Friday 2 November 2018

ஸப்தங்கள் !






இசைஞானி இளையாராஜா பற்றிய காணொளிகள் எப்போதும் விரும்பிப் பார்ப்பது.  ஒரு காலத்தில் மேடைகளிலோ, நேரடி நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்ள மறுத்த ராஜா, இப்பெல்லாம் ஆர்மோனியப்பெட்டியைத் தூக்கிகொண்டுபோய் பல கல்லூரி அழைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.  இசையமைப்பது போன்ற டெக்கனிகள் விசயங்களை சொல்லுகிறார்,   


                                                                                அண்மையில் ஒரு youtube  காணொளியின் தலையங்கம்  இப்படி இருந்தது . கோவையில் இருக்கும் ஒரு கல்லுரியில் நிகழ்ந்த நிகழ்வு அது , அதன் தலையங்கம் " இளையராஜாவுக்கு முன்னால் பாடி காட்டிய பெண்கள் ". அப்புறம் சொல்லவா வேணும் இப்ப உள்ள நேரமே நெருப்பு பத்தவைக்கும் நேரமல்லவா,, இந்த மாதிரி அவலுக்கு  காத்திருக்கும் குரும்பெட்டிதலையன்கள்  எல்லாம் விழுந்து அடித்துப்   வைரலாக இந்தக் காணொளிக்குள் பலர் போய் பார்த்து இருக்கிறார்கள். 
  
                                                                           உண்மையில் கல்லூரி இசை நிகழ்ச்சியில் பெண்கள் இளையராஜாவுக்கு முன்னால் "பாடிக்காண்பிக்கிறார்கள்  ", அவரும் எப்படிப் பாடவேண்டும் என்று  சில நுணுக்கங்கள் சொல்லுகிறார்.  இதுதான் சம்பம். ஆனால் தலையங்கம் எவ்ளவு குழப்பமாக இருக்கு .


                                                                           தமிழில் எழுதுவதில் உள்ள ஆபத்து ஒரு வசனத்தில் ஒரு எழுத்து வரவேண்டிய இடத்தில வராமல்போனால் அந்த வாக்கியமே வேறு ஒரு அர்த்தத்தைக் கொண்டுவந்து சேர்த்துவிடும்.  சிலநேரம் எழுத்துக்கள் இணையும் போதும் இருவேறு அர்த்தம் கொடுக்கும். " இதுவல்லவோ பருகாத தேன் , அதை இன்னும் நீ பருகாததேன் " போன்று நிறைய இருக்கு  . இது கட்டுரைக்கு என்று இல்லை கவிதைக்கும் பொருந்தும் . முகநூலில் சிலமாதங்கள் முன்  எழுதிய இந்த எழுத்துருக்களை   உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் .




வாய்பிளந்திருக்கிறது
ஜன்னல் !
எட்டாவது மாடியிலிருந்து
கைகளைப் பிசைந்தபடி
பக்கம் பார்த்தாலும்
மண்டிக்கிடக்கிறது
நகரம் !
மனோதிடத்தையும்
தைரியத்தையும்
தத்தெடுத்துக்கொண்டதுபோலப்
பேய்க்காற்று
முகத்தைப் பிராண்டுகிறது !
மூச்சு இறைத்தபடி
வளைந்து
இடமும் வலமுமாக
நகரவிளிம்பில்
வினோத அசைவுகளுடன்
நடந்துகொண்டிருக்கிறது
நதி !



*






ஒன்றையொன்று
விரட்டியபடியிருக்கும்
இருவேறு விசைகளாக
அலைக்கழிக்கவைத்தாலும்
முன்னதாகவே
திட்டம்போடவேண்டிஇருக்கிறது
ஒருசில
படிமங்களை
வழிக்குக் கொண்டுவருவத்துக்கு !


மிகப் பரிசுத்தமான
வார்த்தைகளை
வரிசைப்படுத்தி
சேகரித்து வைத்துக்கொள்ள
ஒவ்வொருமுறையும்
அவற்றின்
கழுத்துகள் நெரிக்கப்டுகின்றன !


முடிவுகளில்
குப்புற விழுந்த நிலை
அதைக் கலைத்தெடுத்த
பிரதியில்
தொண்டையில் சிக்கிக் கொண்ட
ஒரு மீன்எலும்பு கொடுக்கும்
அவஸ்தையை
நினைவு கூர்கிறது
கவிதை !





*


அந்தப்
பாடலின் துயரம்
பகிர்தல்கள் பிணைந்திருக்கின்ற

சாம்பல்நிற வானத்தில்
பலவீனமாக ஒலித்து !


அதுவொரு
துருவப்பறவையின் புலம்பெயர்வுகளின்
அலங்கோல மீட்டல்கள் !
ஆகாயத்தை வெறித்தபடி
நட்சத்திரங்கள்
மௌனத்தைப் பரப்பிக்கொண்டிருந்த
இளஞ்சூட்டு இருட்டில்
அதை நானும் பாடிப்பார்த்தேன் !


வரையப்படவேண்டிய
ஓவியம் போலிருந்த
துன்பத்தின் காலடி ஓசைகள்
உள்ளிருந்து எழும்பத்தொடங்கியது !


அதுவும்
சற்றுநேரம்தான் !


பறக்கமுடியாத யாருக்கும்
வெளிப்படுத்தாமலிருப்பதுதான் நல்லதுபோல
குரல்வளைக்குள்ளேயே
தீனமாகவுருகி மறைந்துவிட்டன
ஸப்தங்கள் !











*
தீப்பற்றி எரிவதைப்போல
வெய்யில்
இனியெப்போதும்
பாலைநிலத்துக் கனவே !


அச்சப்படுத்துவதுபோல  

நிலவிக்கொண்டிருக்கும்
காலமாற்றம் !


எல்லைகள் இல்லாதபோதும்கூட
குறிப்பிட்டவொரு பகுதியை
வெற்றிடமாக்கி
இன்னொரு பகுதியை
மூச்சுத்திணறச் செய்யும்
வறண்ட குளிர் !


பருவங்களுக்கு
நல்நோக்கங்களிருந்தாலும்
வாழ்வை அளந்து பார்க்கும்
சிலவற்றோடு
திக்குமுக்காடச் செய்கிறது !


மனத்தைச் சூடேற்றும்
கட்டமைப்புகளில்லாத
இந்தத் தேசத்தில்
தீடீரென்று
கதவுகளைத் முழுக்கத் திறப்பது
புத்திசாலித்தனமல்ல !



*


அவளைப்
பார்க்கமுடியவில்லை.
கேட்கமட்டும் முடிந்தது.

அலைபேசிய
நீண்ட மொழியாடலில்
யாரோவொருவனின்
ஞாபகத்தைச் சுமந்தபடியிருக்கும்
அவளின் அன்புள்ளம்
ஏற்கெனவே
பகிரப்பட்டுவிட்டதைக் காட்டியது !


பிறகு
கேட்காதது போலிருந்தபோது
எரிச்சலின் சிறு சாயல் கூட இல்லாமல்
உச்சரித்தது யார் பெயரை?


தவிப்பில்
குறிக்கோளின்றி
மனமலைந்தபோதில்
எட்டிப்பாக்க நினைத்தேன்


அப்போதுதான்
கன்னத்தில் யாரையோ
மென்மையாக முத்தமிட்டது போன்றதொரு
உணர்விலான சிரிப்பு !









*


இரவு
முடிவில்லாமல் நீண்டிருக்க
விரும்பினேன்.
உலகம்
இரவிலேயே முடிந்து விட
ஏங்கினேன்.
ஏனென்றால்
அடர் இருட்டில்த்தான்
எண்ணமெழுப்பும் பார்வைகள்
தீர்க்கதரிசனமாயிருந்தன !


நிலவில்லாத இரவுகள்
எவ்வளவு இருளானவை என்று
உங்களுக்குத் தெரியுமா?
நடுநிசிகள் இல்லையென்ற
கற்பனையே வலி !


நிழலோடு
வெளிச்சமிருக்குமிடத்தில்
நிலைவிழாத
இருட்டிற்கு வழியில்லையென்று
என்னை நானே
சமாதானப்படுத்திக் கொண்டேன்!








*


என்னை
எப்படி எனக்குள்ளேவர
அனுமதித்தேன்?
ஒரு வேளை
என்னைச் சுற்றி
ஒரு மாயையான வலையைப்
பின்னுவதற்காகவா?


ஒன்றோடு ஒன்று கலந்தும்,
இணைந்தும்,
வருடங்களில் கனமாகியும்
உருவங்களில் பரவிய
என்னை
எனக்குத் தெரியாது. !


திசைதேடாத
வழிப்போக்கன் போல
வழிதெரியாத நிலைதான்.
இருப்பினும்
ஊடுருவமுடியாத
ஆழ்மனப் பிரதேசங்களிலும்
எனக்கும்
நன்றாகத் தெரிந்தவொருவர்போலவே
உணர்கிறேன் !









*


கடலின் கரை
அலைகளைத் தொலைக்கும்
கணங்களில் 
சுவாசம்போலவே
மூச்சுமுட்டும்   
பூஞ்சோலைகளை ,
சுட்டு விரல்
கிள்ளிப் பற்றிக்கொள்ளும்
ஊசி மழையை ,
பழுப்பு நிறத்தில்
சுகமான
நினைவுத்தூசிகளை ,
மினுங்கிக்கிடக்கும்
மழழைகளின்
சிரிப்புக்களை,
நுழைய முடியாதபடி
உரசிச்செல்லும்
பிரியங்களை ,
நேருக்குநேர் சந்திக்கும் போது
ஏதோவொன்றுக்குள்ளிருந்து
வெளிவருவதில்
என்னைத் தொலைத்து
வெகுநாட்களாகிவிட்டதை
மனசாட்சி
ஒப்புக்கொண்டுவிடுகிறது !





*


" திருப்தியும்
உச்ச பரவசமும்
எங்கிருக்கிறதென்று "
ஆத்மாவைக் கேட்டேன் !



ஒருநாள்
ஆதாரத்தோடு
உண்மைக் காதலென்றது !
இன்னொரு பொழுது
துழாவி தேடிப்பார்த்து
பரஸ்பர நேசிப்பென்றது !


விரதநாட்களில்
பற்றற்று
ஞானம் கடத்தலென்றதும்
நல்லாகவே நினைவிருக்கு !


ஆனாலும்
உண்மையைச்சொல்கிறேன்
சிலசமயம்
சல்லாபம் செய்தபடியே
நெருக்கடிநிலை
அறிவிக்கப்பட்டதுபோலக்
காமம் என்றது !


அடக்கண்றாவி
சந்தேகத்திற்கு இடமில்லாமல்
நிரூபிக்கப்பட்டுவிட்டது
திமிறிக்கொண்ட
நாலாவது பதிலில்
ஒரு
அருவருப்பான மிருகமும்
எனக்குள்ளிருப்பது !










*



யாருமேயில்லை.
பின்மாலைகளிலேயே
வௌவால்கள்
அங்குமிங்குமாகப்
பறந்துகொண்டிருந்தன !

கும்மிருட்டில்
ஒவ்வொரு தளமாகத்
தேடிக்கொண்டிருக்கிறாள் !
" நீ சொல்லும்
மனிதனைப் போல
யாரும் இருந்ததேயில்லையென்கிறது "
அபத்தமான நிசப்தம் !


சிலமனுக்கும்
ஆள் அரவம் இல்லை !
ஏதோவொன்று
அவள்மீதிருந்து இறங்கிப்போவதை
மந்தகதியில் உணர்ந்தாள் !


இனி .
எப்போதுமே எடுக்க முடியாத
இடத்துக்கு
நிரந்தரமாகவே
நகர்த்தப்பட்டுவிட்டது
காதலெனும்போதை !





*

இவ்வளவு தூரம்
முன்னேறிவிட்டு
யாராவது பின்னகர்வார்களா?


ஒரேயொரு முறை
தொட்டுப்பார்க்க வேண்டும். !

ஒரே
ஒரு
தொடுகை
அவ்வளவுதான் !


நினைக்கும்போதே
மயிலிறகு
வருடுவது போலிருக்கும்
மென்மை !


கிறங்கிப்போய்
உச்சி சிலிர்த்து
பிரேமைகள் மங்கி
மெல்லென்று
அழுத்தவேண்டுமென்று
தோன்றுவது போல்
ஏறெடுத்தும்
கண்களை எடுக்க முடியவில்லை. !


அவ்வளவு அழகாயிருந்தன  

பிஞ்சுக் குழந்தையின்
 விரல்கள் !










*


அவசரமாகக்
கனவைக் கிழிப்பது போல
எங்கோ தூரத்திலிருந்து
ஒரு குரல் !

“உலகத்திலேயே ...
பெரிய பலவீனம்
எதுவென்று உனக்குத் தெரியுமா?”
என்று கேட்டது !

ஒலியின் நிழல்
கழுத்துவரை ஏறிவிட
அடைத்துப் பூட்டிய
மூச்சை
உள்ளிழுத்துக்கொண்டேன் !

பளிங்கறை ஒன்றிற்குள்
அழைத்துச்செல்வதுபோலவே
அதன் எதிரொலி
சுவர்முழுவதும்
சுழண்டுகொண்டிருந்தது !

விடியும் வரையில்
இடைவிடாமல்
திரத்திக்கொண்டிருந்த
பயத்தை வெல்லமுடியாததால்
பதில் சொல்லவில்லை !