Monday 30 April 2018

போதிமரம்.

ஒரு கவிதையில் எதையும் சொல்லலாம், எப்படியும் சொல்லலாம். அதேநேரம்  பல விசயங்கள் சொல்லப்படாமலும்  இருக்கலாம், ஆனால் சொல்ல வேண்டிய முக்கிய விசயங்கள் சொல்லப்பட்டு இருக்கவேண்டும் என்று அறுதியாக உறுதிமொழி எடுத்து சொல்கிறார் ஸ்டிவ் லோரன்ஸ் என்ற அமெரிக்க புதுக்கவிதைக்கவிஞ்சர். இவ்வளவு நுணுக்கமாக இப்பெல்லாம் கவிதை வாசித்துப் புரிந்து கொள்கிறார்களா என்று ஜோசித்தால் விடை அவ்வளவு இலகுவாகக் கிடைப்பதில்லை.  

                                                             கவிதை வெறுமனே வார்த்தைகளை ஒன்றன் கீழ் ஒன்று போட்டு  உரைநடைக் கட்டமைப்பை அப்படியே கவிதை என்ற போலியான வடிவத்தில்  எளிமையை நோக்கி நகர்ந்து விட்டது என்று சொல்கிறார்கள்.  இப்படிச் சொல்பவர்கள் நேரடியில்லாத மறைமுகமான படிமங்களில்  கவிதைகளை எதிர்பார்க்கிறார்கள். 

                                                             கவிதையில் நேரடித்தன்மையும், உள்நோக்கமும், சம்பவங்களின் நாலாவது பரிமாணமும், உணர்வை நனைக்கும் வார்த்தைப்பிரயோகங்களும்  ஒருவித ரகசியக்கலவை  அளவுப்பிரமானத்தில் இருக்கவேண்டுமென்பது என்னுடைய அனுபவம் 

.                                                               பார்த்தலில் பாதிப்பு உண்டாக்கிய காட்சிகளை, அல்லது உணர்வுவெளியை அடைத்து நிரப்பிய ஒரு மனத்தவிப்பை  கவிதையாக்கும்போது மிகுந்த கவனம் தேவை போலிருக்கு , அந்தக் கவிதைமொழி எப்படி வாசிக்கும் ஒருவரினுள்  எப்படியான  தாக்கதை உண்டாக்குகிறது என்பதை வைத்தே அந்தக் கவிதை வெற்றியடைகிறது. வெறும் வார்த்தைகளை  மட்டும் மொட்டையாகப்  பதிவு செய்வதற்கு கவிஞன் அவசியமில்லை. அதுக்குக் கதை சொல்லிகள் இருக்கிறார்கள்.

                                                           அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க. 


வெளிக்கதவைத் 
திறந்து வைத்துவிட்டு 
ஜன்னலில் காத்திருந்தாள் 
நான் 
இறக்கத்தில் வழுக்கிய உறைபணியில்
நடந்துபோய்ச்சேர்ந்தேன்


புதிய பாதை
பழைய பயணம்
வழமையான ஆதங்க
மவுனத்தின் பெருமூச்சு

என் குறைகளைப் பட்டியலிட்டாள்
அன்பின் உதாசீனம்
வெறிக்குடித்தனம்
அமைதியிழந்த மனது
ஆராவாரமற்ற வீடு
பொறுப்பில்லாத பொய்கள்
நேசிக்கத்தெரியாத நியாயங்கள்
பிரிவின் தனிமை
விழுங்கமுடியாத வேதனை
சுயநலமான இச்சைகள்


தேர்ந்தெடுத்த பொறுமையோடு
பம்மிக்கொண்டிருந்தேன்

சூடான கோப்பிக்கோப்பையில்
ஆவியடங்கிய குளிர்
நிரம்பிக்கொண்டிருந்தபோது
உரையாடல்
நினைப்பதைத் தெரியப்படுத்த
நிசப்தமாகிவிட்டது


திரைச்சீலைகளை ஒதுக்கி
வெளிச்சத்தை உள்நுழையவிட்டாள்

நான் வெளியேறியபோது
கதவுகளை வெறித்துப்பார்த்து
மென்மையாகத்தான்
மூடிவைத்தாள்

பிறகும்தான்
அமைதியிழந்த 

புதிய பாதை
ஆராவாரமற்ற 

பழைய பயணம்...,,,,

...............................................................................

ஹோ என்ற இரைச்சலோடு
குழந்தைகள் கடந்துபோனபின்
பாதையில்
ஸப்தங்கள் அடங்கிப்போனது

சதுக்கத்தின் 
பெரிய சீமெந்துச்சாடிகளில்
ஆதரிப்புகளின்றி
மலர்கள் மடங்கிவிட்டன


மார்ச் மாதக்காற்றில்
எட்டு மாதங்கள் உறங்கிய
சுத்தீகரிக்கப்பட்ட புழுதி வாசனை

குதிக்காலில் குத்திக்கொண்டு
வேகமாகக் கடந்த பெண்
எதேச்சையாக
வீதி முடக்கை நிதானிக்கிறாள்

உயர்ந்த தெருவிளக்கின்
நாலு குமிழிவிளக்குகளில்
மூன்று நின்று எரிய
ஒன்று தட்காலிகமாக இறந்திருந்தது


மாடி உப்பரிகையில்
வயதான பெண்ணொருத்தி
படுக்கையுறையை விசிறியுதறுகிறாள்

சராசரிக்கும் அதிகமாக
திறந்துவிட்ட வெயிலோடு
சினேகமாகக் குளிர் கோபிக்கிறது


மொட்டை மரத்தில் வந்திருந்து
வதிவிடமிழந்த
ரெட்டைவால்க்குருவி மோகனம் பாடுது

தொலைபேசியில்
அழைப்பை அணைத்துவிட்டு
உக்கிப்போன மரவாங்கில்
குருவி எழுப்பப் போகும்
அவரோகணத்தின் சுரவரிசைகளுக்காகக்
காத்திருக்கிறேன்....,,,,,,,,,


.................................................................................

எப்போதும்
வெறுக்கின்ற இருட்டில்தான்
ஆசுவாசப் பெருமூச்சு
இடையிலிறங்கி உள்வாங்கும்
கனவுகள் வறண்டுபோன உறக்கம் 
அதிலும் காதலில்லை ..............


அதிகம்
பார்க்கவிரும்பாத திசையொன்றில்
என்னைப்பற்றிய
எல்லாவிதமான முடிவுகளும்
எடுக்கப்பட்டிருக்கிற செய்திகள்
அதிலும் அன்பில்லை..........


எனக்கதிகம்
புரிந்துகொள்ளமுடியாத வார்த்தைகளில்
நேற்றைவரையான
நாடித்துடிப்பு அதிர்வுகள்
எழுதப்பட்டிருக்கும் நாட்குறிப்பு
அதிலும் நேசிப்புகள் இல்லை ..........


என் இதயத்துக்கு
ரெம்பவே பரீட்ச்சயமான இடத்தில
எதிரிகள் காத்திருக்கிறார்கள்
அதிலும்
துளியளவு பயங்களில்லை......

எனக்கேயான
பழைய தோல்விகளில்
மனசாட்சியோடு மோதிக்கொல்லும்
மறுபரிசீலனைகளின் அவசியம்
அதிலும் கரிசனை இல்லை......


எனக்குப் பிடித்தமான
உன் கவிதை வரிகளை
மீண்டும் மீண்டும் மீட்டும்போது
கண்களை மூடி
உள்ளங் கைகளை இறுக்கி
காதுகளை அடைத்துவைக்கிறேன்


அதில்த்தான் 
போதிமரம் தெரிய
அந்த ஞானவெளியில்
காதல் குறித்தும்
அதன் விளைவுகளைப் பற்றியும்
அநாமதேயங்கள் கிடையாத
வண்ணாத்திப்பூச்சிகள் பறக்கின்றன!


.............................................................................

ஒளியையும்
இருட்டையும்
விடியல் பிரித்த
நூலிடைவெளிகளில்
இறுக்கிப் பிடித்துக்கொண்டுதான் 
மரணம் பற்றிய அவள் கவிதைகள்
எப்போதுமவள்
அருகிலேயே காத்திருந்தது,


காலமாவது
குறுக்கிக்கொண்டிருப்பதை 

அறிந்தது போல
பிசாசுத்தனத்தனமான பிரயாசையுடன்
எழுதிக்கொண்டேயிருந்தாள்,

பொறுப்புணர்ச்சி காரணமாக
எப்போதும் மீட்சியைக்கலைக்கும்
முயட்சிகளில் தோல்வியடைந்து
அகலமாக இறந்தவர்களின்
கதைகளை அவள் எழுதுவதில்லை,


அதனால் தானோ தெரியவில்லை
இல்லாமையை
வாழ்வாக வரிந்து கொண்டவர்கள்
அவள்
ஆதர்சமான யதார்த்தத்தை
தங்களின் கற்பனை
வரிகளின் மீது ஏற்றி வைத்து
ஆறுதல் அடைந்திருக்கலாம் !


உங்களுக்கு
வாசிக்க சிரிப்பாக இருக்கிறதா ?

நெருக்குதல் நுழைந்துவிடாத
ஜமகாண்டத் திசைகளில்தான்
குத்தணமிட்டு மண்டியிடாமல்
அவள்
திகைப்புக்களை திணித்திருப்பது
அறிந்தால் 

மேட்கொண்டு சிரிக்கமாட்டிங்க !

சாவின் முன்னோட்டம் போல.
இடையில் வெட்டப்பட்ட சம்பவம்
ஒரு
கதாபாத்திரத்துடன் கரைந்துபோவதாகிய
அவள் இறுதிக் கவிதையும்
பிரியும் கணத்திலும் சவால்களில்
வலை வீசியிருக்கிறது, .


" சுட்டுவிரல் நீட்டி வழிகாட்டி
நம்மைச் செலுத்துவதற்கு
வாழ்க்கைக்குத் தகுதியில்லை " 


என்றவள்
முற்றுப்புள்ளியில் முடித்துப்போட்டு
நிச்சயமாக இறந்தேபோனாள் !


.....................................................................................

முதன்முதலில்
மென்மையான பிரஞ்ஞை பற்றிய
உங்களுக்க்கேயுரித்தான
அர்த்தமளிப்புகளோடு
ஒருநாளும் விவாதம் செய்யவேண்டாம் !


வெளிப்படும் நேரமொன்றில்
இதய எழுச்சியில்
வெறுப்புக்கள்தரும் பின்னணி
மனசாட்சியின் உறுதலாகும் போது
எழுதவெதுவும் 

எழுந்துவருவதில்லை,
அதனாலென்ன
உங்கள் சந்தோஷம்
உங்களில் ஊடுபாயுமெனில்
பின்வாங்காமல்
அந்த நேரமே எழுதிவிடுங்கள் !


இன்னொருவருக்காக
நீங்களெப்படி
சந்தோஷிக்கவோ
துக்கிக்கவோ முடியாதபோது
எதட்காக இன்னொருவர்
முகமூடியை அணிந்துகொண்டு
திறமையின் முதிகிலேறி
உப்பு மூட்டை சுமக்க வைக்கும்
வடிகட்டியெடுத்த
கபடித்தனமானவர்களுக்கு
ஆச்சரியங்களை நிகழ்த்தவேண்டும் ?


நியாயம் சொல்ல
நேரமில்லா உலகத்தில்
நுழையமுடியாது இடுக்குகளிலும்
வழுவழுப்புப்பாறைகளிலும்
நீரோட்டம் பதிந்த ரேகைகளில்
கவிதைக்கான கொடுப்பினைகள்
வருடாவருடங்களாகக்
விசாரிப்புகள் எதுவுமின்றி
காத்திருக்கலாமென்பதை
ஒப்புக்கொடுங்கள்


ஒரு கட்டத்தில்
தவறுகளுக்குள் அடைக்கப்பட்ட
நீதியில்லா வெட்கம்
கிளிஞ்சலாகும் அலைக்கரையில்....,,


.........................................................................................

அவளைச்சார்ந்த
உரிமைகள் பொதுவான
எல்லைகள் குறுகிய
சமூகக்கட்டமைப்பின் முன்
வெற்றிடங்கள் 

அயர்ச்சியுறச்செய்கிறது.
ஒரு 
குறிப்பிட்ட பருவத்தில்
அவளுக்கென்று
மேலதிகமான அர்த்தங்களுக்கு 

அனுமதியில்லை .

பல சமயங்களில்
உருவாக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள்
நேற்றுவரையிலும்
அவளுக்கென்று ஏதுமில்லை.

கலாச்சாரக் காட்டுத்தனத்தை
எவ்விதமான
மேலோட்டமான அர்த்தமுமின்றி
வரிந்துகொள்ளும் அபாயம்
பெண்ணுரிமைக் கட்டத்தை
அடைந்துவிட்டதாக
பிதற்றிக்கொள்ளும் போதெல்லாம்
முழுமையடையாமல் முற்றுப்பெறுகிறது.
அவளின்
ஒடுங்கிப்போன மென்மை .


நாம் அறிந்தவரை இதில்
வயதான அம்மாவோ
அறிவான அக்காவோ
உலகமறியாத் தங்கையோ
பதிவிரதை மனைவியோ
பாசமுள்ள மகளோ
விதிவிலக்குகளாவதேயில்லை


வேறொரு புள்ளியிலிருந்து
பெண்ணைப்பற்றிச் சொல்லலாம்
என்றபோதுதான்
வலுக்கட்டாயமாக இழுத்து
நமக்கிடையே நடமாடச் செய்கிற
பெண்மையின் புரிதல்கள்
ஒவ்வொன்றும்
ஆணாதிக்கத்தில் வடிமைக்கப்பட
அத்தனை அபத்தங்களும்
அலட்சிய அசட்டுத்தனங்களும்
இதிலிருந்தே தொடங்குகின்றன...............!


............................................................................................

தூக்கமில்லாத மனநிலையை
விடியும்வரை

இடம்பெயர்க்கமுடியவில்லை,
நிறைமாத மேகத்துக்கு
பிரசவ இடமொதுக்கும் வானம்,

ஒழித்துப் பிடித்து விளையாடும் 
ஒட்டுப்பொட்டு நட்சத்திரங்கள்.


உருப்பெருக்கிக் கொண்ட
அலைகளின் விளிம்பில் கடல்

கட்டாக்காலியாக அலைச்சலுறும்
சாம்பல்க் கழுதைகள்

வெளுத்தபாலைப் பிரதியெடுக்கும்
வெள்ளைப் பவுர்ணமி,


இப்படியேதான்
கனவில் வந்து உட்காரும்
முடியாத வாசம் !


மிச்ச ஆயுளையும்
வாழ்ந்துவிடச் சொல்லும் ஆசைகளோடு
பிரிந்து சென்ற இடங்களுக்கு
மீண்டும் செல்லவேண்டும் !


பிடிப்புக்கள் 
நெருங்கி வருகிறதெல்லாம்
எப்பவோ முடிந்த எதற்காகவா ?
இல்லையேல்
யாருமில்லாத யாருக்காகவா ?
இல்லையேல்
பழங்கனவிலிருந்து முழிக்கவா ?.

சொல்லமுடியாத கதையில்
எழுதவிரும்பாத வார்த்தைகள்
தனியாகக் காற்றில் அசைந்து
யாருக்கு அர்த்தம் கொடுக்கப்போகுது ?.


மறந்துவிடமுடியவில்லை
மூச்சடங்கிய இருட்டில்
வரலாற்று ஆவணத்தில் வராத
ஒரேயொருவனின் இலட்சியத்துக்கும்
அவனைத் தவிர்த்த
மற்றெல்லாரின் விருப்பத்துக்கும்
மத்தியில் நழுவுகிற
அசரீரி இடைவெளிகளில்
இன்னொருமுறை நடந்துபோய்த்
தேடியடைய முடிந்தால்
இன்னொருமுறையும்
காலடிச்சுவடுகளைக் கண்டுபிடிக்கலாம் !


.............................................................................................

தனியாகக்
குறுக்கிக்கொண்டு
மழை அழுதுமுடித்த கணம்
ஸ்டோக்ஹோல்ம் நடைப்பாதையில்
வட்டமாகத் தேங்கும் தண்ணியில் 
முகத்தைப் பார்த்தால்
பூர்வீக வீட்டுக்
கட்டுக்கிணறு ஞாபகம் வரும்,


விடிவை முந்திய காலையில்
பாதிவரை தேய்ந்த படிக்கல்லில்
வாசசந்தனம் அரைக்கும்
பாட்டி ஞாபகம்

பால் நிலவு நாட்களில்
பாக்குமரங்களின் நிழலசைவுகள்
குளிக்கும் தொட்டியில்
முங்கி இறஙகி முழுகி விளையாடும்,


ஒரு
திருக்கார்த்திகை விளக்கீட்டுநாள்
தட்செயலாகத் தவறிவிழுந்த
பித்தளை சொம்பு
நீர் மொண்டுகொண்டு வரும்,

மனஅழுத்த நாட்களோடு
போராடிக்கொண்டு தோய்கல்லில
யோசித்து உட்கார்ந்திருந்த
பெரியக்காவின் உயிரோடிருந்த வருடங்கள்


கிணற்றைச் சுற்றிக்
இரவாகவும் பகலாகவும் காவல் நின்ற
தலையைக்குணியமறுத்த
இப்பில்இப்பில் மரங்கள்
நினைவலை துளிர்க்கும் ,


நாலுமுறை
அடிநெளிந்த தகரவாளியில்
சேறையும் பாசியையும் அள்ளிக்கொண்டு
புண்ணியக்குஞ்சி ஏறிவருவார்,

கொட்டுத் துலாமரத்தில்
பிரயாசையோடு துளைப்போட்டு
தன்னம்தனியாகக் குடியிருந்த
கரிச்சான் குருவி முன்னுக்குவரும்,


பார்த்திங்களா
மழை அள்ளிக்கொட்டிப்போட்டு
தவறவிட்ட எல்லாவற்றையும்
கூட்டிப் பெருக்கி எடுத்ததால்
நேற்று ஒருநாள் மட்டும்
எங்கள் வீட்டுக் கட்டுக் கிணற்றடியில்
நிறைவாக வாழமுடிந்தது.!


...........................................................................................

புழுதி படிந்த வெய்யிலுக்கும்
வடதுருவ முன்னிருட்டுக்கும்
இடையில் அகப்பட்ட
ஒரு ரெண்டுங்கெட்டான்
நிறத்தில் அவள் பிறந்தாள்.


நீயேன் இப்பிடி?
அம்மாவேன் அப்படி ?
நானேன் இப்படியும் அப்படியுமென்று
குடைந்து கேள்வி கேட்பாள்

" மனம்தான் நிறமென்பேன் "
வெள்ளையாகச் சிரிப்பாள்
முடக்கொத்தான் கொழுகொம்புகள்
பற்றிப்பிடிப்பது போன்ற சுருள்கள்
நிமிர அடம்பிடிக்கும்
அவள் தலைமயிர் நுனியை
குஞ்சமாக்கி உருட்டி
வண்ணமயமாக ஜோசிப்பாள்


மேட்கொண்டு
விதண்டா விவாதம் செய்யமாட்டாள்
அது சின்ன வயசில்

பிறகு பதின்வயதில்
வெளிச்சத்தையும் இருட்டையும்
புதியவொரு பரிமாணத்தில்
பொருத்திப் பார்ப்பாள்


எதிர்மறையானஅதிர்ச்சி நிறத்தில்
உடைகளைத் தேர்வாக்கி அணிவாள்
நிறம் நீர்த்துப்போன ஓவியங்களை
ஒன்றிப்போய் ரசிப்பாள்


ஒருகட்டத்தில்
அவளே அவள் நிறத்தை மறந்துவிட்டாள்
அல்லது
நிறத்தை நிராகரித்துக்கவேண்டும்
அல்லது
கேள்விகளைத் தவிர்க்கக் கற்றிருக்கலாம்
அல்லது
எல்லாவிதமான பொது நிறங்களுக்குள்
அவளின் பிரத்தியேக நிறம்
முக்கிய கவனிப்புகளின்றி மங்கியிருக்கலாம்


இப்போதெல்லாம்
மிகவும் தூரமாகிப்போனாலும்
ஒரு
வசந்தகாலப் பச்சை இலை
வயதாகும் மரத்தின் நிராகரிப்பில்
மண்ணிறத்தில் இறந்துகொண்டு
சருகாகி விழும் பாதையொன்றில்
மெல்ல நடக்கும்போது
அவள் புரியாமல்க் கேட்ட
நீயேன் இப்பிடி?
அம்மாவேன் அப்படி ?
நானேன் இப்படியும் அப்படியுமென்ற
கேள்விகள் எதேச்சையாக வந்துவிடுகிறது!


..................................................................................................

நீங்கள்
மேசையின் அந்த நுனியில்
ஆசுவாசமாக இருக்கிரீர்கள்
இந்தத் தொங்கலில்
நான் நடுங்கியபடி நிட்கிறேன்


நடுமேசை முழுவதிலும்
அலங்கோலமான சொற்கள்
கும்பலாகக் குவிந்திருக்கு

வரிசைகளற்ற ஒழுங்குமுறையில்
வார்த்தைகள் சிதறியிருப்பது பற்றி
யாருமே
அலட்டிக்கொள்ளவில்லை


மிகமெல்லிய தென்றல்
வந்தபடியும் போனபடியும்
அதுவும்
இடைஞ்சல் செய்யவில்லை

கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருக்கிற
அர்த்தங்கள் திறந்தபடியிருப்பதால்
வரையறைகளில் திருப்தியற்ற
ரகசியமான மொழியொன்றின்
திட்டமிட்ட
ஏட்பாடாகத்தான் இதுவிருக்கவேண்டும்


அந்த நுனிக்கும்
இந்தத் தொங்கலுக்கும்
புரிதலை ஏற்படுத்த
இன்னும்
எவ்வளவு நாட்கள் காத்திருப்பதென்று
நீங்கள் கேட்கிரீர்கள்


அட்ப விஷயங்களுக்குள் 
புகுந்துவிடாமல்
நான்
கண்களை மூடிக்கொள்கிறேன் !


சீரழிந்துவிடும் கட்டத்தை நெருங்க
ம வு ன ம் என்ற
நான்கே நான்கு எழுத்துக்கள்
மிகக்கச்சிதமாக ஒருங்கமைந்து
ஒவ்வொன்றாக
எழுந்துகொள்கிறது !


.....................................................................................


வெறுமையான அடையாளங்களை 
பிரமாண்டமாக்கிவிடும்
சில வெற்றிகளோடு
பிடித்துப்போன அளவில்
இருப்பைத் தக்கவைக்கலாம் 

அது
முதலாவது தந்திரம் ,

அல்லது
சில தோல்விகளோடு
சமாதானங்களை சேர்த்துக்கொண்டு
வெளியில் பூசி மெழுகிவிடலாம்

ஒத்துக்கொள்ளும்படியாக
அது
இரண்டாவது யுக்தி ,


எதையும் ரசிக்கவிடாத
அமைதியிழந்து இதயத்தில்
மனசாட்சியோடு
விட்டுக்கொடுப்புக்கள் சாத்தியமாகும்போது
நிறைவுக்குச் சற்று கீழாக
வரன்முறைகளோடு வாழப்பழகும்
திருப்தியைத் தேர்வுசெய்வதை
வெளிப்படையாகவே
ராஜதந்திரம் என்றலாம்


ஆனால்
மாற்றங்களை விரும்பாத
சவுகரியமான எல்லைகளை விட்டு
நகர்த்தமுடியாத வாழ்வில்
தப்பித்து ஓடநினைக்கும் காலம்
நெருக்குதலோடு வியப்பளிக்கும்
முக்கியமாகிப்போன விநோதங்களில்
எப்போதுமொன்று
நேரத்தைச் சபித்துக்கொண்டே
முடிவுக்களுக்காகக் காத்திருப்பது

அது
மரணக்கொடுமை............!

..........................................................................

வெள்ளைக் கொக்குகள் 
பதிவிறக்கிக்கொண்டுவரும் 
வினோதக் கனவுகள் ,

நேரமிருந்தும் 
சவரம் செய்யாத 
சோம்போறி முகங்கள்,
மழைக்கால உத்தேசங்களோடு
உடன்படிக்கை செய்துகொள்ளும்
மந்தார வானம் ,


குறிக்கோளோடு
நடுநிசியில் பறந்துதிரியும்
இரவுப்பறவை ,

கொடுப்பினைகள் சேரும்
குழந்தைகளின் சிரிப்பைப்போல
இலைதளிர் மலர்கள் ,


கோடுகள் கீறிவைத்து
பகல் வெளிச்சத்தைப்
பின்னி எடுக்கும் சூரியன் ,

தோகை மயிலின்
உதாரணத்தைக் களவெடுத்த
அவளின் கூந்தல் உலர்வுகள் ,


எளிதில் விவரிக்க முடியாத
மாயங்களை ஒளித்துவைத்துள்ள
பின்னந்தி வானம் ,

நெருக்கமாகும்
வியர்வை வாசனைகளை
அபரிமிதமாக்கும்
அந்த மூன்று நாட்கள் ,


ராகங்கள் தாலாட்டும்
காணொளிகளிளெல்லாம்
உருத்திர வீணையின் இசைப்பொழிவு


இவற்றை எப்பவாவது
தீவிரங்கள் குறையாமல் 

விசாரித்திருக்கிறீர்களா ?
உங்களுக்கும்
இதட்குள்
எனக்கும் பிடித்த
கவிதை இருக்கலாம்!