Wednesday, 11 September 2019

வேறோர் குரல் !


நிலப்பரப்பை
மூழ்கடிக்கும்முன்னிரட்டு !
குரல்வளையத் திருகிக்கொண்டிருந்த
நெரிசலான இரைச்சல்
பூமியெங்கும் அதிர்ந்து கொண்டிருந்தது !...
பின்னணியில் மேகங்கள்
ஆவேசமாக முறுக்கிக்கொண்டிருந்தன !
இன்றளவும் உறவைத்தொடர்கிற
பூர்வஜென்ம பந்தம்போல
பெயர்தெரியாப் பறவை
காற்றில்க் கலைந்தபடியிருந்த
கடைசித் தருணங்களுக்கான காட்சிப்படிமத்தின்
இறுதிவரியை பாடிக்கொண்டிருந்தது !

*


பின்மாலை வெய்யில்
எப்ப வேண்டுமென்றாலும் கண்மூடலாம் போலிருந்தது !
அவ்வப்போது அலையெழுப்பி
போட்டுஉருட்டி விளையாடிக்கொண்டிருக்கும்
சாயங்கால மனதுக்குள்

சுள்ளென்று இழுத்துப்பிடிக்கும் சலிப்பு !
முகப்புத்தாழ்வாரத்தில்
குளிர்காற்றில் சுழன்றபடியிருந்தன
பழுத்து விழுந்த இலைகள் !
எப்பவும் இப்படித்தான் என்றில்லை . !
எல்லாரும் சொல்றமாதிரி
தலைமுழுகிவிட்டுப் போகமுடியுமா?
உள்ளங்கைகளை விரித்து வைத்து
அதிஷ்டரேகைகளை உறுப்பார்க்கும்போது
மையத்திலிருந்து ஓரத்திற்கு நகர்ந்துவிடுகிறது
ஒரு பிரியமான குரல்
அல்லது
ஒரு நேசமான நினைப்பு
அல்லது
ஒரு அன்பைப்பிழியும் சொல் !*


இடம் சரியாக இல்லையென்பதுபோல
வழக்கத்துக்குமாறாக
அசுமாத்தம் ஏதுமின்றிக்கிடந்தது
வழக்கமாகச் சலசலக்கும்
வளைசதுக்கம் ,

தூங்குமூஞ்சி மதுப்பிரியர்களும் இறந்தவர்கள்போல
நிசப்தத்தில் அமர்ந்திருந்தனர்.
காற்றசைந்தபோதும்
ஒருவர் கூட நகரவில்லை
வெய்யிலைத் தவிர
வேறு ஒரு ஓசையும் அங்கே இல்லை.
தப்பிச் செல்வதுக்கு
ஒரு வழியையும் பற்றி
அதிகம் ஜோசிக்கமுடியாத நேரம்
ஆகாயத்தில் மேகங்கள் இருந்தன,
குளிர் இன்னும் எழும்பவில்லை.
தூரத்தில்
சலனமாக பிரார்த்தனைக் குரல்
எல்லாம் அமைதியாகி விட்டது.*


இடிந்துபோன கடந்தகாலத்தை
அழிவிலிருந்து மீட்டெடுத்து ...

காட்சிப்படுத்தமுடியுமா ?
சந்தேகமாகவிருக்கிறது !!!!
அபத்த நாடகத்தின்
நடுப்பகுதியில் ஸ்தம்பித்துவிடுவது போலிருக்கு
நினைவுகளின்மீதேறிப் பயணிப்பது !
சராசரி மனநிலையிலும்
ஈர்ப்புக்களைக் குறையவிடுகுதில்லை
அடுத்தகட்டத்தை நிர்ணயிக்காத
எதிர்காலம் !
இயல்பாகப் பயணித்துக்கொண்டிருப்பது
உணர்ச்சிகரமாக மாறி
கேள்விகளால் துளைக்கும்போது
எரிச்சல் வருகிறது !
திணறிக்கொண்டிருக்கும் அன்றாடங்களில்
தேங்கிவிட்டது போலிருக்கும்
நாளையென்பது
கனவுலகத்துக்கு ஒருவழிப்பாதை !
அதில் மூழ்கித்திழைத்துச் சஞ்சரிக்கும்
மிகமிக மென்மையான
ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும்
மாறிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்திற்கு
தற்செயலாக அமைந்துவிட்ட
பொருத்தமான குறியீடு !*


நிலை மாற்றங்களும்
அதைத் தாங்கியடி நின்றுகொண்டிருக்கும் ...

நீண்ட பொழுதுகளும்
வெறுமனையே காலப்பிரமாணமில்லை !
நகர்த்தலிலும்
முழுமை பெறாது கசிந்து வழிகிறது
குளிர் உறிஞ்சும் அதிகாலை !
பெரிதாக வெளிப்படாவிட்டாலும்
கண்கொண்டு கூச்சமடைய வைக்கிறது
முன்கோடை வெயில் !
வாய்ப்புகள் அதிகமில்லாதபோதும்
வந்துபார்த்துவிட்டுப்போகிறது
காதலுணர்வு !
சொல்லமுடியாத தருணத்தில்
மதிப்பில்லாத அவமானங்கள் !
உயிர்ப்புடன் கடைசி வரையிலும்
எரிந்து கொண்டிருக்கிறது
நம்பிக்கை !
மெளனத்திற்கு எதிராக
ஓயாது உளறியபடியிருக்கிறது மனது !
அமைதியாய் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது
நிழல்தந்து ஆத்மா!
ஆற்றாமையின் உள்ளக் குமுறலாக
நோகடிக்கும் அனுபவங்கள் !
அடி நீரோட்டமாய்க்
கால்களை நனைத்துக்கொண்டிருக்கிறது
புள்ளியாக நகரும் காமம் !
என
எழுதலிலும் , வீழ்தலிலும் வாழ்கின்றது
ஒரு மிகச் சாதாரண நாள் !*விம்மிவிம்மி
அவர்கள் கதைத்துக்கொண்டிருந்ததில்
இடிபாடுகளுக்குள் அகப்பட்ட
ஒரு பூனைக்குட்டியின் கதறல் இருந்தது !
அதைவிட அச்சுறுத்தியதென்னவென்றால்...
பறக்கும் பழக்கத்தை
பலவிதங்களில் பிரயாசைப்பட்டுக் கைவிடும்
ஒரு பறவையை
அது ஞாபகப்படுத்தியது !
அவர்களில் பலர் என்னைச்சுற்றிலுமிருந்தார்கள்
அவர்கள் நடுவில்
ஒரு வயதான தந்தையும்கூட இருந்தார் !
ஒடுங்கிப்போய்
மவுனமாகவிருந்தபோது
எந்த முயற்சியுமில்லாமல்
அவர்களிலிருந்து மாறுபட்ட ஒருவனாய்
என்னையறியமுடியவில்லை !
இறுகப் பிணைக்கப்பட்ட
இரும்புக்கதவை அகலத்திறப்பதுபோல
ஒருகாலத்தில் கொந்தளித்த
என் பழைய கோபமும்
நாளைக்கான
அவர்களின் தீர்க்கதரிசனமும் ஒன்றாவேயிருந்தது !*


நேற்று முழுவதும்
எந்தத் தலையீடும் இல்லாமல்
அழிவு நடனமாடிக்கொண்டு
மிச்சமின்றி
அதன்போக்கில் பொழிகிற ...

மழைநனைந்த மலர்கள்
ஒவ்வொன்றையுமே ஆர்வமாகவும்
உள்ளங்கையைத் தாடைக்கு அணைகொடுத்து
கவனித்துக்கொண்டு இருந்தேன்.
நேரத்தை
மையப்படுத்தும்
இன்றும் அப்படித்தான் !
துல்லியமா ஒரே மாதிரி
அதிதீவிர தகவமைப்புத் திறனில்
புத்தம் புதிதாக
ஏதோவொன்றை சொல்லிக்கொண்டிருந்தன.*


சத்தமாகச் சிரித்து
கதவடைத்ததுபோல மெல்லக் கதைத்த
அப்போதெல்லாம் உடலெங்கும்
மயிர்கால்கள் சில்லிட்டன !
அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு ...

சிலந்திவலையில் ஊர்கின்றன
ஒவ்வொரு உரையாடலும் !
நினைத்தால் தலைகுனிவாயிருக்கிறது
பழகிப்போன குரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாக பயனற்றுப்போய்விடுமா?
புரிதல்களை
ஒரு சமநிலைக்குக் கொண்டுவரும் தன்மையை
இழந்துபோவதால்
தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமா ?
அடிக்கடி
ஒழுங்கில் இருந்து ஒழுங்கின்மைக்குச் சென்று
விவாதப்போர் நடத்துகிறது மனது
யார்நீ ? என்கிறது ,
அந்தக்கேள்வியால் திடுக்கிட்டடு
உச்சத்தில் விழித்தெழுந்தபோது
அமைதிக்குள்ளிருந்து
வேறோர் குரல் எழுந்தது,!!*


தேவதைகள்
பூமியிலும் வாழ்ந்தார்கள் !
புள்ளிபுள்ளியாக மழைபெய்து
மாக்கோலத்தை அழிப்பதுபோல
நினைமனதை நெருடுகிற...

எந்தவிதமான சலனங்களுமின்றி
நடுநிசிகளிலும் நடுப்பகல்களிலும்
கண்டும்காணாமலும் கடந்துசென்றார்கள் !
அப்போதெல்லாம்
பழக்கப்பட்டுப்போன இயல்பாகவே
வாழ்க்கையும் வலம்வந்துகொண்டிருந்தது !
புராதனமான பாவனைபோலிருந்தாலும்
ஓரக்கண்களிலும்
வெட்கத்தை ஏந்தவைத்து
ரசனையுடன் புலம்பவைத்த அழகு !
பச்சைநிறப் பட்டுச்சேலை
முந்தானைக் கூந்தலை மூடிமறைத்தபோதும்
முகத்தை வசீகரித்து வைத்திருந்த
அந்தக் காலத்தோற்றம்
இப்போதெல்லாம் இல்லாமல்ப்போய்விட்டது !
நாளுக்கு நாள்
யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதுபோல
ஜதார்த்தங்களே
தலைமறைவாகிக்கொண்டிருக்கிறன !*

காது மந்தமாகி வெகுகாலம்
வாயசைவில் வார்த்தைகளைப் புரிந்துகொள்வார்
மேசையிலும் தரையிலும் புத்தகங்கள்
அவர்சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன்.
நீண்ட சிநேகிதமெல்லாமில்லை ...

ஒட்டுதல்கள் இல்லாத பரஸ்பர நடப்பு !
" புதிதாக ஒன்றும் எழுதமுடிவதில்லை
சொன்னது பலிக்கவில்லை " என்றார்
மரணத்துக்குள்
ஒரு காலடி எடுத்துவைத்ததுபோல
அறைமுழுவதும் வெள்ளை நிறம் !
நான் குறுக்கீடுகளின்றி அமைதியிலிருந்தேன் !,
வெறிச்சோடிக்கிடக்கும் அமைதியைக்
கலவரமாக்கிவிடுவதுபோல
"கல்லறைபோல ஏதாவது எழுதிவையுங்களேன் "
இதைத்தான் கேட்க நினைத்தேன்
முரண் நிகழ்வுகளையும்
காலத்தின் ஊஞ்சல் விளையாட்டையும்
நித்தியத்தில் ஆழ்த்துகிற
மௌனத்தை இடையூறு செய்வதுபோல
அந்த விண்ணப்பம் எஞ்சியிருந்தது
நினைக்கும்போதெல்லாம்
ஒருவித அலறல்போலவே
இப்பவுமிருக்கிறது !