Sunday, 6 December 2015

ஜுலிய சீசர்

அலாதியான காலங்கள் என்பது என்ன எண்டு சொல்ல வேண்டுமெண்றால், அந்தக் காலத்தில் நடந்த சம்பவங்கள் தந்த இன்பமான நினைவுகள் நம்மை அறியாமலேயே  இன்னுமொருமுறை  இழுத்து எடுக்கும். அதன் கோலங்கள் சில நேரம் அலங்கோலங்களாக அந்த நேரம் இருந்தது போலிருந்தாலும் இப்ப நினைக்கும்போதும்   எங்கள் ஊர் வாசிகசாலை மேடையில் அது அலாதியாகத்தான் இருந்தது.

                                                ஜுலிய சீசர் நாடகத்தில் கிளியோபற்றாவா பொம்பிளை வேஷம் போட்டு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததும்,  அந்த நாடகத்தில் பொம்பிளை வேஷம் போட்டுக்கொண்டு, மேடையை விட்டு இறங்கி மூத்திரம் பெய்யப்  போன நேரம் ஒரு ரோட்சைட் ரோமியாவால் இருட்டில் கடத்தப்பட்டுக் கற்பழிக்கப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவம் நடந்த  ஜுலிய சீசர் நாடகத்தில் எனக்கு நடந்த நாடகத்தின் கதை தான் இது 

                                                கவிஞ்சர் கந்தப்பு எங்களின் ஊர் வாசிகசாலையின் ஆண்டு விழாவில் சிறப்பு நிகழ்வாக  ஜுலிய சீசர் நாடகம் போடப்போறதாக சொல்லிக்கொண்டு இருந்த நேரமே அவர் வில்லியம் சேக்ஸ்பியர் எழுதிய  அந்த ஆங்கில நாடகத்தைத் அழகுத் தமிழில் மொழிபெயர்த்து வசனங்கள்  எழுதி முடித்து அதில் நடிக்க வேண்டியவர்களையும் தெரிவுசெய்து விட்டதாகத்தான் கதை அடிப்பட்டது. கந்தப்பு இயக்கி,அவரே அதில மார்க் அந்தோனி வேஷம் போட்டு நடித்தார் .

                                    அந்த ஆங்கில நாடகத்தில் வரும் பல உரையாடல்களை எங்கள் ஊரில இருந்த ரிட்டையட் கவர்மென்ட் செர்வன்ட் பெட்டிசம் பாலசிங்கம்தான் கந்தபுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தார். பெட்டிசம் இங்கிலிஸ் தல காரணமா பேசுவார்,வாசிப்பார்,எழுதுவார். ஆனால் பெட்டிசம் " படிப்பறிவு இல்லாதுகள் கூ த்துப் போடுதுகள் " என்று சொல்லி வாசிகசாலைப் பக்கமே வரமாட்டார். அதைவிட வாசிகசாலை வெளி மண்டபம் கட்டினதில ஊழல் நடந்தது என்று முனிசிப்பல் கொமிசனருக்கு  பெட்டிசம் எழுதினதால் அவருக்கு பலர் எதிர்ப்பு. அதனால் என்ன ஒருவரின் அறிவு மற்றவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில பயன்படுவதே பெரிய விசியம் தானே 

                                            என்ன காரணமோ தெரியவில்லை அதில கிளியோபாட்ராவாக பொம்பிளை வேடம் போட்டு நடிக்க அவர் தெரிவு செய்த அரிச்சந்திர மயான காண்டம்  நாடகத்தில் சந்திரமதியாக  பொம்புளை வேஷம் போடும் அனுபவம் உள்ள  அந்த  நடிகர் கடைசி நேரத்தில் வரவில்லை. அதால கவிஞ்சர் கந்தப்பு வாசிகசாலை வாசலில் உருப்படியாக எதுவுமே செய்யாமல் சும்மா கைபார் அடிச்சுக்கொண்டு இருந்த எங்களின் குருப்பில்  இருந்து என்னை தெரிந்தெடுத்து நடிக்கப் வாறியா என்று கேட்டார். 

                                             நான் ஏற்கனவே அவர் போட்ட சீதையின் சுயம்வரம் நாடகத்தில் வில்லை உடைக்கவரும் பன்னிரண்டு ராஜாக்களில் ஒருவனாக நடித்து நான் செய்த குரங்குவேலைக்  குளறுபடியால் நாடகத்தின்  இடையிலேயே  மேடையில் இருந்து இறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவன் .அது தெரிந்துகொண்டும் ஏன் என்னைக் கேட்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது, அதைவிட நானே   குரங்குவேலைக்  குளறுபடிகளில் இருந்து திருந்தாமல் பழையமாதிரித் தான் இருந்தேன்.

                       " எனக்கு நாடகத்தில் ஒழுங்கா நடிக்கத் தெரியாது,,அதைவிட பொம்புளை வேஷம் எண்டு சொல்லுரிங்க,,நடிப்பனா எண்டு குழப்பமா இருக்கே அய்யா,,பிறகு என்னவும் பிசகினால் என்ன செய்யிறது ,வேறயாரையும் போடுங்களேன் "

                                 " அரியநாயகம் கடைசி நேரத்தில சின்னமுத்து அள்ளிப்போட்டதால சுகமில்லை என்று வரமாட்டான் என்று சொல்லிப்போட்டான் அதுதான் உன்னைப் போட்டு நாடகத்தை ஒப்பேற்றப் போறேன் "

                                "  நான் வேஷம் போட்டா பொம்புளை போல  இருப்பனா எண்டு எப்படி சொல்லுரிங்க "

                                    "  உனக்குப் பொருந்தும்,,உயரமா,,மெல்லிசா இருகிறாய்,,முகத்தில ஒரு சரஸ்வதிக்களை  இருக்கு,,அதை வைச்சே கதையோட கொண்டுபோகலாம் "

                                   " எனக்குப் பயமா இருக்கு "

                                   " டேய்  எருமைமாடு, அஞ்சினர்குச் சதா மரணம்  அஞ்சா நெஞ்சத்து  ஆடவர்க்கு  ஒரு மரணமடா "

                                         " இதென்ன  அய்யா "

                                  " டேய் ,,இதுவும்  ஜுலிய சீசர்  சொல்லும்  வசனமடா "

                                    " ஜுலிய சீசர்,, பெரிய  ஆள்..அவர்  இதுபோல  என்னவும்  சொல்லுவார்,,நான்  அப்படி  இல்லையே  அய்யா "

                             " டேய்  பொம்புளை வேஷம் போட முதலே பெண்டுகள் போல பயமாயிருக்கு அது இது  பிரகண்டம் போல கதைக்குறாய் அதொண்டும் நடக்காது,,நான் பழக்கி எடுப்பேன் "

                      " ஹ்ம்ம், பொம்புளை போலவே நடிப்பு வருமா எண்டு பயமா இருக்கு அய்யா "

                             " டேய் பொம்புளை வேஷம் போட்டாலே நடிப்பு தானா வருமடா,,அதில  உனக்கு வசனமும் பேசுறதுக்கு அதிகம் இருக்காது "
                         
                              " பிறகு என்ன அதில எனக்கு நடிக்க இருக்கப்போகுது "

                             " டேய்,,அக்க்ஷன்,,,அக்க்ஷன்,,இல நடிக்க வேண்டும் ,பொம்புளை வேஷம் போட்டாலே அக்க்ஷன் தானா வருமடா,,பெண்டுகளைப் பார் எப்படி அக்க்ஷன் போடுராளுகள் எண்டு ,அது நீ நடிப்பாய் ,,நான் சொல்லித்தாறன் "

                              " ஒரு கொண்டிசன்,   அம்மாவுக்கு சொல்லக்கூடாது ,,அவா பொம்பிளை வேஷம் போட்டா கட்டாயம் வீட்டில வெட்டுக் குத்து  எண்டு சண்டை எடுத்துக் குழம்புவா என்னோட "

                         "  ஏன் கொம்மாவுக்கு என்ன விசரே..இது நாடகம் தானே ,,சரி.    இல்லை,,நான் சொல்ல மாட்டேன்,,நீ வா ,,நான் பழக்கி எடுக்கிறேன் "

                                " ஹ்ம்ம், பார்க்கலாம் "

                              " என்ன பார்க்கலாம் , உனக்கு ஒரு அருமையான கட்டம் அதில வரும்,சீசர் கொலப்பட்ட நேரம்,நீ அவர் நெஞ்சில விழுந்து ,உன்னோட மார்ப்பில் அடிச்சு ஒப்பாரி வைச்சு அழ வேண்டும் ,,அதை மட்டும் சரியா செய்தி என்டா நாடகம் சக்சஸ் ,,என்னைப் பொறுத்தவரை சக்சஸ்,"

                             " எனக்கு எங்க மார்பு  இருக்கு,,அதை எப்படி கொண்டுவரப் போறீங்க "

                                 "   பணகாய்ப் பினாட்டுப் ஒட்டின பாயைச் எலி சுரண்டினமாதிரி அக்குவேறு ஆணிவேறாக இப்பவே  கேள்வி கேட்டுக்  கொல்லுறியே "

                                  "  மிக முக்கியமான  கேள்வியத்தானே  கேட்குறேன் ,"

                                    " அட பேந்தும்பார்,, அதுக்கு என்னட்ட ஒரு டெக்னிக் இருக்கு ,,தேங்காய்சிரட்டை ,,அதை வைச்சு உனக்கு ரெண்டு எடுப்பான மார்பகம் கொண்டு வாறன் ,சும்மா விழல்க்  கதையை விட்டுப்போட்டு நீ நடிக்கிறாய்,,அவளவுதான்,,

                                         "  சரி முயற்சித்துப் பார்க்கிறேன், "

                                      " நாசமறுப்பு  ... உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்!  என்று ஒரு வசனம் சீசர் சொல்லுற மாதிரி இந்த நாடகத்தில வருகுது  அதுபோல தான் இருக்கு நீ சொல்லுறது  "


                                          " உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! "... இப்பிடிச் சொல்லித்தான் கவிஞ்சர் கந்தப்பு என்னை கிளியோபாட்ரா ஆக்கினார் . ஆனால் அந்த தேங்காய் சிரட்டையால் எனக்கு டெக்னிகலாப் பிரச்சினை வருமெண்டு எனக்கும் அப்ப தெரியாது. அது கவிஞ்சர் கந்தப்புக்கும் தெரிய வாய்ப்பில்லைதான்.

                                       அந்த நாடகத்தை வாசிகசாலை லைபிறேரி அறையில் ஒரு கிழமை வைச்சுப்  பழகினார் . அதில்  ஒரு கிழமையில் நாலு நாள் தான் நான்  ஒத்திகை பார்க்கப் போனேன் . எனக்கு அந்த இளவயது நேரம் சிமெந்து சுவரில கரிக்கட்டையால கீறின மாதிரி சின்ன மீசை இருந்தது, கந்தப்பு ஒருநாள்க்  கூத்துக்கு மீசையை எடுத்தவன் போல அதை மழிச்சு வழிக்கச் சொன்னார். புண்ணியக்குஞ்சியும் வந்து நின்று சுருட்டைப் பத்திக்கொண்டு விடுப்புப் பார்ப்பார் .அவர்தான் எல்லா நாடகத்துக்கும் மேடையில் திரைச்சீலை இழுப்பது. அவரை அதுக்கு விட்டாட்டி பிறகு எந்த நாடகமுமே மேடை ஏறாது.

                                  " இந்த நாடகம் நல்லா வரும் போல இருக்கே, என்ன நாடகம் போட்டாலும் நான் தானே தொடக்கி இழுக்கிறதும்,,முடிச்சு வைக்க இழுக்கிறதும், கொம்மாவுக்கு தெரியுமே நீ பொம்புளை வேஷம் போடுறது ,உனக்கு நல்ல கலாதியா தானே இருக்கு "

                                 "  இல்லை  சித்தப்பு ,,அம்மாவுக்கு மட்டும் இப்ப சொல்லிப்போடாதையுங்கோ ,,பிறகு பிரச்சினை வரும் "

                                  "   அதெல்லாம்,,ஒண்டும் வராது , கந்தப்பு என்ன லேசுப்பட்ட ஆளே, இருந்து பாரன் நாடகத்தில்  சீனடி சிலம்படி விளையாட்டை "

                                  என்று சொன்னார் புண்ணியக் குஞ்சி. ஆனால் புண்ணியக் குஞ்சியும் ஒரு லேசுப்பட்ட ஆள் இல்லை , திருவிளையாடல் தருமி போல அந்தாளும் எப்பவும் ஒரு குரளி வித்தை பொறுத்த நேரத்தில காட்டுவார். இந்த நாடகத்தில் என்ன செய்யப் பிளான் போடுறார் என்று மட்டுப் பிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு சம்பவம் சொல்லுறேன் புண்ணியக் குஞ்சி எப்படி அவரோட குசும்பை சரியான நேரத்தில்  குத்திவிடுவார் என்று

                                     கவிஞ்சர் கந்தப்பு " விதியா சதியா " என்று ஒரு சமுதாய விழிப்புணர்வு நாடகம் போட்டார். அந்த நாடகத்துக்கும் புண்ணியக் குஞ்சி தான் ஒவ்வொரு சீன் தொடங்கும்போதும்,முடியும் போதும் திரைச்சீலை இழுத்தார். அந்த நாடகமே ஒரு அழுது வடியும் நாய்க்கு வாயில சவ்வு மாட்டின மாதிரி  மாதிரி இழுவை நாடகம்.  அந்த நாடகத்தில் கவிஞ்சர் கந்தப்பு ஒரு வயதான அப்பா, அவரோட மகளுக்குக் கலியாணம் நடக்காமல் அந்தப் பெண் முதிர்கன்னியாக வாழ்வதுதான் அந்த நாடகம் , கலியாணம் ஏன் நடக்கத் தடையாக இருக்கு என்ற காரணம் அதில வெளிப்படையாக சொல்லப்படமாட்டாது .

                                           புண்ணியக் குஞ்சிக்கு அந்த நாடகமே பிடிக்கவில்லை, அந்தப் பெண்ணுக்கு கலியாணம் ஏன் நடக்கத் தடையாக இருக்கு என்ற காரணம்  அவர் மனடையைக் குடைஞ்சு கொண்டு இருந்து இருக்கு. அதால  வெறுப்பா திரைச்சீலை இழுக்கிற கயிறைப் பிடிச்சுக்கொண்டு நிண்டார்.   அந்த நாடகத்தில் ஒரு உரையாடல் வரும், கவிஞ்சர் கந்தப்பு அவர் வீட்டுக்கு தேடிவரும் புரோக்கர் பொன்னம்பலம் என்னத்துக்கு உங்களின் மகளுக்கு இன்னும் கலியாணம் நடக்கவில்லை என்று கேட்பார்

                                " அது ஒரு பெரீய கதை, கண்டியளோ ,புரோக்கர் .அது ஒரு பெரீய கதை.....அது ஒரு பெரீய கதை ..."

                          என்று பெரு மூச்சு விட்டுச் சொல்லுவார் வயதான கிழவன் வேஷம் போட்டு நடிக்கும் கந்தப்பு  மேடையில் . புண்ணியக்குஞ்சி இந்த இடத்தில உஷார் ஆகி

                               " கந்தப்பு, அந்தப்  பெரீய கதையை,  அது ஒரு பெரீய கதை எண்ட பினாத்தலை விட்டுப் போட்டு , அந்தப் பெரீய கதையை முதல் சொல்லும் காணும், அதாவது கொஞ்சம் சுவாரசியமா இருக்கா எண்டு பார்ப்பம் "
                           
                         அதுக்கும்  கந்தப்பு ,   " அது ஒரு  பெரீய கதையை,  அது ஒரு பெரீய கதை , " என்று சொல்ல புண்ணியக்குஞ்சி விடவில்லை

                              "  பெரிய கதை  என்றால், கொஞ்சம் கொஞ்சமா பாட் பாட்டாப்  பிரிச்சு சொல்லும்  காணும் , மூளையைக் கசக்கிப்பிழிந்து குத்திமுறிஞ்சு கோழிக்காலை எறிஞ்சு மாடு திருடுவதுபோல இந்த  நாடகம்  போகுதே ,,எனக்கு ஒரு அறுப்பும்  விளங்குதில்லை , கண்டியளோ கந்தப்பு "
                                   
                                         என்று சொன்னார்.நல்ல காலம் அது மேடைக்குக் கீழே இருந்து பார்த்த சனங்களுக்கு கேட்கவில்லை. கந்தப்புக்கு அது நல்லாக் கேட்டது .அவர் கறுவிக் கொண்டு அந்த நாடகத்தில் அதுக்குப் பிறகு நடித்துக்கொண்டிருந்தார்.நடித்து முடிய இறங்கி வந்து புண்ணியக்குஞ்சியக் பார்த்து

                       " கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் பாட்டில  வாறது  போல  நீரே  என்னில  பிழை பிடிகிறது  புண்ணியமூர்த்தி  கதை பேச்சு அளவோட  இருக்க வேணும்,, "

                                   " உதென்ன  பாட்டு  கவிஞ்சர்  கந்தப்பு,,சும்மா அதை இதை சொல்லி மழுப்பக்கூடாது கண்டியளோ "

                              " புண்ணியமூர்த்தி ..  சங்கைக் கீறு கீறு என்று அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா எனது பாடலில் குற்றம் காணத்தக்கவன் என்று அந்த திருவிளையாடல் புராணத்தில்  வருமே  அதுபோல .புண்ணியமூர்த்தி  கதை பேச்சு அளவோட  இருக்க வேணும்,,."

                               "  ஓ,,உது  விளக்கம் இன்னும்  பெரிய  கிடாரம்  போல இருக்கே "

                                     "  புண்ணியமூர்த்தி  கதை பேச்சு அளவோட  இருக்க வேணும்,,இந்தக்  கிரந்தம் விடுறதை  என்னோட வைசுக்கொள்ள வேண்டாம்,சொல்லிப்போட்டன் "

                                         " பின்ன  என்ன பூசாரி  உடுக்கு அடிக்க அடிக்க  உரு  ஏறாத  சக்களத்தி  போல  விசர் நாடகத்தை  வைச்சு  இழுத்தா,,மனுஷருக்குக்  அண்டம் குண்டமெல்லாம் பத்திக்கொண்டு கொதி வரும்தானே கண்டியளே "

                                           " அதுக்காக  நாடகம் நடக்கும்போதே எல்லாம் குறுக்க விழுந்து சொல்லிக்கொண்டு இருக்க முடியாது       புண்ணியமூர்த்தி, இதோட  கதையை விடவேணும்  இனி  விளக்கம் சொல்ல என்னால முடியாது "

                                              அந்த   வில்லியம் சேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் வாற  கிளியோபாட்ரா எப்படி இருந்தாள் என்று எனக்குத் தெரியாது. கந்தப்புக்கு தெரிந்து இருக்காலம் அதனால் அவள்  போல வேடம் போட " ஜேசுவின் பாடுகள் " , " பாலன் பிறப்பு  " போன்ற கிறிஸ்தவ நாடகம் போடும் அவரின் கலாமன்றக் கலையுலக நண்பர்களிடமிருந்து  ஒரு நீண்ட கறுப்பு நீளங்கி உடுப்பும், சடை வைச்சால் அடங்க மறுத்து திமிறிக்கொண்டு நிக்கும் கொண்டையும் ஒரு நாள் எடுத்துக்கொண்டு வந்து எனக்குப் போட்டுப்  பார்த்தார். நீண்ட கறுப்பு நீளங்கி உடுப்பிலையும் ,அந்தக் கொண்டையிலும் நிறைய மேடைகளை அது கண்ட அடையாளங்கள்  வியர்வை வாசத்தோடு இருந்தது 

                                                ஆனால் ஒரு பெண்ணாக உருவம் கொடுப்பதுக்கு முதல் மார்பகம் அவசியம். அதைத் தவிர்த்து யாருமே பெண்ணாக மாற முடியாத ஜதார்த்தம் இருக்க கொஞ்சமாவது நெஞ்சு விம்மிக் கொண்டு நிக்கவேண்டுமே அதுக்கு என்ன செய்யப் போறார் என்று குழப்பமா இருந்தது ,கடைசி ஒத்திகை நாள் பெண்கள் மேலே போடும் ஒரு பிளவுசும் ரெண்டு தேங்காய்ச் சிரட்டையும் கொண்டு வந்தார் கவிஞ்சர் கந்தப்பு. அதைப் பார்க்க நெஞ்சு பக்குப் பக்கு எண்டு அடிக்கத் தொடங்கியது 

                                " இந்த பிளவுசை முதல் போடு,,பிறகு ரெண்டு சிரட்டையும் உள்ளுக்க தள்ளு,,இப்ப  நான் பார்க்க வேண்டும் இடுப்புக்கு மேலே என்னமாதிரி உன் தோற்றம் கிளியோபாட்ராவுக்கு  பொருந்துது எண்டு, "

                                  என்று சொன்னார்,அவர் சொன்ன மாதிரியே செய்தேன் ,ஆனால் சிரட்டை ரெண்டும் பிளவுஸ் அமத்தின அமத்தில நெஞ்சில வெட்ட நோகத் தொடங்கியது. அதை சொல்லவும் பயமா இருந்தது,பிறகு அதுக்கும் சேக்ஸ்பியரில் இருந்து கந்தப்பு வசனம் எடுத்து விடுவாரோ என்று குழப்பமா இருந்தது.  இவளவு வரைக்கும் வந்தாச்சு இனி " வந்தாப் வா போனாப் போ கெலிம்பாற பிட்டக் கொட்டுவை " எண்டு நினைச்சு 

                                 "  பிளவுஸ் சின்னது போல இருக்கே ..  சிரட்டை பெரிசா இருக்கு  அதால நெஞ்சான் கூட்டில வெட்டுது அய்யா , "

                                 " கொஞ்ச நேரம் தானே,,நீ சமாளிப்பாய் "

                          " இல்லை சிரட்டை பெரிசா இருக்கு,,சின்ன தேங்காய் சிரட்டை இருந்தால் இப்படி வெட்டாது "

                               "  வயது ஏறினும் வதங்காது அவள் மேனி, வழக்க மரபுகளால் ஒருபோதும் குலையாத ராணி, பார்க்குமிடமெல்லாம் வரம்பிலா விதவித வனப்பு, இப்படி சொல்லுறார் சேக்ஸ்பியர் அவள் அழகை "

                               "  கேட்க நல்லாத்தான் இருக்கு,சிரட்டை வெட்டித் தள்ளுதே ,அதுதான்  எனக்கு சரிவருமா எண்டு ஜோசிக்குறேன்  "

                                " டேய்,,பிரகண்டம் பிடிச்சவனே,,இதெல்லாம் பெரிசா இருந்ததா தான் கவர்சியா இருக்குமாடா,,கிளியோபாட்ரா அவளே ஒரு கவர்சிக் கன்னி,,நான் கணக்கான சைசிலதான் தேங்காய் சிரட்டை தேடி எடுத்துக்கொண்டு வந்து இருக்கிறேன்.."

                                   " சரி   பிளவுஸ் ஆவது கொஞ்சம் பெரிசா எடுத்துக்கொண்டு வாங்கோ,,எனக்கு சிரட்டை விளிம்பு  இறுக்க நெஞ்சில  வெட்டுது "

                                   " டேய்,,செம்மறி,,இப்படி இறுக்கமா, மாலைதீவு செவ்விழனி போல  பெரிசா இருந்தாத்தான் கவர்சியடா ,,உனக்கு நல்ல எடுப்பா இருக்கு,,இது காணும்,,எனக்கு கரைச்சல் குடுக்காதை.."

                                   " சரி,நீங்க சொல்லுரிங்க அதால இந்த எடுப்பு எடுக்கிறேன் ,என்னோட குரல் அது உரல் போல  இருக்கே பொம்புளைக் குரலுக்கு சரிவராதே ,"

                                       " டேய், கழுதை ,நீ என்னடா லூசா ,இல்லைத் தெரியாமத்தான் கேட்குறேன்,,நீ ஒரு அரை லூசூ, அவன் அவன் என்னோட நாடகத்தில சும்மா தலையைக் காட்டி எட்டிப்பார்த்து நடிக்கவே அலையுறாங்கள்,,நீ ஒரு அரை லூசூ  ,அது தான் இப்பிடி எல்லாம் விண்ணாணம் கதைக்குறாய் "

                                    என்றார், அதால அவருக்கு அதுக்கு மேல கரைச்சல் குடுக்கவில்லை,ஆனால் இந்த ரெண்டு தேங்காய் சிரட்டையும் எனக்கு எப்படி ஒரு பயங்கரமான அலுப்புக் கொடுக்கப்போகுது என்று எனக்கு அப்ப  தெரியவில்லை. என்னோட நண்பன் பிட்டி கிட்டிக்கு பொம்புளை வேஷம் போடுறேன் என்றேன். அவனும்

                           " அது உனக்கு நல்லாப் பொருந்தும் மச்சான்  ,ஆனால் உன்னோட குரல் மச்சான்  சரிவராதே "

                              " அதைதான் அந்தாளுக்கு சொன்னேன் அதுபோல நிறையக் குழப்பம் இருக்கு எனக்குள்ள "

                             "சரி விடு மச்சான் இதுக்கு போய் பெரிசா ஜோசிக்குறாய்,,வா சொக்கன் கடைக்குப் போய் வடையும் பிளேன் டீயும் அடிச்சுப்போட்டு ஒரு மட்டக்கோன் தம் போட்டுக்  கொண்டு கதைப்பம் , கந்தப்பு வாத்தி ஒரு விடாக்கொண்டன் மடாக்கொண்டன் ,,நீ ஒரு அரை லூசூ   ''

                         "அதையேதாண்டா வாத்தியும் சொன்னார்டா ''

                             "  என்ன சொன்னார் "
                     
                              " நான் அறம்புறமாக்  கேள்வி கேட்க என்னைப் பார்த்து நீ ஒரு அரை லூசூ என்டு சொன்னார் டா "

                                ""சரி.. சரி..மச்சான் . கவலைப்படாதே... வாத்தி  உன்னை இன்னும் முழுசாப் புரிந்து கொள்ளவில்லை , அதாலதான் அப்படி சொல்லி இருக்கிறார் "

                                    " அடப்பாவி , என்னடா சொல்லுறாய் "

                                " மச்சான் நீ இருந்து பார் , ,,இந்த நாடகம் முடியிறதுக்குள்ள அந்தாளுக்கு நீ முழு லூசூ எண்டு தெரியவரும் ,அதைச் சொல்லுறேன் ''

                                    அந்த நாடகத்தில் ரோம் நாட்டு  வீராதி வீர சக்கரவர்த்தியாக வரும் ஜுலியஸ் சீசர் இக்கு நடித்தது அம்மாசிய குளத்துக்கு அந்தப்பக்கம் வடலிக்காணியை மறிச்சு அடைச்சு அதுக்குள்ளே பண்டி வளர்த்த தெய்வேந்திரம். இது ஒரு பெரிய முரண்பாடாக இருந்தாலும் நாடகமே வாழ்கையின் நிழலான ஒரு முரண்பாடுதானே.

                          தெய்வேந்திரம்முழுநேர நேர்ந்துவிட்ட தண்ணிச் சாமி.ஆனால் ஒரு கை தேர்ந்த நடிகன். காப்போத்தல் தென்னம் சாராயத்தை அண்ணாந்து உள்ளுக்க விட்டுப்போட்டு " இலங்கை வேந்தன் " நாடகத்தில் ராவணன் வேஷம் போட்டு மேடையிலேயே சிவகிரி மலையைக் ஒற்றைக் கையால தூக்கி வைச்சுக்கொண்டு நடிப்பார். கந்தப்பு அவர் நடிப்பை மட்டும் எப்பவும் பயன்படுத்திக் கொள்வார்.

                                     ஜுலிய சீசர்  நாடகம் உலகப்புகழ் பெற்றது என்று தெரியும். ஆனால் அதன் கதை பற்றி எனக்கு ஒரு மண்ணும் தெரியாது அந்த நேரம் ,முக்கியமா ஏன் ஜுலிய சீசரைக் கொல்லுறாங்கள் எண்டதுக்கு காரணமெல்லாம் எனக்கு தெரியாது.   நாடகம்  பழகிக்கொண்டு இருந்த நேரத்தில் தமிழ் அறிஞ்சரான  கந்தப்புவை ஒருநாள் மடக்கி

                                     " ஏன்,,ஜுலிய சீசரைக்  கொல்லுறாங்கள், ஐயா  " என்று கேட்டேன் ,அதுக்கு அவர்

                                    " ஏன், நீ போய் என்ன கிரிமினல் கேஸ் போடப்போறியா , மேடர் கேஸ்  போல விசாரிக்கிறாய் கழுதை "

                                  " இல்லை,,அய்யா, அந்தப்  பொயின்ட்  தெரிஞ்சா , கொஞ்சம் உணர்சியாக நடிக்கலாமே எண்டுதான் கேட்குறேன் "

                                  "  ஓ,,அப்பிடியே கதை  போகுது,,அதடா  எருமை... எகிப்தில் கள்ளத்தனமாக நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ள வில்லை! முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர்கள்  செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார்,,,,இதுதான் காரணம் "

                          "  ஓ,,அப்படியா,,நல்லா  இருக்கு ,நன்றி அய்யா "

                                 ஆண்டு விழாவில் விடிய ரெண்டு மணிக்கு ஜுலிய சீசர் நாடகம் தொடங்கின நேரம்  கவிஞ்சர் கந்தப்பு முதல் அந்த நாடகம் பற்றி ஒரு சின்ன அறிமுக உரை மேடையில்க் கொடுத்தார் , அதில  உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்..

                                ." உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும் ". 

                               என்ற  தகவலைச் சொன்னார், அதை மேடையின் ஓரத்தில் கிளியோபாட்ரா வேஷத்தில் நின்று கேட்கவே  எனக்கு உடம்பெல்லாம் மயிர்க்கால் எழும்பி நிக்க  புல் அரிச்சுது . அட  இவளவு விசியம் இருக்கா  கிளியோபாட்ராவுக்குப்  பின்னால, கட்டாயம் மேடையில் ஒரு அசத்தல் அச்சத்தான் வேணும் என்று நினைத்துக்கொண்டேன் 

                               உடம்பு முழுவதும் ஓடிய ரத்தத்தில் தமிழ்மொழிப் பற்ருள்ளவர்  கவிஞ்சர் கந்தப்பு. " அரனே அறுந்துண்டு வாழ்வோம்  உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை " என்ற  மொழி  வைராக்கியம்  அதிகமுள்ள தமிழ் அறிஞ்சரான கந்தப்பு இங்கிலாந்தில் ஸ்டாட்ஸ்போட்டில் பிறந்த  சேக்ஸ்பியரையே நல்ல தமிழில் " நாடக ஆசிரியர் செகசிப்பியர் " என்றுதான் சொன்னார். அந்த நாடகம் ஏன் எல்லாரும் பார்க்க வேண்டும் எண்டும் சொன்னார். அந்த நாடகத்தை மொழி பெயர்க்க உதவிய பெட்டிசம் பாலசிங்கத்துக்கு நன்றி சொன்னார்.

                                         அந்த நாடகத்தில் வரும் பாத்திரங்களை ஒரு சின்ன அறிமுகம் போல நாடகத் தொடக்கத்தில் ,பின்னணிக் குரலில் ஒருவர் சொல்ல அறிமுகப்படுத்தி வைப்பார் கந்தப்பு,  புண்ணியக்குஞ்சி துலாக் கிணறில தேடாவளயக் கயிறு இழுத்த மாதிரி தொங்கித் தொங்கி இழுக்க கிளியோபாட்ரா வரும் போது நான் மேடையின் நடுவில் போய் பார்வையாளருக்கு கவர்ச்சி நடிகை ஜெயமாலினி போல நெஞ்சை ஒரு ஆட்டு ஆட்டிக் காட்டி என்னோட எடுப்பான பெண்ணழகை அறிமுகம் செய்ய வேண்டும்

                             " .......அலெக்ஸ்சாண்ட்ரியாவின் அரண்மனையில் நின்ற எழுநூறு கழுதைகளின் பாலில், சுத்தமான வெள்ளை நிற , நிறக் கலப்புக்கள் எதுவுமற்ற அந்தக் கழுதைப்பாலில் அந்தபுரத் தோழிகள்  புடைசூழ கழுதைப்பால் குளியல் தொட்டிக்குள் கிளியோபேட்ரா இரங்கி ஊற ஆரம்பிப்பாள்..........."

                             இப்பிடிக் குரல்  சொல்ல,நான் நடு மேடையில் போய் நெஞ்சை ஒரு குலுக்கு குலுக்கி எடுப்புக் காட்டினேன். பெண் பார்வையாளர்  பக்கம் அது எந்த பாதிப்பும் கொடுக்கவில்லை. ஆண்கள் பக்கம்  சும்மா ஹேமமாலினி  அருவியில அரைகுறையாக குளிக்கிற சீன் பார்த்த மாதிரி  விசில் தாறு மாறாப் பறந்தது. இந்தக் உலகத்தில் ஒரு பெண் நெஞ்சை ஒரு குலுக்கு குலுக்கி எடுப்புக் காட்டினால் அது எப்படிப் பல ஆண்களைக்  குலுங்க வைக்குது என்ற உண்மை கொஞ்சம் ஆச்சரியமாகத் தான்  இருந்தது .

                              அதுக்குப் பிறகு ஜுலிய சீசர் வேஷத்தில் மேடையில் தெய்வேந்திரம் போய் நின்று அவர் வளர்கிற பண்டிகளைப் பார்ப்பது போல ரசிகப்பெருமக்களைப் பார்த்து ,  பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச்சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கிக் கற்பனையில் சொல்வது போல உரத்து மேடை அதிர  

                               " சிங்கமே! காலம் கரைந்தோடி அடித்துச் செல்லாத, பாலைவனத்தில் மண்புயல் மூடிச் செல்லாத மகத்தான படைப்பே ,  வெற்றியுடன் கைகுலுக்கிக் கொண்டு  நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு  வணக்கம் செய்கிற நான் தான் ஜுலிய சீசர் ! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிற  நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! "

                              என்று மேடையே அதிர்ந்து உடைஞ்சு விழுற மாதிரி சொன்னபோதும், கிளியோபாட்ராவின் குலுக்கலுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு ஜுலிய சீசருக்கு கிடைக்கவில்லை. அதன் பின்  மார்க் அண்டோனி, புருட்டஸ் எல்லாரின் அறிமுகமும் வந்தது . ஆனால் கிளியோபாட்ராவா நான் போய் செய்து  காட்டின நெஞ்சுச்  குலுக்கலுக்குக்  கிடைத்த  கரகோஷம் அவர்களுக்கும்  கிடைக்கவில்லை.

                                         அதன் பிறகு முதல் தொடங்கும், அந்தக் காட்சியில் , கிளியோபாட்ரா ஒரு சிங்கம்  ஜுலிய சீசரைத்  திரத்தும்  போல இரவு கனவு கண்டதை  கொல்லப்படுவதுக்கு முதல் நாள் வெளியே போகும் சீசருக்கு சொல்வது போல ஒரு காட்சியில் தொடங்கும் ,அந்த வசனத்தை நான் தான் சொன்னேன், என்ன சொன்னேன் எண்டோ, அல்லது எப்படி சொன்னேன் என்றோ இப்ப  நினைவு இல்லை,

                           " சிங்கம் ஒன்று பின் திரத்தி  வரக் கனவுகண்டேன்  கண்ணாளா  ..என் வார்த்தைக்கும்  உங்கள்    கருணைக்குக் கண்ணீருண்டு;.... அதிஷ்டத்துக்கு விழாக்கள் உண்டு ; அவர் அளவற்ற  வீரத்துக்கு  மரியாதை உண்டு ;  என் வார்த்தையில் சொல்கிறேன் ,,நீங்கள் அரண்மனை விட்டுப் போகவேண்டாம் ,,என்  கண்ணாளா ,,அந்த  சிங்கம்,,,,,அந்த  சிங்கம்  ,,அசிங்கம்"

                                         என்று சிங்கத்துக்குப்  பதிலாக அசிங்கம் என்று நடுக்கத்தில உளறிக்கொட்டி  சொன்ன நினைவு இருக்கு ,என் வார்த்தைகளை ஜுலிய சீசர் நிராகரித்து

                                 "  ஆச்சரியப்படுகிறேன்!  வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா? மெச்சுகிறேன்! முன் வைத்த  காலைப்  பின்  வைத்துப்  பழக்கமில்லை ,,வீரம்  ...அதுதான் முடிவில்லாது அதுக்கும்  இறப்பு உண்டு "

                                         என்று சொல்வதோடு ,நாடகம் கதையில் சூடு பிடிக்கும் , என்னோட  அடுத்த சீன் ஜுலிய சீசர் கொல்லப்பட்ட நேரம் அவர் உடலின் மீது விழுந்து ,நெஞ்சில அடிச்சு அழவேண்டும் ,கொஞ்ச நேரத்தில் ஜுலிய சீசரைக் கொண்டு போட்டு மார்க் அன்டனி ஆவேசமாக

                             " ஜுலிய சீசர், சக்கரவர்த்தித் திருமகன் என்னை நேசித்ததால் , தேம்பித் தேம்பி  அழுகிறேன். அவர்  அதிஷ்டமானவர் என்பதால் , அதில் நான் சந்தோஷமடைகிறேன். அவர் யுத்தங்களை வென்றவர் என்பதால், நான் அவருக்கு வீர வணக்கம் செய்கிறேன். ஆனால் அவர் மகா ஆற்றல் உடையவர் என்பதால் அவரைக் கொலை செய்தேன். "

                                   என்று சொல்லும் போது நானும் போய் நடு மேடையில் விழுந்து  நெஞ்சில் அடிச்சேன்,அடிச்ச அடியில ஒரு சிரட்டை நெஞ்சுச் சட்டைக்கு உள்ளே இருந்து கிளம்பி வெளிய வந்து மேடையின் ஒரு பக்கத்துக்கு உருண்டு ஓட வெளிக்கிட அதை அமுக்கிப் பிடிச்சு நெஞ்சில அடிச்சு அழுவது போல அதை மறுபடியும் உள்ளுக்கு தள்ளிட்டேன்,கந்தப்பு  அதைக் கண்டது போட்டு தலையில கையால அடிச்சார், நல்ல காலம் மேடையின் நடுவில நடந்ததால் ரசிகப்பெருமக்கள் யாரும்  காணவில்லை

                           " அவரின் கருணைக்குக் கண்ணீருண்டு;அதிஷ்டத்துக்கு விழாக்கள் உண்டு ; அவர் அளவற்ற  வீரத்துக்கு  மரியாதை உண்டு ;அவரின் அவா,"

                            என்று வசனங்ககள் பறந்து கொண்டு இருந்ததால், அந்த இடைவெளிக்குள் யாரும் பார்க்க முதலே ஒருமாதிரி சிரட்டையை உள்ளே அமத்தி வைச்சு ஒரு மாதிரி மறுபடியும் எடுப்பான மார்பகம் ஆக்க முடிந்தது.

                           
                             அதுக்குப்  பிறகு  சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன், ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவ. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா என்பது  போல ஒரு கடைசி சீன் எனக்கு  இருந்தது ,அதுக்கு முதலே எனக்கு மூத்திரம் பெய்ய வேண்டி வந்திட்டுது , நான் கந்தப்புக்கு காதுக்குள்ளே சொன்னேன் , அந்தாளுக்கு கொதி வந்திட்டுது

                                    " அடே கழுதை , பார்த்தியே,குறளி வித்தையத் காட்டத் தொடங்கிட்டியே , கொஞ்சம் அடக்கிகொண்டு  இரடா,,உனக்கு  இன்னும்  ஒரே ஒரு சீன் தான் இருக்கு "

                                  " அடக்க முடியவில்லையே  அய்யா, அப்பிடி  முடுக்குது "

                                " தாங்கமாட்டியா,,இப்ப  கிளியோபாட்ரா வேசத்தில நிக்குறாய்,,என்னண்டு மேடையை விட்டு  இறங்கிப்போய் பெய்யப் போறாய் "

                               " அது  தெரியாது,இப்ப  உள்ள நிலைமையில் மேடையிலேயே பம்பு செட் வைச்சு இறைச்ச  மாதிரி  அடிச்சுப் போடுவன் போல முட்டிக்கொண்டு வருகுதே  அய்யா "

                              " அட  பரதேசி  அப்படி செய்து  போடாதை,,டக்கெண்டு  பின்னால இறங்கி  வீராளியம்மன் வாய்க்கால் கட்டில நிண்ட நிலையில நிண்டு அடிச்சுப்போட்டு ஓடியா  ,உந்த வேஷம் கலைக்கக் கூடாது கண்டியோ ,,உதை வேண்டுவாய்,,வேஷம்  கலைச்சாய் என்றால் "

                             "  ஓம் ஓம்  நிண்ட நிலையில நிண்டு அடிச்சுப்போட்டு ஓடியாறேன்  அய்யா ,,"

                                    பொம்புளை போல  வேஷம் போட்டுக்கொண்டு நின்டதால் எப்படி " நிண்டுகொண்டு நிண்ட நிலையில அடிக்கிறது " என்று குழப்பமா இருந்தது. அதைவிட ஆட்கள் யாரவது பார்த்தால் என்ன  நினைப்பார்கள், சிலநேரம் பார்க்கிறவர்கள் குழப்பத்தில் மயக்கம் போட்டு விழுந்தாலும் விழ வேண்டி வருமே என்று நினைச்சுக்கொண்டு, இனியும் அடக்க முடியாது எண்டு போட்டு மேடையின் பின்னால் குதிச்சு இறங்கினேன்....

                                          ஜூலியா சிசர் நாடகதில அதுவரை நான் கிளியோபாட்ரா போல மேடையில் வந்தநேரம் எல்லாம் மேடையின் வலது பக்கம் மேடைக்கு மிக அருகில் நின்று அரிக்கன்கிடாய் போல முகத்தை வைச்சுக் கொண்டு ஒரு ரோட்சைட் ரோமியோ கண்ணடிச்சுக் கொண்டு இருந்தார், ஒருமுறை கீழே சரிஞ்ச என்னோட சிரட்டையை கொஞ்சம் தூக்கி அதை செட் செய்த போது விசில் அடிச்சு " சூப்பர் " என்றார், பிறகு ஒருக்கா நெஞ்சு  கொஞ்சம் தெரியிறமாதிரி குனிச்ச போது அதுக்கும்  விசில் அடிச்சு " சூப்பர் "  என்றார் ,வேலியில் சாத்தி வைச்சு இருந்த அவரோட சைக்கிளைக் காட்டி  சைகையால

                                      "  ஓடிப்போவமா ..."

                               என்று வேறு கேட்டார், நான் பெண்கள் போலவே அதைக் கவனிக்காத மாதிரி நடிச்சுக்கொண்டிருந்தேன். என்றாலும் நெஞ்சு பக்கு பக்கு என்று அடிக்க  ஒரு தற்பாதுகாப்புக்கு சைகையாலே புண்ணியக் குஞ்சிக்கு  அந்த ரோமியோ செய்யுற சேட்டையைக்  கொஞ்சம் கவனியுங்க சித்தப்பு என்று காட்டிவிட்டேன். புண்ணியக்குஞ்சுக்குக் கழுகுக்கு கண். அவர் ஆளை மட்டுப் பிடிசுக் கவனிச்சிட்டார்.

                                  அப்படி நான் செய்யாமல் இருந்திருந்தால் கட்டாயம் அந்த இரவு  பெரிய பிரச்சினைகள் வந்திருக்கும், புண்ணியக் குஞ்சிதான் அன்று ஒரு இரவையே என்னிடமிருந்து கைப்பற்றினார்,அவர் மட்டும் இல்லாட்டி கதை  கந்தல்  ஆகி இருக்கும். பாவம்  புண்ணியக்குஞ்சி எத்தைனையோ வருடங்களின் பின்னும்  அவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நினைக்கும் போதெல்லாம், அவர் என்னைக் காப்பாற்றியது எப்பவுமே விழி ஓரம்  வரும்,அது வேற  கதை...

                                      ஒரு  மேடை நாடகத்தில் உணர்சிவசப்பட்டு  ரசிகர்கள் இப்படிதான் ரியாக்ட் செய்வார்கள் என்று தெரிஞ்சாலும்,கொஞ்சம் பயமா இருந்தது.  ஒரு பெண்ணாக வேஷம் போட்டதுக்கே இவளவு இம்சை கொடுக்கிராங்களே வாழ்க்கை முழுவதும் பெண்ணாகப் பிறந்து வாழும் பெண்களுக்கு எவளவு இம்சை கொடுப்பாங்கள் இவங்கள் என்பதை நினைக்க  பெண்களின் நிலைமை  கவலையாக இருந்தது. அது ஒரு படிப்பினையாக வளர்ந்து எந்தப் பெண்ணையும் அநாவசியமா நிமிர்ந்தே பார்க்கக்கூடாது  என்ற ஒரு அறிவை அப்பவே  அது  மண்டையில் மணி அடிச்சது

                                    நான்  மேடைக்குப் பின்னால  குதிச்சு, வீராளியம்மன்  வாய்க்கால் பண்டுக்கு போக வெளிக்கிட , இருட்டாக இருந்தது அந்த இடம் , என்ன இருந்தாலும் ஒரு இளமைக் கவர்சியான  பொம்புளை அந்த நேரம் தனியா இருட்டுக்க போக பயமாதானே இருக்கும் ,,இல்லையா நீங்களே சொல்லுங்க பார்ப்பம், அதால அங்காலும் இங்காலும் திரும்பிப் பார்க்க , அந்த ரோமியோ மேடைக்குப் பின்னால என்னைப் பின்தொடர தயாரா  நின்றார்....

............தொடரும்.......
.