Thursday, 21 December 2017

ஆதிக்கடவுளின் முதல்க் கட்டளை !

 " சுற்றிப் பார்க்க வந்த குழந்தைகள் இரண்டிரண்டாய் மஹால் தூணைக்  கட்டிப் பிடிக்கின்றன தொட்டுக்கொள்ளாத கைகளுக்கிடையே மௌனமாய் மொழி,  தேடிய வார்த்தையைப்  பூவாய்த் தரும் அகராதி ஏனையவற்றை வேராய் ஒளித்து வைக்கும் மொழி, " என்று அழகாகச் சொன்னார் கலாப்பிரியா . மொழியின் சித்து விளையாட்டு கைவரப்பெற்றவர் கலாப்பிரியா .

                                                                அவரின் கவிதைகள் ஒருகாலத்தில் விரும்பிப்படித்தவைகள்.    கசடதபற,  வானம்பாடி, கணையாழி, தீபம் , இலக்கிய இதழ்கள் கவிதைப் பசிக்கு தீனி போட்ட போது அவற்றில் சத்தமில்லாமல் மிக மிக ஆழமாக எழுதியவர்    கலாப்பிரியா. அவரது மொழி ஆளுமை பிரத்தியேகமாக  அபாரமானது. ஓரிரு  சாதாரண புழக்கத்தில் உள்ள  வார்த்தைகளை ஒன்றுடன் ஒன்று  சேர்த்து புதியதொரு மறை  பொருளைக் கொடுக்கும் அதிசயத்தை அவரது கவிதைகள் நிகழ்த்திக் காட்டின.

                                                                         முப்பது வருடங்களுக்கு முன் புதுக்கவிதை வர்ணஜாலம் காட்டி வானவில்லை வளைத்தபோது மிக மிக எளிமையான   தமிழில் எழுதிய  முக்கியமான கவிஞ்சர் கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். ஒரு வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டு இருந்த போது  அவர் எழுதிய கவிதைப்புத்தகங்கள்  அனிச்சம், எல்லாம் கலந்த காற்று, தண்ணீர்ச் சிறகுகள், தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி, சொந்த ஊர் மழை, பனிக்கால ஊஞ்சல், இன்றைவரை வேராய் ஒளித்து வைக்கும் மொழியில்  நடுகல் போலத்தான்  இருக்கு.

                                                 மொழியை வளைக்கிறேன் பேர்வழி என்று நானும்  கொடுக்கு வரிஞ்சு கட்டிக்கொண்டு கவிதைகள் போல நிறைய எழுதுறது. என்னோட புரிதல் அளவுக்கே தமிழ் மொழி எனக்கு நெருக்கமாக இருக்கு. பல வருடங்கள் தமிழ் மொழி நான் எழுதும்போது மட்டுமே என்னுடன் இருக்கு. மற்ற நேரமெல்லாம் நோர்க்ஸ்க், சுவிடீஷ், என்ற ஸ்கண்டிநேவிய மொழிகளே என்னுடைய அன்றாட பாவனை. இப்போதும் அப்படிதான் இருக்கு.விலதிப் போக இப்போது  வேறு வழிகள் இல்லை.
.
                                                                  இதில்  முகநூலில் கிறுக்கிய  ஒரு சில கவிதைகளே பகிர்ந்துள்ளேன்.. இன்னும் நிறையவே எழுதியவை உள்ளன  கொஞ்சம் கொஞ்சமாக  தொடர்ந்தும் பகிர்கிறேன் .
.    
.......................................................................
.
அந்தப் பறவை 
ஐந்து நாட்களாய் அப்படியேதான் 
அகலவிரிந்து மல்லாந்திய 
அதன் கண்களில் 
தூரநோக்கும் தீர்க்கதரிசனம் 

இப்ப அதனாலென்ன வரப்போகுது
பறவைதானே மொத்தமாக இறந்து போயிருக்கே

ஆறாவது நாளாவது
யாராவது அகற்றுவார்களென எதிர்ப்பார்க்க
அதுவும் நடக்கவில்லை .

பறவை கால் ரெண்டையும்
தாழம்பூப்போல விரித்து
முதுகடிபட மல்லாந்து கிடந்தது
சாதித்தே காட்டுவதுபோல
அதன் சிறகுகள் இரண்டும் விரிந்தபடியே

இதயத் துடிப்பின் இறுதி அடிப்பிலும்
அது
சிறகுகளை அடித்து உந்திப்பறப்பதையே
முயட்சித்து இருக்கலாம்

ஒரு பறவையால்
வேறென்னதான் நினைக்கமுடியும் !

.
....................................................................
.
குறுக்குவழிகளைப் 
பகுத்தறியும் ஐந்தாம் அறிவு 
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் 
அர்த்தமிழக்கும் கடவுள் 


சமயங்களில் 
புரியமுடியாத வாழ்க்கை

சொந்த மூளையை
இந்த இரண்டுக்குமிடையில்
சொருகிவைக்க முடியாத
சந்தோஷமிழந்த மனிதன்

அவன்தான்
படைப்பின் உச்சக்கட்டமாம் !

.
...............................................................
.
முதன்முதல் ஜனிப்பு 
வசீகரம் தரும் குறுகுறுப்பு
மென்னொலியலை எதிரொலி 
அசைவுகளில் உறுதிபடுத்தப்படும் 
பெண் குழந்தை.

ஆயிரம் சரவெடிகளோடு
அலைகள் ததும்ப
அவன் துள்ளிக்குதிக்கிறான் !

ஒரு குஞ்சரத்தொட்டில்
ஒரு சோடி சின்னக்கைவளையல்
ஒரு சோடிச் சப்பாத்து
ஒரு பால் புட்டில்
ஒரு சிறிய சைக்கிள்
ஒரு டசின் ஓடிக்கொலோன்
ஒரு டசின் பொன்ஸ் பவுடர்
அந்த ஒருநொடி நிமிடத்தில் பட்டியலிடுகிறான்

சரியாகக் கவனியுங்கள்

அவள்
அந்தச் பூக்கோலப் பூரிப்புச் செய்தியில்
மடிவயிற்றில் விரல் கோதி
வலிகளுக்குத் தயாராகி
துளிர்க்கும் கண்ணீரின் கருணை
பனி இறுகும் நன்றியோடு
தன்
அம்மாவை நினைக்கிறாள் !

.
.................................................................................................
.
யார் மனதோ இளகியது 
உள்ளங்கை நிறைய 
அள்ளிக் கொடுத்த வெள்ளிச் சில்லறைகள் 

இறுக்கிப் பொத்தி 
குலுக்கிச் சிரித்து 
உலகத்தை வேண்டிய சந்தோஷத்தை
படுத்துறங்கும் தெருவோரத்தில்
பகிர்ந்துகொள்கிறான்
பிச்சைக்காரன்

.
...................................................................
.
இறுக்கமான முடிவுகளோடு 
இந்த வார்த்தைகளுக்குள்
நீங்கள் 
எவ்வளவு முயன்றும் 
என்னைச் சந்திக்கப்போவதில்லை, 

வேறுவிதமாகச் சொல்வதானால்
எளிதாகப்
படிந்துபோகும் படிமங்களை
உதறியெறிந்த
சம்பவமே நடந்தேறி
மிகப் பல வருடமாகிவிட்டது,

ஆதலினால்
நம்பகமான புறச்சூழலிலும்
மிகைபடுத்தாத உணர்ச்சிகளிலும்
ஒரு இழவுவீட்டின்
மவுனம் போலவே மொழியிருக்கலாம்,

ஆனால்
நம்பவேமாட்டீர்கள்
வெளியே
பல மைல்களுக்குப்பால்
காற்றோடடமானவொரு புள்ளியில்
நானிருக்கிறேன் !

.
.........................................................................
.
காமப்பசியடக்கும் இச்சைக்கு 
அடிபணியவைக்க 
ஏவாள் கொடுத்த அறிவுக்கனியை 
ஆடாம் புசித்தான் 
சாவில்லாத பூமியொன்றை 
வடிவமைக்க வெளிக்கிட்ட ஆதிக்கடவுளின்
முதல்க் கட்டளையை
சில நாட்கள் மட்டுமே
கடைப்பிடிக்க முடிந்திருக்கு
உலகத்தின் முதல் ஆணுக்கு.

.
...................................................................
.
என் 
காலடியில்க் கால்வாய்ப்போல 
மண்ணை அரிக்கும் மழை ,
வெண்சாம்பல் நிறத்தில் 
புழுதியைக் கரைத்தோடிக்கொண்டே 
சிறுகச்சிறுக நிறம்மாறுகிறது ,

வாசனை அருவருப்பையும்
தலைநனைவையும் கணக்கிலெடுக்காத
தாமதமில்லாக் கால்கள்
தப்படிகளை எட்டிப்பிடித்துத் துரத்துகின்றன,

அந்தப் பெண்ணின்
சப்பாத்துக்கால்கள் நெருங்க
பாதையொதுங்கி வழிவிடுகிறேன்,

தூறல் சகாயமாகும் போது
மேட்கொண்டு
பாதையின் திசையை
இழுத்துமுடிக்கிறது இருட்டு,

தாழிடப்படாத கதவுக்குள்
அவள் நுழைந்து திரும்பிப்பார்க்கிறாள்,

நான்
நிண்டுகொண்டிருப்பதைக் கவனிக்காமல்
சோரம்போகிறது நேரம்,

அவள் முகம்
ஞாபகப்புலத்தில் ஒட்டிக்கொண்ட
பழைய சம்பவம் போலிருக்கு ,

அவள் கைவளையல்கள்
சட்டென்று மோதிக்கொள்கிறது,

அக்கினிராத்திரியைக் குளிர்விக்க
நுட்பமான ஏட்பாடுகளுடன் தயாராகுது
மறுபடியும் மழை !

.
................................................................
.
தலையை நகர்த்தாமல் 
விரல்களில் சுழியோடியபடி 
இணையவெளி அதிசயத்தில் அப்பா 


இணைப்பில்லா அலைகளில் ஒன்றிப்போய் 
தொலை பேசியபடி அம்மா 

கைவிடப்பட்ட ஓரமாக
தலைமுறையில் தப்பித்பிறந்த
குட்டிப் பையன்
" அலைஸ் இன் வோண்டர்லாண்ட் "
புத்தகம் வாசிக்கிறான்!

.
........................................................................
.
மைதாநிறத்தைத் தக்கவைக்க 
வெயில்தவிர்த்துக் குடைபிடித்து 
நிழலோடு நடக்கிறாள் 
பேர் அண்ட் லவ்லி பூசிய 
தமிழணங்கு..

நானும்
அங்கிருந்துதான் வந்தேன்....!

உடை களைந்து
அரை நிர்வாணமாய்
சூரியக் கழிம்பு தடவி
புல்வெளி நிலம் பரவி
துருவ வெய்யில் குளித்து
தவிட்டுப் பழுப்பு நிறம் தேடுகிறாள்
வெள்ளணங்கு...

நான்
இங்கிருந்தும்தான் மாறவில்லை !

ஆதவனின்
நிறப்பிரிகைகளின்
குறியீடுகளில் தேகநலன்களேயிருக்கு
சுயநலன்கள்
இல்லவேயில்லை !

.
.............................................................................
.
சின்னப் பூனைக்குட்டி 
நிலைக்கண்ணாடி விம்பத்தில் 
மருண்டுபோய் வெருண்டு 
நிலையெடுக்குது ,

அதன் 
மயிர்ரோமங்கள் சிலிர்த்துக்கொள்ள
விரல் நகங்களைத்
தாக்குதலுக்குத் தாயாராக்குது

ஊப்ப்ப்ப்ப்ப்பப்ஸ்ஸ்ஸ்ஸ்

முதல் பாய்ச்சலில்
ரெண்டு பூனைக்குட்டிகளுக்கும்
ஒரேமாதிரியான நெத்தியடி !

ரெண்டாவது சண்டைக்கு
அருகிலிருந்தே கறுவிக்கொண்டு எகிறியது

அதிலும்
ரெண்டு பூனைக்குட்டிகளுக்கும்
புருவங்களில் ரத்தம்வருமளவு சிராய்ப்பு,

மூன்றாவது
முன்னோக்கிப் பாய்தலை
முட்டிமோதல் தவிர்க்கும் முன்னேட்பாடுகளுடன்
தீவிரமாகத் திட்டமிடுகிறது.....

நிலைக்கண்ணாடி நினைத்தால்
ஐந்தாவது பகுத்தறிவை
பூனைக்குக்குட்டிக்கும் விளங்கப்படுத்தலாம்
அதைச் செய்யாமல்
வேடிக்கை பார்த்து
விளையாட்டுக் காட்டுது !

.
............................................................................
.
இரண்டாவதுமுறையும் 
இறப்பதை வெறுப்பதற்காய் 
இருவது வருடங்களின் முன்னமே
ஒரு 
வேப்பமர நிழலில் 
ஆத்ம(ம)ரணமில்லாமல்
என்னிலிருந்த
என்னையே வெளியேற்றிவிட்டேன்,

அப்போது
காஞ்சோண்டிச் செடியை
முதுகெல்லாம் உரசிய அரிப்பு போலிருந்தது,

மேட்குறிப்பிட்ட
தருணத்தில் மட்டுமே
பிறப்புக்கும் இறப்புக்குமிடையில்
பரஸ்பர புரிந்துணவை உணர்ந்தேன்

அவளவுதான் பிரமை !
வேறொன்றுமில்லை!

நீங்கள்
இப்போது முன் பார்த்துப்
பின் முகம் சுளிப்பதெல்லாம்
சமாந்தரப் பிரபஞ்சத்தில்
சலனமின்றி நடனமாடும்
என்
அசல் மூலப் பதிப்பொன்றில்
அச்சடிக்கப்பட்ட பிரதி மட்டுமே !

.
..........................................................................
.
துப்பட்டாவால்
அள்ளி ஒதுக்கி மறைத்த
விரிசடைக் கூந்தலை
முட்டாக்கு அமிழ்த்திவிடுகிறது.

எல்லைக்குட்பட்ட வரம்புகளை 
நிறைவுசெய்கிறது
குதிக்கால் பாதத்திலிருந்து
அங்கமெல்லாம் கச்சிதமான உருமறைப்பு.

பின் முதுகு ஏற்றத்துக்கும்
பிடரிமயிர் இடரும்
வெண்சங்குக் கழுத்துக்குமிடையில்
பதினோன்றாம் பிறைபோல
பஞ்சாபிச் சல்வாரின்
வளைவெட்டு
சின்னதானவொரு
வெளியிடைவெளி.......

தப்பிவிடுகிற
கலவரமான அந்த இடத்தில்
வெறுமனையே
ஒரு நொடி
பார்ப்பதைவிடவும்
நினைவோடையில்க்
கையளைவது போல
பிரத்யேக வாசங்களைச் சுவாசித்து
அசைபோட்டு அலைவுறுதலே
போதையேற்ற.........

ல்லாக் கட்பனைகளையும்
அவிழ்த்துக் கொண்டெழுப்பவைக்கிறது
அம்சலேக அன்னபட்சியின்
வெள்ளை நிறம் !

.
.................................................................................
.
உள்ளாடை விளம்பரத்தில் 
அந்த அழகிப் பெண் 
காண்டீப வில்போல வளைகிறாள் !


ஜவ்வன நெளிவுகளும் 
அம்சமான விம்முப்பிகளும் 
பொம்மிய தசைப்பிடிப்புகளும்
கேந்திரகணிதத்தின்
முகை அவிழ்க்கும் சமன்பாடுகள்,

எதட்காக
செங்காந்தமலர்கள் விரியும் கண்களில்
படுக்கையறைக் கதவுகளைத் திறக்கிறாள் ?

எனக்குப் புரியவில்லை
ஆனால்
பார்த்துக்கொண்டேயிருக்கிறேன் !

ஒரு பெண்ணின்
மிகக்கடைசியான ஆடைகளில்
நாகரீகமான பாதுகாப்பும்
இதமான சவுகரியமும்
நவரச நளினங்களும் இருந்திட்டுப் போகட்டும் .

ஆனால்
அவள் மழைவாழை தண்டின் வாளிப்பில்
வழிமொழிந்து வரவேட்கும்
ஆதிமொழியொன்றில்
அளவெடுத்துப் படைத்த பிரம்மன்
அகத்திலும் புறத்திலும்
தமிழ்ச் சங்கத்தையே ஏமாற்றிவிடுகிறான் !

.
.......................................................................................
..
அந்த ஓய்வூதியர் 
சாதாரணமாகவே கடந்துபோய்விட்ட 
சாகசமற்ற வாழ்க்கையை
அர்த்தப்படுத்தமுடியாதவைக்கு 
ஒப்புக்கொடுத்த இயலாமையில் 
வெட்டுக்கிளிகள் விரிந்து
பறக்கின்ற புல்வெளி
மரவாங்கில் சரிந்திருக்கிறார்

ஒளிர்ந்துகொண்டும் சிதைந்துகொண்டும்
சிதறியபடி கோடை வெய்யில் ,

உணர்வுகள் துடிக்கிற
முக்கியமானவொரு சம்பவம்
கண்களை ஆழப்படுத்திவிடுகிறது

அது
அவர் மனைவி இறந்ததாக இருக்கலாம்
அல்லது
பிள்ளைகள் கைவிட்டதாக இருக்கலாம்
வெறுமனே சலிப்பேற்றக் கூடிய
சராசரி சமாதானங்கள் அதில் இல்லை !

வாழ்வு
தொடக்கம் போலவே
தனிமையில் முடிந்துவிடுகிறது எனும்
அதீத நம்பிக்கை
ஓயும் நிமிடத்துக்குக் காத்திருக்க
எதிர்நோக்கிச் சொரிந்து
இறங்கிக்கொண்டிருக்கும் மழை போலவே
சேற்றுப் பாதையெங்கும்
வெள்ளம் ஓடிச்சென்ற தடங்களும்
அவருக்கு
அவசியமானதாயிருக்கலாம்!

.
....................................................................................
.

This  pics was taken by Ponnudurai Raveendran, my mom side realation, lives in Oman, Thanks Ravi Annan,