Sunday, 6 May 2018

வெறுமையானபின்....

ஸ்டோக்ஹொலமின் மையத்தை விலத்தி புறநகரங்கள் இன்னமும் வெள்ளையும் சொள்ளையுமாகத்தான் கலப்படம் இல்லாமல் இருக்கு , முன்னர் பலவருடம் வசித்த உப்பிலான்ட்ஸ்வாட்ஸப்பி என்ற புறநகரம் போனபோது பொங்கியும் பால் புறம் போகவில்லை போல அதை அவதானிக்க முடிந்தது.விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் சோமாலியா, எத்தியோப்பியா அகதிகள் நடமாடினாலும் வேற்று இன மக்களின் தலைக் கறுப்பு சொல்லும்படியாகமிதமிஞ்சிய அளவில் இல்லை

                                                    முன்கை நீண்டால் முழங்கை நீளும் போல எப்பவுமே உண்மைவிளம்பி கருத்து பதிப்பவன் நான், ஆனாலும் என் குலதெய்வம் வீராளி அம்மாளாச்சி மேலே சத்தியமா சொல்லுறேன் சுவீடன் அதன் ஒதுக்கப்பட்ட வரவுக்கு மீறிய செலவு செய்யும் பிந்துபோன நிலைமையில் பிதுங்கிப்போய்யிருக்கு. இன்னும் பத்து வருடத்தில் சுவீடன் அதன் நோர்டிக்ஸ்கண்டிநேவிய அடையாளத்தை விரும்பியே இழந்துவிடும் போலிருக்கு.

                                              * சிக்டுனா * ( Sigtuna) சுவீடனின் வைக்கிங் கடலோடிகள் நிலைகொண்டு உருவாக்கிய முதல் முதல் கிராமம், இங்கிருந்துதான் சுவீடன் இன்றைக்குள்ள அளவு பெருத்துள்ளது.

                                              . அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க.  

அதிகாரமதிகமுள்ள 
மனிதர்கள் 
எப்படியெல்லாம் 
மீசை முறுக்குவார்களோ 
அப்படித்தான் அந்த 
" கடைசிச் சண்டையும் !

சில்லிடும் விபரிப்புகளில்
யுத்த நடைபயின்று
அடையாழமில்லாமல்த்
திசையிழந்துகொண்டிருந்தது !

வரவேற்றுப்
புகழ்ந்துகொண்டிருந்தவர்களின்
பொய்வேஷங்களெல்லாம்
இணக்கமான
சூழ்நிலையென்பதால்
பசப்புவார்த்தைகளோடு
வேகமாகவே கலந்து
இனம்தெரியாமல்
இயல்பாக்கிக் கொண்டிருந்தன !

புகழ்ச்சிதரும்
வார்த்தைகளை 

அசைபோட்டுக்கொண்டே
முகபாவனைகளைக்
கட்டுப்படுத்தமுடியாத
பிறவிக்குருடன் போலவே
எல்லா முன்னணி முனைகளிலும்
வரிகளோடு வரிகள் !.

எவ்வளவு நேரத்துக்கென்று
சொல்லமுடியவில்லை
இப்படியே
கருவூலத்தில் குளிர்ந்த இருட்டாகி
என்
தட்காப்பு நிலையெடுக்க இயலாத
மனதும்
போர்க்களம் போலவே
தாறுமாறாகச் சிதறிவிட்டது !


...........................................................................

அன்பைப்பற்றி 
அதீதமான அளவுகளில் 
அர்த்தம் கொடுக்கும் வார்த்தைகள் 
அரைகுறையாகவே 
விளங்கிக்கொள்ளப்படுகின்றன 


ஒரு நேசிப்பின்
அபத்தமான முடிவில் அவை
தோற்றுவிக்கக் கூடிய குழப்பங்கள்
ஒன்றுசேர்வது பற்றிய
பலவீனமான பயங்களை
இன்னுமதிகரித்து விடுகின்றன.


பிசுபிசுத்துப் போக வாய்ப்புள்ள .
எந்நேரமும் வெடிக்க
மிச்சதைக் கொஞ்சம் வைத்தபடியிருக்கும்
சுமாரான காதல் வரிகளில்
சமநிலை குலையாதவைகளை
நீங்கள் சிலநேரம் கண்டிருக்கலாம்


சமாதானப்படுத்திக் கொண்டு
இப்படியான வரிகளுடன் தான்
நானும் உடன்பட்டிருக்கிறேன்


ஆனால்
இப்போது கேட்டால்
ஏனென்று சொல்லமுடியவில்லை


ஏனென்றால்
அனுபவங்களின் தொடர்ச்சியாக
எனக்கும்
ஓராயிரம் இரவுகளில் விழித்து
ஒருத்திக்காக 

ஏங்கிக்கொண்டிருந்தபோது
நன்றாகவே நினைவிருக்கு
காதல் சலித்ததேயில்லை ..


.............................................................................

உங்களுக்கு 
விபரம் தெரியுமா ?
நம்பிக்கை இழந்துவிடும்போது 
சட்டென்று 
மறுமை உலகிற்குள் 
நிச்சயமான சிலவற்றையாவது
சேர்க்க நேரிடும்

நிரப்பமுடியாத வெற்றிடத்தில்
எங்கிருந்தோதான்
அந்த
பரவசங்களுக்காக ஏங்கும்
வார்த்தைகள்
களவாடப்பட்டிருக்க வேண்டும்

உங்களுக்கு 
விபரம் தெரியுமா ?
அவசரமதிகமான
வெளியுலக வெயில் விபரிப்பு


தில்லானாவில்
இராக ஆலாபனை

நெடுந்தூரம் சென்று
முட்டிமுட்டிப் பால்குடிக்கும் நிலவு


புள்ளி தெளித்து விட்ட
வெள்ளைப் பாவாடை

தளிர் பருவத்தின் நெருக்கத்தில்
காய்ந்த சருகுகள்


எக்கச்சக்கமாகக் 
காட்டிக் கொண்டிருக்கும்
கவர்ச்சி நடிகை

காற்றில் மிதக்கும்
பறவையின் தனியிறகு


கிழக்கு விடிவதட்குள்
நீர்த்துப்போன கனவுகள்

புரியாத மர்மமாகவே இருக்கிற
வெட்டைவெளி


இதில் 
ஏதொவொன்றைப் புரட்டியே
அந்த
பரவசங்களுக்காக ஏங்கும்
வார்த்தைகள்
களவாடப்பட்டிருக்க வேண்டும்

உங்களுக்கு விபரம் தெரியுமா ?

......................................................................................


வாசித்துப்பார்த்தபோது
சிவகாமியின் சபதங்களே
நிறைவேறிவிடும்போலிருந்தது


பார்த்திபன் கனவு
பின்வாங்கிவிட்டது 
அப்படியென்னதான்
மாயப்பொடி வைத்து எழுதுகிறாய் ?


அந்தப்புரப் பதிப்புகளின்
காகித வாசம்
அப்படியே மண் வாசம் போல
மழை வாசமும்


அரச முத்திரைகள்
ஆலவட்டமில்லாமல்
அரண்மனைக் கதைகள்

மேனகையின் கொடியிடையைப்
பாதி இரவும்
மணிமேகலையின் வளையல்களைப்
பாதிப் பகலும்

பங்குபோட்டுக்கொண்டே
வரலாற்று நதி


பிரதானமான கட்டத்தைத்
தாண்டும் கட்டாயத்தில்
பெருந்தன்மையுடன் மொழி
ஒத்திசைவாகிறது


விதவைகளை மொட்டையடித்து
வெள்ளை உடுத்தி
பட்டினி போட்ட
பாரம்பரியத்தை அவமானப்படுத்தி
பெண்களையும் காப்பாற்றி

காலத்தின்
அளவுக்கு இல்லாவிட்டாலும்
முழுமை ஆகாமல்
ஓயப்போவதில்லையென்கிறாள்
சித்திரலேகா !


...............................................................................

நீங்கள் 
அதிகமதிகமாய் 
சகிப்புத்தன்மையிழந்து கொண்டே 
விமர்சித்த போதெல்லாம் 
பிரியங்கள் 
இல்லாத ஒரு ரகசியத்விடத்திலதான்
உங்கள் இஷடப்பட
இருத்திவைத்திருந்தீர்கள் ,


ஆராதனைகளுக்கும்
அழகியலுக்கும் இடையே
முரண்பாடு 

உறுத்திக்கொண்டேயிருந்தது .

நிறைவேற்ற முயன்று முடியாமல்
காலம் தாழ்த்தி வரும்
இரங்கல்களில் அனுதாபங்களை
அப்போதும் தேடியதேயில்லை !


இன்றைக்கு வரைக்கும்
நியாயமாகவும்
வணங்காமுடித்தனமாவும் தெரிகிற
நான்
முற்றிலும் மாறிவிட்டதாக
அதீத தோழமை உணர்வுடன்
நீங்கள்
பிரகடனம் செய்த போது
உங்களுக்காக இவ்வளவுநாள்
வளைந்து கொடுத்த
பழைய பாதையிலிருந்து
எனக்கான
தனித்துவ இலக்குகளை
தேர்ந்தெடுத்தது பற்றி 

அறியாதிருக்கலாம் !

நீங்கள் விரும்பும்
பரிச்சயமான கோணத்தில்
நீங்கள் தேர்வுசெய்யும்
குறியீடுகளில்
இந்தப் பிழையைச் சரிசெய்ய
இன்னும் இடைவெளிகள் உள்ளது...!


....................................................................................

* சிக்டுனாவுக்கு *
அதிகாலையே
என்னென்று நினைவில்லை,
கடலோடிகள் போட்ட வீதிகளில்
என்னைத்தவிர யாருமில்லை ! . 


அமைதியைத் திணித்து
வரலாற்றைத் தாங்கிப்பிடிப்பது
காரணமாக
ஆடம்பரங்களை ரத்தாக்கிவிட்ட´
தொடக்கக் கிராமம் ´


" சுவீடன் இங்கிருந்து தொடங்குகிறது "
சுற்றிவளைப்புகளின்றி
நிறுவிவிடுவதுபோல்
ஒரேயொரு வார்த்தையில்
இத்தனை தூரம் விபரங்களைக்
கொண்டு சேர்ப்பிக்கும் கிராமம் ,


பதற்றங்களின்றிக்
காலாற நடந்தே கடந்தேன் ,
என்
புதியவரவு பற்றி
மறந்தும் கூட ஏறெடுக்காத
புராதனமான தேவாலயங்கள்,


வேரூன்ற வலிமையான அடித்தளத்தை
ஏற்படுத்திவிட்ட கர்வம்
அதன்
ஒவ்வொரு திருப்பத்திலும்,


பெயரில் 
அதீதநம்பிக்கை இருப்பினும்
வளர்ந்துவிடுமோவென்ற பயமும்
விழுங்கிவிடுமோவென்ற 

நிச்சயமின்மையும்
மட்டுமே எஞ்சிவிடும்
நடைபாதைகளில் நின்று
மீண்டுமொரு முறை
உறுதி செய்து கொள்கிறேன் ,


ஒரு
கேள்வியை நானே முன்வைத்து
." இன்னும் கச்சிதமாகவே இருகிறது
சுவீடனின் முத்லக் கிராமம் "
என்ற பதிலோடு
திருப்திப்பட்டுக்கொள்ள முடிந்தது


இப்படி இப்பவும்
இல்லையென்றால்
பழமையான கனவொன்றுக்குள்
உள்நுழைத்துக்கொள்ள முடியாமல்
வாசலோடு திரும்பி வேண்டியிருந்திருக்கும் !
....
* சிக்டுனா * ( Sigtuna) சுவீடனின் வைக்கிங் கடலோடிகள் நிலைகொண்டு உருவாக்கிய முதல் முதல் கிராமம், இங்கிருந்துதான் சுவீடன் இன்றைக்குள்ள அளவு பெருத்துள்ளது...


.....................................................................

நேற்றைய கருக்கலில் 
எதிர்பாராமல் வந்திறங்கிய விருந்தினர்போல 
அடிச்சுப் பிழிஞ்சு கொட்டிய 
முன் கோடை மழையில் 
நான் 
நல்லகாலமாகவே நனையவில்லை !


முக்கிக்கொண்டிருந்த
மேகங்களின் முற்றுகையிடும்
முஸ்தீப்புகளில்
ஏற்கனவே உஷாராகியேயிருந்தேன்


தூறல் பூச்சிகள்
தலையை மெல்லத் துவட்டினாலும்
ஈரமான தாவணி விசிறிகள்
வாய்ப்பாக ஒத்துவருவதில்லை !


என்
ஒதுங்கிப்போதல்களுக்கும்
மழையின் தினவெடுத்த திமிருக்கும்
மிகப்பெரிய
அடிப்படைத்தவறு நடந்துகொண்டேயிருக்கு !


ஒரு
வெளிச்சமான நாளில்
விழித்திருக்கும் கனவில் 

கடன்வேண்டி
பிம்பங்களை உடைக்கும் மழையை
வெறுக்கிற அளவுக்கு
உறைபனியோடு போராடியே
இறந்துபோன மஞ்சள் சருகுகளை
அது
சேர்த்துக் கூட்டி அள்ளிக்கொண்டு
ஒரு
திசையைத் தேர்ந்தெடுத்து
வெகுதூரத்துக்கு அணைக்கும் வெள்ளத்தை
வெறுப்பதில்லை !


பார்த்துக்கொண்டிருக்கும் போதே
பருவங்கள்
புதுப்பிக்கப்படும் அனுபவம் அது !


மனதோடு
பூத்துச்சொரியவைக்கும்
அந்த ஒரேயொரு
காரணத்துக்காகவே
மழையோடும் அனுசரிக்கிறேன் !


........................................................................................

எதையெல்லாம் 
நீங்களாகவே 
நிலையாமை என்கிறீர்களோ 
அவைதான் அதன் பலமென்கிறது 
அவன் எழுதிய நாவல் .!

வருடங்களின்முன்
அகால இறப்பில் தப்பியவன்
அவன் காலத்திலேயே
அலுத்துப்போன கதையாகிவிடுகிற
அதுதான்
சொல்லப்படும் உத்தியின் சுருக்கம் !

செத்து முடித்து
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து
மீண்டும்
இறந்து போகாமல்
மீண்டெழுந்து வந்தாலும் 

ஆச்சரியமில்லை.

ஏனெனில் மரணத்துக்கென்று
மரியாதையே கிடையாது.என்கிறான் !

ஒரே
ஒரு இடத்தில்
விதிக்கப்பட்ட விதியை
இலாவகமாக திருப்பியதற்காக
கடவுளை மெச்சுகிறதும்
அவன்தான் !

நட்சத்திரங்களை பின்தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருத்தலை
இரசித்துவிடும் மயக்கத்தில்
மனஉளைச்சலை
அவனால்
குற்றவுணர்ச்சியோடு கடக்க முடிகிறது.!

இந்த அபத்தங்கள்
ஏதேனும் பின்நவீனத்துவமா ?

அதைவைத்துத்தான்
" என்னைக் கொன்றுவிடுங்கள் "
என நாவலுக்குப் பெயர்சூட்டினானா ?
ஆச்சரியம் மட்டும் தான்
மிச்சம். !


........................................................................


மாலைப்புகையிரதத்தை 
முழுதுமாய் உள்வாங்கிக் 
கவனிக்காமல் கடப்பதுதான் வழக்கம்,


உட்சாகங்கள் வழிந்துவிட 
களையிழந்த முகங்கள், 

அதற்கு
நிகராகவோ மேலாகவோ
வாடிப்போன முகப்பூச்சுக்கள்,


பேசுவத்துக்கு
அநியாயம் செய்யும் விதத்தில்
ஷக்தி கொடுக்காத
மூச்சுக்களின் நெருக்கம்,


எனக்கு முன்னால் இருப்பவர்
எட்டு மணித்தியாலம்
சாதித்ததை அங்கீகரிக்கும்
நீண்ட ஆயாசம் ,


அவருக்கு அருகிலிருப்பவள்
நாரி முறிந்தது
அதிகம் தாண்டிச்சென்றிருக்கலாம் ,


ஒவ்வொரு நிறுத்தத்திலும்
நெரிசல் இறங்கிக்கொண்டிருக்க .
வாழ்வதட்காக வாழ்வது
துன்பம் மிகுந்ததாக
மீண்டும் மீண்டும் தோன்றுகிறது,


கடைசியாக
இருக்கைகள் வெறுமையானபின்
நாளைக்கு வரையில்
தூக்கம் ஆட்க்கொள்ளும்
வட்டமான வளையத்துக்குள்
நன்றியோடு சுழறவேண்டியுள்ளது.


எஞ்சிய பயணத்தைச்
இத்தோடு
முடித்துவிட நினைக்க
அள்ளப்பட்டுகொண்டே போகும்
காலத்தை
யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை,


இனி
நாளைய மாலையும்
நாளைய புகையிரதமும்
இன்னொரு கவிதையின் தொடர்ச்சி............
........

                                                             சிக்டுனா * ( Sigtuna) 

எதைத் தேர்ந்தெடுப்பது?

ஸ்டோக்ஹொல்மின் நிறமே ஒரு காலத்தில் பொன்னிற முடியும், நீலக் கண்களும், வெளிறிய வெள்ளையுமாக இருந்தது இப்போது எல்லா நிறங்களும் மொழிகளும் பழக்க வழக்கம் பண்பாடு கலந்த சாம்பாரு போலாகி சுவிடீஷ் அடையாளமே பழங்கதையாகிவிட்டது. அதை ஜோசிக்க மன்டைக்குள் வெளவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள் என்ற பழமொழிதான் பாஞ்சுது.
                                                                     சுவிடீஷ் மக்கள் தவறாக ஒரு திட்டம் ஒன்றும் இல்லாமல் நிறைய பல்லின வந்தேறுகுடி மக்களை உள்வாங்கி விட்டார்கள் என்றுதான் விசியம் தெரியாமல் புலம்பிக்கொண்டு இருந்தேன். உண்மையில் சுவிடீஷ் அரசாங்கமே தங்கள் தலை நகரை லண்டன், நியூயோர்க் ,பரிஸ் போல பல்லிணக் கலாச்சார மக்களின் நகரமாக மாற்ற விரும்பியதாக ஒரு தகவலில் படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.
                                                                          கஷ்ட்டம் யாரைத்தான் விட்டு வைக்குது. இண்டைக்கு அவர்களின் அந்த வினோதமான திட்டதுக்கு அதிகப்படியான விலை கொடுத்து அடியும் உதையும் வாங்கி வட்டியும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் சின்னாபின்னமாகி இருக்கு இன்றைக்கு இந்த நகரம்.

                                                       அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க.  


மும்மரமாகத்
தும்மும் 
மம்மல் முன்னிருட்டு 

மொடந்தையான
மரங்களில் 
வெள்ளைப் பனிப்பூக்கள் 

முட்டாக்குப் போட்டு மூடிய
புதர்களில்

தைமாத ஈரலிப்பு

கவனத்தை
சறுக்கி விழுத்தும்
குருணிக்கல் நடைபாதைகள்


விலாசம் இழந்ததால்
விறைத்துப்போன

தனிப்பறவை

கிசுகிசு கதைகளைக்
காவித்திரியும்
வெப்பம் தீராத காற்று


உருட்டிப் பொம்மை செய்யும்
விழிகளில்

மொழிபேசும் குழந்தைகள்

இடம்விட்டு
நகர வழியின்றி
நிலைக்குத்திய சிற்றோடை


சாட்டுக்கு எட்டிப்பாத்து
தலையை

உள்ளே இழுக்கும் சூரியன்

காலமில்லா பகலிரவில்
நேரம் தவறாத

சுவிடீஷ் மனிதர்கள்

சோம்போறி
ஜன்னல்களில்
பருவகாலச் சோடனைகள்


உத்தரவாதம்
தருகின்ற
உறைபனியின் உல்லாசம்


அனுபவத்தைக்
கடத்திச் செல்லும்
நேர்மையான கவிதைமொழி


நடுவில்
அந்நியமாக மாட்டிக்கொண்டு
நான்.!


................................................................................

இனியென் தேடல்
உள்ளிருந்து உந்துதல் தரும்
ஆர்வக்கோளாறுகள் அதிகமில்லாத
என்னைப் பற்றியது மட்டுமே


ஒரேயொருநாள் 
சொல்லாமல்ப் பறந்துவிடும்
படைப்பு

வார்த்தைகளற்ற
உயிர்வாழ்தலில்
அப்படியென்னதான் இருக்கிறது ?


இவளவு வருடங்கள்
வாழ்க்கையில் தேடியெடுத்து
இல்லாத நிறங்களில்
இருப்பதாக நினைத்த ஓவியத்தில்
சாயம் கழண்டுபோகிறது


நிறைய விசயங்களில்
விஷத்தன்மையும்
கைவிடுதல்களும்
ஒத்துக்கொள்ளும் தோல்விகளும்
பெருமூச்சுக்களும்
சலிப்பான காத்திருப்புகளும்
உடல் வேதனைகளும்
மனவெளி விகாரங்களும்அறிவுறுத்தல்களுக்கு மட்டும்
குறைச்சலே இல்லை
அதில் எனக்கானவைகள்
விறைத்துப்போன ஆத்மா
பரபரப்பாக எழுதித்தரும்
தலைப்புச்செய்திகள்


ஆனாலும்
நடப்பதைப் பார்த்துக்கொண்டு
நடந்தே நடந்துகொண்டிருக்கிறேன்


நாளை என்பது
குருட்டு நம்பிக்கைகளை
இறுகப்பற்றிக்கொண்டிருக்கும்
இன்னுமொரு

நாளையாகவேயிருக்கிறது..!

......................................................................................

நடப்பதையெல்லாம்
சகுனம் பிழைத்த பல
சந்தர்ப்பங்களில்
அடைப்புக் குறிகளுக்குள்
கேள்விக்குறிகளோடு
வைக்கவேண்டியுள்ளது


நடந்தே களைத்த
பாதை ஓரங்களில்
உறைபனியையும்
புலம்பித்தள்ளக் காரணங்கள்
ஏகப்பட்டது சேர்ந்துகொள்ள
ஒவ்வொரு
தட்டப்படும் கதவுகளும்
சலனமில்லா ஓசையின்றி
மூடப்படும் போது
திசைவழியில்
சேருமிடம் பற்றிய
எண்ணத்தை குலைத்துவிடக்கூடாத
ஒரேயொரு நம்பிக்கை
இப்பவும்
ஒத்திசைவாகவே இருக்கு
புயலோடு போராடும்
பறவைக்கு
பறப்பதுக்கு வானம் தருகின்ற
அந்த
நல்ல மனம் நினைவில் உள்ளவரை
ஆதரிக்கப்படும் மொழி
எங்கெல்லாமோ அலைந்து
தேடியெடுக்கப்பட
இத்தனை வருடங்கள்
பொறுத்த முடிவு
எப்படியோ வரத்தான்வேண்டும்!


.................................................................................

பன்னிரண்டு
மாதங்கள் கடத்திக் களைத்த
நடுச்சாம இரவு
கால்களை நீட்டிப்படுத்திருந்தது


ஜன்னலைத் திறந்த 
சரியான நேரத்துக்கு
சற்றுமுன்னர் தொடங்கிவிட்டார்கள்


பிறகு
முழக்கம் முகம்தடவித் தெளிய
இருள் வான வீதியெங்கும்
நீலச் சிவப்பையும்
மஞ்சளை முதன்மைப்படுத்தி
எல்லா நிறங்களையும்
கலந்தடித்து விசிறிய
வெளிச்சங்களின் வர்ணனைகள்


பிறகு
காற்றில் கனதியான கந்தக வாசனை
பிரபஞ்ச வெளியில் பூமி
எப்போதும்போலவே சுற்றிக்கொண்டிருக்க
மனிதர்கள்
கைகளை இறுக்கிக் குலுக்கி
நெஞ்சோடு மார்பை அனைத்து
முதுகில்
மெல்லெனத் தடவிக்கொடுத்து
புத்தம் புதிய புதுவருடம்
பிறந்துவிட்டது என்கிறார்கள்


எல்லாவிதமான
கொண்டாட்ட ஆரவாரமும்
அடங்கும்வரை
திரைச்சீலைகள் ஆடிக்கொண்டிருந்தது


நினைவுகளை
அவ்வளவு இலகுவாக
புதுப்பிக்க முடியவேயில்லை!


..........................................................................

உறை குளிர்
காற்றின் விருப்பமில்லாக்
காதலோடு மல்லுக்கட்டி
அடைக்கலம் தேடத்தொடங்குகிறது


பார்த்துக்கொண்டிருக்க
நினைவெழுதிக்காட்டி
அள்ளிக்கொண்டு போகும் வீதிகள்


மழுங்குத் திருப்பங்களில்
ஒடித் தப்பிக்கிறது
மழை


எல்லா நிறமான மனிதர்களில்
யாருமே குடை பிடிக்கவில்லை .
ஆனால்
மழை தலைகளை
உரிமை எடுத்தபடியிருக்கிறது.


விறைத்து நடுங்கியபடி
பதுங்கிக்கொண்டேயிருக்கிற
தெருவிளக்குகள்
அணைத்துவிடும் போதெல்லாம்
பொண்ணுச்சி மலர்களின்
தளிர் மென்மையை
தனிமை இரவுகளுக்குள்
படபடப்புடன் சேர்ந்துவிடும் .


நேற்றுவரை
அழகற்றதை எழுதியதற்காக
விரோதம் காட்டிய நகரத்தின்
அடங்காத கோபம்
தனியாதபடியேதானிருக்கிறது
அழகை நிராகரித்தவன்
நான்
எனக்கு வெறுப்புக்கள் தருவதில்தான்
ஸ்டோக்ஹோலமின்
தெரிவுகள் பதுங்கியிருக்கு


ஆனால்
எனது நிலைப்பாட்டில்
இப்போதுவரை மாற்றமில்லை.!


...............................................................................

அர்த்தமில்லாத காலத்தோடு 
அனுசரணையாகி 
அமைதியாகவிருக்கிறேன்

நாளை பற்றிய அங்கலாய்ப்பில் 
நம்பிக்கைகளை 
பிரகாசமாகப் பூசிவைத்திருக்கிறேன்


உபதேசங்களை
எதிர்ப்பு மறுப்புகளின்றி
உள்வாங்கிகொள்கிறேன்


நேசிப்புக்களை
அதீத பிரயாசையோடு
நெருக்கமாக்கிவிடுகிறேன்


சிந்தனை சிக்கலாகும் போதெல்லாம்
பறவையின் சிறகில்
ஏறி அமர்ந்து கொள்கிறேன்


சின்னச் சின்னச் தோல்விகளில்
சின்னாபின்னமாகிவிடாமல்
இதயத்தின் வாசல்களை
இறுக்கியே மூடியிருக்கிறேன்


தூரல் மழை போல
ஆத்மாவை ஆதங்கம் நனைக்கும்போது
ஒரு விழுதுவிட்ட ஆலமரத்தை
மனதில் நினைத்துக்கொள்கிறேன்


எல்லா மனிதர்களுடனும்
நன்றே நலம் விசாரித்து
பணிவோடு நன்றி சொல்லி
சிரித்துப் பேசுகிறேன்


ஆனாலும்தான் என்ன
மிகவும் எளிதான கேள்விகளுக்கு
புரிந்துகொள்ளமுடியாத
கடினமான பரிமாணங்களில்
விடைகள் கிடைக்கும் போது தான்
சட்டென்று சடுதியாக
உடைந்துபோகிறேன்.!


...............................................................................

தேவதை உலகத்தில் இருந்து
இறங்கி வந்து
வெறுமனே நனைத்துவிட்டுச் செல்கிற
நிலம்
வெள்ளைப்பாயை விரித்துப்
பகலெல்லாம்
படுத்துறங்கி விட்டது


மரம்
வெண் பனிமழைக்கு
ஒதுங்கிக் கொள்ளவும்
குடையாகவே
விரிந்து
நின்றபடியே
விழித்துக்கொண்டிருக்கு.!


மேடுபள்ள
நடைபாதைகளையே
நிறை மாத
உறை பனி
சமனாக்கி வைத்திருக்க
நான்தான்
இடைவிடாமல் அதில்
குறுக்கு வழிகளைத் தேடுகிறேன்.


பொறுமையோடு
வெண்பனி
வெறுமையாக வைத்திருந்த
பக்கத்தில்
ஆயிரம் அவநம்பிக்கைகளுக்கிடையில்
அரிதாரம் பூசும்

அவசரப் பாதை
எழுதிக் கெடுத்த 

அபத்தமான கவிதையும்
உன்னில் மட்டுமே
ரசித்து உள்ளிறங்கிப் போகிறது!


.......................................................................


அடங்காத ஆத்திரமோடு 
பிடிவாதங்கள் சேர்ந்து தின்ன
குளிர் வெளியேறமறுக்கும் 
சூரியப்பொங்கல் மாதம் 


விடியாத இரவுக்கள் 
நேரத்துக்கும் காலத்துக்கும்
சமாந்தரமாக வெளிச்சங்களை விழுங்குது


நாளையத்தினம்
என்னவாகவிருக்கும் என்பதை
புரிந்து கொள்ளத் தவறும்
அற்ப சோம்போறித்தனங்கள்
சுற்றிவளைக்குது


உதவும் கொள்கைகளும்
நடைமுறைக்கு குழப்பங்களும்
ஸ்டோக்ஹோலோம் நகரத்தின்
பிரமாண்டங்களோடு
நீர்த்து விடுகின்றன


பலநேரங்களில்
யாரோடும் கதைக்கவே விடுகுதில்லை
தனியறுநிலையில்
ஒதுங்கிப்போகும் பிடிவாதம்


பலியாக்கிவிடும் அவலத்தை
சோடனைகளோடு

பெரிதுபடுத்தவிரும்பவில்லை

முடிவான கடைசிப் புகலிடம்
நிறைவான நம்பிக்கை


நிறையவே வாழ்வில்ப்பிடிப்பு
நிறையவே சாதிக்க ஆசை
நிறையவே உதவும் மனது
இப்போதைக்கு இதுவேதான்
இருப்பு முன்னிறுத்தும் வாய்ப்புகளெனில்


எதைத் தேர்ந்தெடுப்பது?

.........................................................................

இருட்டிலிருந்து 
நான் நினைத்ததுபோலவே 
அவ்வளவு 
இலகுவாக வெளியேறமுடியாதிருந்தது
அந்த அடர்த்தியான வார்த்தை !


அதன் நிறம்
என் கண்களுக்குத் தெரியவில்லை
ஆனால்
அந்த இரவு ஊதா நிறத்தில்
விடியும்வரை

முணுமுணுத்துக்கொண்டிருந்தது.
எப்படிச் சரியாகச் சொல்லமுடிகிறதென்றால்
அதை நானே
என்னில் ஒருபகுதியாக உணர்ந்தேன்.


ன்
அடுத்த ஆத்மாவின் பகுதியில்
கவிதை எழுதும் உட்சாகமெலாம்
வறண்டுபோயிருந்தது,


குளிர் காற்றின்
கிசுகிசுப்பையும்
ஈரமான தீண்டலையும்
தேவதைகளை வர்ணிக்கும்
தெய்வீக பாக்கியங்களையும்
வசனங்களின் நடுவில்
ஊடுருவி எகிறிப்பாயும்

வல்லமையெல்லாம்
அதுக்கு நிராகரிக்கப்பட்ட
நிபந்தனைகளாவேயிருந்தது .


எண்ணங்களை
மாற்றியமைப்பது பற்றியும்
அதுவாகவே
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.!


ஏதோவொரு
கவிதைப் புத்தகத்தில்
அது
சத்தமில்லாமல்
அடங்கிப்போயிருக்க வேண்டும் !


அல்லது
உங்கள் சந்தேகப் பார்வையைச்
சுண்டியிழுத்துக்கொண்டே
அது இறந்தும் விடலாம் !