Monday 4 June 2018

ஞானமடைதலும் மோட்சமும் ...


புதுக்கவிதைகள் எப்போது எழுதத்தொடங்கினார்கள்,  யார் எழுதினார்கள், என்பது போன்ற கேள்விகள் பலகாலமாய்  குடுமிபிடி சண்டைகளோடும் , விவாதங்களோடும்  முட்டிமோதிக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறது. நமது தாய்வழித் தமிழ்மொழியில் நா, பிச்சமூர்த்தி பிள்ளையார் சுழிபோட பின்தொடர்ந்த  மணிக்கொடி கால, எழுத்துக் கால,  வானம்பாடிக்கால  கவிஞ்சர்கள்  புது விதைகளை நவீனமான பொருளடக்கத்தில் , புதியபாணிக் கட்டமைப்பில்  அறிமுகம் செய்தார்கள் என்றுதான் ஒத்துக்கொள்ளும்படியாக பலரும் சொல்கிறார்கள்.


                                                                 இன்றைக்கு அள்ளுகொள்ளையாக  சமூக வலைத்தளங்களில் அளவுகணக்கு இல்லாமல் வாசிக்கிறவர்களின் கண்கள் மங்கிப்போகும் அளவுக்கு   கவிதை எழுதித்தள்ளும்  பெண்கள்  அதிகம் எண்பதுகளின் கவிதைப் பொற்காலத்தில்   பங்கெடுக்கவில்லை . ஆங்கிலத்தில் சமகாலத்தில் ஆண்களோடு  பெண்கள் போட்டி போடும் நிலை இருந்தபோதும் தமிழ்கூறும்  நல்லுலகில் இந்தப் பின்னடைவுக்கு  என்ன காரணம் என்று தெரியவில்லை. 


                                                            ஆனால் உலக அளவில் முதன் முதலில் புதுக்கவிதை  எழுதியவர்கள் பெண்கள் என்று ஒரு கட்டுரை வாசித்தேன். அதுவும் அந்தப் பெண்கள்  புத்தசமயம் வட இந்தியாவில் செழிப்பாக இருந்த காலத்தில் பாளிமொழியில் எழுதி இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே பிக்குனிகள்  என்ற புத்தமத துறவிகள்.


                                                               அவர்களில் விம்லா என்கிற பிக்குனி அதிகம் பிரபலமாய் இருந்து இருக்கிறார்,. ஒரு சாதாரண பெண்ணாக இருந்தபோது ஒரு பிக்கு மீது காதல் வயப்பட்டு அந்தப் பிக்குவைக் குழப்பி , தானும் குழம்பி, வாழ்க்கையைச் சிதைத்து, ஒரு விபச்சாரியாக வாழ்ந்து கெடுமுன் பிக்குனியாக மாறி இருக்கிறாய் , அதன் பின் கவிதைகள் எழுதி இருக்கிறார், பிக்குனி விமலாவின் கவிதைகள் சில ஆங்கிலத்தில் அந்தக் கட்டுரையில் இணைத்து இருந்தார்கள்.


                                                                       உலகத்தின் முதல்ப்   புதுக் கவிதைகள்  என்று சொல்லப்படும் அந்தக் கவிதைகளில் அதிகம் இருப்பது பவுத்தமதப் போதனைகளில் உள்ள ஆசைகளை அழித்தல் , வாழ்வியல் துறப்புப் போன்ற கருத்துக்கள், ஒரு புதுக்கவிதையில் இருக்கவேண்டிய கவர்ச்சியான சொல்லாடல்  கிளர்ச்சியான பின்தொடர்பு,  சுருக்கமாக நிறையச் சொலவது போன்றவை இல்லை, 


                                                                    பாளி மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் நிகழ்ந்த  போது அவைகள் அடிபட்டுப் போய்விட்டதா என்று எனக்கு தெரியாது , அறளை பெயர்ந்த கிழவி பொட்டனி கட்டிப் பினாத்துவது போல இருக்கும் இதுக்குமேல எழுதினால் . அதனால   நீங்களே மேட்கொண்டு எங்காவது தேடிவாசித்து பார்த்தால் எனக்கும் சொல்லுங்க ! அப்புறம் நிலைத்தகவலாக எழுதிய என்னோட எழுத்துருக்களை தொகுத்து உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்,


ஒரு
மாந்திரீக
யதார்த்தவாதப் புனைவு.
ஒரு
நிறுவப்பட்ட
நிர்மலமான பொய்,
ஒரு
ஆழமான
துன்பியல் விதை,
ஒரு
எப்போதும்  
வைத்திருக்கவேண்டிய
சம்பவம் ,
ஒரு
மொழி தெரியாது
குரல் ,
இதில்
ஏதோவொன்றின்
அலைவரிசையில்ப்
பயணிக்கமுடியாவிட்டால்  
ஆத்மகிலேசத்தின்
எந்தப் பாகத்துக்குள்ளும்
ஊடுருவி
நுழைய முடியாது. !


......................................................................



உங்களைப்போல
நேர்த்தியாக நகர்த்தும்
சிந்தனைகள்
என்னிடமிப்போதில்லை !
ரசனையின்
அடிப்படையில்
ஒரு எண்ணத்துக்கு
மிகத் துல்லியமான
வரைகோடுகளை வரைகிறது
பார்வைகள் !
வெற்றிகரமான
கோட்பாடுகளோடு
அணுகித் தோற்றுவிட்டேன் !
ஆதலினால்
கவிதைகளின் மீதான
பிரியத்தில்
சொற்களென்றும்
வார்த்தைகளென்றும்
மனதில்
நிரம்பி வழியும்
குப்பைகளைப் பற்றிக்
கவலைகளின்றியிருக்கிறேன் !



 ...................................................................


தூக்கமின்றித் தவிக்கிற.
கண் பார்வைகள்
எதைத்தான்
பிரதிநிதித்துவப்படுத்துகிறது?
நான்தான்
தலையைக் குனித்தபடி
அவதானிப்பிலிருக்கிறேன் ,
அதிலுள்ள
அநாதித்தன்மைகள்
மிரட்சியூட்டக்கூடியது போலிருந்தது ,
அதன்பின்
ஒருபோதும்
தொட்டுணரமுடியாத
பிரமையாகவே
அனைத்துச் சம்பவங்களும்
தொடர் நெருங்குவதால் ,
மெழுகுபோல உருகிக்கொண்டிருக்கும்
கிளர்ச்சி அலைகள்
காமமாகத்தான் இருக்கவேண்டும் !


…………………………………………………………


நீலவானத்தையும்
அதன் முன்னால் நீட்டும்
செர்ரி மலர்களையும்
எதட்காக 
இவ்வளவுநேரம்
பார்த்துக்கொண்டிருந்தேன் ?
மேலதிகமான
விவரங்களையோ
பூமழை  விசிறித்  தூவுவதன்  
புரிதல்களையோ
பெற்றுக்கொள்ள  முடியவில்லை !
எதேசையாக   இதழ்கள்
காற்றில் அசைந்தாடியிறங்க 
அந்தக் கணத்துக்குப்
பொருத்தமான
ஒரு
பல்நிறப் பறவை
மழைக்கால வானவில் போல
அதன் இறக்கைகளால் 
ஒருமுறை மின்னியது 
கிளைகள் 
உதறிச் சிலிர்த்துக்கொண்டன .


............................................................................


நான்
 பிரபஞ்சத்தைக்
 கற்பனை செய்கிறேன்.,
ஏரிக்கரையின்
 வெளி முற்றத்தில் ...
வாடாத செர்ரி மலர்கள்
 சிதறிக்கிடக்கின்றன .
நிர்வாணமென்று
 நினைக்கும்படியாக
 இங்கெதுவுமேயில்லை
 எனக்குள் இருந்த
 எல்லா வக்கிரங்களும்
 நீர்த்துப் போய்விட்டது
 ரகசியமாக
 என்னிடம்
 எதையோப்பற்றி
 சொல்லிவைக்க
 விரும்புவது போலிருந்தது
 வெள்ளை அன்னங்களின்
 விசாரிப்புக்கள் !



..................................................................…


இந்தச்
சந்தேகம்
பிடிபட்ட நாளிலிருந்து
கிட்டத்தட்ட
ஆறுமாதங்கள்
நொருங்கிபோன
நினைவுகளுடன்தான்
கதைத்துக்கொண்டிருக்கிறேன் ,
நேராகவே கேட்கலாம்தான்
இத்தனைநாள்
தியானித்து உருவாக்கிய
ஒரு நட்பின்
உள்நுழைய முடியாத
கட்டுமாணங்கள்
வெறுமனே ஒரு விசாரிப்பில்
உடைந்தும்போகலாம்.


……………………………………………………….


ஒரு
 தனித்த
 இளம் பெண்ணின்
 பிரத்தியேக அறைக்குள்
 நுழைவதுபோல ...
சங்கடமாயிருக்கிறது
 உல்லாசக் கடற்கரையில்
 ஒதுங்கியிருந்து கவனிப்பது ,
நீள் வெளிகளில்
 இடங்களைத் தெரிவுசெய்து
 அமர்ந்துகொள்கிறது
 கோடை வெளிச்சங்கள்,
செர்ரி மலர்கள்
 காற்றில் மிதக்கின்றன
 அவற்றின்
 வாசனையில்
 மழையின் ஈரமிருக்கிறது !
நானிருக்கும்
 குளிர் நிழலிலிருந்து
 வெய்யிலை
 எப்படிப் பிரித்தெடுப்பது ?


...................................................................


ஒப்பிட்டு
நினைவுகூர்ந்தால்
சிரிப்புதான் வருகிறது !
சரணத்தில்
புதைகுழியிலிறங்குவது போல
ஆக்கிரமிப்பு
காதில் விழுகிறது !
பல்லவியில்
என்
நிம்மதிக்கள் கலைந்துவிட்டன !
அணுக முடியாத
தொலைவுக்குள் போய்விட்டது.
நேசித்த
மரபுகளிலிருந்து
விலகிக்கொண்டிருக்கும்
இசை !
 
...................................................................



சில
விஷயங்களை
அதீதமாகக் கற்பனை
செய்துகொள்ளும்போதெல்லாம்
நேர்மையை
மனசாட்சியில்
சந்திக்கவைக்க முடியவில்லை !
குற்றவுணர்ச்சி
சங்கடப்படுத்தும் போது
ஞாபகச் சுவடுகளை
முடிந்தவரையில்
தேடியழித்து விடுகிறேன் !
ஏனெனில்,
நானும்தான்
கறுப்பும் வெள்ளையும்
சமனின்றிக் குழைந்த
சாம்பல்நிற
மகத்தான கலவை. !

 
....................................................................



திரும்பத் திரும்ப
வாழ்வு ஓடுகிறது.,
சலிப்புற்றுப்
பளிங்குபோன்ற வெய்யில்
புல்வெளிகளில்
முழங்கை முகம் கொடுத்து
தலைசாய்த்துத்
தூங்கிவிழும் பொழுதுகளில்
நிழல்தரும்
பெரு மரங்களை விடவும்
அடிப்பாதங்களில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
எறும்புகளை
அதிகம் நேசிக்கிறேன் !


…………………………………………………..



அறியாமை
வெகுளித்தனம்
எல்லை மீறினால்,
அதல பாதாளத்தில்
அழுத்திவிடும்
இன்னொரு விளிம்பு நிலை
என்
சின்னவயதுப்
பயங்களாகவிருந்தது !
இப்பெல்லாம்
சமன்பாடுகளில்
எந்தப் பிரச்சினையுமில்லை
அறிவுத்
தீர்மானங்களின்றி
கருதுகோள்களில்
எதைப் பற்றியும்
எதுவும் சொல்ல முடிகிறது !


 ..................................................................


ஒரு
சராசரிகளின்
மனோபாவத்துடன்
எந்தளவுக்கு
முட்டாளாகியிருக்கிறேன் !,
பிரயாணிக்கும்
புல்லரிப்புப் பிம்பங்கள்,
அர்த்தமற்ற
விதிவிலக்குகள்,
அலட்சியமான
மனப் பிரமைகள்,
அற்ப சூழலில்
நேசப் பிறழ்வுகள்…
இப்போதும்
முழுமையாக
என்க்குள் என்னையே
அறிந்து கொள்ளவேயில்லை. !

 
............................................................................


ஒரு பக்கம்
மனது
காலை வெய்யிலோடு
பின்னிக் கொண்டிருக்க
மாடியிலிருந்து பார்க்கிறேன் !
ஒரு
அழகியபெண்
அற்புதமான
இலக்கண விதிகளோடு
தொலைதூரத்திலும்
மிக இறுக்கமாகவிருந்தாள், !
இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
நான்
சாமானிய மனிதன் !
எனக்கெனவே
ஜன்னலின்
கண்ணாடிகளின்மீது
பனி உருகிவழிகிறது !


..............................................................


பரவச அலையில்
மிதக்கிறதும்
பின்னர்
அப்பாவியாய்
முகத்தைத் தூக்கி
வைத்துக்கொண்டிருக்கிறதும்
நீயே
வடிவமைத்தவை !
நம்
மனங்களுக்கிடையே
வேறெங்கோதானே
நிகழ்கின்றன சம்பவங்கள் !
கரையத் துவங்கிய
கடற்கரை மண்ணில்
நீ
புரிதலாக இரு
நான்
கற்பனையாக இருக்கிறேன் !


...................................................................


கழட்டிவிடும்
உத்தேசங்களில்
அசாதாரணமானவொரு
கேள்விக்குள்
சிக்கிவிட்டபடியிருந்தது
அந்த இடைவெளி !
நேரம்
நீண்டு காத்திருந்த
அடுத்தடுத்த
வார்த்தைகளில்
வெறும் சமாளிப்புகள் !
தீர்மானமாகவே
அவர்களுக்காகவே
கைப்பிடியில் நின்றது
அடர் இரவு !
முகத்தைச் சுளித்து
புருவங்களை மூடி
ரயில்ப் யணம் போலவே
பிரிந்துபோய்விட்டார்கள் !



.................................................................

 
இரவு
நடுங்கும் குரலில்
கெஞ்சும் தொனியில்
கதவைத் தட்டியது
யாரென்று தெரியவில்லை !
என்
அனுபவத்தில்
காற்றைத்தவிர
இவ்வளவு
மென்மையான விரல்கள்
வேறு யாருக்குமில்லை !
இரக்கப்பட்டு
நீக்கலாகத் திறந்தேன் !
நான்
சுவாசிக்கவைத்திருந்த
வெதுவெதுப்புக்கள்
எல்லாமே
வெளியேறியேவிட்டது !


.................................................................


அதே
நிலத்தடிரெயில்
அதே
காலைப் பயணம்
அதே
திசைவழி
அதே
மெளனம்
ஒரு
தரிப்பிடத்தில்
நின்று
இன்னொன்றுக்கு
வெற்றிடமாகிப்
புறப்படும்போது கிடைக்கும்
இடைவெளிகளில்
வெறுமை
அழுத்தமாக்குகிறது. !
 
............................................................


வாழ்வு பற்றி
யோசிப்பதற்கான இடத்தை
உருவாக்கி
அனுபவங்களைப்
பின்புலங்களில் பதிவுசெய்து
இத்தனை வருடங்கள்
நினைக்க விட்டுப்போன
பிரியமான
சிவரஞ்சனியக்கா
நள்ளிரவொன்றில்
தூக்குப் போட்டுத் தொங்கிட்டா !
இரக்கமில்லாத
மரணமென்று கேள்விப்பட்டதால்
ஒரு
அஞ்சலி எழுதலாம் !
இரவெல்லாம் மீட்டெடுத்த
ஒவ்வொரு
பழைய உரையாடலும்
சருகு போலவே
உதிர்த்துகொண்டிருக்கின்றன ,
மின்னல்வெளிச்ச
ஞாபகத் துணுக்குகள்
நெஞ்சைக்குத்திக்கொண்டிருந்தும்
முடியும் புள்ளியில்
பொருத்தமான
சொற்கள் கிடைக்காததால்
காத்திருக்கிறேன் !

 
..............................................................


அவர்கள்
தலை வழிய
அன்னியோன்னியமாகி
செம்பழுப்புநிற மண்ணில்
சதிராடியபடியே
மழையில்
நனைந்ததை விடவும்
முறுக்கலாகக்
காய்ந்துவிட்டுப் போன
தளர் வெய்யிலில்
ஊசலாடிப்போன
நிலம்
தூறல் விசிறும்
திவலைகளைக்
கையேந்தி
எதிர்கொண்ட விதம்தான்
நியாயமான
கவிதையாகவிருந்தது !


.........................................................


சிந்திப்பதில்
மேன்மையடைதல் பற்றி
ஒரு எழவும் தெரியாது,!
அனுபவம்
உள்ளங்கைகளின்
ரேகைகள் போலவே
மங்கிவிட்டது !
ஞானமடைதலும்
மோட்சமும்
காரணங்களின்றி
நினைவலை மோதுகின்றன. !
யாசகப்
பொறுப்புக்களின்றி
இருந்தாலும்,
ஒப்புக்கொள்கிறேன்
நான்
போகவேண்டிய தூரம்
அதிகம்தான் !