Friday 2 October 2015

ஆனந்தி டீச்சர் ..

வாழ்க்கை  அனுபவத்தில் எனக்குரிய இடம் எங்கே என்று எப்பவும் தேடுவது . அதை நினைக்கும்போதுதான் இளமைக்கால  நினைவுக்குள்  தடம்புரண்டு வந்தவைகளில்  இதுவும் ஒன்று .அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்  என்று சொல்லுவார்களே  எங்களின்  ஊரில்  அதுபோல  நடந்த  ஒரு நிகழ்விது. வெற்றி-தோல்வி மனஸ்தாபம்-நட்பு எழுச்சி-வீழ்ச்சி எல்லாம் கலந்த ஒரு ஜீவனுள்ள சந்திப்பு அந்தக்கால மனிதர்களின் ஆச்சரியங்களைப் புரட்டும் போதெல்லாம் வரும் ..

                                      யாழ்பாணத்தில மீசை முளைக்காத இள வயசில எங்கட வீடில மிருதங்கம் இருந்தது, அதை முறையாகப் பயின்ற, தற்சமயம் அமரிக்காவில் சாட்டட் எக்கவுண்டணா இருக்கும் என்னோட கடைசித் தம்பி, அந்த நந்தி தேவரின் வாத்தியத்துக்கு, நார்களை முறுக்கி,ஒரு கொட்டுத் தட்டுக் கட்டையால தட்டி , நாட்டு வைத்தியர் போல பல சேர்வைகள் குழைத்து இதமாகப், பதமாகத் தடவி "சுருதி" ஏற்றி வாசிப்பான்! அது சும்மா நாலு வீட்டுக்கு நாதம் பேசும்! 

                                     அவன் வாசிப்பதை பார்த்து,அவன் வீடில இல்லாத நேரம் அதை ரகசியமாக நான் எடுத்து முழங்குவேன்,அதன் டமால் டுமீல் சத்தம் நாலு வீட்டுக்கு அதிரும் ,என் தம்பி வாசிக்கும் போது மட்டும் நாதம் பேசும் அந்த வாத்தியம் நான் வாசிக்க வாசிக்க அதில இருந்து அதன் நாதம் இறங்கி கல்லெறி வேண்டின நாய் ஊளை இடுவது போல சத்தம் வருவது போல வரும் வரை அதை வைத்து நான் முழங்குவேன்! 

                                   புல்லாங்குழலுக்கும் அடுப்பு ஊதுற இரும்புக் குழலுக்கும் வித்தியாசம் தெரியாத என்னோட அம்மா நான் முழக்குரதை ஆச்சரியமாப் பார்ப்பா. என் கடைசித் தம்பிதான் எப்பவும் எங்க வீட்டுக்கு அருகில் இருந்த, நான் படித்த ஆரம்பப் பாடசாலையில் சங்கீத ஆசிரியையாக இருந்த ஆனந்தி டீச்சருக்கு எப்பவும் பக்க வாத்தியம் வாசிப்பான்.

                                          நான் இனி சொல்லப் போறது செவ்வந்திப்பூப்  போல இருந்த ஆனந்தி டிச்சருக்கு ,அவா கட்டி இருந்த பட்டுசேலை வாசம் தெளிவாக மணக்கும், சூடி இருந்த மல்லிகைப்பூ மனம் கிறங்க வைக்கும் அளவுக்கு அவாவுக்கு பக்கத்தில இருந்து மிருதங்கப் பக்க வாத்தியம் வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்கும் ஒரே ஒரு முறை பூர்வ ஜென்ம புண்ணியத்தில் நான் செய்த நற்பயணால் எனக்குக் கிடைத்ததைப் பற்றி.......

                               ஆனந்தி டீச்சர் , வடிவில் எல்லா டீச்சர் போலவும் தான் இருந்தா, ஆனால்  முகத்தில் அறிவுக் கொழுந்து விட்டு,பிரம்பைச் சுழட்டிக்கொண்டு சூர்ப்பனகை  போல படிப்பை நினைக்க வைத்துப் பயப்பிடுத்தும் எல்லா டீச்சர் போலவும் இல்லாமல் , உசரமான ,மெலிந்த ,விழிகளில் ஆரோகணம் ஆர்வமாக எட்டிப்பார்க்க,கன்னத்தில் அவரோகணம் அடக்கி வாசிக்க, நிரந்தரமாகவே முகத்தில் ஒரு தனி ஆவர்த்தனம் தாளம் போட , கனகாம்பரம் அல்லது மல்லிகைப்பூ ஒற்றைச் சர மாலை நீண்ட அலை பாயும் கூந்தலில் அது பாட்டுக்கு சண்முகப்பிரியா ராகத்தில கமகம் கொடுக்க,..... 

                                 எப்பவும் பருத்திச் சேலை மடிப்புக் கலையாமல்க் கட்டி, இயல்பாக எல்லாருமே ரசிக்கும் சரஸ்வதி கடாட்ச்ச முகத்தோட,சுருள் முடி புசு புசு எண்டு அடக்கிப் படிய வாரித் தலை இழுத்தாலும் கொஞ்சம் அடங்காமல் அட்டகாசம் போட,நெற்றியில் எப்பவும் ஒரு ஆச்சரியக்குறி போல சாந்துப் பொட்டு வைச்சு,காதில அரளிப்பூ போல லோலாக்கு தொங்க விட்டு, கதைக்கும் போதே சங்கீதம் சரி கம ப த நிச சரளி வரிசையில் ஆபேரி ராகம் பாடும். கொஞ்சம் உற்றுக் கவனித்தா ஆனந்தி டீச்சர் வலது மூக்கில கிக்கிலி சம்பா அரிசிபோல ஒரு ஒற்றை வைர மூக்குத்தி போட்டிருப்பா. 

                             சரஸ்வதிப் பூசைக் கடைசி விஜயதசமி நாளுக்கு முதல் நாள் ஆனந்தி டீச்சர் ,எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம்

                   " ....... மாமி நாளைக்கு பிள்ளைகளின் நிகழ்ச்சி இருக்கு ,இன்று கொஞ்சம் ரிகர்சல் பார்த்தால் நல்லம் எண்டு வந்தேன் ,எங்க உங்கட மகன் "

                      எண்டு என்னோட கடைசித் தம்பியை விசாரிக்க,அம்மா

                     " என்ன டீச்சர் பிறத்தி ஆட்கள் போல வாசலில் நிண்டு கதைகுரிங்க உள்ளுக்கு வாங்கோ முதலில் "

                         எண்டு சொல்ல ஆனந்தி டீச்சர் எங்க வீட்டு வெளி விறாந்தையில் போட்டு இருந்த கதிரையில் பருத்திச் சேலை மடிப்புக் கலையாமல் இருக்க,கனகாம்பரப்பூ வாசம் வர நான் படிச்சுக் கொண்டு இருந்த " அடிப்படை சூரியன் சந்திரன் வானியல் வின்வெளி சயன்ஸ் " புத்தகத்தைச் சுழட்டி எறிஞ்சு போட்டு வந்து ஒரு உயிருள்ள சந்திரனை எட்டிப் பார்த்தேன், 

                       அம்மா கொஞ்சம் மெதுவாக ஆனந்தி டீச்சர்க்கு

                   " அவன் எல்லோ டீச்சர் வேற ஒரு இசைக் குழு நிகழ்சிக்கு ஓடுப்பட்டு திரியுறான் ,நான் நினைக்க வில்லை நாளைக்கு வந்து உங்களுக்கு வாசிப்பான் "

                    எண்டு சொல்ல,ஆனந்தி டீச்சர் ஜோசித்தா,

                       " அப்படியே சங்கதி மாமி ,இப்ப என்ன செய்யுறது "

              எண்டு சொல்லி முடிக்க முதல்,அம்மா

                         " என்னோட மற்ற மகனும் மிருதங்கம் வாசிப்பான் "

                             எண்டு சொல்ல நான் கொஞ்சம் ஆனந்தி டீச்சர்க்கு முன்னால வெளிய வந்தேன், ஆனந்தி டீச்சர் என்னைப் பார்த்தா,அம்மா,

                    " இவனும் நல்லா வாசிப்பான் "

                  எண்டு சொல்ல , ஆனந்தி டீச்சர்

                        " அப்படியே மாமி,  அப்ப பிரச்சினை இல்லை "

                          எண்டு சொன்னா,எனக்கு பூர்வ ஜென்ம புண்ணியத்திலஉண்மையா அதுக்கு முதல் நம்பிக்கை இல்லை,ஆனால் அந்த நேரத்தில சடார் எண்டு அது வந்தது. இதுக்கு மேல என்னதான் வேண்டும் ஒரு மீசை முளைக்காத இளம் பொடியனுக்கு, நீங்களே சொல்லுங்க பார்ப்பம்,

                       ஆனந்தி டீச்சர் என்னைப் பார்த்து சிரிச்சுப் போட்டு,

                        " அப்ப பின்ன மிருதங்கத்தை எடுத்துக்கொண்டு வாருமேன் வித்துவான் "

                       எண்டு சொல்ல நான் அதைத் தூக்கிக் கொண்டு வந்து வைச்சிட்டு நிலத்தில இருந்து முதல் அதை அடிக்கிற உதைக்கிற பக்கம் சரியாத் தெரியாமல் வைச்சிருக்கிற வளம் சரியா எண்டு கொஞ்சம் குழப்பமாப் பார்த்தேன்,ஆனந்தி டீச்சர் அதை விடக் குழப்பமா என்னைப் பார்த்தா.கர்நாடக சங்கீதத்தை சாம்பாரு போலக் கரைத்துக் குடித்தமாதிரி என்னோட அம்மா என்னையும், ஆனந்தி டீச்சரையும், மிருதங்கத்தையும் , ஒரு குழப்பமே இல்லாமல்ப் பார்த்துக்கொண்டு இருந்தா .......

                    ஆனந்தி டீச்சர் சிக்கனமாகச் சிரிச்சுப் போட்டு ,

                    " நாளைக்கு பொம்பிளைப்பிள்ளைகள் ரெண்டு தில்லானா ஆடிவினம்,அது ஆதி தாளத்தில வரும், அதில இடையில ஒரு அடவும், இன்னொரு குத்தடவும் வரும்,கடைசில ஜதிஸ் ஸ்வரம் தனியா வரும் அதில அலாரிப்பு சேர்ந்து ஒரு உருட்டல் வரும்,நான் நாலு கிர்த்தனை பாடுவேன் அதுகள் முதல் ரெண்டும் ரூபக தாளமும், கடைசி ரெண்டும் ஆதி தாளமும் வருகுது,கடைசியில் இந்தோள ராகத்தில் ஒரு முத்துசாமி தீட்சிதர் உருப்படி வருகுது, நிறைவாக திருப்புகள் ஒண்டும் வருகுது அதுக்கு இடையில கொஞ்சம் தனி ஆவர்த்தனம், திஸ்ர நடையில வாசியும் நல்லா வரும் ...."

                          எண்டு சொல்ல சொல்ல நான் ஆனந்தி டீச்சரரின் பருத்திச் சேலையில் இருந்த மயில் இறகு போடரைப் பார்த்துக்கொண்டு இருந்தேன், ஆனந்தி டீச்சர் கொஞ்சம் சந்தேகமா

                     " நான் சொல்லுறது விளங்குதா "

                        எண்டு கேட்டா,நான் அவா முகத்தைப் பார்த்தேன்,அதில அவா மூக்குக்குக் கீழ கொஞ்சம் பூனை மயிர் போல மிக மிக மெலிதான மீசை இருந்தது.

                                     எனக்கு டீச்சர் சொன்ன பல விசியம் விளங்கவே இல்லை,இருந்தாலும் இந்த நிகழ்வில் ஒரு த்ரில் இக்குகாக கட்டாயம் டீச்சர் அருகில் இருந்து வாசித்தே ஆக வேண்டும் எண்டு நினைக்க நான் எதிர் பார்த்த மாதிரியே டீச்சர்,

                                " பயப்பிட வேண்டாம் ,நான் நிகழ்ச்சியில் பக்கத்தில இருப்பேன், அப்ப எல்லாப் பாடலும் கொஞ்சம் கொஞ்சம் ரிகர்சல் பார்ப்பமா,நான் பாடுறேன்,நீர் வாசியும் "

                                என்று சொல்லிப் பாடத் தொடங்க,அம்மா குசினுக்கு எஸ்கேப் ஆயிட்டா, பாடி முடியவும்

                                டீச்சர்  " பயப்பிட வேண்டாம் நான் நிகழ்ச்சியில் பக்கத்தில இருந்துதான் பாடுவேன் , ஒவ்வொரு பாட்டும் தொடங்க முதல் உமக்கு தாளம் சொல்லுறேன், அப்பத்தான் ராகம்,தாளம்,பல்லவி, மிருதங்கதோட இசைவா வரும் " எண்டு சொன்னா.     

                                நான்  போன உயிர் திரும்பி வந்த மாதிரி ,  " நிகழ்ச்சியில் உங்களுக்கு பக்கத்தில ஒட்டிக்கொண்டு ராகம்,தாளம்,பல்லவி போல இசைவா இருக்கத்தான் நானே இவளவு ரிக்ஸ் எடுத்து உங்களோட மிருதங்கம் வாசிக்கப் போறேன் டீச்சர் "

                                          எண்டு இழுத்து சொல்ல வெளிக்கிட அம்மா டீச்சருக்கு தேத்தண்ணி போட்டுக்கொண்டு வந்திட்டா.............

                           நான் எனக்கு தெரித்த வரையில் அந்த ஒத்திகையில் வாசித்தேன் எண்டு சொன்னால் சாமி கண்ணைக்குத்தும் சும்மா வைச்சு சடைஞ்சேன் , நல்ல காலம் டீச்சர் எல்லாப் பாடல்,கீர்தனை,உருப்படி ,தில்லானா எல்லாத்திலையும் தொடக்கம் மட்டும் வாசித்தா,குழப்பனா விசியங்கள் பாடிப் படிக்கவில்லை,ஆனாலும்

                             " நீர் நல்லா வாசிகுரீர், ஆனாலும் மிருந்தங்கம் நாலு கட்டை சுருதிக்கு   குறைவா இருக்கே , மூன்று கட்டையில் நிக்குது போல இருக்கு நாதம் ,அதை முதல் நாலு கட்டைக்கு ஏற்றி சரி செய்யும்   "

                                எண்டு குண்டை தூக்கிப் போட்டா, எனக்கு சுருதி ஏத்த தெரியாது அடிக்கிற அடியில மிருந்தங்கத்தின் சுருதியை  இறக்கத் தான் தெரியும் , ஏற்றத்  தெரியாது கடைசி தம்பிதான் அதில விண்ணன். ஆனந்தி டீச்சர் கடைசில,

                                                " பயப்பட வேண்டாம் ,நீர் எனக்கு கிட்டவா நெருக்கமா மேடையில் இரும்,அப்ப நான் தாளம் போடுறதைப் பார்த்து வாசிக்கலாம்,நான் தொடங்க முதல் தாள விசியம் சொல்லுறேன் "

                             எண்டா,,இதுதான் சொல்லுறது பூர்வ ஜென்ம புண்ணியத்தில் நான் செய்த நற்பயன் எண்டுறது.

                       இரவு தம்பி வர, அம்மா ஆனந்தி டீச்சர் வந்தது என்னோட ரிகர்சல் பார்த்தது எல்லாம் சொல்லிப் போட்டா, தம்பி

                              " பெரியண்ணே நீங்க தெருக்கூத்து  நாட்டுக் கூத்துக்கே வாசிக்க மாட்டிங்க எப்படி கர்நாடக சங்கீத பரத நாட்டிய கச்சேரிக்கு வாசிக்கப் போறீங்க, அதில நிறைய ஜதிஸ்வரம் எல்லாம் தாறு மாறா வருமே  "  

                           எண்டு சந்தேகமாக் கேட்டான், நான்

                           " சமாளிப்பேன்,  ஆனால் மிருதங்கம் சுருதி இறங்கி இருக்கே " எண்டேன்,

                          தம்பி ஆச்சரியமா  " எப்படி அதெல்லாம் தெரியும் பெரியண்ணே " எண்டு கேட்டான்

                    " ஆனந்தி டீச்சர் சொன்னா " எண்டேன்,

                       " பெரியண்ணை, பரத நாட்டியத்துக்கு வாசிக்க சரியான கஷ்டம் , தாளம் பிசகாமல் வாசிக்க வேண்டும் ,நீங்க அப்படி வாசிப்பின்களா எண்டு எனக்கு சந்தேகமா இருக்கு "

                             " அடே டீச்சரே ரிகர்சலில் நான் நல்லா வாசிக்கிறேன் என்று சொன்னா , உனக்கு இப்ப என்னத்துக்கு சந்தேகம் "

                            " இல்லை,,சும்மா கேட்க ஓகே போல இருக்கும் ஆனால் சங்கீதம் தெரிஞ்ச ஆட்கள் வந்து இருப்பினம்  அவை பிழை பிடிப்பினம் பெரியண்ணை, "

                         " அடே டீச்சரே அதைப்பற்றி ஒண்டுமே சொல்லவில்லை, நீ ஏண்டா இப்ப என்னைக் குழப்புறாய்,,,முதல் மிருதங்கத்தை நாலு கட்டை சுருதிக்கு ஏற்றித் தா நான் ,,மிச்சம்  பார்க்கிறேன்"

                        " இல்லை,,நீங்க  வாசிக்க மாடிங்க ,, டீச்சர் வேற ஆட்கள் வாசிக்க  இல்லாததால் சும்மா சொல்லி இருப்பா பெரியண்ணை,   "

                            " அடே என்னை வாசிக்க  விடடா    இப்ப உனக்கு என்ன பிரசினை ,டீச்சரே ரிகர்சலில் நான் நல்லா வாசிக்கிறேன் என்று சொன்ன,
நீ ஒண்டும் செய்ய வேண்டாம் மிருதங்கத்தை மட்டும்  நாலு கட்டை சுருதிக்கு ஏற்றித் தா நான் ,,மிச்சம்  பார்க்கிறேன் "

                         அவன் என்னை சந்தேகமாப் பார்த்தான்.நான் போட்டு வைச்சு இருக்கிற பிளான் என்னோட முகத்தில தெரியிற மாதிரி அவனுக்கே இருந்தது போல இருந்தது. என்னைப் பாவம் போலப் பார்த்திட்டு ,மிருதங்கத்தை எடுத்து வைச்சு தாகிட தரி கிட திரி கிட தொம் கிட நம் கிட எண்டு தட்டிப் பார்த்திட்டு

                       " உண்மைதான்  பெரியண்ணை,  சுருதி இறங்கி இருக்கே " 

                          எண்டு போட்டு குசினியில போய் ரவைமாவைக் கிண்டிக்கொண்டு அதை ஒரு சின்னக் கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு வந்து மிருதங்கதுக்கு  பக்கத்தில வைச்சிட்டு, மிருதங்கத்துக்கு ரெண்டு பக்கமும்  கொஞ்சம் தண்ணி தடவி போட்டு

                     " பெரியண்ணே கொஞ்சம் இருங்கோ நான் தோல் இழக்க நார்களை இழுத்து ,செட் பண்ணுறேன் " எண்டு சொன்னான், 

                                அவன் ஏன் ரவைமாவைக் கிண்டிக்கொண்டு வந்து வைச்சான் எண்டு எனக்கு விளங்கலை ,நான் அதை டேஸ்ட் பண்ணிப்பார்க்க, உப்புமா போல நல்லா இருந்திச்சு,நான் அவளத்தையும் திண்டு முடிச்சிட்டேன்,தம்பி வந்து

                 " ரவை எங்கே பெரியண்ணே " எண்டான்,

                நான் " நல்லா இருந்திச்சு சாபிட்டுட்டேன் " என்றேன்,

                      அவன் " ஐயோ ,பெரியண்ணே அதைப் பூசித்தான் தோல் இழக்க வைச்சு சுருதி ஏத்த வேண்டும் "

                           எண்டு போட்டு அதுக்கு மேல ஒண்டும் சொல்லவில்லை, நெற்றியைத் தடவி ஜோசித்துப் போட்டு மறுபடியும் குசினியில போய் ரவை மாவைக் கிண்டிக்கொண்டு வந்து,கையோட பக்கத்தில இருந்து  சுருதி ஏற்றி சில சமாளிப்பு  டெக்னிக்கும் சொல்லித் தந்தான்.

                                      நான் படித்த ஆரம்பப் பாடசாலை விஜயதசமி நாளுக்கு ஆனந்தி டீச்சர் சரஸ்வதி போல வெள்ளை நிற சேலை கட்டி,கொஞ்சம் எக்ஸ்ராவா மேக் அப் போட்டு புன்னகை அரசிபோல சிரித்துக்கொண்டு வந்து இன்னுமொரு குண்டைப் போட்டா,

                           " ரிகர்சலில் சொல்ல மறந்திட்டேன், பிள்ளைகள் குற்றாலக் குறவஞ்சி டான்ஸ் ஆடப் போகினம்,அதுக்கு தெம்மாங்கு மெட்டில ஜதிஸ் ஸ்வரம் தனியா வரும் அதில அலாரிப்பு சேர்ந்த ஒரு உருட்டல் வாசியும்,என்ன வாசிக்கலாம் தானே "

                                        எண்டு கேட்டா, நான் அப்பவும் பயப்பிடாம தலைக்கு மேல வெள்ளம் வந்த பிறகு நீந்த தெரியாது எண்டு சொல்லி ஒண்டும் வரப்போறது இல்லையே எண்டு போட்டு

                          " நான் நல்லா அந்த தேவாங்கு மெட்டு வாசிப்பேன் டீச்சர் " எண்டு சொன்னேன்,.

                                " அது தேவாங்கு மெட்டு இல்லை,,தெம்மாங்கு மெட்டு, தகிட தகிட தன் தானே தகிட தகிட தன் தானே எண்டு வரும் . ..." , எண்டு சொன்னா 

                              சொல்லி வைச்ச மாதிரி அந்த விஜயதசமி நிகழ்சியில் ஆனந்தி டீச்சர் எனக்கு மிக அருகில் இருந்து பாடினா,நான் அவா கூந்தலில் இருந்து வந்த மல்லிகைப் பூ வாசத்தில், ஆனந்தி டீச்சர் முகத்தைப் பார்த்துக்கொண்டு ,அவா தாளம் போட்ட கைகளைப் பார்க்க மனம் இல்லாமல் நல்லா பூர்வ ஜென்ம புண்ணியத்தில் நான் செய்த நற்பயன் அதன் உச்சக் கட்ட பலனைத் தர மிருதங்கம் வாசித்தேன், சொதப்பாமல் வாசித்தேன் எண்டு தான் ஆனந்தி டீச்சரே சொன்னா , அந்த நிகழ்வின் முடிவில் அந்த பாடசாலை பிரிஞ்சுபல் வந்து நன்றி சொல்லும் போது

                                           " மிருந்தங்கம் வாசித்த வித்துவான் இந்த பாடசாலை பழைய மாணவன் " எண்டு சொன்னா, எனக்கு  வித்துவான் என்று  சொன்னதைக் கேக்க தலை  சுத்தியது, பிறகு  சிரிப்பு வந்தது , ஆனந்தி டீச்சர் அதைக்  கவனிச்சுப் போட்டுக்  கிட்ட வந்து 

                           "  என்னத்துக்கு  சிரிக்கிரீர்,,என்ன  விசியம்  சொல்லும் "

                           " இல்லை  டீச்சர்,  பிரிஞ்சுபல்  நன்றி சொல்லும் போது
மிருந்தங்கம் வாசித்த வித்துவான் இந்த பாடசாலை பழைய மாணவன்  என்றதைக்  கேட்க சிரிப்பு  வந்தது  " 

                            " ஹ்ம்ம்,,சில  இடங்களில் சரியா  நீர் வாசிக்கவில்லை,,ஆனால்  இது  ஒரு ஸ்கூல்  பிள்ளைகளின்  நிகழ்வு தானே  அதால  நீர்  ஒரு  மாதிரி ஒப்பேற்றிப்போட்டீர் "

                                "  அதுதான்  உண்மை  டீச்சர் "

                   "  இல்லை  உமக்குள்ளே  நல்ல  சங்கீத ஞானம்  இருக்கு  முறைப்படி  படியும்  பெரிய ஆளா வருவீர் "

                          "   நன்றி  டீச்சர் "

                                    அதோட  நான் சத்தம் இல்லாமல் திரும்பியும் பார்க்காமல் மேடையில் இருந்து நழுவி வந்திட்டேன்.  அவளவுதான். ஆனந்தி டீச்சர் சொன்ன மாதிரி  நான்  ஒன்றும் சங்கீத  சம்பந்தமான  விசியங்களில்  ஈடுபடவே  இல்லை. வாழ்க்கை வேற வேற அஞ்சு சத்தத்துக்குப் பிரயோசனம்  இல்லாத பல விசியங்களில்  என்னை  இழுத்தடிச்சது தான் நடந்தது .

                                    இதெல்லாம் நடந்து கிட்டதட்ட இருவத்தி ஐந்து வருடங்களின் பின், " தலை இடி " என்ற ஒரு தமிழ் நண்பருடன்,அவருக்கு உதவியா கொஞ்ச நாள் ஐரோப்பா வீதிகள் ,எல்லைகள் எல்லாம் அலஞ்சேன். தெற்கு  பிரான்ஸ்  ஐ தளமாக வைத்து  " தலை இடி "  அப்போது ஸ்பெயின் இல்  இருந்து மும்மரமா இழுத்து எடுத்து அனுப்பி வைத்து செய்துகொண்டு இருந்த வேலையில் ஒருநாள் ஒரு தமிழ்க் குடும்பம்,தங்கள் சொந்தக்காரப் பொடியனை .........இல இருந்து .......இக்கு கொண்டு போய் விட முடியுமா எண்டு ஒரு " கொன்றாக் " வந்தது.  

                                                 நானும் ,  தலை இடியும் அந்தப் பையனை,  ......... இல இருந்து ........  இக்கு கொண்டு வரும் வழியில் ஒரு நாள் பரிசில் நிற்க வேண்டி வர ,அந்தப் பையனின் அந்த கொன்றக் தந்த உறவினர் வீட்டிலேயே ஒரு இரவு நின்டோம். அங்கே ஆனந்தி டீச்சர் நிண்டா,,நான் அவா முகத்தை அவா வயசாகி தலை நரைத்த போதும் மறக்கவில்லை, ஆனாலும் ஒரு சந்தேகத்தில் அவா வீட்டு சுவரில மாட்டி இருந்த படங்களைப் பார்க்க, பல படங்கள் சங்கீத அரங்கேற்றம்,இசை நிகழ்வு போல இருக்க,இது டீச்சர் தான் எண்டு  உறுதிப்படுத்திக்கொண்டு ,நான் யார் எண்டு சொன்னேன் அவாவுக்கு, 

                   அவா ஆச்சரியமாகி

                                 " ......இன் அண்ணா எல்லோ, ...... மாமியின் மகன் எல்லோ, சிவ பெருமானே, இதென்ன கோலம், நான் நெனச்சேன் நீர் பெரிய முயூசிக் சம்பந்தமான ஆளாக வந்து இருப்பீர் எண்டு,  இதென்ன இப்படி ஒரு தலை போற வேலை செய்யுரீர்  " 

                                             எண்டு சொல்லி, இரவு முழுவதும்  சின்ன வயது நாட்கள் , ஆரம்பப் பாடசாலை, பிரான்சில் அவா நடாத்தும் பாரத நாட்டியப் பாடசாலை , அதில் படித்து வெளியேறும் பிள்ளைகளின்  அரங்கேற்றம், வேறு பல டீச்சர்மாரின் நினைவுகள் ,என்று நிறைய விசியம் கதைத்தா, அண்மையில் அவா பற்றி ஒரு கலைப் புத்தகத்தில் வந்த ஒரு கட்டுரையைக் காட்டினா,அதில அவாவின் பெயர்  செல்வி ............... என்று அவாவின் அப்பா பெயர் போட்டு  தான் இருந்தது, டீச்சர் ஏன் கலியாணம் கட்டாமல் இருந்தா எண்டு விளங்கவில்லை,,நான் கேட்கவும் இல்லை,,

                            ஆனால் எங்கள் ஆரம்பப் பாடசாலையில் தமிழ் படிப்பிச்ச பவானந்தன் மாஸ்டர்  இறந்து போனதோட, தன்னோட அரைவாசி உயிர் போயிட்டுது எண்டு சொல்லிக்கொண்டு இருந்த நேரம் அவாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது ...

                      அவா மவுனமா இருந்தா,,நான் கதையை மாத்த , 

                           " ஒழுங்காப் படிச்சவங்கள் எல்லாருக்கும் சரஸ்வதி கண்ணைத் திறந்து இப்ப டாக்டர்,எஞ்சினியர்,எக்கவுண்டன்,, நானும் அண்டா குண்டா சட்டி பானையோடு மல்லுக்கட்டும் சமையல் வேலை தான் செய்தேன் டீச்சர் ,,இது என்னோட பிரெண்ட் கொஞ்ச நாள் கேட்டதால் உதவிபோல அவரோட செய்யுறேன் ,  ஒழுங்காப் படிகாததால  இப்பவும் கிடந்தது அல்லாடுறேன்  டீச்சர் , எப்படியோ வாழ்க்கை ஓடுது,  தம்பி இப்ப பெரிய தபேலா வித்துவானா இருக்கிறான், கே,ஜே ,ஜேசுதாஸ் , ராஜேஷ் வைத்தியா எல்லாருக்கும் தபேலா பக்கவாத்தியம்  வாசிக்கிறான் டீச்சர்   "  

                                                   எண்டு சொல்லிப்போட்டு காலையில் எழும்பி அந்தப் பொடியனையும் ,வேறு சில பொடியங்களையும் கார்ல ஏத்திக்கொண்டு , ,,,,,கால ஓடி ...... போர்டர் தாண்டி ஒரு இனிய மாலை வானம் மஞ்சள் பூசிக்கு குளித்த பெண்போல டென்மார்க் போடரில் வெளுக்க, அந்த நேரம் கார்ல எனக்கு அருகில் முன் சீட்டில இருந்து  அடுத்த இலுவைக்குப் பிளான் போட்டுக்கொண்டு இருந்த என்னோட பிசினஸ் பாட்னர் தலை இடி,

                               " அந்த பொம்பிளையை உமக்கு முதலே தெரியுமா , "

                              "   ஹ்ம்ம் ,,தெரியும்  அவா டான்ஸ் டீச்சர் ஆக  இருந்தா   ."

                             " டீச்சர்  இப்பவும்  நல்ல  வடிவா  இருக்கிறா,,அந்த  நேரம்  சும்மா  கலக்கி  இருப்பாவே "

                                  "   ஓம்,,அந்தநேரம்  டீச்சர் ஊர்வசி ரம்பை  மேனகை திலோத்தமை  எல்லாம் பிச்சை வேண்ட வேணும்,,அவளவு  வடிவு "

                                     " பவானந்தன் மாஸ்டர்  இறந்து போனதோட, தன்னோட அரைவாசி உயிர் போயிட்டுது எண்டு சொல்லிக்கொண்டு இருந்த நேரம் அவவுக்கு அடக்க முடியாமல் அழுகை வந்ததே கவனிச்ச  நீரோ "

                                  "    ஓம்  கவனிச்சேன் "

                          "   அப்ப    பவானந்தன்  மாஸ்டர்   என்ன  முயூசிக்  படிப்பிச்ச  மாஸ்டரோ ஐசே "

                               "  இல்லை  அவர் தமிழ்  படிப்பிப்பார் "

                          "  டீச்சர்  அந்தாளை  லவ்  அடிச்சு இருக்கிறா  போல  இருக்கே ஐசே "

                              " இருக்கலாம்  அப்படிதான்  இப்ப  எனக்கு தெரியுது,,ஆனால் அவர்  மனைவி பிள்ளைகளோடு  வாழ்ந்தார்  என்று  நினைக்கிறன் "

                                "    டீச்சர்  பாவம் தான் ,,வடிவான பொம்புளைகளுக்கு  வாழ்க்கை  சரியா  அமையாது  எண்டு  சொல்லுறது  உண்மைபோலதான்  இருக்கு "

                                "  இருக்காலம் போலதான்  நானும்  நினைக்கிறேன் "

                                  "    ஏன் ஐசே ,சும்மா சொல்லக்கூடாது  டீச்சர்மாரும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை போல இருக்கே , இல்லை எண்டுறீரோ  " 

                        " பவானந்தன் மாஸ்டர் , அவர்கள்  காதல்  அதுபற்றி  எனக்கு  ஒண்டும்  தெரியாது ,,,ஹ்ம்ம் ,,,உண்மையில்  அது பற்றி ஒண்டுமே தெரியாது " 

                                             எண்டு நல்லா தெரிந்த அந்த ''மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,எக் கால் வருவது என்றி;அக் கால் வருவர், எம் காதலோரே....."  விசியத்தை சும்மா " ஹ்ம்ம் " எண்டு சொல்லிச் சமாளிச்சுப் போட்டு,

                                   " தேன் சிந்துதே வானம் உன்னை என்னைத் தாலாட்டுதே மேகங்களே தரும் ராகங்களே என் நாளுமே வாழ்க ....... "

                                    எண்டு டென்மார்க் எல்லையில்த்  திரிந்த மேகங்களைப் பார்த்து பாடிக்கொண்டு ஜேர்மன் ஓட்டோ பானில் அவுடி ஆ பீரா டேர்போ எஞ்சின் கார் அக்சிலேடரை இறுக்கி மிதிச்சேன்.... 

.

10.05,14.