Thursday, 15 March 2018

எல்லாக் கேள்விகளும் !


அண்மையில் சீனர்கள்  சைனீஸ் மொழியில் எழுதிய புதுக்கவிதைகள் மொழிபெயர்ப்புத்   தொகுப்பு ஒன்றை ஆங்கிலத்தில் வாசிக்கச்  சந்தர்ப்பம் கிடைத்தது . விக்ரம் சேத் என்பவர் மண்டரின் சைனீஸை உள்வாங்கி மூங்கில் காற்றின் அசைவுகளோடு   மொழிபெயர்த்து இருந்தார்.  

                                                 நம்மைப்போல அல்லாமல் பூச்சி புழுக்களையே  ரசித்து சுவைத்து உண்பதில்  கொஞ்சமும் அருவருப்பு விட்டுவைக்காத  சீனர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அல்லது அவர்களின் மொழியில் காட்சிகளின் வருணனை, உணர்வுப் பிரவாகம், நனவோடை உத்திகள். உவமான உவமேயங்கள் வித்தியாசமாக இருந்தது. டெக்னீகலா  இப்படித்தான் இருந்தது அந்த வாசிப்பு   அனுபவம் . 

                                             ஆயிரத்துக்கும் அதிகமான எழுத்துக்கள் உள்ள    சீனமொழி  ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையானவை . அந்த மொழிக்குள் அந்நியமொழிகள் கலக்கவில்லை. அதுதான்  காரணம் அம்மொழியின் அடிப்படையில் ஆதாரமான சொற்களின் அர்த்ததில் தேவையற்ற   மாற்றம் நடக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். 

                                           ஏனென்றால் சைனீஸ் கவிதைகளில் உள்ள கவிதைமொழியே அன்றாட பேச்சுவார்த்தை மொழியைப் பட்டை தீட்டித் தெறிக்கவிடுவது போலிருந்தது. 

பல சயங்களில் நினைப்பது அன்றாடப்   பேச்சு மொழியில்   உள்ள  வார்தைத்தைப் பிரயோகத்தை  எப்படிக் கனதியானவொரு கவிதைமொழியாக நகர்த்திக்கொண்டு போய் இன்னொரு பரிமாணத்தில் உக்கார வைப்பது எப்படி என்று. அது சாத்தியமான ஒன்றா அல்லது இப்பவும் எப்பவும் தண்ணி காட்டிக்கொண்டு இருக்கும் ஒன்றா என்றும் குழம்புவது . . 

                                                 ஆனாலும் சில எதிர்பாராத இடத்தில ஏதோ ஒரு புள்ளியில்  கட்டுப்பாடுகளுடன் அது   நம்மை அறியாமல் உள்ளிருந்து அது வெளிப்பட்டுவிடலாம்.

முகநூலில் எழுதிய இந்த முயட்சிகளை புத்தகம் ஆக்கும் நோக்கத்தில்  ஒன்றுசேர்க்கிறேன். அவற்றை   உங்களோடும்  தொகுப்பாக்கிப் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொரு தொகுப்பிலும் பதினைந்து , சிலநேரம்  இருவது சொச்சம் சேர்ந்துவிடுகிறது. 

                                              கவிதைகள் போன்ற கட்டுமானஸ்தில் மட்டும்  கிட்டத்தட்ட இரண்டாயிரம் உருப்படிகள் இதுவரையில் 83 தலைப்புகளில்    மின்னெறிஞ்சவெளியில்  தொகுத்தாகி முடிஞ்சுது. இன்னும் அதே அளவு முகநூலில் ஆங்காங்கே சிதறிக்கிடக்குது. வெகு விரைவாக அதுகளையும் இணைக்கவேண்டும். 

..........................................................  


வாழ்வைச் 
சமன்படுத்தி நிறுவிவிட்டு 
ஒரு 
சூனியத்திலிருந்து
வெளியேறிவிடுவது போன்றது

இருத்தலின் 
அதீத   ஆரவாரங்கள் ,
நெருக்க நகரத்தின்
அமைதி நுரைக்கும்
நிசப்த வழிகளில்
நடந்துகொண்டிருப்பது போன்றது
தூக்கியெறிந்த
தனிமைகளைத்
வலியச்சென்று தேடித்தொகுப்பது !


.....................................................................


முகஸ்துதிக்களற்ற
காத்திரமானவொரு 
அனுபவம் ,
அதியுயர்காலை
எழுதிவிட்டுப் போன
அதன் குறிப்பில்
பரிசுத்த மன்றாடல் ,
மாதாசுருவத்தைத்
ஈரத்துணி போட்டுத் துடைத்து
மெழுகுதிரி ஏற்றி வைத்தேன்
காற்றுத் திரும்ப வந்து
மஞ்சள் ஒளியை
மெல்லெனவே
அசைத்துக்கொண்டிருந்தது.!


..............................................................

நிறைந்து
மறந்து போன
தோல்விப் பாடல்களை
மனசாட்சிக்கு விரோதமாக
மறுபடியும் ரசிக்க...
சொல்லாமலே
தொலைந்து போன
பிரிவுக் கவிதைகளைத்
தேடி எடுத்து
குதர்க்கமில்லாமல்
இதயத்தோடு நேசிக்க,
இப்போதைக்கு
குறுக்கிடாமல்க்
கொஞ்ச நேரம் வேண்டும் !


................................................................


எதிர்பார்த்தமாதிரியே
புரிதலுக்கான
அறிகுறிகள்
ஆரம்பத்திலில்லை,
எல்லாரும்
பார்த்து உச் உச் என்று கொட்டி
பொறுப்பில்லாமல்க்
கடந்து போன
கனதியான
சம்பவத்தைக்
காற்று நுழைய முடியாத
கடினமான வரிகளில்
எழுதமுடிந்தது !....................................................................


தூசு பதிந்துள்ள
மேசை விரிப்புக் கீழே
மயிலிறகை 
ரகசியமாக வைத்திருந்தேன்
உச்சம் தலையில்
அடம்பிடித்த
வெக்கையை வெளியேவிட
ஒரு மாலையில்
ஜன்னலைத் திறந்தபோது
காற்று அதை
விரித்துப் பார்த்து
வரிக்குவரி வாசித்து விட்டது!


...................................................................


பாடியவர்களின் 
ஞான மதிப்பீடுகளிலிலோ 
நாதப்பிரம்மம்
தட்டிக்கொடுத்து 
நல்ல பெயருடனேயேதான்
இரவெல்லாம் 
மேடையேற்றிய 
இசைக்கு வயதாவதில்லை 
நமக்கு 
வயதாகிக்கொண்டிருக்கு  
இட்டுநிரப்ப 
இனி ஏதுமில்லாமல் 
எப்படிக் கடந்துபோக முடியும்? 

.......................................................

பதில்களில் 
சம்பந்தப்பட விரும்பாமல் 
ஏதோவொரு 
மறுமை மொழியை 
உதிர்த்துவிட்டு 
கோபமாக வெளியேறிவிடுகிறது
விளக்கம்தேடும்
பிரதானங்களை முன்னிறுத்தும்
எல்லாக் கேள்விகளும் !


.........................................................

உள்
எதிர்ப்புகள்
அதிகமிருந்தபோதும்
சேர்ந்துகொண்டு
கொந்தளிப்புகளேட்படுத்தி 
உஷார் மனதில்
அகல் விளக்கேற்றிவிட்ட
எனக்கேயெனக்கான
நீ
எங்கேதான்
போய்விட்டாயடி ?


....................................................

திண்டாடவேண்டிய
புயல் வேகத்தில்
ராவெல்லாம்
ஊழிச்சுழன்றடித்தல்
அவசியமில்லைதான், 
எப்படியோ
விடியும்போது
விரும்பிய பக்கமே
சாய்ந்து படுத்துவிடுகிறது
காமம் !


...........................................................

குளிருக்குச்
சம்பந்தமே இல்லாமலே
சரமாரியாக
வசைமாரி பொழிந்தது போதும்
பார்த்திருங்கள் 
கொஞ்ச நாட்களேதான்
பிறகு
எந்த வழியுமில்லாமல்
உறைபனி
துயரக் காற்றிடமே
சரணாகதியடையும் !


..........................................................

சரிநிலைகளுடன்
என்
உரையாடல்களுக்கு
நடுவில் ஒதுங்கி நுழைந்து
அணுகவேண்டாம் 
நீங்கள்
எப்போதும்போல
கடைசியான காட்சி முடிவுக்குக்
காத்திருப்பவர்கள்
நானோ
இடைவேளையிலேயே
வெளியேறிவிடுபவன் !


........................................................


ஏற்றுக்கொள்ளமுடியாத 
ஆவேசமான 
வசவு வார்தைகளோடு
நான் 
வாய் திறந்து
எந்தவகையான
காதிரமான எதிர்ப்பையும்
பதிவுசெய்யப்போவதில்லை,
அழுத்த
மூடிவைக்கப்ப‌டும்
மரபின் தொடர்ச்சியில்
சம்பந்தப்பட்ட‌
எல்லாப் பெயர்களையும்
வெளிக்கொண்டுவந்து
அதிகாரமான ‌
நிலைப்பாடுகளோடு
மட்டம்தட்டிக்கொள்கிறது
வரலாறு !


...............................................................

கடலில் அலைபோல
நினைவில்
நின்று நெரிபடும்
இசைக்குழுக்களின்
பரவசமான  கீதங்கள்
சுடுமணலில்க்
கடலைக் கோதுகளோடு
பனிப்பொழிந்த
காலை விடியல்கள்
பிடரிமயிரின் புல்லரிப்போடு
நேரடி மேடை
பூச்சொரிந்த கனாக்காலம்,

.......................................................

உபயோகப்படுத்த
தன்னைத்த்தானே
அவமதித்துவிடும்
பரிந்துரைகள்,
தெரிந்திருக்க வேண்டுமென்ற 
அவசியங்கலில்லாத
மதிப்பீடுகள்,
முணுமுணுத்துக்கொன்டிருகும்
ஆழமான அமைதியில்
சலனங்கள்
ஏன் நிகழ்கிறது ?
அனேகமாக
நிராகரிக்கப்ப‌டுமிடத்தில்
வென்றுவிடுகிறது
உறுதிப்படுத்தப்படாத
செய்திகள் !


............................................................

ஆழ்மனதின் மறுபதிவு
 விழாக்கால 
ஆராதனைகளின் புரிதல் 
அதிகம் தெரியாத  
திகட்டாத தத்துவ தரிசனம் ,
தினவெடுத்து 
இளமை தின்ற 
அந்தப் பால்வீதி நாட்கள்  
இங்கிருந்து 
இன்னொருமுறை 
நடைபயில ஏங்குகிறது !


.................................................................

பிசாசுத்தனத்தனமான 
பிரயாசையுடன் 
நியாயம் 
பெற்றுக் கொள்ள முடியாத
இறந்தகால 
அநியாயம் ஒன்றின்
பெறுமதியை
நியாயப்படுத்த முயற்சிப்பது போல
கவிதை எழுத
சந்தேகமில்லாத
காரணங்கள்
தேவைப்படுகிறது...!.


............................................................ஆனாலும் 
ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கு
இப்போது எல்லாமே 
வேறுமாதிரியாகமாறியிருக்கு
அலங்காரங்கள் சேர்த்த 
தகரக்கூரைக் கோவிலும் 
மொட்டைக் கோபுரங்களும் 
ஆனாலும் 
உலாப்போன 
வெளிவீதிகளில் 
நிறங்கள் மங்கிப்போய் 
இப்போதும் அப்பி இருக்கும் 
பின்னிரவில் 
மேடை ஏறிய பாடல்கள்....!.

................................................................

நான் 
தனியாக யாரோடோ 
கதைத்துக்கொண்டு 
இரைச்சலாகக்    குடிக்கிறேன் ;
ஜன்னலில் 
நிலவு கரைந்துகொண்டிருக்கு   
நண்பனென்று  
யாரும் அருகில் இல்லை,
தூக்கமில்லாத 
மனநிலையைத்தான் 
விடியும்வரை 

இடம்பெயர்க்கமுடியவில்லை, !