Wednesday 23 November 2016

பித்தபுக்குவும் பவுத்தபிக்குவும்

நமக்கெனத்  தெரிந்த கொஞ்சமான  கிணற்றுத் தவளை அளவு அறிவை  வைத்துக்கொண்டு இந்த உலகத்தை ஒரு ஞானியின் பார்வையில் பார்க்க நினைப்பதுதான் பெரிய முட்டாள்த்தனம்  என்பது வயதைக்கடந்த அனுபவத்தில் தெரியவரும் சந்தர்ப்பங்களின் ஞானஉதயம் கிடைக்காவிட்டாலும் சுடலைஞானம்  கிடைக்கலாம், ஏனென்றால் சுடலைக்குப் போகும் வழியில் ஒரு திருப்பத்தில்தான் ஞானம் காத்திருக்கும். 

                                  என்னடா இப்படி அறப்படிச்ச பல்லி கூழ்ப்பானைக்குள்ள விழுந்த மாதிரி தொடங்கிறானே  எண்டு சலிப்பாக இருக்கா. சில விசியங்கள் வாழ்கையில் கற்றுத்தரும் பாடங்கள் அப்படிதான் இல்லாத சந்துகளின் இடுக்குகளில் நுழைந்து வெளியேறி இருப்பின் அர்த்தத்தை இன்னொரு திசைக்கு வழிமாற்றிவிடும் நிகழ்வுகள் நாம் விரும்பாத பாதையில் வசனமில்லாத  ஓரங்க நாடகம் போலவே நடக்கலாம்  

                                               சென்ற வருட இலையுதிர்கால ஒஸ்லோவில்  கார்ல்பாணபிளஸ்  என்ற நிலத்தடி மெட்ரோ ரெயில்வே ஸ்டேசனில் ஒரு பவுத்தபிக்கு ரெயின் ஏறுவதுக்கு நின்றார். நானும் அந்த ரெயில்வே பிளாட்பாரத்தில் அவருக்குக் கொஞ்சம் தள்ளி நின்றேன் . பயத்தில கொஞ்சம் தள்ளி நின்றேன் என்று சொல்ல முடியாது , எனக்கு அவர் அங்கே நின்றதே அவர் அருகில் வேகமாக ரெயில் பிடிக்க  அரக்கப்பறக்க  வந்து சேர்ந்த போதுதான் தெரியும். 

                                    ஏனோ தெரியவில்லை மெட்ரோ ரெயின் வரவேண்டி நேரம் வரவில்லை. மேலே நிமிர்ந்து பார்க்க ரெயின்  வரும்  நேர அட்டவணை  அறிவுப்புக்கள் ஓடும் இலற்றோனிக் அறிவுப்புப் பலகையில் மெட்ரோ ரெயின் ஒன்று சிக்னல் இழந்து பாதையை இடைமறிப்பதால் மேற்கொண்டு மெட்ரோ ரெயின் எல்லாம் வரவேண்டிய நேரம் கொஞ்சம் பிந்தியே வரும் என்ற அவசர அறிவுப்பு மின்னி மின்னி இன்னும் அவசரமாய் ஓடிக்கொண்டிருந்தது 

                                           பவுத்தபிக்கு அதை அண்ணாந்துபார்த்து மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தார். அவருக்கு நோர்வே மொழி புரியவில்லை என்பது  முகத்தில் மையம் கொள்ளத்தொடங்கிய கலவரத்தில்  தெரிந்தது. ஆனால் அருகில் நின்ற யாரிடமும்  அந்த அறிவிப்பின் அர்த்தம்  என்னவென்று    கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தில் ஸ்டேசன் ஒலிபெருக்கியில் எதற்க்கா மெட்ரோ ரெயின் தாமதம் என்று நோர்ஸ்கில் சொன்னார்கள் 

                                         அந்தப் பவுத்தபிக்கு அதை இன்னும் குழப்பத்தில் காதைக் கொடுத்துக் கேட்டார். புதியவர்களுக்கு  நோர்வே மொழி  நோர்வே மக்கள் கதைக்கும் போது  புரிவதுக்கு மிகவும் கடினம், பலவருடம் அந்த மொழியில் தேர்ச்சியான வெளிநாட்டு மக்களுக்கே அது சில நேரம் வார்த்தைச்  சித்து விளையாட்டில்  போட்டுக் கிண்டி எடுக்கும்.   எனக்கே பல சமயம் அது தத்தித்தூதோதாது தாதித்தூதோதீது என்று அர்த்தம் பிரள வைக்கும் 

                                     வெள்ளை மனிதர்கள் அதிகம் கலவரம் ஆகவில்லை. பலர் மெட்ரோ ரெயின் எடுக்கக் காத்திருக்காமல் வெளியே பஸ்  பிடித்துப் போகப் போய் விட்டார்கள், ஆனாலும் பலர் இன்டர்நெட் போனில விரல்களை ஓடவிட்டு இழுத்து இழுத்து வாசித்துக்கொண்டு காத்திருப்பு  நேரத்தில் தொலைந்து கொண்டிருந்தார்கள் .பவுத்தபிக்குவையும், என்னையும் தவிர   பிளாட்போமிம் காத்திருந்த வெள்ளை மனிதர்கள்  யாரும் யாரையும் யாரும் பார்க்கவில்லை , 

                                 அந்தப் பவுத்தபிக்கு  மேலே ஓடிக்கொண்டு இருக்கும் அறிவிப்பைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.  அப்போது நான் அவரை  நன்றாகக் கவனித்தேன். ஒரு முப்பது சொச்சம் வயதிருக்கலாம், முந்தநாள்  தலை மயிரை மொட்டையாக வழித்து இருந்தும் விடாப்பிடியாக கறுப்பு மயிர்கள் வளரத் தொடங்கிய மெல்லிய தலைக்கறுப்பு இருந்தது. குளிருக்குப் போடும் சுவெட்டர் போட்டு அதுக்கு மேலே மஞ்சள்காவி உடையைப் பெண்டுகள் கொசுவம்  வைத்து  சீலை கட்டுற மாதிரி சுற்றியிருந்தார் 

                                    கொஞ்ச பிரயாணிகள் தாமதிக்க விரும்பாமல் வெளியேறிக்கொண்டிருந்தார்கள், ரெயில் வரும்  உத்தேசங்கள் அப்போதும் தென்படவில்லை,   

                                            தர்ம சக்கரத்துக்கு நடுவில் புத்த சாசன அடையாளச்சின்னம் வரைந்த மஞ்சள் காவி சீலைத்துணியில் தைத்த தோள் பையை அகலமான தொங்கு வாரில் விரித்து விட்டுக்  கொழுவி இருந்தார் , குளிருக்கு ஏற்ற தோல் சப்பாத்து போட்டிருந்தார். கையைக் காலை ஆட்டி வேலைசெய்யாத சொகுசு வாழ்க்கை சவுந்தர்யமாகக் கொடுத்து   ஆங்காங்கே தசைகளை மொத்தமாக்கி வைத்த   ஆரோக்கியமான  உடல்வாகு 

                              ஆரம்பப்  பள்ளிக் குழந்தைகள் அவர்கள் ஆசிரியர்கள் கண்காணிப்பில்  போக்கிமான் போல வந்து நுழைந்தார்கள்.   ரெயில் வரும்  உத்தேசங்கள் அப்போதும் தென்படவில்லை .  

                                        கார்ல்பாணபிளஸ்  மெட்ரோ ரெயில் நிலைய புளோரோசென்ட் குழல் விளக்கு வெளிச்சத்தில் அவர் முகம்  வெள்ளாவி வெளுக்கிற சலவைக் கல்லுப்போலப் பளிச்சென்று மினுங்கியது. பொக்கிளிப்பான் வைரஸ் காச்சல் வந்த போது போட்ட பொக்களங்கள் உடைந்த அடையாளமாகக் கன்னத்தில்  சின்னப் பள்ளங்கள் இருந்தது 

                                 ரெண்டு  மெட்ரோ  ரெயில்க் காவலர்கள் பிளாட்பாரம் மேடையில் நடந்து வந்தார்கள்.  ரெயில் வரும்  உத்தேசங்கள் அப்போதும் தென்படவில்லை.   

                                           சவுக்காரம்  தடவி  சவரக்கத்தி போட்டு மீசை,தாடி  மழுப்ப வழித்த  முகத்தில இமைமயிர் தும்புக்கட்டை போல அடர்த்தியாக இருந்தது .காது  ரெண்டும் சுளகுபோலப்  பெரிதாக இருக்க ,மூக்கும்  நிசங்க மன்னர்கள் ஆண்ட காலம்வரையில் நீண்டிருந்தது .  கண்களில்  ஒரு  சிங்களப்   பித்த புக்குக்குக்கு  அடிப்படையில் இருக்கவேண்டிய   ஆவேச அடையாளங்கள்  இல்லை. பதிலாக  கொஞ்சம் திரியம்பகம் சுகந்தம் தரும்  தியான அமைதி இருந்தது .



எனக்குச் சிங்களம் சுமாராகக்  கதைக்க முடியும் என்பதால் பவுத்தபிக்குவோடு கதைப்பமா  என்று ஜோசித்தேன், அந்தக் கணத்தில்   புத்தபிக்குவும் எனக்குச்  சிங்களம் சிலநேரம் தெரியலாம் என்பது போல என்னைப் பார்த்தார். எப்படிக் கதையைத் தொடக்கலாம் என்ற நொடியில் இன்னொரு அவசர அறிவுப்பு மெட்ரோ ரெயில் நிலைய ஒலிபெருக்கியில் வந்தது. அதில்  இன்னும் இருபது சொச்சம் நிமிடங்கள் ரெயில் தாமதம் ஆகலாம் என்று நோர்ஸ்கில் ஒரு இளம்பெண் அறிவித்தாள் , அவள் குரல் அவசரத்திலும் அழகாக இருந்தது 

                                 "  உங்களுக்கு  இந்த அறிவிப்புக்கள் விளங்குதா, நோர்க்ஸ் மொழி விளங்குமா  உங்களுக்கு ஹாமத்துறுவன்னே  "

                               என்று சிங்களத்தில் கேட்டேன், புத்தபிக்கு டக்கெண்டு என்னைப் பார்த்தார், சிரித்தார், ஹாமத்துறுவன்னே என்றால் கொஞ்சம் மரியாதையாக ஒரு துறவியை விழிக்கும் சொல்லாடல் 

                                    " விளங்கவில்லை , ஆங்கிலத்திலும் சொல்லலாமே , அது   இன்டெர்நசினல் லாங்குவேச் , என்னைப்போல வெளிநாட்டு மாணவர்களுக்கு விளங்குமே , எதுக்கு அவர்கள் மொழியில் மட்டுமே சொல்லுறார்கள், "

                                      என்றார், பிக்குவின்  அந்தக் கேள்வியில்   ஏற்ற இறக்கத்துடன் குரல் அமர்க்களமாய் கேட்பதற்குச் சுவாரசியமாக இருந்தது!   உங்கட நாட்டில மட்டுமென்ன தனிச் சிங்களத்தில்தானே உளறிக்கொட்டிகொண்டு இருப்பிங்க இங்க மட்டும்  என்ன எல்லாருக்கும் புரியும்  மொழியில்  சொல்ல வேண்டும்  எண்டு  அடம் பிடிகுரிங்க  என்று கேட்க நினைச்சேன், ஆனால் கேட்கவில்லை ,ஹாமத்துரு சிரித்துக்கொண்டு 

                          " எப்படி சிங்களம்  தெரியும்,,தமிழ்  ஆட்கள்  எல்லாரும்  சிங்களம் கதைக்க மாட்டினமே "

                           " நான்  தமிழ்  எண்டு  எப்படித் தெரியும் "

                    "  இதென்ன பெரிய விசியமா ,,நான் நயினாதீவு பன்சாலையில்  ஒரு வருடம் சொச்சம்  இருந்து இருக்கிறேன்,,அங்கேதான்தான்  தமிழ்  ஆட்கள் நல்ல பழக்கம் "

                          "  ஓம்,,நான்  தமிழ்  தான்,, அதுவும் யாழ்ப்பாணம் "

                         " அதுவும் முகத்தில தெரியுது "

                       "  ஹஹஹா,, என்னோடக்  சிங்களம் உங்களுக்கு விளங்குதா  ஹாமத்துருவன்னே "

                           "ஹ்ம்ம்,, விளங்குது,,இலக்கணப்படி பிழை  இருக்கு,,உச்சரிப்பும்  கொஞ்சம்  பிழை,, பஹா,,ஹா ,, சரியா வரவில்லை,,எப்படி சிங்களம் பேசு பழகும் சந்தர்ப்பம் வந்தது "

               "  சிங்கள ஆட்களோடு இலங்கையில் வேலை செய்த போது "

                                "  நல்லது  ஒஸ்லோவில்  என்னோட  சிங்களத்தில்  கதைப்பதுக்கு "

                          " எனக்கும்  இங்கே  யாரும்  இல்லை அந்த மொழி கதைக்க "

                        " ஹ்ம்ம்,,இங்கே ஒஸ்லோவில்    நிறையத் தமிழ் ஆட்கள்  இருக்கினம்  இல்லையோ "

                         " ஓம்,,ஓம்,,நிறையப்பேர் நோர்வேயில்  இருக்கினம்,சிங்கள  ஆட்களும்  கொஞ்சம்போல இருக்கினம் "

                             "   நான் ஒரு வருஷம் இங்கே இருக்கிறேன் ஒரு சிங்கள ஆட்களையும் சந்தித்ததில்லை "

                          "    என்னகுச்  சிலரைத்  தெரியும்,, அவர்களோடு முன்னம்  வேலை செய்து இருக்கிறேன்,,இப்ப  தொடர்புகள்  இல்லை  "

                        " தமிழ்  ஆட்கள்  என்னைஇங்கே வெறுப்பாகவும், சந்தேகமாயும் பார்கிறார்கள், "

                          "   இலங்கையில் யுத்தம் நடந்த ஆண்டுகளில்  எல்லாத் தமிழரையும் புலி என்றுதானே சிங்கள பிக்குகள் பார்த்தார்களே  அதன்  எதிர்வினை தான் இது  "

                          " எல்லாப் பவுத்த பிக்குகளும் இனத்துவேசம், மொழித்துவேசம், சமய வெறுப்பு   உள்ளவர்கள்  அல்ல, "

                               "   அப்படியா , ஹ்ம்ம்,,அப்படியும் இருக்கலாம் "

                                    " இங்கே  என்னோட புத்தசமய தத்துவம் படிப்பிக்கும்  புரொபசர் எப்பவும் ஆங்கிலத்தில்  சொல்லுவார்  Your presence ..and ..then your absence shall always tell us that this world is a beautiful place for living. soul is residing in our heart like a Lamp. This Lamp will never dismantle என்று அதுபோல வாழ்பவன் நான்  "

                          " ஆனால் புத்தபிக்குகள் அரசாங்கத்தில் ,சட்டத்தில் , இயல்ப்பு வாழ்கையில்  ஆதிக்கம் செலுத்தினார்களே     " 

                           "    அப்படி  இப்ப இல்லை,,முன்னம் அப்படி இருந்தது, இப்ப மஹாசங்கத்தை , அஸ்கிரிய பீடத்தை  ,மல்வத்தை பீடத்தை , எந்த அரசாங்கமும் கணக்கில் எடுப்பதில்லை, பவுத்த பிக்குகள் தனியாக பவுத்த சாசனத்தை பாதுக்காக்கப் போராட வேண்டியுள்ளது "

                               " இப்பதானே  பல  பலமுள்ள  சேணாக்கள் புதுசு  புதுசா   உருவாக்கி  இருக்கே "

                             "  அவர்கள்  அறப்படிச்ச முட்டாள்கள்,காவி உடை அணிந்த கேவலம் கெட்ட  தெருச் சண்டியர்கள்  , அவர்கள் சேனாக்கள்  ஒன்றும் உண்மையானவை  இல்லை,,அதில் உள்ள சில பிக்குகள் மட்டுமே பிரபலம், அதுவும் சும்மா வாயால  உழுந்து  ஆட்டி  அதே வாயால  வடை சுடுவதால்,"

                             "  அவர்கள்தானே இப்ப பிரசினைகளைக் கிண்டி கிண்டி விட்டு ஊதி விடுகிறார்கள் , அது  பிழைதானே "

                      "  அடிப்படையில்  அவர்கள் ஆவேசமான போக்கு உள்ளவர்கள்,  மதத்தைவிட  அவர்களுக்கு அரசியல் முக்கியமாக இருக்கு "

                                 "   அதுவே மற்ற சிறுபான்மை இனத்துக்கு அச்சம் கொடுக்கும் நிகழ்வுதானே  இல்லையா  ஹமாதுருவன்னே "

                           "    ஓம்,  அதுக்கேன்  பிடிச்சுத் தின்னுற மாதிரி  பேயைப் பிசாசைப்  பார்த்த மாதிரி  பார்த்துக்கொண்டு  ரோட்டில கடந்து போகினம் ,,அவளவு  கோவம்  இருக்கு எங்க புத்தபிக்குகளில்"

                     " அதெண்டா  உண்மைதான் அங்குலிமால  எண்டு  சிங்களத்தில்  சொல்லுவார்களே  அதுபோலவா "

                        "  ஹஹஹா,,அதுதான்  நிறைய  சிங்கள வரலாற்று  இதிகாச  விசியம் தெரியும் போல,,இந்தச்  சொல்லு  எல்லாரும்  சொல்ல மாட்டினம் "

                               "  புத்த பெருமானின் வரலாற்றை நான் படித்து இருக்கிறேன்  " 

                                   " என்ன மொழியில் படித்து இருகுரிங்க  " 

                             " தமிழில் தான்,, என்னோட அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரர் சோ . சிவபாதசுந்தரம் கவுதமபுத்தர் அடிச்சுவட்டில் என்று ஒரு புத்தகம் தமிழில் எழுதி இருக்கிறார், அந்தப் புத்தகத்தை விழா  எடுத்து அரசமரியாதை கொடுத்து   ஸ்ரீமாவோ பண்டாராநாயக்க கவுரவப்படுத்தி இருக்கிறா  " 

                     "  அப்படியா,,இதெல்லாம்  நான் கேள்விப்பட்டதேயில்லை  " 

                       "  அரச மரத்தைக் கண்டால் அதில  காகம்  வந்திருந்து பீய்ச்சு தோ  இல்லையோ  உங்க ஆட்கள்     கீழே புத்தர்  சிலை வைச்சு பஞ்சாலை  கட்டுரின்களே "

                          "  ஹ்ம்ம்,,, அந்த இடங்களில்  சிங்கள பவுத்த சமய  வரலாற்றுத் தொடர்ப்பு இருந்தால் தான் அப்படிக் கட்டுவோம் "

                             " ஏன்  ஹாமதுருவன்னே எவளவோ புளியமரம் பேயோடு கிடந்தது அல்லாடிக்கொண்டிருக்க அதுக்குக்  கீழே சிலை வைக்காமல் அதை  விட்டுப்போட்டு  எப்பவும் அரச மரத்தையே குறியாகத் தேடிக்கொண்டு இருக்கிறீங்க "

                         " ஹஹஹா ,  நல்லா  என்னை வைச்சு முசுப்பாத்தி போல,,அரசமரத்தின் கீழே தான் போதிசத்துவ  புத்தசாது கபிலவஸ்து லும்பினி வனத்தில் பிறந்தார், போதிகயாவிலும்  அரச மரத்தின் கீழே தான் ஞான உதயம் பெற்றார், அவர் பரிநிர்வாணம் அடைந்ததும் ஒரு அரசமரத்தின் கீழே தான் "

                           "   அதனால  கண்ணில தெரியிற  அரசமரம் எல்லாத்தையும் வளைச்சுப் பிடிச்சு பன்சால     கட்டச் சொல்லி கவுத புத்த பெருமான் அவர் தத்துவங்களில் சொல்லி இருக்கிறாரா "

                           "  ஹஹஹா,, என்னோட விவாதம் செய்ய விருப்பம் தொடங்குது போல,, அப்படி புத்த சாது சொல்லவில்லை,,அரசமரமே அவர் காலத்தில் பிரபலம் இல்லை, அவர் மஹாபரிநிர்வாணம்  குஷிநகரில் அடைந்த பின் தான் அந்த மரம் புனித மரமாக பிரபலம் ஆகியது "

                                "    பிறகேன்  ஹாமாதுருவன்னே  இலங்கையில் ஒரு அரச மரத்தையும் நின்மதியாக இருக்க விடாமல் அட்டகாசம்  போடுரிங்க "

                          "  ஹ்ம்ம்,, அது  பிழைதான்,, அரச  மரத்தின்  கீழே  வடக்குக் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையார்  சிலை  இருக்கே, அமாத்தியான் சலய    அடாத்தாக  பிள்ளையார் சிலையை அகற்றிவிட்டு புத்தர் சிலை வைப்பது  பிழை "

                      " இந்த நேரம் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகுது  ,ஹாமதுருவன்னே "

                             "  சொல்லுங்கோ , கேட்பம் "

                                    "   எங்களின் வீட்டுக்கு  அருகில்  உள்ள சந்தியில் ஒரு பெரிய அரசமரம் என்னோட சின்னவயதில்  நின்றது, "

                              "  எங்கே  யாப்பனேயிலேயா "

                               "    ஓம்,  ஹமாதுருவன்னே ,   அவடத்தை  அரசடி என்பார்கள் , அது வயதாகி சரிந்து விழ அந்த இடத்தில  சுப்பிரமணிய பாரதியார் சிலை வைத்தார்கள், இப்ப அவடம் பாரதி சிலையடி என்று அழைக்கப்படுகிறது. "

                             " அப்படியா,, நல்லா  இருக்கே கேட்க "

                      "  என்ன ,,ஹமாதுருவன்னே,,கேட்கக்  கவலையா இல்லையா "

                                "   ஏன்  கவலைப்பட வேண்டும்,,சொல்லுங்கோ "

                             "  நல்லகாலம் அரசமரம் கொஞ்சக்காலம் நிண்டு இருந்தா அதுக்குக் கீழே புத்தர் சிலையை வைச்சு பஞ்சாலை கட்டி, அவடம் பன்சாலையடி  என்று வந்திருக்கும்  "

                      "   ஹஹஹா,,, என்னை  வைச்சு பகிடி விடுறிங்க போல இருக்கு பேச்சு வார்த்தை போற போக்கைப் பார்க்க  "

                                 "சரி விடுங்க ஹாமதுருவன்னே,   நீங்க  இங்கே  என்ன படிகுரிங்க இங்கே  என்ன மொழியில் படிக்கிறிங்க  "

                          "  ஒஸ்லோ யூனிவெர்சிட்டி கீளைத்தேய சமய வரலாற்று பக்கல்டியில் ஸ்கோலர்சிப் பலோவில்  வந்து   படிக்கிறேன், ஆங்கிலத்தில்  ஆராய்ச்சி செய்கிறேன் ,,நோர்க்ஸ்  மொழி  தெரியாது " 

                             "   இங்கே நோர்வேயில்  புத்த சமயம் படிப்பிக்க  ஆட்கள் இருகிறார்களா "

                               " ஹஹஹா  என்ன கிண்டலா,,இங்கே எனக்கு ஒரு புரோபசர் இருக்கிறார்,,நோர்வே நாட்டு மனுசர்,,ஆளுக்குத்  தெரியாத புத்த சாசனமே  இல்லை,,அவளவு அறிவுக்களஞ்சியம் ,,திபத், பூட்டான் இமாலயா,  எல்லாம்  போய்ப்  படிச்ச  மனுஷன் "

                      "  அவரும்  பவுத்த  துறவியா "

                      " இல்லை  அந்த மனுஷனுக்கு  மனைவி  பிள்ளைகள்  இருக்கினம்,,ஒருநாள் அவர் வீட்டுக்கு  வரச்சொல்லி சொன்னதால்  போய்  இருக்கிறேன்,நல்ல  அமைதியான  குடும்பம் "

                           "   அட,,அவர்  ஆங்கிலத்தில்  உங்களோடு ஆராய்ச்சி செய்ய அனுசரணையாக இருப்பாரா "

                                 "அப்படிதான்,,அவர்  ஒரு தத்துவ வித்தகர்,,சந்திரகுத்தமவுலியர் காலத்து   பாளி மொழியில் உள்ள கல்வெட்டு ஆதாரம்   எல்லாம் அழகா  ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து சொல்லுவார்     "

                                 "  அப்படியா,,நீங்க  என்ன  விசியம் படிக்குரிங்க  ஹாம்த்துருவன்னே "

                                " திரிபீடிக தம்மத்துவ புஸ்தி வத்தன   தியான வழிபாட்டில் மகாயான பவுத்தமும் தேரவாத பவுத்தமும் எங்கே முரன்படுகுது எண்டு மாஸ்டர் டிகிரி ஆராய்ச்சி  செய்கிறேன் "

                          "   நீங்க  மட்டும்மா  இது  படிக்குரிங்க "

                    "  இல்லை ,,நானும்  நாலு  பெண்களும்  படிக்குறோம் "

                     " அவர்கள்  நாலுபேரும்  இலங்கையில்  இருந்து வந்தவர்களா" 

                   " இல்லை மூன்று  இளம்பெண்கள் நோர்வே நாட்டு வெள்ளைகள்,, ஒரு நடுத்தர வயது  ஆபிரிக்க  நாட்டுக் கறுப்புப்  பெண்"

                           "   ஒ  ஆச்சரியமாய்  இருக்கே "

                          "  ஹ்ம்ம்,,எனக்கும்  ஆச்சரியமாய்தான்  இருக்கு  அது "


புத்தபிக்கு  இலங்கையில்  என்ன இடத்தைச்  சேர்ந்தவர்  என்று கேக்க நினைத்தேன். அவர் கதைத்த சிங்களத்தில்  மகியங்கனைப் பக்கம் வேடா  என்ற இலங்கையின் ஆதியான குவேனி விஜயன் வரலாற்றில் வரும்  சிங்கள மக்களான   வேடுவர்கள்  இழுக்கும்  ஒரு  இழுவை இருந்தது, சிலநேரம் அது பாளி மொழியின் பாதிப்பா  என்று குழப்பமாக  இருந்தது,  அவர் பேசிய சில சொற்களில் நாக்கு  வழிக்கிற  நாட்டு வளப்பம் இருந்ததால்  ஒரு காட்டுப்பகுதி சேர்ந்த இடத்தில் பிறந்திருக்கலாம் போல இருந்தது.   என்றாலும் கேட்கலாம்  என்று  நினைச்சு 

                           "   ஹாமத்துருவன்னே இலங்கையில்  நீங்க  எந்த  ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் "

                             "அரந்தலாவை,, தெரியுமா அந்த  ஊர் "

                       "  அனுராதபுரதுக்கு  கிட்டயா "

                        "  ஓம்,,கொஞ்சம்  கிட்ட, வடமத்திய  மாகாணம்  ,மாவட்டம்  எண்டு  சொன்னால்  மதவாச்சி  வடக்குப்  பக்கப்   பிரதேச  எல்லை, நான் புத்த பிக்குவாய் பயற்சி பெற்றது  களனிய ரஜமகாவிகாரையில் "

                            "   அட ,, உண்மையாவா  "

                              "   ஓம்,, என்னோட  அப்பா சிறிலங்கா நேவியில்   வேலை  செய்தார்,,அம்மா பரம்பரையான   ஆயுர்வேத வைத்தியர்,நாங்கள் புளத்சிங்கள மடவெல  அக்கரபனாய்  சாதி , யாருக்கும் பயப்பிட மாட்டோம் "

                         "  அட ,, பிறகு  எதுக்கு நீங்கள்  இராணுவத்தில் சேராமல்   பவுத்த பிக்கு ஆனிங்க "

                         "   ஹஹஹா,,இப்ப  ரெயில்  வருமா  அல்லது  வராதா ,,அதை கொஞ்சம்  சொல்ல முடியுமா   "

                               "    ரெயில்  வராது  போலதான்  இருக்கு "

                             " அப்ப  என்ன  செய்யலாம்,,இன்னும் அரை  மணித்தியாலத்தில்  பிலிண்டிரன்  கம்பஸ்  போக  வேணும்  லெக்சர்  இருக்கே "

                     "  ஒண்டு  செய்யுங்க  டாக்சி  எடுங்க,, இப்ப  ரெயில்  தாமதம்  உங்களுக்கு  சாதகம்,,பிறகு  டாக்சி போன  செலவை  ஒஸ்லோ  மெட்ரோ ரெயில்வே அலுவலகத்தில்  காட்டினால்  அந்தக்  காசு  அப்பிடியே  தருவார்கள் "

                         "     அது  எனக்கும்  தெரியும் "

                          "  எப்படித்  தெரியும் "

                            "  என்னோட  பிரோபசர்  சொல்லித்தந்தார் "

                   "   பார்த்திங்களா  எப்படி  மனிதர்களின்  உணர்வை மதிக்கிறார்கள்  என்று  இந்த நாட்டில் "

                     "  ம்,, அது  உண்மைதான் , நான்  காத்து இருக்கிறேன்  ரெயில் வரும்வரை,,அதைவிட  உங்களோடு கதைப்பது  சந்தோசமாய் இருக்கு "

                             " எதுக்கு நீங்க பவுத்த பிக்கு ஆனிங்க  என்ற என் கேள்விக்கு என்ன  பதில் சொல்லாமல் சடைஞ்சுகொண்டு போனிங்க "

                               " ஹஹஹஹா,,சொல்லுறேன்,,அதில ஒரு ரகசியமும்  இல்லை ,,எனக்குப்  பயமும்  இல்லை, நானே எங்கள் பவுத்த சாது  ஏற்றிவைத்த ஒளியின் வழியில் வாழ்பவன் ,நீங்க  என்னை ரகசியமாக  விசாரிக்கும் உளவாளியா "

                             "  அப்படி  என்றால்  என்ன "

                          " இரகசிய  உளவாளி,,அதுதான் நைசா கதைச்சு நசுக்கிடாமல் குசு விடாமல்  முழு  விபரம்  எடுப்பார்களே "

                  " ஒரு  மண்ணும்  இல்லை,,,நானே ஒரு பிஞ்சு போன கக்குஸ் வாளி போன்ற  ஊத்தைவாளி,,என்னோட  முகத்தைப் பார்த்தால்  இன்டலிஜென்ஸ் ஆனா  உளவாளி போலவா இருக்கு,, ஹஹாஹ உங்க காமடி  தாங்க முடியலை  "

                                "  இல்லை இங்கே பலர் கதை கேட்டுக் கதை பிடுங்கி   அப்படி உலாவுரார்கள்  என்று சொன்னார்கள்   "

                    " மண்ணாங்கட்டி அவர்களுக்கு மட்டும்  என்ன  டிராபிக் போலிஸ் போல  நடு மண்டையில்    இன்டலிஜென்ஸ் பல்ப்  எரியுமா "

                        " அப்படி  இல்லை , நாங்கள்  எங்கள் நாட்டில் எதிரிகள்  இங்கேயும்  எதிரிகள் போலத்தான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்"   

                          "  யார் அவர்கள்  எனக்கே  தெரியாது  அவர்களை " 

                           "  யாருக்கும் தெரியாமல் அடிமடியில சுண்ணாம்பு  தடவி முகத்தில வெசாக் போல பூரணை சந்திரன் இழிக்கிற மாதிரி  சிரிச்சு முதுகில கிரீஸ் கத்தியை  சொருகுபவர்கள் தான் உளவாளிகள் "

                      "  அட அட  என்னமா  விபரிக்குரிங்க , அஹஹா  எனக்கு நம்பர் தகடு இல்லாத வெள்ளை வான் தான் நினைவு வருகுது "

                      " ஹஹஹா,,ஒரே  சிரிப்பா  இருக்கு உங்க கதையைக் கேட்க  எனக்கும்  அதுகளுக்கும்  சம்ப்பந்தம்  இல்லை , ரணசிங்கே பிரேமதாசதான்  அந்த  வெள்ளை வான் கடத்தல்களை  ஆரம்ப்பிச்சவர் "

                         "  என்னைப்  பார்க்க என்ன வரக்காபோளை  கொடுக்காப் புலி போல இருக்கா "

                           "  ஹஹாஹா   இல்லையே "

                       "   பின்ன என்ன புடுக்கு   இல்லாத பூனை போல இருக்கா "

                           "  ஹஹாஹா  இல்லையே "

                          "  பிறகென்ன அழுத் அவுருதுக்கு ரபான் அடிசுக் கிரிஸ் மரம்  ஏறி மலிபன் கொம்பனி  மஞ்சி பிஸ்கட்   பிரிச்ச மாதிரிப்  பிரசினை இப்ப   ஹாமதுருவன்னே "

                       " தமுனான்சலாகே நீங்க  எல்லார் போலவும் சாதாரண   மனிதர் போலதான் இருகுரிங்க "

                           "   சரி விடுங்க, இது  இப்ப முக்கியம்  இல்லை  தானே  ஹாமத்துருவன்னே "

                     "  என்னோட  கிராமத்தில் ஒரு கிளைமோர் கண்ணிவெடி வெடித்தது  ஒரு நாள்  இரவு,,அதில ஒரு பஸ்ஸில் போன  எல்லாருமே  செத்துப் போனார்கள் , அவர்கள் போனது ருவான்வேலிசாய தாதுகோபப் பன்சாலையில்  பிரித் ஓதப் போனவர்கள், என்னோட ரத்த உருத்து சொந்தங்கள் எல்லாம்  "

                                  "  ஹ்ம்ம் , "

                             " அதுக்கு  நானும்  போக  இருந்தேன்,,என்ன  காரணமோ  தெரியவில்லை அந்தப் பயணத்தில் போகவில்லை "

                                    "  ஹ்ம்ம்,,சொல்லுங்கோ "

                          "   அந்த பஸ்ஸில  கிளைமோர் குண்டில் செத்தவர்களை அடக்கம்  செய்ய  இன்னொரு பஸ்ஸில் அடுத்த நாள் எங்க ஊர் ஆட்கள் போனார்கள் "

                          "    ஹ்ம்ம்,,என்ன நடந்தது  பிறகு  அடக்கம்  செய்யும்  நிகழ்வு ஒழுங்கா நடந்ததா "

                        "  அடக்கம் செய்யப் போனவர்களின் பஸ் இன்னொரு கிளைமோரில் ஹெப்டிக்கொல்லாவை  என்ற இடத்தில  வெடித்தது ,, அதில ஒருவரும் உயிரோடு மிஞ்சவில்லை " 

                             " அடப்பாவமே "

                            "என்னோட ரத்த உருத்து சொந்தங்கள் பலர் அதில  பீஸ் பீசா  சிதறிப்போனார்கள்  அதுக்கும்   நானும்  போக  இருந்தேன்,,என்ன  காரணமோ  தெரியவில்லை அந்தப் பயணத்தில் போகவில்லை "

                                    "      ஹ்ம்ம் "



இந்த நேரம் என் பிரியமான சகி  சிசிலியா போன் அடிச்சாள், எங்க நிக்குறாய் என்று கேட்டாள் , கார்ல்பானாபிளஸ்  மெட்ரோவில் ரெயில் வராமால் நிக்குறேன் எண்டு சொன்னேன், எப்படிதான் கண்டு பிடிப்பாளோ தெரியாது என்னோட நிலைமை எப்பவும் பாதைகளில் இடறிகொண்டிருக்கும் போதெல்லாம் சிசிலியா அதை மன அலைகளில் ஏறிவந்து கண்டுபிடிப்பது போலவே அந்தக் கணத்தில் டெலிபோன் அடிப்பாள் 

                                     "   நான் வாறன் வாடா , கார்ல  ஏத்திக்கொண்டு போய் இறக்கி விடுறேன் "

                           "   ஹ்ம்ம்,, நல்ல  ஐடியா  ஒரு பிரெண்டும் நிக்குறார் ,அவரையும் கொண்டுபோய் விடுடி "

                                 " யார்  அவர்,, உன் பழைய பிரென்ட்  யாருமா, தமிழா காருக்க இருந்து  டோயலட் பேப்பரை உருவின மாதிரி  உன் உறண்டல் பிடிச்ச  தமிழில் நீயும் அவனும் அவிச்சுக் கொட்டினால்  எனக்கு விசர் வரும் " 

                                 "  இப்பிடிதாண்டி  அவங்களும்  எங்களை  இலங்கையில் திட்டுவாங்கள் "

                           "  யார்  அவங்கள்  ,,என்ன சொல்லுறாய் "

                      " இல்லை புதிய பிரென்ட் , அவருக்குத்  தமிழ் தெரியாது, அவர் சிங்களவர்  அவரின் சிங்கள மொழிதான் இலங்கையின் ஆண்டுவ பாசாவை , தமிழ் கதைச்சால் பிடிக்காது  "

                        "   அதென்ன அப்படி  ஒரு சட்டம் அந்த நாட்டில்,,அந்தாளை கொண்டுவா நான் நாக்கைப்பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்கிறேன் "

                         "   ஆள்  இண்டைக்கு எங்களோடு வரப்போகுது "

                        " சொல்லு   யார் அது, யார் அந்த புதிய பிரென்ட்,,இங்கிலிஸ் கதைப்பானா. டொனால் டுக் காட்டூன் போல நீயும் அவனும் கதைச்சு என் காதைக் கிழிக்க வைக்காதே  "

                            "அவர்  ஒரு  சிங்கள பவுத்த பிக்கு , இங்கிலிஸ் நல்லாக் கதைக்க   அவருக்குத்தெரியும் போல இருக்கு , இங்கிலிஸ்ல தான் ஒஸ்லோ யூனிவேர்சிட்டியில்  படிக்கிறார் சிசில் "

                     " பவுத்த பிக்கு ,,ஞே ,,, அப்படி என்றால்  என்ன அர்த்தம், சொல்லு ,,என்ன அர்த்தம்  எனக்குப் புரிய முடியவில்லை   "

                          " அவர்கள்தான்  நான் பிறந்த நாட்டின் ராஜாதிராஜ பராக்கிரம அரசியல் கிங் மேக்கர்க்கர்கள் "

                         " அப்படியா,,அப்ப அந்தக்  கிங்கை கையோடு கொண்டுவா  நானும்   என்ன பராக்கிரமம்  அவர்களிடம்  இருக்கு  எண்டு  டெஸ்ட்  பண்ணிப் பார்கிறேன் "

                            " விடுடி ,,நீ இப்ப வாறியா கார்ல்பானாபிளஸ்  தே பானா ஸ்டேசன் இக்கு வெளிய "

                                 "   சரி வாறன்  "

                                   பவுத்த பிக்குவை  சிசிலியாவின் காரில  ஏற்றிக்கொண்டு போனோம். ஆனால் புத்தபிக்கு அன்றைக்கு லெக்சர் போகவில்லை, வரமாட்டேன் என்று எங்க காரில் இருந்து டெக்ஸ் அனுப்பினார் ,சிசிலியாவுக்கு பவுத்தபிக்குவின் உடுப்பே ஒரே  களேபரமாக இருந்தது . பிக்கு அவருக்குத் தெரிந்த உடைசல் பழைய சாமான் விக்கிற  பஞ்சிகாவத்தை உடைசல் போன்ற ஆங்கிலத்தில் சிசிலியாவோடு கதைத்துக்கொண்டு வந்தார், 

                                        நான் எல்லாப்  பாம்பும்  பின்னுக்கு  ஒருக்கா இழுத்துப்போட்டுத்தான்  விசப்பல்லை இறுக்கும்  என்பது போல  கேட்டுக்கொள்கிறேன் பேர்வழி எண்டு  சும்மா  இருந்தேன் , புத்த பிக்கு ஆங்கிலத்தில் சொல்ல முடியாத விசியங்கள சிங்களத்தில் சொன்னார் நான் அதை சிசிலியாவுக்கு நோர்ஸ்க்கில் மொழிபெயர்த்து சொன்னேன் , எனக்கும் நிறைய புத்த சமய தத்துவம் பற்றிய கேள்விகளுக்கு விடையும் சொன்னார். நேர்மையான மனிதர். சில விசியங்கள் தனக்குத் தெரியாது என்றும் சொன்னார். 

                                    ஆனால் அன்று இரவு சிசிலியாவின் வீட்டில  நல்ல தண்ணிப்பாட்டி போட்டோம், சிசிலியா  வைத்து இருந்த கோரப்ச்சேவ் வெட்கா போத்திலைத் திறந்து பவுத்தபிக்குவுக்கு ஒரு சொட் குடுத்த உடனே பிக்கு டக்கி டிக்கி டுஸ் என்று சரண்டர் ஆகிட்டார். ஒரு சொட் தான் சும்மா எங்களுக்காகக்காகவும் குளிருக்காகவும் குடித்தார் . வாழ்கையின் மிகப்பெரிய கொடுப்பினைகள்  சாதி  ,மதம்,மொழி, வரலாறு  ஏதுமில்லா மரண வெளியில் விரிந்து விடலாம் 

                                   பிறகு  சிசிலியா  அவளின் ஹன்னா மொன்டானா ஸ்டைலில் ஆட்டம் போடத் தொடங்கினாள் . அன்றுதான்  நான் எவளவு பித்தம் பிடித்த புக்கு என்றும்   அந்தப் பவுத்தப்பிக்கு எவளவு நல்ல மனிதர் என்றும் அவரின்  இன்னொரு மென்மையான, காமடியான, மனிதாபிமானப்  பக்கத்தைப் பார்க்க முடிந்தது , மன ஓசைகள் மணி அடித்த அன்றைய இரவு  சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் வரை சிரிச்சோம், 

                                 அதை  இன்னொரு கதையாக எழுதுகிறேன்  
.