Friday, 24 March 2017

வாசிப்பின் நேசிப்பு ..முதலாம் பாகம்

ஒரு காலத்தில் வாசிப்பு என்பது போதைதரும் ஒரு அலாதியான கனாக்காலமாக இருந்தது. நிறயப்புத்தகம் அந்த நாட்களில் வாசித்தேன். அதில சிலதுகள் பற்றிய நினைவுகளை அப்பப்ப முகநூல்   முகச்சுவரில் எழுதி இருக்கிறேன் . அவற்றைத் ஒரு பாகம் ஆகி முதலில் தொகுக்கிறேன்.மிச்சங்களைத் தொடர்ந்து தொகுப்பேன் .   புத்தகங்களைக் காசுகொடுத்து வேண்டி ,வாசித்து பிறவிப்பயன் அடைந்து அவற்றை , மற்ற நண்பர்களுக்கும் சிபாரிசு செய்து , தாங்கள் அனுபவித்த இன்பமான பொழுதுகளைப் பற்றி விமர்சனம் செய்து, காலம்போற போக்குப் புரியாமல் எழுதிய அந்த அப்பாவிகளை உட்சாகப்படுத்தி ஊக்குவித்து , அவற்றை அலுமாரியில் பொக்கிஷம்போலவே சேகரித்து வைக்கும் நல்ல வாசகர்களும் இருக்கிறார்கள். விதிவிலக்காக அவர்களின் விகிதாசாரம் குறைவாகவே இருக்குப் போலிருக்கு. ஆனால் அப்படியான ஜீவன்களும் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகில் அதிகம் வெளிச்சங்கள் விழாத இடத்தில இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். அவர்களில் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன் . 


இலகுவான தமிழில் எழுதி அசத்திய அசோகாமித்திரனை பலருக்கு தெரியும்! அவரோட "எலி" கதையை மறுபடியும் படித்தேன் ,கதையில் எலி பற்றி அதிகம் தகவல் வராது, அதை சுறியுள்ள மனிதர்களில் கணேசன் என்பவரின் கதைதான் அதில சுவாரசியமாயும் இருக்கும !தியாகராஜன் என்ற பெயரில் பிறந்த அசோகமித்திரன் ஒரு சகாப்தத்தை  காலத்தின் கண்ணாடிகளில் பிரதி விழுதி  ஒரு நூற்றாண்டு கால ஓட்டத்தில் சாதாரண மனிதன்  சந்திக்கும் குழப்பமான வாழ்வை ஒருவிதமான நகைச்சுவையுடன்  கண்முன் இழுத்து எடுத்துக்  காட்டி  எழுதியவர்.

                                     எழுபதுகளின் புனைகதை  தமிழில் மினிமலிஸ ஸ்டைல்  என்ற  எழுத்துக்கு இவரே மிகச் சிறந்த உதாரணம், அவர் எழுதிய  ஒரு கதையில்  ஜமுனா என்ற பெண்  தூக்குப் போட்டுக் கொள்ள முயற்சிப்பது பதறி எழுதி இருப்பார்,,கதை நினைவில்லை அனால் அந்த சம்பவ விபரிப்பு இப்பவும் நினைவிருக்கு . அப்பி ஒரு ஆழமாகப் பதியவைக்கும் மொழி அவருடையது . ஒரு விபரமில்லா சிறுமி ஒருத்தி ஓர் முரட்டு  ஆடவனின் முன் தன் ஆடை களைவதைக் கூட 'அய்யோ' என ஒரு சிறிய சொல்லில் தான் விவரிப்பார். மிச்சம் நாங்கதான் கண்டடைய வேண்டும் 

                                   அசோகமித்திரன் சிறுகதைகள் எல்லாமே உலகத்தரம் வாய்ந்தவை அல்ல. ஆனாலும் வியக்கும்படி அசைக்கமுடியாத மிகத்தரமான சில கதைகள் இருக்கு. அதில எனக்குப்பிடித்த கதை " கோணக்கொம்பு மாடு.. "என்ற கதை ஒரு வீட்டில் கோணல் கொம்புள்ள மாடு நிற்பதால் வரும் பிரச்சினைகளை அழகா எழுதிய கதை அது

                                                ஆனாலும் அவர் எளிமையா தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் விசித்திர குணங்களை எப்பவுமே சுவாரசியமா சொல்லுவார்! பலர் எழுதும் கதைகளை நாங்கள்தான் தள்ளிக்கொண்டு போகவேண்டும்,அசோகமித்திரன் கதைகள் எங்களை தள்ளிக்கொண்டு முடிவு வரைபோகும்! ஜேம்ஸ் ஜாய்ஸின் கதைகளைப் போல! 
 இன்றைக்கு கதை எழுத ஆரம்பிக்கும்  பலர் நிச்சயமாக  அசோகமித்திரனின் இந்த மூன்று சிறுகதைகள்ளான அடுத்த முறை,  வெளிச்சம்,  துரோகங்கள் .  இதைக் வாசித்துப்போட்டு எழுத ஆரம்பியுங்கள்,உத்தரவாதமாக நிறைய கதைசொல்லி டெக்னீக் கற்றுக்கொள்ளுவீர்கள் 


                                          ஈழத்தவர்களின் படைப்புகளுக்கு தான் பொறுப்பேற்றிருந்த 'கணையாழி' இதழில் - எழுபதுகளில் - தகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். தமிழில் பெருமைப்படத்தக்க படைப்புகள் பலவற்றை அவர் எழுதியுள்ளார்! 'தண்ணீர்', 'கரைந்த நிழல்கள்' ஆகிய அவரது நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

                                 அசோகமித்திரன் கதை சொல்லும் பாணியே ஒரு அலாதியான பாணி. அவர்போல அவரைக் கோப்பி அடிச்சு டிங்கரிங் வேலை செய்து யார் எழுதினாலும் சிம்பிளாய் பிடிக்கலாம்.   தமிழ்நாடில் அவர் சரியாக கவனிக்கப்படமுன், அமெரிகர்கள் அவரை இனம் கண்டு Ohio university க்கு அழைத்தார்கள், வந்து தங்களுக்கு எப்படி "கதை சொல்ல்வது " எண்டு சொல்லித்தரும்படி!

                                                 அவர் அங்கே தங்கி இருந்த போது சந்தித்த பல நாட்டு எழுத்தாளரை வைத்து "ஒற்றன் " என்று ஒரு நாவலே அமரிக்காவில் வைத்து எழுதினார்! அந்த நாவல் ஒரு சான்று அவர் எப்படி கதை சொல்லுகின்றார் என்று அறிய! அதில "லாரியா 2 என்ற இத்தாலியப் பெண் பற்றிய கதை அருமை,ஒரு உரையாடலில் முக்கியமா அந்தக் கதையை நகர்த்தி இருப்பார்

                             இலங்கையில் அந்த நாவலை படித்திருந்தாலும், அதில வாற ,அபே குபேக்னா என்ற ஒரு எதியோப்பிய எழுத்தாளரை பற்றி நிறைய அந்த புத்தகத்தில் எழுதிருந்தார் ,ஐரோப்பா வந்தபின் , என்னைபோலவே புலன் பெயர்ந்த பல எதியோப்பிய அகதிகளை அடிக்கடி சந்திக்கும் போது அவர்களிடம்

" உங்களுக்கு அபே குபெக்னாவை தெரியுமா ?"

என்று கேட்டால் ,அவர்கள்

"அபே குபெக்னாஜி என்று மரியாதையாக அவரை நாங்கள் சொல்லுவோம் "

                                         என்று பெருமையாயக சொல்லுவார்கள்! ஆங்கிலேயருக்கு சேக்ஸ்பியர் எப்படியோ,அப்படியே அந்த படிப்பறிவு குறைந்த எதியோபியாவில் அபே குபேக்னா இலுப்பை பூ !அசோகமித்திரன் அந்த நாவலுக்கு "ஒற்றன் "எண்டு பெயர் வைத்ததே ,அது அபே குபேக்னா எழுதிய ஒரு நாவலாம்!..

                                    அண்மையில் "life of pie "படத்துக்கு ஒஸ்கார் விருது கிடைத்தபோது ,அந்தப் படத்தைப் பார்த்த போது வியந்து ஜோசித்தேன் ,அசோகமித்திரன் எழுதிய "மானசரோவர் " என்ற நாவலை யாரவது சொதப்பாமல்,முக்கியமா மூலக் கதையை சொதப்பாமல் படமாக எடுத்தால், அதுக்கு கட்டாயம் "origianl menu script "என்ற ஒஸ்கார் விருது கிடைக்க வாய்ப்பு இருக்கும் போல இருந்தது ..

                                                   அசோகமித்திரன் எழுதிய நாவல்   "மானசரோவர் " அவளவு உலகத்தரமான விசியங்கள் உள்ள கதை . அதை எழுதியவர் பற்றி நாங்கள் எதுவுமே அறியாமல் இருப்பது இந்த உலகத்தின் விசித்திரமான விதிகளில் ஒன்று .!


.

யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்ல என்பது போல எல்லோருக்கும் ஒரு புத்தகம் வாழ்நாள் முழுவதும் ஜோசிக்க வைக்கும் அல்லது அதன் பாதிப்பு உளவியல ரீதியா எங்கள் எண்ணங்களைப் பாதிக்கும்! 

                                         நான் வாசித்த இந்தப் புத்தகம் அந்த இரண்டையும் என்னக்கு செய்தது .இந்த புத்தகம் ஏதோ முன்னேறிய ஒரு நாட்டில் படித்ததா நினைக்கவேண்டாம், போயும் போயும் யாழ்பாணத்தில எங்கள் கிராமத்து சனசமுகாநிலைய லைபெறேரியில் இது இருந்தது, அதை வாசிகசாலை எண்டும் சொல்லுவார்கள்!

                                           தூங்கு மூஞ்சிகள் அரசியல்,ஊர் வம்பு, ஊர் விடுப்பு,கதைக்கும் இடமும் அதுதான்! அது போன்ற ஒரு அலங்கோல இடத்துக்கு அந்தப் புத்தகம் எப்படி வந்தது எண்டு இன்றுவரை தெரியாது!

                                             எப்படியோ அதை கொண்டுவந்து டிக்சனரி உதவியுடன் வாசித்தேன்! நான் முழுமையாக உள்வாங்கிப் படித்த முதல் ஆங்கிலப் புத்தகம் அது. அதில் உள்ள பல கிரியேடிவ் வேர்ட்ஸ் சொற்களை பென்சிலால் குறித்தும் வைத்தேன்.

                                               அந்தப் புத்தகத்தின் கதை R .K நாராயணனின் "மால்குடி" போல அமரிக்காவில் ஓஹயோ மாநிலத்தில்,உள்ள வைன்ஸ்பேர்க் என்ற சின்னக் கிராமத்தில் வாழும் கற்பனை மனிதர்கள் பற்றியது! ஆனால் வாசிக்க உண்மை போலவே இருக்கும் படி கதை தொட்டுச்செல்லும் .

                                       உண்மையில் அந்த கதைப் பாத்திரங்கள் எல்லாரும் ஒருவித "மெண்டல் கேஸ் ",அது மேலெழுந்தவாரியா தெரியாது,கொஞ்சம் ஆழமா போகும்போது அப்படிதான் விளங்கும்! எப்படி எங்களை சுற்றியுள்ள மனிதர்கள் எதோ ஒரு கோணத்தில விசித்திரமா இருக்குரார்களோ அதே போல அவர்களும் இருக்குறார்கள்! முக்கியமா இந்தக் கதை எழுதியவர் தன்னை எழுத்தாளர் எண்டு சொல்லவில்ல, ஒரு "கதை சொல்லி " எண்டு சொல்லி அட்டகாசமா எழுத்தாளர் போல கதைய எழுதியுள்ளார்,

                                              கதையில வரும் மாந்தர்கள் எல்லாரும் ஒரு சிறு " டவுன் " இல வசிப்பதால் எதோ ஒரு விதத்தில தொடர்புபடுவார்கள், முரண்படுவார்கள்! முக்கியமா எலிசபெத் வில்லார்ட் என்னும் பணக்காரக் குடும்பத்தின், தலைமுறை எழுச்சியும்,வீழ்ச்சியும்தான் கதையின் கருப்பொருள்!

                                                   இந்தப் புத்தகம் வாசித்தபின் நான் நானாக இருந்ததில்லை! அவளவு பாதிப்பு ஏற்படுத்தியது ! நிறைய உளவியல் விசியன்களே கதையில் சொல்லாமல் சொல்லப்படும் !

                                             முக்கியமா வாழைப்பழத்த உரிச்சு வாயில வைச்சமாதிரி ஸ்டீர்வூட் அன்டர்சன் அந்தக் கதைய சொல்லுவார் அதுதான் என்னை முடிவுவரை தலை கீழாக நின்றும் வாசிக்க வைத்தது. அந்தக் கதை சொல்லும் கவர்ச்சிகரமான ஸ்டைலின் பாதிப்பில் பிற்காலத்தில் நானே கதை எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு .

                                                அப்படிபட்ட அவர் இரண்டு நாவல்தான் எழுதியுள்ளார்! அதுக்குமேல ஏன் எழுதவில்லை எண்டு கேட்க "இயல்பாக எழுத வேறு ஒண்டும் இல்லை, இனி "ரீல் "தான் விடவேண்டும்" எண்டு சொன்னார்! அப்படி சொல்வதுக்கே நிறையத் தில் வேண்டும் இல்லையா .

                                           அமரிக்காவில் இந்த புத்தகத்துக்கு ரசிகர்மன்றமே இருக்குது. இந்தப் புத்தகம் 1995 இடப்பெயர்வில் யாழ்பாணத்தில் தொலைத்தேன், பின்னர் ஸ்வீடனில் தேடிவாசித்த போது"சப் " எண்டு ஊசிப்போன உளுந்துவடை போல இருந்தது,ஒருவித ஏமாற்றம் வந்து!பல புத்தகங்கள் இப்படிதான் வயது போகப் போக சின்ன வயது ஆர்வம் குறைந்து சொதப்புது. ஹாபர் லீயின் "கில்லிங் எ மொகிங் பேட் "இந்த நுற்றாண்டின் சிறந்த புத்தகம் எண்டு அப்போது வாசித்தபோது நினைத்திருந்தேன் ,இப்ப அப்படி நினைப்பதில்லை!                                                    இன்று மறைந்த இலங்கை தமிழ் எழுத்தாளர் k ,டானியலின் நினைவு நாள் எண்டு நண்பர் ரெக்ஸ் இன் சுவரில பார்த்தேன்! கே.டானியல் யாழ்ப்பான அதிதீவிர முற்போக்கு எழுதாளர்,சாதியின் பெயரில் நடந்த சமுதாய அநீதியைக் , கதைகளாய் எழுதினார்,!

                                              அவரோட ஒரு நாவல் மட்டும் யாழ்பாணத்தில் இருந்தபோது படித்திருக்கிறேன் , ஏறக்குறைய அவரோட மற்ற எல்லா கதைகளும் அதுபோலதான் இருக்கும் எண்டு அவரைப்பற்றி இப்போது படித்தபோது தெரிகிறது! 

                                               அந்த நாவலின் பெயர் "தண்ணீர் " யாழ்பாணத்தின் ,கரவெட்டியில் உள்ள ஒரு நல்லதண்ணி கிணத்தையும் ,சாதி குறைந்தவர்கலின் வேதனையையும் ,உயர்சாதிகாரரின் அட்டகாசங்களையும் ,இணைத்து ஒரு நாவலாக எழுதி இருந்தார், அது உண்மை சம்பவம் எண்டும், அதில்வரும் மனிதர்கள் உண்மையாகவே கரவெட்டியில் வாழ்ந்தவர்கள் எண்டும் சொனார்கள் ,

                                              அதில் "பம்பிடி சிங்கி" எண்டு ஒரு கலாட்டா பெண்பாத்திரம் இருக்கு, காமடியான பாத்திரம் அது ஒண்டுதான் அதில ,மற்றவர்கள் எல்லாம் சீரியஸ் கரக்டர்கள் ! யாழ்பாணத்தில குறைந்த சாதி "ரக்சிகாரருடன்," உயர்சாதிப் பெண்கள் எப்பவுமே தொடர்பு ,அல்லது சல்லாபம் இருந்தது எண்டு பெரியவர்கள் "இரோடிக்கா கதைகள்" சின்னவயசில் சொல்லகேட்டு இருக்கிறன்,

                                                    இந்த கதையிலயும் ஒரு உயர்சாதி, திருமணமான பெண் ,"ரக்சிகாரர்" ஒருவருடன் ,கள்ளத்தொடர்பு வைதிருப்பா! .கே ,டானியல், இந்த அசிங்கத்தை, உயர்சாதிகாறரை பழிவாங்க அப்படி எழுதி இருக்கலாம் போல அப்போது தெரிந்தது! மற்றப்படி கே.டானியலுக்கு,சுவாரசியமா கதை சொல்ல தெரியுமா என்பது கொஞ்சம் குழப்பம் !

                                          முக்கியமா,இப்படி அதிதீவிர முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எண்டே ஒரு" மொழி "இருக்குது, அதில்தான் அவர்கள் வைச்சு விளாசுவார்கள் ! ஆனால் அவர்களின் எழுத்தில் உண்மையான கோபம் எப்பவுமே இருக்கும், முற்போக்கு அல்லாத எழுத்தாளர்களை, "புறம்போக்கு" எழுத்தாளர், அவர்கள் எழுதுவது எல்லாம் குப்பை, என்பதுபோல கிண்டல் செய்து கொண்டு இருப்பார்கள் !

                                                          முற்போக்கு எழுத்தாளர் எழுத்துக்கள் எல்லாம் சமுகஅரசியல் சார்ந்து இருந்ததால்,ஜனரஞ்சகமாக பரவலாக வாசிகப்பட்வில்லை என்று ஒரு குறை இருக்குது! ...என்ன செய்வது யாழ்ப்பாணமே ஒரு வில்லங்கம் பிடிச்ச, கொக்கதடியில கொம்புவைகிற மக்கள் சமுதாயம் நிரம்பி வழிந்த ஒரு இடம், பிறகு என்னண்டு கல்லு நகரும்?                                                 நோர்வேயில்,ஒஸ்லோவில், நான் வசிக்கும் பேட்டைக்கு அருகில், மாணவர்கள் தங்கி இருந்து படிக்கும் விடுதிகள் இருப்பதால்,எப்பவுமே ட்ரெயினில் வேலைக்கு உற்சாகம் இல்லாமல் போகும் போதும் , செத்துப்போய் வரும்போதும் நிறைய இளையவர்கள் ட்ரெயினில் அம்முமிக்கொண்டு நெருக்கி அடித்துக் கொண்டு, அருகருகே , இருக்கும் சந்தர்பங்கள் எப்பவுமே கிடைக்கும்

                                                          அப்படி ஒரு நாள் என் அருகில் வந்து இருந்த இளம் பெண் ,தன்னை பொஸ்னியா ,என்ற கிழக்கு ஐரோப்பிய அப்பா ,அம்மாவுக்கு பிறந்த ,இரண்டு வயதில் நோர்வே வந்த "....." என்ற பெயர் சொல்லி , என் அருகே வந்திருந்து

" நீ எந்த நாடில் இருந்து வந்து இங்கே படிக்கிறாய் "

எண்டு கேட்டாள் . நான் எங்கள் தாய்திருநாட்டின் பெயரைசொல்லி ,

"நான் ,படிக்கவில்லை ,.அரசியல் அகதியாக புலம் பெயர்ந்து இங்கே வசிக்கின்றேன்"
என்றேன் .அவள் ஆச்சரியமாகி

" உங்கள் நாடில் உள் நாட்டு யுத்தம் நடந்ததே , நான் ஒரு ஜெர்ணனளிஸ்ட் மாஸ்டர் டிகிரி படிக்கும் மாணவி" என்றாள்,

உலகத்துப் பொய் எல்லாம் சொல்லி அரசியல் அகதி ஆனதை மறைத்து

"நாணும் ஒரு விதத்தில இங்க அரசியல் அகதி "

எண்டு சொல்லி அவளின் கையை பிடிச்சு ஹலோ சொன்னேன்.அவள்

" உங்கள் நாடட்டைப்ப்ற்றி ,லெனேர்ட் வொல்ப் எழுதிய "The Village in the Jungle" புத்தகம் எனக்கு எப்பவுமே பிடித்த புத்தகம்,ஒரு வெளிநாடுக்காரரின் பார்வையில் அந்தக் கதை சொல்லப்பட்டது, என்னோட மேசையில் எப்பவுமே இருக்கு,one of the best book ever written "

எண்டு நீட்டி முழக்கினாள்.அதென்ன கதை என்று கேட்டேன்

" ஒரு காட்டுப்புறக் கிராமத்தில் நடக்கும் ஒரு கொலை,,அதோடு அந்த கிராமத்தில் வசிக்கும் புத்த பிக்குவும் சம்பந்தப்படுவார் "

" அப்படியா "

" ஹ்ம்ம் ,,அதில எப்படி சிறிலங்கா மக்கள் அப்பவியாக ஒரு சம்பவத்துக்குள் பழிவாங்கபடுகிறார்கள் என்று எழுதி இருக்கிறார் "

" சரி,,லேனாட் வுல்ப் ,அவர் பெயர் ஆங்கிலேயர் போல இருக்கே . எதுக்கு அவர் இலங்கை வந்தார் "

" அட அட,,அவர் இலங்கையில் இங்கிலாந்து காலனி ஆட்சி செய்த போது கவனரா இருந்தார் "

" ஹ்ம்ம்,,,அப்படியா,,"

" உனக்கு வர்ஜினியா வுல்ப் யார் என்று தெரியுமா "

" தெரியாதுப்பா "

" கிழிஞ்சுது,,உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்,,டுவேட்ஸ் த லைட் ஹவுஸ் என்ற இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவலை எழுதிய பெண்மணி "

" ஒ,,,அது எனக்குத் தெரியாதே "

" அவா லேண்ணார்ட் வுல்பின் மனைவி "

" ஹ்ம்ம்.."

" பாவம் அவா தற்கொலை செய்துகொண்டா "

" அடக்கடவுளே "

"நீ புத்தகம் படிபியா?"

எண்டு கிழக்கு ஐரோப்பிய நீலக் கண்களால் கேட்டாள் ,நான்

" கிசு கிசு மட்டும்தான் விரும்ப்பிப் படிப்பேன் "

எண்டு உண்மையை சொன்னேன் ,அவள் சிரி சிரி எண்டு சிரித்து

" தெரியுமே ,எல்லா ஆம்பிளையளும் அதைத் தானே படிப்பார்கள் "

                                                        என்றாள் .அவளைப் பார்க்க அநியாத்துக்கு அழகா பாரிஸ் ஹில்டன் மொடல் போல இருந்ததால் ,

" நீ தான் பார்பி பொம்மை போல அழகா இருகிறாய், எதுக்கு சும்மா எதுக்கு ஒண்டுக்கும் உதவாத ஜர்னலிஸ்ட் வேலைக்கு படிக்கிறாய் ,பேசாம மொடலிங் செய்யலாமே ? "

                                                      எண்டு அப்பாவியா கேட்டு சிரித்தேன். உண்மையில் அவள் அங்கங்கே பார்க்காதே பார்த்தாலே பத்தி விடும் போல அழகா இருந்தாள் .நான் பிசதியத்தில் அவள் கொஞ்சம் கோபமாகி

" என்னோட அப்பா ஜெரனலிஸ்ட்டாக இருந்தார், அரசாங்கத்தை விமர்சித்து ,உண்மையை எழுதியதால்,அவரை கண்ணைகட்டி கடத்திக்கொண்டு போய் ,சுட்டு தெருவோர சாக்டையில் எறிந்தார்கள் ,அப்ப எனக்கு 2 வயது,என்னையும் ,தம்பியையும் கூடிக்கொண்டு அம்மா நோர்வேயிட்கு அரசியல் அகதியாக வந்துவிட்டா "

                                             என்றாள் ,அதுக்குப் பிறகு அவளைப் பார்க்க அழகா தெரியவில்லை,பாவமாக இருந்தது! பெண் குழந்தைகளுக்கு எப்பவுமே அப்பாவைப் பிடிக்கும் என்பார்கள். தன் அப்பாவின் கொள்கையை ரெண்டு வயதில் அறிந்து கையில் எடுத்த அவளைப்பார்க்க பெருமையாக இருந்தது

                                               இப்படிதான் சிலர் தங்கள் எதிர்கால படிப்பையும்,அதன்பின் வேலையையும் தேர்ந்தெடுப்பதில் இலட்ச்சியன்கள் இருக்கு ,

"நீ என்ன வேலை செய்கின்றாய் ?"

என்றாள் , நான்

" பஞ்சம்புழைக்க சமையல்காரன் ஆக பல வருடம் வேலை செய்கின்றேன் "

என்றேன். அவள்

"அந்தப் புத்தகம் உனக்கு நான் தாரன் ,வாசித்துவிட்டு திருப்பி தருவியா ?"

                                        என்றாள் , புத்தகம் படிக்க எனக்கு நேரம் இல்லை எண்டு உண்மைய சொல்லமால், இந்தப் புத்தகத்தை வைத்து இவளோட கொஞ்சநாள் கடலை போட ஜோசிதுப்போட்டு

"கட்டாயம் , Leonard Woolf, எனக்கும் ரெம்ப்ப பிடித்த எழுத்தாளர் "

                                             எண்டு பொய் சொன்னேன் .அவள் தான் வசிக்கும் அப்பர்ட்மெண்டுக்கு என்னை கூடிக்கொண்டுபோகும் போது ஜூலியா ராபர்ட்ஸ் போல வெட்டி வெட்டி அவள் நடப்பதைப் பார்க்க ,இன்னும் நிறைய புத்தகம் வேண்டிப்படிக்கலாம் போல இருந்திச்சு , அவளோட அபார்ட்மெண்டுக்கு அருகில் கொஞ்சம் தயங்கி ஜோசித்து, என்னை உள்ளுக்க அழைக்காமல்

"இங்கேயே நில்லு,கையோட நான் புத்தகத்தை மேல போய் எடுத்துக்கொண்டு வாறன் "

                                                 என்றாள். சொன்ன மாதிரியே கையோட எடுத்துக்கொண்டு தந்த புத்தகத்தை ,கையோடயே பத்திரமா கொண்டுவந்து, மேசையில சுழட்டி எறிஞ்சு போட்டு பல வாரங்கள் மறந்துபோய் விட்டேன்!

                                                      மறுபடியும் அவளை ட்ரெயினில் அண்மையில் சந்தித்த போது ஆர்வமாக வந்து

" கதை எப்படி ",,என்று கேட்டாள் நான்

"எந்தக் கதை எண்டு "

திருப்பிக் கேட்டேன் ,அவள் தலைய சொரிஞ்சு

" போச்சுடா ,அதுதான் , காடுக்குள்ள ஒரு கிராமம் !"

எண்டு விழித்தாள் ,

"ஓ ,அதுவா ,அது சூப்பரா போகுதே,"

எண்டு பொய் சொல்லி

" இந்த சமருக்கு கடலில் நீந்தப் போறான், அந்தக் கடலில டொல்பின் எல்லாம் வரும் , வாறியா ? "

                                                என்றேன் . அவள் கண்கள் விரிய

" வாவ் ,எனக்கு டால்பின் என்றால் உசிர் ,ஆனால் முன்னப் பின்ன தெரியதவர்களுடன் நீந்தப் போகக் கூடாது எண்டு அம்மா சொன்னவா,நீ அந்தப் புத்தகம் படித்து உன்னோட கருத்தை சொன்னா,சிலநேரம் உன்னை என்னோட ப்ரெண்ட் ஆக்கலாம் "

" டொல்பின் பாட்டுப் பாடும் "

" அப்படியா ,,உண்மையாவா வாவ் சோ சுவிட் ,,எங்க சொல்லுறாய் சொங்க்ஸ்வான் ஏரியிலையா "

" ஹ்ம்ம்,,அங்கேதான் "

" அங்கெ நான் வந்து இருக்குறேன்,,ப்ரெண்ட்ஸ் உடன் ரெண்டு மூன்று தரம்,,ஆனால் அங்கெ சும்மா மீனையே நான் கண்டதில்லையே "

" நீ எங்க போய்ப் பார்த்தாய் "

" சுற்றிப் பாத்தேன்,,உண்மையாவா அது பாட்டுப் பாடும் "

" ஹ்ம்ம்,,உண்மையா பாட்டு இல்லை இசைஞானி இளையராஜா போல மூசிக் வேற கொம்போஸ் செய்யும் "

" அது யாரு இசைஞானி இளையராஜா "

" அவர் என்னோட சித்தப்பா,,சும்மா சும்மா கேள்வி கேட்காமல்,,நான் சொல்லுறதை நம்பி வாறியா "

" எனக்கு டால்பின் என்றால் உசிர் ,ஆனால் முன்னப் பின்ன தெரியதவர்களுடன் நீந்தப் போகக் கூடாது எண்டு அம்மா சொன்னவா.."

                                       எண்டு சொல்லி என்னோட இலட்ச்சியத்துக்கு ஆப்பு வச்சிடாள் !

                                         இனி என்ன செய்யிறது எண்டு போட்டு இப்ப அந்தப் புத்தகத்தை நேரம் கிடைக்கும் போது படிக்கிறன் ! ..அந்தப் புத்தகத்தைப் பற்றி போஸ்டிங் நாளைக்கு எழுதுறன் மக்காள் ஓகே யா?

யாழ்பாணத்தில 80களில் கொஞ்சம் சிரியஸ் ஆக நவீன தமிழ் உரைநடை இலக்கியம் படிக்கும் அறிவுக் கொழுந்துகள் " ஆகா ஓகோ " எண்டு புகழ்ந்த எழுத்தாளார் சுந்தர ராமசாமி ! சுந்தர்ராமசுவாமி பசுவையா  என்ற பெயரில்  நவீன புதுக் கவிதைகளும் எழுதி இருக்கிறார் 

                                                    தமிழ் நாட்டின் தென் கோடியில், கேரளாவுக்கு அண்மையில் உள்ள நாகர் கோவில் வட்டார வழக்கில் , மலையாளா எழுத்தாளரின் பாணியில், ஆல்பர்ட் காம்யு ,பிரான்க் காப்கா இன் சிந்தனைப் பாதிப்பில், எளிமையான பேச்சு வழக்கு தமிழ் மொழியில், அவர் எழுதிய இரண்டு நாவல்கள் அப்படி அவர் பெயரை உரக்க ஒலிக்க வைத்தது.

                                        அவர் பல உப்பு சப்பு இல்லாத சிறுகதைகள், சில "மூக்கைப் பிடிச்சா வாயை திறக்க முடியாத " தத்துவார்த்த கவிதைகள் பசுவையா என்ற புனை பெயரில் எழுதி இருந்தாலும் , அவரின் அந்த இரண்டு நாவல் தான் நான் விரும்பி, ரசித்து வாசித்து இருக்கிறேன்,

                                                       அதில் ஒன்று "புளியமரத்தின் கதை " . நாவலின் பெயர் எப்படி அப்பாவியா இருக்கோ அதுபோல , ஒரு அப்பாவிப் புளிய மரத்தை வைத்து , அந்த மரத்தை சுற்றி வாழும் நன்றிகெட்ட மனிதர்கள் , அவர்களின் நஜவன்ச்சக இயல்புகள் ,அந்த மரத்தை எப்படி கடைசியில் வஞ்சகமாக நஞ்சு வைத்து சாகடிக்கிறார்கள் என்பதை வைத்து ஒரு நாவலே எழுதினார் , அந்த நாவலின் முன் பாதியில் தாமோதர ஆசான் எண்டு ஒரவர் வருவார், வந்து பாதியில் காணாமல் போவார் , அந்த ஆசானுக்கும் கோட்டான் என்ற மரம் வெட்டுபவனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் தமிழ் உரை நடை இலக்கியத்துக்கு புதிதாக அப்போது இருந்தது ,

                                                     ஒரு மரத்தை வைத்து நாவல் எழுதுவதே ஒரு புதுமைதான், என்றாலும் "புளியமரத்தில என்ன இருக்கும் ? பேய் தான் இருக்கும் எண்டு " கவனிக்காமல் இருந்த அந்த வித்தியாசமான நாவலை எல்லருக்கும் அறிய்வைதவர் , கோடிகனகானவர்கள் விரும்பிப் படிக்கும் ஜனரஞ்சக எழுத்தாளர் சுஜாதா என்ற S .ரங்கராஜான் !

                                                            அவரோட இரண்டாவடஹு நாவல் "ஜே ஜே சில குறிப்புக்கள் ", ஜோசப் ஜேம்ஸ் என்ற மலையாள தச்சு தொழிலாளியின் அன்றாட இயல்ப்பு வாழ்கைக்கும் , அவனின் தத்துவார்த்த எண்ணகளுக்கும் இடையில் நடக்கும் அவல ,கொஞ்சம் அபத்தமான வாழ்கையை, அவனின் காதலி ஒம்மனக் குட்டி அவனைப் புரிந்து கொள்ளமுடியாமல் செய்யும் செயல்கள் ,அவனை சூற்றி நடக்கும் ஒவ்வொரு விசியதையும் அவன் எப்படி உங்களையும் ,என்னையும் போல சிம்பிளா எடுக்காமல் , அதுக்கு எப்பவுமே பீடி பத்த வைத்துகொண்டு , தத்துவார்த்த வியாக்கியானம் சொல்வதை ,ரசிக்கும் படியாக , ஒரு நாட்குறிப்பு வடிவில், சார்லஸ் புச்கொச்க்கி ஸ்டைலில் நாவலாக எழுதினார் ,

                                                நாட்குறிப்பு வடிவில் எழுதியதால் அதுவும் பலருக்கு விளங்கவில்லை ! அந்தப் புத்தகம் முதலில் பிரெஞ்சில் மொழிபெயர்த்து விவாத சுஉடு பிடிக்க ,தமிழிலும் முதலில் அது அறிவுக் கொழுந்துகலால் கவனிக்கப்படதொடன்கியது !

                                                    சுந்தர ராமசாமி ஒரு சிறந்த எழுத்தாளரா எண்டு எனக்கு தெரியாது , ஆனால் அவரை சிலர் " ஆகா ஓகோ " எண்டு புகழ்ந்த சாம்பிராணி போடுறார்கள் ! அவரைப்போலவே யாழ்பாணத்தில உலகதரமா ஜோசித்து எழுதிய ஒரு எழுதாளர் இருந்து இருக்கிறார் அவரை யாரும் கண்டுக்கவே இல்லை !

                                                 சுந்தர ராமசாமி புளியமரத்தின் கதை நாவலா எழுதினார் ,நம்ம ஆள் "நல்ல தண்ணிக் கிணறை" எழுத அவரின் வீடு புகுந்து அடித்து நொறுக்கினார்கள் புங்குடுதீவில! சுத்தர ராமசாமி எழுத்தாளர் வகை சேர்ந்தவர், சுத்தர ராமசாமியின் காலத்திலேயே இன்னொருவர் வட்டாரா வழக்கில் கொஞ்சம் எளிமையா, பாமரக் கிராமியத்தனமா கதை சொல்லி பிரபலம் ஆனவர் கி ,ராஜநாராஜணன்.

                                                          எது எப்படியோ அல்வா ராமசாமிக்கும் ,நாராயணனுக்கும் அல்வா கொடுகிரமாதிரி யாழ்பாணத்தில பிறந்த ஒரு சிறந்த " கதை சொல்லி " அ.முத்துலிங்கம் சுவாரசியமா கதைகள் எழுதி இருக்குறார் , அவரின் " குதிரைக்காரன்." கதைப் புர்தகம் இந்த வருட சென்னைப் புத்தகக் கண் காட்சியில் அதிகமாக வித்திருக்கு !.

                                                   எப்படியோ "ஜே ஜே சில குறிப்புக்கள் " நாவல் போல பிறகு பலர் தமிழ் நாடில் எழுதி " ரீல் "வீட்டார்கள் என்பது உண்மை! சுந்தர ராமசாமி அவரோட கடைசிக் காலத்தில நிறைய அனாவசிய விவாதம்களைக் கிளப்பி, " காலச்சுவடு " ஆசிரியராக இருந்த கொஞ்ச நஞ்ச பெருமையையும் இழந்து, அவரின் நாவல்களுக்கு சாகித்திய அக்கடமை விருது தன்னும் கிடைக்காமல் , சத்தமில்லாமல் வயதாகி இறந்துபோனார்...
பாவம் !!!

                                                     சின்ன வயசில் இருந்தே நிறைய புத்தகம் வாசிக்கும் கெட்டபழக்கம் எனக்கு இருந்தது , பின்னர் புலம்பெயர்ந்து வேறு வேறு மொழிகள் ,கலாசாரம் ,நாடுகள் பற்றிய அனுபவம் விரிய அந்த வாசிப்பு அனுபவமும் விரிந்தது ..ஆனால் சில வருடமா வாசிகிரத்தை நிறுத்தி விட்டேன் , பதிலா என்னோட சொந்த அனுபவத்தை எழுத முயற்சிக்கிறேன்

 தமிழில் சகுந்தலை காவியத்தில் காட்டில் சகுந்தலைப் பறவைகளால் வளர்க்கப்பட்ட சகுந்தலையின் கதை போலவே தொடங்கினாலும், சகுந்தலை வேட்டைக்கு காட்டுக்கு வந்த துஷ்யந்தமகாராஜாவின் மன்மத அம்பில் மயங்கி காதலித்து, அவனுக்கு நினைவாக ஒரு மோதிரம் கொடுக்க,அவன் அதை அலட்சியமா எறிந்த ரொமான்ஸ் கதை போல தொடர்ந்து போகாத ஒரு கதையை வாசித்துக்கொண்டிருகிறேன் 

                                                     வாழ்வின் யதார்த்தமாய் ஒரு அழகான இளம் பெண் ஓநாய்களின் நடுவில் பிறந்து அவைகளால் வளர்க்கப்பட்டு, ஒரு வயதில் அந்த நாட்டு ராஜகுமாரி ஆகி மக்களுக்கு நடுவில் வசிக்க வரும் போது எதிர்கொள்ளும் அபத்தமான பிரச்சினைகளை சுவாரசிமா எழுதியுள்ள கதைதான் கீழே உள்ள நாவல்...

                                                   ஜோர்ச் ஒர்வேல் எழுதிய அனிமல் பார்ம் வாசித்த போது எல்லாரும் சொன்னது அப்படி ஒரு நாவல் இனி யாரும் எழுதமுடியாது என்று,ஆனால் ஒரு பெண்னினால் அதேயளவு ஆழமான ஒப்புவமை சிந்தனையுடன் எழுதப்பட்டு இருக்கிறது இந்தக் கதை.

                                                             மிகவும் கண்ணியமாக, மரியாதையாக ஓநாய்கள் வளர்த்த ஒரு பெண் எப்படி சிந்திக்கும் மனிதர்களின் தந்திரங்களில் சிக்குண்டு சின்னா பின்னமாகி சிதறிப் போவதை வைத்து புனைகதை போல ஓநாய்களின் பார்வையில் என்ற ஆங்கில நாவலை எழுதியுள்ளா ஜேன் லின்ட்ஸ்கோல்.

                                              பொதுவாப் பெண்கள் சிறந்த கதை சொல்லிகள் என்றால் நம்பக்கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும்,

                                                       ஆனால் பல வருடங்களின் பின் வாசிக்கும் ஆர்வம் வருவதால் , Jane Lindskold, எழுதிய இந்தப் புனைகதை Through Wolf's Eyes பற்றி ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் வாசித்தபின், இந்தப் புத்தகத்தை ஒஸ்லோவில் உள்ள டோச்மான்ச் லைபிறேரியில் இரவல் எடுத்து படிக்கத் தொடங்கியுள்ள முதல் அத்தியாயத்திலையே நம்பிக்கை தரும்படியாக கதை சும்மா கியர் மாற்றி கியர் மாற்றி எகிறிப் பாயுது.. ..

                                                   கற்பனையாக இருந்தாலும் கதை சொல்லும் விதத்தில் சுவாரசியமான இந்தப் புத்தகம். பக்கம் பக்கமாகப் புரட்ட வைக்குது இதுக்குப் பிறகும் நானெல்லாம் சும்மா டமால் டுமில் என்று அப்பாவி வாசகர்களின் காதில பூசுத்தி கதை விட்டு எழுதி அறுக்கத்தான் வேண்டுமா என்று ஜோசிக்கவும் வைக்குது .

                                           ஒரு சின்ன பந்தியை அந்தப் பெண்ணின் எழுதும் ஸ்டைலுக்கு உங்களுக்கு தருகிறேன்....

. “Wolves regularly attacked their rivals in power, so the idea of killing to gain position was neither alien nor repulsive to her. The use of assassins she had filed as yet another of the curious tools - like swords and bows — that humans created to make up for their lack of personal armament. What she still had to puzzle through was the subtle strategies involved in killing those who were expected to inherit power rather than those who held the power itself.”....

                                                          ..எப்பொதும் போல என்ன சீவியமடா இது. என்று இந்தப் புத்தகம் கடைசியில் சொல்ல வைக்காது என்று நினைக்கிறேன்....


.

சின்ன வயசில ஊரில  வசித்த காலத்தில, புத்தகங்கள் விரும்பி  வாசித்த காலத்தில், ரசிய நாடவரானா அலக்ஸ்சண்டர் புஷ்கின் என்பவர் ரசிய மொழியில்  எழுதியதை, தமிழ் நாட்டின் "நியு செஞ்சரி புத்தகசாலை " தமிழ் மொழிபெயர்த்து, வந்த " கப்டன் மகள் ",  ரசிய கொமிஸ்ட்கட்சியின் புதகசலையில் 10 றுபாவிட்கே வேண்டிப் படித்த அந்த நாவலின் கதை கொஞ்சம் மறந்துவிட்டாலும், அதை எழுதிய  வாயிட்குள்ள நுழையாத பெயருடைய  அலக்ஸ்சண்டர் புஷ்கின் பெயர் மட்டும்  இன்றுவரை நினைவு இருந்து! 

                                           சென்றகிழமை, நோர்வேயின் தலைநகர் ஒசலோவில்  இருக்கும் தலைமை மத்திய டோச்மான்ச்க நூல் நிலையதிக்குள் போய் பார்த்த போது அன்கே, அலக்ஸ்சண்டர் புஷ்கின்க்கு, இந்தப் படத்தில்  எனக்கு பின்னல் உள்ள சிலை வைத்திருந்தார்கள் !

                                அன்கே வேலை செய்த ஒரு நுலக உதவியாளரிடம்

                          "இந்தப் படத்தை , நான் முன்னால் நிக்க, சிலை பின்னால் நிக்க எடுக்க உதவி செய்ய முடியுமா?"

                   எண்டு கேட்டேன்! அந்த நுலக உதவியாளர் படத்தை எடுத்தார், எடுத்து முடிந்தபின்,

                   " உங்களுக்கு அந்த சிலையில் உள்ளவர் யார் எண்டு தெரியுமா ?"

                         எண்டு ஆசாரியமாகக் கேட்டார், நான் எனக்கு தெரிந்ததை சுருக்கமா  சொன்னேன், அவர் இன்னும் ஆச்சரியமாகி

                                 " நான் இங்கே மூன்று வருடம் வேலை செய்கிறேன், இவர் யார் எண்டோ, இவர் இவளவு விசியம் உள்ளவர் எண்டோ நீங்கள் இப்ப சொல்லித்தான் தெரியும் என்றார்!  பிறகு " நேரம் உள்ளபோது போய் கூகிள் இல் தேடிபார்கிறேன், உங்கள் தகவலுக்கு நன்றி "

                         என்றார்!

                                    யாழ்பாணத்தில ருசிய எழுத்தாளரின் தமிழ் மொழிபியர்ப்பு புத்தகங்கள் வாங்கி படிகிற வியாதி எனக்கு தொற்றியது, என்னோட மூத்த அண்ணனிடம் இருந்து, அவர் தான் நிறைய புத்தகம் ,ரசிய  கொமிநிஸ்ட் கட்சி  புத்தகசாலையில் தேடிப்போய் வாயிட்குள்ள நுழையாத பெயருடைய எழுத்தாளரின் பெயரில் இருக்கும் புத்தகங்களை வேண்டி வந்து, அப்பா சைவ சித்தாந்த ,வேதாந்த , தமிழ் மொழி இலக்கிய புககங்கள் சேகரித்து வைத்திருந்த அலுமாரிக்கு மேல அடுக்கி வைத்திருந்தார !

                               அந்த  ரசிய  இலக்கிய புத்தகங்களின் பெயர்கூட இப்பவும் நினைவு இருக்கிறது! ரசிய மொழிபெயர்ப்பு கதைகள , அதில் வரும் கதாநாயக, கதாநாயகிகளின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் எல்லாம் கொஞ்சம் ரசிய மொழிப் பெயர்களா இருந்தாலும்,  எங்கோ  கசாகிஸ்தான் ச்டிப்பி வெளியிலோ, ஆர்மினியாவின் அகண்ட புல்வெளிகழிலோ, அசர்பையானின் பாக்கு மலைகளியோ, மொஸ்கோவின் வோல்கா நதிக் கரையிலோ, சென் பீட்டர்ஸ் பேர்க்கின் நதிக் கழிமுகம்களிலோ , சைபீரியாவின் உறைபனிக் குளிரிலோ,  கதை நடந்தாலும், வாசிக்க சுவாரசியமா இருக்கும்! .

                        அலக்ஸ்சண்டர் புஷ்கின் இன் "  கப்டன் மகள் " ஒரு புரட்சிக் காதல் கதை. " சோவியத் யூனியன் " எண்டு அகண்ட ராசியப் பேரரசின் காலத்தில்,  " புகச் செவ் "கலக்கம் எண்டு ஏழை  விவசாயிகள , ரசிய  சக்கரவர்த்தி சார்  நிகலோய் என்ற ரசியப் பேரசரசர்க்கு எதிரா நடத்திய, தோல்வியில் முடிந்த ஒரு புரட்சிக் கதை,

                              கொஞ்சம் கொமிநிஸ்ட் கொள்கைகள் வந்தாலும்,அதில் வரும் புரட்சிக்யாரல் தாக்கப்பட்ட ஒரு  ராணுவ முகாமில் இருந்த "  கப்டன் மகள் ". அவளைச் சுற்றி நடக்கும் காதல்கதை , ஏழை  விவசாயிகள் எப்படி அந்தப் புரட்சியை ஒழுங்கு படுத்தினார்கள் , மத்திய ராசியாவின் எலும்பை உறையவைக்கும் குளிர் , இடை இடையே சில சின்னக் கவிதைகள் , கடைசியில் " தூக்கு மேடையில் தொன்கியவன் ......." என்ட நீண்ட கவிதையுடன் , அந்த நாவலை அட்டகாசமா, வோல்கா நதிக்கு மேலாலா   கயித்தில நடக்கிற மாதிரிக் கதை சொல்லி ,உண்மையாதான் சொல்லுறன், மத்திய ரசியாவின் குளிரையே, வேர்த்து வழியும் யாழ்பாணத்தில்  இருந்த என்னோட முள்ளந்தண்டில் உணரவைத்தார் புஷ்கின் அந்தக் கதை சொல்லும் உத்தியால்!

                                    அலக்ஸ்சண்டர் புஷ்கின்  வேறு பல நாஉலக்ல் எழுதி இருந்தாலும்,நான் "கப்டன் மகள் " மட்டும் வாசித்தேன்,அதுவம் முதல் நாலுவரிய வாசிக்க " வாவ்," எண்டு சொல்லி கதிரையில துள்ளிகுதிக்க  வைத்தால் வாசித்தேன். புஷ்கின் கதை சொல்லும் விதம் அப்படி !  உலகத்தில் எந்த நாட்டு மூலையில் இருந்து எவன் சுவாரசியமா எழுதினாலும் அது தான் " best sellar " என்று வெற்றியடையும்! இல்லாடி அந்த புத்தகத்தை சுழடி குப்பையில எறிவார்கள். பூமிப் பந்தின் எங்கோ ஒரு மூலயில் இருந்து எழுதிய  அலக்ஸ்சண்டர் புஷ்கின்கினை பூமிப் பந்தின் வேறு  எங்கோ ஒரு மூலயில் இருக்கும் ஒருவன் விரும்பிப் படிக்க வைக்கும்  வித்தைக்குப பெயர்தான் இலக்கியம்  எண்டு நினைக்கிறன் !


                                 நீங்களே சொல்லுங்க ,சின்ன வயசில் என்னை, அவர் எழுதிய கதை வழியாக,  ரசியக் கிராமங்கள் , நதிகள் , வயல்கள் , காடுகள் , மலைகள் , புல் வெளிகள் , ஏரிகள் எல்லாம் , என் கை பிடித்துக் கூடிக்கொண்டு போய்க் காட்டிய ,என் அபிமான எழுதார்ளர்  அலக்ஸ்சண்டர் புஷ்கின்க்கு, இன்று  நான் வசிக்கும் ஒஸ்லோவில் சிலைவைத்து பெருமைப்படுத்திய நோர்வே மக்களுக்கு என்றுமே நன்றியுடையவணாக இருக்க வேண்டி இருக்கிறது, இல்லையா ?.