Tuesday 18 December 2018

கனவுகள் !


*



முன்னிருக்கைப்
பெண்ணின்
ஸ்பரிசக் கூந்தல்
தள்ளிவிடும் வாசனைகள்
ஒரு

பயணத்தையே
இலக்கின்றி நகர்த்துகிறது !


இதே
சுகந்தத்தையா
அவர்களுக்கே தெரியாமல்
நெருங்கியிருக்கும்
எல்லாரிடமும் நுகர்ந்து
நினைவிலிருந்து தப்பித்து
முடிந்தபின்
விலத்திக்கொள்கிறேன் !


எவ்வளவு
சுயநலமான சுகபோகி !
என்னையே
வெறுக்கும்படியான வேற்றுணர்வு !


இங்குதான்
இச்சைகளின் அலைச்சல்கள்
ஆத்மாவினுள்ளே
குற்றஉணர்ச்சியைச் சந்திக்கிறது. !


*

கைகளின் தொலைவில்
வள்ளங்கள் ,
கண்கள் விழிக்கும் திசையில்
குப்பி விளக்குகள் ,
குரல்கள் கேட்குமளவில்

நீண்ட அடிவானம் ,
அவ்வப்போது
நீரோட்டங்களில் எழுந்துகொள்ளும்
ஆர்ப்பரிப்புகள் ,
எதிர்பாராத வினாடியில்
பிரளயம்போலவே
பேய்க்காற்றுப் பிரட்டி
நீரடிப்பு சோர்ந்துபோனபோதில்
கடலின்
தத்தளிப்பு
அலைகளைப் பிரித்துவிட்டது. !
பெயர் சொல்லிப்
பெருங்கடலைத் திட்டி
துயரக்குரலெடுத்து அழுகிறது
மணல்க்கரை !


*

சரியான நேரத்தில்
சந்தித்துக்கொண்ட
உரையாடல்கள் ,
சரியான பருவத்தில்
மனவலிமையைச் சோதித்த

இளவயது ,
சரியான இடத்தில்
வீரியத்துக்குக் குறைவில்லாத
ஆசைகள் ,
சரியான தெரிவில்
தன்மானத்தை முன்னிறுத்திய
பாதைகள்,
சரியான வாய்ப்புகளில்
தவறிப்போன
குறிக்கோள்கள் !
தனக்கேயுரிய முறையில்
மிகச்சரியான தருணங்களில்
குறுக்கிட்டுக்கொண்டபடியேயிருக்கிறது
விதி !


*

கதைப்போக்கில்
ஒரு
மனச்சித்திரத்தை உருவாக்கி
குறிப்பிட்ட
வழமையானவையென்ற ...

வகைமாதிரிகளைக் கடந்து
பழக்கத்துக்கு அடிமையானதுபோல
எங்கிருந்து
வந்ததென்றே தெரியாமல்
என்னுடன் சேர்ந்து
முடிந்தளவு
அவமானப்படுத்தல்களைச்
சகித்துக்கொண்டு
துரதிருஷ்டவசமாகத்
தன்
தடயத்தையும் விட்டுச்செல்லும்
காலத்துக்கு
எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் !


*

நிராகரிக்க முடியாதளவுக்கு
வலுவான ஆளுமை
காலநிலை !
ஒத்திசைவில்
இதுதான் 

வலிக்கவும் செய்கிறது !
அடைப்புகளையும் மீறி
மெலிதாக வெளிப்படும்
யாரோ ஒருவனின்
கதறல்போலக்
குளிர் நெருக்குகிற
இரவுகளில்
சூழும் ஆபத்துகள்
வெளியுலகில் இல்லைத்தான்
ஆனலும் ,
அடிப்பயத்தில்
தொண்டைக்குள் வந்துவிடுகிறது
ஏதோவொன்று !


*

மூச்சுத்திணறலுடன்
திறக்கப்படும்
ஜன்னல்களை
நையாண்டிசெய்கிறது
உள்நுழையும்

காற்றின் மமதை !
திருத்தமான
திசையில்செல்ல
வழிகாட்டுகிறது
கொஞ்சபோல வெளிச்சங்கள் !
நவீன யுகத்தின்
அல்லாடல்களுக்கு
நன்றி கூற வேண்டும் !
பிறகென்ன
மரியாதையைக்
காப்பாற்றிக்கொள்ள
வெளிச்சென்று
கதவை மூடிவிடுகிறது
இன்றைய நாளின்
எஞ்சிய பகுதி !


*

புரிந்துகொள்கிற
அடிப்படையில்
அப்படியொன்றும்
தியாகம் செய்வதுபோல்
சிலாகிப்புக்கள் இல்லை !

தவிர்க்கமுடியாமல்
இதைச் செய்தேன் என்று
சொல்லிக் கொண்டு
நெருங்கிப்பழகிய
ஒரு இறுக்கம்
மறக்கமுடியாமல்த் தவிக்கலாம் !
அடிப்படையில்
குறிப்பிடத்தக்க விஷயங்களில்
தொலைந்துபோனது மாதிரியிருப்பதால்
மன்னிப்புக்கும்
காரணங்களுமில்லை !
ஒரு
கைச்சொடுக்கலிலேயே
முன்னோக்கி
விழுந்துவிடுகிறது
அநிச்சயம் !


*


மிகச்
சந்தோஷமான
தருணம் !
இறுதிநாளிலும்
ஒரு வழி
இருட்டில் தேடிக்கொண்டது ! 


இயல்பாகவிருந்ததை விட
கனிவாகவும்
பெயரைச் சொல்லி
நேராகவே
அழைக்கப்படும்போது
எல்லாமே
அழகாகவிருந்தது !


பிறகு
உணர்ச்சி ததும்பும்
வாழ்க்கையை
விலகி நிக்கும் பார்வையில்
உலர்ந்துபோன
வார்த்தைதைகளில்
வருணிப்பது போலிருந்தபோதுதான்
இட்டு நிரப்பமுடியாமல்
இடைவெளிகள்
இறுக்கிக்கொண்டது !


*




வாழ்க்கையோடு
சம்பந்தப்பட
சில தங்குகின்றன,
மற்றதெல்லாம் நிற்பதில்லை.

தூக்கிப்போடக்கூடிய
கனதியானவொரு மூட்டை போல
மனசாட்ச்சியைப்
பார்ப்பது சுலபமாக இல்லை,


இப்போதெல்லாம்
ஒவ்வொரு காரணத்தையும்
அளந்துபார்த்து
வரிசைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கு !


இப்படியுமில்லை,
அப்படியுமில்லை,
என்னைப் பொறுத்தவரை,
நான்
யாரென்பதை
நான் அறிந்திருந்தால்
அது போதும் !


*




மழைக்காற்றில்
நலுங்கும் சிம்மினி !

சுடர்போல
ஏதோவொன்று
ஆடிக்கொண்டிருந்த
அதிகாரமான
நெருக்குதலோடு
அனிச்சையாக
நெஞ்சைப்பிடிக்கும்
படுக்கையைச் சுற்றி
மெதுவான பேச்சுக்குரல் !

ஒருநாளல்ல
தொடர்ச்சியாகப்
பலசந்தர்பங்களில்
திகைப்பு மயக்கம்போல !

அதன் உச்சமான வலியை
அமைதிப்படுத்திக்கொண்டிருப்பதுதானா
அல்லததை
இழை இழையாகப் பிரிக்கும் உணர்வா?

விழித்துக்கொண்டு
வைராக்கியம் மேலெழுகையில்
ஏதோவொன்று வெடித்துச்சிதறுவதைப் போல
போர்வையை உதறி எழும்பிவிட்டாள்!

இன்றுகாலை
அவளுக்கு(ம் ) நடந்ததெல்லாம்
தலைப்புச் செய்தி !






*




நோக்கிப் புன்னகைக்கும்
இந்த அவளை
எந்த இடத்திலும்
இதுவரையில்ப் பார்த்ததில்லையே !

எதுவும் விபரீதமாக இல்லைப்போலிருக்கும்
நீள் நடைப் பாதையொன்றில்
அதிகம் தனித்திருப்பதின்
மனப்பிறழ்வா ?

இது எந்த இடம்?
எப்படி இங்கு வந்தேன்?

எண்ணங்கள் தோன்றியபடி
பேச்சுக்கள் பதிவாகியிருக்கும்
அவள் சற்று முன்னர் நடந்துசென்ற
இலையுதிர்சோலை !

அதையொரு
தொடுதிரையில் பார்ப்பதுபோல
பின்தொடர்ந்துகொண்டிருந்தது
பரவசமாகவிருந்து !





*


சிதிலமடைந்த
மரவாங்கின் விளிம்பில்
அமர்ந்தபடி,
அந்தரங்கங்களைப்
பிரிப்பது போலவே
காற்றிலேறி வந்த
குளிர் நெடியை முகர்ந்து
தேங்கு மழைநீரில்
அசைவுகளைப் பிரித்தெடுத்து
அதை
உடைக்கிறதில்
வளையங்களாக நெளியும்
சுழல்களைப் பார்த்தபடி ,
உரையாடலில்
அதீத உணர்ச்சிகளேதுமின்றி
காலத்தைச்
சமன் செய்தபடியிருக்கவே
இரவுநேரம்
போதுமானவளவு திகட்டிவிட்டது !


*


சுயநலமான
அதீத நினைவுகள்
ஒவ்வொரு நமக்குரிய நாளிலும்
நம்மை நாமே
அடையாளம் வைத்துக்கொள்கிறது!

நமக்குத் தொடர்பில்லாத
நம்முடையவொரு
ஒளிநகலைப் பார்ப்பதுபோலவே
சிலசமயங்களில்தான்
தன்ணுர்வுன்னு
தனியாகப்பிரிந்துவிடுகிறது !

நமதென்ற வரம்புமீறி
உள்வாங்கும் உணர்வுக்குள்
அகோரமான தனிமை நுழைந்துவிடும்போது
நம்மைச் சுற்றியுள்ளவர்களும்
தனித்தன்மையோடு
நமக்குள்ளும் நெருங்கிவிடுகிறார்கள் !






*





கனவுகளிடமிருந்து
தற்காலிகமான
தப்பித்தல் நிர்ப்பந்தம்போல
உரையாடிக்கொண்டிருக்கிறேன் ,


நிஜத்தில்
அசட்டுத்தனமாக
நிராகரிக்கப்பட்ட கேள்விகள் !


குறியீடுகள் நிரம்பிய
அவற்றுக்கு
மனசாட்சியற்ற பதில்கள் !


எச்சரிக்கைகளை மீறிக்கொண்டு
தொட்டுணர்வதுபோல
மெல்லசைவுகளில்
கவனம் குவியும்போது
நிழல்கள்போல
விலகிச்சென்றுகொண்டிருந்தேன் !


உறக்கத்தின்
இறுக்கமான அரவணைப்பில்
நெருக்கமானதாகத்
தொடங்குவதுதானென்றாலும்

நீட்டிப்பை நிறுவுவதுபோல
புரியமுடியாத
அபத்தங்களோடு திரும்புகின்றன
கனவுகள் !














Thursday 13 December 2018

நினைவுக்கிடங்கிலிருந்து 001.


நோர்வேயில் ரெண்டு வருடங்கள் முன் மிகவும் அறிமுகமான ரெண்டு நண்பர்கள் குறிப்பிட்ட சில மாத இடைவெளிகளில் இறந்துபோனார்கள். உலா வயதாகி இனிப் பலவீனங்களைப் பலப்படுத்த முடியாத உடம்பின் இயலாமையில் இறந்தார். உலா அட்டகாசமான  மனிதர் ! பெந்தபேரீட் சோல்பெர்க்க்கு சாகிற வயதில்லை.  என்னைவிட வயது குறைவு. அகலமாக இறந்துபோன பெந்தபேரீட்  சோல்பெர்க் அருமையான மனுஷி  ! 




                                                        ரெண்டுபேரையும் அழைத்துக்கொண்டுபோன மரணம் மிகக்கச்சிதமான வடிவமைப்பு ! அதேநேரம் ஒத்துக்கொள்ளும்படியாக உண்மையான பொய் ! முன்னமெல்லாம்  மரணம் பற்றிய  தனிரகமான வேதனைகள்  இருந்தது. இப்பெல்லாம் அப்படியெல்லாம் இல்லையென்றுதான் சொல்லவேண்டும் .




                                                      ஒரு புள்ளியில் முடிவையும் தொடக்கத்தையும்  இலகுவாகி விட்டு அடுத்தகட்ட சோதனைக்குத்  தயாராகி   நீண்ட வரிசையில் நிக்கின்ற  சங்கடத்திலிருந்து  சமாளிப்பாக எதையாவதுசொல்லி, கலைந்து போவதுபோலிருக்கும் வாழ்க்கையில் , எப்போதுமே  யாரோவொருவரின் மரணம் , நமக்குரியதுபோலவும்  தலையசைப்பில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது   !  அவளவுதான் .!!!


சின்ன வயதில் ஊரில பெரிய வயதான வாழ்ந்து முடித்த மனிதர்கள் இறந்து போவார்கள், தாத்தா சீனியப்பு,,குஞ்சியப்பு,,அப்ப்பப்பு ,சித்தப்பு என்ற அவர்கள் எங்களோடுஅதிகம் வயது ஒப்பீட்டில் நெருக்கமாக ஒன்றாகவே பயணிப்பதில்லை. அதனால் அவர்கள் மறைவு அதிகம் நினைவுகளைக் காவுவேண்டுவதில்லை. அதைவிட சாவு என்னவோ புரிந்துகொள்ள முடியாத சூணியம் வைச்ச சாபம் போல இருந்தது அந்த நாட்களில் 



                                                   இப்போது நாலு கழுதை வயது தாண்டி நடுத்தரம் பாயுற வயதில் பல மனிதர்களுடன் வேலைசெய்யும் இடங்களில் பழகவேண்டியுள்ளது. அதில் சிலர் அவர்களின் அழைப்பு நேரத்தில் விடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்., இப்ப சாவு என்பது வெளிச்சமான வாழ்வின் இன்னொரு இருண்ட பக்கம் போலவும் உயிர் வாழ்வது என்பது இரவும் பகலும் போல என்று அர்த்தமாக இருக்கு .

                                                     ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்த உயிர் அம்மாவின் கர்ப்பப்பையில் உருவாக்கி வெளியேறிப் பிறப்பதில் தொடங்குது ,அதன் பின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அதன் கலங்களின் வளர்ச்சி இன்னுமொரு உயிரை உருவாக்கிவிட்டு முடிவான ஒரு நாளின் இறப்புக்குத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது , யாருமே தப்ப முடியாத மிகக் கச்சிதமான வடிவமைப்பு அது என்று கையைப் பிசைந்துகொண்டு நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் .



                                                நேற்று என்னோட சோசியல் ரேச்ற்றோறேண்டில் பலவருடம் வேலை செய்த உலா என்பவர் செத்துப் போனதுக்கு நினைவு கொள்ள மெழுகுத்திரிகள் ஏற்றிவைத்தோம் ,அவர் நினைவுகளைப் பதிய ஒரு நினைவுப் புத்தகமும் வைத்தோம் அதில நான் தமிழில் அவர் ஆத்மாசாந்தி அடையப் பிராத்தனை அது இது எண்டு ஒண்டும் எழுதவில்லை . சில வரிகள் நன்றியாகவும் நிலையாமை பற்றியும் எழுதி விட்டேன்.

                                                      சென்ற மாதம் உலா சுகவீனம் உற்று இருந்தார் என்று சொன்னார்கள். அதனால் சென்ற வருட டிசெம்பர் மாதத்தின் பின் வேலைக்கு வரவில்லை. அவர் அந்த சோசியல்ரேச்ற்றோரென்ட் சமூக உதவி நிறுவனத்தில் அதிகாரி. நான் அங்கே சமயலறையில் சராசரி குக் , ஆனாலும் மனிதர்களை உயர்த்தி வைக்கும் பொசிடிவ் எனெர்ஜி உள்ள நல்ல மனிதர், என்னோட நல்ல ஒட்டு.

                                                       அந்த இடத்தில பலவருடம் வேலை செய்துகொண்டு இருக்கும் ஒரே ஒரு இலங்கைத் தமிழ்க் குடிமகன் நான் தான்.  அந்த இடத்தில வேலை செய்த என்னோட அருமையான உயிர் நண்பி பெந்த பேரிட் சோல்பேர்க் என்ற அம்மணியும் மேலே போனா. சாவு வீதி வளைவு மூலையில் கை விரல்களில் நாட்களை எண்ணிக்கொண்டு போகும் வரும் முகத்தைப்பார்த்துத் தேடிக் காத்துக்கொண்டு குந்தி இருக்குது போல இருக்கும் சில நேரம் .

                                                           உலா இறந்தது எனக்குக் கொஞ்சம் தன்னும் கவலையாக இல்லை. அவருடைய காலத்தில் இருந்து அவர் அடுத்த பரிமாணத்துக்கு போய்விட்டார். வாழ்க்கையைப் பற்றி அவருடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில் கொஞ்சம் புரிந்து கொள்ள உதவியவர். அடுத்த மனிதருக்கு இறப்பு வருவது என்பதே உயிரோடு இருக்கும் போது நாங்கள் உயிருள்ள அடுத்த மனிதருக்கு செய்வதுக்கு எவளவோ நல்ல விசியங்கள் இருக்கு என்பதை நினைவுபடுத்துக்கு என்று நினைக்கிறேன்!





பெந்த பேரிட் சோல்பேர்க் Bente Beret Sølberg என்ற என்னுடைய ஒரு நல்ல நட்பு சில நாட்கள் முன், நோர்வேயில் இருந்து கோஸ்டோ ரிக்கோ என்ற நாட்டுக்கு பிராயணம் செய்த போது.அந்த நாட்டில் இருந்து ,நாற்பது மூ ன்று வயதில் , இந்த உலகத்திற்கு எதிர் பாராமல் விடை கொடுத்துவிட்டு , ஸ்பேஸ் டைம் இன் இன்னுமொரு பரிமாணதிற்குள் சென்ற ஒரு அவல சம்பவம் நடந்துள்ளது. 

                                                                    பெந்த பேரிட் சோல்பேர்க்கின் கதை முடிந்தாலும்,அந்தக் கதையின் 
தொடர்ச்சி ஏதோ ஒரு விதத்தில்அவாவின் நட்பில் இருந்த எல்லார் கதையிலும் தொடரும் போல உள்ளது அதுக்கு காரணம் அந்தப் பெண் எங்களோடு இருந்த காலத்தில் செய்த ஒவ்வொரு சின்ன சின்ன விசியங்களிலும் அன்பின் அடையாளத்தை நிறையவே ஆழமாக பதிந்து விட்டு சென்றது..

                                                                            நோர்வே நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள பிரேடிக்சாட் இடத்தில பிறந்த பெந்த, ஒஸ்லோவில் வேலை செய்யும் இடத்தில என்னோட நட்பாக எப்பவும் இருந்தா,இந்தியாவுக்கு பல முறை போய் முக்கியமா இந்தியாவின் இமாலயா மலை முழுவதும் சுற்றி, இந்தியாவை இதயத்தில் நேசித்ததால்.என்னை எப்பவும் நமஸ்தே எண்டு சொல்லி தான் வணக்கம் சொல்லுவா,

                                                                      இந்திய பயண அனுபவத்தை " Journey for my life time " எண்டு ஒரு புகைப்படத் தொகுப்பாக பேஸ் புக்கில் போட்டு இருந்தா. என்னோட கிட்டார் விடியோ கேட்டு முதல் முதல் உற்சாகம் தந்த ஒரே ஒரு நேர்வே இனப் பெண்மணி பெந்த பேரிட் சோல்பேர்க். எனக்கு ஒரு ஒலிப்பதிவு உபகரணமும் தன்னிடம் இருந்ததை தந்தா.

                                                               பல மாதங்களாக சந்திக்காத அவாவை,அண்மையில் சில வாரம் முன் எதிர் பாராமல் அவசரமா போய்க் கொண்டு இருந்த ஒரு இடத்தில சந்தித்தேன், என்னை இழுத்து வைத்து இருத்தி நிறைய விசியம் கதைத்தா. அந்த சம்பாஷனை முடிவில்

                                          " என்னை மறந்து விடுவியா "

                                                                       எண்டு கேட்டா ,நான் ஒண்டும் சொல்லவே இல்லை சிரிச்சுப்போட்டு போயிட்டேன்,அதுதான் அவா என்னோட பேசிய கடைசி வார்த்தை. இப்பொழுது கவலையாக இருக்கு " மறக்கவே மாட்டேன் " எண்டு வாயலா ஒரு பதில் அந்த நேரம் சொல்லி இருக்கலாம் எண்டு.

                                                                         நேற்று அவா இறந்த செய்தி கேள்விப்பட்டு ,அவாவின் பேஸ் புக் போய் பார்த்தபோது அதிர்ச்சியாக நோர்வே நாட்டின் ,கார்டமொன் விமான நிலையத்தில் இருந்த கோஸ்டோ ரிக்கோ நாட்டுக்கு போவதுக்கு முன்னர் போட்ட " My Journey Starts From Here " என்ற கடைசி போச்டிங்கோடு அந்த இதயம் நின்று விட்டது,

                                                                           பல ஆச்சரியமான சம்பவங்களில் இதுவும் ஒரு சம்பவம் போல இருக்கு, பாவம் பெந்த அந்த போஸ்டிங் எழுதும் போது தெரியாமலே போனது அவாவுக்கு தன்னோட இன்னுமொரு பயணம் தொடங்கப்போகும் சம்பவம் நடக்கப் போவது.கடைசியில் அவா பயணம் அடுத்த உலகத்துக்கு தொடக்கி விட்டது போய் ரெண்டாம் நாள் ஆள் போயிட்டா,,,

                                                                       பெந்த பேரிட் சோல்பேர்க் எல்லாரோடும் இலகுவில் பழக மாட்டா ,என்னோட ஒரு அதிசயமா ரெம்பவே நெருக்கமான நட்பாக இருப்பா,நான் சாப்பிடும் போது என்னோட இருந்து எப்பவும் இந்தியா பற்றிக் கதைத்து கதைத்து சாப்பிடுவா.

                                                                          நான் சில நேரம் இந்திய வகை சைவ உணவு சமைத்தால்,நான் முள்ளுக் கரண்டியால் சாப்பிட அவா கையால சாப்பிடுவா ,அப்படி சாப்பிட தனக்கு விருப்பம் எண்டு சொல்லுவா,

                                                                   பெந்த இளவயதில் நேர்ஸ்க்கு படித்தவா , உயர் குடி ,படித்த குடும்பதில் பிறந்தவா, இந்த வருட மே மாதம் , பல வருடங்களின் பின் தான் பிறந்த கிராமத்திட்கு சென்று நோர்வேயிய கலாச்சார உடை அணிந்து சகோதரியின் பிள்ளையின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டதாக மிகவும் சந்தோசமாகா சொன்னா. ,

                                                              அந்த படத்தை பேஸ் புக்கில் போட்டும் இருந்தா ,அவா சொந்த வாழ்க்கை பிரசினையில் பல கட்டங்களை சோகமாகக் கடந்தவா ,அதால பலமுறை வாழ்வின் விளிம்புவரை போய் உயிர் தப்பியவா ,எனக்கு எல்லா கதையும் சொல்லுவா,,அவாவின் எதிர் பாராத மரணத்தின் பிண்ணனியில் சில விசியங்கள் இருக்கு,....

                                                        பொதுவாக நேரடியாக எல்லாரோடும் பழகாத என்னோட வாழ்கையில் நிறைய மனிதர்களை குறுகிய காலத்தில் வெறுப்பு ஏற்றிய சம்பவங்களை சந்தித்து இருக்கிறேன், நிறைய மனிதர்கள் அனாவசிய அலுப்பு கொடுத்து வெறுப்பு ஏற்றி இருந்த கொஞ்ச நின்மதியையும் இழக்க வைத்திருக்குறார்கள்.

                                                                   பல வருடம் நட்பில் இருந்த இந்த அன்பான,அடக்கமான பெண் ஒரு நாள் தன்னும் நான் எவளவு குழப்பமா கதைத்தாலும், சிரித்து சிரித்து அமைதியா பதில் சொல்லும் ஒரு நல்ல ஜீவன் . சில மனிதர்கள் பதிந்து செல்லும் மிக அழகான நினைவுகளை அதிகம் கஷ்டப்பட்டும் மறக்கடிக்க நினைத்தாலும் முடியாது , அதை மறுத்தால் உயிர் வாழ்தலுக்கு அர்த்தமேயிருப்பதில்லை.!



                                                                           அந்தப்  பிரசன்னத்தை நிறுத்தி தொடரிருப்பைத்  தொலைத்துவிட்டு  மூச்சிழுத்து விழுங்குகிற  ஆத்மார்த்த ஏமாற்றம் ஒரு வெறுமைதான்  ! அடுத்தகட்டத்தைத்  தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இதெல்லாம்  வெறும்  சந்திப்புப் போலிருக்கும் , நீளத்தனிமை  நினைவில் இடறி விழும் ஒரு மென்மையான பொழுது  சுடர்மனதில் நீர்க்குமிழிகளாகுகின்றது  நம்மை அதிகம் நெருங்கிப் பாதித்துவிட்டுச் சென்றவர்களின் பிரிவு !


2015 ஒஸ்லோ நகரம்   நோர்வே 




*

மேலே நடந்தது புலம்பெயர் நாடுகளில் வாழுபவர்களின் அன்றாட வாழ்வியல்  அவஸ்தை.. இனி நம்முடைய மனிதர்களின் மரணங்கள் எப்படியான நெருக்குவாரத்தை தருகிறது என்று பார்த்தால். அது இன்னொருவிதமான ணைபவம் போலிருக்கு. " அதெல்லாம் ஒரு காலத்தில் எங்கட ஊரில ,, "  என்று இன்றைக்கு பலவருடங்கள் முன்னதாக நடந்த மரண வீடுகளில் உறவுமுறைகள் எப்படி ஓவென்று சொல்லி அழுது கொண்டாடினோம் என்று பார்க்க ஒருவிதமான மலைப்பாக இருக்கு.



                                              மரணஅறிவித்தல்கள் ஒரு காலத்தில் அதிகாலையில் எழும்பினால் சாவுமேளம் அடிக்கும் அதை வைத்து ஊரில யாருக்கு விசா கிடைத்தது என்று கதை வழியில் காற்றின்போக்கில் அறியமுடிந்த ஒரு அலாதியான காலத்தைத் தொலைத்துவிட்டு இப்ப இன்றைக்கு இன்டர்நெட் பதிவுகளில் அதைப் பார்க்கவேண்டி இருக்கு. கடல் கடந்த புலம்பெயர்வுகள் தந்த முக்கிய அவலத்தில் அதுவும் ஒன்று.



                                                              முன்னம் எல்லாம் உடன்பிறப்புக்கள் உறவினர்கள் தொலைபேசியில் சொல்லுவார்கள் . இன்றைக்கு அதுவும் அரிதாகிவிட்டது. துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடும் அவசர உலகத்தில் அவரவர்களுக்கு ஆயிரம் சோலிகள் குருவி தலைக்குமேலே பனங்காய் போல இருக்கலாம். அல்லது இதெல்லாம் இப்ப முக்கியமா என்ற அலட்சியமாயும் இருக்கலாம்..



                                                           அந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன் என்று சொல்லிவந்தவர்களில் பலர் அது நடந்தேற முதலே இந்த உலகத்தை விட்டு அகாலமாக அந்நியநாடுகளில் விடைபெறும் சம்பவங்கள் நிறையவே நடக்குது. அதிலும் பலர் பொறுப்புகளோடு இருக்கும் நடுத்தர வயதில் பலியாவது இன்னும் சோகமாகவே இருக்கிறது.

                                                          ஊர்கூடி உறவுமுறை சொல்லி உரிமையோடு அழுது குளறி ஒப்பாரி வைச்சு பாடை கட்டிப் பந்தம் கொளுத்திப் பிடித்து நிலபாவாடை விரித்து அமர்களமாக மரணத்தைக் கொண்டாடிய ஒரு தொன்மையான வாழ்வியல் பூர்வீக அடையாளங்களுடன் வாழ்ந்த சமுதாயம் இன்றைக்கு " R.I.P " என்ற மூன்று ஆங்கில வார்தைக்களைப் போகிறபோக்கில் தட்டிவிட்டுப் போகும் சுருக்கமாகி முடிந்துவிடுகிறது.


                                                              நினைவுகளின் வழித்தடத்தில் என் பெற்றோர்களின் தலைமுறை இருந்தது. அவர்கள் எங்கே இருப்பார்கள், எப்படி இருப்பார்கள் என்பது போன்ற ரத்த உறவுத்தொடர்புகள் நிறையவே அறுந்துபோனாலும் யாரோ ஒருவர் போடும் மரணஅறிவித்தல் பல விடயங்களைத் தோண்டி எடுக்கும்போது அந்த இழப்பின் ஈடுசெய்ய முடியாத வலி தெரிகிறது.




                                                        தலைமுறைகளோடு நேசமாக நெருக்கமாக உறவாட முடியாமல் போவதே உலகம் எங்கும் சிதறி வாழும் இலங்கைத் தமிழர்களின் தேற்றமுடியாத சோகம். அதுக்கு தனிப்படவும் பொதுவாகவும் நிறைய அந்நியப்படும் காரணங்கள் அவர்கள் அவர்கள் வாழும் நாட்டில்இருக்கு. வேறுவழி இல்லை அதிலிருந்து தப்ப.




                                                          குஞ்சியப்பு, அம்மாச்சி, சித்தப்பு, பெரியையா, ஆளவந்தான்தாத்தா,,அன்னலட்சுமிமிப் பாட்டி போன்ற ஆலமரங்கள்சரிந்து விழும்போது அருகிருந்து ஆசுவாசித்து வழியனுப்பிவைத்த சம்பவங்கள் எல்லாமே இப்போது வெறும் கதையும் பழங் கதையும் ஆகிப்போனது ஒரு இனத்தின் வரலாற்றுத் தோல்வி.




                                                       இப்பிடியே நாயைப் பிடி பிச்சை வேண்டாம் என்று இன்னும் எவளவு காலம் தான் ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு போல ஓடிக்கொண்டிருக்கப்போறோம் ? அதுவும் எந்தத் திசையில் ஒடப்போறோம் ?, இந்த அர்த்தமில்லா ஓட்டம் எங்கேதான் கொண்டுபோய் விடப்போகுது ? போன்ற ஆதாரமான கேள்விகளுக்கு விடைகளும் இல்லை.




                                                             இணையவலைகளில் மரணஅறிவித்தல் பதிவுகள் போடும்போது அதில இருந்து ஓரளவு அறியமுடிகிறது உலகம் முழுவதும் பரந்துவாழும் குடும்ப உறவுகளின் தொடர்ச்சிபற்றிய தகவல்கள். இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்கவேண்டி உள்ளது. இது கொஞ்சம் மனத்தைக் கனமாக்கும் விலை போலவே இருக்கு. !


2015 ஒஸ்லோ நகரம்   நோர்வே









Saturday 1 December 2018

பெயரிடப்படாத நாள் !

எழுதுவது என்பது அனுபவங்களை நாலு பக்கமும் அதிகரிக்க அதிகரிக்க வார்த்தைகளைச் சுருக்கும் வித்தையைக் கற்றுத்தருகிறது. இருந்தாலும் நாள் தவறாமல் எப்போதுமே எழுதிக்கொண்டிருக்க முடிவதில்லை . சிலசமயம் பேசுபொருள் கிடைக்காது, அது  கிடைத்தாலும் கவிதைமொழி முன்வராது . அல்லது கணப்பொழுதில் உள்ளிறங்க  ரெண்டுமே பொருந்திவராத தருணமாக இருக்கும். அப்படி இல்லையென்று வலிந்து எழுதுவதென்பது  வாய்க்குள்ளே விரலை விட்டு வாந்தி எடுப்பதுபோன்ற அவஸ்தை !
 
                                                                      முகநூலில்" On this day " என்று ஒரு வாய்ப்பு அண்மைக்காலமாக என்னைப்போன்ற அரை அவியல்களுக்காகவே உருவாகி இருப்பது போல வந்துள்ளது. அதை " Each day, we'll show you all of your stories from the same date in different years " இப்படிச் சொல்லுது அதன் விவரணம். அதில பல நன்மைகள் இருக்கு.அப்பப்ப பிசதிப்பிசத்தி ஒரு கவிதை, சில நேரம் இரண்டு கவிதை கைவிடப்பட்ட மண்சுவரில வறட்டிதட்டி எறிஞ்ச மாதிரி எழுதிக்கொண்டு இருப்பதால் அவைகளை மீன்டும் ஒருமுறை தூசுதட்டிப் பார்க்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. பலருக்கும் அப்படி இருக்கலாம்.


                                                                                    அப்படிப் பார்க்கும்போது சிலநேரம்  எவளவு முட்டாள்த்தனமாக எழுதி இருக்கிறேன் என்று என்னையே மீளாய்வு செய்யும் சந்தர்ப்பம் வளர்சியின் பாதையில் கடந்துவந்த படிக்கற்கள் பற்றிய ஒரு படிப்பினையை வெளிப்படுத்தும் போதெல்லாம் எழுதிக்கொளுத்திப் போடுவதில் உள்ள தயக்கத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டு போகமுடிகிறது .


                                                                         இப்ப உள்ள எழுத்து அனுபவத்தில்அவைகளை வாசிக்கும்போது , அவசரத்தில் எழுதிய போலவும்,ஆழமில்லாதது போலவும்,சிலது குப்பை போலவும்,சிலது குப்பைக்குள் குண்டுமணி போலவும் உள்ளது. அதனால் முடிந்தளவு வாசிக்க அர்த்தம் கொடுத்து உருப்படியாக வரக்கூடியவைகளை கொஞ்சம் வெட்டிக்கொத்தி ஏறக்குறைய கவிதைமொழிக்குள் அடக்கி அதைத் தரமாகக் கொண்டுவருவது ஒரு அலாதியான ஆனந்தம்.
 
                                                                           கவிதை நேசிக்கும் நண்பர்கள், நண்பிகள் வாசிப்பார்கள் என்பதாலும் , ஒரு தொகுப்பாகக் கொண்டுவருவத்துக்கு ஏதுவாகவும்   அதையெல்லாம்   இன்னொரு முறை என் " மின்னெறிஞ்சவெளி " வலையில் ஏற்றிவைத்து   என் பறையை நானே தோளில கொழுவி அடிச்சு சுழறவிடுவது. அது முன்னரே வாசித்தவர்களுக்கு  இடைஞ்சல் போல இருக்கும். தயவுசெய்து என்னையும், என் கவிதைகளையும் மன்னித்துக்கொள்ளுங்கள் அப்படி உங்களுக்கு தொந்தரவாக இருந்தால்.


                                                                              எல்லாரும் எழுதுறார்கள் அதனால் தண்ணி கறுத்த நேரம் தவளைச் சத்தம் வந்த மாதிரி போனாப்போகுது என்று பலரோட பொறுமையைச் சோதித்து எழுதத்தொடங்கினேன் .அதைப் பல இலக்கிய ரசனை விசியங்கள் தெரிந்தவர்களே வரவேற்று உற்சாகப்படுத்தினார்கள்.அது என்னை அதிகம் கவரவில்லை ஆனால் அழகான இதயரானிகள் ஆகோ ஓகோ எண்டு பப்பாவில் ஏற்றினார்கள். அதால இதைவிட வேற என்ன அங்கீகாரம் வேண்டுமென்று எழுதுறேன்


                                                                                       சுவீடன் என்ற  வடதுருவக் குளிர்நாட்டில்  குந்தியிருந்து  குப்பை கொட்டும் என் அன்றாட வாழ்வியல் மொழி "சிவான்ஸ்க்கா " என்ற சுவிடீஷ். ஒரு கிறுக்குப்பிடிச்ச அந்நியமொழி . என் நிலைமையில் முகநூலில் எழுதிக் கிழிப்பதால் மட்டுமே எனக்குத் தமிழ் என்ற தாய்பாலோடு சுரந்து வந்த மொழியை என்னிடமிருந்தே அழிந்துபோவதைத் தடுக்கமுடிகிறது.




*
அச்சுறுத்தலிலும்
மரணத்தோடு
விளையாடுவது போல்
அப்போதெல்லாம்
அவர்களின்

எண்ணங்கள்
வீரதீரமாகவேயிருந்தன,
மீசை தாடியென்று
அவர்கள்
முகத்தைக் கூட
சரியாக வைத்திருக்கவில்லை .
அதனாலென்ன ?
எல்லாம் கடந்த
அவர்கள் எல்லோருக்குமே
ஒரேமாதிரியான முகங்கள்..
அவை
இறுக்கமானவை.
கொடுங்கனவை ஏந்தியவை.
உறைந்த மௌனத்தை,
நதிகளின் சிரிப்பொலியை
கடலின் புன்னகையைப் போல !



*


இறந்து போயிருந்தது
பின்மாலை நிழல் நகரம் ,
நகராமல் நின்ற
மலர்ச்சோலை நடைபாதையில்
அக்கறை இல்லாமல்...
ஒருவரை ஒருவர் பார்க்காமல்
மௌனமாகக் கடந்துபோகிறார்கள்
அவசர மனிதர்கள் !
அவர்களுக்குப்
பூந்தளிர் மரங்களின்
கிளை நுனிகளில்
மந்திர இலைகளை அசைத்து
சைகை மொழியில்
என்னவோ
எல்லாம்தெரிந்தமாதிரி
புதிர்க்கதைகள் சொல்லிக்கொண்டிருக்கு
ஊமைக்காற்று !




*

அப்போது
தொலைதூர வெளிச்சங்கள்
கொஞ்சம்தான் எஞ்சி இருந்தன ,
ஒன்றுதிரண்ட
பிரசவப் பெறுமாதமுகில்கள் ...

மீதமிருந்த வெள்ளை முகில்களைத்
தவறவிட்டிருக்கலாம் ,
காரையைக்காணமுடியாதவாறு
மறைந்திருக்கும்
தென்மேற்குத் தரவைக்கடலில்
அலைகள் தலைகளை மோதியடித்து
ஒதுங்கியபடியிருந்தன .
எந்தவித அசுமாத்தமுமில்லாமல்
உறக்கத்துக்கு அருகே போய்க்கொண்டிருந்தது
திசையில்லாத தனியிரவு,
இப்போது
யாருக்கு யார் வழி சொல்வது?
யாருக்கோ
கண் சிமிட்டியபடியிருக்கும்
நட்சத்திரங்களுக்குத்தான்
எங்கே போகிறோமென்று
தெரிந்திருக்கலாம் !




*

சேலையில் மடிப்புகளை
உதறி விட்டுக் கொண்டிருந்தாள்.
கோடைகால
நீராம்பல் மலர்களில்
ஊடுபரவுவது போலவே

மௌனமாகக் கடந்து போன
வாசனையை
யாருக்கும் தெரியாமல்
ஒளித்து வைத்திருந்தேன் .
சொல்லப்போனால் என் கனவே அதுதான்.
ஆனாலுமென்ன
யாரோ ஒருவரின்
புல்லாங்குழலைத் திருடியெடுத்து
பிரியமான ராகமொன்றில்
சம்பந்தமேயில்லாத
எல்லாருக்குமதை
விபரித்துச் சொல்லி விட்டது
காற்று !




*


யுத்தமொன்றில்
உயிரோடிருந்தலென்பதை
என்னவென்று
நீங்கள் அறிவீர்களா ?
ஒரே ஒரு காவலரணில்

பதுங்கியிருந்தார்கள் 
அத்தனை பெரிய பனம்தோப்பு
ஒருசில தென்னைமரங்கள் ,
புழக்கமில்லாத மயானம்
துாசிகளால் மூச்சிழுக்கும் பற்றைகள் .
பயத்தில் உறைந்து கிடந்த
கிராமத்து கோவில் ,
பிணமாவதற்காகத் தன்னும்
மனிதர்கள் யாருமில்லை ,
எறிகணைகள்
விழும் சத்தம்
கேட்டுக்கொண்டேயிருந்ததில்
பூமியே அதிர்ந்தது.
ஒவ்வொரு வெடிக்கும்
இருக்கிறோமோ
இல்லையோ என்று
ஒருவரையொருவர்
தொட்டுப்பார்த்துத்தான்
உறுதிப்படுத்திக்கொண்டார்கள் !



*

திரை போல இருள்
நெருங்குகிறது
ஏரியின் கரையோரம் ,
மின்மினி வெளிச்சங்கள்
முளைக்கத்தொடங்குகின்றன ,

குடைக் காளான்கள் போன்ற
கூடாரங்களில்
வித விதமான இசைக் கருவிகளோடு
மனிதர்கள் ,
இலைகளின் நுனிகளை
மோகத்தோடு தொடுகிறது
குளிர் காற்று ,
அவர்கள்
காய்ந்த மரங்களைப் பற்றவைத்து
ஆடினார்கள்,
பாடினார்கள்,
போதையேற்றும் நினைவுகளை
தென்றலில் ஏற்றிவைத்து
மீட்டுவதுக்கு
என்கையில்
ஒரு கின்னரமில்லையேயென்று
ஏக்கமாக இருந்தது.!




*


மெல்லிய விரிசல்களை
நிரப்பமுடியாத
பகல்க்கனவு,
வாசனையிலும் 
வெவ்வேறு பாவனைகாட்டும்
கார்த்திகைக் குளிர்,


மொட்டை மரங்களைக்
கையகல விரிக்கும்
அமைதிப் பூங்கா ,

சில்லென்ற
நிலக்காட்சிகளில்
பசுமையின் போதாமை,

அசைவின்றிக் கிடக்கும்
இசைவுக்கேற்ப
நடைத் தெருக்கள் ,
பரபரப்பான வாழ்க்கையைக்
கடத்திச்செல்லும்
அவசர மனிதர்கள்,
கைகளை உதறியபடி
தெளிவற்ற
காலப்பயணம் ,
இத்தனை வெளிப்பாட்டிலும்
பெரும்பாலான தருணங்கள்
தன்னிச்சையான
மௌனத்தையே
நிரப்பிக்கொண்டிருக்கின்றன.!

*

நிறைவில்லா
ஒழுங்குமுறை
ஒவ்வொரு கணமும்
முகம் மாற்றிவைக்கிறது ,
இன்று
நிகழ்வுகளேதுமில்லா
பெயரிடப்படாத நாள் !
குளிர்காலையை
ஆதரிப்பதுபோலவே
கொஞ்சம் வெய்யில் ,
பகலெல்லாம்
நடுநிலைமையைப்
புறந்தள்ளும்
வெளிச்ச இருட்டின்
சாம்பல்க் கலவை ,
வருவது தெரியாமல்
ஆச்சரியப்படுத்துகிறது
முன்மாலைப் பின்னிருட்டு ,
பின்னிறுதி
வருடப்பருவங்கள்
அதற்குரித்தான
அணுக்கமானமுறையில்
தன் தரப்பு
பிறர் தரப்பு பாகுபாடின்றி
நேர்கோடுகளை நிராகரிக்கின்றன !

*

மின்சாரக்கம்பி
உட்கார்ந்த வாக்கில்
ஒரு குருவி
அதன் பெயர் ?
தெரியாது !
என்னை வேடிக்கை பார்க்குது
ரெண்டுபேருக்கும்
விரிவான பின்புலம்
திரைபோடும் குளிர் !
அப்பப்ப
" கிலீர் " என்று சத்தம் எழுப்புகிறது
மிகத்தெளிவாக,
அலங்காரமில்லா
அதன் பாடல்
சொற்களை நிறைக்கவில்லை ,
தர்க்கபூர்வமாகக்
காலத்தையும் அடுக்கவில்லை ,
இலையுதிர் பருவத்தைச்
சபிக்கவில்லை ,
பறவைகளின்
பரிந்துரைகள் சிக்கலானவை !
சிலசமயம்
ஒலிச் சுட்டுதல்கள்
மேற்கோள்களாக இருக்கலாம் !
எல்லாவற்றுக்கும் மேலாக
நம்
தனிமை
எண்ணங்களுக்கு
ஏற்றதாகவேயிருந்தது !

*

ஒரு நாளிலே 
பேசுபொருள் கிடைக்காத
தென்றல் வருடிப்போகும்
கருக்கல் ,

மூழ்கித் திளைக்க
மூச்சுச்  திணறவைக்கும்
கவிதைமொழி ,

கணப்பொழுதில் உள்ளிறங்க 
ரெண்டுமே
பொருந்திவராத தருணம்!
கற்பனையில்
இணைந்து நடந்தபடி 

நெஞ்சம் தரும்
 ஒருசில 
வார்த்தைகளையும்,
பிரமையைக்

கையில் பிடித்தபடி
ஒருசில
எழுத்துக்களையும் ,
சிந்தைவெளி
உலாப்போகவிட்டு
நிஜத்துக்கு வெளிவருகையில்
நடைபாதையில்
கலைத்துப்போட்டபடி கிடந்தது
ஒரு கவிதை !