ரகசியமாக திட்டங்கள் போடக் கூ டிய புத்தி இருந்தது. மெலிந்த தோற்றமுடைய ஒரு வாடல் . 

                                     அவனோட வீக் பொயின்ட்  வாக்குக் கண் அதால அவன் இல்லாத நேரம் நொள்ளைக்கண்ணா என்றுதான் நாங்கள் சொல்லுவோம் அவனை. சின்ன வயதில் இளம்பிள்ளை வாதம் வந்து ஒரு காலை சவட்டி சவட்டி நடப்பான். தனிப்பனை போலக் கறுப்பு. சூரைப்பத்தை போல ஒழுங்கில்லாத தலைமுடி . ஒரு காதல் கதைக்கு  கிட்ட வராத கதாநாயகன்.

                                                             அவன் வீடு  குளத்தடியின் ஒரு பக்கம் தெய்வேந்திரம் பண்டி வளர்த்த காணிக்கு அருகில் உள்ள பெரிய தென்னம் தோட்டம் முடியும் இடத்தில இருந்த வளவில இருந்த ஓலை வீடு . அவன் அப்பா ஐஸ்பழ வான் ஓடுறவர் , அதால அவரை   " ஐஸ்பழ மணியம் "  என்றும், சின்னக்கண்ணன் வீட்டை " ஐஸ்பழ மணியம் " வீடு  என்றும் தான் சொல்வார்கள். அன்றாடம் உலைவைச்சு சீவிக்கும் கஷ்டப்பட்ட குடும்பம். சின்னக்கண்ணனுக்கு  வேற ஆண் சகோதரம் இல்லை, ரெண்டு அக்காவும் ரெண்டு தங்கச்சியும். அம்மாவுக்கு வருசத்தில் முக்கால்வாசி நாளும்  இழுப்பு முட்டும்  தொய்வு வருத்தம்.

                                                              அப்புறம் காதல்  கதையில  ஒரு வில்லன் இல்லாமல் எப்படியும்  சுவாரசியம் இருக்கப்போவதில்லை  என்று நீங்க நினைச்சாலும் எண்டதாலோ தெரியவில்லை, ஒரு வில்லன் வந்தான்,கதை சிரிச்சுக்கொண்டே   சீவன எடுக்கிற எங்களின் ஊரில் நடந்தாலும்,வில்லன் வந்தது வேற ஊரில இருந்து,அதுவும் தலை நகரம் கொழும்பில் இருந்து என்பத்தி மூண்டு கலவரத்தில் கப்பலில் காங்கேசன்துறை வந்த மேல்தட்டு கொழும்பு வாசிகளில் அவனும் ஒருவன்,கதையில் அவன் வாற நேரம் அவனைப்பற்றி சொல்லுறேன்.

                                                         சின்னக்கண்ணன் எங்களின் நண்பன்,எங்களோடு பின்னேரம் குளத்தடியில் இழுபடும் கோஷ்டியில் ஒருவன்.பவானி வீட்டை விட்டு பள்ளிக்கூடம் ,டியூசன், பரதநாட்டியக் கிளாஸ். இதுகளுக்கு மட்டுமே வெளியே வருபபவள் .பிறகு எப்படி இருவரும் சந்தித்தார்கள் காதல் சிக்னல் கொடுக்க என்று கேட்டா. சொல்லுறன் ...அது தான் விதி அவர் அவர் பாதையில் போய்க்கொண்டு இருந்த இரண்டு இதயங்களை இணைக்க கிளைமோர் கன்னிவெடி தாட்டு வெச்ச இடமான  திருவெம்பா பஜனை.

                                    ஒவ்வொரு வருட மார்கழி மாதமும்  திருவாதிரை நட்சத்திரத்தில் திருவெம்பா வருவது எல்லாருக்கும் தெரியும். அதுக்க அதிகாலையில் குளத்தடி குருப்பில்  இருந்த எல்லாரும் அல்ல சிலர் மட்டும் பனிக் குளிரில் தலையில அள்ளிக்  குளிச்சுட்டு வேட்டி சால்வையில் அந்தக் குளிர்த் தண்ணி ஒழுக ஒழுக " தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோரெம்பாவாய் "  என்று  திருவெம்பா பஜனை வீராளி அம்மன் வெளி வீதியச் சுத்திப் பாடுவோம். 

                                   அதுக்கு சின்னக்கண்ணன் வருவதில்லை. சிலநேரம் பின் வீதியால பாடிக்கொண்டு போக மதியாபரணம் டீச்சர் மட்டும் மதிலால எட்டிப் பார்ப்பா. பவானி அதிகாலை படிச்சுக்கொண்டு  இருப்பாள் என்பதும் கொஞ்சம் எங்களுக்கு தெரியும்.

                                          ஆனால் பின்னேரமும் கோவில் முன் மண்டபத்தில் அதே திருவெம்பா பஜனை நடக்கும்.  அதிகாலை தெருவெம்பாவுக்கு வராத சின்னக்கண்ணன், பவானி இருவரும் அதுக்கு வருவார்கள். வேறு பல பெட்டைகளும் வருவார்கள் . அது பித்துக்குளி தலைமையில் நடக்கும். பவானி நல்லா பாடுவாள். அவளுக்கு அருகில் இருந்து அங்கொடை என்ற   புவனேஸ்வரி சின்சிஞ்சா தாளம் போடுவாள்.  பித்துக்குளி எங்கள் எல்லாருக்கும் முன்னால இருந்து பாடமாட்டான்..ஆனால் யார் யார் பாடாமல் பெட்டையளுக்கு லைன் விடுறது என்று பார்த்துக்கொண்டு இருப்பான்.

                                        பஜனையில் ஒரு ஓரமாக,,ஆனால் பவானியின் முகம் கிளியரா தெரிய இடத்தில இருந்துகொண்டு , இந்த இடத்தில வைச்சுதான் சின்னக்கண்ணன் பவானிக்கு முதல் திருப்பள்ளி எழுச்சி மணி அடிக்கிற சிக்னல் கொடுத்து இருக்கிறான். இதை அவன்தான் சொன்னான் .அதுவும் திருவெம்பா தொடங்கின முதல் நாளே அலுவலை தொடக்கிட்டான். அதைக் குளத்தடிக் குருப்பில் ,அலுப்பு இல்லாத மென்மையான இதயமுள்ள ஜெசுதாசனுக்கு ஒவ்வொருநாளும் சொல்லுவான்.ஜேசு வேதக்காரன்  அவன் எங்களின் கோவிலடிக்கு அநாவசியமா வரமாட்டன்.

                         "  மச்சான் , ஜேசு ,பவானி ஒவ்வொரு பாட்டு முடியிற நேரமும் என்னைத்தான் பார்த்துக் கொண்டு  அடுத்த பாட்டை தொடக்கினாள்,,நீ அதைக் கவனிச்சி எண்டால் சுப்பரா  இருக்கும் மச்சான்   "

                              "  ஹ்ம்ம் ஆனால்  அவள் சும்மா பஜனை எல்லாரும்  பாடுனினமோ எண்டு பார்த்து இருப்பாள் டா . பவானி அப்படி எல்லாம் செய்யமாட்டாள் ."

                                     "  பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப் பகல் நாம்
பேசும் போதெப்போஇப்போதா ,,என்ற  திருவெம்பாவை ரெண்டாம் பாடலில் வாற வரியைப் பாடேக்க டக்கெண்டு  என்னைப் பார்த்தும்  பார்க்காத  மாதிரியும்  சிரிச்சாள்  டா " 

                                 " டேய்..லூசா, நீ உங்கட சைவக்கார பாட்டு  எல்லாம் சொல்லுறாய்,,அதுக்கு என்ன விளக்கமெண்டு என்னக்கென்ன தெரியும், முதல் சும்மா பட்டப் பகலில கலர்க்  கனவு காணாமல் இரடா கண்ணா ,"
                             
                                    " மச்சான் என்னைப் பார்த்து ஒருக்கா அவள் போட்டிருந்த சங்கிலியில் தொங்கின ஓம் முருகா  பெண்டனை கடிச்சுக் கொண்டு ஒரு கீழ் வெட்டு பார்வை வெட்டி விட்டுப்  பார்த்தாள் டா ஜேசு ,,சும்மா நரம்பெல்லாம் சுண்டி இழுத்துச்சடா ,,நீ அதைப்  பார்த்தி எண்ட  மச்சான் . உனக்கு விசர் வரும் .

                          "   இல்லைடா ,,நீ என்னடா இவளவு கவனிச்சு பார்க்கிறாய், அவள்  ஓம் முருகா பென்டன் போட்டு இருக்கிறாள் எண்டதை எல்லாம்  "

                      " மச்சான்  பஜனை முடியிற நேரம்,நான் கச்சான் கோதை சுண்டி விட்டேன்,அது அவளிண்ட காதில போய் சுள்  எண்டு  கிள்ளிச்சுது..அவள் சிரிச்சாள் டா..அதையாவது  கவனிச்சி என்டா  மச்சான் , அவளுக்கு விருப்பம் போல ",

                              "  இல்லை ,,,,கவனிக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை ,ஆனால் பித்துக்குளி கவனிச்சான் எண்டால் பிரகண்டம் வெடிக்கும்  "

                             " பித்து ஒரு சாக்கு மடையன் டா  ,,சும்மா பஜனையில் பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல இருந்துகொண்டு அங்காலையும் இங்காலையும் அரக்கிக் கொண்டு இருப்பான் . ஜேசு , பொறு மச்சான் .நான் இவளோட கட்டாயம் கதைக்க வேண்டும் ,,அதுக்கு அவள் ஆசப்படுறாள் போல இருக்கு மச்சான் "

                        " டேய் நீ என்னடா அவளை பிடிச்சு தின்னுற மாதிரி நிக்குறாய் . டேய் அவள் ஒழுங்கா கம்பஸ் போறதுக்கு படிக்கிறாள்,,,சோலி சுரடுக்கு போகதவள் டா அவள் "

                         "  டேய் ,,மச்சான் ஜேசு ,,உனக்கு தெரியாது,,இப்படி அமசடக்குகள் தான் மச்சான் துள்ளி விளையாடும்கள் டா "

                               "   ஹ்ம்ம்  ,,டேய் இது நல்லதுக்கு நடக்கிற மாதிரி தெரியேல்ல , குமாரவேல் ஐயாவுக்கு தெரிஞ்சா உன்னைக் கோவில்லுக்கு அண்ட விட மாட்டார்,  என்னமோ ஜோசித்து செய்யடா ..நாங்க சொன்னால் கேட்கிற கட்டத்தை நீ இப்ப தாண்டி வந்திட்டாய் போல இருக்கு. "

                                       "    டேய்,,ஜேசு,,நீ இருந்துபார்,,திருவெம்பா முடிய முதல் பவானியை மடக்குறேன் ,,வேணும் எண்டா நீ இருந்துபார் மச்சான்,"

                                 "  ஓ,,இவளவு கூ த்து உங்களிண்ட சைவக் கோயிலில் நடக்குதோ,,பொறு நானும் ஒருநாள் வந்து வெளிய நிண்டு விடுப்புப் பார்க்க வாறன்," 

                                 ஆனால் பித்துக்குளி இதெல்லாத்தையும் கவனிச்சு இருக்கிறான். பஜனை முடிஞ்ச ஒரு நாள் பித்துக்குளி வந்து சின்னக் கண்ணனோடு கொஞ்சம் கதவழிப்பட்டான்

                                " கண்ணா,,உன்னோட குரங்குச் சேட்டை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறன் ,பாவானி போய் டீச்சரிட்டை  சொன்னாள் என்டால் ,அவளை பஜனைக்கு வர விட மாட்டா,,பிறகு இங்க பாடுறதுக்கு ஒருத்தரும் இல்லை  "

                                  என்று கடுமையாக சொன்னான். ஆனால் சின்னக்கண்ணன் இதே விளையாட்ட தொடர்ந்தும் செய்து கொண்டு இருந்தான்.பவானி  ஒண்டும் தெரியாத மாதிரி பஜனை பாடிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு இந்தக் கோவில் மண்டபம் எங்கள் ஊர் இளம் பெடியங்களைப் பார்க்க ஒரு சந்தர்பமாக இருந்தது உண்மை . 

                                          ஆனால் சின்னக்கண்ணன்  ஒவ்வொருநாளும் பய பக்கதியா குளிச்சு வெளிகிட்டு வந்து இருக்கிறது, பவானி ஒவ்வொருநாளும் புதுப் புது ஹாப் சாறி கட்டிக் கொண்டு வந்து பாடுறதும், அப்பப்ப அன்பான எறிகணைகள் பிதுக்குளியின் ராடரில் இருந்து தப்பி போறதும், வாறதும் பார்க்க காதல் பெட்ரோல் மச்க்ஸ்க்கு காத்து அடிச்ச மாதிரி புசுக்கு புசுக்கு என்று பிரகாசமா வளருது என்று தெரிந்தது.

                                 அஞ்சாவது நாள் திருவெம்ப்பா பஜனைக்கு முதல் முதலா வில்லனும் பஜனைக்கு என்டர் ஆக  நாங்கள் எல்லாருமே பயந்து போனோம்.பித்துக்குழியே திடுக்கிட்டுப் போனான். ஏனென்றால் வந்த அருச்சுனா  எங்கள் ஊரில உள்ள எங்களைப் போல பாமரத்தனமான ஆள் இல்லை.வானத்தில இருந்து குதிச்ச மாதிரி ஆள். அதைவிட அருச்சுனா  பவானிக்கு  ஒன்றுவிட்ட மச்சான் முறை .வசதியானவன்.வடிவானவன் , அருச்சுனா வந்ததும் பவானிக்கு வளையம் வைக்க என்று அவன் வந்த முதல் நாளே விளங்கிட்டுது.காரணம் அவன் பவானிக்கு முன்னால போய் பஜனையில் இருந்தான். அது எங்கள் எல்லாரோட வயிதுக்குள்ளையும் வண்டில் மாடு ஓட வைச்சுது.

                               அருச்சுனா கொழும்பில பிறந்தவன்.அங்கே டி எஸ் செனாநாயக்க  கொலிச்சில படிச்சவன்.நாங்கள் எல்லாம் உள்ளுரில் நாடக நடிகர் போல அரைக் காட்சட்டை போட்டுக்கொண்டு பிஞ்சுபோய்த் தொங்கின மாதிரி இருந்த நேரம் அவன் ஹிந்தி நடிகர் போல நல்லா வளர்ந்த ஆம்பிளை , மலிபன் பிஸ்கட் நிறம், தலையை ராஜேஷ் கண்ணா போல நடு வகிடு பிரிச்சு இழுத்து அப்பவே நீளமான டெனிம் ஜீன்ஸ் இக்கு டயிட் ஆனா டி சேர்ட் போடுவான், கமக்கட்டில சென்ட் அடிப்பான் ,இங்கிலீசு கதைப்பான்,சிங்களமும் கதைப்பான் .

                                                    வெலிக்கடை மகசீன் சிறையில் குட்டிமணியின் கண்களைத் தோண்டி அகோரத் தாண்டவம் ஆடிய  ஆடிக் கலவரத்தில் கொழும்பில " அசிஸ்டன் கொன்றோலராகா " வேலை செய்த அப்பாவோடும் குடும்பத்தோடும் அகதியா  யாழ்பாணதுக்கு  கப்பலில் வந்தவன் , வசதியான குடும்பம். வந்து வேதக்காரர் அதிகம் படிக்கிற யாழ்  சென் பற்றிக்ஸ் இல படிச்சான் .  ஒரு சின்ன சைக்கிள் வைச்சு இருந்தான் , அதுக்கு ஒரு சின்ன ஹோர்ன் ஹான்டிளில் பொருத்தி அடிச்சுக்கொண்டு திரிவான் .அவனக் கண்டால் இளம் பெட்டையள் கட்டாயம் ரகசியமாப் பார்ப்பாளுகள். இவளவும் போதாதா எங்களுக்கு வயித்தெரிச்சலைக்  கிழப்ப, சொல்லுங்க பார்ப்பம்.

                                                   திருவெம்பா பஜனைக்கு அவன் வந்த அன்றே சின்னக்கண்ணன் அவனைத் தனியாகக் தேரடிக்கு கூட்டிக்கொண்டு போய்  என்னமோ கதைதான்.அதுக்கு பிறகு அருச்சுனா பஜனைக்கு வரவில்லை. பவானியும் தொடர்ந்து மூன்று நாள் பஜனைக்கு வரவில்லை.அது கொஞ்சம் குழப்பமா இருந்தது.புவனேஸ்வரி தான் தனியப் பாடினாள். சின்னக் கண்ணனுக்கு தவிப்பா இருந்தது .

                                  "  ஏண்டா இவள் அங்கொடை ஒழுங்கா கதைக்கவே மாட்டாள், இவளைப் பாட வைச்சு,இவள்பெங்களூர்  ரமணியம்மா மாதிரி  இழுத்து இழுத்து பாடுறதைக் கேட்க வேண்டும்மெண்டு விதி எங்களுக்கு. பவானி எப்படி பாடுவாள், கேக்க கேக்க தேன் ஒழுகிப் பாலில் விழும் ...ஹ்ம்ம்  ,," 

                              என்று சொல்லிக்கொண்டு இருந்தான், அடிச்சுப்போட்ட சாரைப்பாம்பு போல உயிர் இல்லாதவன் போல பவானி வராத மூன்று நாளும்  நடமாடினான். ஆனால் ஒவ்வொருநாளும்  தவறாமல் வருவான்.  பவானியும் கடைசி ரெண்டு நாட்கள் வந்தாள்,சின்னக்கண்ணன் அவளைக் கண்டவுடன தலை கால் தெரியாமல் எழும்பிப் பறந்தான். பவானியும் அவனைப் பார்த்து சந்தோஷமா ஆனால் ரகசியமா சிரிச்சாள். காதல் நல்ல வெய்யில் நேரம் கச்சான் அல்வா விரல்களில் பிசுபிசுக்கிற மாதிரி கொஞ்சம் கசியத்துவங்கிய மாதிரி இருந்தது. 

                           நல்ல காலம் திருவெம்பா " நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசியிவையுஞ் சிலவோ விளையாடி ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக் கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருள...."  என்று   முடியும்வரை ஒரு எசகு பிசகும் வெளிப்படையாக நடக்கவில்லை

                                  எப்படியோ சின்னக்கண்ணன் பவானியுடன் ஒரு நாள் கதைசிட்டான்,எங்க கதைச்சான்,எப்படிக் கதைச்சான்,என்ன கதைச்சான் என்று வீராளி அம்மன் மேல சத்தியமா யாருக்கும் தெரியாது. காதலிப்பவர்கள் இப்படிதான்,அவர்கள் இருவருக்கும் இடையே வலுவான கொமினிகேசன் எப்பவும் இருக்கும்,அதை வெளியே நின்று பார்க்கும் உபரி விடுப்புகளுக்கு அதன் வீச்சு தெரியாது. அலை அடிக்காத கடல் போல எல்லாம் அமைதியா இருக்கிற மாதிரிதான் இருக்கும்.ஆனால் உள்ளுக்க கடல் கொந்தளிக்கும் .

                                     திருவெம்ப்பா முடிந்த  சில நாட்களில் ஒரு நாள் ,சின்னக்கண்ணன் ,குளத்தடியில் எங்களோடு கதைக்கும்போது அவன் எழுதி வைச்சு இருந்த முதல் காதல் கடிதத்தைக் காட்டினான், அது எங்களுக்கு விறுவிறுப்பா  இருந்தது . பவானிக்கு   காதல் கடிதம் கொடுத்து, அதை அவள் ரகசியமாக  வாசித்து தலையணையைக் கண்ணீரில் நனைப்பாளா என்பது நம்பமுடியாமல் இருந்தது.ஆனாலும் காதல் எதிர் பாராத திசைகளில் இருந்துதான் தாளமுக்கமாகி  புயல் அடிக்கும்  என்று புண்ணியக்குஞ்சி எப்பவும் சொல்லுவார் . ,அந்தக்  கடிதத்தில
                   
                      " ................தேம்பிழி  மகர யாழின் வண்டுகள் கண்களோ !செம் மாதுளை முத்துகள் உன் புன்னகையோ !......." 

                              என்று   எங்கயோ இருந்து நல்ல இலக்கிய வரிகளை எடுத்து எழுதி இருந்தான்.ஆனால் முழுவதும் காட்டவில்லை, அதில தன்னோட பிளான் எழுதி இருக்கிறதா சொன்னான். அதை வருகிற விநாயகர் சதுஷ்டி அன்றைக்கு மாட்டுச் சாணியில பிடிச்ச பிள்ளையாரை ,கோவிலில் இருந்து ஊர்வலமா கொண்டுபோய் அம்மாச்சிய குளத்தில கரைக்கும் போது பவானிக்கு எப்படியும் கொடுக்கப்போறதா சொன்னான்.

                                "சும்மா எங்களுக்கு அவிக்காதை கண்ணா , அவள்  உன்னட்ட கடிதம் வேண்டிக் காதலிக்கிற டைப் இல்லைடா,,அவளோட  வாழ்க்கை அவள் படிச்சு ஒரு டொக்டர் ஆக வரும் கனவில இருக்கு,,நீ கிடந்தது பிசத்தாதை   பவானி கட்டாயம் வருவாள் எண்டு என்ன மூக்குச் சாத்திரம் பார்த்தா சொல்லுறாய்   "  என்று  ஜெகதீஸ் கேட்டான்

                            " டேய்,மச்சான்,,நீ இருந்து பார்,,,அவள்  கட்டாயம் வருவாள், போத்திலோடுக்கும் பயப்பிடாமல் மதிலுக்கு மேலால கையை நீட்டி கையில அடிச்சு சத்தியம் செய்து சொன்னாள்டா . மச்சான் நீங்கள் தாண்டா அண்டைக்கு எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டும் ,,உங்களை தான் நம்பி இருக்கிறன் டா "

                              என்று எங்கள் எல்லாருக்கும் பொதுவா சொன்னான்.   பவானி கையில அடிச்சு சத்தியம் செய்து  கொடுத்து இருந்தால்,,அது காதலுக்கு  பச்சைக் கொடி.அவள் அப்படி செய்து இருப்பாளா என்பது எங்களில் எல்லாருக்கும் குழப்பமா இருந்தது.சும்மா புலுடா விடுறானா என்றும் ஜோசித்தோம் ..டீச்சர் வீட்டில இல்லாத நேரம் பார்த்து  எப்படியோ அவன் அவளை மதிலுக்கு மேலால கதைச்சு இருக்கிறான் போல இருந்தது திரைக்கதை .

                                                         
                                   விநாயகர் சதுஷ்டி அன்றைக்கு  குளத்தடியில் நாங்கள் எல்லாரும் ரெடியா நிண்டம் .பவானியும் வந்து இருந்தாள்,கூ ட்டதோடு கூ ட்டமா அவள் பெண்கள் நின்ற பக்கம் ஒதுங்கி நின்றாள். அவளுக்கு எப்படி இந்த சனதுக்க நுழைஞ்சு கடிதம் கொடுக்கப் போறான் என்று எங்கள் ஒருவருக்கும் விளங்கவில்லை,குமாரவேல் ஐயா பூசை முடிச்சு,கற்பூரம் காட்டி பிள்ளையாரைக் கரைச்சு முடிச்ச கையோடு பவானி போக வெளிகிட்டாள் , ஏறக்குறைய அவள் குளத்துக் கரையத் தாண்டி , தார் ரோட்டையே கடந்திட்டாள் நாங்கள் அவனைப் பார்த்தோம்,அவன் பவானியைப் பார்த்துக்கொண்டு நின்றான் ,குமாரவேல் ஐயா பிள்ளையார் கரையிரதைப் பார்த்துக்கொண்டு நின்றார்..

                          "  பவாணி ,,நீ இல்லாட்டி  நான் உயிர் வாழ மாட்டேன் ,,.."

                       என்று கத்திக்கொண்டு சின்னக் கண்ணன் குளதுக்க பாஞ்சிட்டான், பாஞ்சு நடுக் கண்டத்துக்கு நீச்சல் அடிக்க  நாங்களே இதை எதிர்பார்க்க வில்லை , ஆனால் எங்களில் ஒருவன் குளதுக்க பாயமுதல் குமாரவேல் ஐயா வேட்டியை கழட்டி எறிஞ்சு போட்டு ,கட்டைக் கழுசானோட குளத்துக்கு விழுந்து நீந்திப் போக, வந்திருந்த பெண்கள் குளறிக்கொண்டு ஓட ,,பிறகு நாங்கள் அவரோட வேட்டியை எறிஞ்சு அதைப் பிடிக்க வைக்க குமாரவேல் ஐயா சின்னக்கன்ணனை ஒருகையால தலை மயிரில பிடிச்சு கொற இழுவையில்  இழுத்து மற்றக் கையால புற நீச்சல் அடிச்சு கரைக்கு கொண்டுவந்தநேரம்...பவானி  அந்த  இடத்திலையே இல்லை , குமராவேல் ஐயாவுக்கு கோபம் வந்திட்டுது,அவர் சந்தேகமா எங்களையும் பார்த்தார்...

                            " டேய் குறுக்கால  போன  செம்மரி..கோயில் குளத்தில குதிச்சு சாக்கப்போற நேரம் கண்டறியாத  காதல் , டேய் சொல்லடா இப்ப ,யாரடா பவானி..வாத்தியார் அம்மாவோடு பெட்டையே ,தறுதலைகள் உங்களுக்கு உதைகுரதுக்கு ஒரு ஒழுங்கான ஆள் இந்த ஊருக்குள்ள இல்லை ...,அடே  அறுவானே  இப்ப  உனக்கு செய்யுறன்  வேலை .."

                                       என்று அவனுக்கு அடிக்கப் போக நாங்கள் ஒரு மாதிரி அவனை இழுத்து தள்ளிக்கொண்டு போட்டம். .

                               சுவராசியமா ஓடிக்கொண்டு இருந்த படத்தில இடைவேளை விழுந்த மாதிரி அந்த சம்பவம் பவானி வீட்டில தெரியவர, டீச்சர் பஜனை பாட வந்த எல்லாரையும்  தாறுமாறாப்  பேசிக்கொண்டு திரிஞ்சது, பவானி துணிந்து சின்னக்கண்ணனைக் காதலிப்பதை  அம்மாவுக்கு சொன்னது, அவனோட ஓடிப்போகப்  பிளான் போட்டு இருந்தது  ,அந்தக் கதவழி பெலத்து   பவானி வீட்டில டீச்சரோட சண்டை பிடிச்சு,  உடம்பில மண்ணெண்ணை ஊற்றிப்  பத்த வைக்கப் போனது, பள்ளிக் கூடம்,டான்ஸ் கிளாஸ்  போகமாட்டேன் என்று படிக்கிற பாடப்  புத்தகம் எல்லாம் கிழிச்சு எறிஞ்சு அழிச்சாட்டியம் போட்டு,,,இதுகள்  எப்படியோ டீச்சர் வீட்டையும் கீரை விக்கக் கொண்டு போற " ப்ரேகிங் நியூஸ் "  குஞ்சரம் மூலமாக அப்பப்ப வெளியே கசிந்துகொண்டு இருந்தது     

                                      ஆனால் சில மாதங்களில், மாயக்காரன் மருந்துக்கு மசக்கை வந்த மச்சினி சுருண்டுபடுத்த மாதிரி  மதியாபரணம் டீச்சர் " அன்னவாசம்  "  வீட்டை வாடைக்கு விட்டுப் போட்டு , எடிகேசன் மினிஸ்ற்றியில்  இருந்த செல்வாக்கால் வேலையை  ட்ரான்ஸர் எடுத்துக்கொண்டு,  பவானியையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு போயிட்டா. அருச்சுனாவும் எங்கயோ ஸ்கொலசிப்பில் வெளிநாடு போகப் போறதா கதை அடிபட அவன்  குடும்பமும் கொழும்புக்கு மறுபடியும் போய் விட்டது . 

                               குளத்தடிக் குருப்பில் இருந்தவர்களும் அதிகம் விளையாட வருவதில்லை, சிலர் நிழலாக இயக்கங்களில் இணைந்து இயங்கத் தொடங்க.முக்கியமா உடல் வலு அதிகம் இல்லாத சின்னக்கண்ணன் ஒரு இயக்கத்துக்கு ட்ரைனிங் எடுக்க முதல் முதல் குளத்தடியில் இருந்து போட்டான்....அப்படி  பலர்  ஒவ்வொரு திக்கில் பிரிந்து போய் விட்டோம்.,,நானும் ஊருக்குள்ளே இல்லை,,,வேற இடத்தில நின்றேன். 

                                 சின்னக் கண்ணன்  ட்ரைனிங் எடுத்து முடிய அவன் இருந்த இயக்கம் ஒரு பெரிய அடிபாட்டுக்கு , முயல்குத்திக் காட்டுக்க ஒரு லொறி முழுவதும் சிலிண்டரில் சக்கை அடைந்து கொண்டு இருந்த நேரம், அதில் ஒரு சிலிண்டரின் டிக்னேடர் இறுகி தற்செயலாக வெடிக்க,எல்லா சிலிண்டரும் சேர்ந்து வெடிக்க  அந்த லொறியைச் சுற்றி நின்ற எல்லாருமே சிதறிப் போனார்கள். அதில டானியல்  என்ற பெயரில் அழைக்கப்பட்ட  சின்னக்கண்ணனும் ஒருவன். 

                                                               அவனோட பொடி முழுதாக கிடைக்கவில்லை, குத்துமதிப்பில் கிடைத்த சதை,எலும்புத் துண்டுகளைக் கூட்டி எடுத்து  ஒரு உரப்பையில் போட்டு அதை ஒரு சவப்பெட்டிக்க வைச்சு " திறக்கக்கூடாது  " என்று சொல்லி அந்த இயக்கம் ஐஸ்பழ மணியம் வீட்டில பகல் கொண்டு வந்து வைச்சுப்போட்டு , இரவே கல்லுண்டாய் வெளியில் கொண்டுபோய் எரிசுப்போட்டார்கள்.அந்த இயக்கத்துக்கு அந்த நேரம் நடுகல், நினைவுத் தூபி, மாவீரர் மயானம், இராணுவ மரியாதை , என்று எதுவுமே செய்யுமளவுக்கு அதிகாரங்கள் இருந்ததில்லை.  

                                      பித்துக்குளி சின்னக்கண்ணாவின் பிரேதப்பெட்டியைக் கட்டிப் பிடிச்சு அழுதான் என்றும், ஜேசுதாசன் அவன் தங்கச்சி மேரியுடன் வந்து சவப்பெட்டியின் தலைமாட்டில்  மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தான் என்றும் , ஜெகதிஸ்தான்  அங்கால இங்கால  போகாமல்  பக்கத்தில் நின்றான் எண்டும் மன்னார்  மாவட்டத்தில்  பண்டிவிரிச்சான் பெரியதம்பனைக்  காட்டில  நின்ற   நான் கேள்விப்பட்டேன், எப்படியோ  சின்னக்கண்ணன்  செத்த வீட்டில  எங்கள் நண்பர்கள் நின்றது பெருமையாக இருந்தது. 

                                                        இதெல்லாம் நடந்து   பல வருடங்களின் பின் கொழும்பில், வேலை செய்துகொண்டு இருந்த நேரம் காலி வீதியில் உள்ள  சவோய் தியட்டரில் இங்கிலிஸ் படம் பார்க்கப் போய்க்கொண்டு இருந்த நேரம் ஒருநாள்,ரோட்டுக்கு எதிரே இருந்த பஸ் தரிப்பில் மதியாபரணம் டீச்சரைப் போல ஒரு பெண்மணியைக் கண்டேன் . உறுதிப்படுத்த கிட்டப் போய் பஸ் ஏற நிண்ட சனங்களுக்குள்  மறைஞ்சு நிண்டு பார்த்தேன். டீச்சருக்கு தலை நரைத்து வயது போய் இருந்தாலும் முகத்தில அதே பழைய அடையாளங்கள் இருந்து .

                                         " டீச்சர் ,,என்னைத் தெரியுமா  " என்று கேட்டேன் .

                 கொஞ்சம் சந்தேகமாப் பார்த்தா, கிட்ட வந்து ,,இன்னும் கொஞ்சம் உற்றுப்  பார்த்து கொஞ்சம் சந்தேகமாப் பார்த்தா, முன் தலை மயிரை கையால ஒதுக்கி இன்னும் கொஞ்சம் சந்தேகமாப் பார்த்தா,பார்த்திட்டு 

                              "  ஹ்ம்ம்,,எங்கயோ ஊரில சின்ன வயசில பார்த்த முகம் போல இருக்கு,,ஆனால் யார் என்று மட்டுப்பிடிக்க முடியலையே ,,நீர்  ,,சொல்லுமன் நீர்  ஆர் என்று முதல்ல ,,என்னை முதலே நல்லாத் தெரியுமா ,,எங்க வைச்சு தெரியும்,,நீரே சொல்லுமன் அப்ப   " என்று கேட்டா .

                              நான் யார் என்று சொன்னேன். டீச்சர் பதறியடிச்சு கிட்ட ,ஓடிவந்து என்னை மேலும் கீழும் நம்பாமல் பார்த்து,,தலையை ஆச்சரியத்தில் ஆட்டிப்போட்டு ..

                           "   இதென்ன கனவா  இல்லை  உண்மையாதான் நான் உம்மை இங்கே பார்கிறேனா ,,,ஒண்டுமா பிடிபடுகுதில்லை ,,எண்ட கடவுளே..நீர் செத்துப் போனீர் எண்டெல்லோ கேள்விப்பட்டோம். எங்கட  மன்னோன்மணி அக்காவின்ட மகன்  எல்லே நீர் .." 

                            "  ஓம் டீச்சர் ,,யார்  உங்களுக்கு  நான்  செத்துப்போனதா  சொன்னது  "

                           " புண்ணியமூர்த்தி  மாமாவை   ஒருக்கா  தெமட்டக்கொடையில் கண்டு  கதைத்தேன் ,அவர்தான் ஊர்ப் புதினம் சொன்னார்,,அப்பத்தான்  சொன்னார்   " 

                         " புண்ணியக்குஞ்சி  இப்ப உசிரோடு  இல்லை..அவரைக் கிறிஸ்  கத்தியால  குத்திக் கொண்டுபோட்டாங்கள் "

                             "அய்யோ,,எண்ட,,சிவபெருமானே ,,என்ன  நடந்தது....மாமா  எனக்கு  ஹெல்ப் அந்த நேரம்,,ஜெகதிஸ்  ,,அந்த  பொடியன்  பவானிக்கு  கடிதம் கொடுத்த நேரம் ,,அவர்தான் வந்து  தலையைப் போட்டு  அந்தப்  பிரச்சினையை  முடிச்சு  வைச்சார்,,அய்யோ  கடவுளே,,குஞ்சியம்மா  பாவம்,,என்ன செய்யப்போறா  மாமா  இல்லாமல்  " 

                              " ஹ்ம்ம் ,, புண்ணியக்குஞ்சி  பாவம்  தான் , அந்தாளுக்கு வாய் சரி இல்லாட்டியும்,,நல்ல  மனுஷன் " 

                               "ஓம்,ஓம்,,நாங்க  இங்கால வந்து ஒதுங்கின பிறகு  ஊருக்குள்ள  நிறைய விசியம் நடந்து இருக்குப் போல  " 

                            "ஹ்ம்ம் " 

                               "  நீர்   இப்ப  என்ன செய்யுரீர், மன்னோன்மணி அக்கா இப்ப எப்படி  இருக்கிறா,  "

                              என்று கேட்டா..நான் செத்துப்போகவில்லை என்பதுபோல கையையும் காலையும் உதறிக் காட்டினேன்.ஆனால் நான் செய்துப் போனேன் என்றுதான் ஒரு கதை நானே ஊருக்க இல்லாத ஒரு நேரத்தில உலாவியது.நான் எப்படி செய்துப்போனேன் என்று பிறகு சொல்லுறேன். டீச்சர் அதுக்கு பிறகு எங்களின் ஊரில உள்ள ஆட்கள்,நடப்பு நிலவரம், என்னைப்பற்றியும்  கேட்டா. நான் கொழும்பில என்னமாதிரியான  கோழி குப்பையைக் கிழறுற வேலை செய்யுறேன், எங்கே பல்லி போல ஒட்டிக்கொண்டு வசிக்கிறேன் என்று சொன்னேன்.  பல விசியங்கள் எங்கள் அயலட்டை பற்றிக் கேட்டா.  ஊர் பற்றி எனக்கும் அதிகம் தெரியாது என்று சொன்னேன் 

                                "  ,நீர் செத்துப்போனது என்று கேள்விப்பட்ட நேரம் பவானி  சரியாக் கவலைப்பட்டாள்..இண்டைக்கு முதல் வேலையா வீட்டை போய் உம்மைப் பார்த்த இந்த செய்தியதான் சொல்லப்போறேன் " 

                          என்று சொன்னா.,சொல்லி கொஞ்சநேரம் ஏறவேண்டிய  பஸ்ஸை ரெண்டு தரம் எடுக்காமல்  என்னோட நிண்டு கதைச்சா, முக்கியமா பவானி, சின்னக்கண்ணன், கடைசி சம்பவத்தை வேண்டுமென்றே கதைக்க விரும்பவில்லை அல்லது அதைப்பற்றிக் கதைக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தது போல கேள்விகளிலும் பதில்களிலும் தேர்ந்தெடுத்து ஒதுங்கிப் போய்க்கொண்டு இருந்தா..

                          "  நாங்கள் இப்ப வெள்ளவத்தை அல்விஸ் பிளேசில் ஒரு பிளட் வேண்டி இருக்கிறம்,,இந்த வெள்ளிக்கிழமை என்னோட அப்பாவிண்ட ஆண்டு மாசியம் வீட்டில செய்யுறேன்,,,நானும் பவானியும் மட்டும் தான் சமைச்சுப்  படைக்கிறது ,,உமக்கு நேரம் இருந்தால் வெள்ளிக்கிழமை மத்தியான சாப்பாட்டுக்கு அப்ப வாருமன் ,,"

                                            என்று அட்ரஸ் எழுதித்  தந்தா. தந்துபோட்டு முக்கியமா இதை சொல்ல வேண்டும் என்பது போல 
                         
                                "  பவானி என்னோட தான் இருக்கிறாள்,கலியாணம் கட்டி ஒரு பிள்ளை. கொழும்பில பிசிகல் சயன்ஸ் படிக்க கம்பஸ் கிடைச்சுது,,நான்  அதுக்கு போக விடேல்ல,,,ஒரு  நல்ல சம்பந்தம் பேசிவர அதை செய்து வைச்சேன், பீ எஸ் ஸி  எஞ்சினியர் , மொரட்டுவ கம்பசில் படிச்சு ஹோனஸ்ட் கிளாஸ் அடிச்சவர் .அதோட அவரும் கொஞ்சம் தூரத்து வழியில சொந்தம் தான்..பிறகு கதைப்பம் எல்லாம் இப்ப  ரோட்டில நிண்டு கதைக்காமல், வீட்டை வாருமன் முதல் "

                                       என்று சொல்லிப்போட்டு கிருலப்பன  பஸ்சில  அடைஞ்சு ஏறிப் போட்டா 

                                   நான் முக்கியமாக பவானியை சந்திக்க வேண்டும் என்று இருந்தேன் .அதுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கு, உண்மையில் பவானியும் என்னைச் சந்திக்க கட்டாயம் விரும்புவாள்.ஏனெறால் என்னிடம் இருக்கும் சில முடிச்சுக்களின் முதலும் நுனியும் அவளால் மட்டுமே அவிழ்க்க முடியும். அதால வெள்ளிக்கிழமை எப்படியும் போறது என்று முடிவெடுத்து கட்டாயம் வருவேன் என்று சொல்லிப்போட்டு,அன்று படம் பார்க்க மூ ட் இல்லாமல் கோல்பேஸ் கடற்கரைக்கு போய் அலைகளைக் கொஞ்ச நேரம் பார்த்திட்டு இருட்டின நேரம் நான் தங்கி இருந்த இடத்துக்குப் போனேன். 

                                       வெள்ளிகிழமை  மத்தியானம் போய்  இறங்கின நேரம் வெள்ளவத்தை தற்காலிகத் தமிழர்களின் நெருக்குதலில் நடைபாதைகளைப்  பிதுக்கிக்கொண்டு இருந்தது. சிங்கள ஆட்டோக்காரங்கள் சீலை கட்டி பொட்டு வைச்ச இளம் பெண்களுடன் தமிழில் கதைச்சுக் கொண்டு இருந்தாங்கள் . காலி வீதிப் புழுதி பாதையோரச் சுவர்களில் தனிச் சிங்களச் சட்டம் போல படிந்து போய் இருந்தது . 

                                        வெள்ளவத்தை பொலிஸ் ஸ்டேசனுக்கு முன்னால பொலிஸ் ரிப்போட் எடுக்க நிறையத் தமிழர்கள் வெயிலில் நிண்டுகொண்டு இருந்தார்கள்.சென்றியில் இருந்த போலீஸ்காரன் துவக்கில தட்டி தட்டி " பெம்மந்திய மாகே பிறேமக் கத்தாவ.. ,," என்று ரொமான்ஸ்  பாட்டுப் பாடிக்கொண்டு இருந்தான்.  மவுலானா ஹோட்டலில் இரவுக்  கொத்து ரொட்டிக்கு பகலே  மாவைப்போட்டு உருடிக்கொண்டிருந்தான் சேட்டுப் போடாத  கொத்து மாஸ்டர் ..ஒரு வயதான புத்தபிக்கு பனைஓலை விசிறியை விசிக்கிக்கொண்டு கடைப் பெயர்ப் பலகைகளை விடுப்பு விட்டுக்கொண்டு போனார் 

                                         அல்விஸ் பிளேசில் டீச்சரின் வீட்டைக் கண்டு பிடிக்க அதிகம் கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை, அது ஒரு அண்மையில் கட்டிய பிளட் . மூன்றாவது மாடிக்கு படியேறிப்போய்க் கதவு மணியை அமுக்க உடன கதவு திறக்கவில்லை...கொஞ்ச நேரத்தில் கதவில தட்ட  மெல்ல நீக்கலாக கதவு திறக்க பவானியின் முகம் தெரிந்தது  .அந்தப் பழைய முகம்  என்னை ஆச்சரியமா பார்த்து
      
                                   " வாங்கோ..வாங்கோ...எவளவு  வருஷதுக்கு பிறகு,,ஆட்கள் எல்லாம் அடையாளம் மாறி,,ஹ்ம்ம்,,,எப்படி  இருக்குரிங்க ,,ஊர் நினைவுகள்  பழையபடி வருகுது ..அம்மா சொன்னா உங்களை பஸ் ஹோல்டிங் பிளேசில் கண்டு கதைத்த சம்பவம்.." 

                                   என்றாள், அவளும் நிறைய மாறி இருந்தாள்  . உடம்பு வைச்சுக் குண்டாக இருந்தாள். அதிகம் சந்தோசமாக  சிரிக்கவில்லை, நட்பாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். டீச்சர் வந்து   

                         " சமையல் முடிஞ்சுது ,நான் கீழ போய்   மார்கெட்ல  சிங்களவன் கடையில் வாழையிலை போய் வேண்டிக்கொண்டு வாறன் ,,நீர் பிள்ளையோட கதையுமன் " 

                                  என்று போட்டு போயிட்டா ,,டீச்சர் போன உடன  பவானி முகத்தில படார் என்று  ப்லோரோசன்ட்  லைட் எறிஞ்சுது.சோபாவில எனக்கு முன்னால வந்து இருந்தாள்....நான் என்ன கேட்பாள் என்று நினைச்சேனோ அதையே முதல் கேள்வியாகக் கேட்டாள்...

                                  "  உங்களுக்கு  ஏன் நான் கொழும்புக்கு வந்தனான் என்று தெரியும் தானே,  ஹ்ம்ம் ..திருவெம்பாபஜனை  ..அந்த அனுபவம்.. அது ஒரு முதல் அனுபவம்..ஆனால்    பயங்கரமான  அடி ,  எனக்கு  ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்தது எண்டு இன்னும்தான் விளங்கவில்லை ,,,,ஹ்ம்ம்  ...சின்னக்கண்ணன் இப்ப எங்க,,"

                          "  ம்.....ம்....உங்கள் கணவர் இப்ப எங்க,,ஏன் அம்மாவோட தனியா இருகுரிங்க .."

                                "   என்ன நான் முக்கியமான் கேள்வி கேட்கிறேன் நீங்க என்னமோ கேட்குறிங்க ,,என் மனுஷன் சிங்கப்பூரில,, சிவில் என்ஜினியர், வருசத்தில மூன்று  மாதம்  இங்கே  வந்து  நிப்பார்..அதை  விடுங்கோ  ..சின்னக்கண்ணன் இப்ப எங்க,,"

                                  "   ம்.....ம்,,,,நீங்க  கொழும்புக்கு வந்த  நேரத்தில  நாங்க  நினைச்சம்  நீங்க அருசுனாவை தான் கலியாணம் கட்டுவிங்க, என்று ,அருச்சுனா இப்ப எங்க  "

                                   "  அருச்சுனா அவுஸ்ற்றேலியாவில் ,,சொப்ட்வார் எஞ்சினியர் ...   நீங்க  என்றால்  யார் ,,சின்னக் கண்ணனும் அப்படி நினைச்சானா  ...ம்,,அவன்  நினைச்சு இருக்க மாட்டான்,,,,நான் அவனை உயிருக்கு உயிரா நேசித்தேன் .ஆனால்  ஏன் அப்படி லூசூ போல நேசித்தேன் என்று இண்டைக்கு வரைக்கும்  எனக்கு விளங்குதில்லை ,,ஆனால் உயிருக்கு உயிரா நேசித்தேன்..சரி சின்னக்கண்ணன் இப்ப எங்க,"
                  
                                "     ம்..  "

                                "   என்ன எல்லாத்துக்கும் ம் என்டுரிங்க,,"

                                "வேற  என்னதான்  சொல்ல முடியும்  "

                                             "  அவனும் இப்ப கலியாணம் கட்டி குழந்தைகளுடன் இருப்பான்,,,,ஆனால் என்னை மறக்க மாட்டான்,,,அது மட்டும்  நடக்காது ,,அது சரி உங்களுக்கு நினைவு இருக்கா ஒரு நாள் பஜனைக்கு வந்த அருசுனாவை சின்னக்கண்ணன் அடிச்சு நொருக்குவேன் என்று எனக்காக  வெருட்டினது .."

                            "அது  தெரியாது, பித்துக்குளி  என்னவும்  சொல்லி இருப்பான்  "

                                          " எனக்காக  என்  காதலுக்காய் யாரையும்  மோதும் அந்த கட்ஸ் பிடிக்கும் ,    எனக்கு அந்த கட்ஸ் பிடிச்சு இருந்தது ,,அப்படிதான்  காதலிக்க வேண்டும் ,,சரி  இப்ப சின்னக்கண்ணன் இப்ப எங்க,,"

                                          "    ஹ்ம்ம் .. ஹ்ம்ம் .."

                               "   நாலஞ்சு தரம் பின் மதிலுக்கு மேலால கதைச்சம்,,ஹ்ம்ம்,,ஒரு ஆயுளுக்கு காணும்  அது,,ஒரே  பகிடி,,உங்கள்  எல்லாரையும்  வைச்சு ஒரே பகிடி  சொல்லுவான்.."

                             "  அப்படியா "

                                 "  நீங்க மேரியிட்ட  ஜெயந்தியோட கதைச்சதுக்கு  பேச்சு வாங்கினது ,பித்துக்குளி களவா மோதகம் எடுத்து வேட்டிக்க வைக்க வேட்டி அவிண்டு விழுந்தது ,,ஜேசுதாசன்  அக்கோடியன்  பிழை பிழையா வாசிக்கிறது ,,

                                     " ம்,  எல்லாம்  எங்கக்  காலக் கொடுப்பினை "

                                           "  ஹ்ம்ம்  .சிரிச்சு  சிரிச்சு  வயிறு நோகும், அவனோட கதைகளைக்  கேட்க ,"

                                        " ஒ ...இந்த சம்பவம் எங்களுக்கு தெரியாது ,,நீங்க சொல்லித்தான் தெரியும் இப்ப , அவன் குளத்தில பிள்ளையார் கரைக்க வந்த நேரம் உங்களுக்காக குளத்துக்க பாஞ்சான்,,அது  தெரியுமா .."
                                           
                                     "   ஹ்ம்ம்,தெரியும், குமராவேல் அய்யர் வீட்டை வந்து அம்மாவுக்கு  சொன்னார் எல்லாம்,எனக்கு என்னவோ அன்று மனநிலை சரியில்லை, அதால உடன வீட்டை வந்திட்டேன்,,ஆனால் ஒண்டு தெரியுமா அன்றைக்கு நான் ஒரு கடிதம் எழுதிக்கொண்டு வந்தேன்  ரகசிமாக் கொடுக்க,,ஆனால் கொடுக்க முடியாமல் இருந்தது,,,அதை  ஜோசிக்க நெஞ்செல்லாம்  நோகிற  மாதிரி  இருந்தது,,சரி  அதை  விடுங்க  ..சின்னக்கண்ணன் இப்ப எங்க,," 

                       
                          "   நாசமாப் போச்சு,,,அவனும் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதிக்கொண்டு வந்தான் அன்று கொடுக்க.."

                                "  என்னது  உண்மையாவா  சொல்லுரிங்க,,நீங்க  அதை வாசித்திங்களா,,என்ன  எழுதி இருந்தான் அதில,  அய்யோ, எல்லாப் பிளானும் நடக்காமல் போயிட்டுதே ..சரி அதை விடுங்க  நீங்க  இதுக்கு  பதில் சொல்லுங்க ..ப்ளிஸ் ,,ப்ளிஸ் .. சின்னக் கண்ணன் இப்ப எங்க,,

                               "   ம்..நான் அதில சில வரிகள் தான் வாசித்தேன்...அவன்  முழுவதும் காட்டவில்லை ..."

                                      " சின்னக் கண்ணனை நான் கலியாணம் கட்டதான் நிறையப் பிளான் போட்டேன் "

                                          "   ம் "

                                      "  அவன் பெரிய பைலட் வேலை செய்து என்னைக் காப்பாற்ற வேண்டும் எண்டு நினைக்கவில்லை,ஒரு நேரம் ஒரு சோறு சாப்பிட்டு அவனோட வாழ்ந்து இருந்தாலும் சந்தோஷமா இருந்து இருப்பேன் "

                                          "   ம் "

                                    " காதலோடு வாழுற வாழ்க்கை போல இந்த உலகத்தில் எதுவுமே இல்லை "

                                          "    ம் "

                                      " அவன் இப்ப  என்னை விட ஒரு நல்ல பெண்ணைக் கட்டிக் ,குழந்தை குட்டி என்று சந்தோசமா இருப்பான்,,அவன் அப்படிதான் இருப்பான், எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவன் சந்தோஷமா இருக்க வேண்டும்,,அவன் கட்டாயம் இருப்பான் "

                                             "   ம் "

                                        " அவன் எப்பவுமே உங்களைப் பற்றி சொல்லுவான்,,ஹஹஹா  உழவாரம் எண்டுதான் உங்களை சொல்லுவான்,,சிரிப்பா இருக்கும் அந்தப் பட்டப் பெயரைக் கேட்டால்,,உங்களுக்கு ஏன் அப்பிடிப் பெயர் வச்சாங்கள் "

                                                   "     ம் "

                                               " மேரி இப்ப எங்க ,,அண்டனிப்பிள்ளை மாஸ்டர்..ஜோசப்பின் அக்கா இப்ப எங்க இருக்கினம் "

                                               "   ம்,,தெரியாது "

                               " ஜேசுதாசன் இப்ப எங்க ,,பாஸ்டர் ஆகிட்டானா  "

                                                   "  இல்ல  ,,அவன்  புவனேஸ்வரியை  இழுத்துக்கொண்டு ஓடிட்டான் ,,,ஹ்ம்ம் ,  "

                                         " என்ன சொல்லுரிங்க. புவனா  என்னோட நல்ல  பிரெண்ட் , பஜனை  பாடுவாள்  நல்லா  "

                                       "  நடந்ததத்தான்  சொல்லுறேன்,,ஜேசு  இப்ப  எங்க  என்று  யாருக்கும் தெரியாது "

                                           " ஹ்ம்ம்,,  எனக்கு  விளாத்தியடி  ஒழுங்கை  எப்பவும்  கனவில  வரும்,,ஹ்ம்ம்,, எவளவு  மிஸ் பண்ணிட்டேன் "

                                     "   ஹ்ம்ம்,,ம்.. அது  உண்மைதான்..ம் ,,ம்  "

                                    "  என்ன ம் ...ம். ....இனி  ம்  ம் என்று சொன்னால் எனக்கு விசர் வரும் ..சின்னக் கண்ணன் இப்ப எங்க,,சொல்லுங்க..அவன்  எப்படி  இருக்கிறான் என்றாவது அறிவமே  அதுக்கு தான் கேட்கிறேன் ..ப்ளிஸ்  சொல்லுங்க "

                                   " ஜெகதீஸ் ,,உங்களின்  வீட்டு விளாத்தியடி ஒழுங்கை தொடக்கத்தில் இருந்த வீடு ,,தெரியும்  தானே , நல்லா கிரிகெட் விளையாடுவான் ,ஹ்ம்ம், அவன்  திருக்கார்த்திகை விளக்கீட்டு  நாளன்று குளத்தில சவால் விட்டு நீந்தப் போய் சுழி இழுத்து செத்துப்போனான் "

                                          " அய்யோ...உண்மையாவா சொல்லுரிங்க,,,ஹ்ம்ம்  ஜெகதீசுக்கு   என்னில  ஒரு  விருப்பம்  இருந்தது,ஆனால், 

                                    " ஹ்ம்ம், "

                                       "நான்  சின்னக்கண்ணக்கு   ஓம் எண்டு முதலே சொல்லிபோட்டேன்,,அதால  அவனுக்கு என்னில கோபம்  அப்ப இருந்தது,பாவம் அவன் ,கவலையான  செய்தியா இருக்கே  இது "

                                  " ஹ்ம்ம், ஏன்  நீங்க பிசிக்கல் சயன்ஸ்  படிக்க  கொழும்பு கம்பஸ் கிடைச்சும் படிக்கப் போகவில்லை..நாங்க  நினைச்சம்  டொக்டரா வந்திருப்பிங்க என்று  .   "

                                 " இப்ப அதுவா முக்கியம் ..ப்ளிஸ் சொல்லுங்க ..அம்மா வரமுதல் சொல்லுங்க,,நான் சில விசியம் அவனுக்கு சொல்ல வேணும்,,நான் சொன்னால் நீங்க தொடர்பு ஏதும் எடுத்து சொல்லுவிங்களா  "

                                       " அவனே  இனித்   தொடர்பு எதுவுமே  எடுக்க முடியாத  இடத்துக்குப்  போய்ச் சேர்ந்திட்டான் "

                                     " ஓ,,வெளிநாட்டுக்குப்  போட்டானா,,எனக்கும் சொன்னான்  வீட்டில  கஷ்டம்  அதால  டுபாய்  போகப்போறதா  , அங்கே அவனோட சித்தப்பா  எண்ணைக்  கொம்பனியில்  வேலை  செய்யுறதா ,அதுவா சொல்லுரிங்க "

                                   " இல்லை,,இது  வேற  இடம்,,,ஹ்ம்ம் .."

                                "பாவம்,,அந்தப்  பாலைவனத்தில  வெய்யிலில்  கிடந்தது  கஷ்டப்படுவான் , வேலை  முடிஞ்சு  வியர்த்துக்  களைத்து வரும்போது  என் சேலைத்தலைப்பால் அவன்  முகத்தை துடைத்துவிட  நான்  பக்கத்தில்  இருந்தால்  எவளவு  சந்தோஷமா இருக்கும்,  நான்  தான்  அதுக்குக் கொடுத்துவைக்கவில்லையே   " 

                                    " அவனே  இனித்   தொடர்பு எதுவுமே  எடுக்க முடியாத  இடத்துக்குப்  போய்ச் சேர்ந்திட்டான் "

                                    "   என்ன சொல்லுரிங்க , பிளிஸ்  சின்னக்கண்ணன்  இப்ப  எங்க ,,அட்ரஸ்  அல்லது டெலிபோன்  நம்பர்   உங்களிடம்  இருக்கா ,பிளிஸ் "

                                  "ஹ்ம்ம்,, இப்பவாவது உண்மையைச்சொன்னால்  என்ன  என்று  நினைக்கிறன்,,ஹ்ம்ம்,,உங்க  கனவுகளின் பெறுமதியைக்  குழப்ப விரும்பவில்லை  " 

                                       " சொல்லுங்க  ஒரு கடிதம்  போட முடியுமா , அவன் மனுசிக்கு தெரிந்தாலும்  பரவாயில்லை  நான் மன்னிப்புக்  கேக்க வேண்டும் அவனிடம் "

                                  " அவனே  இனித்   தொடர்பு எதுவுமே  எடுக்க முடியாத ,தபால் பெட்டியோ,,போஸ்டல்  அட்ரஸ்சோ இல்லாத  இடத்துக்குப்  போய்ச் சேர்ந்திட்டான் "

                                   " என்ன சொல்லுரிங்க ,,ப்ளிஸ்  சொல்லுங்க ,,அம்மா வரப்போறா "

                                        " அவனே  இனித்   தொடர்பு எதுவுமே  எடுக்க முடியாத  இடத்துக்குப்  போய்ச்சேர்ந்திட்டான் "     

                                       "  சொல்லுங்க  அம்மா வரமுதல்  சொல்லுங்க,,அம்மாவுக்கு  இந்தப் பழைய கதைகள் கேட்டால்  என்னோட  சண்டை பிடிப்பா, இப்ப  அம்மாதான்  எனக்கு ஒரே துணை,,ஆனால்  எல்லாம் அம்மாவிடம் சொல்லி அழ முடியாது,,சின்னக்கண்ணன் , அவன் முகம்  எப்பவும் மறக்க முடியவில்லை,,  "                        

                       " ஒன்றுமில்லை,,கொழும்பு   உங்களுக்கு  பிடித்து  இருக்குதா "
                                   
                                             " நான் முடிவு எடுக்க  துணிவில்லாமல் சில பிழை விட்டுடேன்,,அதுக்கு  அவனிட்ட  மன்னிப்பு கேட்கவேண்டும் .. ,ப்ளிஸ் அவன் இப்ப எங்க இருக்கிறான் அதையாவது ப்ளிஸ் சொல்லுங்க "

                                    " அவனே  இனித்   தொடர்பு எதுவுமே  எடுக்க முடியாத  இடத்துக்குப்  போய்ச் சேர்ந்திட்டான் "

                                 "என்ன  சொல்லாமல்  என்னத்தையோ  மழுப்புரிங்க ,,பிளிஸ்  சொல்லுங்க  சின்னக்கண்ணன்  இப்ப  எங்க  இருக்கிறான்,,பிளிஸ்,,ப்ளிஸ் ..எனக்கு  நெஞ்சு நோகுது ,,ப்ளிஸ்  என்  கண்ணன்  எங்கே  ,,பிளிஸ்  " 

                                "  ம்,,,அதுதான் எனக்கும்    குழப்பம் ,,சொல்லலாமா என்று ஜோசிக்கிறேன்...." 

                                       "என்ன  நடந்து இருந்தாலும்  சொல்லுங்க  பிளிஸ் ,,பிளிஸ்  ,அவன்  என் அரைவாசி  உயிர் "

                                " அவனே  இனித்   தொடர்பு எதுவுமே  எடுக்க முடியாத  இடத்துக்கு எப்பவோ   போய்ச்சேர்ந்திட்டான் "

                                   "   என்ன  திருப்பி  திருப்பி  ஒரே பல்லவியை  சொல்லுரிங்க "

                        " அவனே  இனித்   தொடர்பு எதுவுமே  எடுக்க முடியாத  இடத்துக்குப்  போய்ச் சேர்ந்திட்டான்  அதுதான்  உண்மை  "

                                    என்று கதைச்சுக்கொண்டு இருக்க ,ஒரு சின்ன ஆண் குழந்தை அழும் சத்தம் வர ..

                             " கொஞ்சம் இருங்க கண்ணனை படுக்க வைச்சன்,,எழும்பிட்டான் போல,,அவன் ஒரே குழப்படி ,,ஹ்ம்ம்,,,கண்ணன்  வீட்டில  நான் மட்டும் அவனைக் கூப்பிடுற  பெயர் ,,பேர்த் செட்டிபிகேட்டில்  அம்மாவும் ,எண்ட மனுசனும் சேர்ந்து  வைச்ச வேற பெயர் இருக்கு ,,ஹ்ம்ம்,,கொஞ்சம்  இருங்க,,,டக்  என்டு  வாறன்  " 

                                       எண்டு எழும்பிப் போனாள். பவானி திரும்பி வரமுதல் டீச்சர் கதவைத் திறந்து கொண்டு உள்ளுக்க வந்தா,,பவானி வந்து பழையபடி சாப்பாட்டு மேசையில் சாஞ்சுகொண்டு நின்றாள் 

                              " முக்கிய வேலை முடிஞ்சுது ,,இனிச்  சாப்பிடலாம் ..சிங்களக் கடைக்காரன் நல்லா தமிழ் இப்ப கதைக்கிறான், வாழையிலை வேணும் எண்டு கேட்டவுடன   மணிவாழை இலை வேணுமா அல்லது தலை வாழை இலை வேணுமா எண்டு பகிடி விடுறான் " 

                                          எண்டு சொல்லி சிரிச்சா.அதுக்கு நான் கொஞ்சம் சிரிச்சேன்.பவானி சிரிக்கவில்லை. அதுக்கு பிறகு டீச்சரின் அப்பா படத்துக்கு படையல், பிறகு சாப்பாட்டு, அது முடிய எவசில்லர் தம்ளரில் டீச்சர் பாயசம் தந்தா,ஒரு சின்னத் தட்டில உளுந்து வடை தந்தா 

                             " வடை நான் எப்ப சுட்டாலும் கோணல் மாணலா வருகுது,,ஒரு நாளும் வட்டமா வருகுதில்லை எனக்கு,,சில சனங்கள்  நல்ல வட்டாம சுடுதுகள் "  என்றா 

                                           "    வடை போலதான் வாழ்கையும் எப்பவும் வட்டமா வராது டீச்சர் ,,அதிகம் கோணல் மாணலா தான்  வரும்  " 

                                           என்று சொல்ல நினைச்சேன் ..ஆனால் சொல்லவில்லை.  நான் என்ன நினைச்சேன் என்பதை பவானி என் முகத்தில வாசித்த மாதிரி சின்னதாக வாய்க்குள்ள  சிரித்தாள் . அதுக்கு  பிறகு டீச்சர் மட்டுமே என்னோட கதைச்சா 

                            "  நாங்கள் ஒரு மாதிரி சண்டைக்குள்ள மாட்டாமல் கொழும்புக்கு ஓடி வந்திட்டம்,,அங்கே அம்பிட்ட சனங்கள் அல்லோல கல்லோலம்பட்டுகொண்டு இருக்கிறதை இங்கே பேபரில்  வாசிக்க உண்மையா கவலையா இருக்கும். எனக்கு அரசாங்க உத்தியோகம்,,அதலா பொலிஸ் ரவுண்ட் அப்  பிரசினை இங்கே அதிகம் இல்லை. இங்கே வீட்டைச்  சுற்றிவர சிங்களவர் தான் .ஆனாலும் இங்கேயும் பயம் தான் ,,சொல்லேலாது எந்த நேரம் என்ன நடக்கும் எண்டு,,நல்ல சிங்களவர் ஓகே..மோட்டுச் சிங்களவருக்கு சரியான துவேஷம் இருக்கு   " 

                                      என்று நாட்டுப் பிரச்சினை சொல்லி கொண்டு இருந்தா. முக்கியமான ஒரு கேள்விக்கு முக்கியமான ஒரு விடையை நான் சொல்லுவேன் என்று எதிர்பார்த்துக்கொண்டு  பவானி வேற ஒரு உலகத்தில இருந்தாள். அந்த சந்தர்ப்பம் ஆரம்பத்தில்  இருந்தும் நான் சொல்லவில்லை . டீச்சர் சொல்லுறதுக்கு சும்மா மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டிருந்தேன் . 

                                கொஞ்ச நேரத்தில் , வாழை இலை போட்ட சாப்பாட்டுக்கு டீச்சருக்கும் ,வீட்டுக்கு வரவழைத்து கதைத்ததுக்கு  பவானிக்கும்  சொல்வது போல  நன்றி சொல்லிப்போட்டு வெளிக்கிட  பவானி நூலறுந்த பட்டம் போல பார்த்தாள் .

                                             நான் எதுவுமே சொல்லாமல் வந்திட்டேன். வெளியே காலி வீதியில் குழல் விளக்கு வெளிச்சத்தில் காகித தோரணம் கட்டி  சிங்கள நாட்டியக்காரி ஒருத்தி நடனமாட அதைக்க கடந்து போனது நினைவு இருக்கு.  அதுக்குப்  பிறகு மிகப் பல வருடங்களாய் அவர்கள் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. 

                              சில நாட்கள் முன்தான் கேள்விப்பட்டேன் மதியாபரணம் டீச்சர் கனடா பிரிட்டிஸ் கொலம்பியாவின் தலை நகரம் வன்கூவரில் செத்துப்போனா என்று.  அவளவுதான் அதுக்கு மேலே ஒன்றுமே தெரியாது..