Wednesday, 26 April 2017


திண்ணையில  விழுந்தவளுக்கு திட்டுக்கெண்டு வந்திச்சாம் கலியாணம்  என்று ஒரு பழங்கதை இருக்கு. அது பழையகால மனிதர்கள் பழையகால மனிதர்களுக்கு சொன்னது என்பது போல இருந்தாலும் அதில வாற அபத்த சம்பவங்கள் போலவே நிஜ வாழ்க்கையிலையும் பல சம்பவங்கள் நிகழும். அதில் அச்சுறுத்தல் போலவே பதுங்கி இருக்கும் சின்னத் திருப்பங்கள் ஒரு முழுமையான  மனிதனின்  உணர்வோடு விளையாடி கடைநிலைக்கும்  இறக்கிவிடும் , கொஞ்சம் கஷ்டமான நிலைமைதான் அப்படி எதிர்கொள்ள நிகழும்போது

                                      நோர்வேயில் மனநிலைகளை இலகுவாகப் பிரட்டிப் போடும் சமநிலை அற்ற வாழ்க்கைமுறை  நிறையவே இருக்கு. வாழ்க்கைத் தரத்தை நிலத்தில இருந்து பத்தடி உயர்த்தி வைத்திருக்கும் பணக்காரா  நாடு வேறையா அதனால மனநிலை குழம்பியவர்களை கவனமாகப் பராமரிக்கும் சமூக உதவித் திட்டங்கள் சிறப்பாக செய்து வைத்திருக்க்கிறார்கள். இந்த   தலையைப் பிடிக்காமல் வாலை வைச்சு உருவும் முரண்பாட்டின் பல அபத்தமான கலாச்சாரக் குழப்பம் அதன் முகத்தில் இருந்தாலும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள நோர்வே ஒரு அழகான  நாடுதான்  .

                                            இந்தக் கதைக்கு நோர்வேயை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை,  நாலு காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது நாலுபக்கமும்  காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும் என்ற  காதலில்  எதிர்ப்பார்ப்புக்கள்  பொய்த்துப் போகும்போது அந்த வீழ்ச்சியத் தாங்கும்  சக்தி எல்லாருக்கும்  இருப்பதில்லை. சிலர் அடியோடு மாறி விடுவார்கள். அந்த  அன்பின் அடியில்  இருந்து எழும்பிவராமல் , அல்லது  எழும்பிவர  விருப்பம்  இல்லாமல் கிடைத்த  ஒரேயொரு  வாழ்கையைத்  தாங்களாவே திசை திருப்பிவிடுவார்கள். அதுக்கு  முக்கியகாரணம் காதல்தான் .

                                            அத்தான்  இப்ப  எப்படி இருப்பார் ?,  முன்னர் இருந்ததை விடவும்  முன்னேற்றமாய்  இருப்பாரா ?, அல்லது அதைவிடவும் வாழ்க்கையைச்  சிக்கலாக்கி  சின்னாபின்னமாகிய மனநிலையில் இருப்பாரா ?, அல்லது அதிஸ்டமாக மீண்டு  பழைய மிடுக்கோடு உயிர்தெழுந்துவிட்டாரா ?,  அல்லது உயிரோடுதான் இருப்பாரா ?  என்று எனக்குத் தெரியவில்லை. கடைசி வரியை எழுதும்போது சாவு பற்றிய பயன்கள் இல்லாத போதும் மனது கனக்கத்தான்  செய்கிறது.

                                                      வாழ்க்கைப் பாதை ஒரு வட்டம்போல தொடங்கிய  இடத்தில்  அல்லது ஏதோவொரு சந்தர்ப்பத்தில்  சந்தித்த இடத்தை இன்னொருமுறை தொட்டுச்செல்லும் சாத்தியங்கள் எப்போதும் நாங்கள்  நினைத்தபடி தட்செயலாகவும்  நடப்பதில்லை. அப்படி நடந்தால் அதுக்குப் பெயர் வாழ்கையும் இல்லை. அப்படித்தான் ஊரில  புண்ணியக்குஞ்சி எப்பவும்  கோடாப் போட்ட வழக்கம்பரை  சுருட்டுப் பத்திக்கொண்டு சொல்லுவார். அப்படியான ஒரு திசையில் தான் அத்தானின் வாழ்க்கை திசை மாறியது


                                   எல்லாரும் அவரை அத்தான்  என்று சொல்வதால்தான் நானும் அத்தான் என்று சொல்வது. மற்றப்படி அவர் என் கூடப்பிறந்த அக்காவின் கணவரோ,  ஒன்றுவிட்ட அக்காவின் கணவரோ, அல்லது  தூரத்து  உறவுமுறையான அக்காவின் கணவரோ   இல்லை. எங்கள் ஊரைச் சேர்ந்தவரும் இல்லை. ஏதோவொரு உரைச் சேர்ந்த   எல்லாருக்கும் பொதுவான  அத்தான். அத்தான் அந்த உறவுமுறை சொல்லும்  பெயர் , அந்த அன்பின்  அழைப்பு   எவ்வளவு  அன்பான நெருக்கத்தின்  பெயர் சொல்லும் வார்த்தை. அத்தானும் அப்பிடித்தான் அன்பானவர்.

                                          நோர்வேயில் அவர் வசித்த காலத்தில் எனக்குத்  தெரிந்து அவர் கலியாணமே  கட்டியதில்லை. தனியாகத்தான்  இருந்தார். அதுவும்   நோர்வேயில் இருந்தார். ஆனால் ஒரேயொரு முறைதான்  காதலித்தார். அதுவும் இந்த நோர்வேயில். அதுவும் நோர்வே நாட்டு வெள்ளைப் பெண்ணை. அந்த ஒருதலைப்பட்சமான காதலில்தான் அவருக்கு ஒருநாள்  நடந்த ஒரு  சம்பவத்தில் எதிர்பாராத நேரத்தில் கரண்ட் சோர்ட்சேர்க்கிட்டில்  பிசகி அடிக்குமே  அதே  மாதிரி மண்டையில்   பியூஸ் போனது.

                                          கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம் போல அவரோடு பலவருடம்  பழகியிருக்கிறேன் . ஒருநாளும் அவர் வாயால் எதற்காக அவருக்குப்  பியூஸ்  போனது என்று சொன்னதேயில்லை. அதைவிட அவர்  தனக்கு  மண்டைக்குள்  குழப்பம்  குடியிருக்கு என்று அவராக ஒத்துக்கொண்டதில்லை. மனநிலை பிறழ்வான மனிதர்கள் ஒருபோதும் அப்படி  உண்மையை நாலு பேருக்கு தெரியும்படி ஒத்துக்கொள்வதில்லை. அல்லது ஒத்துக்கொள்ளும் தைரியம் இருப்பதில்லை. இப்பிடி அடாத்தாக இருப்பதால் மருத்துவ உதவியும் பெற விரும்பமாடார்கள்

                                          முப்பது சொச்சம் வருடங்களின் முன் நோர்வேயிட்குப் படிக்க வந்த   அத்தான் வேலை  செய்யமுடியாத நிலையில் உள்ளவர்கள் வசிக்கும்   ஒரு சமூக உதவித்திட்டத்தில் கொடுக்கப்பட்ட தனியான  அப்பார்ட்மெண்ட்டில்  மிகத்  தனிமையாக  புரநகர  ஒஸ்லோவில்   வசித்தார்.  அவர்  என்ன  படித்தார்  என்று  எனக்குத்  தெரியாது. பலருக்கும்  தெரியாது. காரணம் அவர் படித்த போது  வசித்த  நகரம் தென் மேற்கு நோர்வேயில் உள்ள ஒரு தனிமையான நகரம். இலங்கைத்  தமிழர் அந்த நகரத்தில் ஒருசிலரே வசித்ததாகக்  கேள்விப்பட்டிருக்கிறேன் .

                                                       பல  வருடங்களின்  முன் வேலை இல்லாத  ஓய்வு நாட்களில் அவரின் வீட்டுக்குப்  போவேன்.  அவர் வீட்டுக்கு  வேற யாருமே காளாஞ்சி கையில  கொடுத்துக் கெஞ்சிக் கேட்டாலும் போவதில்லை, வருவதில்லை. நானும் அங்கே  போவதுக்கு  விஷேடமான காரணம் என்றும் சொல்வதுக்கு  ஒன்றைத்  தவிர வேற ஒரு  காரணமென்று  ஒன்றுமில்லை . வேறென்ன  கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை எண்டது  போலத்  தண்ணி அடிக்கத்தான் போறது.

                                            அத்தான் தனியாகக்  குடிக்க மாட்டார். நான்  போனால்தால் வசந்தமண்டபத் பூசை ஆரம்பிக்கிறது. அவர் குடிச்சாலும் நல்ல தெளிவாகக்  கதைப்பார். நான்தான் வெறி ஏற  ஏற விசர்க்குனமும் சேர்ந்து ஏறி ஒரு கட்டத்தில் முழு விசரன் ஆகிவிடுவேன் . ஆனால் ரெண்டு பேரும் பல விசியங்கள் அப்போதுதான் மனம் விட்டுக் கதைப்போம். அத்தான்  மற்ற நேரங்களில் அநாவசியமாகக்  கதைக்க மாட்டார். கவலையாகவும்  இருக்க மாட்டார்.  சந்தோஷமாயும் இருக்க மாட்டார்   ஆனால் ஆதாரமான  எந்த உலக உணர்ச்சியும் இல்லாத மாதிரி  இருப்பார். 

                                                    அந்த அப்பார்ட்மெண்ட் மாரிகால மருதனாமடம் சந்தை போலக் கச கச எண்டு இருக்கும். கதவைத்திறந்து உள்ளே போனால் முதலில் மயக்க வைக்கும் சோம்போறித்தனமான வருடங்கள் சேர்த்து வைச்ச  வாசங்கள் மூக்கைத் திணறடிக்கும்.   எதுக்குள்ளே எது கிடக்குது  என்று தோண்டிக் கிளறிப்பார்த்தால்தான் எதிர்பார்க்காத  திசையில் இருந்து   அலாவுதீன்  பூதம் கிளம்பும். குசினியில் அவர் சமைப்பதேயில்லை.   இதுக்குள்ள ஹோலின் ஒரு மூலையில் பெரிய கம்பிக் கூட்டில் முயல் வளர்த்தார்.

                                 ஒரு நடுக்கோடையில் ஒரு நாள் அவரைக் கடைசியாக சந்தித்தது நினைவிருக்கு. நோர்வேயில் கோடைகாலம் மட்டுமே ஒரு விதமான அலாதியான அலங்கரிப்பு வெய்யிலில் மிகையாக அள்ளிக்கொட்டும் பருவகாலம். மற்ற இலையுதிர், இலைதளிர், உறைபனி பருவகாலத்தில் இந்த நாடு செத்த வீட்டில ஒப்பாரி வைப்பது போலவே அழுதுவடியும். இரவுகளில் தெளிந்த வானத்தில் நட்ச்சத்திரங்களையே தனித்தனியாக  எண்ண முடியும் ..